கூச்சம்!





காம்யாவுக்கு வீட்டிற்கு வரும் புதியவர்களைப்பார்த்து விட்டாலே கூச்சம் ஏற்பட்டு விடுவதால் தனது அறைக்குள்ளேயே கதவைத்தாழிட்டு பெட்டில் படுத்து போர்வையை தலைக்கும் சேர்த்துப்போர்த்திக்கொள்வாள்.
கதவைத்தட்டினாலும் திறக்க மாட்டாள். சிறிது நேரம் கழித்து, வந்தவர்கள் சென்றதை ஜன்னல் மூலமாகப்பார்த்து உறுதி செய்த பின்பே வெளியே வருவாள்.
வெட்கமும், வெகுளித்தனமும், கூச்சமும் காம்யாவை ஒரு சேர ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிப்படைப்பதை விட்டு வெளியேற முடியாமல் தவித்தாள்.

“அந்தக்காலத்து மாதரியே வெளியுலகம் தெரியாம பொண்ண வெள்ளச்சோளமாட்ட வளர்த்து வெச்சிருக்கறே. ஊட்டுக்கு பக்கத்துலயே பள்ளிக்கொடம் இருக்கறதுனால வெளில புடிச்சவங்க கூட வெளையாடறதுக்கோ, பேசறதுக்கோ முடியாத மாதர பள்ளிக்கொடம் உட்டா நேரா ஊடு, ஊட்லிருந்து நேரா பள்ளிக்கொடம்னு வயசுக்கு வந்த பதனைஞ்சு வயசுப்பொண்ணு இப்படியிருந்தா நாளைக்கு ஒன்னொரு குடும்பத்துக்கு கண்ணாலம் பண்ணிக்கொடுத்தா எப்படி வாழ்க்கை நடத்துவா….? அவளுக்கொரு கொழந்தை பொறந்தா அதை எப்படிக்காப்பாத்துவா…?” என தனது தாயின் தாய் செல்லம்மாள் தன் தாயைக்கேட்க, “நானும் இப்படித்தானே வெக்கப்பட்டுட்டு இருந்தேன். இப்ப வாழாமையா போயிட்டேன்?” என தாய் கோமதி பேசி சமாதானப்படுத்தியது காம்யாவுக்கு நம்பிக்கையளித்தது.
உறவுகள், நட்புகள், அண்டை வீட்டார் என பல பேரும் ‘காம்யா ஆயுளுக்கும் இப்படித்தான் இருப்பாள்’ என பேச ஆரம்பிக்க கவலை கொண்டவளாய் மகளை மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்றாள் கோமதி.
“ஆறறிவு மனுசனுக்கு இருந்தாலும் பொறந்த உடனே செயல்படாது. வளர, வளர தினமும் பெறப்படற அனுபவம்ங்கிற உரம் தான் அறிவுங்கிற மரத்தையே வளர்த்தும். அதத்தொடாதே, இதத்தொடாதே, அங்க போகாதே, இங்க போகாதே, அவனப்பார்க்காதே, இவ கூடப்பேசாதேன்னு சின்ன வயசுல இருந்து பெற்றோர் பயமுறுத்திச்சொல்லறதுனால குழந்தைகள் கூச்ச சுபாவத்தோட, மன பயத்தோட மனம் வளர்ச்சியடையாத வெகுளிகளா, வெள்ளந்தியா இருக்கறாங்க. இதுக்கு மருந்து மாத்திரை கேட்காது. சரி செய்யாது. அவங்களை மாத்தாது. அவங்கள அவங்க போக்குல விட்டிங்கனாவே சரியாயிடுவாங்க” என மருத்துவர் பேசிய பேச்சால் தன் மனம் சற்று வளர்ச்சியடைந்து, அதனால் ஏற்பட்ட மன மாற்றத்துடன் வெளியேறிய கோமதி இதுவரை தன் மகள் காம்யாவை கட்டுப்படுத்துபவளாக இருந்தவள், தற்போது கட்டுப்படுத்துவதை விட்டு கண்காணிப்பாளராக மாறினாள்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |