குழந்தைகளின் ஓவியங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 2,509 
 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘என்ன சொல்லப் போகிறார்களோ?’ என்ற கவலையோடு காத்திருந்தாள் மேகலா. அந்தக் குளுகுளு ஏசியிலும் அவள் முகத்தில் வேர்வை முத்துக்கள் அரும் பின. டிஸ்யூ எடுத்து ஒத்திக் கொண்டாள். சேலைத் தலைப்பை எடுத்து முகத்துக்கு முன்னே படபடத்துக் கொண்டாள்.

‘வேலையிருக்கிறது’ என்று அவள் பாசிடம் தலையைச் சொரிந்து கேட்டு அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்த மேகலாவிற்கு இருப்புக் கொள்ளாமல் வந்தது.

அவளுக்குப் பக்கத்தில் ஒரு சீன ஆணும் பெண் ணும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களும் தன்னைப் போலவே அழைக்கப்பட்ட இன்னொரு ‘டிசிப்ளின் கேசோ’ என்று தோன்றியது மேகலாவிற்கு. அவர்களிடம் பேசிப்பார்த்தால் என்ன என்று தோன்ற, ‘நீங்களும் டிசிப்ளின் மாஸ்ட்டரைப் பார்க்கத்தான்…?’ என்று ஆங்கிலத்தில் இழுத்தாள். அவள் முடிக்குமுன்னே அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவளுக்கு என்னவோ போல இருந்தாலும் அவள் ஆங்கிலம் அவர்களுக்குப் புரியாமற் போயிருக்கலாம் என்று தேற்றிக் கொண்டாள்.

அந்த அறையின் சுவரில் குழந்தைகள் வரைந்த ஓவியங்களை வரிசையாக மாட்டியிருந்தார்கள். பூங்கா, மரங்கள், மலர்கள், விலங்குகள் என விதவிதமாகக் குழந்தைகள் தங்களின் பிஞ்சுக்கரங்களால் வண்ணந்தீட்டி யிருந்தார்கள். ஆணும் பெண்ணும் கைகோர்த்துப் போகிற ஓவியமும் எந்தக் குழந்தையோ வரைந்திருந்தது. ஓவியங்களின் அடியில் வரைந்த குழந்தையின் பெயரும், வகுப்பும் இருந்தது. ‘வருண் சிவராமன், பிரைமரி ஒன்னு’ இருக்கிறதா தேடினாள்; இல்லை. வலப்பக்கம் இருந்த கண்ணாடி ஷோக்கேசுக்குள் அந்தப் பள்ளி பெற்றிருந்த வெற்றிக் கோப்பைகள் பள்ளியின் பராக்கிரமங்களைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. நல்ல பள்ளிதான். அதனால்தானே வருணை இந்தப் பள்ளியிலே சேர்க்க ‘பேரண்ட் வாலண்டியரிங்’, ‘ஒரு கிலோமீட்டருக்குள் ஜாகையை மாற்றிக் கொண்டது’ என்று எத்தனை சிரமப்பட்டிருக்கிறாள்?

அது காலைப்பள்ளி ஆகையால் பிள்ளைகள் இல்லாமல் வகுப்பறைகள் அமைதியாக இருந்தன. இடப்பக்கம் கண்ணாடிச் சுவர் வழியே வெளியே பார்த்தாள். மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெயில் வீண்போகாமல் ஒரு சில சுட்டிகள் பள்ளி முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டி ருந்தனர். வருணும் முன்பெல்லாம் இப்படித்தான் வராமல் இங்கேயே ஆடிக்கொண்டிருப்பான். இப்ப ஜெனிபர் வந்த பிறகு ஒழுங்காக வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறாள்.

உடனே இன்றைக்கு வந்து கூட்டிப் போயிருப்பாளா? என்ற நினைப்பு வர வீட்டுக்குப் போன் போட்டு ‘வருண் வந்துட்டானா? சாப்பிட்டானா? படிக்கிறானா? வீட்டுப் பாடம் பண்ணீட்டானா?’ என்று ஜெனியிடம் விசாரித்தாள்.

இதற்கு முன் முன் இருந்த பணிப்பெண் சற்று வயதானவர். ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. சிவாவின் யோசனைப்படி பல ஏஜெண்டுகளைப் பார்த்துச் சொல்லிவைத்து ஜெனிபர் வந்தாள். ஜெனியிடம் வருண் நல்ல ஒட்டுதலாக இருக்கிறான்.

அறைக்கதவு திறந்து சிந்தனையைக் கலைத்தது மிஸ் லீனாதான். வருணின் வகுப்பு ஆசிரியை அவள்தான். பிரிஜ்ஜிலிருந்து எடுத்த காய்கறி போல அத்தனை பிரஸ்ஸாக வெளியே தலையை நீட்டி நெத்தியில் விழுந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிக்கொண்டு, ‘நீங்கள் வாருங்கள்’ என்று அவர்களைப் பார்த்து அழைக்க, அந்தச் சீனத்தம்பதி எழுந்து உள்ளே போனார்கள்.

மிஸ் லீனா மீண்டும் வெளியே வந்து, ‘நீங்கள் வருணின் அம்மா மேகலா… முன்பு பேரண்ட் வாலண்டியர் தானே?’ என்று கேட்டாள்.

‘ஆம்’ என்று புன்னகைத்தாள் மேகலா.

‘மன்னிக்கவும். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள்…உங்கள் கணவர்?’

‘அவர் வரவில்லை.’

‘அவரையும் வரச் சொல்லியிருந்தோமே?’

‘அவர் வெளிநாடு போய் விட்டு இன்றுதான் திரும்புகிறார். அதனால் நான் மட்டும் வந்தேன்’.

‘அவரும் இருந்தால் நல்லது.’

‘சரி, இன்னேரம் வந்திருப்பாரா தெரியவில்லை, போனில் முயற்சி செய்கிறேன்’.

‘என்னிடம் சொன்னால் போதாதா? சிவா வேறு? 2:30க்கு சாங்கி ஏர்ப்போட்டில் லேண்ட் ஆனதும் அழைப்பான். நேராகப் பள்ளிக்கு வரச்சொல்ல வேண்டும். என்ன சொல்லப்போகிறார்கள்? உங்கள் பிள்ளை சரியில்லை’ என்றுதானே? முன்பொருமுறை இதே போல்தான் அழைப்பு வந்தது. அவள்தான் வந்திருந்தாள். உங்கள் பிள்ளை வீட்டுப்பாடமே செய்வதில்லை. நீங்கள் இருவரும் வேலைக்குப் போகும் பெற்றோரானால் அவனைத் துணைப்பாட வகுப்பில் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார்கள். போய் சிவாவிடம் சொன்னாள். அவன் வழக்கமான ஆண் களைப்போலவே யோசித்துச் சொன்னான் ‘எல்லாம் பிசினெஸ், வெள்ளி’ என்று.

இருவரும் யோசித்தார்கள். சிவாவுக்கு மலேசியாவுக்கும், ஜப்பனுக்குமாக ஊர் சுற்றுகிற வேலை. மாதத்தில் 10 நாள் வீட்டில் தங்கினால் அதிசயம். மேகலாவால் வருணுக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. வேலையெல்லாம் முன்னே மாதிரியில்லை இப்போது. சம்பளத்தையும் அதிகம் கொடுத்து வேலையையும் பிழிந்து கொண்டு விடுகிறார்கள். வீட்டுக்கு வந்தால் செத்துப்போன மாதிரி வருகிறது. வருண் கதை கேட்பான்; இரண்டாவது வரியிலேயே உளற ஆரம்பித்துத் தூங்கிவிடுவாள் மேகலா. முடிவில் வருணுக்கு வாரத்தில் இரண்டு நாள் துணைப்பாடம் வைக்கப்பட்டது.

அவளின் கைப்பைக்குள்ளிருந்து செல் சிணுங்கியது. சிவாவாகத்தான் இருக்கும். சிங்கை மண்ணைத் தொட்டிருப்பான், அவனை இங்கு வந்துவிடச்சொல்ல வேண்டும் என ஆவலோடு எடுத்தாள். அது சிவா இல்லை. ‘ஹலோ… யெஸ்… ஸ்பீக்கிங்’. பக்கத்து வீட்டுச் சீனப்பெண். காலையில் வேலைக்குப் புறப்படுகையில் உன் நம்பரைக் கொடு உன்னிடம் பேச வேண்டும் என வாங்கிக் கொண்டாள். அவள்தான் இப்போது அழைக்கிறாள். ‘இல்லை. நான் இப்போது பள்ளியில் இருக்கிறேன்.’

‘சரி, ஒன்றும் அவசரம் இல்லை, ஆனால் அவசியம் பேச வேண்டும், ப்ரீயா இருக்கும்போது கூப்பிடு’ என்று சொல்லி வைத்து விட்டாள் அந்த பக்கத்து வீட்டுப்பெண். சிவாதான்.

செல் மீண்டும் அதிர்ந்தது.

‘என்னப்பா வந்திட்டியா?’

‘ஆமாடா வந்திட்டிருக்கேன் வீட்டுக்கு’

‘வீட்டுக்கு வேண்டாம்…நேரா வருண் ஸ்கூலுக்கு வந்திடு. விவரம் நேர்ல சொல்றேன்.’

அதற்குள் மிஸ் லீனா வந்து ‘உங்கள் கணவர் வந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று சொல்லி விட்டுப் போனாள். உள்ளே போன சீனத்தம்பதி வெளியே வந்து மறுபடியும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மறைந்து போனார்கள்.

சற்று நேரத்தில் வந்துவிட்ட சிவா காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்து ‘என்ன வருணுக்கு?’ என்றான் பதற்றமாக. பயணக்களைப்பு அவன் முகத்தில் அப்பி யிருந்தது. அவனை முழுவதுமாக ஆராய்ந்து விட்டு ‘அதெல்லாம் ஒன்றும் பயப்படாதே! வருண் டிசிப்ளின் சரியில்லையாம்! ரெம்பக்களைப்பா இருக்கே. முதல்ல ரெஸ்ட் ரூம் போய் முகத்தத் தொடச்சிக்கிட்டு வாப்பா’ என்றாள் கரிசனத்தோடு.

ரெப்ரஸ்ஸாகி வந்த சிவா ‘என்ன டிசிப்ளினாம்?’ என்று கோபப்பட்டான்.

‘அமைதி, அமைதி, .. எனக்கே இன்னும் தெரியாது. போய்க் கேட்கலாம்’ கதவைத் தட்டி இருவரும் உள்ளே போய் அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

டிசிப்ளின் மாஸ்டர் ‘உட்காருங்கள் மிஸ்ட்டர் அன்ட் மிசஸ் சிவா,’ என்று உட்காரவைத்து சகஜமாகப் பேச்சை ஆரம்பித்தார்.

வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்? என்ன வேலை? எத்தனை பிள்ளைகள்? வருண் எப்படி? தரை வீடா? எச்டிபி வீடா? எத்தனை பெட்ரூம்? வருணுக்குத் தனி ரூம் கொடுத்திருக்கிறீர்களா? இல்லை உங்களுடன்தான் தூங்குவானா? அவர் கேட்கக் கேட்க சிவா பொறுமை இழந்து கொண்டிருந்தான்.

அவன் அடக்கமுடியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன. ‘இப் யூ டோன் மைண்ட், கம் டு த பாய்ண்ட் சார். வாட்டிஸ் த இஸ்யூ?’

டிசிப்ளின் மாஸ்ட்டர் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார் ‘வருண் நல்ல பையந்தான். இப்ப சமீப காலமாக செக்ஸ் விசயத்துல ஆர்வமா இருக்கிறாப் போல தெரியுது. சற்று முன்னர் வந்திட்டுப் போறாங்களே, அவுங்க பொண்ணக் கட்டிப் பிடிச்சுக் கதறக் கதற கிஸ் பண்ணிருக்கான் கிளாஸ்ல ஆசிரியர் இல்லாதப்ப. அவங்க வந்து கம்ளெயிண்ட் பண்ணீருக்காங்க. நாங்க ‘இனிமே அப்பிடி நடக்காமப் பாத்துக்கிறோம், விசாரிக்கிறோம்’னு சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கோம். அவங்க ரெம்பக் கோவமா இருக்காங்க.’

மேகலாவுக்கு அவர்கள் ஏன் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்று இப்போது புரிந்தது.

சிவா மேகலாவைப் பார்க்க அவளும் ஒன்றும் புரியாமல் விழித்தாள். பின் சிவாவே பேசினான் ‘நான் என் பிள்ளையிடம் போய் விசாரிக்கிறேன். ‘வேறு என்ன என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்.’ சிவாவின் வார்த்தைகள் அவருக்குக் கோபமாகத் தொணித்திருக்க வேண்டும்.

அவர் மிகப் பொறுமையாகப் பேசினார் ‘மிஸ்ட்டர் சிவா, இது கொஞ்சம் சென்சிட்டிவ் மேட்டர், சிக்கலானதுதான், கோபம் வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்து இதற்குத் தீர்வு காண வேண்டும். அதற்காகத்தான் என்ன சூழல் வருணை மாற்றியது என்பதற்காகத்தான் உங்களைப் பல கேள்விகள் கேட்க வேண்டியதாயிற்று. மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்கு எப்படிச் சொல்வ தென்று தெரியவில்லை. நாம் பெற்றோர்தான் நாசூக்காக நடந்து கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் என் பிள்ளைகள் பிரைமரி ஒன் போகும் போதே தனி பெட்ரூம் கொடுத்து விட்டோம். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது சிவாவிற்கு நன்கு புரிந்தது. சிவா மேகலாவைப் பார்த்தான். அவள் ‘அடக் கடவுளே! நாம் அப்படி யெல்லாம் ஒருநாளும் இருந்ததில்லையே?’ என்று நினைத்துக் கொண்டாள்.

அவன் சொன்னான், ‘நாங்களும் இங்கிதமானவர்கள் தான். வீட்டை விடுங்கள், தொலைக்காட்சியில், அதையும் விடுங்கள், பப்ளிக் ப்ளேஸ்ல எம்மார்டீல, பஸ்ஸுல என்னவெல்லாம் நடக்குது? அதெல்லாம் நிறுத்திட முடியுமா? இன்னக்கி சமூகம் அப்படி இருக்கு சார். பிள்ளைங்க கெட்டுப் போறாங்கன்னா இதெல்லாம் கூடக் காரணந்தான்.’

‘சரி மிஸ்ட்டர் சிவா… உங்க மனைவியோட கலந்து பேசுங்க, உங்க பையன அணுக்கமா கவனிங்க. நாங்களும் அவனைப் பள்ளியில் கவனிக்கிறோம். வி கேன் சால்வ் திஸ்! டோண்ட் வொர்ரீ!’ நம்பிக்கை ஊட்டி விடை கொடுத்தார் டிசிப்ளின் மாஸ்ட்டர்.


காரில் வீடு திரும்பும்போது சிவா மேகலாவை ஒரு மாதிரியாகப் பார்த்து ‘நீ என்ன நினைக்கிறே?’ என்றான்.

‘நீ என்ன அப்பிடிப் பார்க்கிறே? என்னயச் சந்தேகப்படாதே’ என்று சண்டைக்கு வந்தாள் மேகலா. சிவா சமாதானப்படுத்தவும் அடங்கினாள்.

கொஞ்சம் யோசித்தவளாய் செல்லை எடுத்து பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைத்து ‘ஏதோ பேச வேண்டும் என்றாயே என்ன?’ என்று கேட்டாள்.

அதற்கு அவள் ‘நீ வேலைக்குப் போன பிறகு உன் வீட்டுக்கு ஒரு ஆண் வருகிறான். அது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டாள்.

அதிர்ச்சியாக இருந்தது மேகலாவிற்கு ‘என்ன சொல்கிறாய்? யார் அவன்? எவ்வளவு நாட்களாக?’

‘பயப்படாதே…உன் பணிப்பெண்ணின் தோழனாக இருக்கலாம்! உன் வீட்டுக்குப் புதுப் பணிப்பெண் வந்ததிலிருந்து அடிக்கடி அவனைப் பார்க்கிறேன். மெல்ல அவளை விசாரி.. பயப்படாதே…ம்’ என்று சொல்லி மீண்டும் தைரியமூட்டினாள் அடுத்தவீட்டுக்காரி.

‘சரி…எனக்கு இதெல்லாம் தெரியாது. உன் தகவலுக்கு நன்றி’ என்று கூறிவிட்டு அப்செட் ஆகிவிட்டாள் மேகலா. என்ன என்று கேட்டான் சிவா.

சிவாவிடம் எல்லாம் சொன்னாள். ‘எனக்குப் புரிகிறது சிவா. அந்தச் சிறுக்கி பிள்ளையிடம் சாக்லேட்டைக் கொடுத்துட்டு என்னெவெல்லாம் கூத்தடிக்கிறாளோ?….இப்படி ஒன்னுந் தெரியாத அப்பாவியா இருந்துவிட்டேனே?….முன்பொருநாள் வருணிடம் யார் உனக்குச் சாக்லேட் வாங்கித் தருகிறார்கள் என்று கேட்டதற்கு ஜெனி அக்காவோட ப்ரண்டுன்னு சொன்னான். அப்பறம் அதப்பத்தி விசாரிச்சா ஒன்னும் தெரியாதுன்னுட்டான்….இப்படி என் பிள்ளையக் கெடுத்திட்டாளே…பாவி…’ அதிர்ச்சியிலிருந்து மீளாத வளாகப் பேசிக்கொண்டே வந்தாள் மேகலா.

‘சரி…பொறுமையாக இரு மேகா. அவசரப்படாதே.. விசாரிக்கலாம். இதெல்லாம் பணிப்பெண் வைத்துகொள்வதினால் வரும் பக்க விளைவுகள். விளைவுகள். நீ ஒன்றும் கவலைப்படாதே… நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சிவா தேற்றினான்.

காலையில் சிவாவின் முகம் தெளிவாக இருந்தது. இரவே ஜெனியின் ஏஜெண்டுக்குக் கால் பண்ணி வரச்சொல்லியிருந்தான்.

‘மேகா நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.’

‘என்ன?’

‘நம்ம புள்ளக்கி அன்பும் அரவணைப்பும் தேவை மேகா. அவனுக்காக நீ கொஞ்ச நாளைக்கி வேலைய விட்டுடேன்? என்ன நெனக்கிறே?’

மேகா தன் கைப்பையிலிருந்து தான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த தன் ராஜினாமாக் கடிதத்தை எடுத்து சிவாவுக்குக் காட்டினாள்.

சிவா மேகலாவைப் பக்கத்தில் இழுத்தான். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அவள் வருண் பார்த்துடப் போறான் என்று சொல்லிவிட்டு விலகி ஓடினாள்.

– சிரேங்கூன் டைம்ஸ்

– நகர மறுத்த மேசை (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, இராம.வயிரவன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *