குழந்தை




(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிற்பகல் நேரம். ஆதவன் அனலாய்த் தகித்துக் கொண் டிருந்தான். பேபர் மலைக்குச் செல்லும் அந்தச் சாலை வெறிச்சோடிக்கிடந்தது. மத்தியான நேரத்தில் மலைக்குச் செல்வோர் குறைவுதான். அச்சாலையின் வலது புற மரங்களடர்ந்த உயரமான மேட்டின் உச்சியில் ஒரு மாளிகை கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது.
உயரமான பகுதியில் அமைந்திருந்த அந்தப் பழுப்பு நிற மாளிகைக்கே அழகூட்டுவதைப் போல அமைந் திருந்தது-மாளிகையின் முன் புறத்திலமைந்திருந்த புல் திடல். அத்திடலின் முக்கால் பகுதியை முடித்துவிட்ட பெருமையில் திரும்பிப் பார்த்தான் முருகன்.

அவன் முகத்தில் அரும்பி இருந்த வியர்வைத்துளிகள் நீரருவியாய் வழிந்தோடி அவன் முகத்தில் பல கோடுகளை உண்டாக்கியிருந்தது. முருகன் வானத்தை நிமிர்ந்து பார்த்தான். அவனுக்குக் காலம் காட்டும் “ஒமேகா’ கடிகாரமே அதுதானே!
“மணியாயிடுச்சே…” என்று முனகியவண்ணம் அவசரமாகத் தன் விரல்களின் இடுக்கில் சிறைப்பட்டிருந்த பீடியை வலுவாக ஓர் இழுப்பு இழுத்தான். அவன் மூக்கு ஒரு கணம் ரயில் இயந்திரமாகியது.
முருகன் சுறுசுறுப்படைந்தான். உழைத்து வைர மேறிய அவன் தசை நார்கள் புடைத்தன. அவன் இயந்திர மாய்ச் செயல்பட்டான். அவனோடு போட்டி போட்டுக் கொண்டு அவன் பிடித்திருந்த புல்வெட்டும் இயந்திரமும் கடகடவென காற்றாடிபோல் சுற்றியது.
அவன் வேலையை முடிக்கவும் அவ்வீட்டுக்கார முதலாளி ஐந்து வெள்ளியைக் கொண்டு வந்து கொடுக்கவும் சரியாக இருந்தது. மகிழ்ச்சியோடு தன் கூலியை வாங்கிக் கொண்டான் முருகன். அந்த நேரத்தில் துறைமுகத்தில் சங்கு ஊதும் ஒலியும் கேட்டது.
மலையிலிருந்து பார்க்கும் போது, அவனோடு பணி புரியும் ஏனைய தொழிலாளர்கள் பகல் உணவு முடிந்து திரும்பவும் வேலைக்குப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களோடு சேர்ந்து கொள்வதற்காக, விரைந்தான் முருகன்-போவதற்கு முன் அவனெதிரே நின்று கொண்டிருந்த வீட்டுக்காரருக்கு ஒரு சலாம் போட மறக்க வில்லை.
பகல் உணவிற்காக மற்றவர்களோடு வெளியேறிய துறைமுகத் தொழிலாளியான முருகன், இடையில் வந்த ஒரு பகுதிநேர வாய்ப்பை நழுவவிட மனமில்லாமல் உணவை அன்று தியாகம் செய்ய வேண்டியதாயிற்று.
சிறுவயதிலேயே உழைக்கத் தொடங்கிவிட்ட ஓர் அசல் தொழிலாளி குடும்பத்து மூத்தபிள்ளையான முருகன், பார்ப்பதற்குக் குள்ளமாகவும் கறுப்பாகவும் இருப்பான். கறுப்பு என்றால் சாதாரண கறுப்பு இல்லை; அட்டைக் கறுப்பு. அதனால் அவன் பெயர் கறுப்பன் என்றே ஆகி விட்டது. அவனை முருகன் என்று அழைப்பவர் யாருமில்லை.
இயற்கை தனக்குச் சதி செய்துவிட்டதாக முருகன் நம்பினான். அதனால்தான் தன்னைக் கறுப்பாக படைத்து விட்டதாக நினைத்தான். தன்னைக் கடவுள் படைத்ததாக அவன் நம்புவதில்லை. காரணம் அவன் திராவிடர் கழகத்தில் பற்றுடையவனாயிருந்தான். கடவுள் நம்பிக்கை அவனுக்கில்லை.
தன் உருவமும் நிறமும் பிறர் கேலி செய்யும் நிலை யிலிருந்ததால், அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை இயற்கையாக இருந்தது. மற்றவர்களோடு சேர்ந்து அவன் இருக்கமாட்டான். பெரும்பாலும் தனிமையிலேயே இருப் பான். பிறர் கிண்டலை அவனால் எப்படிச் சகிக்க முடியும்?
அவனுக்கு மேலதிகாரியாக இருந்தவர் கனகசுந்தரம். அவர் நனகு படித்தவர். அவர் எதைச் சொன்னாலும் அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லுவார். அவர் பேசும் போது கைகட்டி நின்று முருகன் கவனமாகக் கேட்டான்.
“முருகா, நிறத்தைப் பற்றிக் கவலைப்பட்டு நீ மனத்தைக் குழப்பிக்க வேண்டாம். உருவத்தில என்ன இருக்கு? உள்ளம் உயர்ந்ததாய் இருக்கணும்பா. அபிரகாம் லிங்கன் இருந்தாரே, அவரை உனக்குத் தெரியாதில்லே. அவரைக் கூட அவலட்சணமான மனிதர் என்றுகூட கேலி பண்ணினாங்க. பிறகு பின்னால அவரு என்னவானார் தெரியுமா? அமெரிக்க நாட்டின் அதிபராகவே ஆயிட்டாரு. அவருக்கு அப்பதவி கிடைக்கிறதுக்கு, அவர் உருவம்தான் காரணமா என்ன? விட்டுத்தள்ளு.” என்று கனகசுந்தரம் கூறும்போது, அவரைப் போலவே உலகத்தில் எல்லாரும் அறிவாளிகளாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் நெஞ்சு ஏங்கும். அப்படி இருந்திருந்தால் முருகன் பள்ளிப் படிப்பைக்கூட நிறுத்தியிருக்கமாட்டானே.
முருகன் உயர்நிலை ஒன்றில் படித்துக்கொண்டிருந்தான். “முருகு அல்லது முருகன்” என்பதற்குப் பொருள் கூறிய ஆசிரியர், அழகு அல்லது அழகன் என்றுகூறினார். “அதாவது நமது முருகன் மாதிரி…” என்று குறும்புக்கார மாணவன் ஒருவன் கூறியதும் “கலுக்கென்று” எழுந்த சிரிப்பொலி அடங்க நெடுநேரமாயிற்று.
பிறகு அம்மாணவனை ஆசிரியர் கண்டித்தார். எனினும், அது முருகன் பள்ளியினின்று விலகிக்கொண்டதை எவ்வகையிலும் மாற்றவில்லை. அன்று பள்ளிக்குக் கும்பிடு போட்டு விட்டு வெளியேறியவன்தான்; பிறகு மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியதில்லை.
பன்னிரண்டு பேர்களைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான முருகன், தன் பதினான்கு வயதிலேயே உழைக்கத் தொடங்கிவிட்டான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது.
“நான் அழகு இல்லாதவன்தான். ஆனால் என் பிள்ளை என்னைப் போல் இருக்க மாட்டான். பார்க்கிறவங்க எல்லாம் ஆசைப்படுகிற மாதிரி அழகான குழந்தையைப் பெற்றுவிட வேண்டும். இதுதான் என் லட்சியம்.. ” என்று அந்த இளம் வயதிலேயே சபதம் எடுத்துக் கொண்டான். துவக்கத்தில் வயது போதாத காரணத்தால் எடுபிடி வேலைகள் செய்து நான்காண்டுகளைக் கழித்த பின்பு, துறைமுகப் பகுதியில் தொழிலாளியாகி நான்காண்டுகளுக்குப் பிறகு அவனுக்குத் திருமணம் முடிந்தது.
பொன்னம்மாள். அவன் மனைவியின் பெயர். பெயரைப் போலவே பொன்னிறம் கொண்டவள். பொன்னி அவன் தாய் மாமனின் வளர்ப்பு மகள். சீனர்களுக்கே உரிய மஞ்சள் நிறம். தமிழர் வீட்டில் வளர்ந்த நிலையிலும் மாறா மல் இருந்தது. சொந்தத்திற்குள் பந்தம் என்பதால் இருவருடைய சம்மதத்தையும் கேட்க வேண்டுமென்று யாருக்கும் தோன்றவில்லை. அதில் யாருக்கும் வருத்தமுமில்லை.
பொன்னம்மாள் பொறுப்பானவள்: சிக்கனமானவள். எனவே முருகனின் இல்வாழ்க்கை இன்பமாய் நடந்துவந்தது. அவன் பெற்றோர் பொன்னம்மாளைப் போற்றினர். அவன் தனது வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு இன்பம் பெருகியோடுவதைக் கண்டு அதில் நீந்தத் தயங்கவில்லை.
ஒரு நாள் முருகனிடம் நெருங்கி வந்த பொன்னம்மாள், “என்னங்க இன்னிக்கு வேலை முடிந்து வரும்போது… கொஞ்சம் மாங்கா வாங்கிட்டு வாங்க…” என்றாள் நாணம் மேலிட.
“ஏன் ஊறுகாய்… போடவா?” என்று புரியாமல் வார்த்தைகளைக் கொட்டினான்.
“இல்லேங்க, அவ்வளவு அதிகமா வேண்டாம். ரெண்டு போதும்…” அவள் நாணிக் கோணி சொன்ன விதம் அவனுக்கு எதையோ உணர்த்தியிருக்க வேண்டும்.
“ரெண்டா?…இரண்டு விரல்களை மடக்கி அர்த்தம் தொனிக்கக் கேட்டான்.
“ஆமா…”
“ஆகா!…” என்று அவளை அலாக்காகத் தூக்கி உலுக்கியபோது அங்கு வந்த அவன் தாயார் “டேய் என்னடா இது?…” என்று கேட்கவே, முருகன் வெளியிலும், பொன்னம்மாள் உள்ளேயும் ஆளுக்கொரு பக்கம் ஓடினர்.
பொன்னி உண்டாகியிருப்பதாகக் கூறிய மறுநாளே ஒரு கூடை மாங்காயோடுதான் வீடு வந்து சேர்ந்தான் முருகன். அத்தோடல்லாமல் அவன் நண்பர்கள் கூறிய சில “டானிக்குகளையும்” வாங்கி வந்திருந்தான். அவற்றை வாங்குவதற்காக அவன் வேகாத வெயிலில் புல்வெட்டினான் என்பதைக் கேட்ட பொன்னம்மாள் கரைந்து போனாள்.
முருகன் தன் இலட்சியக்கனவு நனவாவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கத் தயாராய் இருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் ஓர் அழகான குழந்தை. அது ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் சரிதான். “பொன்னம்மா, உன்னைமாதிரியே சிவப்பான குழந்தையைப் பெற்றுத்தரணும். அதற்காகத்தான் மறுபேச்சில்லாம உன்னைக் கட்டிகிட்டேன்…” என்றான் முருகன் ஒருநாள்.
“கறுப்பா இருந்தா கட்டிக்கிட்டிருக்க மாட்டியா? இவ்வளவுதான் உன் அன்பா!…” ஊடல்கொண்டு பேசினாள் பொன்னம்மாள்.
“அப்படி இல்லே…” என்று ஆதரவாகத் தன் மனைவியை அணைத்துக்கொண்டபடி மறுபடியும் ஏற்கெனவே பல முறை சொல்லிய பழைய செய்தியையே கூறினான்.
அவளும் மகிழ்ந்து போனாள்.
“முருகா, ஒரு மகிழ்ச்சியான சேதி கேள்விப்பட்டேனே. உன் தகப்பனாரை வழியில் பார்த்தேன், அவருதான் சொன்னாரு…” என்று வாழ்த்துக் கூறினான் முருகனோடு பணிபுரியும் நாதன்.
பிறகு அவனே தொடர்ந்தான். “இந்தக் குங்குமப் பூ, சோயா பீன், தயிர் இதுவெல்லாம் வாங்கிக் கொடு. குழந்தை அழகாய் இருக்கும்…” என்று ஆலோசனையும் கூறினான்.
அன்று குங்குமப்பூவை வாங்கிக் கொண்டு பேருந்தில் அமர்ந்து செல்லும்போது, குழந்தை என்னைமாதிரிப் பிறந்திட்டா என்ற எண்ணம் ஏற்பட்டது, முருகன் ஒரு கணம் நிலை குலைந்து போனான்.
“சே, அப்படி எல்லாம் நடந்திடாது, அவ மாதிரிதான் இருக்கும். எத்தனையோ சீன வளர்ப்புப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளைத்தான் பார்த்திருக்கிறேனே! எல்லாம் சிவப்பாகத்தானே இருந்ததுக…” என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
பொன்னம்மாள் தாயாகப் போகும் நாள் நெருங்கிய போது. ஒருநாள் அவன் தாயார், “டேய் தம்பி, பிள்ளை பிறக்கிறதுக்கு முந்தி தொட்டில், பொம்மை இதை எல்லாம் வாங்காதே. குழந்தை பிறந்த பிறகு வாங்கலாம்…” என்றாள்.
உண்மையில் அப்படி ஒரு திட்டம் இருந்தது முருகனிடம்.
“ஏம்மா?” என்று புரியாமல் கேட்டவனுக்கு “அதுதான் வழக்கம்…” என்று கூறிவிட்டாள் அவன் தாயார். பிறகு முருகன் தன் தாயாரின் வார்த்தையை மீறவில்லை.
முருகன் வழக்கம்போல் அன்று வேலைக்குச் சென்றான். நடுக்கடலில் நங்கூரமிட்டிருந்த ஒரு ஜப்பானியக் கப்பலில் ஈயக்கட்டிகளை ஏற்றுவதற்காகச் சென்ற தொழிலாளர்களோடு முருகனையும் அனுப்பினார் கனகசுந்தரம்.
முருகன் வேலைக்குக் கிளம்பிச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம், பொன்னம்மாளுக்கு “இடுப்பு” வலி எடுக்கவே “கண்டங்கிறுபாவ் மகப்பேறு” மருத்துவமனையில் சேர்த்தாள் முருகனின் தாயார். அவனுக்குத்தகவலும் கொடுக்க முடியவில்லை. வேலை முடிந்து இரவு திரும்பும்போது மட்டுமே சொல்ல இயலும் என்று கூறிவிட்டனர் அதிகாரிகள். சரி பரவாயில்லை என்று சமாதானமடைந்த முருகனின் தாயார் ஆகவேண்டியவற்றைப் பொறுப்புடன் பார்க்கலானாள்.
நடுக்கடலில் ஈயக்கட்டிகள் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. தள்ளாடும் படகிலிருந்து ஈயக்கட்டிகளை “ஓங்கி யின்” வழி கப்பலின் கீழ்த்தளத்தில் அடுக்க வேண்டும். முருகன் எப்போதும் செய்யும் தொழிலில் ஈடுபாடு காட்டுபவன். அவன் சக தொழிலாளி ஒருவன் பாரத்தை நகர்த்த முடியாமல் துன்புறுவதைக் கண்ட முருகன் அவனுக்கு உதவி செய்ய விரைந்தான்.
அதற்குள் அத்தொழிலாளியின் கால்கள் நொடித்து சாயப்போகவே, அவனைத் தடுக்க நினைத்த முருகன் தொழிலாளியின் கரங்களைப் பிடித்தபோது, அவன் முதுகிலிருந்த ஈயக்கட்டி சரித்து முருகன் தலைமேல் விழுந்தது.
“ஐயோ!…” என்று ஓலமிட்டுக்கொண்டு விழுந்தவன் தான். திரும்ப கண் விழிக்க முயன்றபோது மூர்ச்சையானான். நினைவு திரும்ப இரண்டு நாட்களாகிவிட்டன. உடலை மெதுவாக அசைத்துக் கண்களைத் திறக்க முயன்றான். முடியவில்லை. கண்கள் ‘விண் விண்’ என்று தெறித்தன. கண்களில் கட்டுப் போடப்பட்டிருந்தது. கண் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர் கூறியிருந்தார்.
அவளைப் பார்க்க எல்லாரும் வந்திருந்தார்கள் பொன்னம்மாளைத் தவிர. அவன் தாயார் அவள் பிரசவமாகி வீட்டிலிருப்பதாகக் கூறியதும். அவன் தன் துன்பத்தை எல்லாம் மறந்தான்.
“ஆண் குழந்தை பிறந்திருக்கு தம்பி. செக்கச் செவேருன்னு ராஜாவாட்டம் குழந்தை இருக்குது. நீ கவலைப் படாதே. பொன்னம்மாளும் நல்லா இருக்காப்பா, உன் கவலைதான்…” என்று அவன் அன்னை கூறி முடித்த போது அவன் உடலே சிலிர்த்தது.
கண்களைக் குறித்து கவலைப்படுவதற்கில்லை என்று மருத்துவர் கூறிய ஆறுதல் மொழிகளிலேயே இரண்டு வாரங்களையோட்டிய பிறகு கட்டை அவிழ்த்தபோது, முருகன் இந்த உலகத்தைப் பார்க்கவில்லை. இருளைத் தான் கண்டான். அவன் கண்களில் ஒளியில்லை, அவை இழந்துவிட்டன. முருகன் ஒரு குருடன்… கடவுளே!…
“பொன்னம்மாள். என் குழந்தையை ஒரே ஒரு தடவை கூட பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே? நான் பாவி. என் பிள்ளையை இப்படிக் கொடு…” என்று ஆசையோடு வாங்கி நடுங்கும் கரங்களால் குழந்தையைத் தடவிப் பார்த்தான்.
அவன் கரங்களுக்கு மட்டும் கண்கள் இருந்திருந்தால், அவன் இலட்சியக் குழந்தையின் வடிவை, அவன் கண்டு மகிழ்ந்திருப்பான்.
– 1968, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.