குற்றாலக் குறிஞ்சி
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 3,406
(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1992ஆம் ஆண்டின் சாதித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம்.
இராகம் 1-3 | இராகம் 4-6
இராகம்-1
பூபாளம்
பிரேணவத்தின் அலங்கார தேவதையாம் பூமியெனும் பேரழகி புல்லாங்குழல் ஏந்திப் பூபாளம் பாடத் தொடங்கி விட்டாள்.
யாழினிமை அவளுக்குத் தெரியாதா?
இராஜ திசையாம் இராக திசையில் உதயம் காணும் குங்குமச் சூரியனுக்குப் பூபாளமும் குழலும்தானே பொன்னான வரவேற்பு?
பிரபஞ்சத்தின் நித்திய மகா சக்கரவர்த்தியான ஆதிபகவன் வருகை தருகிறான் என்பதை எடுத்துக்காட்ட, செக்கர் வானில் சிவப்பு நிறம் பாயிரம் வழங்குகிறது.
உதயதம்பூர் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அது படைப்பு ரகசியத்துப் பவித்திர நாதமாயிற்றே! ‘ஓம்’ எனும் பிரணவப் புன்னகையாயிற்றே! சுருதிதானே இந்த அகிலத்துக்கே ஆதாரம்!
தம்பூர் நாதத்துள் நாதமாய் ஒலிக்கும் அந்தரகாந்தாரச் சூட்சுமத்தை மட்டும் புரிந்து கொண்டால்…
ஆ! சூரியன் வருகை கண்டு பூமிக் காதலி பூரித்துப் போகிறாள்! புல்லாங்குழலில் பூபாளம் மேலும் புளகிக் கிறது…
கபதா… பகரி… ரிகபா… கரிசா…
புள்ளினங்களெல்லாம் பூபாளத்தைத் துள்ளிப் பறந்து தொடருகின்றன…
தகத்தகாயமாய்ச் செம்பரிதியின் ஜோதி எழுகிறது; சித்திரைத் திங்களின் இளவேனில் பருவம் சித்திரம் தீட்டி மகிழ்வதுபோல உதயம் காண்கிறது.
புன்னையும் தாழையும் சண்பகமும் பூரித்து மணக்கின்றன.
அரண்மனையின் மேன் மாடத்தில் நின்று சரபோஜி மன்னர், ஆதித்த இருதய மந்திரத்தை ஜபிக்கிறார்.
தஞ்சை மாநகரத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு காலத்திய சோழநாடு மகிழ்கிறதோ இல்லையோ; சுயநலத்துக்காக அடிமையாகிப் போன சுந்தரகலாப் புருஷரான அவரது அகம் மகிழ்கிறது.
ஆ.. எப்படியிருந்த சொர்க்கம் படைத்த சோழப் பேரரசின் தலைநகரம் தஞ்சை மாநகரம்? இப்போது எவ்வாறெல்லாம் சோர்ந்தும் ஊர்ந்தும் தேய்ந்தும் இறுதியில் மராட்டியர் மடியில் சாய்ந்தும், இப்போது இரண்டாம் சரபோஜி மன்னரின் கரங்களில் அமர்ந்து தீய்ந்தும், இறுதியில் ஆங்கிலக்கும்பினியரின் புஜங்களுக்குப் பயந்து மாய்ந்தும் பல நிஜங்களை ஜீரணிக்க முடியாமல் ஜீவித்துக் கொண்டிருந்தது.
கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் (1829) இடைப் பகுதி…
தமிழகத்தின் இடுப்பு முறிந்த பகுதியானாலும், சங்கீதத்தின் எடுப்பு நிறைந்து ஏமமுற்று விளங்கியது; சப்த சுரங்களின் சாமராஜ்யமாகத் துலங்கியது.
சூரிய வணக்கம் முடித்த சரபோஜி மன்னர், அரண் மனைக் கூடத்தில் சில முக்கிய அதிகாரிகளின் வருகைக்காக மன்மத ராகத்து ஆரோகண -அவரோகணம் புரிபடாது உலவிக் கொண்டிருக்கிறார்.
அன்புக்குப் பாத்திரமான மனைவி அகல்யாபாய், காலை உணவுக்கு அழைத்தும் மறுத்து அனுப்பி வைத்து விட்டார். அவரது நெஞ்சில் அந்நாளைய புகழ்பெற்ற பாடகி குற்றாலக் குறிஞ்சி என்பாள், இன்ப நீர்வீழ்ச்சி கொட்டி, இனிய இசை எழுப்பிக் கொண்டிருக்கிறாளே !
ஐம்பத்திரண்டு வயதில் இப்படி ஓர் ஆசையா? ஆனாலும் பார்வைக்கு ஐம்பத்திரண்டைத் திருப்பிப் போட்டது போலத் திடகாத்திரமாக இருப்பார்.
அடிக்கடி கனத்த உடலை அசைத்து உலவிக் கொண்டே, கனத்து அடர்ந்திருந்த மீசையையும் நீவி விட்டுக் கொள்கிறார். முத்தம் கொடுப்பதற்கு இது எவ்வளவு மோசமான தடங்கல் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் அவரும் உணர்ந்து கொள்ள?
குறிஞ்சியோ ஓர் அக்கினி அழகி…
இது அவருக்கு எங்கே புரியப் போகிறது? மனம் மட்டும் குறிஞ்சி, குறிஞ்சி என்று குறிஞ்சி ராக ஆலாபனை செய்கிறதே!…
எதிர்பார்த்திருந்த அதிகாரிகளான சர்க்கேல் (மந்திரி) ராஜேஸ்ரீ ராமோஜி சர்ஜேராவ் கட்கேவும், அவைப் புலவர் கோட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரும் வருகை தந்து வணங்கி நிற்கிறார்கள்.
உலவிய கால்கள் களவியலில் கசிந்து நிற்கின்றன.
“தேசிகரே! நீங்கள் சென்றதற்கு அந்தக் குற்றாலக் குறிஞ்சி என்னதான் சொல்லியனுப்பினாள்? பகிரங்க மாகவே சொல்லலாம்!”
தயங்கிய புலவர் வெட்கமின்றிச் சொன்னார்: “என் தலைகுனியும்படிச் சொன்னதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘தமிழைப் படித்த நீங்கள், தமிழுணர்வற்ற மராட்டிய மன்னன் மீது ‘சரபேந்திர பூபாலக் குறவஞ்சி’ நாடகம் இயற்றிக் கூலிக்கு மாரடிக்கும் தமிழ் வியாபாரியாகிய நீங்கள், என்னை அழைக்கத் தூது வந்தது வெட்கமாக இல்லை? நான் வந்து உங்கள் மன்னர் முன் பாடுவதாவது?… போய் வாருங்கள்! என்று விரட்டியது தான் மிச்சம்!””
சரபோஜி சண்டமாருத போஜியானார்.
இப்போது சர்க்கேல் ராமோஜி சமனப்படுத்தத் தொடங்குகிறார்: “சாகேப்! நமது அரண்மனையில் சங்கீத மேருகளிருக்க பாமரப்பாட்டுக்காரியை அழைப்பதில் பல சங்கடங்கள் முகிழ்க்கலாம்! ஒரு தாழ்ந்த இனத்தவளைக் கொண்டு வந்து சபையில் கௌரவிப்பது கலைச் சிகரங் களின் கண்களில் நெருப்பைக் கொட்டுவதாகும்!”
“சங்கீதத்துக்கு ஜாதி ஏது சர்க்கேல்?”
“ஏனில்லை? சுத்த மத்திம ஜாதி, பிரதி மத்திம ஜாதி என்றில்லையா?”
அவற்றை எவரும் தீண்டப்படாததாக ஒதுக்குவ தில்லையே ! சோறு கிடைக்காத ராகமானாலும் ஆகிரியை ஒதுக்கித் தள்ளுவதில்லையே? அழுகை ராகமானாலும் முகாரியை மூலையில் பதுக்கி விடுவதில்லையே?குறிஞ்சி, புலைச்சியேயானாலும், புலால் மறுத்துக் கலைத் தவமி யற்றும் புண்ணியச் சொரூபிணியாம்! மகாவித்துவான் தீட்சிதரின் இசை மனத்தைத் தித்திக்கச் செய்த சிஷ்யை யாம்! ஆ! இப்படிச் செய்தால் என்ன?”
“எப்படி மகாராஜா?”
“பொன்னையா பிள்ளை சகோதரர்கள் ஸ்ரீமுத்துசாமி தீட்சிதரின் மூத்த சீடர்கள். இப்போது நம்மிடையே இருப்பவர் “சிவானந்தம்! பொன்னையாபிள்ளை தனித்து இருந்தாலும் மான்யம் வழங்கி வருகிறோம். அவர்களது குருகுலத்தில் வந்தவள் குறிஞ்சி. அவர்களையே அனுப்பி னால் குறிஞ்சி மறுக்கமாட்டாள் அல்லவா?”
“இவர்கள் கௌரவம் பாராது செல்ல வேண்டுமே?” சம்பளம் தருபவன் சரபோஜி! எப்படியும் குறிஞ்சி இந்த அரண்மனைக்கு விஜயம் செய்தாக வேண்டும்!”
**வடிகோலு என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், சின்னையா என்பவர் மைசூர் சமஸ்தானத்திலும் பணியாற்றச் சென்றுவிட்டார்கள்.
சரபோஜி பாடும் மன்மத ராகம் சர்க்கேலுக்குப் புரிபடவில்லையா என்ன? இளமையில் முத்தாம்பாள் என்பவளைக் காதலித்தார்; பலியிட்டார். இப்போது முதிய வயதில் குறிஞ்சியோ?
ஆணையை நிறைவேற்ற அவர்கள் புறப்பட்டனர். இப்போது குறிஞ்சி எங்கிருக்கிறாள்?
விசாரித்ததில் கும்பகோணம் சங்கர மடத்திலிருப்பதாகத் தெரியவந்தது.
காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் கும்பகோண சங்கர மடத்தில், ‘ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர’ கோஷம் எழுந்தவண்ணமிருக்கிறது. ஜோதியில் ஒன்று சங்கர ஜோதியல்லவா?
அப்போதைய “காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விளங்கியவர் ஐந்தாவது (64-வது) ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
புலித்தோலாசனத்தில் அமர்ந்தவாறு குழுவினருடன் வந்த குறிஞ்சியை வரவேற்று அமரச் செய்கிறார். குறிஞ்சியும், பாதம் பணிந்து பதவிசாக அமருகிறாள்.
“என்ன குறிஞ்சி! நலமா?”
ஸ்ரீ ஆசார்யாள்பால் அபரிமிதமான அன்பும் பக்தியும் பூண்ட குறிஞ்சி சொன்னாள்: “தங்கள் ஆசீர்வாதம் சுவாமி! அடியவள் புதிய ராகம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறாள். தங்கள் முன் பாடி முதல் அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறேன்.”
உடன் வந்த பக்கவாத்தியக்காரர்களும், குறிஞ்சியை உயிருக்கு உயிராக நேசிப்பவனுமான ஞானசுந்தரமும், தொலைவில் கைகட்டி நிற்கிறார்கள். மற்றபடி சங்கர பக்தர்கள் சர்வ பவ்வியமுடன் கைகட்டி நிற்கிறார்கள்.
‘பாடு’ என்பதுபோல் சங்கர சமிக்ஞை.
**தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் கே.எம்.வேங்கடராமையா.
வழக்கமாக சுருதி மீட்டும் கற்பகத்தை அவள் அழைக்கவில்லை. அவளே தம்பூரைத் தாங்கி, மீட்டி குரலை இழைக்கிறாள்.
ஆ! சுருதிதான் குறிஞ்சியா? குறிஞ்சிதான் சுருதியா?
சுருதி என்கிற சூட்சுமச் சொல்லுக்கே அர்த்தமான அந்த அத்வைத அவதாரபுருஷர் காமகோடி பீடாதிபதி கண்களை மூடிச் சுருதியுடன் ஐக்கியமாக…
சங்கர கோஷ சப்தம் அமைதி பெறுகிறது.
குறிஞ்சி தன்னால் உருவாக்கப்பட்ட குற்றாலக் குறிஞ்சி ராகத்தை அலாபிக்கிறாள். அந்த அபூர்வ ராகம் ஆசார்ய சுவாமிகளை ஆனந்தப் படுத்துகிறது.
பிறகு ஒரு சுலோகத்தை விருத்தமாகப் பாடுகிறாள். குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஸ்வர: குருஸ் ஸாக்ஷாத் பரப்ரம்ஹ தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ:
ஸ்ரீ ஆசார்யாள் இதயத்தே குறிஞ்சி ஒரு பொன்விளக்கு சோதியாய்த் தெரிகிறாள்.
இவள் மக்களைப் பாடுகிறவள்; சமுதாயத்தைப் பாடு கிறவள்; தமிழில் மட்டுமே பாடுவது என்கிற சங்கல்பம் கொண்டவள்; சமஸ்கிருதத்தில் பாடுகிறாளே !…
இசை என்பது புரிந்தவர்க்கு மட்டுமே என்று இருக்கிற காலத்தில் இருண்ட காலத்தில் அதனை நீக்கி, இசை என்பது உலகமொழி; அதன் வரிவடிவம் அந்தந்த தேசத்துக்குரிய தாய்மொழி என்கிற புதிய சித்தாந்தத்தைப் போதித்துத் தமிழில் மட்டுமே பாடி மக்களின் பேராதரவு பெற்று இசையை ஒளிமயமாக்கியப் பிரகாச தேவதை யாயிற்றே இந்த குறிஞ்சி! இவளா சமஸ்கிருதத்தில் பாடினாள்? ஓ… தன் பொருட்டுப் பாடினாளோ?
கர்நாடக சங்கீதத்தை மென்மைப்படுத்திக் கனிரச சங்கீதமாக்கியவள். இவள் பாடினால் பசுவின் மடி, கரம் படாமலேயே பால் சுரக்கும்! கொசுவும்கூட குழுமியுள்ளவர்களின் ரத்தத்தைக் குத்தி ருசி பார்க்க மறந்து விடுமே!
ஆ! இவளல்லவோ இசைவாணி?
ஸ்ரீ ஆசார்யாள் மனத்தே அத்வைதம் அலகில் ஜோதியாகிறது! அங்கே புலைச்சியாவது? புரோகி தனாவது? பேதமாவது? அபேதமாவது? மனிதனாவது? மகாதேவனாவது? எல்லாம் ஒன்றுதானே? ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய அத்வைதம் இதுதானே?
“குறிஞ்சி! அந்த அபூர்வராகத்தை இன்னொரு முறை ஆலாபனை செய்!”
மீண்டும் தம்பூரில் அபூர்வம் ஐக்கியமாகிறது. நிதநி, நிதநி, பதநிசா…
புரிகிறது.
இது, இது…
ச்நிதம, ச்நிதம கமபகரிசா…
ஓ… நாம் நினைத்தது போலில்லையே! பிரதி மத்திமம் சேர்ந்திருக்கிறதே!
“போதும் குறிஞ்சி! இந்த ராகத்தின் பெயர்?”
“குற்றாலக் குறிஞ்சி!”
“ஓகோ! உன் பெயருடன் உனது ஊரின் பெயரையும் இணைத்து வைத்து விட்டாயோ? சங்கீத வித்துவான்கள் தங்கள் பெயருடன் ஊர்ப்பெயரை இணைத்து வைத்துக் கொள்வதுபோல, நீ ராகத்தையே இப்படி வைத்தது பாராட்டுக்குரியது. ஆமாம்; எனக்கே இதன் ஆரோகண – அவரோகணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் எங்கோ கேட்ட ராகம்போல… பிரதிமத்திம மயக்கம் புரிய வைக்க மறுக்கிறது.”
குறிஞ்சி, குறிஞ்சிப் பூவாய்ச் சிரிக்கிறாள்.
“எனக்கு வக்கிர ராகமான நாட்டைக் குறிஞ்சி என்றால் மிகவும் பிடிக்கும். ராகத்தில் சிறந்ததல்லவா? அதனைப் பிரதிமத்திம ராகமாக்கினேன். சரிகம நிதநி பதநிசா; சநிதம கமபகரிச.”
“பிரமாதம், பிரமாதம் ! எனக்கு ஒரு சின்ன அபிப்பிராயம் தோன்றுகிறது.”
“சொல்லுங்கள் சுவாமி! ஏற்கிறேன்!”
“அதாவது, அவரோகணத்தில் ‘கமபகரிச’ என்று வருகிறதல்லவா? அதன் மத்திமத்தை “பாஷாங்கமாக்கி அதாவது சுத்தமத்திமமாகவே மாற்றிப் பாடிப் பார்!”
பாடிப் பார்க்கிறாள். அது முன்பிலும் மூர்ச்சனை ரசம் சொட்டுவதாக இருக்கிறது. ‘ஓகோ’ என்று அவளது உள்மனமே உணர்ந்து உருகுகிறது.
“அருமையாகவும், இனிமையாகவும் இருக்கிறது சுவாமி! இந்த ராகத்து வக்கிர, பாஷாங்கம்… என் பிறப்புக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது சுவாமி?”
அத்வைதம், ராகசாந்தி கொள்கிறது.
“குறிஞ்சி! நீ ராகத்தை வக்கிரப்படுத்தினாய் – அது ராகத்தோடு இருக்கட்டும்; நான் சுரத்தை பாஷாங்கப் படுத்தினேன். அதுவும் சுரத்தோடு இருந்துவிட்டுப் போகட்டும்! நீ சம்பூரணமாகவே இருக்க வேண்டும்! நாராயண….”
பளீர், பளீர், பளீர்…
இதயத்தே மின்னல்கள் ஏழு சுரமாய் மின்னுகின்றன; சம்பூரணமாக இடிக்கின்றன.
இதன் பொருள்… வியாக்கியானம்… தாத்பரியம்?
‘நீ வக்கிரமாகிவிடாதே! நீ பாஷாங்கமாகிவிடாதே!’ இதுதான் அர்த்தமோ?
குறிஞ்சியின் விழிகளில் தெய்வத்தின் குரல் கேட்கிறது. ஆசார்யப் பெருமானுக்கும் புரிகிறது. “குறிஞ்சி! என்னுடன் வருகிறாய்! எழுந்து உள்ளே வா!”
இசையிலக்கணத்தில் ராகாங்கம், உபாங்கம். பாஷாங்கம், கிரியாங்கம் என நான்கு பிரிவுகள் உண்டு. பாஷாங்கம் என்பது கலப்பு; களங்கம்.
“சுவாமி! நான்…”
குறிஞ்சியின் பதற்றம் அத்வைதத்தின் அறிஞர் பெருமான் அறியமாட்டாரா? அவரது இதயத்தே உபநிஷத்தின் ஒரு சாரமான கேனோபநிஷத் ஒலிக்கிறது…
“எதை ஒருவன் மனத்தால் உணருவதில்லையோ, ஆனால் மனம் எதனால் உணரப் பெறும் என்று கூறுகிறார்களோ அதுவே பிரம்மம் என்று நீ அறிவாயாக! எதனை இதுதான் பிரம்மம் என்று உபாசிக்கிறார்களோ அது பிரம்மம் அல்ல!”
கூனிக்குறுகி குறிஞ்சி, ஸ்ரீ ஆசார்யாள் பெருமானைப் பின் தொடருகிறாள்.
கூடியிருந்த கண்கள் சில கூசுகின்றன.
ஏன்? காரியஸ்தரான கணபதி சாஸ்திரிகளின் கண்கள் கூட ஏதோ தீட்டுப் பட்டுவிட்டதாகத் திணறுகின்றன. வேறொன்றுமில்லை. பேதாபேதம்தான்! அத்வைதத்துக்குத் தீண்டாமை எது? ஆதிசங்கரபகவத் பாதர்களின் ஆதி அந்தம் அறியாதவர்கள்.
வெகுநேரம் கழித்து காஞ்சிமா முனிவரும் குறிஞ் சியும் வெளியே வருகிறார்கள். குறிஞ்சியின் முகத்தில் முன்னிலும் கூடிய ஒரு ஞானஒளி! உள்ளே சென்று திரும்பியதன் இரகசியம் என்ன? இரகசியம் என்ன? அது ஒரு மந்திர உபதேசம் என்பதன் மறைவு எவர்க்கும் புரிய நியாயமில்லையே!
காஞ்சிப் பெருமானின் பாதம் பணிந்து குறிஞ்சி விடை பெறுகிறாள்.
“நாராயண!”
கும்பகோணத்துச் சங்கர மடத்துக்கு வெளியே மக்கள் கூட்டம். எல்லாருமே குறிஞ்சியின் ரசிகப் பெருமக்கள். அனைவரையும் கரம் கூப்பி, அந்த ஊர் பிரசித்தி பெற்ற கலாரசிகையான சீமாட்டி கோமதியம்மாள் இல்லம் செல்ல சாரட்டில் ஏறிக் கொள்கிறாள். ஞானசுந்தரமும் உடன் ஏறிக்கொண்டான். பக்கவாத்தியக் குழுவினருக்குத் தனியாக இரட்டை மாட்டுப் பெட்டி வண்டி.
கோமதியம்மாள் மாளிகையை அடைந்து ஓய்வு கொள்ள அறையினுள் செல்கிற போது—
தெரு வாசலில் அடிமிதித்து வந்தாற் போன்று குதிரைகளின் குளம்படி ஓசைகள்…
தஞ்சை சரபோஜி மன்னர் அனுப்பிய தூதுவர்கள், ‘விதியின் தூதுவர்களோ, சதியின் தூதுவர்களோ அன்றி நிதியின் தூதுவர்களோ – யாரே அறிவர்?’ என்பது போல இறங்கிக் கொண்டிருந்தனர்.
இராகம்-2
சுத்த தன்யாசி
கோமதி மாளிகை என்பது ஒரு குலமாதுவின் கோயில் போல…
மாளிகையுள் விருந்துபசாரம் நடைபெறுகிற வேளையில்…
கதவு தட்டும் சத்தம்…
சீமாட்டி கோமதியம்மாளே வந்து கதவைத் திறக்கிறாள். இசைமேதைகளான தஞ்சை பொன்னையா பிள்ளை யையும் சிவானந்தம் பிள்ளையையும் கண்டுவிட்ட மாபெரும் சங்கீத ரசிகையான கோமதி, கரம் கூப்பி வரவேற்றாள். உடன்வந்த சேனாதிபதி பிரவகர ராஜேஸ்ரீ கிருஷ்ணாஜி கேசவப் பண்டிதரும் உள்ளே சென்றார். ஏனைய வீரர்கள் வெளியே நின்று கொண்டனர்.
மூவரையும் அமரச் செய்த கோமதி, “அடியாள் ஒரு கலாரசிகை!” என்றாள்.
“அறிவோம்; நாங்கள் குறிஞ்சியை உடனடியாகப் பார்த் தாக வேண்டும்” என்றார் பொன்னையாப் பிள்ளை.
இதற்குள் உள்ளிருந்த குறிஞ்சியும் ஞானசுந்தரமும் கேள்விப்பட்டு, ஓடோடி வந்து சகோதரர்களுடைய பாதங்களைத் தொட்டு வணங்கினர்.
தங்கள் குருவாகிய இசைமகான் முத்துசாமி தீட்சித ருடைய மூத்த சீடர்களாயிற்றே!
சகோதரர்கள் நலம் விசாரித்து நோக்குகிறார்கள்.
ஆ! அன்று பார்த்த குறிஞ்சியா இவள்? பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவைப் போல…
புகழின் மெருகு அவளது தேகத்தில் பொன்னாய் மின்னுகிறது…
கம்பனின் இராமாவதாரக் காப்பியம் போல, காளி தாசனின் சாகுந்தலம் போல…
இருமொழி வல்லவர்களான சகோதரர்கள் இவ்வாறெல் லாம் எண்ணிப் பார்க்கிறார்கள்…
சேனாதிபதி கிருஷ்ணாஜி குறிஞ்சியின் அழகில் சொக்கி அலைமோதி கிறுகிறுத்துப் போனார்.
‘ஓ… நமது மன்னர் சரபோஜி இந்த மகோன்னதப் பேரழகைப் பாராமலேயே மன்மதக் கனவு காண்கிறார்; அந்தக் கனவில் இசையின் புகழ்க் கிரீடம் மட்டுமே மின்னி மின்னி வண்ணக்கோலம் வரைந்து பார்க்கிறார்; இந்த தேவதா சொரூபத்தை நேரில் காண்பாரேயானால்…?”
மன்மத மண்டபம் கட்டி ரதி நிவேதம் செய்தாலும் மலைப்பதற்கில்லையே!
நெற்றியில் அரும்பிய வியர்வை முத்துக்களைத் துடைத்துக் கொண்டே சேனாதிபதியை, சிவானந்தம் பிள்ளை அறிமுகம் செய்கிறார்.
கமல மொட்டுக்களாய் கரங்கள் கூம்புகின்றன.
“விருந்து சாப்பிட்ட பிறகு வந்த விஷயம் குறித்துப் பேசலாமே!” என்றாள் கோமதி.
சேனாதிபதி கிருஷ்ணாஜி மன்னர் சரபோஜியாய்ச் சிரிக்கிறார்.
“வந்த விஷயம் நிறைவேறட்டும்; விருந்து பிறகு.”
பொன்னையா பிள்ளைக்கு இந்த முரட்டுத்தனமான பதில் பொருத்தமாகத் தெரியவில்லை. அவரே வந்த நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
“நான் எதிர்பார்த்தேன்” என்றளவில் கூறிய குறிஞ்சி, சூன்யமாய்ப் புன்னகை பூக்கிறாள்.
“அப்போது, இன்றே புறப்பட வேண்டியதுதானே, குறிஞ்சி?” என்றார் சிவானந்தம்.
“மன்னிக்கவும்! தான் எதிர்பார்த்தேன் என்றுதான் சொன்னேனேயொழிய. ஏற்றுக்கொண்டேன் என்று சொல்லவில்லை. நீங்கள் என் குருநாதருக்குச் சமானம். உங்கள் சங்கீத ஞானத்தின் முன்னே நான் வெறும் பல்லவி! நீங்கள் சரணத்தைத் தாண்டி, இசைத் தாயிடம் சரணாகதித்துவம் அடைந்து விட்ட மேதைகள்! என்னைத் தேடி வந்திருக்கவே கூடாது. என்னை வருமாறு ஆணை பிறப்பித்திருந்தால் உங்கள் இல்லம் தேடி ஓர் இசையின் யாசகியாக வந்திருப்பேன். ஆனால் வந்து விட்டீர்கள்; மன்னர் உத்தரவு! தியாகபிரும்மம். மன்னரின் அழைப்பை மறுத்து கல்யாணி பாடிவிட்டார். என்னால் காமவர்த்தினி பாட முடியாது. சரபோஜி மன்னரின் கல்யாண குணங் களை நானறிவேன். என்னையும் அவர் அறிந்து கொள்ளட்டும்.”
ஜோதிமயமான அழகுப் பிரகாசம், நீதிமயமான நினைவுடன் கரம் கூப்புகிறது.
சேனாதிபதி கிருஷ்ணாஜி, சினந்த சீற்றமுடன் எழுந்து கொண்டார், முடிவு இதுதானா குறிஞ்சி?”
“குறிஞ்சி என்ன. உங்கள் ஆஸ்தானத்தில் மாதம் ஐம்பது சக்கரம் (ரூபாய்) சம்பளம் வாங்குகிறவள் என்றா எண்ணி விட்டீர்கள்?*
சரபோஜியின் அவையில், சிவானந்தம் போன்ற சீரிய மேதைகளின் சம்பளமே மாதம் ஐம்பது சக்கரம்தான். சுந்தரி என்கிற நாட்டிய மாதுக்கு மட்டும் ஐம்பத்தைந்து சக்கரம். இல்லையென்றால் அரசன் கட்டளைக்கு இவர்கள் அடிபணிய முடியுமா?
மேலும் குறிஞ்சி சொன்னாள்:
“நான் ஒரு கச்சேரிக்கே நூறு சக்கரம் வாங்குகிறவள். சரபோஜி மன்னரும் இதனை வழங்கலாம். ஆனால், நான் சரச போகங்களை எத்தனை முறை வழங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் பாஷாங்கத்துக்காகப் பிறக்கவில்லை; இராகாங்கத்துக்காகப் பிறந்தவள்; ராஜாங் கத்துக்காகவல்ல! போய்ச் சொல்லுங்கள் சேனாதிபதி யாரே!”
“அரச விரோதம் ஆபத்தானது!”
அவள் கலகலவென்று சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பிலும் சப்தசுர ஜாலங்கள் கேட்கின்றன.
“சேனாதிபதியாரே! மன்னவனும் நீயோ என்று கேட்ட மாப்புலவன் வாழ்ந்த நாடு இது! உன்னை நம்பியோ தமிழை ஓதினேன் என்று கேட்ட தன்மானப் புலவன் வாழ்ந்த நாடு இது! நான் தமிழ்வெறி கொண்டவள். மராட்டிய மமதைக்கு மண்டியிடமுடியாது. இவள் குறிஞ்சி; வறிஞ்சியல்ல. போய் வாருங்கள்!”
அவள் மீண்டும் தஞ்சைச் சகோதரர்களின் தாள்பணிந்து வேகமாக உள்ளே சென்று விட்டாள்.
சேனாதிபதியின் அவசர புத்தி, செயலை அபசுரப் படுத்தி விட்டது. சகோதரர்களுக்குச் சங்கடமாக இருந்தது.
கோமதி எவ்வளவு கேட்டுக் கொண்டும், விருந்துக்கு மறுத்து அவர்கள் விடைபெற்றுப் புறப்பட்டனர்.
மறுநாள், குறிஞ்சியும் குற்றாலம் நோக்கிப் புறப்பட்டு விட்டாள்.
மாலைக் கதிரவன் மேற்கு மஞ்சத்தில் சயனிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறான்.
தொலைவிலிருந்தே, அந்தக் குற்றால நீர்வீழ்ச்சியைக் கண்கொட்டாமல் கவனித்து ரசிக்கிறாள் குற்றாலக் குறிஞ்சி.
ஆ! ஒரு காலத்தில் – சின்னஞ்சிறுமியாக இருந்த போது இந்த நீர்வீழ்ச்சியில் எப்படியெல்லாம் குளித்து மகிழ்ந்து இருக்கிறோம்!
ஆண்களும், பெண்களும், சிறார்களும் மாலைக் குளியலில் மனம் குளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அன்றைய மாலைப்போது முழுவதும், தான் பிறந்த மண்ணான குற்றாலத்தைச் சுற்றிச் சுற்றிச் சுவைத்து அமைதியாக ஒருபுறம் அமர்ந்து ஐந்தருவியில் ஐக்கியமாகி எங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறாள் குறிஞ்சி. பக்கத்தே ஞானசுந்தரம்.
தன்னை யாசிக்க வந்த சரபோஜியின் தன்யாசி ராகம், அந்த அருவியின் மெல்லிய ஓசையில் கேட்பதுபோல உணருகிறாள். ஆனால் இது சுத்த தன்யாசியல்லவே?
அந்த அருவியைப் பற்றி ஒரு காலத்தில் தமிழ் ஞானசம்பந்தர் பாடிய வரி நினைவுக்கு வருகிறது.
‘கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்…’
சுத்த தன்யாசியில் மெல்லப் பாடிப் பார்க்கிறாள்…
“குறிஞ்சி! இருண்டு வருகிறது. இரவு கச்சேரி. கோயிலுக்குப் போக வேண்டாமா?”
ஞானசுந்தரம் ஞாபகப்படுத்தினான்.
“கோயிலுக்கா? என்னை உள்ளே அனுமதிப்பார்களா, ஞானி?”
அவள் அவனை ஞானியென்றே அழைப்பாள். அந்த ஞான சமுத்திரத்தின் கதையே வேறு. அது ஓர் ஆசான் கதை; ஆனந்த காதல் கதை!
“நாம் வந்திருப்பதே கோயில் கச்சேரிக்கு என்றிருக்க, உன்னை அனுமதிக்க மறுப்பதாவது?”
ஞானசுந்தரத்தை நோக்கி குறிஞ்சி சிரித்த சிரிப்பு, ‘நீயும் ஒரு புலையனாக இருந்து தொலைக்கக் கூடாதா?” என்பது போலிருந்தது.
“என்ன குறிஞ்சி சிரிக்கிறாய்? நான் பிராமணனாக இருப்பதால்தானே எனது காதலை ஏற்க மறுக்கிறாய்?”
“அத்துடன் ஞானகுருவாகவுமிருந்து விட்டீர்களே!””
“குறிஞ்சி! பிறப்பால் நீ தயங்குவதானால் ஒன்றைச் சொல்வேன். நீ பாடிய சுத்த தன்யாசி ராகம் எதில் பிறந்தது? கரகரப்பிரியாவில் பிறந்ததாக அடம் பிடிப்பதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை. தன்யாசி போல, சுத்த தன்யாசியும் தோடியில் பிறந்தது என்றால் ஒதுக்க முடியுமா? உனது பிறப்பும் அப்படியே! நான் பிராமண னாக இருந்தால் என்ன? நீ புலைச்சியாக இருந்தால் என்ன? நந்தனைக் காட்டிலும் சிறந்த நாயன்மார் உண்டா?”
கெண்டை மீன்கள் இடம் மாறின போல, குறிஞ்சியின் கயல்விழிகள் இமையாமல் நோக்குகின்றன.
அந்த நீலவிழிகளில்தாம் ஞானசுந்தரம் நித்தநித்தம் சொக்கி வருகிறானே! நினைவிழந்து விக்கி வருகிறானே!
இருவரும் குற்றாலத்தை ரசித்தவாறு நடக்கிறார்கள். வழியேற மக்கள் நின்று குறிஞ்சியைத் தங்கள் வழிபாட்டுக் குரிய தெய்வமாக எண்ணிக் கரம் கூப்புகிறார்கள். அந்த மண்ணில் பிறந்தவளாயிற்றே குறிஞ்சி!
‘குறிஞ்சி! சங்கர மடத்தில் ஸ்ரீ ஆசார்யாள் பெருமான் உள்ளே அழைத்துச் சென்றதைப் பற்றி என்னிடம் சொல்லவே இல்லையே!”
ஒரு கணம் நின்ற அந்த ஒயிலரசி ஓம்கார மந்திரமாய் முறுவலிக்கிறாள்.
“உபதேசம் செய்தார். மேலும் என்னைக் கேட்க வேண் டாம். நான் சொல்லவும் கூடாது. ஒருகால் நீங்களாகவே புரிந்துகொள்ள நேர்ந்தாலும் நேரலாம்!”
அவர்கள் குற்றால நாதரையும் குழல்வாய் மொழியம்மை யையும் தரிசிக்கக் கோயில் நாடி நடந்தனர்.
பத்து நாழிகைகளை விழுங்கி, இரவு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தது.
ஆங்கிலேய ஆட்சி, பரவலாக ஆக்கிரமித்துக் கொண்டு வந்த காலமாதலால், அரங்கம் சற்று முன்னேற்றமாகக் காணப்பட்டது.
பந்தல் முழுவதும், தொங்கும் கண்ணாடிக் குவளை விளக்குகளில் கனத்த மெழுகுவத்திகள் எரிந்து ஒளி பரப்பிக் கொண்டிருந்தன. ஆயினும் வெளியே மக்களின் நலன் கருதி ஆங்காங்கே தீப்பந்தங்கள் எரிந்து பழைமையை நினைவு கூர்ந்தன,
திருநெல்வேலி ஜில்லாவே திரண்டு வந்துவிட்டது போன்று மக்கள் கூட்டம். அந்தக் காலத்தில் இரவு நிகழ்ச்சி என்றால் விடிய விடிய சுவைக்கும் வேர்ப்பலா இனிப் பாயிற்றே! அவசர யுகத்தின் மேம்போக்கான நுனிப்புல் ரசனை, அப்போது தலை நீட்டிப் பார்க்கவும் நாணப் பட்ட காலம். அதுவும் குற்றாலக் குறிஞ்சியின் கச்சேரி என்றால்…
அவளது பாட்டு மக்களின் நெஞ்சில் கூடுகட்டி விட்ட தேன்கூடு.
புரியாத மொழியில் கச்சேரியைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன அல்லது கனத்துப் போன போக்கினை மாற்றி, ஒரு புதிய வித்தியாச விதையை விதைத்தவள் குறிஞ்சி.
வித்துக்குள் விருட்சம் இருப்பதை உணர்ந்து சத்துக்குள் சராசரத்தைக் காட்டச் சிந்தித்தவள்.
சங்கீதத்தின் கனமான பாரத்தைக் குறைத்து அபாரமாக்க முனைந்தவள்; வெற்றி கண்டவள். அந்த வெற்றிக்கான காரணம் அவள் தாய்மொழியில் பாடியது!
தெய்வங்களையே பாடிப் பாடி அலுப்புத் தருவதைத் தவிர்த்து, மனிதனைப் பாடினாள், மக்கள் படும் பாட்டினைப் பாடினாள்; சமூகத்தைப் பாடினாள். சமுதாய முன்னேற்றத்தைப் பாடினாள்; தேசத்தைப் பாடினாள்; ஏன்? உலகையே பாடினாள்…
அவளது குழுவில் பல்வேறுபட்ட வாத்தியங்கள். வீணை, “பிடில், குழல், ‘மயூரி, மிருதங்கம், கஞ்சீரா, கடம், முகர்சிங்…
போதாவா?
போதாக்குறைக்கு, குறிஞ்சியின் பாட்டில் அசுணமா பறவையாகி மயங்கிய ஜான் என்கிற ஆங்கிலேயன், அவளை ஒரு தெய்வ சந்நிதானத்தைச் சுற்றி வருவது போலச் சுற்றி வந்ததோடல்லாது, விஞ்ஞான அறிவு படைத்த அவன், ஒரு விநோதக் கண்டுபிடிப்பை மேற்கொண்டு வெற்றியும் கண்டான். அது…
எதிரொலி நிறைந்த மலைப்பிரதேசத்துப் பாறைகளைச் சோதித்து, அந்தப் பாறைகளைப் பலகை பலகையாகச் செதுக்கிச் சீவி, அரங்கின் பக்கவாட்டில் நிறுத்தி வைப்பதன் மூலம், கச்சேரி ஒலியை அவை மேலும் பெருக்கிக் காட்டின.
இசையரங்கை அமைப்பவனே ஜான்.
அன்றைய அரங்கம் பிரமாதமாக அமைந்து காணப் பட்டது.
அரங்கத்தில் குறிஞ்சியும் ஞானசுந்தரமும் வருகை தர. எங்கும் கரவொலிகள்; வாழ்த்துக் குரலொலிகள்.
குருநாதரான முத்துசாமி தீட்சிதர் பெருமானை வணங்கி அமருகிறார்கள்.
இரு குரலிசையில் இருவர் பாடுவதிலும் ஒரு வித்தியாச மான இன்பப் போதையை – சங்கீதத்தையே மதுவாக்கிய போதையை உருவகம் செய்திருந்தார்கள்.
**வயலினை அப்போது பிடில் என்றே சொல்லுவர். இது சாபோஜி மன்னர் காலத்தில் அறிமுகமாகிப் பிரசித்தம் பெற்றது,
† ‘மைக், முறைபோல; இது எனது கற்பனையின் கண்டுபிடிப்பு.
இருவர் ஒன்றாகப் பாடுவது என்பது இயல்பானது. ஆனால் அந்நாளில் ஆணும் பெண்ணுமாகப் பாடுவது?
ஒரே பாட்டை மாறி மாறிப் பாடுவது? சமயத்தில் அவள் பல்லவியாகவும், இவன் அனுபல்லவியாகவும் பாடுவது? ஆலாபனை முதல் சுரவிந்நியாசம் வரை, சங்கீத கனத்தைக் குறைத்து மென்மையாகவும், இனிமையாகவும், நயமாகவும் பாடுவது? லயப்பிரமாணத்தையும் ஒரு வயப் பிரமாணமாக்கிப் பாடுவது…?”
மக்களிடம் எப்படிக் கொடுத்தால், எவ்வாறு கொடுத் தால், எதுவும் போய்ச் சேரும் விதத்தில் சேர்ந்துவிடும் என்கிற மகத்துவமான உண்மையைப் பரிபூரணமாகவே அவர்கள் உணர்ந்திருந்தனர்.
தோழிப் பெண் கற்பகம் தம்பூர் மீட்டுகிறாள். வாத்தியங் கள் சுருதிகளைச் சோதித்துக் கொள்கின்றன.
கடவுள் வாழ்த்துக்கு அவர்கள் புறம்பானவர் களில்லையே! ஆனால் திருக்குறளின் கடவுள் வாழ்த்தை மட்டுமே பாடுகிறவர்கள், பாடவும் தொடங்கினர். பத்துக் குறள்களையும் இருவரும் பத்து ராகங்களில் மாறி மாறிப் பாடுவர். ஆனால் அன்றைக்கு ஒரு மாறுதல். ‘அகர முதல’ என்ற பாடலை குறிஞ்சி, சுத்த தன்யாசியில் ஆரம்பித்தது தான். ஞானசுந்தரத்தை மோனத்தில் ஆழ்த்துவதற்கு மாறாக, மோகத்தில் ஆழ்த்திவிட்டது.
கூட்டத்தில் எள் விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி.
அடுத்து, தான் பிறந்த ஊராகிய குற்றாலத்து மகிமை நிறைந்த மண்ணையும் அதன் மலைகளையும் புகழ்ந்து ஓகோவென்று பாடுகிறாள் குறிஞ்சி.
அந்தச் சமயத்தில்தானா அப்படி ஓர் அசம்பாவிதம் நிகழ வேண்டும்?
திடுமென்று நூற்றுக்கணக்கில் குதிரைகளின் குளம்படி ஓசைகள்…
செவி மடுத்த மக்கள்…
“கொள்ளைக்காரர்கள்; கொள்ளைக்காரர்கள்!” என்று கூச்சலிட்டு அரண்டு மருண்டு அலைமோதி உருண்டு புரண்டு எழுந்து திசைக்கு ஒருவராக ஓடுகிறார்கள்.
குதிரைகள் சகிதமாக கூட்டத்துள் புகுந்த கொள்ளைக் காரக் கொடியவர்கள் கரங்களில், வாட்கள் மின்னின; துப்பாக்கிகள் பேசின.
இது சரபோஜி மன்னரின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று சினந்து, பாடலை நிறுத்திய குறிஞ்சி, பல கணங்கள் பதறிப் போய் நோக்குகிறாள்…
என்ன செய்வாள்?
இராகம்-3
ராஜகாந்தி
திருக்குற்றாலநாதர் கோயில் வாசல் திடலில் குழுமியிருந்த மக்கள், தத்தம் உயிருக்காகவும் உடமைகளுக் காகவும் போராடி, திசைக்குத் திசை அலைமோதி ஓட முயல்கிறார்கள்.
எங்கும் ஓலம் நிறைந்த அவலக் குரல்கள்…
குதிரைகளில் வந்தவர்கள், குறிஞ்சி எண்ணியதுபோல சரபோஜி மன்னரால் ஏவப்பட்டவர்கள் அல்லர். இது எத்துணைக்கு இழுக்கை இழுத்துத் தோளில் நிறுத்தும் என்பதை எண்ணிப் பாராதவரா மராட்டிய மன்னர்?
வந்தவர்கள் உண்மையிலேயே கொள்ளைக் கூட்டத் தினர். அவர்கள் வந்ததே உற்சவ காலத்தில் கோயில் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லத்தான். ஆனால் இப்படி ஓர் அபூர்வ கச்சேரி அங்கு நிகழ்கிறது என்பது எதிர்பாராதது.
ஒரு காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் ஆக்கிரமித்த போதுதான் கொள்ளைக் கூட்டத்தின் கொடும்பாவித் தனத்துக்கே அதிகப்படியானத் தாம்பூலத் தட்சிணை வைக்கப்பட்டது. பின்னர் கடுங்கோன் பாண்டியனும், சிம்ம விஷ்ணு பல்லவனும் தோன்றினார்களோ, இவர் கள் கொட்டம் அடங்கியதோ! ஆனால், சோழநாடு மட்டும் இவர்களால் சிம்மசொப்பனம் கண்டு சிதைவுற்று வந்தது. சோழ சூரியனான விஜயாலயச் சோழம் வருகைக்குப் பிறகுதானே இந்தக் கொள்ளையர்களின் விலா எலும்புகள் முறிக்கப்பட்டன!
பிறகு வெகுகாலம் கழித்து இந்தப் பாழும் தமிழர் களிடையே ஒற்றுமைக்குத் தீண்டாமை ஏற்பட, முகலாய மாலி காஃபூரின் நுழைவால், மார்தட்டி, போர் கொட்டி, தேரோட்டிய தமிழகம், பேர் கெட்டு, பெருமை கெட்டு, ஊர் கெட்டு உதாசீனமடைந்தது.
அன்றைக்கு வீழ்ந்த வீழ்ச்சி…
நாயக்கர் ஆக்கிரமிப்பாலும், நவாப்புகளின் துராக்கிர மிப்பாலும், மராட்டியரின் லீலாக்கிரமத்தாலும் இப்போது போதாக்குறைக்கு ஆங்கிலேயரின் அட்டகாசாக்கிரமத் தாலும்…
தமிழகம் எழுச்சி பெறாமல் எடுப்பார் கைப்பிள்ளையாக ஏங்கியது; சோங்கியது; ஏன்? தூங்கியது!
எல்லைகள் முழுவதும் தொல்லைகள்; எங்கு நோக் கினும் கொள்ளைகள்; பெண்களின் கற்பிலோ எரியும் சுள்ளிகள்.
வெறி கொண்டு இசை நிகழ்ச்சிக் கூட்டத்தில் நுழைந்த கொள்ளையர்த் தலைவன் ராஜகாந்தி, எதிர்பாராத இந்தக் கச்சேரிக் கூட்டத்தை விரட்டியடிக்க வேகம் கொண்டு அதாகதம் செய்கிறான்.
அற்புதமாக அமைந்த இசையரங்கு இப்படி அல்லோல கல்லோலப்படுவது கண்டு, அரங்கிலிருந்த பக்க மேளக் காரர்கள் வாத்தியங்களைச் சுருட்டிக் கொண்டு உயிர் தப்பினால் போதும் என்று முனைகிறபோது…
‘உம்’காரக் குரலெழுப்பிக் கனல் கக்கும் கண்களுடன் நோக்குகிறாள் கான ஞானகலாவல்லி குறிஞ்சி.
“நானே தப்பிக்க முயலவில்லை; உங்களுக்கு என்ன அவசரம்? எனது பேரழகை விடவா நீங்கள் இந்தக் கொள்ளைக்காரர்களுக்குப் பிரதானம்?”
குறிஞ்சியின் கூற்றைக் கண்டு, ஞானசுந்தரம் குலை நடுங்கிப் போனான்.
“குறிஞ்சி! இது பிடிவாதம்! இவர்களிடம் நாம் அகப்பட்டுச் சித்திரவதைப்பட வேண்டுமா?”
“ஞானி!”
அதட்டலுடன் நோக்குகிறாள்.
மேற்கொண்டு அவன் சொல்ல நினைத்ததைச் சொல்ல வில்லை; சொல்லவும் அவசியமில்லை. அவள் கண்களை மூடித் தியானத்தில் மூழ்கிவிட்டாள்.
கூட்டத்திடையே ஒரே களேபரம்.
இதில் இன்னொரு விசித்திரம்…
குறிஞ்சியின் அபரிமிதமான இசை நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை அரசர் ராஜ ரகுநாதத் தொண்டைமான், அப்படி என்னதான் குறிஞ்சியின் பாட்டில் நாரத நயமும், நந்தியின் லயமும் இருக்கின்றன என்பதனைப் பார்த்தறிய, தமது அமைச்சரைத் தக்க துணை வீரர்களுடன் புனை வடிவத்தில் அனுப்பி வைத்திருந்தார். ருகால் அந்த வாணியே மறு அவதாரமானால், கனகாபிஷேகம் செய்தாவது சமஸ்தானத்துக்கு அழைத்து வருமாறு கட்டளைப் பணித்திருந்தார்.
இந்த மாதிரி நேரத்தில் இப்படியான அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டதில் புதுக்கோட்டை அமைச்சருக்கு மன வேதனையேயானாலும் தம்முடன் வந்த வீரர்களின் புயங்களைச் சோதித்துப் பார்க்க அவர் உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ளவில்லை. இத்தனைக்கும் துப்பாக்கி ஏந்திய “கும்பினி வீரர்களும் உடன் வந்திருந்தனர்.
எதையும் முன் ஆலோசனையும் புத்திச் சாதுரியமுடனும் அணுகும் அமைச்சர், என்னதான் நடக்கிறது என்பதைத் (ஆங்கிலேயர்களை அந்நாளில் கும்பினியர் என்றே அழைத்தனர்) தொலைவிலிருந்தே கவனித்தார். அவருக்குத் தெரியும், வந்திருப்பவன் கொள்ளையர்த் தலைவன் ராஜகாந்தி என்று. இவன் அந்நாளைய பிரசித்தி பெற்ற ராட்சஸன்.
ராஜகாந்தியைப் பற்றிச் சுருங்கச் சொல்ல வேண்டு மானால், அவன் பெயரைச் சொன்னால் அந்நாளைய குழந்தைகள் அழுவதை நிறுத்திவிடுமாம்! அவனது பெயர் அரசர் சரபோஜிக்கே அலுக்கு (பயம்) என்றால் ஏனை யவர்களைப் பற்றிப் பிலுக்கத் (சொல்ல) தேவையில்லை.
குறிஞ்சிக்கு மட்டும் ஏதும் கொடுமை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால், புதுக்கோட்டை அமைச்சர், தமது ஆட்களை அனுப்பி ரகசியக் காவல் போட்டிருந்தார். இது குறிஞ்சிக்குத் தெரிய நியாயமில்லை. அவள் இன்னமும் தியானத்தில் மூழ்கி மந்திரங்களை ஜபித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்தத் திவ்ய மந்திரம்… திருமந்திரம்…
அதர்வண வேதத்துப் பத்திரகாளி பிரத்தியங்கிரா தேவியின் பிரத்தியேகமான மந்திரம்.
அன்றைக்கு காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ ஆசார்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், பாஷாங்க பாஷ்யம் போதித்ததோடல்லாது ஏன் உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும்?
உள்ள அழைத்துச் சென்றவர், “குறிஞ்சி! நீ எந்த இஷ்ட தேவதையைப் பூஜிக்கிறாய்?” என்று கேட்டார்.
“பத்ரகாளி பிரத்தியங்கிராதேவி!”
பிரமித்துப் போனார் வேதப்பிதா மகனார்.
“உனக்கு இந்தத் தெய்வத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமா?”
“ஒன்றும் தெரியாது. ‘ஓம் பிரத்தியங்கிராதேவி நமஹ!” என்று மட்டும் ஜபிக்கச் சொல்லி என் தந்தை சொல்லித் தந்திருக்கிறார்.”
இவள் தந்தை கொஞ்சம் விஷயம் தெரிந்தவன் தான் என்றெண்ணிய ஸ்ரீ ஆசார்யாள் சுவாமிகள், “நீ வழிபடுகிற தெய்வம் பயங்கர தேவதை! ஆனால், அவளது சித்தி உனக்குக் கிடைத்து விடுமேயானால் எதையும் வென்று விடலாம். இராவணன் மகன் இந்திரஜித் பூஜித்த தேவதை! புவனேஸ்வரியின் தேகம் கொண்டாலும் சிம்ம முகம் படைத்துச் சிம்மம் போல் கர்ஜிப்பவள்! மண்டையோடுகளை மாலையாக அணிந்த பிரேத தெய்வம்! பயந்து விடாதே! இவளையே நீ கெட்டியாகப் பிடித்துக்கொள். இவள் சுகச்சொரூபிணி! அதர்வண வேதமாகிய மந்திர வேதத்தில், சௌகை சாகையில் முப்பத்திரண்டு ரிக்குகளும் பிப்பிலாத சாகையில் நாற்பத்தெட்டு ரிக்குகளும் மந்திரங்களாக உள்ளன. உனக்கு இவற்றில் மூலாதாரமான மந்திரத்தை உபதேசிக்கப் போகிறேன்! இந்த மந்திரங்களைக் கண்டு பிடித்த அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற மகரிஷிகளை மறந்து விடாதே! தெரிந்தோ தெரியாமலோ நீ இவளை பூஜித்ததால் புலையர் குலத்தில் பிறந்தாலும் தீட்சிதர் பெருமானால் இசைத்தீட்சை பெற்று இங்கே என்முன் நிற்கிற பாக்கியம் பெற்றிருக்கிறாய்!” என்று கூறிய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி சுவாமிகள், குறிஞ்சியின் செவிகளில் மந்திரங்களை ஓதி, மனத்துக்குள் சொல்லி மனனம் செய்து கொள்ளச் செய்கிறார்.
குறிஞ்சியின் சுழிமுனையில் ஒரு மின்னல் பளிச்சிடு கிறது.
“என்ன தெரிகிறது குறிஞ்சி?”
“சுழிமுனையில் ஒரு மின்னல் தெரிகிறது சுவாமீ.”
“நீ சித்தி பெற்று விட்டாய்! இதுதான் சமிக்ஞை. ஆனால் ஒரு நிபந்தனை. நீ பாடும் குற்றாலக் குறிஞ்சி ராகத்துக்கு மட்டுமே இந்த மந்திரத்தை மனத்தில் ஜபித்துப் பாட ஆரம்பிக்க வேண்டும். தீய காரியங்கள் எவற்றுக்குமே இதனைப் பயன்படுத்தக் கூடாது. இந்த ரகசியத்தை எவருக்குமே சொல்லவும் கூடாது. சத்தியம் செய்!”
“பத்ரகாளி பிரத்தியங்கிரா பரமேஸ்வரி மீது சத்தியம்!”
“குறிஞ்சி! எப்போதுமே இதன் பீஜமான – ‘க்ஷ’கரகமான ‘க்ஷம்’ என்ற நிதரிசனத்தை மறந்து விடாதே!”
“க்ஷம்.”
குறிஞ்சியின் தியானத்தில் பீஜமந்திரங்கள் பீறிட…
கண்களைத் திறந்து நோக்குகிறாள்.
கொள்ளையர்க் கூட்டம் மக்களைச் சின்னாபின்னமாக்கிக் கோயில் நகைகளைக் கொள்ளையிடுவதற்கு ஆயத்தமாகின்றன…
எங்கும் ஓலக்குரல்கள்…
வானில் ‘ஓம்காரத்தை வரைவது போன்ற ஓர் ஒளிக் கீற்று மின்னலாய்த் தோன்றி மறைகிறது.
‘பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்; பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்; பொன்னில் மறைந்தது பொன் அணிபூஷணம்; பொன்னை மறைத்தது பொன்னணிப் பூஷணம்’ என்று திருமூலர் வாக்கை அடிக்கடி இசைமேதை முத்துசாமி தீட்சிதர் சொல்வதை நினைத்துப் பார்த்துக் கொண்டே குறிஞ்சி, பின்னால் தம்பூருடன் அமர்ந்திருந்த கற்பகத்தை நோக்கிக் கண்ணசைக்கிறாள்.
தம்பூர் ஓம்காரமாய் ஒலியெழுப்பத் தொடங்குகிறது. வாத்தியங்களான பிடிலுக்கும் மயூரிக்கும் மட்டுமே வேலை தரக் கட்டளைப் பணித்து, எடுத்த எடுப்பில் குரலைக் கம்பீரமாக மேல் சட்சமத்தில் நிறுத்த…
களேபரத்தில் ஒரு சின்ன அசைவு….
மேல் சட்சமத்தில் (ச்) நிறுத்திய குரல், சதுர்சுருதி ரிஷபத்தை (ரி) தொட்டு, சட்சமத்தோடு ஊசலாடி அந்தர காந்தாரத்தில் (க) ஆவேசமாக நிற்கிறது….
**அக்காலத்தே இருந்த முத்துசாமி தீட்சிதர், தியாகப் பிரம்மம் வரலாறுகளைப் படிக்கிறபோது, இதைவிட அதிசயிக்கத்தக்க அற்புதங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதைக் காண முடிகிறது. இதனை மூடநம்பிக்கை என்று ஒதுக்குவதை விட, மூடநம்பிக்கை எதுவும் இருக்க முடியாது.
குற்றாலக் குறிஞ்சி ராகம் இப்படியா அரங்கேற வேண்டும்? சாதனை புரிய வேண்டிய ராகம், இவ்விதம் சோதனையில் ஆழ்ந்து, போதனையைப் புரிய வைக்கப் போவதுதான் என்ன? என்ன? என்ன?
ஒரு கையில் குதிரையின் சேணமும், மறுகையில் துப்பாக்கியுமாகச் சுழன்ற கொள்ளையர்த் தலைவன் ராஜகாந்தி, ஒரு கணம் விதிர்த்து திரும்பி நோக்குகிறான். சேணத்தைப் பிடித்து இழுத்துக் குதிரையை நிற்க வைக்க, அது முன்னங்கால்களை மேலே தூக்கி, வாயில் நுரை தள்ளக் கனைக்கிறது.
இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கிறது… எவ்வளவு துணிவாக இவள் பாடத் தொடங்குகிறாள்?
குற்றாலக் குறிஞ்சி ராகத்தை, காளி சொரூபமாக, பிரத்தியங்கிராதேவி சொரூபமாக, சிம்ம கர்ஜனைபோல ஆலாபனை செய்கிறாள், பாடலில்லை; அதற்கான லயத்தைத் தேடவில்லை. வெறுமனே ஆலாபனம்… வெறி கொண்ட உச்சஸ்தாயி ஆலாபனம், மயூரியும் பிடிலும் அந்த ராகத்தை மேலும் மலைக்கச் செய்கின்றன.
நிதநி, பதநி, க…
நிதநி, பதநி, க…
என்று ஆலாபித்து வந்தவள், ‘மக, மக, மக’ என்று பிரதிமத்திம மூர்ச்சனை கொடுத்து, ‘கம்பகரிச, கம்பகரிச என்று வருகிறபோது, சுத்தமத்திம பாஷாங்கத்தைக் கலந்து ஆலாபிக்கிறபோது…
கொலை நெஞ்சனான ராஜகாந்தியே “ஆகா!” என்று அலறிவிட்டதைப் பார்க்க வேண்டுமே!
நெருப்புக் கண்கள் பொறிபறக்க, நெஞ்சிலே பொறுப் பிலாக் கொலையுணர்வு நெறியிழக்க, உருவத்திலே கறுப்பை அப்பிய கடோத்கஜனைப் போல் வெறியுணர் வுடன் நோக்கிய ராட்சஸன் ராஜகாந்தியா?
புதுக்கோட்டை அமைச்சர் நோக்குகிறார்.
ஓ… இதுதான் தவத்தில் அப்பியசிக்கிற சங்கீதமோ?
சரிகம நிதநிபதநிசா… என்று ஆரோகண ஆலாபனையில் சுருதி சேர சட்சமத்தில் குறிஞ்சி தனது குரலை இழையச் செய்து நிறுத்திக் கண்மூடி அமர்ந்திருந்த காட்சி…
ராட்சஸனான ராஜகாந்தியின் ராட்சஸம், கொஞ்சம் கொஞ்சமாக விலக…
அவனது கொடிய குணங்கள் சநிதபம கம்பகசரி என்று ஒவ்வொரு சுரமாக அவரோகிக்கிறபோது…
அந்த கம்பகரிச-வின் பாஷாங்க சுத்த மத்திமம் இதயத்தே சிம்ம ரூபிணியாக அமர்ந்து கர்ஜித்து, அவனது கொலைக் கர்ஜனையின் பீடத்தையே எரித்து விடுகிறது.
இப்போது, குறிஞ்சி வேகமாக மிக வேகமாக சங்கதிகள் சகிதம் கொண்ட வேகமாக பிர்க்காக்கள் கொற்கை முத்துக்களாய் உதிரும் வேகமாகச் சுருதியுடன் ராகத்தைச் சஞ்சரிக்கிற போது…
இது என்ன கந்தருவ மயக்கம்?
ராஜகாந்திக்கு அசுணமாப் பறவையின் மயக்கம்; ராஜ நாகத்தின் அடக்கம்; மதம் கொண்ட யானையின் மலைப்பு…
மலைத்து, சிலைத்து, நிலைத்துப் போன ராஜகாந்தியைக் கண்ட புதுக்கோட்டை அமைச்சர், இதுதான் சமயம் என்று கருதி, தமது ஆட்களை ஏவி விலங்கிடும்படி ஆணையிட, அந்த ஆணை சுறுசுறுவென்று செயல்பட்டு விட்டது.
ஓ… இசைக்கு அடிமையாகி விட்டோம்! இப்போது விலங்கு அடிமைப்படுத்தி விட்டது!
தலைவன் விலங்கிடப்பட்டதைக் கண்ட கூட்டத்தினர், இவ்வளவுக்கும் காரணம் இந்தப் பாடகிதானே என்று அவள் மீது பாயச் செல்ல, புதுக்கோட்டை வீரர்கள் எதிர்க்க…
ஓங்கிக் கர்ஜிக்கிறான் ராஜகாந்தி:
“நண்பர்களே! அவள் என் மகள்! அவள் என் மகள்! அவள் உடம்பில் ஊசி முனையளவு ரணமானாலும் என் தலையை நானே சீவிக் கொள்வேன். தப்பி ஓடிவிடுங்கள்; தப்பி ஓடிவிடுங்கள்! என் மீது நம்பிக்கையிருந்தால் தப்பியோடுங்கள்! எந்த சங்கீதம் எனக்கு விலங்கிட்டதோ. அதே சங்கீதம் என்னை விடுதலை செய்யும், போய் விடுங்கள்!”
ராஜகாந்தியின் கர்ஜனைக்குரல் கேட்ட நம்பிக்கையுள்ள தோழர்கள், புதுக்கோட்டை வீரர்களிடம் பிடிபடக்கூடாது என்கிற நினைவுடன் மூலைக்கு ஒருவராகப் புரவியில் பறந்தனர்.
‘ஆ! எவ்வளவு நம்பிக்கையுடன் இந்த கொள்ளையர்த் தலைவன் கூறினான்! எந்தச் சங்கீதம் எனக்கு விலங்கிட் டதோ, அந்தச் சங்கீதம் என்னை விடுதலை செய்யும்!”
அரங்கை விட்டெழுந்த இசை தேவதை குறிஞ்சி, ராஜகாந்தியை நோக்கி நடந்து வருகிறாள். அவளது காலில் அணிந்திருந்த கொலுசுகள் கூட சப்தகரங்களாய் ஒலிக்கின்றன.
அருகில் வந்து நின்ற குறிஞ்சியை, விலங்கிட்ட கரங் களுடன் விழிகளில் நீர்மல்க, வணங்கித் தலை பணிகிறான் ராஜகாந்தி: “மகளே! மகளே! மங்கையிடம் மயங்காதவன் உன் இசையில் மயங்கி விட்டேன்; மதுவில் மயங்காதவன் உனது சங்கீதத்தில் சரணடைந்து விட்டேன்.”
குறிஞ்சியின் கண்கள் குற்றால அருவியாக மாறி விட்டன.
“மகளே என்றழைத்த தந்தையே! உங்கள் பெயர்?”
“ராஜகாந்தி.”
நடுங்கிப் போகிறாள் குறிஞ்சி. தமிழகமே குலை நடுங்கும், வாலியையொத்த பலம் பொருந்திய ராஜகாந்தி இவர்தானா?
“என்ன மகளே யோசிக்கிறாய்?”
“உங்கள் பெயரே ஓர் அபூர்வராகம்! எனவேதான் எனது அபூர்வராகத்தில் நீங்கள் மயங்கிப் போனீர்கள்! இது ஒரு முன்பிறவித் தொடர்பு!”
குறிஞ்சி பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். பக்கத்தில் நின்றிருந்த புதுக்கோட்டை அமைச்சரை நோக்குகிறாள்.
“நீங்கள் யாரோ?”
“நான் புதுக்கோட்டை ஜமீனின் முதலமைச்சன்.”
“ஓகோ!”
“உங்களை எங்கள் சமஸ்தானத்துக்குக் கனகாபிஷேகம் செய்து அழைத்துவர எங்கள் அரசர் ஸ்ரீராஜ ரகுநாத தொண்டைமான் அவர்கள் அனுப்பி வைத்தார். வந்த இடத்தில் இப்படி ஓர் அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டது. ராட்சஸனை மயக்கவல்ல ராகம் பாடிய ராகதேவதையே! எங்கள் அரசர் அழைப்பினை ஏற்பீராக!””
குறிஞ்சியின் சிரிப்பில் நெருஞ்சிமுள் குத்துவது புதுக் கோட்டையாருக்குப் புரிகிறது.
“நான் சமஸ்தானங்களுக்குக் கூடிய வரை பாட வருவ தில்லை. காரணம், பாட வரும் பெண்கள் பஞ்சணை யில் சல்லாபிக்க வேண்டும் என்று சமஸ்தானாதிபதிகள் விரும்புவது சகஜமாய்ப் போய்விட்ட காலம் இது! நான், நீங்கள் குறிப்பிட்ட ராக தேவதை; போக தேவதையல்ல! ஆனாலும் உங்களை நம்பி வருகிறேன்! ஒரு நிபந்தனை.”
“நிபந்தனையைச் சொல்லலாம்!”
“என்னை மகளே என்று பாசமுடன் அழைத்த இந்தத் தந்தையின விலங்குகளை அவிழ்த்து விடுதலை செய்யுங்கள்!”
இந்த எதிர்பாராத நிபந்தனையைக் கேட்டு புதுக் கோட்டை அமைச்சர் புரியாமல் திணறியபோது…
“அது நடவாத காரியம்!” என்று ஒரு புதிய குரல் கணீ ரென்று ஒலிக்க, அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
– தொடரும்…
– குற்றாலக் குறிஞ்சி (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 2012, பூம்புகார் பதிப்பகம், சென்னை.