குதிரை வண்டித் தாத்தா…!





(கதைப் பாடல்)
குதிரை வண்டித் தாத்தாவைக்
கோயில் ஒன்றில் சந்தித்தேன்
அதிர வைக்கும் கதைசொல்லும்
அழகை எண்ணிப் பிரமித்தேன்!

கிழிந்த வேஷ்டி மேல்துண்டு
கிறங்க வைக்கும் கண்ணுண்டு
மழிக்கா தாடி மீசைக்குள்
மனதை வருடும் கதைஉண்டு
வண்டி வாங்கி நாளாச்சாம்
வாங்கிய குதிரையும் நோஞ்சானாம்
உண்டி கொடுத்து உயிர்காக்கும்
உற்ற தோழர் அவைதானாம்!
கோயில் போக ஆள்வந்தால்
கொள்ளு வாங்கக் காசுவரும்
பாயும் குதிரை வேகத்தைப்
பார்க்க மட்டும் ஆளுவரும்!
வண்டி அவர்க்கு வீடாகும்!
வாங்கித் தின்றால் பசியாறும்
ஒன்றும் இல்லா நாட்களுக்கு
ஒட்டிய வயிறே அடையாளம்!
ஒற்றை ஆளும் வாராமல்
ஒன்றும் செய்யத் தோன்றாமல்
வெற்று வயிறு காயும்படி
வேதனைப் பட்ட நாளுண்டாம்!
குதிரை முகத்தை அவர்பார்த்தும்
அவரின் முகத்தை அதுபார்த்தும்
விதியை எண்ணி நொந்தபடி
விடிந்த நாட்கள் பலவுண்டாம்!
வண்டி இழுத்துச் சோறூட்டும்
வள்ளல் குதிரை பசியாற்ற
இண்டு இடுக்கு எவ்விடத்தும்
இழுத்துப் பார்த்து நிறுத்திவிட்டு
அய்யோ குதிரை பசியாலே
அல்லும் பகலும் துடிக்கிறதே
பெய்யும் மழையில் சுடுவெயிலில்
பசியால் வாடித் துடிக்கிறதே
எங்கோ சென்று இருக்கட்டும்
எதையோ தின்று பிழைக்கட்டும்
இங்கே இருந்து என்னபயன்?!
ஏற யாரும் வருவதில்லை….
என்று எண்ணி வருந்தியவர்
குதிரை வேறு தான்வேறாய்
அன்று பிரிய முடிவெடுத்தார்
அவிழ்த்து அதனை விட்டுவிட்டார்!
அதுவோ எங்கும் போகவில்லை.,
அவரை விட்டுப் பிரியவில்லை!
எதுவானாலும் சரியென்று
திரும்பி விட்டதாம் அவர்வீடு!
குதிரை அன்பை அவர்வியந்தார்
குதிரைக் காரரை நான்வியந்தேன்!
ஒருவருக்கொருவர் அன்பைநாம்
கொடுத்து வாழ்வதே உயர்வென்பேன்!