கூத்து
மூன்று மாத காலமாக கூத்து நடத்த எந்த அழைப்பும் வரவில்லை. அரசின் உதவிப் பணத்தில் குடும்பம் நடத்த இயலாமல் மனைவியோடு
ஜாக்கிசான் ஆண்கள் அழகு நிலையத்துக்குள் சரவணன். “”அண்ணே, முகச் சவரம்” என்று சொல்லிவிட்டு தனது மூன்று மாத தாடி மீசையைத் தடவி விட்டபடி வரிசையில் அமர்ந்தான். அவனுக்கு முன் நான்கு பேர் இருந்தார்கள். மேசையில் போடப்பட்டிருந்த செய்தித்தாள்கள் அவனைப் பார்த்துச் சிரிக்க, ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டலானான். மனம் எதையும் செரிக்கவில்லை.
அவன் முறை வந்ததும் நாற்காலியில் உட்காரப் போனவனை ஒரு கை தடுத்தது.
“”சரவணா இருப்பா, நான் வெளியூர் போற அவசரத்தில இருக்கேன். முகச் சவரம் முடிச்சுக்கிறேன்” என வெள்ளையும் சள்ளையுமாய் இருந்தவர் கேட்க, தர்ம சங்கடமாக அவருக்கு வழிவிட்டு அசடு வழிய அமர்ந்தான்.
“எளிமையானவர்கள் எப்போதும் இளிச்சவாயர்கள்’ என அவன் உள் மனம் உரக்க ஒலித்தது.
மூன்று மாத காலமாக கூத்து நடத்த எந்த அழைப்பும் வரவில்லை. அரசின் உதவிப் பணத்தில் குடும்பம் நடத்த இயலாமல் மனைவியோடு கூலிக்குப் போனான். அதிலேயும் குளறுபடி. பேசியபடி பணம் கொடுத்தபாடில்லை. இழுத்தடிப்புக்குப் பிறகு வந்த பணமும் வாய்க்கும் எட்டாமல் கைக்கும் எட்டாமல் போயிற்று. யாரை நொந்து கொள்வது? இயற்கை ஒருபுறம் உதைத்தால் கைகொடுக்க வேண்டியவர்கள் கால் கொடுக்கிறார்கள். என்ன செய்ய?
அந்த நேரத்தில்தான் கூத்துக்கு அழைப்பு வந்திருந்தது. வாத்தியார் கோவிந்தன் அனுப்பி இருந்தார். “அர்ச்சுனன் தபசு’ நடைபெறுவதாகவும் அர்ச்சுனனாக நடித்தவர்க்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக ஒருநாள் மட்டும் நடிக்க அழைத்திருந்தார்.
நாற்காலியில் உட்கார்ந்ததும் கழுத்தைச் சுற்றி ஒரு வெள்ளைத் துண்டைச் சுற்றினார் கோமளம். அந்த அழகு நிலைய உரிமையாளர். ஒரு பாட்டிலிலிருந்த வெதுவெதுப்பான நீரை முகத்தின் இருபக்கங்களிலும் பீய்ச்சி தாடி முழுக்க நனைய விட்டார். வெண்மையான கிரீமினால் முகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொட்டு வைத்துவிட்டு நீரில் நனைந்த பிரஷை முகம் முழுக்கப் பரவவிட்டதும் அப்படியே நுரையில் மறைந்து போனது முகம்.
சிறிதுநேரத்தில் ஒரு குழந்தையின் கை தவழ்ந்து போவது போல போன கத்தியில் தாடி முழுக்க மறைந்துபோயிற்று.
“”மீசையை மழிக்கலாமா?” – கோமளம்.
“”அண்ணே அதையும் மழிச்சிடுங்க. எந்த வேடமானாலும் மையோ, ஒட்டோ வச்சிக்கிடலாம்” சரவணன்.
சரியென்று சொல்லி முடிப்பதற்குள் மீசை எகிறி கீழே விழுந்தது. கைகளில் ஒரு பக்கம் முகத்தில் தேய்க்க, கத்தி மெல்ல வழுவழுப்பாக்கியது முகத்தை. சுழிகளும் எலும்பும் தொக்கிய இடங்கூட சுலபமாய் வழுக்கிய கத்தியில் சுத்தமாகிப் பொலிந்தது. முகம் முப்பத்தாறு இருபத்தாறு ஆனதாய்த் திரிந்தது தோற்றம். லோஷனைப் பீய்ச்சி, படிகாரக் கல்லால் ஒத்தி பூத்துண்டு ஈரத்தை இழுக்க கோகுல் சாண்டல் மணம் கோர்க்க சரவணன் வெளியே வந்தான். வழியில் தென்பட்ட நண்பரொருவரின் டி.வி.எஸ்ஸில் தொற்றிக் கொண்டு கூத்து நடக்குமிடத்தைச் சரவணன் அடைந்தபோது மணி ஆறாகிச் சூரியன் மறைந்தே போனான்.
கூத்துப் பறவைகள் இரவுப் பட்டறைகளில்தானே செதுக்கப்படுகின்றன.
வழி மேல் விழி வைத்து காத்திருந்த வாத்தியார் கோவிந்தனுக்கு சரவணனைப் பார்த்ததும் சந்தோஷமாகிவிட்டது. ஒரு மரத்துப் பறவைகளுக்கேயுரிய பாசம் அவரது கண்களில் வெளிப்பட்ட கண்ணீரில் தெரிந்தது.
ஒருநாள் ஆட்டம் தடைப்பட்டால் அன்றையச் செலவு முழுக்கச் சமாளிப்பது எவ்வளவு சிரமம் என்பது அவருக்குத்தான் தெரியும், சரவணனை அழைத்து முகம் முழுக்க தடவிப் பார்த்தார். நன்றாக வழுவழுவென இருந்தது அவன் முகம்.
“”சரவணா பாட்டெல்லாம் ஞாபகம் இருக்கா? எதுக்கும் ஒரு தரம் புத்தகத்தை வாசிச்சிட்டு தடுமாற்றமில்லாம இரு” கோவிந்தன்.
“”சரிங்க அய்யா” என்று சொல்லிவிட்டு, புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். நீச்சல் தெரிந்தவர்கள் நீரில் இறங்கினால் கையும் காலும் தானே அசையும் என்பதுபோல அவனை அறியாமல் பாடல்கள் அவன் வாயில் விழுந்து தெறித்தன.
சிற்றுண்டிக்கு அழைப்பு வந்ததும் சைவ உணவு பரிமாறும் இடத்துக்கு வந்தான். நோன்பிருக்க வேண்டியதென்பதால், பழமும் பாலும் மட்டும் சாப்பிட்டுவிட்டு பயிற்சிக் கூடத்துக்கு வந்தான்.
“”மாப்ள, எப்ப வந்தீங்க?” என்ற குரல் வந்த திசையில் பார்த்தான் சரவணன்.
கிருஷ்ணர் வேடத்தில் இருந்தவர்தான் அழைத்தவர் என்பது தெரிந்தது. உடம்பெல்லாம் நீலம். முகத்தில் நீலமும் வெண்மையும் பரவ பளிச்சிட்ட பற்களையும் கையில் இருந்த சரிகைத் தாள் சுற்றிய புல்லாங்குழலும் பார்த்த முகம் போல் தெரிய பக்கத்தில் சென்று பார்த்தான் சரவணன்.
“”ஓ… பாபு மாமாவா” ஆள் அடையாளம் தெரிந்தது. தனது மனைவியின் சகோதர முறைப் பங்காளி.
சர்வ ஜாக்கிரதையாய் இருக்கணும் என மனம் எச்சரித்தது. துரியோதனன் வதம் கூத்தில் பாபுவுக்குக் கிடைத்த மரியாதை நினைவுக்கு வந்தது. அந்தக் கூத்தில் பீமசேனன் வேடத்தில் இருந்த பாபு, துரியோதனனைத் தொடையில் தட்டச் சொன்னதற்கு தொடையிடுக்கில் தட்டி, துரியோதனனை உண்மையாகவே மயங்கிச் சாய வைத்தவர் என்பதை மனம் நினைவு படுத்தியது.
இருந்தாலும் இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, “”பிரபு வணக்கம் வந்தனம்” என்றான் மரியாதையுடன்.
நள்ளிரவு. கூத்து தொடங்கியது. சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் பூசைகள் நடந்தன. தனித்தனி பாடலுடன் கோரசாகவும் பாடி முடிக்க கூத்து ஆரம்பமாயிற்று. துணை நடிகர்களும் பபூன்களும் கூத்தை இழுக்க, சரவணன் தனது இனிய குரலால் பார்க்க வந்தவர்களின் பார்வை முழுக்க ஈர்க்க பாடி வந்தான். அர்ச்சுனனாக அவனது ஆடை அலங்காரமும் எடுப்பான உடலமைப்பும் அசல் அர்ச்சுனனாகப் பரிணமித்தன. முகத்தில் பூரிப்பின் முழுப் பிரகாசம்.
விடியற்காலை நெருங்க தபசு கம்பத்தின் அருகே தட்டில் பழம் தேங்காய் பூ மணக்க, ஊதுபத்தியும் கற்பூரமும் ஏற்ற அடிக்கொரு பாடலெடுத்துப் பாடலானான் சரவணன்.
இருபத்தேழு அடி பனை மரத்தில் ஐம்பத்தொரு படிகள் அமைக்கப்பட்டிருந்தன. உயரத்தில் உட்கார்ந்து பூசை செய்யக் காவடி. பூசை பொருட்கள் ஒரு பக்க தோள் பையில் தொங்க நெஞ்சுருகப் பாடி தவசு மரம் ஏறினான் சரவணன்.
இருபது படி தாண்டுவதற்குள் மேலே இருந்து ஒரு தேள் கீழே வந்து கொண்டிருந்தது. பூசையை முடித்துவிட்டு வருகிறதோ? உயிர்களைக் கொல்லக் கூடாதே. நோன்பு மீறக் கூடாதே. மெல்ல கீழே தள்ளிவிட்டு முன்னேறினான்.
கால் இடறுவதுபோல இருக்கவே இழுத்து ஏறினான். இருந்தாலும் இடதுகால் எரிவது போலிருந்தது. அதையெல்லாம் மறந்து தொடர்ந்து முன்னேறி ஐம்பத்தோராம் படி தாண்டி காவடிக்குள் கால் வைத்தபோதுதான் தெரிந்தது காலில் ரத்தம் வழிவது. தபசு மரம் கீறி இருக்கலாம். எல்லாம் பின்னர் பார்க்கலாம்.
தோள் பட்டையில் இருந்த தட்டை எடுத்துப் பூ, பழம் ஊதுபத்தி வைத்து வானத்துக்குக் காட்டினான். “தோடுடைய செவியன்’ எனும் தூய திருப்பாட்டில் அரகரா எனும் ஐந்தெழுத்தைச் சேர்த்து ஆலாபரணம் செய்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்ட அரகர மகாதேவா கோஷம் விண்ணைப் பிளக்க, அமைதியாய்ப் பின்னணி பாட, சேர்ந்திசையில் இறங்கிவந்தான்.
இடதுகால் முழுக்க இரத்தம் வழிய வாத்தியார் கோவிந்தன் காலில் வந்து விழுந்தான். சிவபிரான் வேடத்தில் வாழ்த்தி அணைத்துக் கொண்டார். கால் சிவந்திருந்தாலும் மனம் நிம்மதியில் திளைத்தது சரவணனுக்கு.
– இரா.வெ.அரங்கநாதன் (மே 2013)