குமுதினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 35,212 
 
 

பகுதி-3 | பகுதி-4

மகளைச் சமாதானப் படுத்தி விட்டு படிக்கட்டில் இறங்கிச் செல்லும்போது கீழேயிருந்து குப்பென்று ஏதோ துர்நாற்றம் வீசியது. மது வாடையோடு சேர்ந்த உப்புக் காற்றோ அல்லது இரத்தவாடையாகவோ இருக்கலாம் என நினைத்தேன்.

கீழே ஏதோ தப்பு நடக்கிறது, ‘கவனமாயிரு’ என்று உள்மனம் என்னை எச்சரித்தது. காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் கால்கள் மேற்கொண்டு நகராமல் தன்னிச்சையாய்த் தயங்கின. படிக்கட்டில் நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தேன்.

கீழே நின்ற சிப்பாய் ‘என்டக்கோ’ என்று உள்ளே வரும்படி உரத்த குரலில் என்னை அழைத்தான். அவனைப் பார்த்ததும்; ‘இவனா’ என்று ஒரு நிமிடம் தயங்கினேன். எங்கேயோ அடிக்கடி பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது. ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாத ஒரு முகம் என்பதால் அவனை நான் ஞபகத்தில் வைத்திருக்க விரும்பவில்லை.

இவனை நயினாதீவு நாகபூசணி அம்பாள் தரிசனத்திற்குப் போகும்போதெல்லாம் அருகே இருந்த கடற்படை முகாமில் கண்டிருக்கிறேன். பொழுது போகாவிட்டால் கோயில் வாசலிலேயே இவனது கூட்டாளிகளோடு எப்பொழுதும் நிற்பான். நிற்பது மட்டுமல்ல, எப்பொழுதும் கோயிலுக்குத் தரிசனத்திற்காக வரும் பெண்கள் மீதே அவனது வெறித்த பார்வை பதிந்திருக்கும். வக்கிரப்பார்வை பார்த்தபடி, சீருடை இல்லாமல் சிகரட் புகைத்தபடி நிற்பதைக் கண்டிருக்கின்றேன்.

கீழே நின்ற அவனது சிவந்த முழியைப் பார்த்ததும், திட்டமிட்டுத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள், கீழே ஏதோ தப்பான காரியம் நடக்கிறது என்பதை உடனே ஊகித்துக் கொண்டேன். அவனிடம் ஏனோ துப்பாக்கி இருக்கவில்லை. ஏன் இவன் துப்பாக்கி ஏந்தவில்லை என்பதே என்னைச் சிந்திக்க வைத்தது.

‘நம மொகத்த?’ என்று தயக்கத்தோடு நின்ற என்னைப் பார்த்து எனது பெயரை அவன் கேட்டான். அவனது மொழி புரிந்தாலும், புரியாதது போல நான் மௌனமாக நின்றேன். இவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று உள்மனம் கணக்குப் போட்டது.

‘சிங்களம் தெரியமா?’ என்றான்.

‘இல்லை!’ என்று தலையசைத்தேன்.

‘பேரு என்ன?’

‘தில்லைநாதன்.’

‘எங்க போறது?’ என்றான்.

‘கோயிலுக்கு!’ என்றேன்.

‘கோயிலுக்கா, இங்கினய போயிடு’

என்று கத்திக் கொண்டு, திடீரென பின்னால் மறைத்து வைத்திருந்த சிறிய கோடரியை உயர்த்தி எனது தலையிலே ஓங்கி வெட்டினான். ஏதோ நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கையோடு நான் இருந்ததால் சட்டென்று கையை உயர்த்தித் தடுத்தேன். வெட்டுப் பலமாக தலையிலே விழவில்லை ஆனாலும் வெட்டுக் காயத்தில் இருந்து இரத்தம் நெற்றியில் வழிந்தது. இந்த நேரம் பார்த்து இன்னுமொருவன் அருகே வந்தான். அவனது கையிலே பாளைக் கத்தி பளபளத்தது. ‘அம்மட்ட…!’ சொல்லக்கூடாத வார்த்தையால் திட்டிக் கொண்டே சதக் கென்று வயிற்றிலே கத்தியைப் பாய்ச்சி உருவினான். தலையில் பட்ட வெட்டுக் காயம் காரணமாகத் தலையிலே கையை வைத்திருந்த என்னால் வயிற்றிலே குத்திய போது மற்றவனைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அம்மா என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தேன். அவன் எட்டிக் காலால் என்னை உதைத்தான். அப்படியே உருண்டு படகின் அடியில் சுருண்டு போய் விழுந்தேன். கண்கள் இருட்டி, மயக்கம் வருவது போல இருந்தது.

மேலே தனித்து விடப்பட்ட செல்வியின் ஞாபகம் உடனே வந்தது. அவளை எப்படியும் இந்தக் கொடியவர்களிடம் இருந்து காப்பாற்றியே ஆகவேண்டும் என்று மனம் துடித்தது. வயிற்றிலே குழந்தையோடு அவளால் இங்கிருந்து தப்பி ஓடமுடியுமா? அப்படி ஓடுவதானால் எங்கே ஓடுவது, சுற்றியிருக்கும் கடலில் தானே குதிக்க வேண்டும்? செல்வியால் முடியுமா? குதித்தால் மட்டும் விட்டு விடுவார்களா?

‘செல்வி தப்பி ஓடிவிடு, உன்னைக் கொல்லப் போறாங்கள்’ என்று உரத்துக்கத்த வாய்திறந்தேன். வார்த்தைகள் வெளியே வரவில்லை. கண்கள் செருகிக் கொண்டு வந்தன. மேலேயிருந்த பெண்களின் அழுகுரல் ஓலம் காதில் விழுந்தது. தடுப்பதற்கு ஆண்கள் இல்லை என்ற துணிவில் இவர்கள் தயக்கமின்றி எதுவும் செய்வார்கள். வேட்டை நாய்களிடம் சிக்கிய முயல்கள போல பரிதாபக் குரல்கள் மரண ஓலமாய்க் கேட்டது.

யாருடையதோ தெரியவில்லை, ஓலத்தைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட கையொன்று எனக்கருகே கீழே வந்து விழுந்து துடித்தது. அந்தத் துண்டிக்கப்பட்ட கையில் இருந்து சீறிய இரத்தம் என் முகத்தில் பட்டுத்

தெறித்தது. அவர்களால் வெட்டித் தாக்கப்பட்டு மேலேயிருந்து தள்ளிவிடப்பட்ட, யாரோ ஒருவரின் உடம்பு எனக்குமேலே வந்து விழுந்து என்னை மூச்சுத் திணற வைத்தது. கையில் ஏதோ பிசுபிசுத்தது, இரத்தமாய் இருக்கலாம். படகின் அடியில் விழுந்து கிடந்ததால் இருட்டுக்குள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இயலாமையின் உணர்வில் நினைவு தப்புவதும் திரும்பி வருவதுமாய் ஒரே மயக்கமாக இருந்தது.

நினைவு திரும்பும் போதெல்லாம், ‘மகளே.. செல்வி.. ஓடு.. ஓடு..!’ வார்த்தைகள் வராமல் வாய் மட்டும் திரும்பத் திரும்ப முணுமுணுப்பதை உணர்ந்தேன். இரத்தம் பெருகியதில் எதுவுமே செய்ய முடியாமல் அனுங்கிக் கொண்டே மயங்கிப்போனேன். அப்புறம் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண் விழித்தபோது ஆஸ்பத்திரியில் இயக்கமின்றிக் கிடந்தேன். தலையில் வயிற்றில் கையில் காலில் என்று கட்டுப் போடாத இடமேயில்லை. திரும்பிக்கூடப் படுக்கமுடியாமல், டாக்டர் தொட்ட இடமெல்லாம் வலி தாங்க முடியாமல் உயிர் போய் வந்தது.

‘செல்வி…!’ என்னையறியாமலே எனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கண் விழித்த போது, எதிரே சில மாணவர்கள் நின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இறுதியாண்டு மாணவர்கள்தான் அவர்கள். இதுவரை என்னைக் கவனமாகப் பார்த்துக் கொண்டது அவர்கள்தான். அத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வலியவந்து எனக்கு வேண்டிய சிகிட்சை எல்லாம் செய்தார்கள்.

‘ஒருவராவது கட்டாயம் உயிரோடு தப்பவேண்டும் என்பதற்காக நாங்கள் கடவுளை வேண்டிக் கொண்டோம், எங்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை, பலித்து விட்டது!’ என்றார்கள்.

‘நல்லது, என்னைக் காப்பாற்றுவதில் உங்களுக்கு அப்படி என்ன அக்கறை?’ மெல்ல முணுமுணுத்தேன்.

‘ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை, ஆனால் ஒருவராவது உயிரோடு இருந்தால்தானே படகில் என்ன நடந்தது என்ற உண்மையை உலகிற்குத் தெரியப்படுத்தலாம், அதற்காகத்தான் கஷ்டப்பட்டு நம்பிக்கையை

இழக்காமல் உங்களைக் காப்பாற்ற மணிக்கணக்கில் கடைசிவரை போராடினோம்!’ என்றார்கள்.

‘அப்படி என்றால் என் மகள் செல்வி…?’

நான்கு நாட்களாக நினைவில்லாமல் நான் வைத்திய சாலையில் மயங்கிக் கிடந்ததாகச் சொன்னார்கள். எனது மகள் செல்வியைப் பற்றி விசாரித்தேன்.

எனது மகள் செல்விக்கு என்ன நடந்தது என்பதை முதலில் சொல்ல மறுத்தவர்கள், நான் பிடிவாதமாக வேண்டிக் கொண்டதைப் பொறுக்க முடியாது மெல்ல மெல்ல நடந்ததைச் சொன்னார்கள்.

கேள்விப்பட்டதும், ஒரு கணம் என் இயக்கமே நின்று விட்டதை உணர்ந்தேன். எல்லாவற்றையும் இழந்துவிட்ட விரக்தி என்னைச் சூழ்ந்து கொண்டது. என்னை அறியாமலே மயங்கிவிட்டேன்.

‘என்னை மட்டும் ஏன் காப்பாற்றினீர்கள்.’ மீண்டும் கண் விழித்தபோது, விரக்தியோடு கேட்டேன்.

ஒன்றா இரண்டா எத்தனை உடல்கள். எண்ணிக் கணக்குச் சொல்லி ஊரைக்கூட்டி விடுவோமோ என்ற பயத்தில் துண்டு துண்டாக வெட்டிப் பேட்டிருந்தார்களாம்.

தூக்கிவர முடியவில்லை, அள்ளிக் கொண்டு வரத்தான் முடிந்தது என்றார்கள். எப்படி மனம் வந்து இவர்களால் இப்படிக் கொலை செய்ய முடிந்தது. இன்று பணத்திற்கு ஆசைப்பட்டு, எல்லாவற்றையும் மறந்து விட்டு சாத்தான் வேதம் ஓதுபவர்கள் எல்லாம் அன்று நடந்த இந்தக் காட்சியைப் பார்த்திருக்க வேண்டும்.

‘என்னுயிர்த் தங்கைகளின்

அழகான கனவுகள் பற்றி

இன்னமும் அவர்கள்

வாழவிரும்பிய வாழ்க்கை பற்றி

பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி

கணப்பொழுதில் கருவுடனேயே

சிதையில் எரிந்த என் நண்பனின்

மனைவி பற்றி…!’

எழுதுவதற்கே வார்த்தைகள் வரவில்லை என்று அதிர்ந்துபோன, என் மருமகனின் அருமை நண்பன் கவிஞன் சித்திவினாயகம் அந்தக் கொடூரக் காட்சியைச் சகிக்கமுடியாமல் அழுதழுது கவிதையாய் அந்த மலரில் வரைந்திருந்தான்.

பட்டப்பகலில் இந்தக் கொடூரக் கொலைகளை யார் செய்தார்கள் என்று நிரூபிக்கப் போதிய சாட்சியங்கள் இல்லாததால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்று, ஒரு ஜனநாயக நாட்டில் பெருந்தன்மையோடு அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்கள். நடந்ததை எல்லாம் வெளியே சொன்னால் அதை இனத்துவேஷம் என்று முத்திரையும் குத்தி விடுகின்றார்கள். அதனால் மௌனமாக வாய் மூடி இருக்க வேண்டி வந்தது. மொழியின் பெயரால், மதத்தின் பெயரால் எவ்வளவு காலத்திற்குத்தான் அரசியல் நடத்தப் போகிறார்களோ யாரறிவார்?

மனமுடைந்துபோன மருமகன் வேலைக்குத் திரும்பிச் செல்லவில்லை. உயிருக்குயிரான மனைவியை, முகங்காணாக் குழந்தையை இழந்த சோகத்தில் மருமகன் உடைந்து போய்விட்டான். பாதி உயிர் போனதுபோல, ஒவ்வொரு கணமும் அவனது இழப்பின் அந்த வலி அவன் முகத்தில் தெரிந்தது. அவனது வேதனையைப் புரிந்து கொள்ள யாரும் இருக்கவில்லை. புரிந்து கொண்டாலும் அதற்குப் பரிகாரம் இருக்கவில்லை. அந்த இழப்பை ஈடுசெய்ய யாரால் முடியும்? என்ன செய்ய முடியும், யாரை நோக முடியும்?

கேள்விகள் எல்லாவற்றுக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் துப்பாக்கிகளே பதில் சொல்லின. திறந்த வாய்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன.

வீட்டை விட்டு வெளியே போன மருமகன் திரும்பி வரவில்லை. முதலில் காணாமற் போய்விட்டான் என்று சொன்னார்கள். சோகத்தைச் சுமந்து

கொண்டு மணலாற்றுக் களமுனையில் போராளியாக நிற்பதாகவும் கேள்விப்பட்டேன். அதன்பின் மருமகனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, எந்தத் தொடர்பும் எங்களுடன் இல்லை. இன்று இருக்கிறானா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை.

மகளையும், பேரப்பிள்ளையையும் இழந்த துயரம் தாங்க முடியாமல் நோயாளியாக மாறிப்போன என் மனைவியும், தீராத நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து விட்டாள். அவளது தீராத துயரத்திற்கு மரணம் ஒன்றுதான் அவளுக்கு அருமருந்தாக இருந்தது.

சிட்டுக் குருவிகளாய், சுதந்திரப் பறவைகளாய் வானத்தில் சிறகடித்துத் திரிந்த இது போன்ற அழகிய குடும்பங்களைச் சிதைத்தது யார்? தானும் தன்பாடுமாய் இருந்த மருமகனைப் போராளியாக மாற்றியது யார்? ஆயுதம் ஏந்த வைத்தது யார்?

பேரினவாதிகள் இந்த நாட்டில் உள்ளவரை இப்படியான இனப்படுகொலைகள் காலாகாலமாய் தொடரத்தான் செய்யும். அது அவர்களின் அரசியல் தந்திரம் ஒருவகைச் சூதாட்டம், இது இவர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த வாழ்க்கைப் போராட்டம்! இந்தச் சுழிக்குள் அகப்பட்டுக் கொள்வதும் தப்பிக் கொள்வதும் அவரவரின் கெட்டித்தனத்தைப் பொறுத்தது. ஆனாலும் அப்பாவிகளே எப்பொழுதும் நிரந்தரமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

பேர்த்தியைக் கவனமாக வளர்த்து யாருடைய கையிலாவது ஒப்படைக்க வேண்டும். அதுவரை உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு நடைபிணமாகவேனும் வாழவேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதால் எப்படியோ வாழ்கிறோம்.

ஏன் என்ற கேள்வி எப்போதும் எழாவிட்டால், எல்லோரும் ஒற்றுமையாய் அநீதியைத் தட்டிக் கேட்காவிட்டால், இது போன்ற அர்த்தமில்லாத அநியாய மரணங்கள் பெரிய அளவில் எங்கள் மண்ணில் இன்னும் தொடரத்தான் செய்யும்!

அகிம்சை எங்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்ததுதான் ஆனாலும், ஒரு இனமே அழிந்து போவதைவிட, ஒரு சிலரின் அளப்பரிய தியாகங்கள், விலை மதிக்க முடியாததாய் கையெடுத்துக் கும்பிடவைப்பதாய் மீண்டும்

மாறிவிடலாம்! மொழியும், மதமும் ஒவ்வொருவருடைய தனிச் சுதந்திரம், அதை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும்!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *