குதிரைக் காளி






அச்சத்துடன் மரங்களினூடாக விரைந்தோடியவனை அந்த வெண்ணிறக் குதிரை விடாமல் துரத்தியது. நிலவின் ஒளி உயர்ந்த மரங்களைக் கீழாக இங்கும் அங்குமாக பட்டும் படாமலும் நிலத்தில் விழுந்து கிடக்க, இருளைப் பொருட்படுத்தாமல் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி இலக்கின்றி நீண்டுச் சென்றது அவனது ஓட்டம். நெஞ்சம் தடதடக்க, மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, கண்கள் பஞ்சடைக்க, எங்கே மயங்கி விடுவோமோ என்ற அச்சமெழ, இனிமேல் முடியவே முடியாது என்று சக்தியிழந்து கால்கள் தடுமாறிய நிலையில், அகன்ற விருட்சமொன்றில் தஞ்சமடைந்தவன் மெல்ல தலைதூக்கிப் பார்க்க அக்குதிரை அண்மையில் வந்துவிட்டிருந்தது. ஓரடியும் நகர வாய்க்காமல் அவன் பீதியில் ஸ்தம்பித்திருக்க டக் டக் என்று காலடியோசை எழப்பி தலைநிமிர்து பெரிதாய் கனைத்து அடங்கும் புரவியின் முதுகில் அமர்ந்திருந்த அப்பெண்ணுருவத்தை அவனால் தெளிவாகக் காணமுடியவில்லை. பட்டாகத்தியை ஏந்திய அதன் வலதுகரம் மேலோங்கிய மறுகணம் அவனது சிரசு குருதிப் பீறிட வெட்டுண்டு விர்ரென்று காற்றில் பறந்து தரையில் விழுந்து பலமுறை உருண்டு இருட்டில் எங்கோ தொலைந்துப் போனது. கத்தியின் முனையிலிருந்து இரத்தம் சொட்டுச் சொட்டாக கீழ்விழுந்துக் கொண்டிருக்க குதிரையைத் திருப்பி வேகமெடுக்க முயல்கையில், கல்மண்டபத்தின் முன்னே நின்று எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்தான் அய்யனார்.
திடுக்கிடுதலோ கலவரமோ ஏதுமின்றி கற்சிலையாக அவன் நின்றிருந்தான். உணர்ச்சியில்லா பார்வை மட்டும் இங்குமங்குமாக அலைபாய்ந்தது. குதிரை மெல்ல நடந்து அவனை சமீபித்தபோதும் அவன் அதே நிலைதான். உடைவாளை கரம் மாற்றிக்கொண்டு களுக்கென்று அப்பெண்ணுருவம் சிரித்தே நன்றாக குனித்து ஆசி வழங்குவதுபோல் அவன் தலையில் வாஞ்சையுடன் கை வைத்தது. ஜிவ்வென்று மேலேழும்பி காற்றில் பறப்பது போல பரவசம் உண்டாகி, அவன் மூளைத் திசுகளில் இதுவரை இடையூறாக இருந்த ஏதோவொன்று சட்டென்று நழுவிட பளீச்சென விழிகளை விரித்து பார்த்தான். குதிரை அவனைக் கடந்து தூரமாய் மறைந்து போயிருந்தது.
2
அவனைப் பார்த்து கேலிச் செய்பவர்களைத் தவிர்த்து, சகமனிதனென்ற உள்ளன்போடுப் பேசுபவர்களிடம் மட்டும், “நேத்து ராத்திரி குதிரைக் காளியம்மா ஒரு ஆள பட்டாகத்தியால வெட்டிக்கொன்னுட்டா” என்றுச் சொல்லி வந்தான். “அப்படியா” என ஆர்வப்படுகிறவர் மாதிரி கேட்டுவிட்டு நகர்ந்துச் செல்கிறவர்களில் அநேகம்பேர் அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர்கள் என்பதால் அச்செய்தியை நம்பகத் தன்மையோடு உள்வாங்கிடவில்லை. ஆயினும் ஒருசிலர் சமீபநாட்களாக இக்கிராமத்தில் நடக்கிற அமானுஷிய நிகழ்வுகள் குறித்து கேள்விப்பட்டிருந்ததால் இது உண்மையாக இருந்திடக்கூடும் என்றே அச்சம் கொண்டு மற்றவர்களுக்குப் பரப்பவும் செய்தார்கள். நடுஇரவில் குதிரைக் கனைப்பும், அது தடதடவென்று தெருவைக் கடந்துச் செல்லும் குளம்படியோசையும் பலர் கேட்டிருந்தனர். இதனால் குதிரைக் காளியே அனுதினமும் ஊர் முழுக்க வலம் வருகிறாள் என்றும் ஊர் எல்லைக்குள் தீயவர் எவரும் நுழையாமல் காவல் காக்கிறாளென்றும் பேச்சு அடிபட்டது. குதிரைக் காளியா, அப்படியொரு சாமியா, அதுவும் நம்மூரில் இருக்கிறதா என்று அதிசயித்தவர்களும் உண்டு. சொல்லப்போனால் அத்தெய்வத்தை ஊரறியச் செய்ததில் முக்கிய பங்கு அய்யனாரையேச் சாரும்.
அவனது பத்தாவது வயதில் கூட்டாளிகளுடன் ஊர் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு படியேறும் போது பாசி வழுக்கி கீழ்விழுந்து தலையில் பெரிதாக அடிபட்டுவிட்டது. உள்ளூர் வைத்தியம் பலிக்காமல் டவுன் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்புதான் கணவனைப் பறிகொடுத்திருந்த அவனுடைய அம்மா ராசாத்தி தன் சேமிப்பையெல்லாம் செலவளித்ததோடு வெளியில் அதிகம் கடன் வாங்க வேண்டியதாயிற்று. உயிரைக் காவந்து பண்ணி விட்டார்களே தவிர மூளை பிசக்கு நிலைத்து விட்டது. ஒருநேரம் நன்றாகப் பேசுபவன், அடுத்த முறை ராசாத்தியையே யாரென்று கேட்பான்.
காட்டு வேலைக்குப் போய் அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டு பரமரித்து வந்தவளுக்கு பிள்ளையின் வளர்ச்சி ஆறுதலைக் கொடுத்தாலும் பூரிப்படைந்திட முடியவில்லை. இருபது வயதாகியும் அவன் குணத்தில் எந்த மாற்றமும் இல்லாதிருந்தது. இதில் நிம்மதியான விசயம் என்னவென்றால், அவன் எந்த வம்பு தும்புவுக்கும் போவதில்லை. அழிசாட்டியம் பண்ணுவதில்லை. எப்பொழுதும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான். தீரா கவலையோடு காலத்தைக் கடத்திய ராசாத்திக்கு நாளடைவில் இச்சோகம் பழக்கப்பட்ட ஒன்றாகிப் போனது.
சமீப நாட்களாக, குறிப்பாக இருபது இருபத்தைந்து நாட்களாக அவன் இரவில் வீட்டை விட்டு வெளியே சென்றுவரத் துவங்கியிருந்தான். உடல் அசதி காரணமாக தன்நிலை மறந்து உறங்கிவிடும் ராசாத்திக்கு இது தெரியாதிருந்தது. விடிவதற்குள் திரும்பி வந்து தான் படுத்துறங்கிய அதே இடத்தில் படுத்துக் கொள்கிறவனாக இருந்தவன் சில நாளில் விடிந்தும் வராமல் போகவே பரிதவிப்புக்கு உள்ளான அவனது தாய் அவனைத் தேடி அலையலானாள்.
தனியாகவும், தெரிந்தவர் துணையோடும் தேடிச்செல்கையில், ஊரின் வடதிசைக் காட்டுப் பகுதியிலுள்ள கல்மண்டபத்தில் அவனிருந்தான். என்னென்னவோ புத்திமதிகள் சொல்லி அழைத்து வந்தாள். இரண்டு மூன்று நாட்கள் அமைதியாய் இருந்துவிட்டு மறுபடியும் அங்கு போய்விடலானான். தன்னந்தனியாக, எவருமே அஞ்சக்கூடியச் சூழ்நிலையில் எங்கோ வெறித்து பார்த்தவாறு அவனிருப்பதைக் காணுகையில் அத்தாயின் அடிவயிறு கலக்கமுற்றது.
இரவில் மட்டுமே சென்று வந்தவன், தாய் வேலைக்குப் புறப்பட்டுப் போனதும் பகலிலும் அங்குச் சென்றுவிடுகிறவனாக இருந்தான். முன்போல் பிரமையில் ஆழ்ந்திருக்காமல் கையில் மண்வெட்டியோ, அரிவாளோ கொண்டுச் சென்று காட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதியிலுள்ள அடர்ந்த கருவேல மரங்களை வெட்டி, ஆட்கள் உள்நுழைந்து சென்றிட ஏதுவான பாதையொன்றை உண்டாக்கும் வேலையில் முனைந்திருந்தான். பார்ப்பவர்களுக்கு இது கோமாளித்தனமான செய்கையாகவே தென்பட்டாலும் நாளடைவில் பாதைச் சீரானதும் பெரும் ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது. இத்தனைக் காலமும் ஒருவரும் அறிந்திடாமல் அவ்விடத்தில் மறைந்து போயிருந்த பழமையான கோயிலொன்று வெளிச்சத்துக்கு வந்தது.
மேற்கூரையில்லாத மிக சிறிய கோயிலாக இருந்தாலும் பிரமிப்பில் ஆழ்த்துமளவுக்கான வடிவமைப்பில் காணப்பட்டது. முன்னங்கால்களைத் தூக்கி சீறிப்பாயும் தோற்றத்திலான தத்ரூபமான குதிரையின் சிற்பம் இருக்க, அதனைக் குடையாகக் கொண்டு அதற்கு கீழாக காளியம்மை வீற்றிருந்தாள். அவளது உருவம் காண்போரை கதிகலங்க வைப்பதாக இருந்தது. அந்த கண்கள் தீப்பிழம்பைக் கக்குகிற அளவுக்கு அதிஉக்கிரமாக காணப்பட்டன. கடைவாய்களில் துருத்திக் கொண்டு வெளித்தெரியும் கூரிய பற்களில் குருதிக்கறைப் படிந்திருந்தது.
ஊருக்குள்ளிருந்து எவரோவொருவர் இவ்வழியாக வரும்போது இவ்வம்மனை கண்டு மகிழ்ச்சியும் அதிர்ச்சியுமான மனநிலையோடு மற்றவர்களுக்கும் தெரிவிக்க மெல்ல மெல்ல சனங்கள் வரத்துவங்கினார்கள். வழிபாடுகள் நடந்தேறின. தீயை உமிழும் பார்வையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாக எலுமிச்சைப் பழ மாலைகளை அணிவித்து கும்பிடலானார்கள்.
மனப்பிறழ்வடைந்தவனாக இருந்தாலும் ஊருக்கு மகத்தான நற்செயல் பண்ணின அய்யனாருக்கு ஊர் பெரியவர்கள் பலரின் பாராட்டு கிடைத்தது ராசாத்தியின் நெஞ்சைக் குளிரவைத்தது.
3
இரண்டு கொலைகள் விழுந்திருந்ததால் பதற்றமடைந்த காவல்துறை வட்டாரம் அவ்வூரின் மீது முழு கவனத்தையும் குவித்தது. புதிதாக மாற்றலாகி அக்கிராமத்துக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் ஆளவந்தாரிடம் முழுபொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அவர் தனக்கு கீழ் வேலைப் பார்க்கும் காவலர்களோடு ஊரெங்கும் அலைந்து திரிந்து துப்புத்துலக்கலானார்.
ஆறுசெல்போட்ட பெரிய டார்ச்லைட்டை எடுத்து கொண்டு எவரையும் எதிர்பார்க்காமல் இரவுகளில் குறிப்பாக இரண்டு கொலைகள் நடந்தேறிய அந்த தனித்த கல்மண்டபத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏதேனும் தடயங்கள் கிடைத்திடுமா என்று அவர் வட்டமிட்டு கொண்டிருந்தார். மேலும் கொலைகள் தொடரும் என்று அவருடைய உள்ளுணர்வு அறிவுறுத்திக் கொண்டே இருந்தாலும், அப்படி நடந்திடாமல் தடுத்திட வேண்டுமென்ற கடமையுணர்ச்சி எச்சரிக்கைச் செய்தது. குதிரையில் வந்து காளி மாதா தலைகள் வாங்குகிறாள் என்னும் ஊராரின் கதையை அவர் நம்பினார் இல்லை. இது ஏதோவொரு ஆசாமியின் வெறிச்செயலே என நினைத்தார்.
சிறு தடயமும் இல்லாமல் சாமார்த்தியமாக காரியமாற்றும் கொலைக்காரன் மீது கோபம் கோபமாக வந்தது. எங்கோ ஒளிந்து கொண்டு ஆட்டம் காட்டும் அக்கயவனை வெகு விரைவில் பிடிப்பேன் என்று அவர் தனக்குத்தானேச் சூளுரைத்து கொண்டார். கொலையுண்ட இருவரின் இருப்பிடத்துக்குச் சென்று அவர்களின் குடும்ப அங்கத்தினரிடமும், அக்கம் பக்கத்து வீட்டாரிடமும், ஊருக்குள்ளுமாக சிரத்தையோடு விசாரணை நடத்தியும் எதுவும் கண்டறிய முடிவில்லை. எத்திசையில் திரும்புவது எனத்தெரியாமல் அவருக்குக் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.
ஆளவந்தார், அய்யனார் வீட்டுக்குச் சென்றதும், ராசாத்தி அன்று வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்ததால் தன் மகனைத் தேடி ஏன் போலிஸ் வந்திருக்கிறது என்று விளங்காமல் பதற்றம் மிக கொண்டாள். ஒரு கயிற்றுக் கட்டிலை எடுத்துப்போட்டு அவரை உட்காரச் சொல்லி தாகத்துக்கு ஏதேனும் வேண்டுமா என கேட்க, அவர் எதுவும் வேண்டாமென மறுத்து உடனடியாக அய்யனாரிடம் விசாரணையைத் துவங்கினார்.
“இரண்டு கொலைகள் நடந்த இடத்திலிலும் நீ இருந்ததாகத் தெரியவருகிறது. அந்த கொலைக்காரனை நீ பார்த்தாயா? முன்பே அவனை உனக்குத் தெரியுமா? அந்த நேரத்துக்கு நீ எதற்காக அங்கே போனாய்?”
அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்க அவனோ அருகிலிருந்த வாதமரத்திலிருந்து கீழிறங்கி இப்படியும் அப்படியுமாக தத்தித்தத்தி தரையில் எதையோ பிராண்டிக் கொண்டிருந்த அணிலொன்றை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தையும் அவருடைய முகத்தையும் மாறிமாறி கவனித்த ராசாத்தி சங்கடத்துடன் நெளிந்தாள்.
“அய்யா எம்புள்ளையப் பத்தி…” அவள் இழுத்தாள்.
“எல்லாம் தெரிஞ்சுதாம்மா வந்திருக்கேன்” என்றவரின் பார்வை அய்யனாரிடமே நிலைத்திருந்தது. இப்போது அணில் மறுபடியும் மரத்தில் ஏறிக்கொள்ள வேறெதை வேடிக்கைப் பார்க்கலாமென கண்களைச் சுழற்றியவனாக இருந்தவனின் முகத்துக்கு நேராக ஆளவந்தார் தன் வலது கையை நீட்டி ஒரு சொடுக்குப் போட, சட்டென்று அவன் அவரைப் பார்த்தான். இதைக்கண்டு அவரிடமிருந்து மெல்லிய புன்னகை வெளிப்பட்டது.
“அய்யனாரு… நான் உன்னைப் பார்க்கத்தான் வந்திருக்கேன்” என்றார். அவன் எதுவும் பதிலளிக்கவில்லை. அதன் பிறகுக் கேட்ட எல்லா கேள்விகளுக்குமே மௌனம் சாதித்தான்.
“சார் இவனுக்கு எல்லாம் தெரியும். நம்மகிட்ட ஒன்னும் தெரியாதது மாதிரி நடிக்கிறான். ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப்போய் கும்மியெடுத்தா எல்லாத்தையும் கக்கிடுவான்” கான்ஸ்டபுள் சோமு முன்னே வந்து பேச இன்னொரு கான்ஸ்டபுள் கோபாலும் அதை ஆமோதித்தான். கைநீட்டி அவர்களைத் தடுத்துவிட்டு இவர் கட்டிலில் இருந்து எழுந்து கொண்டார். அவர்கள் அங்கிருந்து கிளம்பி தெருவில் நிறுத்தியிருக்கும் தங்கள் வாகனத்தை நோக்கி நடக்கையில் பக்கத்து குடிசையில் இருந்த ஒரு மூதாட்டி அவர்களிடம் எதுவோ சொல்வதற்காக வருவதைப் பார்த்து தன் உதவியாளர்களை அனுப்பிவிட்டு அம்முதியவளிடம் போனார்.
செல்லாத்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மூதாட்டிக்கு நிச்சயம் எண்பது வயதுக்கு மேல் இருக்கும். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அவள் சொல்வதை கவனித்தார்.
“அய்யனாரைப் பத்தி எதுவும் சந்தேகப்படாதிங்க சாமி, அவன் தங்கமானப் புள்ள” என்றாள். அவர் கிழவியைக் கூர்ந்து கவனித்தார். “வாயில்லாப் பூச்சி, புத்தி பெரண்டுப் போனாலும் அடக்கமானவன், அவுங்கம்மா மேல கொள்ள பாசம் வச்சிருக்கிறவன்” எனத்தொடங்கி, ராசாத்தி அவனை வளர்க்கப் பட்டப் பாடு, இறந்து போன அவளுடையப் புருஷனைப் பற்றி என கதை கதையாகச் சொன்னாள்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், “அவனுக்கு பைத்தியம் தெளிஞ்சுப் போச்சுன்னு வெளியில பேசுறாங்க, ஆனா அவன் வாய்திறக்க மாட்டேங்கிறானே” என்றார்.
“சாமி” என விளித்து நெருங்கி வந்து ரகசியம் பேசும் தொனியில், “இப்ப அவன் குதிரைக் காளியோட கட்டுப்பாட்டில இருக்கான். கொஞ்ச நாள் போகட்டும், பின்ன நீங்க கேட்காத கேள்விக்கெல்லாம் டாண் டாண்ணு பதில் சொல்வான் பாருங்க” என்றாள்.
“குதிரைக் காளியா, அம்மனச் சொல்றிங்களா” என்றார்.
“ம். எங்க குலச்சாமி அவ. துடியானவ” இருகைக் கூப்பி அண்ணாந்துப் பார்த்து வணங்கிவிட்டு அந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
4
காளியம்மா குதிரைகள் மீது அதீத விருப்பம் கொண்டவள். நாள்தோறும் அவள் கனவில் சீறி பாய்ந்துச் செல்லும் குதிரைகள் இடம்பெறத் தவறுவதே இல்லை. ஜமீன் ஆட்கள் குதிரையேறிப் போவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பாள். இமைதூக்கி நோக்கும் பார்வை, காற்றில் அலைபாயும் கேசம், முன்னங்கால்களை மடக்கி மடக்கி தாவியோடும் அழகு இவையெல்லாம் அவளை வெகுவாக கவர்ந்திழுக்கும். தனக்கும் அம்மாதிரியான குதிரையொன்று வேண்டுமென அவள் தந்தையிடம் அடம் பிடிப்பாள்.
“சின்னப் பெண்ணான உனக்கு அவ்வளவுப் பெரிய குதிரை வேணுமா” என கேலிச் செய்து நகைத்தவரிடம், மேலும் மேலும் வற்புறுத்தல்கள் தொடரவே, அழகான குதிரைப் பொம்மையொன்றை வாங்கி வந்து கொடுத்தார். அடியில் மொத்தமான மரப்பலகை இருக்க, அதன் மேலே குதிரை கம்பீரமாக நின்றிருந்தது. பலகைக்குக் கீழே நாற்புறத்திலும் சக்கரங்கள் உண்டு. குதிரை மீது ஏறிக்கொண்டு அவள் கால்களை தரையில் விந்தி விந்தித் தள்ள விரைந்தோடும் அக்குதிரை வண்டி அனுபவம் இன்பமாகவே இருந்தது. தெருவெங்கும் சுற்றித் திரிவதே அதன் பிறகு அவளது தீராத விளையாட்டாகிப் போனது. சற்று மேடான இடத்துக்கு வண்டியை எடுத்துச் சென்று அங்கிருந்துச் சரிவில் இறங்குகையில் காற்றைக் கிழித்து கொண்டு ஆகாயத்தில் பறப்பது போல் தோன்றும்.
“உய்” என்று சத்தமிட்டபடியே இவ்விதம் பலமுறை பண்ணுவாள். தோழிகளும் உடன் சேர்ந்து கொள்வார்கள். நாளடைவில் இவ்விளையாட்டுச் சலித்து போக, மறுபடியும் நிஜகுதிரை வாங்கித்தருமாறு தொந்தரவுச் செய்ய ஆரம்பித்தாள். நாளுக்கு நாள் அவளது தொல்லைத் தாங்க மாட்டாமல் அவள் தந்தை எங்கெங்கோ தேடியலைந்து ஒரு குதிரைக்குட்டியை வாங்கி வந்துவிட்டார்.
பிறந்து சில மாதங்களே ஆன குதிரைக்குட்டியது. வெள்ளை வெளேரென்று பார்த்தவுடன் கட்டியணைத்து முத்தமிடத் தோன்றும் அழகு. காளியம்மா மிதமிஞ்சிய உற்சாகத்துடன் அதைவிட்டு ஒரு கணமும் பிரியாமல் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவள் வளர வளர அதுவும் வளர்ந்து, அவள் பருவமெய்தியபோது அதுவும் பெரிதாக கம்பீரத் தோற்றம் தந்திருந்தது. மிக இலகுவாக தாவியேறி சாவாரிச் செய்வதில் கெட்டிக்காரியாக இருந்தாள்.
இப்பொழுதுதான் பெரும் கவலைக்குள்ளார் அவள் தந்தை. மகள் பிரியப்படுகிறாள் என்று குதிரையை வாங்கித்தந்தது தவறோ என்ற சஞ்சலம் உண்டானது. எதிரில் செருப்பணிந்து வருவதே மகா பாவமென்று அதற்கு கடும் தண்டனை தருகிற ஜமீன் குடும்பத்தை நினைக்கும்போது பகீரென்று இருந்தது.
“தப்பித்தவறி ஊருக்குள் குதிரையேறிப் போய்விடாதே மகளே. அதை நடத்திச் சென்று காட்டு வழியில் மட்டுமே பயன்படுத்து” என்று அனுதினமும் வலியுறுத்தி வந்தார். அவளுக்கும் சூழல் புரிந்தது.
தீண்டாமைத் தீயாய் எங்கும் பரவிக்கிடந்த அச்சமயத்தில், ஜமீன் வாரிசுகள் ஏழை எளியோரைக் குப்பையாக பாவித்ததுடன், தங்கள் ஏவலுக்குப் பழக்கப்படுத்தி நாயினும் கீழாக நடத்தினார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவள் கவனத்துடன் நடந்து கொண்டாலும் சில நேரங்களில் இளமையின் துடிப்பால், தந்தை வெளியேறிப் போனதும் குதிரையேறி ஊருக்குள் சுற்றி வரவும் செய்தாள். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், நான்கு குதிரைப் பூட்டிய சாரட் வண்டியில் ஐமீன்தாரணி காஞ்சனாதேவி தன் பணியாட்களுடன் வருகையில் மிக சமீபத்தில் நெருங்கியவுடனேயே இதை கவனித்தவள், கடிவாளத்தைப் பிடித்திழுத்து குதிரையை நிறுத்துவதற்குள் அது அவர்களைக் கடந்துச் சென்றே நின்றது. கடும்சீற்றத்தோடு காஞ்சனாதேவி திரும்பிப் பார்த்தாள். இனி கீழிறங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற நினைப்போடு காளியம்மா குதிரையை விரட்டிக்கொண்டு போய்விட்டாள்.
அன்றைய நாளின் மாலையே அவளது தந்தையை ஐமீன் பங்களாவுக்கு வரவழைத்து நூறு கசையடிகள் கொடுத்தனுப்பியதும் காளியம்மா கடுங்கோபம் கொண்டாள். “அடங்கிப் போகத்தான் வேண்டும், வேறு வழியில்லை” என்று அவள் தந்தை மன்றாடிக் கேட்டுக்கொண்டதால் சினத்தை அடக்கி பேசாதிருந்தாள்.
சிறு வயது முதலே துணிச்சல் மிகுந்தவளாக அவளிருந்ததால், காட்டுப் பாதையில் போவோர் வருவோரிடம் வழிப்பறிச் செய்யும் ஒரு கூட்டத்தைப் பிடித்து ஊர் முன்னே நிறுத்தினாள். அது போலவே கோயில் நகைகளைத் திருட வந்த சிலரை சாமர்த்தியமாக பிடித்துக்கொடுத்து வீராங்கனைன்று ஊர் மக்களால் புகழவும் பட்டாள். மக்கள் மத்தியில் அவளுக்கிருக்கும் செல்வாக்கைக் கண்டு எரிச்சலுற்ற காஞ்சனாதேவி, அவளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கினாள்.
“ஜமீனுக்கு உன்னுடைய குதிரைத் தேவைப்படுகிறது. இதற்கு ஈடான தொகையை வேண்டுமானால் வாங்கிக் கொள்” என்று காளியம்மா வீட்டிலில்லாத நேரத்தில் அவளுடைய அப்பாவிடமிருந்து, அவர் மறுத்துரைத்தும் கேளாமல் ஜமீன் ஆட்கள் குதிரையை ஓட்டிப் போனார்கள். அவள் வந்தவுடன் வானுக்கும் பூமிக்குமாக குதித்தாள். இதென்ன அராஜகம் என விழிகளை உருட்டி கோபத்தில் வெடித்தாள். வேண்டாம், விட்டுவிடு, போகட்டும் என்று தந்தை கெஞ்சியும் கேளாமல் உடனே புறப்பட்டு விட்டாள். ஜமின் மாளிகையில் நுழைந்ததும், குதிரைக்கும் தனக்கும் பழக்கமான சமிக்ஞை ஒலியை அவள் எழப்ப லாயத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த அக்குதிரை பெரிதாக கனைத்து அவளை எதிர்பார்த்து நின்றது. தடுப்பவர்களை ஆத்திரத்தோடு தள்ளிவிட்டு குதிரையிருக்குமிடம் சென்று கயிற்றை அவிழ்த்து அதை விடுவித்தாள். ஓடி வந்து அவளைச் சூழ்ந்து கொண்ட தடியர்களை இடுப்பு பெல்டைக் கழற்றி சுழற்றியடித்தாள். வலி தாங்க முடியாமல் அம்மாவென்றலறி அவர்கள் பின்வாங்கிய தருணம் குதிரையில் தாவியேறி கண்ணிமைக்கும் பொழுதில் அங்கிருந்து பறந்து போய்விட்டாள். இதையெல்லாம் மேல் மாடத்தில் நின்றிருந்த காஞ்சனா தேவி பார்த்து கொண்டே இருந்தாள்.
வேலைக்குச் சென்றிருந்த அவளுடைய அப்பா இரவு வீடு திரும்பவில்லை. காளியம்மா எங்கெங்கோ தேடிச்சென்றும் காணாததால் மிகுந்த துயரமுற்றாள். அடுத்த நாள் காலையில் அவரது சடலம் சம்புதேவன் குளத்தில் மிதந்தது.
காளியம்மா மயக்கம் தெழிந்து விழிக்கையில், கண்களைத் திறக்க மிக சிரமமாக இருந்ததோடு, தலையில் பெரியச்சுமை அழுத்துவதாக விண்விண்னென்று வலியின் தெறிப்புடனும் இருந்தது. நன்றாக விழிகளை விரித்து நோக்குகையில் தன்னைச் சுற்றி எங்கும் நீலவானமே வியாபித்திருப்பதைக் கண்டாள். இதென்ன இடம் என்று ஒரு கணம் விளங்கவில்லை. பிறகே ஊரின் கிழக்குத் திசை மலையின் உச்சியில், இங்குள்ள ஒரேவொரு மரத்தில் பின்னால் கைகள் பிணைக்கப்பட்டு சிறைப்பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது.
தந்தையின் படுகொலைக்குக் காரணமான காஞ்சனாதேவியைக் கொன்றொழிக்கும் வெறியோடு அவளது பங்களாவுக்குச் சென்று, அடியாட்களைக் கடந்து, கையில் கத்தியுடன் அவளை நெருங்கி, இன்னும் ஒருநிமிட நேரம்தான், காரியம் ஜெயமாகும் என்றிருக்கையில், யாரோ தனது பின்னந்தலையில் பலமாகத் தாக்கியது நினைவுக்கு வந்தது.
இன்னும் அந்த பாதகி உயிரோடு இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்ற பற்களை நறநறவென்று கடித்து கொண்டாள். இங்கிருந்து எப்படித் தப்புவது என்று புரியாமல் கைகளை மேலும் கீழுமாக அசைக்க முயல அது சிறிதும் இயலவில்லை. கால்கள் நிற்க திராணியற்று துவள, எச்சிலை விழுங்கிக்கொண்டு மேலே அன்னாந்து பார்த்தாள். ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அம்மலையுச்சிக்கு ஏறிவரும் தடத்தில் சலசலப்பும் இரைச்சலும் தோன்ற பார்வையைத் திரும்பினாள்.
அவளுடையக் குதிரையை நாலைந்துபேர் கயிற்றைப் போட்டுச் சுற்றி வலுகட்டாயமாக இழுத்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னே காஞ்சனா தேவியின் ஜீப் மெல்ல ஊர்ந்து வந்தது. குதிரையைக் கொண்டு வந்து அவள் எதிரேயுள்ள சிறிய சமதளத்தில் நிறுத்தியதும் அது அவளை ஏக்கத்துடன் பார்த்தது. ஜீப்பிலிருந்து இறங்கி வந்த காஞ்சனாதேவி அவளருகில் வந்து அவள் மேவாயை உயர்த்தி அலட்சியத்தோடு நகைத்தாள். “என்னை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை. அப்படி எதிர்ப்பவர்கள் இம்மண்ணில் வாழ்ந்ததாக சரித்திரமும் இல்லை”, என்று வீரவசனம் பேசினவள், தன் ஆட்களின் பக்கம் திரும்பி, “இன்னுமென்ன யோசனை, இவள் குதிரைக்குத் தரவேண்டிய மரியாதையைக் கொடுங்கள்” என்றாள். உடனே இருவர் குதிரையைப் பிடித்து கொள்ள, மற்றவர்கள் ஓடிச்சென்று ஜீப்பின் பின்புறம் வைத்திருந்தச் சவுக்கு கட்டைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்து வந்து குதிரையைச் சூழ்ந்து கொண்டார். காளியம்மா வெலவெலத்து போனாள். அங்கு என்ன நடந்தேறப் போகிறது என்பது நன்றாக புரிய, “என்னைக் கொன்று விடுங்கள். ஆனால் குதிரையை ஒன்றும் செய்யாதீர்கள்” என ஓலமிட்டாள். அவளது கதறலை எவரும் பொருட்படுத்தவில்லை. சுற்றி நின்று குதிரையை பலமாக தாக்கினார்கள். அது வலி தாங்க முடியாமல் பெரும் குரலில் கத்தியது. தலையிலும் உடலின் பிறப்பகுதியிலுமாக அடித்து அவள் கண் முன்னே கீழே சாய்த்தார்கள்.
பெரிதாக மூச்சுரைத்து அது தன் உயிரை விட்டது. “உன் குதிரைக்குச் சிவலோக பதவி கொடுத்தாகி விட்டது, அடுத்து உன்னை கவுரவிக்க வேண்டாமா” என்று எள்ளலுடன் நகைத்தவாறு காஞ்சனாதேவி தன் இடையில் சொருகியிருந்த குறுவாளை எடுத்தாள். “உன் உயிருக்கு விடுதலை தரும் மகத்தானப் பொறுப்பை வேறு யாருக்கும் நான் விட்டுத் தரப்போவதில்லை, அது எனக்கே உரித்தானது” என்றவள், குறுவாளை உயர்த்தி காளியம்மாவின் மார்பில் வேகமாக இறக்கினாள். இரத்தம் பீறிட்டது. “என்னையே குலை நடுங்க வைத்தவளாயிற்றே நீ, உன்ன பொட்டுன்னுச் சாக விட்டிடுவேனா, இன்னும் கொஞ்ச நேரத்துல மேல பறக்குற கழுகெல்லாம் கீழே வந்து உன்னை அணு அணுவா கொத்தி, நீ சித்திரவதைப்பட்டு உயிரை விட போறே”ன்னு பலமாக சிரித்து விட்டு அவளும், அவளது கூட்டமும் அங்கிருந்து சென்றுவிட ஆகாயத்தில் வட்டமிட்ட கழுகுகள் ஒவ்வொன்றாக மெல்லக் கிழிறங்கி வந்தன.
செல்லாத்தா பாட்டி, காளியம்மாவின் மரணத்துக்குப் பிறகான கதையைத் தொடர்ந்து சொன்னாள். “,காளியம்மா செத்த பின்னாடி ராத்திரி நேரத்துல ஜமீன் பங்களாவைச் சுத்தி சுத்தி குதிரை கனைத்தபடி ஓடுகிற சத்தம் கேட்டதா சில பேரு சொன்னாங்க. சிலர் அந்த வெள்ளைக் குதிரையை பார்க்கவும் செஞ்சாங்க. ஒரு நாள் ஜமிந்தாரம்மா தலைவேறு முண்டம் வேறா வெட்டப்பட்டு கிடந்தாங்க. அவங்க புருஷன், புள்ள, அடியாட்கள் எல்லோரையும் காளியம்மா ஆவியா வந்து கொன்னுட்டா. பரம்பரை பரம்பரையா இருந்த ஜமீன் குடும்பம் அழிஞ்சு மண்ணோட மண்ணாயிடுச்சு. சாத்தப்பன் என்கிற ஊர் பெரியவர் ஒருத்தர், காளியம்மா தெய்வமா இருந்து ஊருக்கு நல்லதுச் செய்றதப் பார்த்து, பக்தி சிரத்தையுடன் அவளுக்கு ஒரு கோயில் எழுப்பினாரு. ஜனங்களும் கும்பிட ஆரம்பிச்சாங்க. காலப்போக்குல அதுவும் நின்னுப் போயி, அக்கோயில் இருந்த இடம் தெரியாம புதரண்டிப் போயிடுச்சு. நான் கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்தப்ப என் மாமியார் இதபத்தி கதை கதையா சொல்லியிருக்காங்க” என்றாள் கிழவி.
5
இனியொரு கொலை நிகழ்ந்திடாமல் தடுத்திட என்னென்ன வழிகள் இருக்கிறதென ஆராய்வதில் ஆளவந்தாரின் மனம் ஈடுபட்டது. முன்பு கொலையுண்ட இருவரும் புண்ணியவான்கள் இல்லை. எத்தகைய பாவச் செயல்களையும் அஞ்சாமல் செய்யக் கூடியவர்கள் என அறிந்ததைக் கொண்டு அம்மாதியான அயோக்கியர்களின் பட்டியலை தயார் செய்வதே தனது தலையாய வேலையென உணர்ந்தார். ஊரின் ஒரு வீதியையும் மறந்திடாமலும், தன் தேக அசௌரியத்தை பொறுப்பெடுத்தாமலும் சகாக்களோடு ஓயாமல் சுற்றியலைந்து தகவல்களை சேகரிக்கலானார்.
எடுத்தவுடனேயே எவரும், அவர் இவர் என அடையாளம் காட்டிட முன்வரவில்லை. கேள்வியினை உள்வாங்கிக் கொண்டதும், எச்சிலை விழுங்கியபடி வார்த்தைகள் வெளிவர துடித்தாலும் உதடுகள் தெரியாது என்றே உச்சரித்தன. நீங்கள் சொல்லும் தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப்படும், இதனால் உங்களுக்கு எந்தவித கேடும் வந்திடாது என்று அவர்களின் மனதில் ஆழமாக நம்பிக்கையை விதைத்தப் பின்னரே சிலர் வாயை திறந்து, சிலரை சுட்டிக்காட்டவும் செய்தார்கள்.
நீண்ட பதினான்குத் தெருக்களைக் கொண்ட அந்த பெரிய கிராமத்தில் நயவஞ்சகர்கள் என அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் மூவர். பரம்பரை பணக்காரரும் கிராம முக்கியஸ்தவருமான இரத்தின சபாபதி, சினிமா தியேட்டர் முதலாளி நாராயணன், அடிக்கடிக் கள்ளத்தோணி ஏறி கடல் கடந்துச் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடும் மாரியப்பன் ஆகியோர்களே அவர்கள். இதில் மாரியப்பனின் மீது அவரது பார்வை அழுத்தமாக விழுந்தது. இங்கு பணி மாற்றல் பெற்று வந்து ஒருசில மாதங்களே ஆகியிருந்தபடியால் அவனைப் பற்றி அறியாதிருந்தவர்க்கு இச்செய்தி அதிர்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இருந்தது. முதலில் கொலைகாரனிடம் இருந்து அவனையும் மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும். பின்னர் இந்த வழக்கு முற்றுப் பெற்றவுடன் அவன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நினைத்தார். தற்போது மூவரில் அவனே அதிக ஆபத்தானவன் என்றுத் தெரிகிற வகையில், கொலைகாரனின் அழுத்த குறி அவனாகவே இருக்கக் கூடும் என்பது அவரது கணிப்பு. எனவே மற்ற இருவரின் வீடுகளுக்கும் காவலை பலப்படுத்திவிட்டு அவனது வீட்டுக்குத் தானே முன் நின்று போலீசார் சிலரோடு தீவிரமாக கண்காணிப்பை மேற்கொண்டார்.
அன்றிரவு அமாவாசை தினம் என்பதால் கிராமமே இருளில் மூழ்கிக் கிடந்தது. மாரியப்பனின் பங்களா வாசலில் காவலாளியோடு மேலும் இன்னுமிரண்டு போலீஸ் காரர்களையும் நிறுத்தியிருந்தார். பங்களாவுக்கு பக்கவாட்டிலும் பின்புறவுமாக இன்னும் சிலரையும் நிற்கச் செய்திருந்தார். அவரும் இரண்டு மூன்று முறை வீட்டைச் சுற்றி வருவதும், மற்றவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துவதும், மரபெஞ்சில் அமர்ந்துச் சற்று ஓய்வெடுப்பதுமாக இருந்தவருக்கு பனிரெண்டு மணிக்கு மேல் உறக்கம் கண்களைச் சுழற்றியதும், எழுந்து முகம் கழுவிக் கொண்டு பிளாஸ்கில் கொண்டு வந்திருந்த காப்பியை உறிஞ்சினார். சூடான பானம் தொண்டையில் இறங்கியதும் புத்துணர்ச்சி உண்டாக, மேலும் சிட்டிகைப் பொடியையெடுத்து சர்சர்ரென மூக்கில் இழுத்துக் கொண்டு நடக்கலானார்.
பங்களாவுக்குள் இருக்கிற பெரும்பான்மையான விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் எல்லோரும் உறங்கியிருக்கக்கூடும் என நினைத்தார். ஆயினும், மாரியப்பன் படுத்துறங்கும் அறையில் மட்டும் விளக்கை அணைக்க வேண்டாமென்று முன்பேச் சொல்லியிருந்தார். அவ்விதமாகவே அவன் படுக்கையறையின் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. காம்பவுண்ட் சுவரின் ஓரமாகவும், பூச்செடிகளின் பக்கமாகவும் டார்ச் ஒளியைப் பாச்சியபடி நடந்து அவர் பங்களாவின் பின்புறம் வந்திருந்த நேரம், முன் வாசலின் அகன்ற மிகப்பெரிய இரும்பு கேட் தானாகவே திறந்துக் கொள்ள வெண்ணிற குதிரை உள்ளே நுழைந்தது. காற்றில் ஏதோவொரு அதீத வாசனையை நுகர்ந்த காவலாளியும் போலீஸ்காரர்களும் மெல்ல மயங்கி கீழே சாய்ந்தார்கள். உட்புறம் தாளிடப்பட்டிருந்த தேக்கு மரத்திலான மிக உறுதியான அந்தக் காலத்து இரட்டைக் கதவுகள் தானாகவே திறந்து கொள்ள வராந்தாவில் நுழைந்து படிகளில் ஏறியது அக்குதிரை. பயத்தின் காரணமாக உறங்காமல் நடுங்கிய படியே கட்டிலில் சாய்ந்திருந்த மாரியப்பன், குதிரையின் காலடியோசை அவ்விரவின் நிசப்தத்தை உடைத்திடும் ஓசை கேட்டு பதறி எழுந்தான். உடனே தலையணிக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரிவால்வாரை எடுத்து இலக்கின்றி சுட்டான்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியுற்றவராக ஆளவந்தார் ஓடோடி வருகையில், மாடியறையின் கண்ணாடி ஜன்னலை உடைந்து கொண்டு கீழே தரையில் வந்து விழுந்த மாரியப்பனின் வெட்டுண்ட தலை அவருடைய காலடியில் உருண்டோடியது. முன்புறமாக அவர் விரைந்து வந்தபோது, பனிச்சாரலின் ஊடாக வெளியேறிச் செல்லும் குதிரையையும், அதன் மீது அமர்ந்திருக்கும் பெண்ணையும் கண்டார். குதிரையின் அருகாமையில் நடந்து போகும் அய்யனார் சிறிது நின்று அவரைப் பார்த்து, குதிரை காளியின் வேட்டை தொடரும் என்று சொல்கிறது மாதிரி இருந்தது.
மிகவும் அருமை, கதை ஆசிரியர் கதையை நகர்த்திய விதம் மிக அரூமை
மிக்க நன்றி