குருட்டு அதிர்ஷ்டம்!
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
மங்குனி நாட்டு மன்னர் சங்குனி இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியாததால் அவரைச்சந்திக்க முடியாமல் தலைமறைவாகிவிட்டார் மந்திரி மார்த்தாண்டன்.
மன்னர் சங்குனி ஒரு விசித்திரமான மனிதர். நடக்காத காரியங்களையே நடத்தும்படி மந்திரிகளுக்கு கட்டளையிடுவதில் குறியாக இருப்பார். செயலில் நெறியாக இருக்க வேண்டுமென்பதில் கவனம் செலுத்த மாட்டார். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக அவரது மனைவி சங்கரியே ஒரு முறை மந்திரிகளிடம் வருத்தப்பட்டுப்பேசியுள்ளார்.
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2012/12/Sirpangal.jpeg)
மன்னர் சங்குனியின் தந்தை கங்குனி தான் மங்குனி நாட்டின் மந்திரியாக இருந்து மன்னர் மறைவுக்குப்பின் அவரது வாரிசுக்கு வாய்ப்புக்கொடுக்காமல் சிறையிலடைத்துவிட்டு குறுக்கு வழியில் ஆட்சியைப்பிடித்து தான் மன்னராகி சில வருடங்களுக்குப்பின் தன் மகனுக்கு முடி சூட்டி அழகு பார்த்தவர்.
தந்தையின் திறமையில் ஒரு சதவீதம் கூட திறமை இல்லாதவர் தனயன், அரசருக்குரிய லட்சணங்கள் இல்லாத ஒரு கோமாளி அரசர் என மறைமுகமாக மந்திரிகளே சங்குனியைப்பற்றிப்பேசிக்கொள்வதுண்டு.
‘அவரது குருட்டு அதிர்ஷ்டத்தால் மன்னராகி விட்டார். அவருக்கு யோகம் அதிகம், யூகம் குறைவு. அவரது செயல்பாடுகள் முட்டாள் தனமாக இருந்தாலும் யோகத்தால் முடிவில் வெற்றி கிடைத்து விடும்’ என ஒரு முறை அரண்மனை ஜோதிடர் கூறியதைக்கேட்ட பின்பே அவரை மன்னராக்கினார் அவரது தந்தை கங்குனி.
பகலில் வேட்டைக்குப்போவதும், இரவில் அரசவை நடத்துவதும் என மற்ற நாட்டு அரசர்களே கேலி பேசும் அளவுக்கு ஆட்சி நடத்துகிறார் என்கிற அவப்பெயரும் மன்னருக்கு உண்டு.
ராஜ தந்திரம் கடுகளவும் தெரியாததால் நாளுக்கு நாள் நாட்டின் எல்லைகள் சுருங்கிக்கொண்டே வந்தது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நிலவரம் கலவரமாகும் நிலையில் மன்னரின் மனைவியின் ஆலோசனையின் பேரில் மன்னரை வடக்கு நாட்டிற்கு சுற்றுலா அனுப்பிவிட்டு தெற்கு பகுதியில் யுத்தத்தைத்தொடங்கி சத்தமின்றி இழந்த பகுதிகளை வீரர்கள் மீட்டு எல்லையில் வேலி அமைத்தனர்.
தெற்கு நாட்டை விட வடக்கு நாட்டு மன்னருக்குத்தான் வளம் மிக்க மங்குனி நாட்டின் மீது பேராசை. என்றைக்காவது ஒரு நாள் போர் தொடுத்து தங்கள் நாட்டோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டியதை மன்னர் சங்குனி தனது ஒற்றர்கள் மூலம் அறியாமலில்லை. கோமாளியையைப்போல் இருந்தாலும் ஏமாளியில்லை.
வடக்கு நாடு அளவில் மிகப்பெரியது. வீரர்களும் பல மடங்கு அதிகம். போர் என்று வந்தால் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்லாமல் யுத்தத்தில் ரத்தம் சிந்தி பல வீரர்கள் மடியவும் நேரும் என்பதை தீர்க்கமாக அறிந்தும் வடக்கு நாட்டிற்குள் மாறு வேடத்தில் சுற்றுலாவாசியாக ஒரு துறவியைப்போல் சென்றவர் அந்த நாட்டின் அரண்மணைக்குள் நுழைந்து விட்டார்.
வடக்கு நாடான மங்கள நாட்டின் மன்னர் மாயாவிக்கு ஜோதிடத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருப்பதைத்தெரிந்து கொண்டதும் தமக்கிருக்கும் ஜோதிடத்திறமையால் ஜோதிடர் எனக்கூறி அவரைச்சந்தித்து விட வேண்டும் என முடிவெடுத்து அங்கிருக்கும் வாயில் காப்பாளனிடம் சொன்ன சில நாழிகையில் மாறு வேடத்தில் இருந்த மங்குனி மன்னரை அரண்மனைக்காவலர்கள் அழைத்துச்சென்றனர்.
அந்த நாட்டு மன்னருடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டது. உண்ட களைப்பு தீர ஓய்வெடுக்க தனியறை ஒதுக்கப்பட்டது. ஒரு மன்னருக்கு தர வேண்டிய மரியாதை வழங்கப்பட்டது கண்டு ஆச்சர்யப்பட்டாலும் எச்சிரிக்கையுணர்வு ‘நீ அடையாளம் காணப்பட்டாய்’ என எச்சரிக்க, அங்கிருந்து வெளியேற யோசனை தோன்றிய மறு வேளை மன்னரே தனது அறைக்குள் பிரவேசித்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன ஜோதிடரே…. என்னை இங்கு எதிர்பார்த்திருக்க மாட்டீர்களே…? ஆனால் நீங்கள் ஜோதிடரில்லை…” என நிறுத்தியதும் சங்குனிக்கு வேர்த்துக்கொட்டியது.
“நான் இது வரை ஆயிரக்கணக்கான ஜோதிடர்களைச்சந்தித்திருக்கிறேன். அவர்களின் நடவடிக்கையில் சிறிதளவு கூட தங்களுடைய நடவடிக்கையில் இல்லை. நானே ஒரு ஜோதிடனாகவும் இருக்கிறேன் என்பதில் பெருமையுள்ளவன். இன்றைய திதி, நட்சத்திர நேரப்படியும், எனது திசா, புத்தி, அந்தரப்படியும் தற்போது உள்ள ஓரைப்படியும் நான் சந்தித்துப்பேசிக்கொண்டிருப்பது ஒரு ஜோதிடரிடம் அல்ல. ஒரு நாட்டு மன்னனிடம்…” எனப்பேசியவர் நெருங்கி வந்து சங்குனியை ஆலிங்கனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் தான் பொய் பேசிய ஒரு குற்றவாளியாகியதில் வருத்தமும் இருந்தது.
“நீங்கள் மங்குனி அரசராக இருக்கலாம் என கருதுகிறேன். எனது கணிப்பு சரியா…?”
“சரி….”
“சரியென்றால் வலது கன்னத்தில் கரிய மச்சத்துடன் எனது மகளான இளவரசியின் அந்தப்புரத்திற்குள் ஜோதிடம் பார்ப்பதாக நுழைந்தது தங்கள் மகன் தானே…?”
“அ… ஆமாம்… அவனை ஒன்றும் செய்து விடாதீர்கள். அவன் ஏதுமறியாத அப்பாவி. எனது யோசனையில் தான் அந்த வேடத்தை அவனும் போட்டான்” மகனின் யோசனைப்படி தான் தானும் நடந்து கொண்டாலும் தனது யோசனை என மகனை நிரபராதியாக்கப்பார்த்தார் சங்குனி.
” எல்லை மீறிப்போய்விட்டது. இனி என்னால் ஒன்றும் செய்ய இயலாது. எனது மகள் தங்களது புதல்வனை கைது செய்து சிறையிலடைத்து விட்டாள்….”
“அவனை மன்னித்து விடுங்கள்…” கெஞ்சுவது போல் கேட்டார்.
“மன்னிக்க முடியாது. வேண்டுமானால் வாழ்நாள் கைதியாக தண்டிக்கலாம்…” எனும் பேச்சைக்கேட்டு மயக்கம் வருவது போல் இருந்தது சங்குனிக்கு.
“தங்கள் மகனை எனது மகள் சிறை வைத்திருப்பது எந்த சிறை என நீங்கள் அறிய விரும்புகிறீர்களா….?”
“எ….எந்த சிறை….?” அச்சத்தின் உச்சத்தில் வெள்ளந்தியாகக்கேட்டார். ‘மகனின் யோசனை மொத்தமாக அத்தனையும் எதிரிக்கு சாதகமாக முடிந்து விட்டதே…’ என கவலை கொண்டார்.
“என் மகளின் மனச்சிறை….?”
இச்செய்தி காதில் தேனாகப்பாய வாடிய முகம் மலர மாயாவியை தானும் மகிழ்ச்சியுடன் ஆலிங்கனம் செய்து கொண்டார்.
வடக்கு நாட்டினர் போர் தொடுத்து விடுவார்களோ எனும் அச்சத்திலேயே வாழ்ந்து வந்த மங்குனி நாட்டு மக்கள் தங்களது இளவரசனுக்கு வடக்கு நாட்டு மன்னரின் மகளே மனைவியாக வரப்போவதால் இனி போர் வராது எனும் நிலையை அறிந்ததாலும், இரண்டு நாடுகளும் ஒன்றாகி விட்டதாலும் மகிழ்ச்சியைக்கொண்டாடியதோடு தங்கள் நாட்டு மன்னர் சங்குனியை சாணக்யராகப்புகழ்ந்து வாழ்த்தினர்.
மந்திரிகளும், மகாராணியும் மன்னர் சங்குனி தனது சுற்றுலாவால் ஒரு பெரிய நாட்டையும், நாட்டின் இளவரசியையும் பெற முடியும் போது, ரத்தமின்றி, சத்தமின்றி ஒரு யுத்தம் செய்து பெரிய சாம்ராஜ்யத்தையே தனது நாட்டுடன் இணைத்திருக்கும் போது அவர் ஒரு கோமாளி அல்ல. மிகப்பெரிய புத்திசாலி என்பதையறிந்து அவரை வரவேற்று பணிந்து வணங்கினர்.
‘தான் மன்னரானது தனது தந்தையால்…., தற்போது மாறு வேடத்தில் வடக்கு நாடான மங்கள நாட்டையும் அதன் இளவரசியையும் சொந்தமாக்கியது தன் மகனின் யோசனையால்…., இதனால் தனக்கு பெருமையும், புகழும், மகிழ்ச்சியும் ஏற்பட்டாலும் எந்த அறிவும் பெற்றிருக்காத, திறமையேதுமில்லாத ஒரு கோமாளியைப்போன்ற தன்னால் தனித்து ஏதும் சாதிக்க முடியவில்லையே… தனது முயற்சியாலும், யோசனையாலும் எதுவும் நடக்கவில்லையே…’ எனும் கவலை மட்டும் மங்குனி மன்னர் சங்குனிக்கு வருத்தமாக எப்பொழுதும் இருந்து கொண்டே இருந்தது.