கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2025
பார்வையிட்டோர்: 419 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னதென்று சொல்லத் தெரியாத ஒரு அவஸ்தை… எனக்கு மூச்சுத் திணறியது. 

என் தலைமாட்டில் குனிந்து என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது… குதிரைபோல் மதமதவென்று வளர்ந்திருக் கும் கன்னங்கரிய, கொழுத்த ஒரு நாயா…? அதன் மூச்சுக் காற்று அக்னி ஊற்றாய் என் உதட்டில் உணர்வதுபோல்… 

திடுக்கிட்டு நான் கண் விழிக்கிறேன்… 

அறைக்குள் விடிவிளக்கின் அடியில் சிறைப்பட்டுக் கிடக்கும் மங்கிய நீல வெளிச்சம்… மெல்லக் கிறங்கிக் கொண்டிருக்கும் ஸீலிங் ஃபேனில் என் உடலத்தைப்போல் சிலிர்த்துக் கொண்டி ருக்கும் வெள்ளைக் கொசு வலை. பச்சிலையின் நரம்பாய் என்னில் ஊடாடிக் கிடக்கும் அவர்… 

செவிப்பறையில் நாயின் வெண்கலக் குரைப்பொலி… 

வெடவெடவென்று என் தேகம் நடுங்கியது… 

நாய்… நாய்… என்ற சொற்கள் என் தொண்டையை விட்டு வெளியே வர முடியாது திக்கித் திணறிக் கொண்டிருந்தன. 

என் காதில் குவியும் அவர் உதடுகள்… ‘ஸ்வப்பனா ‘… 

என் பிடி மேலும் இறுகியது… என் பிடரியில், மார்பிடுக்கில் அரும்பி நிற்கும் வியர்வையின் ஈரக் கசிவை அவர் உணர்ந்திருக்க வேண்டும். 

‘என்னடீ இது சின்னக் குழந்தை போல்…! உங்ககிட்டே எத்தனை தடவை சொல்லி விட்டேன். நாய்மீதுள்ள இந்தப் பயத்தை விட்டொழிண்ணு!…’ 

அவரை மேலே நான் பேச விடவில்லை. வெளியில் கேட்டுக் கொண்டிருக்கும் குரைப்பின் பக்கப் பாட்டாய் இங்கே இவர் குரலின் கரகரப்பு என்னை மேலும் பயமுறுத்தியது. 

‘ஐயோ சித்தெ பேசாமல் இருங்களேன்…’ 

அவர் வாயைப் பொத்திய என் கரத்தை அவர் தன் நெஞ்சின்மீது எடுத்து வைத்துக்கொண்டார். விரல்களை அவருக்கே உரித்தான பாணியில் அழுத்தி நீவி விடும்போது, வழக்கம்போல் என் மென்மை உணர்வுகள் துயிலெழவில்லை. 

ஜன்னலில் தெரியும் கறுத்த வானம் முழுவதும் பரந்து கிடக்கும் நாய் முகம்… வெறி நாயாய்த் தென்னை மர உச்சிகளில் பாய்ந்து நடக்கும் காற்று… 

வெளியில் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் குரைப் பொலியிலிருந்த சிரத்தையைப் பிய்த்தெடுக்க, வறண்ட மண்ணில் விழுந்த மழைத் துளியாய் அவரிடம் அமிழ்ந்து தூக்கத்தை வரவழைக்க நான் முயற்சிக்கிறேன். கழுதை புரண்ட களமாய், தாறுமாறாய், கோர்வையற்ற நினைவுகள். 

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்குப் புதுக் குடித்தனம் வந்த நாள் நடு இரவில் அடுத்த வீட்டு விஸ்வநாதனின் நாயின் விடாத குரைப்பொலியில், பிரளய காலத் துரும்பாய் என் நெஞ்சுப் பறவை இப்படித்தான் படபடவென்று சிறகடித்தபோது காரணம் கேட்டு அவரிடம் என் இதயத்தைத் துகிலுரித்துக் காட்டினேன். 

எனக்கு வயசு எத்தனை என்று சரியாக ஞாபகம் இல்லை. மூன்றோ, நான்கோ இருக்கலாம். அப்போது ஒருநாள், அப்பா அம்மாகூடப் பாட்டி வீட்டுக்குப் போயிருக்கிறேன். பாட்டி வீட்டுக் கொல்லையில் அந்தி மந்தாரைச் செடியில் பூத்துக் கிடக்கும் ஊதா நிறப் பூக்கள் என்றால் எனக்குக் கொள்ளை ஆசை. அதையே பார்த்துக்கொண்டு சமையலறையின் பின் பக்க வாசல் நடையில் நிற்கும்போது பாட்டி பால் தம்ளருடன் வந்தாள். ‘என்ன ஸ்வப்பனா… சமர்த்தில்லையோ… இந்தப் பாலைக் குடிச்சுடு’ என்று சொல்லி என் கையில் பால் தம்ளரைத் தந்து விட்டுச் சமையலறைக்குள் சென்றாள். அப்போதுதான் அந்தி மந்தாரைச் செடியின் பக்கத்தில் சோர்ந்து மல்லாந்து கிடக்கும் கன்னங்கரிய ஒரு சொறி நாயும், அதன்மீது விழுந்து ஆக்ரோஷத்துடன் பால் குடித்துக்கொண்டிருக்கும் இத்துனூண்டு இருக்கும் மூன்று நான்கு குட்டிகளும் என் கண்ணில் படுகின்றன. வாசல் படியிலிருந்து இறங்கி ஓரிரு அடி முன்னால் வைத்து அங்கேயே பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு நாய்க்குட்டி அதன் நிறமும் கறுப்புதான். என்னைக் கண்டுவிட்டு குடுகுடுண்ணு என்னை நோக்கி ஓடி வந்தது. கொஞ்சம் பாலைக் கீழே தரையில் ஊற்றினேன். அது ஆவலுடன் நக்கிக் கொண்டிருக்கும்போது, மற்ற நாய்க் குட்டிகளும் ஓடிவந்து என்னைச் சூழ்ந்து கொண்டன. குட்டிகள் ஆவலுடன் என் முழங்காலின்மீது தம் கால்களைத் தூக்கிவைத்து என் மீது தாவி ஏற எத்தனித்தபோது, நான் பயந்துபோய், ‘ஆ’ என்று கத்திக்கொண்டே கையில் இருந்த பால் தம்ளரை அவைமீது வீசியெறிந்துவிட்டு, உள்ளே ஓடுகிறேன். என் முதுகின் பின்னால் பரிதாபமான கதறல், இடைவிடாமல் கேட்டு ஓய்கிறது. பிறகு தெரிந்தது; அந்தக் கறுத்த நாய்க் குட்டி செத்துப் போயிட்டதுண்ணு! அந்த அந்தி மந்தாரைச் செடியின் பக்கத்திலேயே ஒரு குழி தோண்டி முனியன் அதைப் புதைப்பதைப் பார்த்தவாறு நிற்கும்போதே என் அகத்தில் இன்னதென்ற சொல்லத் தெரியாத இந்த அவஸ்தை தொடங்கி விட்டிருந்தது. பிறகு என்னைக் காணும் போதெல் லாம் அந்த அம்மா நாயின் முகத்தில் தெரியும் ஆக்ரோஷம்… அப்பப்பா… 

வெளியில் ராக விஸ்தாரத்தோடு நாயின் ஊளை… மறுபடியும்! 

‘நீ இன்னும் தூங்கலையா ஸ்வப்பனா? இத்தனைக்குப் பயப்பட நாயிடம் என்ன இருக்கு?’ 

பயம் தாங்கும் என் இதயத்தை அவரிடம் கரைத்துவிட நான் வெறி கொண்டேன். 

பிறகு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஒருநாள் மத்தியானம் சாப்பிட, வேகாத வெயிலில் புத்தகக் கட்டு டன் நான் வீட்டுக்கு விரைந்து கொண்டிருக்கும்போது… வீதியில் ஒன்றுக்குள் ஒன்றாய் முடிச்சிறுகி விலகத் தெரியாது, தெருப் பையன்களின் கல்லெறிதலில் மிரண்டு முன்னும் பின்னும் ஓட முடியாமல் தவிக்கும் இரண்டு நாய்கள்… அவைகளின் கண்களில் எரியும் அந்த ரௌத்திர பாவம்… 

எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. 

ஒரு அருவருப்பு… 

இந்தக் கட்டத்தில் நான் ஏன் அந்த நாய் ஜோடியை நினைக்க வேண்டும்… நாய்க்கும் நரனுக்கும் என்ன வித்தியாசம்? இப்போது அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது… எனக்கு அவர்மீது வெறுப்பாய் வந்தது… அவரிடமிருந்து உதறிக்கொண்டு புரண்டு படுத்தேன். 

வெளியில் குரைப்பொலி இன்னும் நின்றபாடில்லை. ஒரு வேளை இதுக்கும் வெறி பிடித்து விட்டதோ? 

என் கல்லூரித் தோழி எமிலி. 

அவள் வீட்டில் நின்ற அந்தச் சின்ன நாய்க் குட்டி, உடம்பு முழுவதும் கறுகறுவென்று அடர்த்தியாய் ரோமம் வளர்ந்து தொங்கும் அழகான கறுத்த சடை நாய். எப்போ பார்த்தாலும் அவள் மடியில் விளையாடிக் கொண்டிருக்கும். ஒருநாள் அது அவளைக் கடித்து விட்டது. குட்டி நாய்தானே என்று யாரும் அதை அப்படிப் பாராட்டவில்லை. சில நாட்களில் அது நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு கதறிக் கதறிச் செத்துப்போய் விட்டபோதுதான் தெரிந்தது, அதற்கு வெறி பிடித்திருந்தது என்று! ஆனால், இதற்குள் காரியம் மிஞ்சி விட்டது. வாயிலிருந்து நுரை ததும்பி வழிய, நாக்கை வெளியே நீட்டி, நாயைப்போல் ஊளையிட்டு எமிலி உயிர்விட்ட அந்தப் பயங்கரக் காட்சி!… 

எனக்கு மீண்டும் வியர்த்துக் கொட்டியது. படுக்கை முள்ளா கியது. தொண்டக்குள் ஒரு வறட்சி… மெல்ல எழுந்தேன். 

‘இதென்ன ஸ்வப்பனா… இப்படி ராத்திரி பூரா தூங்காமல் பயந்து சாகிறே? சுல்தானை வாங்கினதே உன் பயம் தீரட்டுமுண்ணு தானே… நாள் செல்லச் செல்ல உன் பயம் கூடுவதல்லாமல் குறையக் காணோமே… 

ஆமாம், என் பயத்தின் காரணத்தை இவரிடம் மனம் திறந்து சொன்ன பிறகுதான், விஸ்வநாதனுடைய நாயின் குட்டியான சுல்தானை இங்கே இவர் கொண்டுவந்தார். பாட்டி வீட்டு அந்தி மந்தாரைச் செடி பக்கத்துப் புதை குழியில் இருந்து உயிர் பெற்று எழுந்து வந்ததைப்போல் அது எனக்குத் தோற்றமளித்தது. நான் பயந்து விரைந்தேன். ஆனால், அவர் விடவில்லை. ‘நாய் மீதுள்ள உன் பயம் தெளிய இதுதான் வழி. சுல்தான்கூடப் பழகப் பழக இந்த நடுக்கம் எல்லாம் பறந்து போயிடும்.’ 

‘ஐயோ… பாம்பின்மீது பயமுண்ணு அதைப் பிடிச்சு என் மடியில் கட்டுவீங்களா? இதைக் கொண்டுபோய்த் திரும்பக் கொடுத்து விட்டு வாங்களேன்’ நான் முறையிட்டேன். 

மற்ற எந்தக் காரியத்திலும் என் பேச்சைக் கேட்கும் அவர், இந்த நாய் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார் என்பதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை… ஒருவேளை அப்படியும் இருக்குமோ…! 

நான் மெல்ல எழுந்து சென்று பிளாஸ்கிலிருந்து வென்னீரை ஊற்றிக் குடித்தேன். ஃபேனின் ரெகுலேட்டரை முழு வேகத்திற் குத் திருகினேன். மேஜை மீதிருந்த டைம்பீஸின் முள் இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. 

‘எனக்கு இப்போ சந்தேகம். நீங்க இந்த சுல்தானை விடாமல் இங்கேயே வச்சுட்டிருக்கிறது என் பயத்தை ஒழிக்கவா? இல்லை, உங்களை அப்பாவாக்க முடியாத என் இயலாமையைச் சுட்டிக் காட்டவா?’ 

அவர் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். 

‘அதுக்கு நீயா காரணம்? காரணம் தெரிஞ்சிருந்தும் எதுக்கு இப்படி குத்திப் பேசணும்?’ 

வெளியில் சுல்தானின் குரைப்பு இப்போது வீட்டையே குலுக் கியது. நான் மறுபடியும் அவரிடமே ஓடிச் செல்கிறேன். 

‘யாரோ வந்திருக்கிறாப்போல இருக்குது. அதுதான் சுல்தான் இப்படி விடாமல் குரைக்கிறான். விடு, போய்ப்பார்த்துவிட்டு வறேன்…’ என்று அவர் எழுந்திருக்க முயன்றபோது, ‘வேண்டாம்… என்னை விட்டுவிட்டு நீங்க இப்போ எங்கேயும் போக வேண்டாம். உங்களை நான் விட மாட்டேன்’ என்று அவரை நான் கட்டிக்கொண்டேன். 

அவர் திமிறினார். 

‘பார்க்க வெறும் கீரைத் தண்டா இருக்கிறே… உனக்கு இத்தனைக்குப் பலமா? உம்… விடு… ஸ்வப்பனா… எனக்கு மூச்சுத் திணறுகிறது. வெளியில் கார் ஹாரன் கேட்டது போலிருந்தது. கேட்டையும் யாரோ தட்டுகிற….’ 

‘விடு போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்.’ 

‘என்னைக் காவல் காக்கத்தானே இந்தச் சனியனை இங்கே வளர்க்கிறீங்க?’ 

கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தவாறு தன்னிலிருந்து என்னைப் பிய்த்து மெத்தையில் தள்ளிவிட்டு அறை லைட்டைப் போட்டார். பிறகு அறைக் கதவைத் திறக்கும்போது, ‘கேட்டைத் திறப்பதெல்லாம் சரி, சுல்தானைக் கட்டிப் போட்டுவிட்டுத் திறங்கோ… அன்னிக்கு எங்க அண்ணாகூட வந்த டாக்டரைக் கடிச்சது ஞாபகம் இருக்கட்டும்…’ என்றேன் நான். 

‘சரி… சரி. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… அபசகுனமாய் நீ ஒண்ணும் சொல்ல வேணாம்’ அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றார் அவர். இரவின் ஈர மடியில் இத்தனை நேரம் இயங்கிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று அறைக்குள் ஆத்திரத்துடன் ஓடி வந்தது. 

நான் எச்சரித்ததா குற்றம்! ராத்திரிதான் சுல்தானை அவிழ்த்து விடுவார்… பகல் நேரம் முழுவதும் சங்கிலியால் கட்டித்தான் போட்டிருப்பார். இங்கே வரும்போது சின்னஞ்சிறு குட்டியாக இருந்த சுல்தான், இப்போது இவர் இடைவிடாத சீராட்டலாலும் பாராட்டலாலும் அசல் குதிரைக் குட்டி மாதிரி தளதளண்ணு வளர்ந்து விட்டிருக்கிறது. போன மாதம் ஒருநாள் என் அண்ணா சமீபத்தில் வெளி நாட்டுக்குப்போய் மேல் படிப்பை முடித்து விட்டு வந்த டாக்டர் நாராயணனை – இவர் ஒரு ஸ்பெஷலிஸ்டாம், நல்ல கைராசியுள்ளவராம். என் அண்ணாவின் நண்பர், கூட்டிக்கிட்டு வந்தார். காரைத் தெருவில் நிறுத்திவிட்டு, கேட்டைத் திறந்து கொண்டு முற்றத்தில் பாதிதூரம்தான் இரண்டு பேரும் வந்திருப் பார்கள். குரைத்தவாறு குதித்துக்கொண்டிருந்த சுல்தான் கட்டிப் போட்டிருந்த இரும்புச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஒரே தாவல்; டாக்டரை மிரட்டி எடுத்து விட்டது. பாவம், குய்யோ முறையோண்ணு குற்றுயிரும் குலையுயிருமாக அவர் ஓடின ஓட்டம்… ‘ஒண்ணு இந்த நாய்; இல்லாட்டி நான்’ என்று சொல்லி விட்டு அன்று இந்த வீட்டை விட்டு இறங்கிப்போன என் அண்ணா, அதன் பிறகு இந்தப் பக்கம் வரவே இல்லை. அண்ணா மட்டுமா, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் பந்து ஜனங்கள் யாருமே இந்த வீட்டுப் படியை மிதிக்கவில்லை. 

‘வேண்டாம் இந்தச் சனியன்! இது வீட்டில் இருந்தால் நமக்கு நல்ல கதி வராது… மலடி பட்டத்தைக்கூட நான் ஏத்துக்குறேன். ஆனால், இப்படி நம்ம மனுஷாள் எல்லாம் இந்த நாயையும் நம்மையும் சேர்த்துப் பேசற பேச்சை என்னால் தாங்க முடியலே…’ 

‘நம்ம மனுஷாளை விட இந்த நாய்க்கு நன்றியுணர்ச்சி உண்டு.’ இப்படி ஏதாவது சொல்லி அவர் சுல்தானுடன் கொஞ்சுவதோடு சரி. இந்த விஷயத்தில் வழக்கம்போல் என் வார்த்தைக்குச் செவி சாய்க்கவே இல்லை. 

நான் படுக்கையிலிருந்து எழுந்தேன். அவர் உள்ளே வந்தார். கூட ஒரு சிறுவன். இது பாபு அல்லவா? 

‘நம்ம விஸ்வநாதனின் மாமனார் இறந்து போனாராம். தந்தி வந்திருக்குதாம். அதுதான் அவுங்க ரெண்டு பேரும் போறாங் களாம்… இப்போ குழந்தையைக் கூட அங்கே கூட்டிக்கிட்டுப் போனால் பயப்படுவான், ஈமச் சடங்கெல்லாம் முடிஞ்ச பிறகு, நாளை வந்து கூட்டிக்கிட்டு போகிறோமுண்ணு இவனை விட்டு விட்டுப் போயிட்டாங்க…’ என்றார் அவர். 

பாபுவுக்கு நாலு வயசுதான் இருக்கும். அவனைக் கண்டதும் எனக்கு ஒரு புத்துணர்வு வந்ததுபோல் இருந்தது. 

‘பாபு… வாடா… தூக்கக் கலக்கத்திலும் சிணுங்கிக் கொண்டி ருந்த அவனைத் தூக்கிப் படுக்கையில் கிடத்தி விட்டுப் பக்கத்தில் நானும் படுத்தேன். அவர் அடுத்த அறைக்குச் சென்று படுத்தார். 

மணி மூன்றாகிக் கொண்டிருக்கிறது… இன்றைக்கு இவ்வளவு நேரத்தில் ஒரு நொடிக்கூட தூங்கியிருப்பேனா? என் இமைகள் கனத்தன. சுல்தானின் குரைப்பும் இப்போது ஓய்ந்து விட்டிருக்கிறது. பாபுவை அணைத்துக்கொண்டு அப்படியே கண்ணயர்ந்தேன். 

எவ்வளவு நேரம் தூங்கினேனோ தெரியாது… வீல் என்று ஒரு கதறல். அதோடு என்னவோ விழுவதுபோல் ஒரு சத்தம். கண்களைத் திறந்தபோது ஜன்னல் வழி அறைக்குள் பாயும் வெயில். என் பக்கத்தில் பாபு இல்லை. சாடி எழுந்தேன். அடுத்த அறையில் அவர் இல்லை. வழக்கம்போல் மார்னிங் வாக் போய் விட்டாரா… கதவு திறந்து கிடக்கிறது. ‘பாபூ’… என்று கத்தியவாறு நான் வராந்தாவுக்கு விரைந்து வந்தபோது சுல்தான் முற்றத்திலிருந்து ஓடி என்னருகில் வருகிறது… அதன் வாயிலிருந்து வடியும் செக்கச் சிவந்த ரத்தம்… கருத்த மயிர்… முற்றத்துத் தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் பாபுவின் பிடரி மயிருடன் சதை பிய்த்தெடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது… 

எனக்கு மயக்கம் வந்துகொண்டிருந்தது. 

– 20.07.1975 – குமுதம் 21.08.1975.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *