கிறீஸ் தூக்கியவன் கையில் ஓர் அன்பு நதி
அடுப்படி நெருப்பின் புகை தின்று வாழ்க்கையைக் கழித்து வருகின்ற சாரதாவுக்கு அப்போதைய அன்றைய காலகட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வும் சவால் களம் தான் நித்ய வறுமையைச் சமாளிப்பதே மிகப் பெரிய சவால் அன்பு விட்டுப் போய் மறை பொருளாகவே இருக்கிற கணவனை நம்பி நடுக்கடலில் வீழ்ந்து கரையேறவே முடியாமல் தத்தளிக்கின்ற மிகவும் பரிதாபகரமான சோக நிலைமை அவளுக்கு
புருஷன் கோபி பெயரளவில் தான் அவளுக்குக் கணவன் எந்த வழியாலும் அவனால் அவள் சகப்பட்டதில்லை உடற் சுகம் ஒன்றைத் தவிர அதையும் தாண்டி வாழ்க்கைக்கு முகம் கொடுத்து அதைப் பல சவால்களோடு எதிர் கொள்ளும் போது நிறையத் தீக்குளிக்க நேர்ந்த மனக் காயங்கள் அவளுக்கு கோபி அதைப் பற்றியெல்லாம் எந்தக் காலத்திலுமே கவலைப்பட்டதில்லை அவன் உலகம் வேறு பிறந்த வீட்டு மனிதர்களைத் தவிர கட்டிய மனைவி உட்பட வேறு எவரையுமே அவன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை குழந்தகள் கூட இரண்டாம் பட்சம் தான்
நிலைமை இவ்வாறு இருக்கும் போது தனது சம்பளப் பணத்தை அவளுக்குத் தாரை வார்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போன மன ஊனத்தோடு இருக்கிற அவனிடம் போய் தனது புனிதமான இல்லறக் கடமை வேள்வியின் நிமித்தம் போராடி ஜெயிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டிய நிலையில் என்றுமே அவள் இருந்ததில்லை அதை மனிதாபிமான சிந்தனைத் தெளிவோடு புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அவன் மனம் அறிவுக் கண் திறந்து ஒளி கொண்டு பிரகாசித்ததை உணர்வுபூர்வமாய் என்றுமே அவள் அறிந்ததில்லை. அவனுடைய மிலேச்சத்தனமன செயற்பாடுகள் அப்படித் தான் இருந்தன.
அவளுக்கு ஆறு பிள்ளைகள் இரு பையன்களின் தோள் மீது பொறுப்பாக நான்கு பெண்கள் அப்பா சரியில்லாததால் பெண்களைக் கரை சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுடையது தானென்று அவள் அதை ஒரு தாரக மந்திரம் போல் அவர்களிடம் கூறுவது தவறாது நடக்கும்
கோபி மல்லாகம் நீதி மன்றத்தில் முதலியாராக இருந்தான் குற்றவாளிகளைச் சாட்சிகளை பெயர் சொல்லிக் கூண்டுக்கு அழைப்பது முதற் கொண்டு மொழிபெயர்ப்பு வேலை வரை தேர்ச்சி பெற்ற அனுபவ ஞானத்தோடு அவன் செயல்படுவது குறித்துக் கந்தோரில் அவனுக்கு மிகவும் நல்ல பெயர் அதற்குத் திருஷ்டிகழிக்கிற மாதிரியே அவனின் தடம் புரண்ட குடும்ப நலன் சார்ந்த வாழ்க்கை நிலை இருந்தது
அவன் எப்படி இருந்தாலும் வண்டி ஓடத் தான் செய்தது அதற்கு அச்சாணியாக நின்று தாக்குப் பிடித்து உழைக்கும் மிகப் பெரிய ஆன்மீக பலம் சாரதாவிடம் மட்டுமே இருந்தது. அது மனதில் இருந்தபடியால் தான் உடம்பாலும் வீட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் சிரமம் பாராது வியர்வை சிந்தித் தினமும் அவள் பாடுபட்டு உழைப்பதுண்டு
அப்போது விறகு மூட்டிச் சமைக்கிற நிலைமையே இருந்ததால் அதிலும் பல சிரமங்களுக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது நாட்டு நிலைமை மோசமாக இருந்ததால் காட்டு விறகும் கிடைப்பதில்லை அப்படித் தான் கிடைத்தாலும் அதை வாங்கிச் சமைக்கிற அளவுக்கு அவளிடம் தான் காசு ஏது.. வீட்டைச் சுற்றிப் பெரிய வளவு இருந்ததால் அதை வைத்துக் கொண்டு சமையலை ஓரளவு ஒப்பேற்ற முடிந்தாலும் இந்தக் காசு விவகாரம் எப்போதுமே பெரிய தலையிடி தான் அவளுக்கு
குழந்தைகளின் தேவைகளுக்கு ஈடு கொடுத்து அவற்றை நிறைவேற்றவே அவள் தினமும் தீக்குளிக்க வேண்டியதாயிற்று இதனிடையே சமையலையும் கவனித்தாக வேண்டும். அதுவும் விறகு எரித்துச் சமைப்பதற்குள் உயிரே போய் விடும். வளவு முழுக்கத் திரிந்து விறகு தேடினாலும் சில சமயம் கிடைக்காது. வீட்டைச் சுற்றிப் பலா தென்னை மாமரம் நிறைய இருந்ததால் பட்ட கொப்புகளை அண்ணாந்து பார்த்துக் கொக்கைத் தடி கொண்டு மூச்சு வாங்க விறகு ஒடித்துப் போடுகிற கலையும் அவளுக்குத் தெரியும்.
மாரி காலம் வந்து விட்டால் ஈர விறகுகள் எரிய மறுத்துக் கண்ணைக் கரிக்கும். அவற்றை அடுப்புப் புகட்டிலே தூக்கிப் போட்டுக் காய வைத்துச் சமையலை முடிப்பதற்குள் ஒரு யுகம் கழிந்து போகும். மதியம் கோபி சாப்பிட வரும் போது ஒன்றுமே நடவாதது போல சாந்தக் களை வடிந்து அவள் உணவு பரிமாறும் போது வயிறு நிறைந்த திருப்தியோடு அவன் கை கழுவிப் போவது ஒரு கனவு மாதிரி அவள் மனதை உறுத்தினாலும் கனவு தான் வாழ்க்கையென்று அவள் சமாதானமாகும் போது வாசலில் கேட்டைத் தாண்டி சையிக்கிள் எடுத்துக் கொண்டு அவன் போவது கூட வெறும் நிழலாகக் கண்களை விட்டு மறைந்து போகும்
ஒரு நாள் இப்படித் தான் அவன் மதியம் சாப்பிட வரும் போது அவள் வீட்டில் இருக்கவில்லை. அப்பா வந்தால் சாப்பாடு கொடுக்கும்படி மூத்த மகனானன ரவியிடம் சொல்லி விட்டுப் போயிருந்தாள். அன்று அவன் தலை வலி என்று பள்ளிக்கூடம் போகவில்லை.. நல்லூர் கந்தசாமி கோவிலில் நெடுநாளாக ஒரு நேர்த்திக்கடன் நிறைவேறாமல் இருந்தது. கல்யாணமான புதிதில் வாழ்வே போய்விடும் என்ற அளவுக்கு அவர்களிடையே உறவுச் சிக்கல் நேர்ந்த போது, அதைக் களைவதற்காக அவள் அம்மாவே நேர்ந்து வைத்த நேர்த்திக்கடன் அது. அவள் பால் காவடி எடுப்பதாக அந்த நேர்த்திக் கடன் இது வரை நிறைவேறாமல் போனதால் அதை நிறைவேற்றி வைக்கும் பொருட்டுத் தன் கடமைகளை முடித்து விட்டு அதைப் பற்றிய விபரம் அறிவதற்காகவே அன்று நல்லூரை நோக்கி அவளுடைய இந்தப் பயணம் அமைந்த போதிலும் தான் வரும் போது அவள் வீட்டில் இல்லையென்பதை அறிந்தவுடன் கோபி ஆவேசம் கொண்டு ரவி கொடுத்த சோற்றுத் தட்டைத் தூக்கி எறிந்து போட்ட சத்தத்தினால் நிலை குலைந்து தடுமாறிய ரவி தன்னைச் சுதாரித்துக் கொண்டு அதை எதிர்கொள்ளலானான்
“சனியன் எனக்குச் சாப்பாடு போடாமல் அப்படியென்ன கோவில் கும்பிடு அவளுக்கு? வரட்டும் கிறீஸ் எடுப்பன் “
இதைச் சொல்லி விட்டுச் சாப்பிடாமலே ஆணாதிக்கத் திமிர் தலையெடுத்து அவன் போனதையே ஜீரணிக்க முடியாமல் ரவிக்கும் பசி எடுக்கவில்லை. அவன் தான் வீட்டிற்கு மூத்த பிள்ளை பதின்னான்கு வயதேயாகியிருந்தாலும் தினமும் அம்மாவைத் தீக்குளிக்க வைத்தே சாகடிக்கிற மாதிரி அப்பாவின் புத்தி மயக்கமான இந்த நடத்தைக் கோளாறுகளை அவனும் அறிவான். அதை எதிர் கொள்ள நேர்ந்த ஆழமான துக்கம் ஒரு சாபமாகத் தொடர்ந்து தன்னை வருத்திக் கொண்டிருப்பதை அம்மாவிடம் வாய் திறந்து சொல்வதற்கான ஒரு தருணம் இது என்று அவன் மிகவும் நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தான்
போன காரியம் முடிந்து சாரதா வரும் போது மாலையாகி விட்டது அப்பா வருகிற நேரம் தான். நல்ல வேளை அவர் இன்னும் வரவில்லை. அதற்குள் அம்மாவுடன் பேசவேண்டிய விடயங்கள் குறித்து மண்டைகாய அவன் யோசித்துக் கொண்டிருக்குப் போதே ஒன்றுமே நடவாத பாவனையோடு அவள் சுபாவம் மாறாமல் அன்பு பெருக்கெடுத்தோடும் குரலில் இனிமை வழிய அப்பாவைப் பற்றிக் கேட்ட கேள்வியின் தாற்பரியம் பிடிபடவே அவனுக்கு வெகு நேரமாயிற்று
“என்ன ரவி ?அப்பா வந்து சாப்பிட்டவர் தானே”
“நல்லாய்ச் சாப்பிட்டார் நீங்கள் இல்லையென்றதும் அவருக்கு வந்த கோபத்தைக் கண்டு நானே ஆடிப் போனன். அவர் என்ன சொன்னார் தெரியுமே? கிறீஸ் எடுத்து உங்களைக் கொன்று போடுவாராம் சொன்னார். எனக்கு வந்த ஆத்திரத்திலை அவரை அப்படியே கழுத்தை நெரிச்சுக் கொன்று போட்டாலும் கோபம் தீராது எனக்கு “
“சீ வாயை மூடு இது எனக்குப் பழகிப் போச்சு” என்றாள் அவள். அதை மனம் கோணாமல் ஏற்றுக் கொண்டு அனுசரித்துப் போகின்ற சுபாவமே தனது இயல்பான அன்பு வழி என்பதைப் பகிரங்கமாக அவனிடம் பிரகடனப்படுத்திச் சொல்கிற பாதிரி அதை அவள் சொன்ன போது அவனுக்குப் புல்லரித்தது. அப்பா என்ன தான் செய்தாலும் அவள் தலையைக் கொய்து கொன்று போட்டாலும் அவளின் அன்பு அவளிடம் ஓர் உயிர்ப் பிரவாகமாகப் பெருகி வழிவதோடு மட்டும் நில்லாது குணக் கோளாறுகளின் ஒரு முழுவடிவமுமாய் அன்பு விட்டுப் போன மூர்க்க குணங்களோடு அம்மாவுக்கு எதிராக எப்ப பார்த்தாலும் போர்க் கொடி தூக்கும் அப்பாவையும் அவரின் கண்களைத் திரை போட்டு மறைக்கும் அந்த இருளையும் தூக்கி எறிந்து துவம்சமாக்கி அதைச் சரி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது தான் அவளின் மிகப் பெரிய பலம். அந்த மகத்தான அன்பு நதி. அது ஒன்றைத் தவிர வேறொரு களங்கமுமேயறியாத அவளின் நிழல் படுவதற்குக் கூடத் தகுதியற்றவராக நிற்கும் இந்த அப்பாவின் கையில் அவள் அன்பு நதி சிக்க நேர்ந்த கொடுமையை எண்ணி வெகு நேரமாய் வாயடைத்த மெளனத் திரைக்குள் அவன் மறைந்து போனதைப் பார்த்து விட்டு அவள் கேட்டாள்
“என்ன அப்பா மேல் இன்னு,ம் உனக்குக் கோபம் போகேலையே?”
“அம்மா உங்களைப் போலை அவர் செய்கிற தவறுகளை மறந்திட்டு வாழுறதுக்கு நான் ஒன்றும் பெரிய மகாத்மா இல்லை. நீங்கள் ஒரு வற்றாத அன்பு நதி என்பதாலை அது முடியு.து நீங்கள் போய் அப்பாவின்ரை கையிலை என்று நினைக்கேக்கை தான் நான் முற்றாக உடைஞ்சு போறன்” என்று கூறியவன் மேலே பேச வராமல் அழுகை முட்டிக் கண்களில் நீர் வழிந்தோட நிற்பதைப் பார்த்து விட்டு, அவள் சொன்னாள்
“அழாதை ரவி இதெல்லாம் எத்தனை நாளைக்கு கோபிச்சுக் கோபிச்சே நீயும் அப்பா மாதிரி மாறாமல் இருக்க வேணும் “
“அதைக் கேட்ட பின்னர் மனம் தெளிந்து அழுத கண்கள் வற்றி அவன் மனமே அன்பு மலர்கள் பூத்து ஒளிரும் ஒளித் தடாகமாக மாறி விட்ட பாவனையோடு கம்பீரமாகக் குரல் உயர்த்தி அவன் சொன்னான்”
“பயப்படாதேங்கோ அம்மா உங்கடை அன்பு நதி தான் எனக்குள்ளும் ஓடும் நான் உங்கடை இரத்தமாகவே இருப்பேன் இது சத்தியம்”
அதை கம்பீரமாகக் குரலை உயர்த்தி அவன் சொன்ன போது தனது உயிர்த் தோன்றலான அன்பு நதிக்கு ஒரு வாரிசு கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் உணர்ச்சி முட்டி அவளுக்குப் பேச வரவில்லை அடுக்களைக்குள் கோபி கோபம் மூண்டு சிந்தி விட்டுப் போன சோற்றுச் சகதி நடுவே அதன் நிழல் கூட அறியாமல் பூரண அன்பு நெறியின் பிரகாச ஒளி பட்டு விசுவரூப தரிசனமாய் களை கொண்டு அவன் நிற்பது போல அவனை இனம் கண்டு விட்ட மகிழ்ச்சியில் பேச்சொழிந்து போன அந்த மெளனம் கூட உயிரை வருந்தி அழ வைக்கிற இருளைத் துரத்திப் பிடிக்கத் தான் என்று அவள் நம்பினாள் விட்டு விலகாத அன்பு நதி மூலமே அதுவும் சாத்தியப்படுமென்று அவளுக்குப் பட்டது.