கிடங்கு
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 7,537
(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டாய், எவண்டா இது? எம்மேலே மோதிட்டுப் போறவன். ஏண்டா, கண்ணு இல்லியா? அ’விஞ்சு போச்சா? தோள்பட்டையிலே இடிச்சுட்டு, சுரணையில்லாத எருமை மாடு மாதிரி போறியே… ராஸ்கல்!
நீயும் குடிச்சிட்டியா? சரக்கை உள்ளே தள்ளுனவுடனே… கண்ணு மண்ணு தெரியலியோ. திமிருடா, உங்களு கெல்லாம் திமிரு.
நானும் போட்டுருக்கண்டா, சரக்கை உள்ளே ஏத்தியிருக்கேன். ஏதாச்சும் வம்பு தும்பு பண்றேனா? தப்பு தண்டா பண்றேனா? இல்லேடா…
ஸ்டெடி, ஃபுல் ஸ்டெடி, ஊனி வைச்ச கம்பு மாதிரி ஸ்டெடியா நிக்கென். யார் மேலேயாச்சும் போய் இடிக்கவா செய்றேன்? இல்லேடா…
அடச் சீ! டேய் சைக்கிள்காரா, என்னடா ஆள்மேலே மோதப் பாக்குறே? நீயும், உன்னோட ஓட்டைச் சைக்கிளும்! அடிச்சேன்னா… சைக்கிளும் நீயும் சாம்பாராயிருவீகடா… ஜாக்கிரதை.
அய்யய்யோ… எங்கடா போச்சு, ஏஞ்செருப்பு, சோத்தங்கால் செருப்பைக் காணோமே… என்னாச்சு? தொலைஞ்சு போச்சா, யாரும் எடுத்துக்கிட்டானா?
எவண்டா எடுத்தது? எடுத்த பய எவனாயிருந்தாலும் சரி, மரியாதையா குடுத்துருங்க. குடுக்கலேன்னா… சரிப்பட்டுவராதுடா. கொன்னுருவேண்டா, கொன்னு. தலையை கிள்ளி எடுத்துருவேண்டா. உங்காத்தாளுக்கு கொள்ளி வைக்க புள்ள இல்லாம ஆக்கிருவேண்டா… சொல்லமாட்டேன்டா. சொன்னா, செய்யாம விடமாட்டேன். வம்புச் சண்டைக்கு வரமாட்டேண்டா… வந்த சண்டையை விடவும் மாட்டேன்டா.
குடிகாரம் பேச்சு, விடிஞ்சா போச்சுன்னு அலட்சியமா நெனைக்காதீகடா. நா ராத்திரிலேயும் குடிப்பேன். பகல்லேயும் குடிப்பேண்டா, விடிஞ்சாலும் குடிப்பேன், பொழுது அடைஞ்சாலும் குடிப்பேன்டா…
அடேய்… பசங்களா, செருப்பை குடுத்துருங்கடா. நல்ல செருப்புடா. வேற செருப்பு ஏங்கிட்டே இல்லேடா. இருப்பத்திரெண்டு ரூவாய்க்கு ரூவாய்க்கு வாங்குன ரப்பர் செருப்புடா. குடுங்கடா.
செருப்பு இல்லாம என்னாலே நாலு எட்டுகூட வைக்க முடியாதுடா. கால் பூராவும் ஆணி ஆணியா இருக்குடா. கரண் கரணா இருக்குடா. புண்ணியமா போகுது. குடுத்துருங்கடா.
டேய் ஆட்டோ, இடிக்க வர்ற மாதிரி ஒரசிக் கிட்டு போறீயேடா… பாவி, அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடாதீங் கடா, ரோட்டுலே மனுசனை நடக்க விட மாட்டேங் குறீங்களே, ‘டுர்ர்ரு. டுராரு’ன்னு என்னத்தையாச்சும் ஓட்டிக் கிட்டே வாரீங்களடா…
மனுசனை மதிச்சு வெலகிப் போங்கடா வேலைமெனக் கிட்ட பசங்களா!
என்னடா சின்னப்பசங்களா, சுத்தி சுத்தி என்னை வேடிக்கை பாக்கீக. கூடிகூடி நின்னு பாக்கீக. எதுக்குடா? ஏண்டா? குடிச்சிட்டு ரோட்லே ஆடுறேன்னு பாக்கிகளா?
ஆமா,குடிச்சிருக்கேண்டா. மூக்குமுட்ட குடிச்சிருக்கேண்டா.
நா பிராந்தி குடிக்கேன். குடிக்கக் கிடைக்குது. தெருவுக்கு தெரு ஒயின்ஷாப் இருக்கு. கலர் கலராய் லைட்டை போட்டுக்கிட்டு, கவர்ச்சியா கூப்புடுறாங்க.
உக்காந்து குடிக்க இடம் குடுக்காங்க. மனுசனை மதிச்சு மரியாதை பண்றாங்க. மனசுகிடந்து குளிர்ந்து போகுது. எப்படி குடிக்காம இருக்க முடியும்?
குடிச்சாத்தானே, மனுசன் கெத்தா இருக்க முடியுதுடா. குடிக்காம, ஒழுக்கமா இருந்து, ரிக்ஷா இழுத்துப் பிழைக்கிறவனை யாரு மதிக்காக? எவன் மதிக்கான்? மனுசனை மனுசனா எவன் நினைக்கான்?
குடிச்சிருக்கிறவனைக் கண்டா… ஊரு ஒலகம் பயப்படுது. ஒதுங்கிப்போகுது. வம்புபண்ணாம வெலகிப் போகுது. ஏளனப்பேச்சு பேசாம, வாயைப் பொத்திக்கிட்டு போகுது.
குடிக்காம இருக்குறப்ப… ஊரு ஒலகத்தைப் பாத்து எனக்குப் பயமாயிருக்கு. வாழ்க்கையை நெனைச்சா… குலை நடுங்குது. குடும்பத்தைப் பத்தி யோசிச்சா… மனசு கிடந்து நடுங்கிச் சாகுது. மனுசமக்களைப் பாத்தாலே, என்னமோ மிருகங்களை பாத்த மாதிரி அடிவயிறு கலங்குது.
குடிச்சிட்டா… அந்தத் தொல்லையேயில்லே, சள்ளைபிடிச்ச அந்த நெனைப்பே இல்லாமப் போயிருது. போதை ஏற ஏற… மனசுலே பயம் அத்துப் போகுது.
அதைவிட முக்கியம் என்ன தெரியுமா?
நா அறிஞ்சும் அறியாம செய்யறச் சின்னச் சின்ன தப்புகளுக்கெல்லாம் மன்னிப்பு வாங்கிக் குடுக்குறது இந்தப் போதைதான்…
‘அட, விட்டுத்தள்ளு! ஏதோ போதையிலே செஞ்சுட்டான்’ன்னு தண்டனையிலேயிருந்து காப்பாத்தி விட்டுரும்.
அதையும் விட முக்கியமானது, ஒன்னு இருக்கு. மனுசனை மனுசனா மதிக்காம, தும்பப்படுத்துற இந்த மனுசஜெம்மங்களை பயமுறுத்த முடியுதே… வெரட்ட முடியுதே… இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் இல்லியா?
என்னாங்கடா, ஒரு தினுசா பாக்குறீக? எரிச்சலா பாக்குறீக. நடுரோட்லே குடிச்சிட்டு கலாட்டா பண்றானேன்னு கோபமா பாக்குறீகளா?
பாருங்கடா… நல்லா பாருங்க. உங்க கோபம் என்னை என்னடா பண்ணும்? வெட்டிச் சரிச்சிருவீகளோ? அடிச்சிருவீகளோ? உங்களாலே முடியுமாடா? நடக்குமா, ஏங்கிட்டே? போங்கடா போங்க, போக்கத்த பசங்களா?
என்னை யார்னு நெனைச்சீக? வெட்டிருவேன், வெட்டி. ஒவ்வொருத்தன் தலையை சீவிருவேன் சீவி, பனங்காயை சீவி எறியுற மாதிரி.
வாங்கடா… தைர்யமிருக்கிறவன் யார்னாலும் வாங்கடா, வந்து பாருங்கடா.
கலாட்டா பண்றேனாம்! நடுரோட்லே நின்னு கலாட்டா பண்ணத்தான் செய்றேன். செய்வேண்டா. செய்வேன். யாரு என்னைக் கேக்க முடியும்? யார்டா கேக்க முடியும்?
ஏங்கிட்டே யாரும் கலாட்டா பண்ணலியா? ஊரு ஒலகம் ஏங்கிட்டே கலாட்டா பண்ணலியா? வாழ்ந்த வாழ்க்கை பூராவும், ஏங்கிட்டே கலாட்டா பண்ணலியா? வந்தவன், போனவன், இருந்தவன். இளைச்சவன், பெத்தவன், கட்டுனவள்னு எல்லாருமே ஏங்கிட்டே கலாட்டா பண்ணி, கூத்து பண்ணி, என்னை ரோட்லே நிப்பாட்டிட்டாகளே…
அப்ப எல்லாம் நீங்க எங்கடா போனீக? என்ன செஞ்சீக?
அடக் கூத்துவனே. ஏங்கிட்டே கலாட்டா பண்ணி, என்னை அழுக அழுக வைச்ச கொடுமை கொஞ்சமா, நஞ்சமா? அழுது தீருமா? எழுதித் தீருமா?
நா அப்ப சின்னப்பய. கிராமத்துலெ மூணாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தேன். எங்க ஆத்தா, எனக்கு ரொம்பப் பிடிக்கும். எம்மேலே உசுரா கிடப்பா. வாய்க்கு ருசியா திங்கக் குடுப்பா. நல்லா ஆத்தா.
ஆனா, எங்க அப்பன் இருக்கானே அவன் ஒரு சோம்பேறி. அவன் கால்பட்ட இடத்துலே புல்கூட முளைக்காதுடா. கள்ளுத்தண்ணியை குடிச்சிட்டு வந்து எங்க ஆத்தாளைப் போட்டு அடிப்பான். கதறக் கதற அடிப்பான். ஆத்தாளோட தலை முடியை பிடிச்சு இழுத்துப் போட்டு காலாலே மிதிப்பான் பாவிப்பய.
குடிச்சாலும் வந்து அடிப்பான். குடிக்க காசு கிடைக்காட்டாலும் ஆத்திரத்திலே உதைப்பான். அந்தப் பாவிப்பயலை பாத்து பாத்து பதறிப் போய்க் கிடப்பேன். அவனெல்லாம் ஒரு மனுசனா?
எங்க ஆத்தா அவன்கிட்டே சிக்கிக்கிட்டு அனுதினமும் நரக வேதனைப் பட்டா. நா அதைப் பாத்து பதறிப் பதறி நடுங்குவேன்.
ஆத்தா ரொம்ப நல்லவா. என்னைப் பாசத்தோட மடியிலே போட்டுக்கிட்டு, ‘ரோ, ரோ’ன்னு ரோராட்டு பாடுவா. ‘ஏங்கண்ணு, ஏஞ்செல்லம்’னு பிரியம் பிரியமா கொஞ்சுவா. நேரம் பார்த்து, முகம் பார்த்து கஞ்சி ஊத்துவா. ‘குடிடா கண்ணு, குடிடா தங்கம்’ னு செல்லம் பொழிவா.
அப்பேற்பட்ட ஆத்தாளை எங்க அப்பன் அடிச்சு அடிச்சே கொன்னு போட்டான்டா. அன்பு, பாசம், பிரியம்ங்கிறதெல்லாம் ஆத்தா சாவோட தொலைஞ்சே போச்சு. அத்துப் போச்சுடா.
அதுக்கப்புறம் சித்தின்னு சொல்லி, ஒருத்தி வந்து சேர்ந்தா. அம்மம்மா! அந்தப் பாதகத்தி செஞ்சகொடுமை கொஞ்சமில்லே. தாங்கவே முடியாம நா அழுத அழுகை… சொல்லியழ ஆள் இல்லாம நா தவிச்ச தவிப்பு… பருந்து கால்லே சிக்குன கோழிக் குஞ்சா கதறித் துடிச்சேன்… அந்தப் பேய்க்கிட்டே எப்படி இருக்க? என்ன செய்ய?
வேற வழியேயில்லே. தப்பிச்சு ஓடியாந்துட்டேன். இங்க வந்து நாபட்ட கஷ்டங்கள் கொஞ்சமா? அடடா! எத்தனை ஹோட்டல்கள்லே வேலை பார்த்தேன். எச்சிலை எடுத்தேன். பெஞ்சு துடைச்சேன். சப்ளை பண்ணுனேன்.
அப்போ… எல்லாரும் என்னை அடிப்பாக. எதுக்காக அடிச்சாகன்னு கணக்கும் இல்லே. காரணமுமில்லே. எதுக்கெடுத்தாலும் அடிப்பாக. நாக்குலே நரம்புல்லாம நாற வசவு வைவாக.
எங்க திரும்பினாலும் சித்திகள்தான். சுத்தி சுத்தி நின்னாக. அன்பு காட்டுற ஆத்தா மாதிரி, ஒருத்தர் கூட இருந்ததேயில்லை.
ஒரு தங்கமான பொண்ணு. பேரு அழகம்மா பேரைப் போலவே தேகம். அழகுன்னா… அழகு, அம்புட்டு அழகு. தேவதை மாதிரி.
சீமான் வீட்லே ஜெகஜோதியாக ஜொலிக்க வேண்டிய சீமாட்டி, அவ. பாவம், காலக் கொடுமை. யாருமத்த அனாதையா நின்னா. காப்பாத்த ஆள் இல்லே.
ஒரு நல்ல மனுசர், அனாதையா நின்ன எங்களை சேத்து வைச்சாரு. ஒரு குடும்ப விளக்கை ஏத்தி வைச்சாரு.
எனக்கு அவளை கண்டாலே பயம். அந்த அழகே என்னை அண்ட விடாம அரட்டிச்சு. சாயங்காலச் சூரியன் மாதிரி தகதகப்பா இருப்பா.
எப்படியோ ஆறு மாசம் ஓடுச்சு. அவள்கிட்டே யாச்சும் எங்க ஆத்தாளோட அன்பு கிடைக்கும்னு ஏங்கிப் போய் கிடந்தேன்.
ஒரு நா-
காய்ச்சல்லே சுருண்டு கிடந்தேன். குளிர் காய்ச்சல் தாங்காம அணத்திக்கிட்டு கிடந்தேன். அப்படிப்பட்ட சமயத்துலே என்னைத் தவிக்க விட்டுட்டு, அந்தப் பாதகத்தி ஒரு மைனர் பயலோட ஓடிப்போய்ட்டா.
எம்மனசே ரணமாச்சு. அவமானம் தாங்காம அழுதேன். ஒரு முழுத்த ஆம்பளைக்கு இது எம்புட்டு தலை குனிவு?
அப்படியே குன்னிக் குறுகிப் போனேன். பழகுன ஜனங்க முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியலே.
உள்ளுக்குள்ளே ஒடைஞ்சு நொறுங்கிப் போயிட்டேன். நாதியத்துப் போன நா என்ன செய்ய? வேற ஏரியாவுக்கு வந்துட்டேன். ரிக்ஷா இழுத்துப் பொழைச்சுக்கிட்டிருக் கேன். அதுவும் ராத்திரியிலே மட்டும் தான், ரிக்ஷா வாடகைக்குக் கிடைக்கும்.
கஞ்சித்தண்ணி காய்ச்சுறதுக்கு ஆள் வேணுமே, ஒரு பெண்ணை சேத்துக்கிட்டேன். அவளுக்கு இப்ப ரெண்டு புள்ளைக.
எனக்கு வாய்ச்ச இவா, பெரிய ராட்சஸி. ரொம்ப கடுமையானவா. இருபது ரூவா இல்லாம வீட்டுக்குப் போகவே முடியாது. போனா, வசவு உரிச்சு எடுத்துருவா. ரொம்ப ராங்கிக்காரி.
அவாகிட்டே நா படுற பாடு இருக்கே… இது பெரிய கொடுமை.
அவா கொடுமை தாங்காமத்தான், இங்கே வந்துடுறேன்.
என்ன இப்படிப் பாக்குறீக? இம்புட்டு வேதனையை உள்ளுக்குள்ளே வைச்சுக்கிட்டு இத்தனை வீராப்பு பேசுறானேன்னு பாக்குறீகளா? ஆமா… வேதனைன்னா சாமான்யமான வேதனயில்லே. வெட்டுப்பட்ட புண்ணுலே திராவகத்தை ஊத்துன மாதிரி… உசுரைப் பிடுங்குற ரணவேதனை.
ரணவேதனையே என்னோட வாழ்க்கையாகிப் போச்சு.
ஊரு உலகமும், வாழ்க்கையும், சுத்தியிருந்த மனுசமக்களும் ஒன்னு சேந்துக்கிட்டு எங்கிட்டே ஆயுஸு முழுக்க கலாட்டா பண்ணி பண்ணி… என் மனசையே கிழிச்சு, என் சுபாவத்தையே நிறம்மாத்தி-அன்பு, பாசம்ங்கிறதே எங்கண்ணுலே தட்டுப்படாத அதிசயமாகி…
எம் பொழப்பு இப்ப என்னாச்சு? கழுதை வாயிலே சிக்குன காகிதம் மாதிரி கிழிஞ்சு போய்-கசங்கிப் போய்- நைஞ்சுபோய்- கூழ் கூழாகிப் போச்சு…
எங்க ஆத்தா மாதிரி அன்பு காட்டி அரவணைக் கிறதுக்கு-மனசுலே பாசப் பின்னலை பின்னி வளர்க் கிறதுக்கு-ஒரு ஜீவன், ஒரே ஒரு சீவன் இருந்தாக் கூட.. போதுமே!
நா இப்படியாயிருக்க மாட்டேனே… குடிச்சு குடிச்சு. நாசமாயிருக்க மாட்டேனே… ராத்திரி முழுக்க அடி வயித்துலே வலி தாங்காம அலறி அலறிச் செத்துக் கிட்டிருக்கேனே, இந்தப் பாதரவு எனக்கு நேர்ந்திருக்காதே… குடியாலே வந்த வலிதானே இது? குடல் வெந்து போய் புண்ணாகிப் போன வலிதானே..
எவண்டா இது? ‘பாழ் பாழ்’னு ஓயாம கத்திக்கிட்டு. என்னடா லாரிக்காரா, என்னை மொறைக்கே? ரோடு ஒனக்கு மட்டும் சொந்தமா? ஒன்னோட மொறைப்புக் கெல்லாம் பயந்துருவேனோ? அதுக்கு வேற ஆளைப்பாரு.
போடா… ஒன்னை மாதிரி ஆயிரம் மொறைப்பை பாத்துருக்கு. யாரும் நம்மளை டச் பண்ணிட முடியாதுடா.
இதென்னடா… பின்னாலே எவண்டா ‘வாழ், வாழ் னு ஹாரன் அடிக்குறது? கார்காரனா? கத்துங்கடா. ரோட்லே காத்துக்கிடந்து சாகுங்க.. நாபயப்பட மாட்டேண்டா. ஒதுங்க மாட்டேண்டா. ரோடுன்னா உங்களுக்கு மட்டுந்தானா? மனுசனுக்கு இல்லையா?
எஞ் செருப்பைக் காணோம்டா… சோத்தாங்கால் செருப்பு.
யார்டா, நீங்க? எதுக்குடா சுத்தி வந்து நிக்கீக? ஏய்… மேலேகை வைக்காதே. தள்ளாதீகடா…
ஏய் ஏய்… ஏண்டா கையைப் புடிக்கீக? எவண்டா இது, காலைப் புடிக்கிறவன்? பாவிப் பசங்களா, விடுங்கடா! விடுங்க, என்னை.
ஐயய்யோ… எதுக்குடா தூக்குறீக? எங்கேடா தூக்கிட்டுப் போறீக? ஐயய்யோ, என்னை விடுங்கடா…
அடேய்… அடேய் என்னடா பண்ணப் போறீக? அடப்பாவிகளா… ரோட்டோரக் கிடங்குலே போட்டுட்டுப் போறீகளே… சாக்கடை நாறுதுடா…
ஊரு ஒலகம் கூடி என்னை வாழ்க்கையிலேயிருந்து கிடங்குக்குள்ளே தள்ளுச்சு. நீங்க என்னடான்னா… குப்பை கூளத்தை அள்ளி தொட்டியிலே போடுற மாதிரி, என்னைத் தூக்கி ரோட்டோரக் கிடங்குலே போட்டுட்டுப் போறீகளே?
பாவிகளா, என்னாலே எந்திக்க முடியலேடா. சாக்கடை நாத்தம் குடலைப் பிடுங்குதுடா…
தூக்கி விடுங்கடா… அய்யோ… என்னைக் காப்பாத்துங்க. ஒரு கை குடுங்க…
நாறிப்போன எம்பொழப்புலேயிருந்து என்னைக் காப்பாத்துங்கடா…
தூக்குங்கடா… தூக்குங்கடா… ஐயோ, என் செருப்பு… என் பொழைப்பு… என்னைத் தூக்குங்கடா… தூக்குங்கடா… தூக்குங்…
– செம்மலர், ஜூலை 1993.
– விரல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1995, கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
