குமுதினி





நெடுந்தீவு என்றதும் எல்லோருக்கும் மட்டக்குதிரைதான் ஞாபகம் வரும். இங்குள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் அதாவது 38 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகான தீவு என்பதால் தென்னிந்திய மன்னராட்சிக் காலத்தில் அடிக்கடி சேர, சோழ, பாண்டியர்களின் படைஎடுப்புக்கள் நடந்தபோது இந்தத் தீவுதான் முக்கிய போக்குவரத்து மையமாகவும், தளமாகவும் இருந்தது. முற்காலத்தில் இங்கு மேற்குக் கரையில் இருந்த பெரியதுறை என்ற இடத்தில் இருந்து இந்தியாவிற்குக் கடல் வழிப்பாதை இருந்தது. ஆனால் ஓல்லாந்தர் காலத்தில் அவர்களால் இது தடைசெய்யப்பட்டது.
வசதிகள் அதிகம் இல்லாததால், படகு மூலம் பயணித்துத்தான் வெளியுலகோடு தொடர்பு கொள்ள வேண்டியதாக இருந்தது. சுமார் 18. 3 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவில் இருந்து, யாழ்ப்பாண பட்டணத்திற்குச் செல்வதென்றால் புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவானுக்குப் படகில் சென்று அங்கிருந்து பண்ணைப் பாலம் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.
செல்விக்குக் கதை கேட்பதென்றால் நிறையவே ஆர்வம் இருந்தது. சரித்திரமா, அரசியலா, சினிமாவா, விளையாட்டா எல்லாத் துறையிலும் அறிவை வளர்த்திருந்தாள். அவளது சின்ன வயதில் இருந்தே அவளுக்கு ஆவணப் படுத்தப்படாத எங்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றேன். கேள்வி மேல் கேள்வி கேட்பாள், நானும் சலிக்காமல் பதில் சொல்வேன்.
நாகர் என்றால் யார்? நாகவழிபாட்டுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு ? எல்லாளன் எங்கேயிருந்து ஆட்சி செய்தான்? பொலநறுவைக்காலம் என்றால் என்ன? பொலநறுவையில் உள்ள இந்துக் கோயில்கள் ஏன் கவனிக்கப்படாமல் அழிந்த நிலையில் இருக்கின்றன? மன்னராட்சியில் இருந்து, போத்துக்கேயரின் ஆக்கிரமிப்பு தொடக்கம், சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் என்று இன்றுவரை அவள் எங்கள் சரித்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்தாள்.
இலங்கையை ஆண்ட தமிழ் அரசர்களிடம் இருந்து போத்துக்கேயரால் கைப்பற்றப்பட்ட தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் எல்லாம் எப்படி ஒல்லாந்தரின் கைகளுக்குச் சென்றடைந்தன, அதன்பின் ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயரிடம் எப்படி சென்றடைந்தன என்பதை எல்லாம் படித்தும் கேட்டும் அறிந்திருந்தாள்.
பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றான இந்துக்களின் தொண்டீஸ்வரம் எப்படி போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு கத்தோலிக்கரின் கைவசமாகிப் பின் பௌத்தர்களிடம் சென்றது என்பதை எல்லாம் சொல்லி இருக்கின்றேன். ஆங்கிலேயர் தங்களின் நிர்வாக வசதிக்காக இலங்கை முழுவதையும் ஒரே
நிர்வாகத்தின் கீழ் எதற்காகக் கொண்டுவந்தனர், 1948 ஆம் ஆண்டு; இலங்கை சுதந்திர மடைந்தபோது தமிழர்களின் நிர்வாகப் பகுதிகளைத் தமிழரிடம் பிரித்துக் கொடுக்காமல் ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களவரிடமே கொடுத்து விட்டுச் சென்றதனால் எப்படிச் சிறுபான்மை இனத்தவர் பாதிக்கப்பட்டனர், இதனால்தான் ஜனநாயக நாடு என்று சொன்னாலும், காலப்போக்கில் சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்கள் பெரும்பான்மை இனமான சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு எப்படி ஓரம் கட்டப்பட்டனர் என்பதை எல்லாம் செல்வி அறிந்து வைத்;திருந்தாள்.
1983ம் ஆண்டு நடைபெற்ற தமிழின ஒழிப்பில் பாதிப்படைந்து நொந்துபோயிருந்த தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத ஒரு சோகதினம். என்ன நடக்கப் போகிறது, மானிடர்கள் எதுவும் செய்யத் துணிந்தவர்கள் என்பது கூடத் தெரியாமல், ஆதவனின் இதமான அணைப்பில் கடலன்னை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று காலைதான் நானும் எனது மகள் செல்வியும் குமுதினி என்று பெயர் சூட்டப்பட்ட படகில் நெடுந்தீவில் உள்ள மாவிலித்துறையில் இருந்து காலை நேரம் நயினாதீவு நோக்கிப் பயணம் செய்தோம். வழமைபோல படகு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு ஆடியசைந்து சென்றது. உல்லாசப் படகுப் பயணம் போல செல்வி வெண்நுரையாய்ப் பிரிந்து செல்லும் கடலலையின் அழகை இரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென எங்கள் படகின் வேகம் குறைந்தது. ஏன் படகின் வேகம் குறைக்கப் பட்டது என்பதை அறியும் ஆவலோடு வெளியே எட்டிப் பார்த்தேன். கடற்படைக்குச் சொந்தமான கண்ணாடிப் படகு ஒன்று எங்கள் படகைச் சுற்றித் தண்ணீரில் வட்டமடித்தது. சாதாரணமாக கடற்படையின் கண்காணிப்புக்குள் உட்பட்ட கடலாகையால் வழமைபோல அவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று எல்லோரும் அசட்டையாக இருந்தார்கள். பொதுவாக அவர்கள் கையசைத்துக் காட்டிவிட்டுப் போய்விடுவார்கள். இன்று ஒருநாளும் இல்லாத அதிசயமாய் எங்கள் படகு நடுக்கடலில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது. என்ன நடந்திருக்கும் என்ற ஆவலில் வெளியே எட்டிப் பார்த்தேன்.
கண்ணாடிப் படகில் கடற்படைச் சிப்பாய்கள் சிலர் சிரித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனின் கையிலே மதுப்புட்டி ஒன்று
இருந்தது. சிலர் நீல நிறத்தில் நீண்ட காற்சட்டை அணிந்திருந்தார்கள். வேறு சிலர் நீலநிறத்தில் கட்டைக் காற்சட்டை அணிந்திருந்தார்கள். கடற்படையினர் சாதாரணமாக கடமையில் இல்லாத ஓய்வு நேரத்தில் அணிந்திருக்கும் ரீசாட்டை அவர்கள் எல்லோரும் அணிந்திருந்தார்கள். சுத்தமான சிங்கள மொழியில் பேசிக்கொண்டு ஒவ்வொருவராகப் படகிலே ஏறி உள்ளே வந்தார்கள்.
அந்தச் சிறுமிக்கு எட்டு வயதிருக்கும், ஒன்று இரண்டு மூன்று என்று உள்ளே வந்தவர்களை ஒவ்வொருவராக தமிழில் எண்ணிக் கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தேன், கண்ணாடிப் படகில் இருவர் தங்கி இருந்தார்கள். நான் மனசுக்குள் எண்ணி, ஆறும் இரண்டும் ‘எட்டு’ என்றேன். மொத்தம் எட்டுப்பேர் அந்தப் படகில் வந்திருந்தார்கள்.
மேலே ஏறிவந்த சிப்பாய் ஒருத்தன் எல்லோரையும் நோட்டம் விட்டான். பெண்கள் அதிகம் உட்கார்ந்திருந்த பக்கம்தான் அவனது பார்வை அடிக்கடி சென்று திரும்பியது. நல்ல நோக்கத்தோடு அவர்கள் உள்ளே வரவில்லை என்பதை அவனது கண்களே காட்டிக் கொடுத்தது.
‘பாப்பா எங்கே போறது?’ என்று அந்தச் சிப்பாய் கொச்சைத் தமிழில் அந்த சிறுமிக்கு முன்னால் மண்டியிட்டுக் கேட்டான். பதும வயதைத் தொடப்போகும் பூரிப்போடு அந்தச் சிறுமி இருந்தாள்.
சிறுமிக்கு அருகே உட்கார்ந்திருந்த சிறுமியின்தாய், சற்று நிறமாய் இளமையாய் எடுப்பான நாசியோடு அழகாக இருந்தாள். தாயின் அழகு மகளிடமும் குடியிருந்தது.
‘பாப்பா என்னோட வாறதா?’ என்று கையை நீட்டினான்.
சிறுமி மறுத்து தலை அசைத்தபடி தாயின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
சிறுமியின் தாயைத் தன்பக்கம் கவருவதற்கு என்ன செய்யலாம் என்று அவன் ஒரு கணம் யோசித்தான். அவன் குடித்திருந்ததால் சுவாசத்தில் கலந்த மது வாடை குப்பென்று வீசியது. இக்கட்டான அந்த சூழ்நிலையில், எப்படிச் சமாளிப்பது என்ற தாயின் தவிப்பு முகத்தில் தெரிந்தது.
‘பாப்பா என்னோட கீழே வாறது நான் சுவீட் தாறது’ என்று சொல்லிக் சிறுமியின் விருப்பமில்லாமலே கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு கீழ்த் தட்டிற்கு படிவழியே இறங்கிச் சென்றான் அந்தச் சிப்பாய்.
அவனது மறு கையில் ஏகே 47 ஒன்று சிறகொடிந்த பறவைபோல, சிறைப்பட்டிருந்தது.. சிறுமி வேறுவழியில்லாமல் தாயைப் பரிதாபமாகப் பார்த்தபடி அவனுடன் சென்றாள். அவன் தள்ளாடியதில் இருந்து குடித்திருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
கட்டாயப் படுத்திச் சிறுமியைக் கீழ்த் தட்டிற்குக் கொண்டு சென்றதால் சிறுமியின் தாயார் பதட்டமடைந்தாள். தாய்மையின் பரிதவிப்பை சுற்றியிருந்தவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. துப்பாக்கியும் கையுமாக இருக்கும் அவனிடம் யாரால் யாசிக்முடியம்?
‘போம்மா போய்க் கூட்டிக் கொண்டுவா’ தாயாரின் பதட்டத்தைப் பார்த்த யாரோ தாயாரிடம் மெதுவாகச் சொன்னார்கள்.
‘சின்னப்பிள்ளை எண்டும் பாக்கமாட்டாங்கள், இவங்கள் என்னவும் செய்வாங்கள். போவம்மா, கெதியாய்ப் போய்க் கூட்டிக் கொண்டுவா.’ அவர்கள் சொன்னதைக் கேட்டு, மகளைத் தேடிப் பதட்டத்தோடு கீழே சென்றாள் அந்த இளம் தாய்.
கீழே சென்றவள் நீண்ட நேரமாய் திரும்பி மேலே வரவில்லை. உபதேசம் செய்தவர்களின் வார்த்தைகளே அவளுக்குப் பொறியாப் போனது. ஏன் இன்னும் அந்தச் சிறுமியின் தாய் திரும்பி வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கீழேயிருந்து அந்தப் பெண்ணின் அவலச்சத்தம் கேட்டது. எல்லோரும் ஒரு கணம் அப்படியே உறைந்து போயிருந்தனர். கீழே சென்று பார்க்க அந்த நேரம் யாருக்கும் துணிவு வரவில்லை.
நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது போல, மனசு பதட்டத்தோடு எதையோ கணக்குப் போட்டது. படகில் ஏறி உள்ளே வந்த கடற்படையினரைப் பார்த்தபோதே யாருமே நல்லவர்கள் போலத் தோன்றவில்லை.
சிறுமியைக் கீழே இழுத்துச் சென்றது தாய்க்குப் பொறி வைக்கத்தான் என்பது சட்டென்று புரிந்தது. இதற்கிடையில் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும், அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராகக் கீழே வாருங்கள் என்று கொச்சைத் தமிழில் படிகளில் நின்றபடி ஒரு சிப்பாய் மேலே இருந்தவர்களை கீழே வரும்படி அழைத்தான்.
‘இருங்க, இருங்க நாங்க போய்க் கதைக்கிறோம்’ என்றபடி முதலில் படகோட்டிகள்தான் கீழே சென்றார்கள். அப்படி அவசரப்பட்டு கீழே சென்ற படகோட்டிகளை முழங்காலில் இருத்தி வைத்திருந்தார்கள்.
அவர்களைத் தொடர்ந்து ஆண்களையும் ஒவ்வொருவராகக் கீழே வரச்சொன்னார்கள். அவர்களுடைய பெயரையும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் அவர்கள் இப்போ எங்கே போகிறார்கள் என்பதையும் உரக்கக் கத்திச் சொல்லும்படி சிப்பாய்கள் வற்புறுத்தினார்கள்.
அவர்கள் கத்திச் சொன்னது எங்கள் செவிகளில் விழுந்தது. ஏன் அப்படிக் கத்திச் சொல்லச் சொல்கிறார்கள் என்பது முதலில் யாருக்கும் புரியவில்லை. இவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லச் சொல்ல அவர்கள் வேடிக்கையாகப் பெரிதாகச் சிரித்தார்கள்.
எனக்குள் ஏதோ பொறி தட்டியது. மேல் தட்டில் வைத்தே வழமைபோல அடையாள அட்டையைப் பார்த்திருக்கலாமே, ஏன் இன்று வழமைக்கு மாறாகக் கீழே வரச்சொல்கிறார்கள். நான் கவனமாகக் கீழேயிருந்து அவர்கள் உரக்கக் கத்திச் சொல்வதை கிரகித்தேன்.
அந்தச் சத்தத்திற்குள் ஏதோ வலி மிகுந்த இனம்புரியாத அவலம் ஒளிந்திருப்பதை அந்தக் கணத்தில் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அப்படி உரக்கச் சொன்ன ஒவ்வொருவரையும் தனித்தனியே படகின் பின் பகுதிக்கு அழைத்துச் செல்வதையும் அவதானித்தேன்.
அப்படிச் சென்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சென்றவர்கள் யாரும் திரும்பி வந்ததாகவும் தெரியவில்லை. முதலில் ஆண்கள் தான் ஒவ்வொருவராக முன் சென்றதால், எனது முறை வந்தபோது நான் மகளைப் பார்த்தேன். போகவேண்டாம் என்பதுபோல அவள்
எனது கையை இறுகப் பற்றியிருந்தாள். பற்றிய அவளது கைகள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன்.
துப்பாக்கியோடு மேலே நின்ற கடற்படைச் சிப்பாய் என்னை முறைத்துப் பார்த்து ‘யண்டக்கோ’ என்று தனது மொழியில் கத்தினான். எனக்கு அவனது மொழி தெரியும், என்னை அவமதிப்பது போல இருந்தாலும், குடிகாரனோடு முரண்பட விரும்பவில்லை. எனது தயக்கத்தை அவதானித்த அவன் ஏதேதோ சொல்லக்கூடாத வார்த்தைகளால் கடுமையாகத் தனது மொழியில் திட்டினான்.
வேட்கையில் கிடந்த சிங்கம் ஒன்று எழுந்து நின்று தலையை உசுப்பி உறுமுவது போல அந்தக் காட்சி இருந்தது. நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனது மகளுக்கு ஆபத்து வரலாம் என்பதால், பற்றியிருந்த என் மகளின் கையை மெல்ல விடுவிக்க முனைந்தேன். சஞ்சலப்பட்ட அவளோ மேலும் இறுகப் பற்றினாள்.
‘பயப்படாதே, இந்தக் கிழவனை என்ன செய்யப் போகிறார்கள்’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு, கைகளை விலக்கிக் கொண்டு மெல்ல எழுந்தேன்.
‘அப்பா, பிளீஸ் கீழே போகதீங்கப்பா’ செல்வி மெல்ல விம்மினாள். அவளது தவிப்பை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நிராயுதபாணியான என்னால் என்ன செய்ய முடியும்?
‘ஒண்டும் ஆகாதம்மா, அடையாள அட்டையைப் பாத்திட்டு விட்டு விடுவாங்கம்மா’ என்று சொல்லி அவளைச் சமாதானப் படுத்தி விட்டு நான் கீழே இறங்கிச் சென்றேன். விதி என்னைத் துரத்துவது எனக்கு அப்போது தெரியவில்லை.
– தொடரும்…