கைசேதம்




(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“மரியம் மகப்பேறு மருத்துவமனை” என்ற போர்டை தாங்கியுள்ள காம்பவுண்டுக்குள் தன் மனைவி சகிதமாக நுழைந்த காதர், அங்குள்ள இருக்கையில் அமர்ந்த படி கண்களைச் சுழலவிட்டான். அந்த வட்டாரச் சூழலையே அவன் தன் முப்பத்தைந்தாவது வயதில்தான் பார்க்கிறான்.

மிரட்சியால் – மருளும் கண்களுடனும், தாய்மைப் பேறுற்ற பரவசத்தால் ஆன முகங்களுடனும், குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மழலையரைப் பிடிக்கப் போகும் பெண்களும் ஆண்களுமாகக் பட்டம்
கலகலத்துக் கொண்டிருக்கும் அம் மருத்துவமனைக்கு அன்று அவன் வந்ததே பெரும் நிர்ப்பந்தத்தினால்தான்.
மூன்று வயது மதிக்கத்தக்க செலுலாய்டு பொம்மை ஒன்று கோதுமை நிறத்தில், நீலக் கண்களோடு, “கைவீசம்மா கைவீசு. கதிஜா பீவி கை வீசு, ஹஜ்ஜுக்குப் போகலாம் கைவீசு, ஹரம் சுற்றலாம் கைவீசு.” என்று தன் கையை இடமும் வலமுமாக ஆட்டி ஆட்டிப் பாடும் அழகைத் தன் கண்களால் அள்ளிப் பருகும் ஜனூபாவை ஓரக் கண்களால் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டான் காதர்.
குதூகலத்தின் விளைநிலமே ஒரு குழந்தைதானே என்று அவன் எண்ணிய போது ஒரு பெரும் தவறுக்குத்தான் ஆளாகிவிட்ட பாவத்தோடு, “அநியாயமாகக் காலம் கடத்தி விட்டோமே?”என்று வேதனையின் விளிம்பில் தவித்தவனாகக் காத்திருந்தான்.
அப்போது… டாக்டரம்மா இருக்கும் அறையின் கதவைத் தள்ளிக்கொண்டு கர்ப்பிணியான ஒரு பெண் வெளிவர, கைவீசம்மா பாடிக் கொண்டிருந்த குழந்தையோடு காத்திருந்த அவள் கணவர், அவளைப் புன்முறுவலோடு எதிர்கொண்டு நெருங்கி; “ஹாஜத்! டாக்டரம்மா என்ன சொன்னாங்க?” என்று கேட்டபோது, காதரின் உச்சியில் யாரோ சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்க ஏறிட்டுப் பார்க்கிறான். ஓ!…
ஹாஜத் உன்னைச் சந்திப்பேன், அதுவும் இப்படி ஒரு கட்டத்தில் என்பதை நான் எண்ணியே பார்க்கவில்லையே!.. உன்னை எப்படி எல்லாம் ரணப்படுத்தி விட்டேன்? ஆனால் நீ குணமாகிவிட்டாய். நான்? ரணமாகிக் கொண்டல்லவா இருக்கிறேன்!
தான் தொலைத்துவிட்ட வாழ்க்கையைத் தேடுகிறான். பத்து வருடங்களுக்கு முன்பு… காதர் ஒரு சிறு பெட்டிக்கடை வைத்து நடத்திய போது வாலிப வயதாகி விட்ட மகனுக்கு, மூக்கும் முழியுமாக இருப்பதோடு, தான் கேட்ட நகையும் தொகையும் தரும் மோதினார் மகளை மண முடித்து வைத்தாள் காதரின் அம்மா.
மாமியாருக்குக் கட்டுப்பட்ட மருமகளாக, கணவனுக்கேற்ற மனைவியாக ஹாஜத் காலம் கழித்தாலும் அவளுக்குள் ஒரு குறை இருந்து கொண்டுதானிருந்தது. வருடம் ஐந்தைத் தாண்டியும்
தான் இன்னும் தாய்மைப்பேறு அடை யாததே அது. ஜாடைமாடையாக மாமியாரும் அரசல் புரசலாக உற்றார் உறவினரும் ’’விசாரிக்க” ஆரம்பித்தபோதுதான் அவள் விழிப்புற்றாள். திருமணத்தின் அடுத்தக் கட்டம் தாய்மைதான் எனப்புரிந்து கணவனிடம் ஒரு நாள் பேச்சோடு பேச்சாக “ஏங்க! நம்ம ரெண்டு பேரும் ஒருநாள் டாக்டரம்மாவைப் போய்ப்பார்ப்போமா?”என்று தயங்கித் தயங்கி அவள் கேட்ட போது, தன் ஆண்மைக்கு விழுந்த அடியாக அதை நினைத்து வெகுண்டான். “நான் யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீ வேண்டுமானால் போயிட்டு வா”என்று மூர்க்கத்தனமாகக் கத்தியபோது அப்படியே சுருண்டுவிட்டாள்.
பலநாள் மன உளைச்சலுக்குப் பிறகு தன் மனசைத் தேற்றியவளாகப் பக்கத்து வீட்டு பரீதாவைக் கூட்டிக்கொண்டு அதே தெருவிலுள்ள டாக்ரம்மாவைப் போய்ப் பார்க்கப் போனாள். துடிதுடிக்கும் இதயத்தோடு நிமிடங்கள் ஓட பலவித செக் அப்பிற்குப் பிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டவளாக வருகிறாள்.
அன்றிரவு அவனிடம் தனக்கு எந்தக் குறையும் இல்லை என்றும், அவனைக் கூட்டிக் கொண்டு வரும்படி டாக்டரம்மா சொன்னாள் என்றும் அவள் சொன்னபோது, அவன் அடிபட்ட வேங்கையாய்ப் பாய்ந்து அவளை அடித்துத் துவைத்தான். தன் ஆண்மையை, ஆளுமையை நிரூபித்துக் கொண்டான். அவளுக்கு மலடி என்ற பட்டம் கட்டினான். துள்ளலும் துடிப்பும் நிறைந்தவளின் மனசை நொறுக்கினான்.
வேண்டாம் அப்படிச் செய்துவிடாதீர்கள் என்று காலைப்பிடித்துக் கதறக் கதற அவன் தலாக் சொன்னான். அன்று அவள் தன் வீட்டை விட்டுப் போகும் போது கண்கள் பணிக்கக் கரங்கள் நடுங்கக் கால்கள் தள்ளாட, “மாமி போயிட்டு வாரேன்”என்று மாமிக்குச் சொல்வது போல் அவனுக்குச் சொல்லி விட்டுத் தலைகுனிந்து போன கொடுமையை இதோ இப்போது எண்ணிப் பார்க்கிறான்! அவள் அடிக்காமலேயே அவனுக்கு வலித்தது. அவள் போன பிறகு இவன் சாதித்தது என்ன? திரும்பவும் ஒருத்திக்குக் கணவனானான். இந்த ஒன்றைத் தவிர இவன் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
இதோ.. அவள் தன்னை விட்டுப் போய் இரண்டாவது குழந்தைக்கும் தாயாகப் போகிறாள். தன்னால் ’மலடி’என்று பட்டம் கட்டப்பட்டவள், ஜெயித்துக் காட்டிவிட்டாள். தன் கடந்த கால வாழ்க்கையை ஓர் அடுத்த மனிதனைப் போல் எண்ணிப் பார்த்தபோது, தன் அறியாமையும் ஆணவமும் ஏற்படுத்திய காயம் ஆற முடியாதது என்று உணர்ந்தான். எப்பேர்ப்பட்டக் கை சேதத்துக்குக் காரணமானோம் என்று கலங்கினான்.
ஹாஜத் ஐந்து வருடம் கழித்துக் கேட்ட கேள்வியை ஜனூபா கல்யாணமான மறுவருடமே கேட்க ஆரம்பித்த போதுதான் அவனின் உள் உணர்வு தட்டி எழுப்பப்பட்டது. கணவன் மட்டுமல்ல வாழ்க்கை, குழந்தையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்று அவள் உணர்த்தினாள். அவன் மூர்க்கத்தனம் அவளிடம் எடுபடவில்லை. ஹாஜத்திடம் அவன் காட்டிய பூச்சாண்டியை இப்போது ஜனூபா அவனிடம் காட்டினாள். இந்த வாழ்க்கையாவது நிலைக்க வேண்டுமானால் தான் அவளோடு இந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதே அவசியம் என உடன்பட்டான்.
குற்ற உணர்வு அவனுள் எழ, “இறைவா! என்னைத் தண்டித்து விடாதே” என்று மானசீகமாகப் பிரார்த்தித்த போது குழந்தையும் கணவனும் கூடி வர, ஹாஜத் படி இறங்கிக் கொண்டிருந்த போது அவன் மனைவியின் முறை வந்து அவள் உள்ளே போனாள்.
– சலாம் இஸ்லாம், சமீபத்திய இசுலாமியச் சிறுகதைகள், திரட்டு: களந்தை பீர்முகம்மது, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 2002
– மின்னூல் வெளியீட்டாளர: http://freetamilebooks.com