கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,532 
 
 

ஸ்கூலிலிருந்து வந்த தன் மகன் வாசுவின் டிபன் பாக்ஸைத் திறந்து பார்த்தாள் ரோகிணி. பாதிச் சாப்பாடு அப்படியே இருந்தது.

“என்னதான் அதட்டி மிரட்டி அனுப்பினாலும் இவன் ஏன் ஒழுங்காகச் சாப்பிடாமல் திருப்பிக் கொண்டு வந்து விடுகிறான்?’

ஒருபுறம் கோபம் வந்தாலும் தனது இயலாமையை நினைத்து வருத்தம் வந்தது.

காலிங்பெல் அடிக்க… கதவைத் திறந்தாள். வாசலில் எதிர்வீட்டு அனு.

“பாரு அனு.. சாப்பாட்டை வாசு அப்படியே திருப்பிக் கொண்டு வந்திருக்கிறான். “சாப்பாட்டை மிச்சம் வெச்சா அடிப்பேன்’னு அதட்டித்தான் அனுப்புறேன். அப்படியும் மிச்சம் வெச்சுடறான்… உன் பிள்ளையும் இப்படித்தானா?’ சலிப்பாய்க் கேட்டாள் ரோகிணி.

“இல்லையே! நான் லஞ்ச் பாக்ஸைக் கொடுத்து விடும்போதே… “இன்னிக்கு செம டேஸ்ட்டா செஞ்சிருக்கிறேன். லஞ்ச் போதலைன்னு சொல்லப் போறே பாரு’ன்னு சும்மா சொல்லி அனுப்புவேன். அவனும் முழுசா சாப்பிட்டுட்டு வந்துடறான்.’
அனு சொல்ல.

“சாப்பாட்டை மிச்சம் வெச்சா அடிப்பேன்னு நானே எதிர்மறையா பேசி அனுப்பினால் எப்படி சாப்பிடுவான்? தப்பை என் மீது வைத்துக் கொண்டு வாசுவைக் குற்றம் சொல்வதா?’

உண்மை புரிந்தவளாய் புருவத்தைச் சுருக்கினாள் ரோகிணி.

– கீர்த்தி (ஏப்ரல் 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *