கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 6,648 
 
 

(1951ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. மண்டபம் நரகம்

மண்டபம் கியாம்புக்கு வரும்வரையில் நாம் ஒரு அந்நிய தேசத்துக்குப் போகிறோமென்ற எண்ணம் அவனுக்குச் சிறிதுமில்லை. மண்டபத்தில் நடந்த தடபுடல்களையெல் லாம் பார்த்தபிறகுதான் இலங்கைக்குப் போவதென்றால் இவ்வளவு தொல்லைகளா என்று நினைத்து அவன் அயர்ந்து போனான். 

இந்தோ-சிலோன் மெயில் மண்டபம் கியாம்பில் வந்து நின்றவுடன் ‘இலங்கைக்குப் போகிறவர்களெல்லாம் கீழே இறங்கலாம்!’ என்று டவாலி போட்டுக் கொண்டு ஒரு பியோன் கத்தினான். அதைக் கேட்டதும் சுந்தரம் தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்க ஆரம்பித்தான். 

‘நீங்கள் ஏன்ஸார் பெட்டியுடன் இறங்குகிறீர்கள்?’ என்று கேட்டார் பக்கத்திலிருந்த ஒரு சகாபிரயாணி. 

சுந்தரம்: அதோ ஒரு பியோன் இறங்க வேண்டுமென்று கத்துகிறானே?’ 

பிரயாணி:- முதலாவது இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளுக்கில்லை. மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் மாத்திரம்தான் பெட்டி படுக்கைகளுடன் இறங்கி மண்டபம் கியாம்புக்குப் போய் பலவகையான அவஸ்தைகளுக்கு உட்பட்டுவிட்டு பிறகு பிரயாணத்தைத் தொடங்கவேண்டும். 

சுந்தரம்:- நாம் என்ன செய்யவேண்டுமோ? 

பிரயாணி:- அதோ உட்கார்ந்திருக்கிறாரே, அந்த இலங்கை வைத்திய அதிகாரியிடம் போய் குவாரன்ண்டைன் பாஸைக்காட்டி ‘பாஸ்’ பண்ணிக்கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். கியாம்புக்கு நாம் போக வேண்டியதில்லை. 

சுந்தரம்:- அதேன் அப்படி? 

பிரயாணி:- இது இலங்கை ராஜாங்கத்தின் சட்டம். இந்தியாவிலிருந்து மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளின் மூலமாகத்தான் இலங்கைக்கு வியாதிகளெல்லாம் வருகிறதாம். இலங்கையில் எவ்வளவோ விசித்திரமான வியாதிகள் இருக்கின்றன. அதெல்லாம் ராஜாங்கத்தின் கண்களுக்குத் தெரியவில்லை. யாருக்காவது அம்மை போட்டினால் அது எப்படி யார் மூலமாக வந்தது என்று தீவிரமாக ஆராய்ந்து கடைசியில் இந்தியாவிலிருந்து வந்த ஒரு பிரயாணியின் மூலமாகத்தான் வந்ததென்று முடிவுகட்டி விடுவார்கள். இந்தியா முழுவதும் தொத்து நோயாளர்கள் நிறைந்த தேசத்தைப் போல இலங்கை ராஜாங்கம் கருதிக் காரியங்களைச் செய்வது இந்தியாவுக்கே வெட்கமாயில்லையா பாருங்களேன்! இந்தியாவுக்கு மட்டும் ரோஷமிருந்தால் முன்னொரு சமயம் ராஜாஜி சொல்லியதைப் போல மண்டபம் கியாம்ப் இந்திய மண்ணில் இருப்பதை இந்திய அரசாங்கம் ஒரு நிமிடமாவது அனுமதிக்குமா? 

சுந்தரம்:- இந்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டு மென்பது இருக்கட்டும். இலங்கை அரசாங்கம் மண்டபத்தில் என்ன செய்கிறதென்பதை முதலில் சொல்லுங்கள். 

பிரயாணி:- சொல்லுவதா? அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்! இரண்டு முறை மூன்றாவது வகுப்பில் வந்து அவஸ்தைப்பட்டு இனி எவ்வளவு கஷ்டமிருந்தாலும் மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்வதில்லை யென்று சங்கல்ப்பம் செய்து கொண்டு இரண்டாவது வகுப்பில் பிரயாணம் செய்கிறேன். மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் கீழே இறங்கி கியாம்புக்குப் போய் விடவேண்டும். மறுநாள் காலை அவர்களுடைய உடுபுடவைகளையெல்லாம் கொண்டுபோய் கியாஸில் போட்டு அவித்துக் கொடுப்பார்கள். பிரயாணிகள் உப்புத்தண்ணீர்க் குழாயில் குளித்து சர்க்கார் கொடுக்கும் இரண்டு கஜத் துண்டை உடுத்துக் கொண்டு வரிசையாக நிற்க வேண்டும். அவர்கள் கொஞ்சம் வரிசை தவறி நின்றுவிட்டால் கியாம்பிலிருக்கும் பியோன்மார்கள் போடும் சப்தத்தைப் பார்க்கவேண்டுமே! முப்பது நாற்பது ரூபாய் சம்பளம் பெற்று கைகட்டிச் சேவகம் செய்யும் பியோன்மார்கள் பெரிய முதலாளிமார்களையும் யாரென்று பாராமல், லட்சியம் செய்யாமல் ‘அடே, வாடா போடா, நில்லுடா!’ என்று ஏக வசனத்தில் பேசுவதைக் கேட்டால் பிரயாணிகளுக்கு ரத்தம் கொதிக்கும். இருந்தாலும் என்ன செய்ய? இலங்கைப் பிரயாணம் தடைப்பட்டு விடக்கூடாதே யென்பதற்காக இவ்வளவு அவமரியாதையையும் பிரயாணிகள் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கியாம்பில் பிரயாணிகளின் சாப்பாட்டுக்காக கை நிறையக் காசு வாங்கிக் கொள்ளுகிறார்கள். ஆனால், படைபடைக்கும் வெய்யிலில் நல்ல உச்சி வேளையில் பசி காதை அடைக்கும்பொழுது பிரயாணிகளுக்குக் கொடுக்கும் சாப்பாட்டின் கண்றாவியை வாயினால் வர்ணிக்க முடியாது. படைக்கும் சோறு விறைத்து குச்சி மாதிரி யிருக்கும். அதற்கு ஊற்றும் சாம்பாரையும் துவையலையும் பார்த்தாலே இல்லாத வியாதிகளெல்லாம் பிரயாணிகளிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த லட்சணத்தில்தான் பிரயாணிகளிடமுள்ள நோய்க் கிருமிகளை உப்புத் தண்ணீரில் குளிக்க வைத்து அம்மைப்பால் குத்தி உடுப்புகளையும் அவித்து ஆளைச் சுத்தப்படுத்தி அனுப்புகிறார்களாம். இவ்வளவும் முடிந்தபின் பிரயாணிகள் பாதுகாப்பு முகாம்களுக்கு கைதிகள் அனுப்பப்படுவது போல் மூன்றாவது வகுப்பு வண்டிகளில் ஏற்றி வண்டிகளின் கதவுகளை இருபுறமும் பூட்டி போலிஸ் காவலுடன் தனுஷ்கோடி துறைமுகத்துக்கு அனுப்புகிறார்கள். 

சுந்தரம்:- இதெல்லாம் இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளுக்கு இல்லையா? 

பிரயாணி:- கிடையாது. நாம் கீழே இறங்கிப்போய் இலங்கை டாக்டரிடம் கைகாட்டவேண்டும். பிறகு இந்திய இமிகிரேஷன் அதிகாரியிடம் ஒப்பம் வாங்கிக்கொண்டு வர வேண்டும். 

சுந்தரம்:- இலங்கைக்குப் போகிறவர்களை இலங்கை அரசாங்கம்தான் சோதிக்கிறதென்றால் இந்திய சர்க்காரும் ஏன் சோதிக்கிறார்கள்? 

பிரயாணி:- அது இன்னும் பெரிய கதை. கொஞ்ச காலத்துக்குமுன் இலங்கை அரசாங்கம் தனது சேவையிலிருந்த தினச்சம்பள இந்தியத் தொழிலாளரையெல்லாம் மிஸ் செய்து நாடு கடத்தியது. அப்படிச் செய்யக் கூடாதென்று இலங்கையுடன் ராஜிபேச பண்டித நேரு இலங்கைக்கு வந்தார். இரவு பகலாக இலங்கைத் தலைவர்களிடம் எவ்வளவோ வாதாடிப்பார்த்தார். ஆனால், இலங்கை அரசாங்கம் தனது பிடிவாதத்திலிருந்து சிறிதும் விட்டுக் கொடுப்பதாயில்லை. அதன்மீது சரீர உழைப்புத் தொழிலாளர் இலங்கைக்குப் புதிதாகப் போவதை உடனே தடை செய்யவேண்டுமென்று பண்டித நேரு இந்தியா திரும்பியதும் இந்திய அரசாங்கத்துக்கு யோசனை கூறினார். அவருடைய யோசனையை இந்திய அரசாங்கமும் ஒப்புக்கொண்டு சரீர உழைப்புத் தொழி லாளர் எவரும் இனி இலங்கைக்குப் போகக்கூடாதென்று தடை விதித்தது. அந்தத் தடை உத்தரவை அமுல் நடத்தவே இந்திய எமிகிரேஷன் அதிகாரியென்று ஒருவரை இந்திய அரசாங்கம் மண்டபம் கியாம்பில் நியமித்திருக்கிறது. சரீர உழைப்புத் தொழிலாளர் யாரும் புதிதாக இலங்கைக்குப் போகாதபடி பார்த்துக்கொள்ளுவது அவருடைய பொறுப்பு. இதைத் தள்ளுங்கள், அவர் என்னவோ பாவம், ஆட்களுடைய முகத்தையும் தஸ்தாவேஜுகளையும் பார்த்துவிட்டு ‘சரி போ’ என்று பாஸ்செய்து அனுப்புகிறார். ஆனால், அவருக்கும் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டுப் போகும் பேர்வழிகள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள்? 

சுந்தரம்:- ஆமாம், முதல் இரண்டாவது வகுப்புப் பிரயாணிகள் மூலம் இலங்கையில் நோய் பரவாதென்பது இலங்கை அரசாங்கத்தின் எண்ணமா? 

பிரயாணி:- ‘அதோ பாருங்களேன்! அந்த ஸீட்டிலிருக்கும் பிரயாணியின் உடுப்பைத் தொட்டாலே பிளேக் ஒட்டிக்கொள்ளும்போலிருக்கிறது. இருந்தாலும் அவர் இரண்டாவது வகுப்புப் பிரயாணி. அவரை யாரும் தடை செய்யமாட்டார்கள். மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளினால் மட்டும்தான் நோய் பரவுமென்று நினைத்து அவர்களை மறித்துவைத்து அனுப்புவது அர்த்தமற்றது. முட்டாள்தனமும் கூட. சுருக்கமாகச் சொல்லப் போனால் அது ஏழ்மைக்கு விதிக்கும் ஒரு தண்டனை!’ என்று ஒரு சிறிய பிரசங்கம் செய்தார் பக்கத்திலிருந்தவர். பிறகு ‘வாருங்கள் குவாரண்டைன் பர்மிட்டைக் காட்டி பாஸ் செய்து கொண்டு வருவோம்!’ என்று சொல்லி அவர் எழுந்தார். 

‘என்னிடம் பர்மிட் இல்லையே! பர்மிட் இல்லாமல் இலங்கைக்குப் போகமுடியாதா?’ என்று கவலையுடன் கேட்டான் சுந்தரம். அவன் முகத்தில் கவலை பிரதிபலித்தது. மண்டபம் முகாமை அடைந்தவுடனேயே இலங்கைக்கு வந்து சேர்ந்துவிட்டதையும் ஒரு பெரிய வேலை பார்த்து அமர்ந்து விட்டதையும் போல அவன் கனவு கண்டுகொண்டிருந்தான். குவாரன்டைன் பாஸ் இல்லையா என்று சகா பிரயாணி கேட்டது சுந்தரத்தின் கனவைக் கொடூரமாகச் சிதைத்துவிட்டது. 

சுந்தரம் இலங்கைக்கு வந்தசமயம் இலங்கையில் சேன நாயகா அரசாங்கம் அதிகாரத்திலில்லை. குடியேற்ற வெளி யேற்றச் சட்டமோ அல்லது அவ்வித சட்டமொன்றைக் கொண்டுவரும் உத்தேசமோ இலங்கை அரசாங்கத்துக்கு அப்பொழுது கிடையாது. இந்தியத்தொழிலாளரையும் பணம்படைத்த இந்திய முதலாளிகளையும் வெற்றிலை பாக்கு வைத்து வா, வா என்று அழைத்தகாலம் அது. மண்டபத்தில் அப்பொழுது இலங்கை அரசாங்க இமிகிரேஷன் அதிகாரியில்லை. இலங்கையில் குறைந்தது ஐந்து வருட காலம் வசித்ததை தஸ்தாவேஜு பூர்வமாக ருசுப்படுத்தினால்தான் இலங்கைக்குப் போகவிடுவேனென்று மண்டபத்தில் யாரும் அப்பொழுது மறிக்கவில்லை. இதற்கு மாறாக இந்தியர்கள் இலங்கைக்குவந்து காடுகளாகவும் மேடுகளாக வும் கிடந்த இடங்களை வளம்மிகுந்த தோட்டங்களாக்க அர சாங்கம் மட்டுமல்லாமல் பொதுஜனங்களும் ஊக்கமளித்த காலம் அது. 

இவ்விதம் இந்தியர்களை இலங்கைக்கு வருமாறு அந் தக் காலத்திலிருந்த பிரிட்டிஷ் ஆட்சியே அழைத்ததென்றும் அதற்கு தற்போதைய அரசாங்கம் ஜவாப்தாரியல்ல வென்றும் சிலர் விவாதிக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி அன்று இந்தியர்களை வருந்தியழைத்த பொழுது அதை இலங்கையர்கள் ஆட்சேபித்ததாகவோ அல்லது எதிர்த்த தாகவோ சரித்திரத்தில் எவ்வித ஆதாரங்களையும் காணோம். நிற்க, குவாரன்டைன்பாஸ் இல்லாவிட்டால் இலங்கைக்குப் போக முடியாதா என்று சுந்தரம் கவலையுடன் கேட்கவும் ‘இல்லையா? பாதகமில்லை. ஜாமீனுக்கு 25 ரூபாய் கட்டினால்போதும். ஆமாம், இலங்கையில் நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்? யார் வீட்டுக்குப் போகிறீர்கள்?’ என்று விசாரித்தார் சகாபிரயாணி. 

‘தேவாஸ் பிரிண்டிங் வொர்க்ஸ் முதலாளி சோமநாதர் வீட்டுக்குப்போகிறேன். கொழும்பில் எங்கோ வெள்ளவத்தை யிலிருக்கிறாராம்!’ என்றான் சுத்தரம். 

 சோமநாதர் வீட்டுக்கா! பிறகு ஏன் அய்யா கவலை? அவர் பெயரைச் சொன்னாலே டாக்டர் பாஸ் செய்து விடுவார்! வாருங்கள்!’ என்று சொல்லி அந்தப் பிரயாணி சுந்தரத்தை குவாரன்டைன் டாக்டரிடம் கைகாட்ட அழைத்துச்சென்றார். 

அந்தப் பிரயாணி சொல்லியதில் தவறில்லை. சோமநாதர் பெயரைச் சொன்னவுடன் சுந்தரத்துக்கு டாக்டரே ஒரு பாஸ் எழுதிக்கொடுத்து ‘அய்யாவை நான் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லுங்கள்!’ என்று அன்புடன் சேதியும் சொல்லியனுப்பினார். சுந்தரத்திடம் அம்மை குத்திக்கொண்ட சர்டிபிகேட் இல்லை. அதையும் பொருட்படுத்தாமல் கொழும்புக்குப் போனபிறகு அங்கு அம்மை குத்திக்கொள்ள சுந்தரம் அனுமதிக்கப்பட்டான். 

கப்பல் பிரயாணம் சுந்தரத்துக்குப் புதிது. ஆகையால் பாக்ஸ்ஜலந்தியைத் தாண்டும்பொழுது கொஞ்சம் கிறுகிறுப் பாயிருந்தது. மேல்தளத்தில் பேசாமல் படுத்துக் கொண்டான். தலைமன்னாரை அடைந்ததும் கப்பலிலிருந்து இறங்கி இரண்டாவது வகுப்பு வண்டியில் ஏறிக்கொண்டான். அந்நிய நாட்டில் கால் எடுத்து வைத்து விட்டோமென்ற உணர்ச்சி அவன் உள்ளத்தில் வீசிய பெரும் புயலை அமைதியடையச் செய்ததைப் போலிருந்தது. 

‘என்னைப்பிடித்த சனியன் தனுஷ்கோடிக் கரையுடன் தீர்ந்துவிடட்டும். துறவியைப்போல ஏகாங்கியாகப் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன். துர் அதிர்ஷ்டம் பிடித்த அந்த நாட்டையும் விதவைகளின் சாபத்திலே வெந்து மறைந்து கொண்டிருக்கும் அந்த பிராமண சமூகத்தையும் இனிக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. சுதேசம் திரும்பினால் குந்தளத்தின் திருமணத்துக்குப்போவது; இல்லாவிடில் மரண தேவதையை இலங்கையிலேயே வரவேற்பது’ என்று சுந்தரம் தனக்குள் சபதம் செய்துகொண்டபொழுது அருகில் ‘சோ! சோ!’ என்று மோதும் அலைகள் அவனை ஆமோதிப்பது போலிருந்தன. 

அன்று ரயிலில் ஏராளமான கூட்டம். இலங்கை ரயில் சம்பந்தப்பட்டவரையில் இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளின் நிலைமை மூன்றாம் வகுப்பைவிட மோசமானது. மண்டபத்தில் தாமதிக்காமலிருக்க வேண்டுமென்பதற்காக பெரும்பாலானவர்கள் இரண்டாவது வகுப்பு டிக்கட் எடுத்து விடுவது வழக்கம். இலங்கை ரயிலிலோ இரண்டாவது வகுப்புப்பெட்டி இரண்டு மூன்றுதானிருக்கும். முன்னதாகவே ‘பெர்த்’ (உறங்கும் வசதியுடைய வண்டி) பதிவு செய்து கொண்டவர்கள் வசதியாகப் பிரயாணம் செய்யலாம். மற்றவர்கள் புளிமூட்டை மாதிரி அடைந்து ஒருவர் சுவாசத்தை மற்றொருவர் சுவாசித்துக் கொண்டும் இரவு விழித்துக் கொண்டும் நேரத்தைக்கழிப்பதைத்தவிரவேறுவழியில்லை. இல ங்கை அரசாங்கத்துக்கு இந்த நிலைமை தெரிந்திருந்தும் இதைக் கவனிப்பதில்லை. தலைமன்னார் ரயிலில் பிரயாணம் செய்பவர்கள் பெரும்பாலும் இந்தியர்கள் தானே என்று நினைக்கிறது இந்தியர்களை மனிதப்பிறவிகளாக மதிக்காத இந்த இலங்கை ராஜாங்கம். 

கப்பலைவிட்டு முதலில் இறங்கியதால் சுந்தரத்துக்கு சௌகரியமான இடம் கிடைத்தது. பிறர் தொந்தரவில்லாமலிருக்க ஒரு மூலை ஸீட்டில் உட்கார்ந்து பக்கத்தில் பெட்டியையும் தூக்கி வைத்துக் கொண்டான். வண்டி புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னால் ஒரு இளம் பெண் வண்டியைத் திறந்து கொண்டு திடும்பிரவேசமாக உள்ளே நுழைந்து ‘ஐயா! பெட்டியைக் கீழே வைத்துவிட்டு எனக்குக் கொஞ்சம் இடம் கொடுப்பீர்களா?’ என்று கேட்டாள். அவள் ஏறிக்கொண்டால் இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டுதான் பிரயாணம் செய்யவேண்டும். மரியாதையுடன் இடம் கொடுக்காவிட்டால் பெட்டியைக் கீழே தூக்கி எறிந்துவிட்டு அப்பெண்ணுக்கு இடம் கொடுப்பான் ரயில்வே கார்ட்டு. இதை அறிவான் சுந்தரம். எனவே கௌரவமாக அவனே பெட்டியைத் தூக்கி ஸீட்டின் அடியில் போட்டான். அந்தப் பெண் நன்றியறிதலுடன் ‘தாங்யூ மிஸ்டர்!’ என்று மரியாதை செலுத்திவிட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவளுடைய பெட்டிகளை போர்ட்டர் வண்டிக்குள் தள்ளிவிட்டு கதவைச் சாத்தினான். வண்டியும் கிளம்பியது. 

‘இந்த இலங்கை ரயிலில் பர்த் பதிவு செய்யாவிட்டால் நரகாவஸ்தைதான்! பர்த் பதிவு செய்யும்படி அப்பாவுக்குத் தந்தி கொடுத்திருந்தேன். தந்தி கிடைக்கவில்லை போலிருக்கிறது!’ என்று கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஆயாசத்துடன் சொன்னாள் அப்பெண். 

சுந்தரம்:- உங்களுடைய சொந்த ஊர் இலங்கைதானா? 

பெண்:- ஆமாம். என் சொந்த ஊர் யாழ்ப்பாணம். ஆனால் நாங்கள் இருப்பது கொழும்பு. என் தகப்பனார் ஒரு பாரிஸ்டர். என் காலேஜ் விடுமுறைக்கு மூடியிருக்கிறார்கள். விடுமுறையின் பொழுது நான் இந்தியாவுக்கு வந்து பல ஊர்களையும் சுற்றிப் பார்த்துவிட்டுப் போவது வழக்கம். 

விடுமுறைக்கு வந்திருக்கிறேன் என்று அவள் சொன்னவுடன் மோஹன் சொல்லிய பெண் அவளாகத்தானிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது சுந்தரத்துக்கு. ‘இந்தியாவில் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள். இப்பொழுது?’ என்று கேட்டான் சந்தேக நிவர்த்திக்காக. 

பெண்:- சென்னைக்குப் போய் அங்கிருந்து மதுரை வந்து மதுரையில் ஒரு வாரம் தங்கிவிட்டு ஊருக்குத் திரும்புகிறேன்: 

இனி சுந்தரத்துக்கு சந்தேகமேயில்லை. மோஹன் சொல்லிய பெண்தான் அவள். ‘நீங்கள் யாரோ என்றல்லவா இதுவரையில் நினைத்துக்கொண்டிருந்தேன் சோமநாதர் சிநேகிதருடைய பெண்ணா நீங்கள்?’ என்றான் சுந்தரம். 

‘ஆமாம்! சோமநாதருடைய பங்களாவிற்கு அடுத்தது தான் எங்கள் பங்களா! நான் அவர் நண்பருடைய பெண்ணென்பது எப்படித் தெரியும் உங்களுக்கு?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அந்தப்பெண். 

அவளைப்பற்றி ஏற்கனவே மோஹன் பிரஸ்தாபித்ததை சுந்தரம் தெரிவித்தான். மோஹனுக்கும் தனக்குமுள்ள உறவையும் மோஹன் தகப்பனாரின் கடிதத்தோடு சோமநாதர் வீட்டுக்குப் போவதையும் சுந்தரம் சொன்னான். 

‘அடடா! நீங்கள்தான் மிஸ்டர் சுந்தரமா? உங்களைப் பற்றி மிஸ்டர் மோஹன் அடிக்கடி சொல்லுவார். உங்கள் புத்தகங்களை யெல்லால் நான் படித்திருக்கிறேன். அவைகளின் ஆயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவள். என் பெயர் பிரேமா! உங்களைச் சந்தித்ததற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன்!’ என்று சொல்லி சுந்தரத்தின் கைகளைப் பற்றி குலுக்கினாள் அப்பெண். 

அவளுடைய ஸ்பரிசம் சுந்தரத்துக்கு ரொம்ப லஜ்ஜை யாயிருந்தது.ஆனால் மேல்நாட்டு சம்பிரதாயப்படி கைகுலுக்க அவள் கையை நீட்டியபொழுது சுந்தரம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள விரும்பவில்லை. 

பிரேமா ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளை ஏற இறங்க கவனித்தான் சுந்தரம். மெல்லிய வாயில் சேலையை இலங்கை நாகரிகத்தை அனுசரித்து ஒரு பாதிமார்பு தெரியும்படி அலக்ஷியமாக அணிந்திருந்தாள். வலது கையில் இரண்டு தங்கவளையல்கள்; இடதுகையில் விலையுயர்ந்த ஒரு சிறு கடிகாரம்; கழுத்தில் ஒரே ஒரு மெல்லிய நீண்ட முத்துச்சங்கிலி; காதில் ஒரு தொங்கட்டானும் சிறிய வைரத்தோடும்; இவைதான் பிரேமா அணிந்திருந்த ஆபரணங்கள். கட்டுமஸ்தான யௌவன சரீரத்துக்கு அவளுடைய மிருதுவான மெல்லிய ரவிக்கை எடுப்பாகத் தோன்றியதென்றாலும் பணம் படைத்த இலங்கை பெண்களின் நாகரீகப்போக்கை முதல் முதலாகப் பார்க்கும் தென்னிந்தியர்களுக்கு ஓரளவு அதிர்ச்சியை உண்டு பண்ணவே செய்யும். இடையிடையே ஆங்கிலம் கலந்த மணிப்பிரவாளத்தில் பிரேமா பேசியது இலங்கையரின் ஆங்கில மோகத்தைப்பற்றி ஏற்கனவே மோஹன் சொல்லியவற்றை ஊர்ஜிதப்படுத்தியது. முன்பின் பரிச்சயமில்லாத ஒரு அழகிய யுவதியின் பக்கத்தில் உட்கார்ந்து பிரயாணம் செய்வது சுந்தரத்துக்கு முதலில் லஜ்ஜையாயிருந்தது. ஆனால் பிரேமாவின் நிஷ்களங்கமான முகமும் சௌஜன்யமான பேச்சும் அவனுடைய வெட்கத்துக்கு சீட்டுக்கொடுத்துவிட்டன. 

11. இலங்கையில் இரு சுந்தரிகள் 

காலை எட்டரைமணிக்கு வண்டி மருதானை ஷ்டேஷ னுக்கு வந்துசேர்ந்தது. பிரேமா இறங்குவதற்குத் தயாரானாள். ‘நீங்களும் என்னுடன் கொழும்பிற்கு வருவதாகச் சொன்னீர்களே!’ என்று கேட்டான் சுந்தரம். 

‘ஆமாம் மருதானையும் கொழும்பைச் சேர்ந்ததுதான். வெள்ளவத்தைக்குப் போக இங்கு இறங்குவதுதான் சௌகரியம். ஸ்டேஷனுக்கு என்னுடைய கார் வந்திருக்கும். வாருங்கள் உங்களை வீட்டிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு இறங்கினாள் பிரேமா. சுந்தரமும் அவளுடன் இறங்கினான். கூலியாள் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து காரில் வைத்தான். 

‘முதலில் கோட்டைக்கு ஒட்டிக் கொண்டு போ!” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு பிரேமா காரில் ஏறிக்கொண்டாள். மெஸ்மெரிஸத்தில் கட்டுண்டவன் மாதிரி சுந்தரமும் காரில் ஏறி அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். 

‘கோட்டைக்கு எதற்காகப் போகிறோம்?’ என்று கேட்டான் சிறிதுநேரம் கழித்து. 

‘குவாரன்டைன் டாக்டரிடம் கைகாட்ட. பதினைந்து தினங்களுக்கு சுவாமி தரிசனம் செய்வது போல அந்த டாக்டரை தரிசித்துவிட்டு வரவேண்டும். இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியா மண்ணை மிதித்துவிட்டு வருகிறவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் விதிக்கும் தண்டனைகளில் இதுவும் ஒன்று. பாரதபூமியை மிதித்தால் பாபம் தொலையு மென்பார்கள். அதை மிதித்த பாபத்துக்கு 15 நாள் இங்கு பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது! உங்களிடம் மண்டபம் டாக்டர் கொடுத்த குவாரன்டைன் சீட்டின் பின்பக்கத்தைப் பாருங்கள் அதில் எழுதியிருக்கும் விபரமாக!’ 

டாக்டரிடம் கைகாட்டிவிட்டு அவர்கள் வெள்ளவத்தைக்கு வந்துசேர்ந்தார்கள். பிரேமா முதலில் சோமநாதர் வீட்டுக்கு வந்து சுந்தரத்தை அறிமுகம் செய்துவிட்டு பிறகு தன் வீட்டுக்குப் போனாள். 

சோமநாதர் சுந்தரத்தை பிரியமாக வரவேற்றார். 

‘அப்பா சுந்தரம்! உனக்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதை தாராளமாகச் சொல்லு! நீ வேறு நான் வேறு என்று நினைக்காதே. உன்னை அழைத்துவந்த பிரேமாவின் தகப்பனார் பாரிஸ்டர் இளையதம்பி ஒரு பெரிய ளக்ஷாதிபதி. அவருக்குத்தெரியாத பெரிய மனிதர்கள் ஒருவர்கூட இல்லை. அவரிடம் சொல்லி உனக்கு ஒரு நல்ல வேலை தேடிக் கொடுக்கச் சொல்லுகிறேன். என் அச்சாபீஸிலேயே இருந்து விடுவதென்றாலும் சம்மதம் தான். பெரியண்ணா அனுப்பிய மனிதருக்கு நான் உதவி செய்யாமல் அலக்ஷியமாயிருந்து விட்டேனென்ற பெயர் மட்டும் எனக்கு ஏற்படக்கூடாது’ என்று சோமநாதர் உபசார வார்த்தைகள் சொல்லி வேலைக்காரனை அழைத்து சுந்தரத்துக்கு வேண்டிய சௌகரியங்களெல்லாம் செய்து கொடுக்க உத்தரவிட்டார். 

சோமநாதருக்கு வயது 55 இருக்கும். நீண்டகாலம் வரையில் குழந்தையில்லாமலிருந்து பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. லீலா என்ற அப்பெண்ணிற்கு இப் பொழுது 18 வயதாகிறது. பிரேமாவையும் லீலாவையும் சேர்த்து பார்ப்பவர்கள் இவர்கள் இரட்டைக் குழந்தைகளோ என்று சந்தேகிப்பார்கள். அங்க அவயவங்களில் அவ்வளவு ஒற்றுமை. யாழ்ப்பாண பெண்களைப் போலவே லீலாவும் உடையணிந்திருந்தது இந்த உருவ ஒற்றுமையைப் பரிபூரணமாக்கியிருந்தது. லீலாவை தேவாஸ் பிரிண்டிங் ஒர்க்ஸின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த ஒரு யாழ்ப்பாண வாலிபனுக்கே மணம் செய்துகொடுக்க சோமநாதர் தீர்மானித்திருந்தார். லீலாவின் உடையலங்காரம் சுந்தரத்துக்கு முதலில் அருவருப்பாயிருந்ததென்றாலும் மேற்புடவையேயில்லாமல் வெறும் ரவிக்கையுடன் நூற்றுக்கணக்கான சிங்களப் பெண்கள் நடுத்தெருவில் நடமாடுவதைப் பார்த்தபிறகு ‘இது தேசசம்பிரதாயம். ஊருடன் ஒத்து வாழாதவனுக்கு பயித்தியக்காரனென்ற பட்டம்தான் கிடைக்கும்!’ என்று நினைத்துக் கொண்டான். லீலாவின் பிரியமான பேச்சும், கல்வியறிவும் தமிழ் இலக்கிய ஞானமும் சுந்தரத்தின் மனதை விசேஷமாகக் கவர்ந்தன. லீலாவின் புத்தக சாலையை பார்த்த பிறகு தான் குந்தளத்தைப்போல புத்தகப் பூச்சிகள் உலகில் இன்னும் பலர் இருக்கிறார்களென்பதை அவன் தெரிந்துகொண்டான். 

அடுத்த இரண்டு வாரங்களுக்கு விசேஷ சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இரண்டு தினங்களுக்கு ஒருமுறை பிரேமா காருடன் வந்து சுந்தரத்தை குவாரன்டைன் ஆபீஸக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டு வருவாள். பாக்கி நேரத்தை சுந்தரம் லீலாவின் புத்தகசாலையிலேயே கழிப்பான். 

‘இந்தப் புத்தகங்களிடமே உங்களுக்கு இவ்வளவு ஆசையிருந்தால் பிரேமாவின் புத்தகசாலையைப் பார்த்தால் என்ன செய்வீர்களோ! சாப்பாடுகூட மறந்துபோய்விடும்!’ என்றாள் லீலா ஒரு நாள். 

சுந்தரம்:- ‘பிரேமாவிடம் தமிழ்ப்புத்தகங்கள் கூட இருக்கிறதா? இலங்கையர்கள் தமிழ்ப் படிப்பதையும் தமிழில் பேசுவதையும் அநாகரீகமென்று நினைப்பதாக அல்லவா நான் கேள்விப்பட்டேன்!’ 

லீலா:- நீங்கள் நினைப்பது தவறு. ஏழெட்டு வருடங்களுக்கு முன் அப்படிப் பொதுவாக எல்லோரும் நினைத்து வந்தார்கள். இப்பொழுது நிலைமை படிப்படியாக மாறிவருகிறது. தமிழ்-சிங்கள மறுமலர்ச்சி இயக்கங்கள் நாடெங்கும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. தேசீய பாஷைகளின் மதிப்பு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. சகல கல்வி ஸ்தாபனங்களிலும் தேசீய பாஷைகளின் மூலமாகவே கல்வி போதிக்கவேண்டுமென அரசாங்கத்தைப் பலர் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்குள் ஆங்கிலம் மதிப்பிழந்து கப்பலேறிவிடுவதை நாமே காணப்போகிறோம்! 

சுந்தரம்: அப்படியானால் இலங்கை மேனாட்டு நாகரீகத்துக்கும் பாஷைக்கும் அடிமைப் பட்டிருக்கவில்லை யென்கிறாயா? 

லீலா:- அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்சிபெற வேண்டுமென்னும் எண்ணம் உதயமாகிவிட்டதென்றுதான் சொல்லுகிறேன். உதாரணமாக பிரேமாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் நன்றாக ஆங்கிலம் படித்திருக்கிறாள். அதேசமயம் தமிழிலும் அவளுக்கு அளவுகடந்த ஆசை யிருக்கிறது. தமிழில் சமீபகாலத்துக்கிடையே வெளியான சகல புத்தகங்களையும் அவளிடம் பார்க்கலாம். 

‘லீலா! என்ன என் தலையை உருட்டுகிறாய்?’ என்று கேட்டுக்கொண்டே பிரேமா அங்கு வந்து சேர்ந்தாள். 

சுந்தரம்:- இல்லை! உங்களுடைய புத்தகசாலையைப்பற்றி புகழ்ந்து கொண்டிருந்தாள் லீலா. புத்தகங்களென்றால் எனக்கு உயிர். 

‘வாருங்கள் என் வீட்டுக்குப்போய்ப் பார்க்கலாம். லீலா உன்னைத் தனியே விட்டுப்போகவில்லை. அதோபார் உன்னைத் தேடிக் கொண்டு வருகிறார் உன் பிரியர் நடராஜன்!’ என்று கேலிச்சிரிப்புடன் வெளியே கையைக் காட்டினாள் பிரேமா. லீலாவின் கணவராகப் போகும் நடராஜன் வெளியே காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். சுந்தரம் பிரேமாவின் காரில் ஏறிக்கொண்டு அவள் வீட்டுக்குப் போனான். 

பிரேமா தனது புத்தகசாலையில் சாந்தாவின் புத்தகங்களைக் காட்டி ‘இலங்கையில் சாந்தாவின் பெயருக்கே ஒரு தனி மதிப்பு. கமலாலயத்துக்கு சாந்தாவின் புத்தகங்கள் வந்தால் ஒரே நாளில் அவ்வளவும் விற்பனையாகிவிடும். உங்கள் புத்தகமும் அப்படித்தான்!’ என்றாள். 

சுந்தரம்:- சென்னை கமலாலயத்தின் கிளை கொழும்பிலிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களை உங்களுக்குத் தெரியுமோ?” 

பிரேமா:- ஓ! நன்றாகத்தெரியும். அதன் சொந்தக்காரர் கேசவன் நான்கைந்து மாதங்களுக்கு முன்புகூட இலங்கைக்கு வந்திருந்தார். 

சுந்தரம் ஒரிரண்டு நிமிடம் மெளனமாக யோசித்து விட்டு ‘அப்படியானால் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். ஏன் என்று காரணம் கேட்கக்கூடாது!’ என்றான். 

பிரேமா:- நிச்சயம் செய்வேன் சொல்லுங்கள். 

சுந்தரம்:- எக்காரணத்தை முன்னிட்டும் கேசவனுக்கு நான் இலங்கை வந்திருப்பது தெரியக்கூடாது. இன்று முதல் என் பெயர் ரமணி. சுந்தரம் என்ற பெயரையே மறந்து விடுங்கள். லீலாவிடம் சொல்லி விடுகிறேன். சுந்தரம் என்ற துரதிஷ்டப் பெயர் இந்தியாவோடு மறைந்து விடட்டும். 

பிரேமா ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் ‘வாழ்க்கையில் நீங்கள் வெறுப்படைந்து இலங்கை வந்திருப்பதைப் போலிருக்கிறது பேசுவதைப் பார்த்தால்!’ என்றாள் பிறகு மெதுவாக. 

‘தயவு செய்து பழைய சம்பவங்களை எனக்கு ஞாபகப் படுத்தாதீர்கள். என் உறவினர்கள் நல்ல தனவந்தர்கள். செல்வமாய் வளர்ந்தேன். இன்று சகலரையும் துறந்து அஞ்ஞாத வாசம் செய்ய இலங்கைக்கு வந்திருக்கிறேன். பாக்கி வாழ் நாளை இங்கேயே கழித்து விட உத்தேசம். நான் இலங்கையிலிருப்பது என் பந்துக்களுக்குத் தெரியக்கூடாது. புதிய பெயருடனேயே புதிய வாழ்க்கை நடக்கட்டும்’ என்று துக்கம் தோய்ந்த தொனியில் சொன்னான் சுந்தரம். 

‘நீங்களாகத் தெரிவிக்காத குடும்ப விஷயங்களை நான் அறிந்துகொள்ள விரும்பவில்லை. உங்கள் நிலைமைக்கு உண்மையில் நான் அனுதாபப்படுகிறேன். உங்களை இலங்கையில் எவரும் நேரில் பார்த்ததில்லை யாகையால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இன்று முதல் நீங்கள் மிஸ்டர் ரமணியாகிவிடுவது சுலபம்தான். ஆனால் மிஸ்டர் சுந்தரத்தின் பழைய கீர்த்தியும் புகழும் உங்களுக்குப் பயன்படாமற் போய்விடுமே என்றுதான் பயப்படுகிறேன்’ என்றாள் பிரேமா. 

சுந்தரம்:- புகழும் கியாதியும் இனி எனக்கு வேண்டாம். அமைதியாக வாழ்க்கையை நடத்தவே இலங்கையை நாடி வந்தேன். புகழுக்காக அல்ல. 

அன்று மாலை பிரேமா லீலாவிடம் சொன்னாள் ‘ரமணியின் வாழ்க்கையில் ஏதோ பெரிய கஷ்டமும் துக்கமும் ஏற்பட்டிருக்கவேண்டும்’ என்று. 

‘கல்யாண விஷயமாகத்தானிருக்கும். தென்னிந்திய பிராமணக் குடும்பத்தின் சங்கதிதான் நமக்குத் தெரியுமே! பிள்ளையையும் பெண்ணையும் கேட்காமல் முடுச்சுப் போடுவதும் பிறகு தம்பதிகள் பொழுது விடிந்தால் மல்யுத்தம் செய்வதும் அங்கு சகஜம்தானே! மிஸ்டர் ரமணி ஏதாவது ஒரு பெண் மீது கவனம் வைத்திருப்பார். அவருடைய பெற்றோர்களுக்கு அது பிடித்திருக்காது. கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பியிருப்பார்! ஆரம்பத்திலேயே இப்படி ஏதாவது இருக்க வேண்டுமென்று நினைத்தேன்!’ என்று அலக்ஷியமாக பதில் சொன்னாள் லீலா. 

‘எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவரைப் பார்த்தால் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவராகத் தெரிகிற தேதவிர சம்பாதித்து வயிறு வளர்க்க வந்தவராய்த் தெரியவில்லை!’ என்றாள் பிரேமா. 

‘பிரேமா! எனக்குத் தெரிகிறது உன் மனம் எப்படி வேலை செய்கிறதென்று!’ என்று சொல்லி பிரேமாவின் கன்னத்தை மெதுவாகக் கிள்ளினாள் லீலா. 

‘சீச்சீ! ஏதாவது கண்டபடி உளராதே!’ என்று வெட்கத்துடன் அவள் கையைப்பிடித்து நெறித்துவிட்டு ஓடினாள் பிரேமா. 

ஒரு வாரம் கழித்து ஒருநாள் பிரேமா சொன்னாள். ‘இலங்கையில் உயர்ந்த தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றுகூட இல்லை. சிறந்த முறையில் ஆரம்பித்து நடத்தினால் செல்வாக்குடன் நடக்கும். தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்துக்கும் பக்க பலமாயிருக்கும். உங்களுடைய அழகான வசன நடை பத்திரிகையை வெகு விரைவில் முன்னுக்குக் கொண்டு வந்துவிடும்!’ என்று. 

ரமணி:- நல்ல யோசனைதான். ஆனால், ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதென்பது சுலபமாயிருக்கிறதா? குறைந்தது அரை லட்ச ரூபாயாவது மூலதனம் போட்டால்தான் நன்கு நடத்த முடியும். ஆரம்பித்து இரண்டு மூன்று மாதங்களில் நிறுத்துவதில் பயனில்லை. 

பிரேமா: பத்திரிகை நன்றாக நடக்குமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. பணப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டால் பாக்கிப் பொறுப்புகளை நீங்கள் ஏற்று நடத்துவீர்களா? 

ரமணி: சந்தோஷமாக! இதை ஒரு பெரிய உதவியாகவும் மதிப்பேன். 

பிரேமா:- உதவி ஒன்றுமில்லை! பாங்கியில் கிடக்கும் பணத்தை பத்திரிகையில் போடுகிறோம். அவ்வளவுதான். என் தகப்பனாரிடம் பேசி இதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன். 

பிரேமா வெறும் பேச்சோடு நின்றுவிடவில்லை. சுந்தரத்துக்கு தமிழ் இலக்கிய உலகிலுள்ள மதிப்பையும் ரமணி என்ற மாறு பெயருடன் அவன் இலங்கையில் வந்திருக்கும் காரணங்களையும் பிரேமா தன் தகப்பனாரிடம் நயமாக எடுத்துச் சொன்னாள். ரமணியை ஆசிரியராகக் கொண்டு ஒரு வார்ப்பதிப்பை ஆரம்பித்தால் நல்ல வருமானம் கிடைப்பதோடு, செல்வாக்கும் ஏற்படுமென்று தகப்பனாருக்கு நம்பிக்கையேற்படுமாறு விவாதித்தாள். பாரிஸ்டர் இளையதம்பிக்கு பிரேமா ஒரே பெண். அவள் விருப்பத்துக்கு மாறாக நடக்க ஒரு போதும் அவர் நினைப்பவரல்ல. ஆகையால், பிரேமாவின் நோக்கம் சுலபமாகக் கை கூடிவிட்டது. அடுத்த மாதத்திலிருந்தே தேவாஸ் பிரிண்டிங் ஒர்க்ஸில் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான் ரமணி. 

ரமணியும், பிரேமாவும் லீலாவும் சேர்ந்து யோசித்து ‘நவ லங்கா’ என்று பத்திரிகைக்குப் பெயர் சூட்டினார்கள். எண்பது பக்கத்தில் மூவர்ண அட்டையுடன் பத்திரிகையை வெளியாக்குவதென்றும் முதல் நாற்பது பக்கத்தில் ரமணியின் தொடர் நாவலும், இருபது பக்கங்களில் சிறுகதை, கட்டுரை, விமரிசனங்கள் முதலியவற்றையும் வெளியிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. விளம்பரங்களுக்கு 20 பக்கங்களை ஒதுக்கினார்கள். இளையதம்பியின் தயவு தேவைப்பட்ட பல வியாபாரிகள் விளம்பரம் கொடுத்து ஆதரிக்க முன்வந்தனர். 

கமலாலய முதலாளியுடன் நெருங்கிப் பழகிய ரமணிக்கு விளம்பரத்தின் மதிப்பு நன்றாகத் தெரியும். “நவ லங்கா” வெளிவர இருப்பதை இலங்கைப் பத்திரிகைகளி லெல்லாம் பிரபல்யமாக விளம்பரப்படுத்தினான். நான்கு வர்ண சுவரொட்டிகள் இலங்கையின் பல பாகங்களிலும் பாதசாரிகளின் கண்களில் பட்டுக் கொண்டேயிருந்தன. சினிமா தியேட்டர்களிலும் ‘இந்த விளம்பரமே எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது’. பிரேமாகூட நினைத்தாள், ‘பத்திரிகை ஜனிப்பதற்குமுன் விளம்பரத்துக்காக இப்படிப் பணத்தை வாரி இறைக்கிறானே’ என்று. 

ஆனால் விளம்பரங்கள் வெளியான இரண்டு மூன்று வாரங்களுக்குள் ரமணியின் வர்த்தகத் தந்திரம் அவளுக்குத் தெரிந்துவிட் டது. இந்த விளம்பர யுகத்தில் கம்பனும் காளிதாசனும் மறுஜென்ம மெடுத்து வந்தால்கூட ஓரளவு விளம்பரமில்லா விட்டால் உலகம் அவர்களை மகாகவிகளென்று அங்கீகரிக்காதென்று ரமணி அடிக்கடி சொல்லுவான். ‘தமிழ் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன்! இன்றும் நம்மிடையில் எவ்வளவு மகாகவிகள் இருக்கிறார்கள்? எவ்வளவு அற்புதமான கவிதாமாலைகளைப் புனைந்து தமிழ் மொழி வளம் பெறச் செய்கிறார்கள்? அவர்களை நீங்களும் நானும் பெரிய கவிஞர்களென்று சொல்லிவிட்டால் உலகம் ஒப்புக் கொண்டுவிடுமா? அவர்கள் செத்துச் சாம்பலானபிறகு ஏதோ ஓரிரண்டு பத்திரிகைள் அவர்களது பழைய கவிதைகளை ரஹித்துவிட்டுப் புகழுகின்றன. உடனே ஒரேயடியாக மற்றப் பத்திரிகைகளும் இந்திரன், சந்திரன் என்று வானளாவிப் புகழ்கின்றன. பிறகு மாண்ட கவிகளுக்கு ஞாபகச் சின்னமாக மண்டபம் கட்டுவோமா, ஸ்தூபி நிறுத்துவோமா என்று கூட்டம் போட்டுக் கூடி யோசிக்கிறார்கள். இந்த அறிவு அந்தக் கவிஞன் உயிருடனிருக்கும் பொழுதே ஏற்படுவதுதானே? வறுமையில் வயிற்றைச்சுருக்கி குடிக்கக் கூழுமில்லாமல் செத்து மடிகிறான் தற்காலக் கவிஞன். அவனைப் போற்றி ஆதரிக்க ஆளில்லை. இதை எதற்குச் சொல்லுகிறேனென்றால் இன்று கன்னாபின்னா என்று ஏதோ எழுதித் தள்ளும் அரைகுறைப் பேர்வழிகளைக் கூட விளம்பரம் என்ற மகாசக்தி மகாமேதையாக்கி விடுகிறது. விளம்பரம்தான் இன்றைய வர்த்தகத்தின் உயிர்நாடி. நம் பத்திரிகை வெளியாவதற்கு முன் இப்படிப் பணத்தை வாரி இறைக்கிறேனே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இதன் பலனை வெகு சீக்கிரமே நீங்கள் தெரிந்துகொள்ளுவீர்கள்!’ என் ரமணி விளம்பரச் செலவைப்பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ஒரு குட்டிப்பிரசங்கம் செய்வான். 

அவன் பேச்சு உண்மையில் வரட்டு வேதாந்தமாயில்லை. இதன் உண்மையை பிரேமா பிரத்யட்சமாகவே தெரிந்து கொண்டாள். 

நவலங்கா வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ஐயாயிரம் பிரதிகளுக்குமேல் ஆர்டர்கள் வந்து குவிந்தன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஏஜன்ஸிக்கு முன் பணத்துடன் அநேகர் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்கள். தீபாவளிப் பண்டிகையன்று ரமணியின் “குந்தளப் பிரேமா” தொடர் நாவலுடன் நவலங்காவின் முதல் இதழ் வெளியாயிற்று. மூவர்ண அட்டையும் உயர்ந்த கிளேஸ் காகிதத்தில் நேர்த்தியாக அச்சிடப்பட்டிருந்ததும் பொது ஜனங்களுக்கு ஒரு கவர்ச்சியைக் கொடுத்தன. 

நான்கைந்து மலர்கள் வெளியானதும் நவலங்காவின் புகழ் மளமளவென்று ஓங்கியது. ஒவ்வொரு தமிழன் கையிலும் ஒவ்வொரு பிரதி காணப்பட்டது. வாழ்க்கையின் இன்றியமையாத சாதனங்களிலே நவலங்காவும் ஒன்றெனக் கருதத் தலைப்பட்டனர் தமிழர்கள். தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தினர் அந்த இயக்கத்துக்கு முதல் ஸ்தானம் கொடுத்து எழுதிய நவலங்காவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடினர். தமிழ்ப் படிப்பதைக் கேவல மென்று நினைத்த கலசம் அணிந்த துரைமார்கள்கூட பொது ஸ்தலங்களில் மற்றவர்களுடைய சம்பாஷணைகளிலே கலந்து கொள்ள இயலுவதற்காக நவலங்காவைப் படிக்க ஆரம்பித்தார்கள். குந்தளப்பிரேமா தமிழ் நவீனங்களிலே ஒரு பெரிய சூறாவளியைக் கிளப்பியது. உண்மையான வாழ்க்கையைத் தழுவி எழுதிய உருக்கமான சில கட்டங்கள் வாசகர்களைக் கண்ணீர் வடிக்கச் செய்தன. ஆனால் அந்தக் கதை நிஜக்கதை யென்பதையோ அல்லது அதை எழுதியவரின் இருதயத் துடிப்பையோ யார் கண்டார்கள்? 

ஒருநாள் லீலா சொன்னாள், ‘பிரேமா! குந்தளப் பிரேமாவின் போக்கு தெரிகிறதில்லையா? குந்தளத்தினிடமிருந்து கோபாலைப் பிரித்துக் கொண்டு போய் விட்டாள் அவன் தாயார்! அந்த கோபாலன்தான் பிரேமாவைத் தேடிக்கொண்டு பிறகு வரப்போகிறான் இலங்கைக்கு!’ என்றாள். 

பிரேமா:- ‘குந்தளப்பிரேமா ரமணியின் சுய சரித்திரமாயிருக்குமென்று நினைக்கிறாயா?’

லீலா:- ‘சந்தேகமென்ன? அப்படித்தான் தோன்றுகிறது கதையின் போக்கைப் பார்த்தால்! சுந்தரம் என்ற பெயருக்குப் பதில் கோபால் என்று போட்டிருக்கிறார். குந்தளத்தின் கதி என்ன ஆகியதோ. அது தெரிந்தால் ரமணி இலங்கைக்கு வந்த காரணமும் தெரிந்துவிடும்!’

லீலா:- இன்னும் என்ன தெரியவேண்டியதிருக்கிறது?

பிரேமா:- இப்பொழுது பிரமாதமாக என்ன தெரிந்துவிட்டதென்கிறாய்? 

லீலா:- சொல்லட்டுமா? அந்தக் குந்தளம் ஒன்றில் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்திருக்கவேண்டும். அல்லது துணிந்து இன்னொருவனைக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 

பிரேமா:- நீ நினைப்பது தவறு. இன்னொருவனைக் கல்யாணம் செய்து கொள்வதாயின் அவள் கோபாலையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே. 

லீலா:- அதுதான் இல்லை. கோபால் குந்தளத்தைக் காதலிக்கிறானே தவிர குந்தளம் கோபாலைக் காதலிப்பதாகக் கதையில் இதுவரை நினைக்க இடமில்லாமலிருக்கிறது. தவிர குந்தளத்தை கோபால் கல்யாணம் செய்துகொள்ள முயற்சிப்பானோ என்று நினைத்துத்தானே அவனை அவன் தாயார் பிரித்துக் கொண்டு போகிறாள். பிறகு கோபாலை குந்தளம் நாட இடம் ஏது? 

பிரேமா:- ஆமாம் லீலா! குந்தளம் என்ன கதியானா லென்ன? குந்தளம் கோபாலுக்கு இல்லையென்பதும் இதைக் கோபால் நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டானென்பதும் தெளிவாகிவிட்டது. இனி அவன் இலங்கைக்கு வந்த காரணத்தைப் பற்றி நாம் மூளையைக் குழப்ப வேண்டியதில்லை. 

லீலா:- அடி அசடே! இனிமேல்தான் இருக்கிறது கோபால் வாழ்க்கையிலே முக்கியமான கட்டங்கள்! அவன் எதற்காக இலங்கைக்கு வந்திருக்கிறான் தெரியுமா? 

பிரேமா:- எதற்காக? 

லீலா:- இங்கு ஒரு பிரேமாவைத் தேடிக்கொண்டு..

பிரேமா:- உனக்கு எப்பொழுதும் கேலி செய்யத்தான் தெரியும். 

லீலா:- ஏன், நான் சொல்வது வேப்பங்காய் மாதிரி இருக்கிறதா? எங்கே, எங்கே இப்படி என் முகத்தைப்பார்த்துக் கொஞ்சம் சொல்லேன் பார்க்கலாம்! 

பிரேமா லஜ்ஜையுடன் முகத்தை மூடிக்கொண்டாள். சங்கடமான நிலைமையிலிருந்து அவளை விடுவிக்க தபால் சேவகன் அந்தச் சமயம் பார்த்து வந்து சேர்ந்தான். 

லீலா:- நான் போகிறேனம்மா! நேருக்கு நேராகப் பேச முடியாத விஷயங்களைப் பற்றி ரமணிதான் கடிதமூலம் எழுதியிருக்கிறானோ என்னவோ! எனக்கேன் உங்கள்..! 

பிரேமா:- போதும், போதும்! அதோ பார்! உன் ஆசைக் காதலர், வருகிறார்! போ, போ, சீக்கிரம்போ! 

பிரேமா சொல்லியது பொய்யல்ல. உண்மையாகவே லீலாவை அழைத்துப்போக நடராஜன் அங்கு வந்தான். லீலா போனபிறகு பிரேமாவின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது. லீலா சொல்லியது உண்மையாக இருக்குமா? ரமணிக்கு நிஜமாகவே என் மீது பாசம் ஏற்படுவது சாத்தியமா? சாத்தியமென்றால் அவர் மரக்கட்டை போல உணர்ச்சியற்றவராக நடக்கக் காரணமென்ன? எவ்வளவு சந்தர்ப்பங்களில் அவருடன் நான் மிக மிக நெருங்கிப் பழக சந்தர்ப்ப மேற்பட்டிருக்கிறது? அப்பொழுதெல்லாம் அவர் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு என்னிட மிருந்து விடுதலை பெற பயந்து ஓடுபவரைப் போலச் செல்லு வானேன்? ஒரு சமயம் நான் பணக்காரியாயிற்றே என்று அஞ்சுகிறாரா? தன்னையும் விட செல்வத்தில் மிஞ்சிய குடும்பப் பெண்ணிடம் கொள்ளும் காதல் முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை மாதிரி முடிந்து விடுமோ என்று நினைக்கிறாரா? ஏன் இப்படி இருக்கக்கூடாது? அவர் கதையில் வரும் குந்தளம் ஒரு பெரிய சீமானின் பெண் தானே? அந்தக் காரணத்தினாலேயே குந்தளத்தை மணக்க முடியாமற் போய் மறுபடியும் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்து ஏமாற்றத்துக்கு ஆளாகக்கூடாதென்று நினைக்கக் கூடாதா? அப்படியிருக்கலாம். என்னிடம் அவருக்குச் சிறிது கூடப் பிரியமில்லை யென்றால் அவருடைய நாவலின் பெயரில் என் பெயரையும் ஏன் சேர்க்கவேண்டும்? குந்தளப்பிரேமா என்று வைப்பதற்குப் பதிலாக வேறு பெயர் வைத்திருக்கலாமே! அழகு அழகாக இன்னும் எவ்வளவு பெயர்களில்லை? 

இப்படி சிந்தனைசெய்யவாரம்பித்தாள் பிரேமா. அன்றிரவு முழுவதும் அவளுக்கு உறக்கமேயில்லை. சற்றுக் கண்ணயர்ந்தாலும் கனவிலும் அவள் மனம் இதே சர்ச்சை யில் ஈடுபட்டிருந்தது. குந்தளப்பிரேமா நாவலுக்கு அந்தப் பெயர் வைத்ததின் காரணத்தை ரமணியின் வாயிலிருந்தே கேட்டுத் தெரிந்து கொண்டாலொழிய நெஞ்சு வெடித்து விடும் போலாகி விட்டது பிரேமாவுக்கு. 

‘ஆமாம்! உங்கள் தொடர்கதைக்கு குந்தளப்பிரேமா என்று ஏன் தலைப்புக் கொடுத்தீர்கள்?’ என்று ரமணியையே நேரில் கேட்டுவிட்டாள் ஒருநாள். 

ரமணி:- ‘ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?’

பிரேமா:- தயவுசெய்து என்னைப் பன்மையில் அழைப்பதை விட்டுவிடுங்கள். உங்களைவிட நான் வயதில் ஏழெட்டு வயது சிறியவள்! 

ரமணி சிறிது தயங்கினான். இதேபோல அடிக்கடி குந்தளம் அவனிடம் சொல்லியதும் விடாப்பிடியாக கடைசி வரையில் அவளைப் பன்மையிலேயே அழைத்து மனம் நோகச் செய்ததும், ரமணியின் ஞாபகத்துக்கு வந்தன. அவனை அறியாமலே அவனுடைய கண்களை கண்ணீர் கவிழ்ந்து கொண்டது அதைக் கண்டு பிரேமா திடுக்கிட்டாள். 

பிரேமா:- ஒன்றுமில்லையே உடம்புக்கு? ஏன் இப்படி திடீரென்று கண் கலங்குகிறது? நான் சொல்லியதில் வருத்தமா மிஸ்டர் ரமணி? 

ரமணி:- ஒன்றுமில்லை பிரேமா! கண்ணில் ஒரு தூசி விழுந்துவிட்டது. 

‘எங்கே கண்ணைக் காட்டுங்கள்!’ என்று சொல்லிக் கொண்டே மிருதுவான ஒரு கரத்தை அவன் முகவாய் கட்டையில் கொடுத்து மற்றொரு கையினால் அவன் தலையை உயர்த்தி நீர் நிறைந்து நின்ற கண்களின் அருகில் உதடுகளை வத்து ஊதினாள். இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே தற்செயலாக லீலாவும் நடராஜனும் அறையில் நுழைந்தனர். 

12. ஞானோதயம் 

ரமணியை இலங்கையில் விட்டு குந்தளத்தைச் சிறிது கவனிப்போம். சுந்தரம் திடீரென்று திருச்சிக்கு வந்து திடீரென்று சொல்லிக் கொள்ளாமலே போனவனென்றாலும் அவன் தங்கியிருந்த மூன்று மாதங்கள் குந்தளத்தினிடம் எத்தனையோ மாறுதல்களைச் செய்திருந்தன. வாழ்க்கையிலே ஒரு ரஸனையை அவள் கண்டாள். சோபையற்றிருந்த வரண்ட நிலவுக்கு எப்படியோ திடீரென்று ஒரு மதிப்பு ஏற்பட்டது. வெறும் வர்ணப் புஷ்பங்களாயிருந்த மலர்ந்த ரோஜாவிலும் மல்லிகையிலும் மணமிருப்பது அப்பொழுது தான் அவளுக்குத் தெரிந்தது. குந்தளத்துக்கு சுந்தரம் மறைந்ததும் வாழ்க்கை ரஸனையை இழந்துவிட்டது போலிருந்தது. மல்லிகையும் ரோஜாவும் மணமற்ற காட்டுப் பூக்களாயின. நிலவில் ஒரு சேபையில்லை. ஏன் சுந்தரம் வந்தான் என்றுகூடத் தோன்றியது குந்தளத்துக்கு. 

தற்காலிகமாகத் தோன்றிவிட்டுப் போனவனைப் பற்றி ஏன் இவ்வளவு சிந்திக்கவேண்டுமென்று நினைத்தாள் சில சமயங்களில். சாந்தாவை ஜபித்துக் கொண்டிருப்பவன் எப்படிப் போனாலென் என்று கூடத் தோன்றும் வேறு சில சமயங்களில். அவனுடைய கடைசிக் கடிதம் சாந்தாவைப் பற்றிய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. 

குந்தளத்துக்கு மணமான பிறகுதான் நான் மணம் செய்துகொள்வேனென்று முனிசாமியிடம் சுந்தரம் சொல்வானேன்? என்னிடம் கொண்ட அனுதாபத்துக்கும் சாந்தாவிடம் கொண்ட காதலுக்கும் என்ன சம்பந்தம்? சாந்தா ஒரு விதவையென்று வஸுவின் கணவர் ஏதாவது சொல்லியிருப்பாரோ? எனக்கு முதலில் மறுமணம் நடந்து விட்டால் பிறகு தன்து மணத்தை எவரும் ஆட்சேபிக்கமாட்டார்களென்று நினைக்கிறாரா? என்னிடம் காட்டிய அனுதாபம் வெறும் சுயநலமா? அன்றொருநாள் கிராமக் கோவிலிலே இறைவன் சந்நிதானத்தில் நின்று ‘உங்கள் நெஞ்சிலிருக்கிறாள் சாந்தா!’ என்று நான் சொல்லியபொழுது ‘நீ தவறாக நினைக்கிறாய் குந்தளம்!’ என்றாரே அதன் பொருள் என்ன? சாந்தாவிடம் அவர் பித்துக்கொண்டிராவிட்டால் எனக்கு எழுதிய கடைசிக் கடிதத்திலாவது அதைத் தெளிவாகச் சொல்லியிருக்கலாமல்லவா? 

இப்படி மனம் சென்றவாறு யோசித்தாள். ஆனால் இந்த யோசனைகளுக்கு அவளால் ஒரு முடிவுகாண இயலவில்லை. அய்யரும் அம்புஜமும் சுந்தரத்தைக் கண்டு பிடிக்க சாத்தியமான முயற்சிகளையெல்லாம் செய்து பார்த்தார்கள். இந்த ஏக்கத்தில் அம்புஜத்தின் வியாதி மேலும் சிக்கலடைந்தது. 

நான்கு மாதங்களுக்குப்பின் ஒருநாள் அம்புஜத்தினிடம் அய்யர் சொன்னார் ‘சுந்தரம் சௌக்கியமா யிருக்கிறான். கவலைப்படக் காரணமில்லை இனிமேல்!’ என்று. 

‘எப்படித் தெரிகிறது?’ 

‘இதோ அந்தப் பட்டணத்துப் பெண் சாந்தா எழுதிய புத்தகத்திலிருந்து தெரிகிறது. வஸூ அனுப்பியிருக்கிறாள் குந்தளத்துக்கு இதை. காலை தபாலில் வந்தது. அட்டை காகிதமெல்லாம் அழகாயிருக்கிறதே படித்துப் பார்ப்போமென்று படிக்க ஆரம்பித்தேன். கதை முழுக்க முழுக்க சுந்தரத்தைப்பற்றித்தான். அவன் பிறந்து வளர்ந்து பட்டணத்துக்குப் போய் படித்தது முதல் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேனென்று சொல்லிவிட்டு ஓடிப்போய் யாருக்கும் சொல்லாமல் சாந்தாவைக் கல்யாணம் செய்துகொண்டது வரையில் எல்லாம் விபரமாக எழுதியிருக்கு இந்தப் புத்தகத்தில். அவன் சொல்லி சாந்தா எழுதியிருக்கவேண்டும் இந்தப் புத்தகத்தை. ஒவ்வொன்றும் அப்படி அப்படியே நடந்த மாதிரி எழுதியிருக்கு!’ என்றார் அய்யர். 

‘வெறும் கதையோ என்னவோ! சுந்தரம் சொல்லித் தான் எழுதியிருப்பாளென்று எப்படி நிச்சயமாகத் தெரிகிறது!’ என்று கேட்டாள் அம்புஜம். 

‘சந்தேகமேயில்லை. கல்யாணத்தைப்பற்றி சுந்தரத்துடன் நான் பேசிய பொழுது குந்தளத்துக்கு முதலில் கல்யாணம் பண்ணி வையுங்கள். பிறகு என் கல்யாணத்தைப் பற்றி பேசலாம் என்று சுந்தரம் விதண்டாவாதம் செய்தா னென்று சொன்னேனில்லையா? அதுகூட அப்படியே எழுதியிருக்கு இந்தப் புத்தகத்தில். சுந்தரம் சொல்லாவிட்டால் எனக்கும் அவனுக்கும் அன்று நடந்த வாக்குவாதம் இந்தப் பெண் சாந்தாவுக்கு எப்படித் தெரியும்? குந்தளத்துக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று ஏன் அத்தனை அக்கறையோடு அவன் சண்டை போட்டான் தெரியுமில்லையா? இப்படித்தான் அவன் சங்கதி ஒவ்வொன்றாக வெளி வருகிறது. சாந்தா என்ற பெண் பால்யத்திலேயே கல்யாணம் நடந்து புருஷனை இழந்தவளாம். அவளுக்கும் சுந்தரத்துக்கும் பட்டணத்திலிருக்கும் பொழுதே சினேகமாம். ஒரு விதவைப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளணும் என்றால் நாம் சம்மதிக்க மாட்டோமென்று தெரியும். அதற்காகவே முதலில் குந்தளத்துக்குக் கல்யாணம் செய்து வைத்தால் பிறகு அவன் சாந்தாவைக் கல்யாணம் செய்துகொள்ள யாரும் தடை சொல்ல மாட்டார்களென்று நினைத்திருக்கிறான். என்ன துணிச்சல் பார்த்தாயா அம்புஜம் உன் பிள்ளைக்கு? கல்யாணம் செய்து கொண்டது மில்லாமல் புத்தகமும் எழுதச் சொல்லியிருக்கிறான் பார்?’ என்றார் அய்யர். 

‘அட பாவிப்பயலே! போயும் போயும் ஒரு விதவைப் பெண்ணையா கட்டிக்கணும்? அப்படியே ஜாதி மதத்தையெல்லாம் விட்டு ஊரெல்லாம் சிரிக்கும்படி விதியிருந்தால் அந்தப் பெண்ணை ஏன் கட்டிக்கணும்? மலை மாதிரி வளர்த்து கண்ணும் கண்ணீருமாய் நிறுத்தி வைத்திருக்கிறோம் நம் குழந்தை குந்தளத்தை! அவளைக் கல்யாணம் செய்துகொண்டு அவளை சுகப்படுதினாலாவது மனம் கொஞ்சம் ஆறுதலாயிருக்குமே’ என்றாள் அம்புஜம். 

‘அம்புஜம்! குந்தளத்தின் பேச்சை எடுக்காதே. உன் பிள்ளை குந்தளத்தை கல்யாணம் செய்துகொண்டிருந்தால் நீ சும்மா இருந்திருப்பாயா? என் காலடியிலேயே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனை விட்டிருப்பாய். இப்பொழுது ஒப்புக்குப் பேசுகிறாய்! இப்படி சமயத்துக்கு ஒரு மாதிரி பேசுவது எனக்குப் பிடிக்காது!’ என்றார் அய்யர் சிறிது கடுமையாக. 

‘இதோ சாந்தாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டான் சுந்தரம். அதற்கு என்ன செய்துவிட்டோம்? அவமானம் தாங்காமல் உயிரை விட்டுவிடவில்லையே! இப்படி ஏற்படும் அவமானம் குந்தளத்தைக் கல்யாணம் செய்து கொண்டு ஏற்பட்டாலாவது அவள் சுகப்படலாம். இதில் என்ன தவறு!’ என்றாள் அம்புஜம். 

‘எனக்கு அந்த எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்தது.குழந்தைகளாயிருந்தபொழுது ஒரு நாள் இரவு சுந்தரத்தைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று குந்தளம் பிடிவாதம் பண்ணியதும் அவர்களுக்கு விளையாட்டாக மாலை மாற்றி கல்யாணம் செய்ததும் உனக்கு இப்பொழுது ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ! அப்பொழுதே நினைத்தேன் இவர்கள் இப்படியே தம்பதிகளாய் இருந்துவிடக்கூடாதா என்று. ஆனால் நீ இடம்கொடுக்கவில்லை. பிள்ளையைப் பட்டணத்துக்குப் பிரித்துக் கொண்டு போனாய். இது மட்டுமா? உன் காரியங்கள் ஒவ்வொன்றையும் சொன்னால் உனக்கு ஆத்திரம்தான் வரும். சதாசிவகுருக்கள் இங்கு வந்து என் குழந்தையைப் பற்றி ரசாபாசமாகப் பேசியதற்கு யார் காரணமென்பது எனக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அப்படித்தானே’ என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டார் அய்யர். 

‘நான்தான் வரச்சொன்னேன் என்று சொல்லி விடேன்’ என்றாள் அம்புஜம். 

‘உன்மையை மறைத்துவிட முடியாது அம்புஜம். என் றைக்காவது ஒரு நாள் அது வெளிவரத்தான் செய்யும். சுந்தரமும் குந்தளமும் தனியாக கிராமத்துக்குப் போவது பிடிக்கவில்லை யென்றால் ஆரம்பத்திலேயே நீ என்னிடம் அதைச் சொல்லியிருக்கலாம். அவர்கள் போனபிறகு வீட்டு வேலைக்காரி என்னவோ உளறினாளென்பதை மனதில் வைத்துக் கொண்டு சதாசிவ குருக்களை கூப்பிட்டுவரச் சொன்னாய். குந்தளமும் சுந்தரமும் தனியாக கிராமத்துக்குப் போயிருப்பதைப்பற்றி ஊரெல்லாம் ரசாபாசமாய்ப் பேசுகிறார்களென்றும் சுந்தரத்துக்கு உடனே ஒரு கல்யாணம் செய்துவைக்கா விட்டால் மானம் போய்விடுமென்றும் என்னிடம் குருக்களை சொல்லச்சொன்னாய். இதெல்லாம் குருக்களே பிறகு என்னிடம் சொன்னார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உல கமே அஸ்தமித்துவிட்டதென்று நினைத்துக் கொள்ளுமாம். அது மாதிரி எனக்கு ஒன்றுமே தெரியாதென்று நினைத்து விட்டாய். வயது காலத்தில் உன்னிடம் சண்டைபோடுவானேன் என்று நினைத்து நான் வாயை மூடிக் கொண்டிருந்தால் காரணமில்லாமல் குந்தளத்தின் பெயரை ஏன் இழுக்கிறாய்? பாவம். எத்தனையோ சுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டிய குழந்தை சந்நியாஸி மாதிரி காலம் தளளு கிறது. சிறு வயதிலேயே அவள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரி வாழ்க்கையைக் குட்டிச் சுவர் பண்ணியதற்கு நான் எந்த நரகத்துக்குப் போகப் போகிறேனோ. குழந்தை வீட்டை விட்டு வெளியே போனதுண்டா இந்த ஊரில்? பெயருக்கு ஒரு நாள் சினிமா பார்த்திருப்பாளா? நம் வாழ்க்கை இவ்வளவுதானென்று நினைத்து கிராமத்தைக் கட்டிக்கொண்டு உயிரை விடுகிறாள். அவள்மீது ஊரில் அப்படிப்பேசுகிறார்கள் இப்படிப் பேசுகிறார்களென்று அபாண்டப் பழிகளை சுமத்தி என்னிடம் புகார் செய்யச் சொன்னாய் குருக்களிடம்’ என்று மூச்சுவிடாமல் கோபத்தோடு சொன்னார் அய்யர். 

அம்புஜம்: ‘எல்லாம் நல்லதற்குத்தான் சொன்னேன். இப்படி நடக்குமென்று யார் கண்டார்கள்! இப்பொழுது ராமாயணம், மகாபாரதம் மாதிரி கதை பேசுகிறாய். குந்தளத்துக்கும் சுந்தரத்துக்கும் கல்யாணம் செய்துவைக்க நீ சம்மதித்திருப்பாயா அப்பொழுது? கஷ்டம் வந்த பிறகு அப்படி நினைத்தேன் இப்படி நினைத்தேன் என்று சொல்வது சுலபம்!’ 

‘நீ மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், சமிக்ஞையாக வேனும் ஆதரவு காட்டியிருந்தால் ஜாதி மதம், கட்டுப்பாடு எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கடலில் போட்டு விட்டு கல்யாணத்தை நடத்தியிருப்பேன். யார் எவ்வளவு வேண்டுமானாலும் தூற்றட்டும். என் காலம் ஆகிவிட்டது. இன்னும் ஒகு வருஷமோ இரண்டு வருஷமோ!, சமூகப் பிசா சுகளின் வசைமொழியை என்னால் சகித்துக்கொள்ள முடியும். குழந்தையின் நிலைமையைப் பார்க்கும் பொழுதுதான் ஒவ் வொரு நிமிஷமும் நெஞ்சு வெடித்துவிடும்போலிருக்கிறது. நான் என்னனவோ கோட்டைகளெல்லாம் கட்டினேன்!’

‘அதற்கு ஒரு எமனாக நான் வாய்த்தேன். அப்படித் தான் சொல்லேன்! பாஸ்கரா! இதோபார் இப்பொழுது சொல்லுகிறேன். கடவுள் சாட்சியாக குந்தளத்துக்கு மறு கல்யாணம் செய்துவைக்க நீ ஆசைப்பட்டால் தாராளமாகச் செய். அதற்கு நான் குறுக்கே நிற்கவில்லை. சுந்தரம் சாந்தா வைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டதற்காக நான் இ படிச் சொல்வதாக நினைக்காதே. நம் குழந்தையின் சுகம்தான் நமக்குப் பிரதானம். சொத்து சுதந்திரம் எல்லாம் குந்தளத் தின் பெயரிலிருக்கிறது. நம்மைக் கேட்காமலே அவள் யாரா வது ஒருவனை திடீரென்று கல்யாணம் செய்துகொண்டுவிட் டால் நாம் என்ன செய்ய முடியும்? சாந்தாவைப்போலில்லை குந்தளம் என்றாலும் மனித சுபாவம் ஒரேமாதிரி யிருக்காது எப்பொழுதும்! புத்திசாலித்தனமாக குந்தளத்துக்கு ஒரு கல்யாணத்தை நாமே செய்துவைத்து அதனால் வரும் லாப நஷ்டங்களைச் சகித்துக்கொள்ளுவதுதான் நல்லது சுந்தரம் விஷயம்மாதிரி நடப்பதைவிட! அந்தப் பாவிப்பயலுக்கே குந் தளத்தைக் கல்யாணம் செய்துவைத்திருந்தால் குடும்பத் தோடு குடும்பமாகியிருக்குமே!’ என்றாள் அம்புஜம். 

‘அதுமட்டுமில்லை! சொத்து எல்லாம் சுந்தரத்துக்குக் கிடைத்திருக்கும்!’ என்று வெறுப்புடன் சொன்னார் அய்யர். 

பக்கத்து அறையிலிருந்து இந்த சம்பாஷணை முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த குந்தளம் அதற்கு மேல் அங்கிருந்தால் தெரிந்துவிடுமென்று நினைத்து சந்தடி செய்யாமல் புத்தகசாலைக்குப் போனாள். 

அய்யருக்கும் அம்புஜத்துக்கும் நடந்த சம்பாஷணை குந்தளத்துக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலிருந்தது. ஒரு சமயம் விதவா விவாகத்தைப்பற்றி தன்னுடன் பிரமாதமாக சங்கரி தர்க்கம் செய்ததும்கூட தனது மனதை அறிய தகப்ப னாரினால் தூண்டப்பட்டிருக்குமோ என்று தோன்றியது இப்பொழுது. தகப்பனாரின் மனோபாவம் அவளுக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. தன் நிலைமைக்காக தகப்பனாரை ஒருகாலத்திலும் அவள் நொந்து கொண்டதில்லை. ‘அவர் என்ன செய்வார் பாவம்! இனஜனங்களின் பேச்சுக்குப் பயப்படுகிறார். வயது காலத்தில் குடும்பத்துக்கு கெட்ட பெயர் ஏற்படக் கூடாதென்று அப்பா நினைப்பது இயற்கைதானே! என் தலைவிதிக்கு அவர். மீது குறை சொல்லி என்ன பயன்?’ என்றெண்ணி குந்தளம் தன் வினைப்பயனையே நொந்துகொள்ளுவாள். அத்தை மட்டும் சிறிது ஆதரவு காட்டினால் சுந்த ரத்துக்தே தன்னை மணம் செய்து கொடுத்துவிட தகப்பனார் தயாராயிருந்தது குந்தளத்துக்கு எதிர்பாராத புதிய செய்தியாயிருந்தது. 

‘முனிசாமி சொன்னதின் உண்மை இப்பொழுதுதான் தெரிகிறது. வேண்டுமானால் குந்தளத்தை நானே மணந்து கொள்ளுகிறேன் என்று அத்தான் சொல்லியபொழுது அதற்கு அப்பா சம்மதிக்காத காரணம் இஷ்டமில்லாமலில்லை. அத்தைக்குப் பயந்துதான். என் சுகத்துக்காக உலகத்தையே பகைத்துக் கொள்ளவும் ஆப்பா தயங்காமலிருந்திருக்கிறார். அத்தையிடம் சற்று முன் அவர் பேசியது உண்மை யாயிருக்குமானால் இந்த நிமிடமே நான் விரும்பிச் சொன்னால் எனக்கு மறுமணம் செய்து வைக்க அப்பா பின் வாங்க மாட்டார்!’ இப்படி குந்தளம் சிந்தனை செய்துகொண்டிருக்கையில் அய்யர் உள்ளே நுழைந்தார். 

அய்யர்:- என்னம்மா குந்தளம், இப்படி பிரமைபிடித்த மாதிரி உட்கார்ந்திருக்கிறாய்? 

குந்:- ஒன்றுமில்லையப்பா! கைத்தறி வேஷ்டிகளுக்கு இப்ப நல்ல கிராக்கியிருக்கு. நம் கிராமத்தில் இன்னும் ஏழெட்டு புதிய தறிகளை வாங்கிவைக்கலாமா? என்று யோசனை செய்துகொண்டிருந்தேன். 

அய்யர்:- உனக்கு எப்பொழுதும் கிராம சிந்தனைதான். அது கிடக்கட்டும் குந்தளம். நான் ஒன்று சொன்னால் ஏன் என்று கேட்காமல் சரியென்று ஒப்புக்கொள்வாயா? 

குந்:- என்றைக்காவது உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு பேசியதுண்டா அப்பா! 

அய்யர்:- இதோ பார்! இது சாந்தா எழுதிய கடைசி புத்தகமாம்! வஸுவிடமிருந்து இன்று காலை வந்தது. இதை நீ படிக்கக்கூடாது. 

குந்:- சரியப்பா! அது உங்களிடமே இருக்கட்டும். 

அய்யர்:- நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் தெரியுமா? 

குர்:- அதைப்பற்றி எனக்குக் கவலையேயில்லை. நீங்கள் சொல்லிவிட்டால் அதன் அட்டையைக்கூட நான் பார்க்க மாட்டேன். உங்கள் பெண்ணிடத்தில் அவ்வளவு நம்பிக்கை யில்லையா? 

அய்யர் சிறிது நேரம் வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனார். குந்தளம் காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு மன நிம்மதி குலைந்தால் அதன் காரணங்களை உடனே எழுத்தில் கொட்டித்தள்ளிவிட வேண்டும். சொந்த விஷயங்களை அந்தரங்கமாக எழுதித் தீர்த்து ஆறுதலடைய வஸுமதியைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் குந்தளத்துக்கு? 

இப்படியே இரண்டு மாதங்கள் மேலும் கழிந்தன. ஒரு நாள் சங்கரி விதவா விவாக தர்க்கத்தை மறுபடியும் கிளப்பினாள் குந்தளத்தினிடம். அப்பொழுது சொன்னாள், ‘உன் விஷயத்தையே எடுத்துக்கொள் குந்தளம்! இந்த வயதில் நீ எப்படி இருக்கவேண்டியவள்? உலக சுகங்களிலிருந்து உன்னை ஒதுக்கிவைப்பது அநியாயமில்லையா?’ என்று. 

குந்:. ‘தாம்பத்திய வாழ்க்கையில்தான் உலக சுகம் முழுவதும் அடங்கியிருக்கிற தென்பது உங்கள் அபிப்பிராயமா?’

சங்கரி: வேதாந்தி மாதிரி பேசாதே. நீ வேண்டுமானால் மனதை அடக்கிக்கொண்டு மர உறி தரித்த சந்யாசி போலிருக்கலாம். எல்லாப் பெண்களும் அப்படியிருப்பார்களா? கௌரவமாக மறுமணம் செய்து வைக்காவிட்டால் பால்ய விதவைகள் ரகசியமாக விபசாரத்தில் ஈடுபட்டு கெட்டுப்போகிறார்கள். அது மட்டும் சமூகத்துக்கும் மதத்துக்கும் தெய்வத்துக்கும் சம்மதமானதா? இதோ பார் ஒரு இளம் விதவைப் பெண் தன் தகப்பனாருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை. அதை வாசித்தால் கல் நெஞ்சமும் இளகிவிடும். இதைப் படித்துவிட்டுச் சொல்லு நியாயம் எவர் பக்கத்தி லிருக்கிற தென்பதை! 

ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து கிழித்த இரண்டு காகிதங்களை குந்தளத்தினிடம் கொடுத்தாள் சங்கரி. அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது: 

அன்புள்ள அப்பா! 

நான் ஒரு பாபி; பெரிய துர் அதிர்ஷ்டசாலி. என்னுடைய துணிகரமான நடவடிக்கை உங்களைத் திடுக்கிடச் செய்யும். குடும்ப கௌரவத்தைச் சீர்குலைத்துவிட்ட துரோகி யென்று என்னை சபிக்கவும் சபிப்பீர்கள். எவனுடனோ ஓடி விட்டாளென்று என்னை நம் சமூகம் தூற்றும். அற்ப விஷயத்தை கதைபோல கை, கால், மூக்கு எல்லாம் வைத்துப் பிரசாரம் செய்வதிலே நமது பிராமண சமூகம் பெயர் போனது. அவர்கள் வம்பளப்பதற்கு நான் இடம் வைத்து விட்டேனே என்று நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆயினும் என்னுடைய தற்போதைய நிலைமையில் நான் வேறு விதமாக நடந்துகொள்ளுவதற்கில்லை. 

பரிசுத்தமான தென்றும் ஆழ்ந்த தத்துவங்களை அடிப் படையாகக்கொண்டதென்றும் உலகெல்லாம் போற்றப்படும் இந்து சமுதாயத்திலே நான் பிறந்தேன். அதனிடம் நான் மிகுந்த பற்றுதலும் வைத்திருந்தேன். அந்த சமுதாயம் விதவையென்ற இழிய பெயரைச்சூட்டி பல வருடங்களுக்கு முன்னரே என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டது. என்னை ஒதுக்கிய சமூகத்தை நானும் ஒதுக்கிவிட்டு வெளியேறுவது தானே மரியாதை? வேண்டாம் போ என்று தள்ளுமிடத் தில் அட்டைபோல ஒட்டிக்கொண்டிருப்பது முறை யல்லவே! 

அப்பா! உங்களைவிட நான் அறிவாளியோ அல்லது உலக அனுபவம் உடையவளோ இரண்டுமில்லை. ஆனால், ஆண்டவன் கொடுத்த பகுத்தறிவைக்கொண்டு நான் எழு தும் விஷயங்களை பொறுமையுடன் படிக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். 

தீண்டாதார் என்று சொல்லி பல்லாயிரக்கணக்கான ஜனங்களை நமது சமூகம் ஏற்கனவே ஒதுக்கி வைத்திருக்கின்றது. அவர்கள் கூட்டம் கூட்டமாக பிறமதங்களில் சேர்ந்துகொள்ளுவதை பிரத்யக்ஷமாக நாம் பார்க்கிறோம். என்னைப்போன்ற இளம் விதவைகளும் இந்துமதத்தைத் திரஸ்கரிப்பதென்று ஏற்பட்டால் பழம் பெருமைவாய்ந்த நமது சமுதாயம் எவ்வளவு பயங்கரமான நிலமைக்கு வந்து விடுமென்பதை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இந்த நிலைமை ஏற்பட உடந்தையாயிருப்பவர்கள்தான் சனாதன தர்மகர்த்தாக்களா? வரட்டு வேதாந்தம் பேசுகிறவர்கள் இந்த உண்மையை ஏன் உணர மறுக்கின்றனர்? 

பூவுலகிலுள்ள ஜீவராசிகளெல்லாம் ஒரே கடவுளால் படைக்கப்பட்டவை. பசி, தாகம், ஆசை, பாசம் முதலான உணர்ச்சிகளை சகலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறான் ஆண்ட வன். மனித சஞ்சாரமற்ற வனாந்திரங்களிலே மரஉறி தரித்து காய் கிழங்குகளைப் புசித்து உலகப் பற்றில்லாது துறவறத் தைக் கடைபிடிக்கும் முனீச்வரர்களே காமத்துக்குப் பலி யாகி கருத்திழந்திருப்பதாய் இந்து சமுதாயப் புராண இதிகாசங்கள் கூறுகின்றன. மனதை கட்டுப்படுத்திய மகரிஷிகளின் நிலைமையே இதுவென்றால் பாலும் பழமும் அறு சுவை அன்னமும் புசித்து ஆயிரக்கணக்கான வாலிபர்களின் மத்தியில் வாழும் இளம் கைம்பெண்கள் ஐம்புலன்களையும் அடக்கி முனிவர்களுக்கு முன்மாதிரியாயிருப்பார்களென்று எதிர்பார்க்க முடியுமா? இப்படி எதிர்பார்ப்பது மனித அறிவிற்குப் பொருத்தமானதுதான் ஆகுமா? 

அப்பா, பெண்கள் ஆண்களைவிட இளகிய மனதுடையவர்களென்றும் சபலசித்தம் கொண்டவர்களென்றும் சொல்கிறார்கள். காமமும் கஸ்தூரியும் கட்டுக்கடங்காதென்பதைப்போல இந்த இளம் பெண்கள் புத்திபேதலித்து ஒழுங்குதவறி நடந்துவிட்டால் அவர்கள் கதியென்ன? கர்ப்பிணியான கைம்பெண்கள் ஆற்றிலும் கிணற்றிலும் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பத்திரிகைகளில் அடிக்கடி நாம் படிக்கவில்லையா? நாட்டில் விபசாரம் பெருக ஊக்கமளிப்பது இளம் விதவைகளா அல்லது அவர்களை விதவைகளாக வைத்திருக்கும் கொடிய சமூக சம்பிரதாயங்களா? இவ்வித அனர்த்தங்களுக்கும் ஆபாசங்களுக்கும் இடமளிக்காமல் இளம் கைம்பெண்களுக்கு மறுமணம் செய்துவிட்டால் அவர்கள் கௌரவமாக வாழ்க்கையை நடத்த மாட்டார்களா? பழங்காலத்தைப்போல உடன்கட்டை ஏறிவிட்டாலாவது இந்தச் சடலம் நெருப்பில் சாம்பலாகிப் போகும் ? உயிருடன் வைத்து வதைசெய்வது கொடுையிலும் கொடுமை. உடன்கட்டையேறுவதைச் சட்டவிரோதமாக்கிய அரசாங்கத்துக்கு விதவை மணத்தைக் கட்டாயப் படுத்தக் கண்ணில்லாமல் போய்விட்டதே! இந்து சமுதாயம் எப்படி குட்டிச்சுவராய்ப் போனால் தானென்னவென்று நினைத்தது போலிருக்கிறது நம்மை அடக்கியாண்ட அந்நிய அரசாங்கம்! 

அப்பா! அரசியல் விடுதலைக்குப் பேசுகிறார்கள் மேடைக்கு மேடை! ஜனத்தொகையிலே கிட்டத்தட்ட சரி பாதியினரான பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நம் ஆடவர்களுக்கு அந்நிய ஆதிக்கத்தைப்பற்றி பேச நாக்கு ஏது? வீட்டிலே அவர்கள் நடத்தும் கொடுங்கோலை நாட்டி இன்னொருவன் நடத்துகிறான். அயிரக்கணக்கான இளம் இந்து விதவைகளின் கொடிய சாபம்தான் நாட்டை நிரந்தர அடிமைத்தனத்தில் வைத்திருக்கிறது. பெண்களுக்கு விடுதலை கிடைக்கும்வரை, இளம் விதவைகளின் துயரம் நீங்கும்வரை, தேசத்துக்கும் விமோசனம் எப்படிக் கிடைக்கும்? 

அப்பா! புரட்சிக்கவி பாரதிதாஸனை நீங்கள் படித்திருக்கமாட்டீர்கள். அவர் பாட்டு ஒன்றை இங்கு எழுதுகிறேன் பாருங்கள்: 

பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால் 
பெருங்கிழவன் காதல்செய்யப் பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்’ 
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் 
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?
இளமை தந்தாய், உணர்வு தந்தாய் இன்பங்காணும்
இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கை தேவீ,
வளமையற்ற நெஞ்சுடையார் இந் நாட்டார்கள் 
மறுக்கின்றார் காதலினை கைம்மை கூறி. 

இப்படி எழுதியவனை பயித்தியக்காரனென்றும் நாஸ் தீகனென்றும் மதத் துரோகியென்றும் சபிப்பீர்கள். ஆனால் உங்கள் மதத்திற்கு நீங்களே உண்மையில் குழிதோண்டு கிறீர்களென்பதை உணரமாட்டீர்கள். அப்பா! என் மனச் சாட்சியை வஞ்சித்து நடக்க நான் தயாரில்லை. உலகமே எதிர்த்தாலும் அதை மதிக்காமல் என் மனச்சாட்சியின் படி நடக்க நான் தீர்மானித்துவிட்டேன். என்னை இனி எந்த சக்தியினாலும் தடைசெய்ய முடியாது. நான் செய்யும் காரியம் என்னைப் படைத்து எனக்கு உணர்ச்சிகளையும் கொடுத்த தெய்வத்துக்கு பூரண சம்மதமானது என்ற நம்பிக்கையுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன். போய்வருகிறேன். நமஸ்காரம். 

உங்கள் பெண்,
அபாக்கியவதி வனஜா. 

இவ்வாறு அச்சிடப்பட்ட காகிதங்களை குந்தளம் படித் ததும் படிக்காததையும் போல் ஒட்டமாகப் பார்த்துவிட்டு சங்கரியிடம் கேட்டாள், ‘அம்மா! எனக்கு ஒன்றும் தெரியாதென்று நினைத்து விடாதீர்கள். இது சாந்தா எழுதிய விதவை வனஜா என்ற புத்தகத்திலிருந்து கிழித்த பக்கங்களில்லையா? நடையைப் பார்த்தாலே சாந்தாவின் புத்தகமென்று அதன் மேல் எழுதி ஒட்டியிருக்கிறதே!’ என்றாள். 

சங்கரி:- யார் எழுதியதானாலென்ன? கதை இதுதான். இப்படி எழுதிய வனஜா வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அவள் விரும்பிய சேகரன் என்ற பையனும் அவனுக்கு ஏற்பாடு செய்த கல்யாணத்துக்கு முதல் நாள் வீட்டை விட்டு ஓடி விடுகிறான். பிறகு சேகரும் வனஜாவும் கல்யாணம் செய்து கொள்ளுகிறார்கள். இது கதையாயிருந்தாலும் நிஜ வாழ்க்கைக்கு எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது பார்த்தாயா? 

குந்தளம்:- அம்மா! என்னுடைய தாயாரை எனக்குத் தெரியாது. சொந்தத் தாயைவிட அருமையாக வளர்த்தவர்கள் நீங்கள். நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன் உங்களுக்கு. என் மனதில் தோன்றுவதை உங்களிடமிருந்து மறைப்பானேன்? நீங்கள் என் வாயைக் கிண்டுவதின் அர்த்தம் எனக்குத் தெரியாமலில்லை. சாந்தாவின் புத்தகம் வந்தபொழுது அப்பா அதை என்னிடம் காட்டி நான் வாசிக்கக்கூடாதென்றார். அந்தக் கதையில் வனஜா செய்த மாதிரி நானும் எங்கேயாவது ஓடிப்போய் விடுவேனோ என்று அவர் பயப்படுகிற மாதிரி இருக்கிறது கொஞ்ச நாளாக எனக்கு ஏற்படுத்தியிருக்கும் கட்டும் காவலும்! இதெல்லாம் எனக்குத் தெரியாதென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். சாந்தாவின் வனஜாமாதிரியில்லை இந்த குந்தளம்! என் மனதையறிய அப்பாவின் தூண்டுதலின் பேரிலேயே இப்படியெல்லாம் கேட்கிறீர்களென்பது எனக்குத் தெரியும். 

சங்கரி :- உன்னிடம் பொய்சொல்வானேன்! இந்தப் புத்தகம் வெளியானது முதல் உன் அப்பாவுக்கு மனநிம்மதியே யில்லை. நீ மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் தடையில்லாமல் செய்து வைக்க அவர் தயாராயிருக்கிறார். எவர் என்ன சொன்னாலும் ஜாதியை விட்டே தள்ளினாலும் அவர் கவலைப்பட மாட்டார். நீ அப்பாவை இந்தத் தள்ளாத வய தில் விட்டுப் போய் விடுவாயோ என்பதுதான் பெரும் கவலையாயிருக்கிறது. இதை உன்னிடம் நேரில் சொல்லவும் அவருக்கு லஜ்ஜையாயிருக்கிறது. 

குந்:- சரி! அப்பா மட்டும் இப்படி நினைத்தால் போதுமா? அத்தை? 

சங்:- உன் விஷயத்தில் அத்தையும் குறுக்கே நிற்க மாட்டாள். என் சொந்த அபிப்பிராயத்தைக் கேட்டால் நீ கல்யாணம் செய்துகொள்வதுதான் நல்லது. 

குந்:- அம்மா! நானும் அப்படி நினைத்ததுண்டு. உண்மையைச் சொல்லுகிறேன் சுந்தரம் அத்தானிடம் நான் உயிரையே வைத்திருந்தேன். அவர் போன பிறகு இந்த எண் ணமே எனக்குக் கிடையாது. என் வாழ்வில் மறுபடியும் மணம் என்றால் அவர் ஒருவரைத்தான் ஹ்ருதயம் நாட முடியும். இல்லாவிடில் வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்துவிட எனக்குச் சக்தியிருக்கிறது. 

சங்:- அவனுக்குத்தான் கல்யாணமாகி விட்டதே!

குந்:- அதெப்படித் தெரிகிறது? 

சங்:- எப்படியோ தெரிகிறது. அவனை நினைப்பதில் இனிப் பிரயோசனமில்லை. 

குந்:- அவருக்கு மணமாகியிருக்குமென்று என் மனம் நம்ப மறுக்கிறது. உண்மையில் அவருக்குக் கல்யாணமாகி யிருந்தால் அதன் பிறகு என்னைப் பற்றி யாருமே கவலைப்பட வேண்டியதில்லை. தெய்வசாட்சியாக மணமின்றி நான் தூய வாழ்க்கை நடத்துவேன். 

சங்:. அழகாயிருக்கிறது குந்தளம் நீ பேசுவது? சுந்தரத்தைவிட்டால் வேறு யாருமே இல்லையா இந்த உலகத்தில்? 

குந்:- என் சம்பந்தப்பட்டவரையில் இல்லைதான். என் மனதை மாற்ற உலகத்தில் எந்த சக்தியினாலும் முடியாது. எனக்கு நீங்கள் ஒரே ஒரு வாக்குறுதிமட்டும் கொடுங்கள். சுந்தரம் அத்தான் கல்யாணம் ஆகாமலிருந்து என்னை மணந்து கொள்ளவும் அவர் தயாராயிருந்தால் அப்பொழுது எங்கள் கல்யாணம் நடக்க உதவி செய்வேனென்று உறுதி சொல்லுங்கள். எனக்கு அது போதும். 

சங்கரி:- நிச்சயமாக சந்தேகமே வேண்டாம். உன் அப்பாவே கல்யாணத்தை சிறப்பாக நடத்தி வைப்பார் குந்தளம்.

– தொடரும்…

– குந்தளப் பிரேமா, முதற் பதிப்பு: 1951, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *