கூண்டுப்பறவை




கூண்டினுள் சோகமே வடிவாக அமர்ந்திருந்தன அப்பறவைகள். ”லவ் பேர்ட்ஸ்”. காதல் பறவைகள். கூண்டைத் திறந்து விரல்களைக் குவித்து, கையை உள்ளே நீட்ட, அதில் தாவி அமர்ந்துகொண்டது காதல் சோடியில் ஒன்று. அலகைத் தாழ்த்தி அவனது கரத்தை மென்மையாகக் கொத்தி, மீண்டும் அவனது முகத்தில் ஏதோ தேடி…. மறுபடியும் கையை உற்றுப் பார்ப்பதுமாக….
அவனது முகத்தில் முகிழ்த்த உணர்ச்சிரேகைகளையும், கரத்தின் ரேகைகளையும் ஒப்பிட்டு, எதிர்காலத்துக்குப் பதில் தேடுகிறதோ?
யாரது எதிர்காலம்…. தனதா? எனதா….?
எதிர்காலத்திற்கான கேள்விகளை விதைத்துச் சென்ற யாழினியின் தாக்கம்…. அவள் தானே உருவாக்கி, வளர்த்து, தீர்மானித்து, முடிந்த முடிவாய் அவனின் நிம்மதியை முடித்த செயலுக்குப் பரிகாரம் உண்டா என அப்பறவை கேட்கிறதா?
அவனது கண்கள் கலங்கின. மனம் நெகிழ்ந்தது. கன்னங்களில் வழிந்த நீர்த்துளிகள் பளபளத்தன. சோர்வும் களைப்பும் கவலைகளும் அவனது முகத்தில் முண்டியடித்தன.
அந்தப் பறவை அவனது முகத்தை உற்று நோக்குவதைப் பார்க்கையில் உலர்ந்துபோன உள்ளத்து உணர்வுகளையும் மீறிச் சிரிக்கத் தோன்றியது.
சிரித்தான்.
அந்தப் பறவையை உதட்டோரம் உயர்த்தி உச்சிமோர்ந்தான்.
இப்பிடித்தான்… அவளும் உற்றுப் பார்ப்பாள். பார்வையில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்…. கேள்விகள்… இளக்காரங்கள்…. “கேட்டால்மட்டும் நிறைவேற்றிவிட முடியுமா உன்னால்?” என்ற ஏளனங்கள்…. இவை எல்லாமே பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் வெளிக்காட்டும் பார்வை அவனைக் குழப்பி அவனது மனதைத் தைக்கும்….
சக்தியின்றேல் சிவமில்லை…. சிவமின்றேல் சக்தியில்லை. நானே குடும்பத்தின் ஆணிவேர்…. நீ என்னை வைத்து வாரிசுகளை உருவாக்கி, ஆளாக்கி, உலகத்தில் உனக்கொரு குடும்பமென்று ஒன்றென உலாவருவாய்….
அதற்காக என் ஆசைகளை…. ஏக்கங்களை…. உணர்வுகளை…. எதிர்பார்ப்புகளை அழித்துவிடாதே…. நான் கேட்பதைக் கொடு…. மற்றவர்கள் தங்களுக்கெனத் தேடுவதைத்தான் உன்னிடம் நாடுகிறேன். அவற்றைத் தேவையில்லாதனவென்று உனக்கு நீயே உருவாக்கிக் கொண்ட கோட்பாட்டு வட்டத்துக்குள்போட்டு நசுக்கிவிடாதே!
“சாந்தா இண்டைக்கு ரண்டு சோடிக் காப்பு வேண்டினவள்….” என்று பெருமூச்செறிந்தாள் யாழினி.
சாந்தா அதே நகரத்தில் வசிப்பவள்.
“அதுக்கென்ன…. உம்மட்டைத்தான் இருக்கே….?”
“ம்…. இருக்கு…. ஏதோ இருக்கு. பழைய “மொடலி”லை…. புதிசாய் என்ன இருக்கு…. சாந்தா கொடுத்து வைச்சவள்….”
“நானும் பழைசுதான்….”
வாய்வரை வந்தது தொண்டையுள் அமுங்கியது.
புதிசு புதிசாக…. சடப்பொருள்கள் சருகாக மறையும்…. தோன்றும்…. ஒன்று உருவாக, மற்றது மறையும்…. இது உலக வரலாறு. ஆனால் உயிர்களுக்காக…. அந்த உயிர்களின் உருவகங்களை, இயல்புகளை வேறுபடுத்தி வித்தியாசப்படும் மனங்கள் மாறுபடாதவை…. மாறுபாடாகத் தெரிந்தாலும் அவை வலிந்தேற்ற வேசங்கள்…. மற்றொன்றின் அடிமைகளானதில் விளைந்த விபரீதங்கள். மனிதமனங்களின் ஊடலும் கூடலும் தேடலும் சடப்பொருள்களின் புதுப்புதுத் தோற்றங்களினால் மாற்றீடு செய்யப்படுமெனில்…. மனங்கள் சடப்பொருள்களிலும் கேவலமானவையா….?!
இது அவளுக்குப் புரியாது.
சடப்பொருள்களுக்கு அவள் சகாயமாகிவிட்டாள்.
“அவையளுக்கு செலவில்லை…. வாங்கீனம். ஒண்டிலை வாறது மற்றொண்டிலை போகத்தானே வேணும்….”
“உங்களுக்கென்ன செலவு….? ஒவ்வொருத்தி ஒவ்வொரு கலியாண வீடு, பிறந்தநாள் எண்டு…. ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு “சாறி” வேண்டுறாளவை….”
“என்ரை நிலமை தெரியாதே…. ஊரிலை அப்பா, அம்மா…. அவைக்கே ஒழுங்காய்க் காசனுப்ப முடியேலை….”
“அவைக்கு அளவாய் அனுப்பலாந்தானே….”
“அவை என்னை அளந்து வளக்கேலை…. அளவாய் சாப்பாடு போடேலை…. கணக்குப் பாத்துப் படிப்பீக்கேலை…. இண்டைக்கு அந்தக் கஸ்டமான நிலமையள்ளை…. இஞ்சையிருந்து அனுப்புற காசு அவேன்ரை சாப்பாட்டைச் சமாளிக்கத்தான் காணும்…. கேவலம் உந்த நகையள், சீலையளுக்காக…. அவையளுக்கு அளவுச் சாப்பாடு போடச் சொல்லுறீரோ….”
“அதுதான் வேண்டாமெண்டால் பங்களிப்பு எண்டு மாதாமாதம் செலவழிக்கிற காசை நிப்பாட்டலாந்தானே?”
“ஏனப்பா இப்பிடிக் கதைக்கிறீர்…. என்னாலை புண்ணுக்கு மருந்துபோட ஏலாட்டாலும், ஒத்தணம் கொடுக்கிறன்…. அதுக்கும் பாக்க இப்ப நகையளும் சீலையளுந்தான் முக்கியமோ…?” என்று எரிச்சலுடன் கேட்டவனைச் சினத்துடன் பார்த்தாள் யாழினி.
யாசகத்திலிருந்துதான் நேசம் ஆரம்பமாகிறது. “அன்பே!” என்ற அழைப்பிற்கு அன்பு கிடைக்கவேண்டும். அப்போதுதான் அங்கே “அன்பே!” என்ற அழைப்பில் உறவு உருவாகி, உணர்வாகி, கலந்தோடி, வியர்வையில் விரைந்தோடி பாசம் உருமாறி உருவமாகிறது.
யாசிப்பின் பலன் பூச்சியமானால்…. சுகமென்ன…. சொர்க்கமென்ன…?! உச்சியிலிருந்து தலைகுப்புற விழுந்து வலியெடுத்துத் தவிக்கும் நிலையையும் மிஞ்சிய நரகம்தான் தஞ்சம்.
எனவே, யாசகத்தை நீ நசுக்கினால்…. யாசிப்பவள் பாதகியானாலும் வியப்பில்லை. பாதிக்கப்பட்டவர்கள்தான் பயங்கரவாதிகளாகிறார்கள்!
“தாலி கட்டின மனைவியின்ரை சின்னச்சின்ன ஆசையளைக்கூடத் தீர்த்து வைக்காதவனெல்லாம் கலியாணங் கட்டக் கூடாது…”
“இது சின்னச்சின்ன ஆசையில்லை…. சின்னஞ்சின்னனாய் முளைச்சு ஒண்டாய்த் திரண்டு கொண்டிருக்கிற பென்னாம் பெரிய ஆசை….”
“உன்னோடை பேசிப் பலனில்லை…. என்ரை ஆசையளைத் தீர்க்க உன்னாலை முடியாது….” என்பதுபோல், “வெடுக்”கென முகத்தைத் திருப்பியவாறு அங்கிருந்து அகன்றாள் யாழினி.
அவளது பெருமூச்சு அவனைச் சுட விளைந்தது. முடியவில்லை. பலமுறைவிட்ட மூச்சுக்களால் கறுத்துக் காய்ச்சுப் போனவன்.
ஆனால் அவள்….
சக்தி….!! சக்தியின்றேல் சிவமில்லை. நீ அர்த்த நாரீஸ்வரனல்ல…. என் உணர்வுகளில் பாதி கேட்டு, உன்னில் பாதி தர, உன்னால் முடியாது. நான் சக்தி…. தனிப்பேன்…. நானே நான்…. நானாக வாழ்வேன்…. தோற்றமும் தெரியாது, முடிவும் தெரியாது என்றானபோது…. மிஞ்சிக் கிடக்கும் கொஞ்சநாட்களில் என் உணர்வுகள்…. ஆசைகள்…. அவற்றுக்குத் தீனிபோட்டு, என் எண்ணப்படி நான் வாழுவேன்…. வாழ்ந்து காட்டுவேன்!
அவள் சொல்லாததைச் செய்துகாட்டினாள்.
அந்தப் பறவைகள் எவ்வளவு அழகு?! கழுத்தில் வரிவரியாகக் கறுத்தக் கோடுகள் மாலைகளாக மனதை மயக்கின. அவனது நாசித் துவாரத்திலிருந்து வெளிவந்த மூச்சுக் காற்றின் உ;ணத்தால் மருண்டு இறக்கைகளை ஒடுக்கிக்கொண்ட பறவையை, மெல்லத் தன் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டபோது, அவன் இதயநாளங்கள் அவளின் பெயரை மீட்டத் தொடங்கியது.
“யாழினி… யாழினி….”
கூண்டுக்குள்ளிருந்த சோடிப் பறவை சிறகுகளைச் “சட,சட”வென அடித்துக்கொண்டு, “கீச், கீச்” எனக் கத்தியது.
அதைக் கண்டு அவனது கரத்திலிருந்த பறவை பரிதாபமாக அவனைப் பார்த்தது.
“இறக்கிவிடன்…. என்னை எதிர்பார்த்து ஒரு உயிர் கூண்டுக்குள்ளை தத்தளிக்கிறது” என்று கெஞ்சுவது போலிருந்தது அதன் பார்வை.
“நானும்தான் தத்தளிக்கிறன். கூண்டுக்குள் இருந்தல்ல…. இந்த வீட்டுக்குள் இருந்து…. உனக்குப் புரியுமா?”
புரியாது…. ஆறறிவு பெற்ற மனித ஜென்மங்களுக்கே புரியாதபோது, உனக்கெங்கே புரியப்போகிறது?!
“புரியும் புரியும்…”
ஏளனமாகச் சிரித்தது கூண்டுப் பறவை.
“உனக்கு நீயே ஆறறிவு இருப்பதாக நினைத்த முடிவு. உனக்கில்லாத அறிவு எனக்குண்டு. இந்தக் கூண்டுக்குள்ளேயே எங்களால் நிம்மதியாக வாழ முடிகிறது…. துணையில்லாமல் தனித்து வாழமாட்டோம். ஆனால் நீ…. எங்கே உன் துணை…. தனக்கென ஒருவனைத் தேடிப் பறந்துவிட்டாள். எங்கே உன் நண்பன்…. வில்லன்…. இன்றுனக்கு வில்லன்…. எங்கே உன்னுடைய ஆறு வயது மகள்…. அப்பா அப்பா என்று வளைய வருவாளே….?! அவள்கூட அம்மாவின் பின்னால் போய்விட்டாள்…. அவளும் உன்னை விலத்தி, தப்பானவனை அப்பாவாக்கி விட்டாளோ….?!”
கூண்டுப் பறவை சிறக்கைகளைத் தட்டி அலறியது.
“இப்ப நீ தனிமரம்…. கட்டிய மனைவி இல்லை. பெற்றெடுத்த மகள் பாமினி இல்லை. இழந்துபோன உறவுகளுக்காய் உருகமட்டுந்தான் உன்னால் முடியும்….”
“எதிர்பார்க்கவில்லை…. யாழினி இப்பிடிச் செய்வாளெண்டு எதிர்பார்க்கவில்லை.”
ööö
அன்று….
பிடரியில் வாய்க்கால் அமைக்கும் இரட்டைச் சடைப்பின்னல் தோளில் தவழ, இடுப்பில் பாடப் புத்தகங்களை அணைத்தவாறு சென்றுகொண்டிருந்தான்.
மழை சற்று ஓய்ந்திருந்தது. குண்டும் குழியுமான வீதியில் தண்ணீர் அருவியாகி, வீதியைச் சமதரையாக்கிக் கொண்டிருந்தது.
ஏதோ சிந்தனையுடன் வந்து கொண்டிருந்தவனின் “சைக்கிள்” பள்ளத்தில் விழுந்து எகிறித் தடுமாறி அவள்மீது சாய்ந்தபோது, அவளின் புத்தகங்கள் வீதியில் சிதறுண்ட…. அவன் பயந்தவாறு மன்னிப்புக் கேட்டு, சிதறியவைகளைச் சேர்க்க, அவள் கோபமுறாமல் புன்னகைக்க….
அறிமுகத்துக்கு ஆரம்பக் காரணி அது. அறிமுகம் அர்த்தமாக எதையோ தேடி, எதிலோ தைக்க…. அவர்கள் காதலர்கள்.
பற்றையை நாடி, செத்தையைத் தட்டி இரகசியமாய் ஆரம்பித்து, இரசனைகளில் மூழ்கி, நம்பிக்கை வசனங்களால் துணிந்து நின்று, ஊர் கதைத்து, உற்றம் சேர்ந்து திருமணமாகி, வெளிநாட்டுக்கு வந்து, வாரிசாக ஒன்றையும் தோற்றுவித்த பிறகு…. பிரிவு…. சடப்பொருள்களின் மீதுள்ள சகாயம் சல்லாபத்தை விழுங்கி ஏப்பமிட்டு, விபரீத விளைவைத் தோற்றுவிக்க, எங்கிருந்தோ வந்தவன் எத்திப்பறித்த கதையாக…. காதல் வெறும் காமமாய், உறவு வெறும் மாயையாய், அவன்மட்டும் அலங்கோலமாய்….
கூண்டுப் பறவை வீறிட்டுக் கத்திச் சிரித்தது.
“எதிர்பாக்காத பிரிவு….”
“மானுடனே… உறவு பிரிவு, பந்தம் பாசம்…. இவை யாவுமே உன் கையில் இல்லை. உலகம் ஒரு சக்தியால் சுழல்கிறது. அதோடொத்து நான், நீ…. புல் பூண்டு என இந்த அண்டத்து உயிர்கள், பொருள்கள் யாவுமே அந்தரத்தில் சுழலும்போது…. இதுதான் நிலையானது…. இதுதான் நிரந்தரம் என்று நினைப்பதா உன் ஆறறிவு….?!”
“நம்பிக்கைதானே வாழ்க்கையின் அஸ்திவாரம்….?”
“நம்பிக்கை…. யார் யாரை நம்புவது? ஆஸ்திகன் கடவுளை நம்புகிறான். நாஸ்திகன் சக்தியை நம்புகிறான். நீ இலட்சியங்களை நம்பினாய். உன் மனைவி நகையை, சேலையை நம்பினாள்…. அவைகளுக்காக எவனையோ நம்பினாள்…. உன் உதிரத்தில் உதித்த மகள் தாயை நம்பினாள். ஆக நம்பிக்கைகள் அழிவுக்கா, ஆக்கத்துக்கா வழிவகுக்கிறது….”
“குழப்பாதை….”
தலையில் அடித்துக் கொண்டான்.
“உலகமே குழப்பம். உலகம் உருண்டை, தன்னைத் தானே சுற்ற ஒருநாள் எடுக்கிறது. அப்படியாயின் விமானங்கள் நகரத் தேவையில்லை…. அந்தரத்தில் மேலே எழுந்து, அசையாமல் சிலமணி நேரம் அங்கேயே நின்று, கீழே இறங்கினால், வேறுநாடு வந்துவிடுமா? இது குழப்பமில்லையா…. உனது மனைவியின் ஆசைகள் அந்தரத்தில் மேலெழுந்து, ஊசலாடிக் கீழே வந்தபோது, அது இடம் மாறிவிட்டது….”
ஏதோ ஒரு நகைச்சுவையைக் கூறியதுபோல், அந்தப் பறவை கூண்டுக்குள் அங்குமிங்குமாகப் பறந்து திரிந்து அலறி அலறிச் சிரித்தது.
கூண்டை எட்டி உதைத்தான்.
“திமிர்…. திமிர்….”
அலறித் துடித்த பறவை, திறந்த கதவின் வழியே வெளியே பறந்து, அலுமாரியின் மேல் அமர, அவனது கரத்திலிருந்த பறவையும் தாவி அதன் அருகே அமர்ந்தது.
“அந்தரமான உலகத்தில் நிரந்தரமான உறவுகள்…. நல்ல வேடிக்கை. நிரந்தரத்துக்கு நீ விலை கொடுக்கவேண்டும்.. இல்லையேல் எல்லாமே அந்தரம்…. அந்தரம்…. நாளைக்கு உன்ரை மகள் உன்னைப் பார்க்க வரலாம்…. அப்பா என்று அழைக்கலாம். ஆனால் இப்ப அவளுக்கு யார் அப்பா?! நீயா…. அவனா….?! அவளையும் சூழ்நிலையோ, மனச்சாட்சியோ விலை கேட்கலாம். அப்பா ஞாபகம் வரலாம். அப்போது வருவாள்….”
“வருவாளா….”
“வருவாள்…. வருவாள். அதுவரைக்கும் நீ அவளுக்காக மீண்டும் நம்பிக்கை வைத்து உன்னையே ஏமாற்றிக் கொள்ளப்போகிறாயா?”
பறவை பரிகசித்தது.
அவனால் தாங்க முடியவில்லை.
காதுகளைப் பொத்திக்கொண்டான்.
“சீ…. சனியனே, முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் குழப்புகிறாய்?”
மேசையிலிருந்த புத்தகத்தை எடுத்து வீசி எறிந்தான்.
பறவைகள் விலகி “ரீவி”க்குத் தாவ, அலுமாரிக் கண்ணாடிக் கதவுகள் “கலீர்” என்ற சத்தத்துடன் சிதறின.
“விசரன்…. விசரன்….”
கேலியாகச் சிரித்தன.
“சனியன்களே…. என்னையா ஏமாற்றுறீங்கள்…” என்று கத்தியவாறு மேசை விளக்கை எடுத்தெறிய, அது “ரீவி”யை நொறுக்கியது.
“பைத்தியம்…. பைத்தியம்….”
காதுகளைப் பொத்திக்கொண்டான்.
மனதில் இனம்புரியாத கொதிப்பு. அந்தக் கொதிப்பில் சிரசு சூடாகி, மூளையே உருகி மெழுகாகி, சொரு சொரென்று நெற்றியில் படர்ந்து, கண்களை மறைப்பது போன்ற பிரமை.
கைகளில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசினான்.
“விசரன்…. விசரன்…. எங்களையா கூண்டுக்குள் அடைத்து அழகு பார்த்தாய்….?! விசரன்…. விசரன்…. பெண்டாட்டி ஓடினதால் விசரன்…. மகள் போனதால் விசரன்…. விசரன்…. இப்பிடித்தான் கதைப்பார்கள்….”
பறவைகள் உல்லாசமாக வெளியே பறக்கும்போது, அவனது சிரிப்பொலியும் வெளியே நீண்ட நேரமாக ஒலித்தது.
(பிரசுரம்: பூவரசு)