காணிக்கு வேலி உண்டு?





(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அழகான வளைவுகள் கொண்ட மதிலின் கவர்ச்சியினைப் பசிய மை மெருகூட்டியது. அந்த றோட்டுக் கரை மதில்களில் வித்தியாசமான மதில்.

அதி அற்புதமான மதிலின் ஒரு புறத்தே பல வர்ண நிறமுடைய போஸ்டர் ஒன்று அழுத்தமாக ஒட்டப்பட்டு இருந்தது. யாருடைய சுண்ணீர் அஞ்சலியோ?
எதிரே தெரியும் காட்சிகளை வெண்திரையாக மறைப்பது போல வெண்பனி, உடம்பைச் சிலிர்க்கவைக் கும் பனியின் கொடுமையை மறைக்கக் கம்பளியால் போர்த்துக் கொண்டு கணபதிப் பிள்ளையர் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
வழக்கமாக காலையில் அவர் ரோந்து புரிவது வழக் கம். அதுவும் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன்பக்க மதில் எப்படி இருக்கின்றது எனப் பார்க்காவிட்டால் தலைவெடித்து விடும்.
என்ன மாதிரித் திட்டம் போட்டு எவ்வளவோ செல் வழித்து அந்த றோட்டில் யாவரும் வியக்கும் வண்ணம் மதிலைப் பராமரித்துக் கொண்டு இருக்கின்றார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த மண்ணுக்காக எத்தனை எத்தனை கண்ணீர் அஞ்சலிகள். தப்பித் தவறித் தங்கள் வீட்டு மதிலிலும் கண்ணீர் அஞ்சலிகள் ஓட்டப்படலாம் என்ற தாங்கமுடியாத யோசனை காரணமாகத்தான் இந்த அதிகாலை ரோந்து.
இன்றைக்கும் அவர் கேற்றினைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். வெறிச்சோடிப் போயிருந்த தெருவில் தூரத்தில் இரண்டொருவர் அசைவது வெண்பனிப் புகார் ஊடாகத் தெரிந்தது.
யாழ்ப்பாணம் போகப் பாய்ந்து வந்து கொண் டிருந்த மினிபஸ் கணபதிப்பிள்ளையரை அடித்து விழுத்துவது போல வந்து அவரைக் கடந்து போயிற்று.
கேற்றின் முன்னால் நடுரோட்டில் நின்று மதிலை ஆழமாகப் பார்க்க முன்பே அந்த போஸ்டர் முனைப் பாகத் தெரிந்தது.
அதில் இருந்த வர்ணங்கள், அழகான இளைஞன். ஒருவனின் பெருப்பிக்கப்பட்ட புகைப்படம்… தோற்றம் மறைவுக் குறிப்புகள் எதுவுமே அவருக்குப் புலப்பட வில்லை. சுவரை அசிங்சப்படுத்திக் கொண்டு அது இருப்பதுதான் அவருடைய சொற்களில் சொல்வது போல,
“வயிற்றைப் பற்றியெரிய…” செய்து கொண்டிருந்தது.
“அறுவான்கள் உவன்களுக்கு வேறை வேலை இல்லையே” என்று சத்தம் போடத்தொடங்கினார்.
“எங்கடை சின்னத்தம்பி மாமாவின் பெட்டைக்கு இந்த ஆவணிக் கடைசி நாளுக்குக் கலியாணம் முடிஞ் சுது. அவளுக்கு முப்பத்தாறோ, முப்பத்தேழு வயதா குது தானே. கலியாண வீட்டுக்கு ஐயா வரமாட்டன் எண்டு சத்தம் போட்டார். அவருக்கும் சின்னத்தம்பி யருக்கும் சரிவராதுதானே. முந்திச் சண்டை பிடிச்சது ஞாபகம் இருக்கும். நானும் பெட்டையளுமாக சேர்ந்து ஒருமாதிரிச் சமாளிச்சுக் கூட்டிக் கொண்டு போனனாங் கள். கலியாண வீட்டண்டு ஐயா வந்தார். பிறது நாலாஞ் சடங்குக்கு வரமாட்டன் எண்டு நிண்டிட்டார். ஐயா சொல்லுறதும் சில வேளை சரிதான். சின்னத் தம்பி மாமா வீட்டுக்காரருக்கு சாடையான புளிப்புக் குணம் இருக்கு. முந்தி எண்டால் சின்னத்தம்பி மாமா பெண்சாதி அடிக்கடி வந்து பெட்டை கலியாணம் முடிக்காமல் இருக்கு எண்டு சொல்லிக் கவலைப்படும். இந்தக் கலியாணம் முற்றாகி நாள்வைக்கும்வரை எங்களுக்கு ஒரு சொல் சொல்லேல்லை. அதுசரி கலியாணத்துக்கு உனக்கு அறிவிச்சவையோ”.
அந்தச் சந்தியில் இருந்து புறப்பட்டால் கொஞ்சத் தூரம் வரை இரண்டு பக்கமும் கடைகள். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் வருடாந்த தீவைத்தல் சம்பவங் களால் சில கடைகள் எரிந்து வெறும் மொட்டையான சுவர்களுடன் தான் இருக்கின்றன.
அக்கடைகளில் பெரும்பகுதி எரிந்தாலும் வல்லமை யுள்ளவர்கள் திருத்தி வியாபாரத்தைத் தொடங்கி விட்டார்கள். ஏனையவர்கள் அப்படியே விட்டு விட்டார் கள்.
இவ்வாறான எல்லாக்கடைகளையும் தாண்டி வந்தால் வீடுகளின் அணிவகுப்புகள் தொடங்கும். பெரும் பான்மை கல்வீடுகள் சிறுபான்மை ஏனைய வீடுகள் அவற் றுக்குச் சிறுபான்மைக்கே உரிய அடிப்படைப் பிரச்சினைகள்.
பெரும்பான்மை வீடுகளில் ஒன்றுதான் கணபதிப் பிள்ளையரின் வீடும். றோட்டால் போகும்போது முளிப்பாகத் தெரியும்.
வீடு இருக்கும் வளவின் மூன்று பக்கமும் மதில். வளவின் பின்பக்கம்தான் மதில் இல்லை. முட்கிழுவை வேலிதான்.
அந்த வேலி மறைந்து மதில் வராமைக்குக் காரணங் கள் பல. வேலிக்குப் பின்னால் வசதியுள்ளவர்கள் வசிக் காமையும் வேலி அவர்களுக்கு உரிமையாக இருப்பதும் தான். கணபதிப்பிள்ளையர் “நான் மதில் கட்டுகின் றேன்” என்று கேட்டும் பின் வளவுக்காரர் கந்தையர் தனது உரிமையினை விட்டுக் கொடுக்கவில்லை. இனப் பிரச்சினை அரசியல் தீர்வுக்கு எவ்வளவு காரணங்கள் தடையாக உள்ளனவோ அதேபோலதான் இதுவும்.
“இஞ்சை எல்லா இடமும் சொல்லித்தான் செய்தவை. மாப்பிள்ளை குவைத்தில் வேலை செய்யிறாராம். முந்திச் சந்தையுக்க வியாபாரம் செய்த ஆளாம்.
இந்தமுறை கோயில் திருவிழா வடிவாய்ச் செய்தனாங் கள். வழக்கத்தைவிட மேளங்களும் கூட இப்ப கொஞ்சம் பிரச்சினை இல்லைத்தானே. ரவுணுக்குக் கிட்ட எண்டால் தான் “செல்” வந்து விழும் எண்டு பயம். அவன்கள் வெளிக்கிட்டு வாறதெண்டாலும் இவ்வளவு தூரம் வருவங்களே. அதால இஞ்சை இப்போதைக்குப் பிரச் சினை இல்லை. மேலால வந்து ஏதும் செய்தால்தான் பிரச் சினை. அதால திருவிழாவுக்கு வழக்கத்தைவிட நல்ல சனம். கண்டதுகள் நிண்டதுகள் எல்லாம் வெளிநாடு வெளிநாடு எண்டுபோய்… ஒரு காலமும் வெளிக்கிடாத பெண்டுகள் கூட உடுத்துப் படுத்துக் கொண்டு வெளிக் கிட்டு விட்டினம்”
கணபதிப்பிள்ளையர் அந்தக் காலத்தில் செல்வாக் கோடு இருந்த அரசாங்க அதிகாரி. சம்பளத்தைவிட சம்திங் அதிகமாகக் கிடைத்தது. வன்னியிலும் கிளி நொச்சியிலும் வயற்காணிகள் வேறு ஏக்கர்களாகச் சேர்த்துக் கொண்டவர்.
அத்தனை வசதிகள் இருந்தபடியால் பிள்ளைகளுக்கு லட்சங்களாகச் செலவழிக்கக் கூடியதாக இருந்தது. காசின் பெறுமதியைக் கஸ்டப்பட்டு உழைத்து தெரிந்து கொண்டதால் ஏனையவர்களுக்கு சிறிதும் உதவி செய்யாமலே சேமிக்க முடிந்தது.
சொந்த மண்ணில் படிக்க முடியாத மகன்கள் வெளி நாட்டுக்குப் படிக்கப் போனதும், பெண்களில் இரண்டு பேர் கலியாணம் முடித்து, வெளிநாட்டுக் கணவர்களுடன் பிளேன் ஏறியதும் குறிப்பிடக் கூடிய விடயங்கள்.
வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களுக்கு கலியாணப் பேச்சு நடந்து கொண்டிருக்கின்றது. பத்தாயிரம், பதினையாயிரம் கொமிஷன் வாங்கும் கலியாணப் புறோக்கர்கள் நித்தமும் வந்து போய்க் கொண்டு இருக் கின்றார்கள்.
கணபதிப்பிள்ளையரின் கடைசி மகன் வீட்டிலேதான் இருந்தான். மூன்று வருடங்களுக்கு முன்னர்வரை.
“சீ நைன்ரி” மோட்டார் சைக்கிளில் சந்தோஷமாக திரிந்து கொண்டிருந்தவன் போக்கில் நாளடைவில் மாற் றங்கள் ஏற்படலாயிற்று. நேரம் கெட்ட நேரங்களில் வீட்டுக்கு வரலானான்.
சில இரவுகள் வீட்டுக்கே வருவதில்லை. அவனைத் தேடி ஒளி பொருந்திய விழிகளை உடைய சில இளைஞர் கள் வந்தார்கள். இளைஞர் சக்தி வேகம் பெற்றுக் கொண் டிருந்த நேரமது.
கணபதிப்பிள்ளையரின் துணைவியார் தங்கம்மா கடைசி மகனின் போக்கினைத் துல்லியமாகக் கண்டு கொண்டாள்.சில நாட்கள் கணவனும் மனைவியும் இரக சியமாகக் கதைத்தார்கள். லண்டனிலுள்ள மகன்களுடன் போனிலும் கதைத்தார்கள்.
“பெட்டையள் திருவிழாவை ரீ.வியில் எடுக்க வேணும் எண்டு நிண்டு கொண்டாளவை. அதால் திருவிழா முழுக்க ரீ.வி. எடுத்தது. ரீ.வி . எடுக்கத் தொடங்கின பிறகு தான் எங்கடை சில பெண்டுகள் (பாக்கியம், பாக்கியத் தின்ரை பெட்டையள் சாரதா, சண்முகா இவையுந் தான்) எல்லாம் சீலையளைச் சரி பணணிக் கொண்டு முன்னுக்கு முன்னுக்கு வரத் தொடங்கியிட்டினம். எங்கடை பெட்டையள் அதுகளைக் காட்டி காட்டித்தான் ஒரே சிரிப்பு.
நாங்கள் திருவிழாவுக்கு ரீ.வி. எடுத்த பிறகுதான் வழக்கமாகக் கடைசித் திருவிழா செய்யிற மகேசன் வீட்டுக்காரரும் ரீவியும் எடுத்துத் திருவிழாவையும் பெரி சாய்ச் செய்யப் பாத்தவை. ஆனால் அது எங்கடை மாதிரி வருமே. மற்றது எங்கடை கமலாவுக்கும் இரண்டு மூன்று சம்பந்தங்கள் வந்தது. புறோக்கர்மார் ஒரே கரைச்சல். ஏதோ கொளுத்த சீதனம் அள்ளலாம் எண்டு நினைக்கினமோ தெரியாது.”
விளைவு-
இரண்டொரு மாதங்களுக்குள் கடைசி மகன் மனம் மாற்றப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். கடைசியில் எல்லா மகன்களும் லண்டனில என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ள வாய்ப்பாயிற்று.
இவ்வளவு சிறப்புக்களையும் கொண்ட கணபதிப் பிள்ளையர் இந்த அதிகாலைப் பொழுதில் றோட்டுக் கரை மதிலுக்கு முன்னால் நின்று மதிலில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டரைப் பார்த்துச் சத்தம் போட்டார்.
அவரைப்போல கம்பளியால் போர்த்துக் கொண் டிருந்த மனைவி தங்கம்மாவும் வெளியே வந்தார்.
“என்னப்பா…ஏன் சத்தம் போடுறியள்”
“இஞ்சை வாரும்… இதைப் பாரும்… உந்த, அறுவான் களுக்கு வேலையில்லையே…சந்தியில பள்ளிக்கூட மதில் இருக்கு வேற எத்தினை மதில்கள் இருக்கு. உவன்களுக்கு எங்கடை மதில்தான் கண்ணுக்க குத்துதோ” என்று கணபதிப்பிள்ளையர் சொல்ல…
தங்கம்மா மதிலைப் பார்த்தார். கணவரை மிஞ்சிய ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது.
“இன்றைக்கு ஒருபோஸ்டர் நாளைக்கு எத்தினையோ. கடைசியாக பள்ளிக்கூடச் சுவர் மாதிரி வந்திடுமோ?” என நினைத்தார்.
“உது ஆரோ வம்புக்குச் செய்திருக்கிறாங்கள். எல்லா வீட்டு மதிலும் இருக்க எங்கடை மதில்ல ஒட்ட வேணுமே”
“இனிமேல் பாப்பம். எவன் வந்து என்ரை மதில்ல ஓட்டுறான் எண்டு”
தங்கம்மா அங்கும் இங்கும் பார்த்தாள். தெருவில் ஆட்கள் இல்லை.
“எவன் வந்து ஒட்டினானோ? இரவில சத்தம் கேட் டால் எழும்பிப்பார்க்கத் தெரியாது. இனி நெடுக எங்கடை மதிலிலதான் ஓட்டுவான்கள்” என்றார்.
“வீண் கதையை விட்டுப் போட்டு நீர் போய் அவள் பெட்டையை ஒரு வாளி தண்ணி கொண்டு வரச் சொல்லும். அவள் என்ன இன்னும் எழும்பேல்லையோ” என்றார் கணபதிப்பிள்ளை.
தங்கம்மா உள்ளே போனார்.
“சில ஆட்கள் எங்கடை வீட்டுச் சம்பந்தத்தை விரும் பிக் கேட்கினமாம். நல்ல குடும்பம், நல்ல பரம்பரை, பிள்ளையள் எல்லாம் நல்லாய் இருக்கு எண்டு கதைக் கினம் என புறோக்கர் வந்து சொல்லும். நாங்கள் இன்னும் ஒண்டும் முடிவாய் இல்லை. நல்ல மாப்பிள்ளை யாய் வந்தால் பார்க்கலாம்தான். அவள் இவ்வளவு கால மும் நல்ல சொகுசாய் எங்களோடை இருந்தவள். இனிப் போற இடத்தில கஷ்டப்பட வைக்கிறதே.’
“முந்தி உங்கை பார்த்தது என்ன மாதிரி? உங்கை எண்டால் நல்லதுதானே. அல்லது இஞ்சை நாங்களே பார்த்து முடிவு செய்யிறதோ… இஞ்சினியர், டொக்டர் என்றால் இரண்டு லட்சம் இனாமாய்க் கொடுக்க வேணும். இரண்டு லட்சம் இனாம் எண்டால் சீதனம் எங்கை போய் முடியும். கதையோடு கதையாய் பொன்னுத்துரை மாஸ்டரின்ரை பெடியனுக்கும் கலியாணம் எல்லாம் முற்றாய் இருந்து கடைசியில சீதனப் பிரச்சினையால குழம்பிப் போச்சுது”
வீட்டுக்குள்ளே போன தங்கம்மாவுக்கு யோசனை அதிதீவிரமாக இருந்தது, “உது யாரோ வேணும் எண்டு தான் செய்திருக்கினம். நிதி திரட்ட ஆட்கள் வரேக்க உந்த வீட்டில கனக்க வேண்டலாம், பிள்ளையள் எல்லாம் லண்டனில, அவரும் பென்சனியர் எண்டு அக்கம். பக்கத்தில் உள்ள ஆட்கள் சொல்லி அனுப்புவது போல மதிலின்ரை வடிவைப் பார்த்து ஆத்திரப்பட்டு சொல்லியிருப்பினம்.” எனத் தங்கம்மாவின் சிந்தனை விரிந்து கொண்டு போனது. அந்தச் சிந்தனை காரணமாக உண்டான கோபத்துடன் போய் வேலைக்காரச் சிறுமியை அடித்து எழுப்பி வாளித் தண்ணியைக் கொண்டு போகச் செய்துவிட்டு மறுபடியும் யோசிக்கத் தொடங்கினாள்.
போன கிழமையும் பின்வளவுக்காரரான கந்தையா வுடன் சின்னப் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.
முட்கிழுவை வேலிக்கு அப்பால் தெரியும் கந்தைய ரின் அந்தப் பதிந்த ஓலை வீட்டைப் பார்க்கத் தங்கம்மா வுக்கு ஏனோ தெரியவில்லை சங்கடம் ஏற்படுவது !உண்டு.
தங்கம்மாவின் தாயாரின் காலத்தில் கணபதிப் பிள்ளையரின் மாளிகை உள்ள தற்போதைய வளவில் ஓலை வீடுதான் இருந்தது. தங்கம்மாவின் தகப்பன் ஒரு நல்ல தோட்டக்காரன்.
அந்தக் காலத்தில் கந்தையரின் மனைவி பகவதியின் தாய் வீட்டுக்காரருக்கும் தங்கம்மா வீட்டுக்காரருக்கும் நல்ல நெருக்கம் இருந்தது, காரணம் ஒரே மாதிரியான தரத்தில் காணப்பட்டமையே.
அதனால் அன்பாக இருந்தார்கள். ஒரு வீட்டில் அப்பம் சுட்டால் மறுவீட்டில் சாப்பிடுவார்கள். நல்ல நாள் பெருநாளுக்கு ஒன்றாகச் சேர்ந்து வெளியே போய் வருவார்கள்.
இதெல்லாம் என்ன மாதிரி மாறிப் போனது..திடீர் என தங்கம்மா குடும்பம் முன்னுக்கு வந்ததும் வல்லமை யும் வசதியும் உள்ள கணபதிப்பிள்ளையர் மருமகனான தும் அணுகுண்டு விழுந்த பின்னர் ஜப்பான் நாடு வளர்ந்த மாதிரி விரைவான வளர்ச்சியானது.
அதன் பின்னர் இரண்டு குடும்பங்களும் சிறுபான்மை பெரும்பான்மை இனங்களாகி விட்டன. பகவதியைக் காணவே தங்கம்மாவுக்குப் பிடிப்பதில்லை. அதைவிட அவர்களின் ஏழ்மையினை – அந்த முட்கிழுவை வேலி யினை இப்படிப் பல விடயங்களை…
“இப்போதைக்கு இஞ்சை வாறதைப்பற்றி யோசிக்க வேண்டாம்… கொழும்புக்கு வந்தாலும் இஞ்சாலை வாறது பிரச்சினை, கொண்டு வாற சாமான்களையும் ஒழுங்காகக் கொண்டு வந்து சேர்க்கேலாது. வந்து போற செலவும் வீண்தானே. கமலாவின் இருபத்தி மூண்டாவது பேர்த்டேக்கு எடுத்த ரீ. வி. கசெட் அனுப்பி யிருந்தம். எப்படி இருந்தது? கமலாவுக்கு அவ்வளவு திருப்தியில்லை. அவளின் ரைபிரண்ட்ஸ் ஒருத்தரும் ரீ.வியில இல்லை. அவையள் எல்லாம் பிந்தித்தான் வந்தவை. அதுக்கு நாங்கள் என்ன செய்யலாம்? கலியாண வீட்டுக்குத் தனிய உன்ரை பிரண்ட்சை மாத் திரம் ரீ.வியில் எடுக்கிறதுக்கு ஒரு கமராக்காரனை ஒழுங்கு செய்வம் எண்டு சொல்லிச் சிரிச்சம்”
“எத்தனை தடவை மதில் கட்டக் கேட்டாயிற்று, தங்களாலும் மதில்கட்ட ஏலாது. கடைசி கட்டுறவை யைத் தன்னும் விடேலாது. அதுகளுக்கு நாங்கள் உடுக் கிறதையும் படுக்கிறதையும் வேலிக்கிளாலைப் பார்க்க ஆசை போல” என்று யோசித்த வண்ணம் விறாந்தைக் கதிரையில் தங்கம்மா அமர்ந்து கொண்டார்.
வெளியே கணபதிப்பிள்ளையர் சத்தம் போட்டுக் கொண்டு வேலைக்காரச் சிறுமியைக் கொண்டு மதிலில் ஒட்டப்பட்ட போஸ்டரைத் கிழிக்கும் ஆரவாரம் கேட்டது.
“அவைக்கு நல்ல சாட்டு ஆடு மாடு வளர்க்க குழைக்கு வேலி வேணுமாம். வேலியை அழிச்சு மதில் கட் டினால் குழைக்கம் எங்கை போறது எண்டு கேட்கினம். குழைஇல்லாட்டி ஆடு மாடுவளர்க்கேலாது. கண்டறியாத ஆட்டு வளர்ப்பும் மாட்டு வளர்ப்பும். அவையின்ரை வேலியால் எங்கடை வளவுக்கைதான் கஞ்சலும் குப்பை யும். நெடுகக் குப்பையுக்க சீவிக்கிற அதுகளுக்கு எங்கடை கஷ்டம் தெரியுமே” என்று தங்கம்மாவின் யோசனை வளர்ந்து கொண்டு போனது.
“கந்தையர் வீட்டுக்காரர்தான் மதிலில போஸ்ட்டர் ஒட்டக் காரணமாக இருக்க வேணும் எனவும் தங்கம்மா வுக்கு திடீர் ஞானோதயம் உண்டானது.
“ஒருநேரக் கஞ்சி குடிக்க வழியில்லாததுகளுக்கு எங்களோடை போட்டி. என்ன செய்யிறது? காலம் கெட்டுப்போய் இருக்கு. முந்தின மாதிரி எல்லாம் இருந் தால் இப்ப எத்தினை விளையாட்டுக் காட்டலாம்” எனவும் நினைத்தார்.
முன்பு கணபதிப்பிள்ளையருக்கு எவ்வளவு செல் வாக்கு. பொலிஸ், ஏ. ஜீ. ஏ. என்று யாரையும் கைக்குள் போட்டுக் கொண்டு நினைச்சதைச் செய்யலாம் “அந்தக் காலம் எண்டால் கந்தையர் வீட்டுக்காரருக்குப் பாடம் படிப்பிக்கலாம். இப்ப, அதுவும் இந்த இரண்டு மூன்று வருஷங்களாய் எல்லாத்துக்கும் இவன்கள்தான்.’
தங்கம்மா ஆத்திரத்துடன் பொருமினாள். “அறுவான்கள் – அறுவான்களாலதான் எல்லாம். எதை ஒழுங் காய் வைச்சிருக்கிறாங்கள். எங்கடை நிம்மதி,எங்கடை செல்வாக்கு வாய்ப்புக்கள் எல்லாத்தையும் கெடுத்தாங் களே… இப்ப மதில்லையும் போஸ்ட்டர்” “என்னப்பா செய்யிறீர்” கணபதிப்பிள்ளையர் வெளியே நின்று கூப்பிடுவது கேட்டது.
சிந்தனையைக் குழப்பிக் கொண்ட தங்கம்மா எழுந்து வெளியே போனார்.
“இஞ்சை பெரிய கரைச்சல். எந்த நேரமும் தொந் தரவுதான். வீட்டுக் கேற்றைத் திறந்து விடேலாது. அதை வேண்டுங்கோ… இதை வேண்டுங்கோ எண்டு எந்த நேரமும் பெடியள் வருவினம். என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. இந்த உபத்திரவத்தைக் குறைக் கிறதுக்கு அனேகமாக வெளிக்கேற்றைப் பூட்டியே வைக் கிறம். அது மாத்திரமே மாதத்துக்கு. எத்தினை தரம் காசுக்கு வருகினம். காலம் எவ்வளவு கெட்டுப் போச் செண்டு தெரியுமே. கண்டதுகள் எல்லாம் கேற்றைத் திறந்து கொண்டு வளவுக்கு வாறதோடை வீட்டுக்கையும் வரப் பாக்குதுகள். உதுகளின் உந்தக் கூத்துக்கள் எல்லாம் எப்ப முடியப்போகுது.”
வெளியே மதிலில் ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருக்க மதிலில் இருந்த எச்சங்களை வேலைக்காரச் சிறுமி தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்தாள்.
“உதப்பா கந்தையர் வீட்டுக்காரரின்ரை வேலையாய் இருக்கும். இவ்வளவு காலமும் இல்லாத ஒரு அலுவல் இப்ப நடந்திருக்கு எண்டால் யாரோ சொல்லித்தான் செய்விச்சிருக்கினம். என்ன தங்கம்மா”
“ஓமோம். அப்பிடித்தான் இருக்க வேணும். அவை யின்ரை சேட்டைக்கு ஆக நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது” என்றார் கணபதிப்பிள்ளையர்
“கொட்டில் வீட்டுக்க இருந்து கொண்டு அதுகளுக்கு பெரிய எண்ணம். ஏன் மதில் கட்ட வேண்டாம் எண்டு மறிக்கினம் தெரியுமே”
”ஏனாம்”
“மதில் கட்டினால் காணி பிடிக்கேலாது. இது வேலி எண்டால் ஒவ்வொரு கதியாலாகத் தள்ளிக் காணி பிடிக் கலாம்தானே’
“ம்… என்ன செய்யிறது… முந்தின மாதிரிக் காலம் எண்டால் இவையளுக்குப் பாடம் படிப்பிக்கலாம். இவன் கள் தேவையில்லாமல் பிரச்சினையைத் தொடக்கிச் சும்மா சனங்களைக் கஷ்டப்படுத்திறதுதான் மிச்சம். இவன்களின்டை ஆட்டம் எங்கை போய் முடியப் போகுதோ? ஏன் இந்த வில்லங்கம். தாறதை வேண்டிக் கொண்டு ஓமெண்டு சொல்லுறதுக்கு என்ன” என்று சொல்லிக் கொண்டு போன கணபதிப்பிள்ளையர் தங்கம்மாவின் தலையீட்டால் பேச்சை நிறுத்தினார்.
“உதுகளைக் கதைச்சு என்ன பிரயோசனம். கொஞ்ச நேரம் ஆறுதலாய் இருந்து ரீ.வி. பார்க்கத்தான் நிம்மதியோ? வெளிக்கிட்டு வெளியில் போகத்தான் முடியுதே…அவன் பெரியவன் அனுப்பின இரண்டு சாறிக்கு ப்ளவ்ஸ் துணி எடுக்க ரவுண் பக்கம் போக முடியாமல் எங்கடை கடைசி, இரண்டு மூண்டு நாளாய் புறுபுறுத்துக்கொண்டு இருக்கிறாள். கஸ்டப்படுகிற சனங்கள் எப்படியும் சீவிக்கலாம். நாங்களும் அப்படிச் சீவிக்கலாமே”
“இஞ்சையே இப்படிப் பிரச்சினை எண்டால் உங்கை எப்பிடியிருக்கும். உங்கைதான் கனக்கக் காசு சேர்க் கிறவை எண்டு கேள்வி. போராட்டம் அது இது எண்டு கண்டபடி காசு கேட்டு வருவங்கள். உதுகளில் ஒண்டும் சேராமல்…உதுகளுக்கு ஒரு சதமும் கொடுக்காமல் இருக்க பார்க்க வேணும். ஒருக்காக் குடுத்துக் காட்டினால் நெடுக வருவான்கள். பிறகு கரைச்சலாய்ப் போகும். முந்திக் குடுத்திருந்தாலும் இனிமேல் குடுக்க வேண்டாம். எப்ப உவை பிரச்சினை தீர்க்கப் போயினம். எவ்வளவு காலத் துக்கு எங்களைப் போல ஆக்கள் காசு குடுத்துக் கொண்டு இருக்கிறது.ஆர் எக்கேடு எண்டாலும் கெட்டுப் போகட் டுமன். எங்களுக்கு என்ன.”
‘சரி சரி… பாப்பம்… என்ன நடக்குதெண்டு. கந்தையர் வீட்டுக்காரர் காணி பிடிக்கிற கெட்டித்தனத்தைப் பாப்பம்…” என்றார் கணபதிப்பிள்ளையர்.
வேலைக்காரச் சிறுமி கோப்பி டம்ளர்களோடு வந்தாள். கணபதிப்பிள்ளையரும் தங்கம்மாவும் கோப்பி குடிக்கத் தொடங்கினார்கள்.
“இவளுக்கு எத்தினை தரம் சொல்லியாச்சு. கோப்பித் தூளை அள்ளிக் கொட்டாதை எண்டு…” என்று புறுபுறுத்தார் தங்கம்மா.
பொழுது நன்றாகப் புலர்ந்து தெருவில் சனநடமாட டம் அதிகமாக இருந்தது. சனங்கள் இல்லாத மினி பஸ்கள் மிக மெதுவாகச் செல்ல…சனங்கள் நிரம்பி வழியும் மினி பஸ்கள் றோட்டில் பறப்பது போல இருந்தன.
வேலைக்காரச் சிறுமி திரும்ப ஓடி வந்தாள். “அம்மா…அம்மா…” என்றாள் பதட்டத்துடன்.
“என்னடி பிரச்சினை…ஏன் ஓடி வாறாய்”
“அம்மா..வேலியில…” என்று ஓடி வந்ததால் ஏற்பட்ட பதட்டத்துடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கச் சொல்ல முற்பட்டதை முழுமையாகச் சொல்லி முடிக்காமல் கஷ்டப்பட்டாள்.
வேலி என்றதும் தாமதம், தங்கம்மா இருந்த இடத்தை விட்டு பரபரப்புடன் எழுந்தார்.
“வேலியில் என்னடி” என்ற கேள்வியில் உஷ்ணம் இருந்தது.
“வேலிக்குப் பின்வகளவுக்காரர் கதியால் போடினம்” என்றாள் சிறுமி.
“என்ன…கதியால் போடுகினமோ… ஐயோ ஏனப்பா பேசாமல் இருக்கிறியள்… எழும்புங்கோ…” என்று சத்தம் போட்டுக்கொண்டு தங்கம்மா விரைந்துசெல்ல, கணபதிப் பிள்ளையர் கோப்பி டம்ளரை வைத்து விட்டுப் பின்னே போனார்.
வளவின் பின் வேலிக்கரையை அவர்கள் அடைந்த போது வேலிக்கு மறுபக்கத்தில் உள்ள கந்தையர் குடும்பத் தினர் நிற்பது தெரிந்தது.
அலவாங்குடன் நின்ற கந்தையர் வேலியின் சில இடங் களில் குழி பறித்துக் கொண்டு இருக்க பகவதி துணையாக இருந்தாள்.
“என்ன செய்யிறியள்” எனத் தங்கம்மாதான் கேட்டார்.
கந்தையர் நிமிர்ந்து பார்த்தார். முகத்தில் எந்த விதமான கலவரமும் இல்லை. உழைத்து உரமேறிய உடம்பு பதட்டப்படவில்லை.
“வேலியில் கதியால் கொஞ்சம் பட்டுப்போய் இருக்கு. அதுதான் புதுக்கதியால் போடுறம்” என்றார் நிதானமாக.
“என்ன புதுக்கதியால் போடுறீரோ…ஆரைப் பேக் காட்டுற கதை கதைக்கிறீர்…” என்றார் தங்கம்மா.
கந்தையர் தம்பணி தொடர்ந்தார்.
“உம்மைத்தான் கந்தையர் கதியால் பேர்டுற வேலையை நிற்பாட்டும்” என்று சொல்லி முன்னே நின்றார் கணபதிப்பிள்ளையர்.
“கதியால் போடுறம், கதியால் போடுறம் என்று சொல்லிச் சொல்லிக் காணி பிடிக்கிறியளோ…இனி ஒரு அங்குலம் தன்னும் வேலி அசையவிட மாட்டம்” என்று சொன்ன தங்கம்மா ஓடி ஓடி வேலியை அங்கும் இங்கும் பார்த்தார்.
பிறகு-
“ஐயோ… இஞ்சை வந்து பாருங்கோ… எவ்வளவு அநியாயம். என்ன மாதிரி இருந்த வேலி என்ன மாதிரி இருக்கு. வளைஞ்சு வளைஞ்சு எங்கடை காணியுக்கை எவ்வளவு தூரம் வந்திட்டுது. காணி பிடிக்கிற ஆசை யில மதிலையும் கடட விடாமல் தடைப்படுத்திக் கொண்டு…ஐயோ… அம்மாளே இந்த அநியாயத்தைக் கேட்க ஆட்கள் இல்லையோ…” என்று தலையில் அடித்து கொண்டு குழறத் தொடங்கினார்.
“இன்னுமொரு விசியம். பின்பக்க மதில் இன்னும் கட்டேல்லை எண்டு தெரியும்தானே. கந்தையர் வீட்டுக் காரரால் பெரிய உபத்திரவம். அவை மதில் கட்டாமல் மறிச்சுக் கொண்டு…கதியால் போடுறம் எண்டு சொல்லி கொண்டு கதியால்களை எங்கடை காணிக்கைத் தள்ளிப் போடினம். வேலியும் நேராய் இல்லை. பிள்ளையார் கோயிலுக்குப் போற குச்சு ஒழுங்கை மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு இருக்கு. நாங்கள் இவ்வளவு நாளும் பொறுமை யாய் இருந்தனாங்கள். இனியும் இருக்கேலாதுதானே. போன கிழமை கந்தையர் கதியால் போடேக்க நாங்கள் போய் மறிச்சுப் போட்டம். இப்ப பிரச்சினை சமா தான சபையிடம் போட்டுது. வழக்குக்கும் போகுமோ தெரியாது. ஆனால் எவ்வளவுதான் எத்தனை ஆயிரமாக இருந்தாலும் வழக்குக்குச் செலவழிச்சாலும் கந்தையருக் கும் பாடம் படிப்பிக்காமல் விடமாட்டம். நாங்கள் ஆர் எண்டு அவருக்குத் தெரிய வேணும்”
– வீரகேசரி, 28-12-1986.
– வெட்டு முகம், முதற்பதிப்பு: ஆகஸ்ட் 1993, சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.