காணாமற்போன மணி பர்ஸ்




கடற்கரைச் சாலையைக் கடப்பதற்குக் கையில் சூட்கேசுடன் காத்திருந்தான் கிளெமென்ட். சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தன. சாலையில் சற்றே இடைவெளி கிடைத்த வேளையில் அவசரமாகச் சாலையைக் கடந்த கிளெமென்ட், மறுபுறம் சேர்ந்தவுடன் எதேச்சையாகப் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தான். திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டது போல் இருந்தது அவனுக்கு. காரணம் பாக்கெட்டில் இருந்த மணி பர்ஸ் காணவில்லை.
பர்ஸ் பறி போய் விட்டது. அத்துடன் அதில் வைத்திருந்த ஹாஸ்டல் மெஸ் பீஸ் நானூற்றைம்பது ரூபாயும் போய்விட்டிருதது. கிளெமென்ட் அங்கிருக்கும் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவன். பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் பயிலுகின்றான்.
உலகமே சுழலுவது போல் இருந்தது அவனுக்கு. எப்படி தொலைந்திருக்கும்? எங்கே தொலைந்திருக்கும்? ஆரம்பத்திலிருந்து யோசித்தபடி மெதுவாகவும் சோர்வாகவும் நடந்தான் கிளமெண்ட்
ஊரிலிருந்து வந்த மொபசல் பஸ்ஸில் அவனுக்கு சன்னலோர இருக்கை கிடைத்தது. சூட்கேசைக் காலடியில் வைத்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் வந்து அமர்ந்தார்கள். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பணத்தில் தான் டிக்கெட் எடுத்தான் கிளமெண்ட். பாக்கத்தில் இருந்த இளைஞன் “பெட்டியை ஏன் இப்படி கீழே வைத்திருக்கிறாய்? காலில் இடிக்கிறது; எடுத்து மேலே வைத்துவிடு”, என்று கூறியதும், தான் எழுந்து பெட்டியை மேலே வைத்ததும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அந்தத் தருணத்தில் பக்கத்து ஆள் பர்ஸை எடுத்து விட்டிருப்பானோ? அதற்காகத் தான் பெட்டியை மேலே வைக்கச் சொல்லியிருப்பானோ?
அன்றைய தினம் அவன் ஏறியிருந்த மாநகரப் பேருந்தில் கூட்டம் அதிகமாய் இருந்தது. மூச்சு விடுவதும் சிரமமாய் இருந்தது. இறங்குவது கூட கடினமாய் இருந்தது. கையில் பெட்டியை வைத்துக் கொண்டு இறங்குவது கூடக் கடினமாய் இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தை யாரேனும் பயன் படுத்திக் கொண்டார்களோ? அல்லது கவனக் குறைவால் எங்கேனும் தவறி விழுந்திருக்குமோ?
விடுதிக்கு வந்தபோது அவனுடைய நெருங்கிய நண்பரும் வேறு துறையில் பீ.ஹெச்.டி செய்பவருமான பழனிவேல் ப்ராஜெக்ட் ஒர்க் கிற்காக டெல்லிக்குப் போய்விட்டிருந்தார். இன்னொரு நண்பர் மோகனரங்கத்தின் தந்தை சமீபத்தில் காலமானார். எனவே அவரிடம் கேட்க மனம் வரவில்லை. இரண்டு மூன்று பேர்களிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர்கள் வருத்தப்பட்டார்களே தவிர உதவ முன் வரவில்லை. சிலர் அவனுடைய அஜாக்கிரதையைச் சுட்டிக் காட்டிப் பேசினர். அதற்க்கு மேலும் மற்றவர்களிடம் உதவி கேட்க அவனுக்குக் கூச்சமாய் இருந்தது.
அறைக்குள் நுழைந்த கிளமென்ட்டுக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் கண்ணில் பட்டன. மாதம் ஒரு புத்தகம் வாங்கும் இலட்சியத்தால் தன் செலவுகளையெல்லாம் சுருக்கி இலக்கிய ஆர்வத்துடன் வாங்கிய புத்தகங்கள். டால்ஸ்டாய், மக்சிம்கார்க்கி,, பூஷ்கின், என மேல் நாட்டு அறிஞர்களின் நூல்கள், மு.வ., தி.ஜா, கு.ப.ரா.,புதுமைப்பித்தன் இன்னும் ஜெயகாந்தன் போன்றோரின் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள்.
நடைபாதை கடைக்காரன் புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினான்.பீஸ் கட்ட இந்தப் பணம் போதாது என்ற கவலை ஒரு புறம், மீண்டும் இந்தப் புத்தகங்களை வாங்க முடியுமா என்கின்ற கவலை மறுபுறமாக மேற்கொண்டு யாரிடம் பணம் புரட்டலாம் என்ற யோசனையில் நடந்து வந்தான் கிளெமென்ட்.
திருவல்லிக்கேணியின் கூவத்துப் பாலத்தில் பறக்கும் இரயில் பாலத்தின் கீழே ஒருவர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உட்கார்ந்து அதனைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். வண்டி சரியாகவில்லை போலும். எழுந்து வண்டியைத் தள்ளிக்கொண்டு நடக்கத் தொடங்கினார். அருகில் வந்த கிளெமென்ட், சாலையில் அவருடைய பர்ஸ் விழுந்து கிடப்பதைக் கண்டான்.உட்கார்ந்திருந்தபோது அவருடைய பின் பாக்கெட்டிலிருந்து விழுந்திருக்க வேண்டும். பர்சை எடுத்தபோது உள்ளே கற்றையாகப் பணம், ஒரு கணம் அவன் மனம் ஊசலாடினாலும் மறுகணமே மனம் தெளிந்தான். கைகளைப் பலமாகத் தட்டி, “சார், சார்”, என்றான். ஸ்கூட்டர் ஆள் திரும்பிப் பார்த்தார்.
“உங்கள் பர்ஸ். கீழே கிடந்தது.” ஸ்கூட்டர் ஆள் பர்சை வாங்கிக் கொண்டு “ரொம்ப நன்றி தம்பி”, என்றார். christus selvakumar
“உங்கள் பணம் சரியாக இருக்கிறதா பார்த்துக் கொள்ளுங்கள்.”
“எல்லாம் சரியாக இருக்கும் தம்பி! எல்லாருமே உன்னைப் போலவே இருக்கணுமே”, என்றபடி அவர் நகர்ந்தார்.
கிலேமேன்ட்டுக்கு “இதே போல் நம்முடைய பர்சும் கிடைத்திருந்தால்”, என்ற வருத்தம் தோன்றினாலும் தன்னைப் போல் கஷ்டப்பட இருந்த ஒருவருக்கு உதவிய மகிழ்ச்சியும் ஏற்ப்பட்டது.
– ஜனவரி, பிப்பிரவரி 1997 பூக்கூடை