கிறிஸ்துமஸ் தாத்தாவான தாத்தா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2026
பார்வையிட்டோர்: 4,561 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியர்வையில் நனைந்த சட்டையும், ஹாக்கி மட்டையுமாய் வீடு நுழைந்தான் ராஜா. ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாள் இருந்த அவன் தோற்றமும், பெயருக்கேற்ற கம்பீரத்துடனிருந்தது.

“பாட்டீம்மா…”

அமர்ந்து காலணிகளை அவிழ்ந்தபடி குரல் கொடுத்தான். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அவனுக்கு பாட்டிதான் வேணும்.

“ராஜா, வந்தாச்சாப்பா…”

பாட்டியும் எதோ சூடான பானத்துடன் சிறு பெண் போல ‘குடுகுடு’வென ஓடி வந்தாள்-

“கை கழுவினியாப்பா?”

“ம்ப்ச்…” தலை குலுக்கினான்.

“ஷூவை ஓரமாய் போடறது. யாராவது தடுக்கி விழுந்தா?” அவன் ஏதும் கேளாதவனாய் டம்ளரைக் காலி பண்ண, காலணிகளை ஓரமாய் நகர்த்திய பாட்டி,

“போய் குளியேன்” என்றாள் அடுத்து.

”என்ன இருக்கு சாப்பிட?”

”நீ முதல்ல குளி’ வியர்வை நாறுது. ”

கிழவியின் முகச்சுளிப்பில் பேரன் சிரித்தான். குளித்து வந்தவனை விடாது நைத்தாள் பாட்டி,

“இதென்ன லுங்கி பூவும் காயுமா… வேற கட்டு.”

“அகோர பசி பாட்டிம்மா.”

”முதல்ல மாற்று. புடவை போலிருக்கிறதை எடுத்து ஒளிச்சு வச்சிருந்தேனே?”

“நான் தாத்தா மாதிரியே இருக்கிறேன்றதால என்னை ஒரேயடியாய் அதிகாரம் பண்றீங்க…”

“போடா… அவுங்களை நா அதிகாரம் பண்றதாவது… எதிர்த்து ஒரு பார்வை பார்த்ததில்லை எப்பேர்ப்பட்ட மனுஷனய்யா… ஆறடி உயரமும் ரெண்டடி அகலத்துக்கு நெஞ்சுமாய்… ஆனா மனசு பூதான். என்னைய உள்ளங்கையில வச்சுத் தாங்குவாங்க….”

பேச்சு சுவாரஸ்யத்தில் லுங்கிப் பிரச்சனையை மறந்து இட்லிகளைப் பரிமாறி விட்டாள்!

“குரல் கூட உன்னுது அவுங்க மாதிரிதான் ஆனாஅவுங்க பேச்சு ரொம்ப இதம் – உன் நக்கல், குத்தல், அலட்டல் ஏதும் கிடையாது. ”

“உங்களை உள்ளங்கைல எப்படித் தாங்கினாங்க… என்னால முக்கி முணகி ரெண்டு கையாலயுந்தான் முயற்சியே பண்ண முடியும்னு யோசிக்கறதுக்குள்ளே, நான் நக்கலாப் பேசறேன்னு குத்தறீங்க…!”

“யாரு முகமும் கோணாத பேசுவாங்கப்பா… குழந்தைங்க ரொம்பப் பிரியம். பண்டிகைதோறும் யாரு கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போடக் கூப்பிட்டாலும் கிளம்பிடுவாங்க. அதுக்குன்னு சொந்த செலவுல துணி தெச்சுகிட்டாங்க… உடம்பும் உயரமும் அப்படி. அலுக்காம மீசை தாடியெல்லாம் ஒட்டி, எப்படி பேசி பாடுவாங்கன்ற..?”

குரல்கம்ம பாட்டி பேசியதை சாம்பாரில் தோய்த்த இட்லிகளை விழுங்கியபடி காதில் வாங்கிக் கொண்டான் பேரன்.

“தாத்தா ட்ரஸ்ஸை எடுத்துத் தரேன் – பாக்கறியா?”

சற்று நேரத்தில் பாட்டியின் அறைக்குப் போனான் – கட்டிலில் அச்சிவப்பு உடையைப் பரப்பி, நீவிக் கொண்டிருந்தாள் பாட்டி….

“இதென்ன சின்னதா… வழுவழுன்னு?”

“ஒட்டு மூக்குடா!”

அத்தனை நேரம் ஏதோ எழுத்து வேலையில் மூழ்கியிருந்த அம்மா திடீரென நிமிர்ந்தாள்.

“ஏன் அத்த, ராஜாக்கு மாமா ட்ரஸ் சுச்சிதமா இருக்குமே ஊர் முழுக்க ஆள் தேடின எனக்கிது தோணலை பாருங்களேன்… ஸி.பி. சென்டர் பிள்ளைங்களை ரெண்டு நாளுல போய்ப் பார்க்கணுமே… ட்ரஸைப் போட்டுக் காட்டேன் ராஜா”

இவனுக்குப் ‘பகீர்’ என்றது.

இப்படி திடீரெனத் தோன்றும் ஐடியாக்களை அமல்படுத்துவதில் அம்மா கில்லாடி!

“விளையாடறீங்களா… அதெல்லாம் முடியாது. எனக்கு ஒண்ணுந் தெரியாது.” முடிந்தவரை ஆக்ரோஷமாய் மறுத்தான்.

“என்னடா தெரியணும் – இந்த அங்கிக்குள்ள புகுந்து, தாடி மீசைக்குள்ள முகத்தையும் புதைச்சுகிட்டுதான வரணும்?”

“என் ஃப்ரண்ட்ஸ்ல எவனாவது பார்த்துட்டா வினைதாள்…”

“தியேட்டர், ஹோட்டல், பஸ் ஸ்டாப் தவிர மத்த இடத்துக்கு அவனுங்க ஏன் வர்ரானுங்க?”

“தங்கச்சிங்களுக்குத் தெரிஞ்சா ‘டமாரம் அடிக்குங்க – சண்டை வந்தா ‘தாடிக் கிழவா… ‘ன்னு கூப்பிடுங்க.”

“அவங்ககிட்டேயும் சொல்லலைடா… ஐ ப்ராமிஸ்”

“அதெப்படி தெரியாம போகும்?”

“அந்த சென்ட்டரிலே போய்தான் எங்க ஸ்கூல் குட்டிகளும் ட்ரஸ் பண்ணிக்குங்க… நீயும் அங்கே போய் உடுத்திக்கோ.”

“அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் – வீட்டுக்கு ஸ்டார் மாட்டி, மற்ற அலங்காரமெல்லாம்…”

”செய் – அந்தக் குழந்தைகளுக்கு ஸ்வீட்டும், பரிசும் தர ஒரு மணி நேரம் போதும்.”

இவனை அலட்சியப்படுத்தி விட்டு,

“அத்தை! தொப்பைக்கு ரெண்டு தலையணை வச்சு கட்டிக்கலாமா?” அம்மா பேச இவன் எரிச்சலாகி கத்திவான் –

“ஏன் நீங்களே அங்கியை மாட்டிட்டு போக வேண்டியதுதான? அப்பத் தலையணை கூட தேவையில்லை….”

அம்மாபயங்கரமாய் முறைக்க, அடுத்தது ஹாக்கி மட்டையின் சாத்துதான் என்பது புரிந்து வெளியே நழுவினான்.

ஆனால், இரண்டாம் நாள் நழுவ வழியில்லாமல் அக்குழந்தைகளின் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தான்.

‘தாத்தா தவறாம போன ‘ஹோம்’டா இது’ என்று பாட்டி இவளைத் தடவித் தழுவி வழியனுப்பியிருந்தார்கள்.

பள்ளிச் சிறுமியர் நடன நிகழ்ச்சிக்காகப் பளபளவென்று தயாராகி நின்றனர்.

‘உமா, ராஜாக்கு பேன் கேக்”- என்று அம்மா குரல் தர, அவள் அவனது இடுப்பளவே உள்ள ஒரு பெண். ‘உக்காருங்க தம்பி’. என்று சிரித்தாள்.

வழுவழுப்பான ஒரு பசையைப் பிதுக்கியெடுத்து இவன் முகமெங்கும் பொட்டிட்டு, பின் தேய்க்க, முகம் எரிந்தது.

உதடுகளை, கன்னத்தைச் சிவப்பாக்கியவள் கண்களைச் சுற்றி கருப்பாய் கோடிழுத்தாள். கன்னங்களில் பசை தடவி, வெண் தாடியை ஒட்டிய பின் கத்தரிக்கோலை எடுத்தவள்,

“மீசையைக் கொஞ்சம் ட்ரிம் பண்ணிடறேன் தம்பி'” என்று குனிந்ததும் அலறினான்.

“ஐயய்யோ… நானே பண்ணிக்கிறேன்.”

மீசை, புருவங்களும் வெண்மையான பின் விஸ்தாரமான மூக்கும் பொருத்தப்பட்டது.உடலின் முன்னும், பின்னுமாய் தலையணைகளை வைத்துக் கட்டியபின் அங்கிக்குள் புகுந்து,  ஷூ மாட்டி, தொப்பியும் வைத்தாள்.

“அட… பிரமாதம்ப்பா..”

அந்த நடுத்தர வயது ஆசிரியைகளின் பாராட்டு அவனுக்கு இம்மியளவு சந்தோஷமும் தரவில்லை.

தன் உயரம், நடை, கூர்மூக்கைப் பார்த்து இளம் பெண்கள், “க்ரேட் – லுக்கிங் கை” எனும் போது சந்தோஷப்படலாம் – இதற்கெப்படி?

“நாங்க போறோம் – ரெண்டு டான்ஸும் முடிஞ்ச பிறகு நீ வா என்ன?”

அம்மா பரிவாரங்களுடன் கிளம்ப, கண்ணாடிக்குத் திரும்பினான். பரிச்சயமே அற்ற முகமொன்று அவனை பதிலுக்கு உறுத்தது!

வெண்மையில் புதைத்த ரோஜா நிற முகம்,

சிவப்பு உதடுகள்… மை எழுதிய கண்கள்…

“சே… கோமாளிதான்…”

விலையுயர்ந்த எண்ணையும், ஷாம்புவுமாய் பாரமரித்த அவன் பளபளப்பான கருத்த தலைமுடி கூட தொப்பிக்குள் பதுங்கியிருந்தது.

சிரித்தால் எப்படியிருக்கிறோம்…!

பற்கள் ஆரோக்கியமாய் மின்னின.

”நல்லவேளை இதையும் தட்டியெடுக்காம விட்டாங்க”

சிறையில் இறுக்கப்பட்டது போலிருக்க, அத்தளையும் பிய்த்தெறிந்து ஓட வெறி கிளம்பியது.

பாட்டுக்கள் அலறி ஓய, கதவைத் திறந்து நடந்தான் –

அசைவதே சிரமமாய் தெரிந்தது.

சோம்பல் பாராமல் தினம் காலையில் பதினைந்து நிமிடப் பயிற்சியும், மாலையில் விளையாட்டுமாய் கச்சிதப்படுத்தி யிருந்த உடம்பு கனத்த எரிச்சலில், மறு கதவையும் உதைத்துத் திறந்தவன், பிரமித்தான்.

பிரம்மாண்டமாய் நின்றது கிறிஸ்துமஸ் மரம்.

அறையெங்கும் வண்ண பலூன்கள் மிதந்தன.

தயக்கமாய் இவன் நுழைய மெல்லிய கைதட்டலுடன், இளஞ்சிரிப்பு கிளம்பியது. ஹாவில் கூடியிருந்த குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தவன் உறைந்தான்!

சில நொடிகள் கழித்தே மனதால் கூட அரற்ற முடிந்தது.

மெலிந்த உடல்களில் பொருந்தாதவையாய் விசித்திர கோணங்களில் தலை சரித்திருந்தன அக்குழந்தைகள்…

நெற்றி புடைத்து. கண்கள் பாதிவரை முடி, எச்சில் வழிய அவனைப் பார்த்திருந்த பிள்ளைகள்…

அம்மா ஏன் தன்னிடம் இதுபற்றி சொல்லவில்லை?

எல்லா சிறுவர்களும் சுத்தமாய் உடுத்தி, சிறுமிகள் தலையில் செவந்திப்பூ வைத்திருந்தனர்.

சில குருத்துக்கள் அவனை ஆர்வமாய் பார்த்து தலையைச் சரித்து சரித்து சிரிக்க… மெள்ள,

“ஹாப்பி கிறிஸ்துமஸ் சில்ரன்” என்றான்.

தன் கைகளைத் தூக்கி ஆட்ட, குழந்தைகள் விநோதமாய் சத்தமிட்டன.

அம்மா ஒரு கொத்து பலூனோடு ஒரு மூட்டையும் தர, வாங்கியவன் குழந்தைக் கூட்டத்தை நெருங்கினான்.

அங்கிருந்த ஆசிரியை,

“கிறிஸ்துமஸ் தாத்தா” என்று ஸ்பஷ்டமாய் உச்சரித்து உதவ மனவளர்ச்சி குன்றிய மழலைகள். “தாத்தா… தாத்தா…” என்று கூவின.

தாடியை நீவியபடி இவன் மேலும் நெருங்க, உற்சாகத்தில் விறைத்து ஒருவர் கையை ஒருவர் இறுகப் பற்றி நின்றனர்- சில பிள்ளைகள் மிரண்டு, அழவும் அறியாதது போல உதடுகளை மட்டும் கோணின.

வேறு சில, கண்களைத் தொலைவில் குத்திட்டு, தங்களது உலகில் தளித்திருந்தன.

“இவங்கள அணுகறது. சிரமம் தம்பி இதை ‘ஆட்டிஸம்’னுவாங்க. மன வளர்ச்சி நார்மலான பிள்ளைங்க…. ஆனா, நினைச்சதை உடனே செயல்படுத்த முடியாத உடல் அமைப்பு… இந்தக் குறை… சிறையில் தங்களுக்குள்ள அமிழ்ந்து வேற உலகத்துல சஞ்சாரம் பண்ணுங்க…”

அவர்களது ஆசிரியை விளக்கினாள்.

ஒரு கிறிஸ்துமஸ் பாட்டைப் பாடியபடி மெல்ல அசைந்தான்.

புருவத்தைத் தூக்கி மீசையை ஆட்டினான்.

குதித்து தொப்பையைக் குலுக்க சிரிப்பு பலத்தது.

சிரிக்கையில் குழந்தைகளின் முகம் மேலும் விகாரப்பட, இவன் மனம் பிசைந்தது.

தன் இளமையை, அழகை ஒரு மணி நேரம் இழக்கக் கூட தான் தவித்த தவிப்பு உறுத்தியது… கூசியது.

அழகும், ஆரோக்கியமுமாய் அவன் இதுகாறும் பார்த்து வளர்ந்த வாழ்க்கை வேறு…

இது மறுபக்கம்…

பலர் அறிந்திராத இருண்ட பக்கம்….

அறிந்தால் அச்சமூட்டும் மறுபாதி.

ஆனால் அத்தளிர் முகங்களில் வேதனையோ, குறையோ. இல்லை.

சிறிது மிரட்சி, புது மகிழ்ச்சி… அனைத்துக்கும் மேலே கள்ளமற்ற மனம் தெரிந்தது.

உலகின் நாகரீகம், பசப்புகள் பரிச்சயப்படாத வெள்ளை மனசுகள்.

இவர்களை மகிழ்விக்க வேண்டுமென்ற உந்துதல் பொங்கியது.

கிறிஸ்துமஸின் நற்செய்தியை… இவ்வுலகுக்கு மீட்பு வந்தது என்ற ஆனந்தத்தை இவர்களுடன் பகிர வேண்டுமே…

தான் சொல்ல நினைத்த சில ‘ஜோக்’குகள் இவர்களை எட்டாது என்பது புரிய, எளிய சைகைகளை எழுப்பினான்.

பிள்ளைகள் மலர்ந்தன – இதுவரை பார்த்திராத உருவத்தைப் பற்றிய மிரட்சி நீங்கி, அவனை நெருங்கி வந்து தொட்டன.

சக்தியேயற்ற கைகள் அவன் பாட்டியின் ஸ்பரிசம் போல…

ஆனால் அது முதுமை.

இளமையில் இப்பலவீனம் கொடுமை. மனம் விம்ம, அருகே ஒரு சிறுவனை வாரித் தூக்கினான்.

சிறுவன் நெளிந்து சிரித்தான் – இவன்தந்த இனிப்பைப் பறித்துக் கொண்டு இறங்கினான்.

இன்னும் பல கரங்கள் அவனை நோக்கி தீண்டன – அவற்றில் மூட்டையிலிருந்த பரிசுகளை இவன் தா. பரபரப்பு கூடியது. மெல்லிய வர்ண காகிதங்களைப் பிரித்துத் துழாவின

இவனது நீட்டிய கைகளுக்குள் ஆவலாய் நெருங்கி சிறைப்பட்டு தூங்கிய போது தோளில் சிறகாய் சாய்ந்து கொண்டன.

இவனைக் கண்டுகொள்ளாத குழந்தைகளையும் அணுகி வருடினான். மிருதுவாய் பேசி முத்தமிட்டான்.

“அரை மணி நேரமாயாச்சு ராஜா…”  மெல்ல நினைவூட்டப்பட்டது.

“நீங்க போங்கம்மா… நா வந்துடறேன்.’

அவள் தன் மாமனாரின் ஆவியேதான் தன் மகனுள் புகுந்து விட்டதோ என்ற தினுசில் வினோதமாக தலையாட்டினாள் –

“சரிப்பா…”

அவன் அச்சிறு கூட்டத்தின் நடுவே கிடந்து ஆடிப்பாடி, கிளம்பிய சிரிப்பில் கரைந்தான் – மேலும் இனிப்புகளை விநியோகித்து கிளம்பும் போது தொண்டை அடைத்து, மூக்கு நமநமத்தது.

“தாத்தா அடிக்கடி வருவேன் குட்டிகளா… ஒவ்வொரு மாசமும் கிறிஸ்துமஸ் தாத்தா உங்களைப் பார்க்க வருவாரு…”

வாக்குறுதி தந்தான்.

கையசைப்புடன் வெளியேறியவன், ஒட்டு மூக்கை அவசரமாய் பிய்த்தெடுத்து விட்டு மூக்கைச் சிந்தினான்.

கைக்குட்டையிலேயே முடிந்தவரை முகச்சாயத்தைத் துடைத்தெடுத்து, உடை மாற்றி வெளியேறியவன் உள்ளம் மிக மாறியிருந்தது.

அவனது தாத்தா ஏன் அத்தனை மென்மையானவராய் இருந்தார் என்பது புரிந்தது.

– தேவி.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *