காமத்திப் பூக்கள்




“நைனா, நீ ஒரு ஆண்டிய லவ்வு பண்றயாமே?”-கல்மிசமற்ற, சற்றும் எதிர் பார்க்காத கேள்வி இந்திராணியிடமிருந்து வந்தது. தொழிற்சாலையின் எந்திர சப்தங்களுக்கிடையில் இந்தியின் குரல் மட்டும் தனித்து ஒலிக்கும். தனக்கு சூப்ரவைசராக இருக்கும் தன்னைவிட இளையவர்களை ‘வாடா, போடா’, என்று சாதாரணமாக சொல்லி அழைப்பாள் .படபடப்பாக பேசுவாள்.வெகுளி. களங்கமற்றவள்.

“ஆமாம், நண்பராகதான் பழகுகிறோம்”-,என்று ஒத்துக் கொண்டார் பெரியவர். ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருப்பதில் உள்ள இடைஞ்சல்களைப் பற்றி விசனப்பட்டார். மன எழுச்சி, மனச்சரிவு ஆகிய மனஞ்சார் நிலைகளை தந்துவிடுகிறது.
“தலை நிறைய மல்லிப் பூ வைக்காதேனு சொன்னா கேக்கிறியா. நீ கேட்ட கேள்விக்கு காரணமா இருக்கிறதே அந்த மல்லிப் பூதான்”-என்று அவர் சொன்ன போது புரியாதது போல் விழித்தாள் இந்திராணி.அதன் மணம் ஒரு மனமிளக்கி. வசீகரத்தை தவிர அதற்கு எந்த குணமும் கிடையாது.
ஐம்பது வயதை கடக்க இருப்பவள் அன்னம்மா. பெரியவரும் அன்னம்மாவும் ஒரே இடத்தில் வசிப்பவர்கள். பேருந்தில் பயணித்து தொழிற்சாலைக்கு வருபவர்கள். பெரியவரின் தொழிற்சாலை நிறுத்தத்திற்கு முந்திய பேருந்து நிறுத்தத்தில் அன்னம்மா இறங்குவாள்.ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்டின் தொழிற் கூடம் அது. அங்குதான் அன்னம்மாவின் வேலை. மாநகர பேருந்தில் பயணித்து பூந்தமல்லியை கடந்து ஒரு புறநகர் பகுதியில்தான் தொழிற்சாலைகள் இருக்கிறது. நித்தம் பேருந்து நிறுத்தத்திலும் பேருந்திலும் சந்தித்துக் கொள்வார்கள்.
எந்த குழந்தையின் தாயும், குழந்தையும் அன்னம்மாவை பாட்டி என்று அழைக்க மாட்டார்கள். தனது இரண்டு பெண் பிள்ளைகளை தன் சொந்த ஊரில் திருமணம் செய்து கொடுத்து பேரப் பிள்ளைகளும் பெற்றுவிட்ட அன்னம்மா தோற்றத்தில் இளமையாகவே இருப்பாள். தன் நாற்பத்தைந்தாவது வயதில் விதவைக் கோலம் பூண்டாள். சொந்தமாக சீமை ஓடு வேய்ந்த வீடு இருந்தும் வரும்படிக்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். கணவரின் பென்ஷன் ஊதியம் அவளுக்கு போதுமானதாக இல்லை. விதவையாக இருந்தும் வீட்டைக் கடந்து வேலைக்கு பயணிக்கும் போது பேருந்து நிறுத்தத்திலேயே தலைக்கு பூவும் வாங்கி கொள்வாள். தன்னுடன் பயணிக்கும் சக பயணி பெரியவரை சந்தித்துக் கொள்ளும் போது பேருந்துக்கான தகவல்களை சிறு புன்னகையுடன் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்த நட்பு மரியாதை நிமித்தமாகவே தொடர்ந்தது. முன் இருக்கையில் இருக்கும் அன்னம்மாவின் கூந்தல் பூக்கள் மணம் திடமான மனதையும் குலைத்துவிடும். இருக்கை கிடைக்காத நாட்களில் நெருக்கி பயணிக்க நேரும் போதெல்லாம், தனக்கு ஒரு ஆணின் வெம்மை வேண்டும் என்பது போன்ற சலனங்கள் அவள் முகத்தில் தோன்றி மறையும். அந்த வெம்மையும் கதகதப்பும் அவளுக்கு ஆறுதல் தருவது போல் இருக்கும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் காற்று இடைவெளி நெருக்கத்திலே பயணிக்கும் போது பெரியவரின் மூச்சுக் காற்று பட்டு மின்னல் வேகத்தில் உடலெங்கும் ஒரு கிளுகிளுப்பும் பரவசமும் தந்து நொடிப் பொழுதில் அவளை தடுமாறச் செய்யும்.
மதுவினால் அல்பாயுசில் இறந்து போனவர்களின் மனைவிமார்களின் அடி மனக் குமறலை செவி கொடுத்து கேட்க எந்த அரசும் விரும்பவில்லை.மன தகிப்பை கட்டி ஆள முடியும். உடல் தகிப்பை கட்டுப்படுத்திட முடியாது. ‘மனைவி’ என்பவள் இருக்கும் போது துறவரம் கொள்வதும் இயற்கைக்கு புறம்பானதுதான்.மெனோபாஸ் நிலையை அடைந்தவளுக்கு ‘காமம்’ கானல் நீர்ராகதான் இருக்கும். இருப்பது போல் இருக்கும்.ஆனால், இருக்காது. அன்னம்மாவுக்கு,தனிமைச் சோர்வை நீக்கும் அருமருந்தாக பெரியவரின் நட்பு இருந்தது.
தன் பால்ய காலத்து சிநேகிதன் சின்ராசு போலவே அசப்பில் பெரியவர் இருந்தார். ஆஜானுபாகுவான தோற்றம். தலைமுடி தும்பை பூ நிறத்தில் சுருள்சுருளாக இருக்கும். கரணை கரணையான தேகக் கட்டு., கருணையான உள்ளம். சில நேரங்களில் அவர் கரஸ்பரிசம், சுகஸ்பரிசத்தை தந்தாலும் அவர்கள் தூய ஸ்படிக நீராகதான் பழகிக் கொண்டார்கள்.
“நைனா!”-என்று தழுதழுத்த குரலுடன் இந்தி அவரை அழைத்தாள்.எந்திரத்தை நிறுத்திவிட்டு “என்னடா?”-என்று விசாரித்தார் பெரியவர். இந்திராணியின் கண்களில் கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
“நேத்து பாத்ரூம் போயிருந்தேன். கதவை யாரோ தட்டுனாங்க திறந்து பாத்தா மகாலி அண்ணே நின்னுட்டு அசடுவழியிறாரு.”-என்றாள்.
“நீ இனிமே யாரையாவது பெண் பிள்ளைகள துணைக்கு கூட்டிட்டு போ”-என்றார் பெரியவர்.
வார்த்தைக்கு வார்த்தை ‘மகாலி அண்ணா’ என்று கூப்பிட்டு பேசுவதும் சிரிப்பதுமாக இருப்பாள் இந்தி. அவளை பெண்டாள அத்து மீறி உள்ளார் மகாலிங்கம். ‘யார் இந்த மகாலி?’ அதிக வருடங்கள் பணியில் இருப்பவர். அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறது. மூத்தவள் பெரியவளாகி நடந்த சடங்குகளில் தொழிற்சாலையிலிருந்து அனைவரும் போய் கலந்து கொண்டு வந்தார்கள்.மண்ணின் மைந்தர். ‘லோக்கல் ஆள்’ என்ற பெயர் வேறு. நிர்வாக இயக்குனரிடம் இது பற்றி புகார் கொடுப்பதாக சமாதானப்படுத்தினார் பெரியவர்.
மகாலி மேல் இதற்கு முன்பும் ஒரு பாலியல் புகார் இருந்தது. நிர்வாக இயக்குனர் பெரியவர் முன் விசாரித்து எச்சரித்து அனுப்பியிருந்தார். தொழிற்சாலை முழுவதும் மூன்றாம் கண் பதிக்கப்பட்டு உள்ளது. உள்ளே நிகழும் ஒவ்வொரு காட்சியும் நிர்வாக இயக்குனர் வீட்டு ஹாலில் உள்ள பெரிய திரை கொண்ட தொலைக் காட்சி பெட்டியில் ஓடிக் கொண்டிருக்கும். அவர் பார்க்க தவறினாலும் அவர் மனைவியும் ,வீட்டில் பணி செய்யும் பெண்களின் கண்களிலும் காட்சிகள் ஓடும். அப்படி பல முறை பார்த்த காட்சியைதான் சாட்சியாக வைத்து விசாரணை நடந்தது. மகாலிங்கம் உண்மையை ஒத்துக் கொண்டார். மன்னிப்பு கடிதமும் எழுதித் தந்திருந்தார். பின்பு அதில் பாதிக்கப்பட்டிருந்த வட இந்திய பெண்ணும் வேலையை விட்டுவிட்டிருந்தாள். இது நடந்து சில வருடங்கள் கடந்திருக்கும்.
பெரியவர் நிர்வாக இயக்குனரை சந்தித்து மகாலி மேல் புகார் கொடுத்தார். இதன் மீது போதுமான சாட்சிகள் இல்லாததால் விசாரணை தள்ளிப் போனது. மேலும் மூத்த தொழிலாளியின் உழைப்பு நிர்வாகத்திற்கு தேவைப்படுவதால் பாலியல் குற்றம் பெரிதாக படவில்லை நிர்வாகத்திற்கு. நிசப்தமான காட்டில் எழும் குரல்கள் அடுத்து ஏதோ ஒன்று நிகழப் போவதை உணர்த்தும். மற்ற விலங்குகள் இடம் செல்வதா,வலம் செல்வதா என யோசித்து ஒரு கணம் நிற்கும். அந்த சமிக்ஞை போலத்தான் தொழிற்சாலையும். பணி ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருந்தாலும் அனைவரின் கண்களும் சுழன்று கொண்டேதான் இருக்கும். சில கண்கள் கறுவிக் கொள்ளும், சில கண்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும். அதில் ஸ்திரிலோலர்களின் காமக் கண்களும் உண்டு.
எப்போதும் தொழிற்சாலையில் துணிப்பாக கேட்டுக் கொண்டே இருக்கும் இந்திராணியின் குரல் இப்போது கேட்கவே இல்லை.பெரியவர் முகம் வாடிப் போய் இருந்தது. இந்திராணி பணி நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தாள். ‘நைனா’, என்று வாஞ்சையோடு அழைத்த குரலை இனி கேட்க முடியாது. அவள் வேறு கம்பனி தேடிப் போய்விட்டாள்.
சில மாதங்களுக்கு பிறகு வேறொரு கம்பனி வாசலில் இந்திராணி நின்று கொண்டிருந்தாள். ‘நைனா’, என்ற குரல் கேட்டு, குரல் வந்த திசையில் இந்திராணியை கவனித்தார். இந்தி சிரித்த முகத்துடன் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் நின்று கொண்டிருந்தாள்.
“இந்த கம்பனியில வேலைக்கு வரச் சொல்லி இருக்காங்க நைனா”-என்றாள்.
பெரியவர் சற்றும் யோசிக்காமல் மல்லிகைப் பூவை எடுத்து வீசிவிட சொன்னார்.!
– ‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி ,2025 இதழில் பிரசுரம் கண்டது.