காற்றிலே காவியமாய்




அந்த அரங்கத்தில் பள்ளி முதல்வரின் உரை தொடங்க இன்னும் பதினைந்து நிமிடம் இருந்ததால் ஆசிரியர்கள் கூடிப் பேச ஆரம்பித்தனர்.
காவ்யா திறமைசாலி. ஒரு முறை நான் அவளின் வகுப்பில் இப்போது கடவுள் உங்கள் முன் நின்றால் அவரிடம் என்ன கேட்பீர்களோ அதை ஐந்து வரிகளில் எழுதி கொடுங்களென்றேன். அனைத்து மாணவர்களும் விதவிதமான ஆசைகளை எழுதினர். காவ்யா மட்டும் எனக்குக் கார் வேண்டும். காரில் என் அப்பாவை அருகே அமர்த்திச் செல்ல ஆசை என எழுதியிருந்தாள். இது அவளின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. அவளின் ஒன்பதாம் வகுப்பு ஆங்கில ஆசிரியையோ அவள் கவிதை, கட்டுரை எழுதுவதில் வல்லவள். எழுத்தாளருக்கான முழுத்திறமையும் அவளிடம் இருந்தது என்றனர். அவளின் மற்ற வகுப்பு ஆசிரியர்களும் அதனை ஆமோதித்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் அமைதியாக அமர்ந்து முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர்.
மேடையின் ஓரத்தில் நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த காவ்யா பேசத் தொடங்கினாள்.
என் அப்பா நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே இறந்து விட்டார். பணம் நிறைய இருந்ததால் நானும் அண்ணனும் அம்மாவால் செல்லமாக வளர்க்கப்பட்டோம். கேட்கும் அனைத்துப் பொருட்களும் உடனுக்குடன்கிடைத்தது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அண்ணன் படிப்பிற்காக ஹைதராபாத் சென்றுவிடவே அம்மாவும் நானும் மட்டும் இங்கு டில்லியில் வசிக்க நேர்ந்தது.
நீங்களெல்லோரும் இந்தப்பொருள் வாங்கியதால் மகிழ்ச்சி, இந்த இ டத்திற்கு சென்று வந்ததால் மகிழ்ச்சி என்று பேசிக்கொள்ளும்போது அது எனக்குச் சிறு பிள்ளைத் தனமாகத் தோன்றும். எனக்கு எல்லாம் எளிதாகக் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு வேறு எதையாவது தேட வேண்டும் எனத் தோன்றியது. எனக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால் நேரம் காலமின்றி வெளியில் சுற்றினேன். பள்ளி தவிர மற்றபொது இடங்களிலும் என் வயதை மீறிய ஆண்களின் நட்பு அதிகமானது. அவர்களின் புகழ்ச்சியில் மயங்கி போதைப் பொருளுக்கு அடிமையானேன். உங்களனைவரிடமிருந்தும் விலகி என்னையும் , என் பணத்தையும் உபயோகித்தவர்களின் பின் சென்றேன்.
நம் ஆசிரியர்களும் உண்மையான நண்பர்களாகிய நீங்களும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அப்பழக்கத்திலிருந்து வெளிவர முடியவில்லை. கடைசியில் செய்வதறியாது இந்நிலைமையில் என் அனுபவத்தைப் பகிர்கிறேன்.
என் இனிய நண்பர்களே என் நிலைமை உங்கள் யாருக்கும் வரக் கூடாது. தன் உரையை முடித்த காவ்யா பள்ளி முதல்வர் மேடையேறி வருவது பார்த்து வழி விட்டுநின்றாள்.
முதல்வர் தம் உரையைத் தொடங்கினார்.
போதைப் பொருளுக்கு அடிமையாகி செய்வதறியாது கடைசியில் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட நம் முன்னாள் மாணவியான அதிபுத்திசாலி காவ்யாவிற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம். அஞ்சலிக்குப்பின் அவரின் உரை தொடர்ந்தது.
காற்றிலே காவியமாகிவிட்ட காவ்யா தன் உரை யாருடைய காதுகளுக்கும் கேட்கவில்லை என்பதை உணராமலேயே பேசிய பெருமிதத்தில் முதல்வரின் அருகே நின்றிருந்தாள்.