குறளி




கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு.
“ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில விட்ட்டேன்” என்று கரகரத்தான் மாந்த்ரீகன்.
“ம்ம்ம்’ என்றது குறளி.
ஒரு கிழிந்த புடவைதுண்டைக் கொடுத்தான். “ இது நீ பழிவாங்கப் போகும் பெண்ணுடையது. முகர்ந்து கொள். தவறு நேரக் கூடாது. அதோ அந்த வீடு தான். புழக்கடையில் மரங்கள் இருக்கிறது” என்று சொல்லி “போ” என்றான்.
குறளி அனிதாவின் வீட்டில் நோக்கி நடந்தது. நீங்கள் யாரேனும் அந்தக்காட்சியைப் பார்த்திருந்தால், ஒரு கிழிந்த புடவைத் துண்டு ஒன்று காற்றில் ஆடி ஆடி செல்லும் காட்சியைப் பார்த்து இருப்பீர்கள்.
மாந்த்ரீகன் சொன்ன மாதிரி வீட்டின் பின்பக்கம் ஒரு புளிய மரம் இருந்தது. குறளி அதன் மீது ஏறி ஒரு கிளையில் வசதியாக உட்கார்ந்தது. வீட்டின் பின் பக்கம் மட்டுமல்லாமல் முன் வாசல் கூட அந்த மரத்தின் மேலிருந்து நன்றாகத் தெரிந்தது.
அந்த மரமும் அந்த வீட்டின் அமைப்பும் குறளிக்கு பழைய நினைவுகளைத் தூண்டியது.
அதனுடைய வீடும் இப்படித்தான் இருந்தது. அழகாக. சின்னதாக. அவர்கள் குடும்பத்தைத் போல . அப்பா அம்மா அவள். (குறளி பெண் என்பது தெரியாதா?) எவ்வளவு சந்தோஷம் அவர்கள் வாழ்க்கையில்! அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்கள் அவள் பெற்றோர். ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் அவள் பள்ளிக்குப் போகும் வரையில் தான். அவளுக்கு ஆறு வயதானபோது பள்ளியில் போட்டார்கள். அப்போது தான் அவளுக்கு தனது குறுகிய வளர்ச்சி ஒரு கேலிக்குரியது என்று புரிந்தது.
ஆமாம் கமலிக்கு ( இன்றைய குறளி அன்றைய கமலி) சற்று குறுகிய வளர்ச்சி. குள்ளம். ஆனால் அவள் பெற்றோர் அதை ஒரு குறையாகச் சொல்லாமலேயே வளர்த்திருந்தார்கள். ஆனால் பள்ளிக்குச் சென்றபின்னர் உடன் படிக்கும் மாணவ மாணவியரின் கேலிப்பார்வை அவளுக்கு உலகம் என்ன என்பதை உணர்த்தியது.
உடல் ஊனத்தை இவ்வளவு வெறுப்பார்களா? ஆமாம். அதுதான் நிதர்சனம்.
ஆசிரியர்களிடம் முறையிட்டும் பலன் எதுவுமில்லை. உதட்டளவில் அவர்கள் ஆறுதல் சொன்னார்களே ஒழிய அவர்கள் கண்களிலும் ஒரு ஏளனம் இருக்கத்தான் செய்தது.
எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போன்ற சம்பவம் கோடைக்கானலில் நடந்தது. அப்போது அவள் பனிரெண்டாம் வகுப்பு. அந்த வருடத்துடன் பள்ளிப்படிப்பு முடிந்து விடும் என்பதால் ஒரு சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இவளும் சென்றாள்.
அங்கே தான் இவள் முடிவு காத்திருந்தது.
இவளுடன் யாரும் அதிகம் பழகாத காரணத்தால் இவள் மட்டும் தனியாக அந்தக் காலையில் இவர்கள் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸை விட்டு வெளியே மலைப்பாதையில் ஒரு நடை சென்று வரக் கிளம்பினாள்.
ஒரு இருவது நிமிடம் நடந்திருப்பாள். ஒரு அரவமில்லாத ஒதுக்குபுறமாக இருந்த மரங்களின் பின்னாலிருந்து “ ஸ்ஸ் சீய்ய்ய் விடுறா” என்ற பெண்குரலும் அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் காமம் தோய்ந்த ஒரு முனகலும் கேட்டது.
கமலிக்குப் புரிந்து விட்டது. ஆனால் ‘விடுறா” என்றாளே? இவர்கள் குழுவில் பெண்கள் மட்டும் தானே வந்திருந்தார்கள்? குழப்பதுடன் நின்று யோசித்தாள். ‘நமக்கென்ன போய்விடலாம்’ என்று நினைத்தவளை மனிதர்கள் இயல்பான ஆர்வக்கோளாறு வென்றது.
மெதுவாக, அடி மேல் அடி வைத்து, சப்தமின்றி அந்த மரத்தை நெருங்கினாள். ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று தலையை எட்டி அவள் பார்த்த காட்சி, அவள் செத்து இத்தனை வருடங்கள் ஆகியும் அவளால் மறக்க முடியவில்லை. அவள் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி ஆடைகள் நெகிழ்ந்த நிலையில் படுத்திருக்க அவள் அருகில் அவர்கள் வகுப்பிலேயே படிக்கும் ஒரு மாணவன்!
‘ அவன் எப்படி வந்தான்?’ என்று அவள் யோசிக்கும் முன்னரேயே அவர்கள் இருவரும் இவளைப் பார்த்துவிட்டார்கள்.
அப்புறம் நடந்தவைகள் மிகவும் கோரமான சம்பவங்கள். அதனால் சுருக்கமாக. அவர்கள் இருவரும் தங்கள் ஆடைகளை சரிசெய்து கொண்டு எழுந்து வந்து இவளிடம் பேசினார்கள். தாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் மன்னித்து விடும் படியும் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் வேண்டிக் கொண்டார்கள்.
ஆனால் கமலி கேட்கவில்லை. டீச்சரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினாள். அந்தப் பெண் மிக அழகாக இருந்ததும் அந்தப் பையன் கம்பீரமாக இருந்ததும் அவளை ஒரு விதமாக படுத்தியது என்பது என்னவோ உண்மை. அது தான் அவர்களைக் காட்டி கொடுக்க அவள் பிடித்த பிடிவாதத்துக்கும் அடிப்படை என்பது அவளுக்கே புரிந்தது.
அந்தப் பெண்ணும் பையனும் மிகவும் பயந்து போய்விட்டார்கள். அப்போது அந்தப் பெண் அவன் காதுகளில் ஏதோ சொன்னாள். பயத்துடனும் குழப்பத்துடனும் அவன் அவளைப் பார்த்தான். அவள் ஆமாம் என்பது போலத் தலையசைத்தாள்.
அதற்கப்புறம் நடந்தவை மின்னல் வேகத்தில் நடந்தேறின. அந்த இருவரும் கமலி சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் சரேலென்று அவளை நெருங்கி ஆளுக்கொருப் பக்கம் பிடித்துத் தூக்கி ஒரு பொம்மையை எறிவது போல அவளை அந்த மலையுச்சியிலிருந்து எறிந்தார்கள்.
கமலி செத்துப்போனாள்.
அப்புறம் அது ஒரு விபத்து என்றும், கமலி கால் தடுக்கி விழுந்திருப்பாள் என்றும் யூகிக்கப்பட்டு அந்த கேஸ் மூடவும் பட்டது. இதற்கிடையில் அந்தப் பையன் காலையிலேயே அங்கிருந்து ஓடி விட்டான். இதெல்லாம் கமலிக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்டால், அவள் செத்தபின் உடனே எங்கும் போகாமல் அங்கேயே சுத்தி வந்ததால் தெரிந்து கொண்டவை.
அங்கேயே சுத்தி வந்ததால் தான் அந்த மாந்த்ரீகனிடம் மாட்டியும் கொண்டாள். அவள் இறந்தபிறகு குறளி ஆனாள். அதிலும் அவளுக்கு ஒரு கோபம். ஒரு மோகினி ஏன் ஆகமுடியவில்லை அவளால்? இறந்த பிறகும் உயரம் குறைந்த பேயாகத் தான் ஆனாள்.
அவளுடைய விதி முடிய இன்னும் நாற்பது வருடங்கள் உள்ளது என்றும் அதுவரையில் அவள் குறளியாகத்தான் இருக்கமுடியும் என்றும் மாந்த்ரீகன் சொல்லித்தான் அவளுக்குத் தெரியும்.
அவன் நல்லவன் இல்லை. மந்திரத்தால் அவளைக் கட்டிப்போட்டவன் அவளை பல குற்றங்கள் செய்ய ஏவினான். அவளுக்குத் தெரியும் தான் செய்வதெல்லாம் தவறு என்று. அவனிடமிருந்து தப்பித்துப் போக அவளுக்குத் தைரியமில்லாமல் அவன் சொன்னதைச் செய்தாள்.
அப்படிப்பட்ட குற்ற வாழ்வு வாழ்ந்து வந்தவளுக்குத் தான் இன்றைக்கு இந்த வேலை.
பாவம் அந்தப் பெண் என்று பரிதாபப்பட்டாள். இப்படி அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்து குறளி அதிர்ந்தது. கோடையில் இவளைத் தள்ளி விட்ட அதே பையன்! காரின் டிரைவர் பக்கக் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். குறளிக்கு இன்னும் அதிர்ச்சி. அந்தப் பையனுடன் இருந்த அதே பெண்!
குறளிக்கு கோபம் கொப்பளித்தது. இருந்தும் மாந்த்ரீகன் சொன்னதுக்குக் கட்டுப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறளிக்கு அவ்வளவு தூரத்தில் இருந்தும் தெளிவாகக் கேட்டது.
“டேய்! இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருக்கறது? பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணித் தொலைன்னாலும் கேக்க மாட்டேங்கற. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க?” என்றாள் அவள்.
“ஏய்! இன்னும் கொஞ்ச நாள் பொறு. நான் எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன். ஒரு மந்திரவாதியப் பிடிச்சு என் மனைவிக்கும் குழந்தைக்கும் ஏவல் செய்யச் சொல்லியிருக்கேன். நாம சம்பந்தப்படாம அவன் அவங்களக் கொன்னுடுவான். சொத்தும் நம்ம கையில. கொஞ்சம் பொறுமை தேவைடா” என்றான் அவன்.
குறளிக்கு கோவம் அதிகமானது. இவர்கள் இன்னுமா மாறவில்லை?
“சரி” என்று சொல்லி அந்தப் பெண் காரில் ஏறி சென்று விட்டாள். அவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான்.
அப்போது வீட்டின் பின் பக்கக் கதவு திறந்தது. இறுகிய முகத்துடன் ஒரு பெண் வெளியே வந்தாள். அவள் வந்ததும் குறளிக்கு அவளுடை வாசம் வந்துவிட்டது. இவளைத் தான் கொல்லவேண்டும்.
குறளி தயாரானது.
அப்போது திடீரென்று “அம்மா” என்று ஒரு சிறு பெண்ணின் குரல் கேட்டது.
“என்னடா செல்லம்? அம்மா கெணத்தடில இருக்கேன். இங்க வா” என்றாள் அந்தப் பெண்.
“இதோ வரேன்” என்று சொல்லி வீட்டின் உள்ளே இருந்து ஓடி வந்த பெண் கமலியைப் போலவே உயரமில்லாத உடல் வளர்ச்சி குன்றியவள்.
மறுநாள் காலையில் அந்தக் குழந்தையின் அம்மா கிணற்றடிக்கு வந்தபோது அங்கே தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்த தன் கணவனைப் பார்த்து அலறினாள்.
போலீஸ் வந்தது. கிணற்றடியில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டது என்று ரிப்போர்ட் எழுதிச் சென்றார்கள்.
ஆனால் அந்த ஊரின் எல்லையில் இருந்த மயானத்தில் இறந்து கிடந்த மாந்த்ரீகனின் மரணத்தில் மட்டும் ஏதோ மர்மம் இருப்பதாகப் போலீஸ் சந்தேகப்பட்டது.
குறளி அந்த ஊரைவிட்டுப் போவதற்கு முன்னால் மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து அந்த அம்மாவையும் குழந்தையையும் ஒரு முறை பார்த்துவிட்டு சென்றது. போகிற போக்கில் அந்தக் கொடைக்கானல் பெண்ணின் வீட்டைத் தேடி கண்டுபிடித்து, கராஜில் நின்று கொண்டிருந்த அவள் காரின் பின் சீட்டில் போய் உட்கார்ந்து மறு நாள் விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தது.
பிடித்தது கதை/ நன்றி..