காட்டில் கண்டெடுத்த கனகமணி சிம்மாசனத்தின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 144 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதற்பகுதி: பூர்வ கதை

கதை- 1 | கதை – 2

1. காட்டில் கண்டெடுத்த கனகமணி சிம்மாசனத்தின் கதை

உலகத்தின் கிரீடம் போல் உஜ்ஜயினிப் பட்டணம் முன்னொரு காலத்தில் திகழ்ந்தது.

நீலவானத்தை முத்தமிடும் பட்டுக் கொடிகளும், நிலா உப்பரிகைகளும் மாட மாளிகைகளும், மணிக்கோபுரங்களும, தந்த ஸ்தூபிகளும், நந்தவனங்களும், விசாலமான நவமோகன வீதிகளும், சிருங்கார மண்டபங்களும், சிந்தையைக் கவரும் விசித்திரவினோதங்களும் நிறைந்து எந்நேரமும் ஜேஜே என்று விளங்கும் அந்நகரம் மாயா புரியாகவே காட்சியளித்தது. அந்தப் பட்டணத்தை அறநெறி வழுவாத போஜமகாராஜன் ஆண்டு வந்ததால் அதற்குத் தர்மாபுரி என்கிற பெயரும் நிலவி வந்தது.

போஜராஜன் சதா தன் குடிஜனங்களின் நலத்திலே கண்ணுங் கருத்தும் கொண்டவனாய் ஆட்சிபுரிந்து வரவே, அந்தச் சக்கர வர்த்தியின் பெயர் உலகெங்கும் பிரசித்தியாயிற்று. போஜனுக்குப் பிரதம மந்திரியாக விளங்கிய நீதிவாக்கிய மந்திரி, என்பவரும் உஜ்ஜயினிப் பட்டணத்தில் தருமம் தழைத்தோங்கும்படி செய்து வந்தார்.

அந்நாளையில், பக்கத்திலுள்ள காட்டுப் பிரதேசத்திலிருந்து துஷ்ட மிருகங்கள் அடிக்கடி நாட்டினுள் புகுந்து மக்களைத் துன்புறுத்துவதோடு அவர்களின் உடமைகளான ஆடு, மாடு, கோழி முதலான பிராணிகளைக் கொன்று தூக்கிச் சென்றன.

குடிமக்களின் கஷ்டத்தை அறிந்த போஜமகாராஜன், ஒரு நாள் தன் சதுரங்க சேனைகளை அணிவகுத்து நடத்தி மந்திரிப் பிரதானிகளுடன் வேட்டையாடச் சென்றான்.

அவர்கள் வனாந்திரத்தை அடைந்து புலி, சிங்கம், கரடி முதலான கொடிய விலங்குகளை வேட்டையாடினார்கள்.

சூரியன் உச்சியை நெருங்கும் சமயம் வந்தது. வெய்யில் தகித்தது. படைகளும் களைத்து விட்டன. போஜராஜன் வேட்டையை நிறுத்தி விட்டுக் களைப்பாற விரும்பினான்.

மணிமுடி மன்னனும் அவனுடைய பரிவாரங்களும் அருகிலே தாக சாந்திக்குத் தண்ணீரும், சோர்வு நீங்க நிழலும் கிடைக்குமா வென்று நாலாதிசைகளிலும் சுற்றிப் பார்த்து வரும்போது நன்கு விளைந்திருந்த கம்பங் கொல்லை ஒன்றை அடைந்தார்கள். சுற்றிலும் படர்ந்து அடர்ந்த கிளைகளோடு மரங்களும், நடுவே முற்றிய கதிர்களை உடைய கம்புப் பயிரும் கொண்ட அக்கொல்லையானது மன்னனின் மனதை மிகவும் கவர்ந்தது.

அந்தக் கொல்லை சரவணப்பட்டன் என்னும் ஓர் அந்தணனுக்குச் சொந்தமானது. முற்றிய கதிர்களைப் பறவைகள் கொத்தித் தின்னாமலிருக்கக் காவலுக்கு அவன் கொல்லையின் நடுவே பரண் ஒன்றைக் கட்டி அதன்மீது ஏறி அமர்ந்திருப்பான்; பறவைகள் கூட்டமாக வந்து கதிர்களில் உட்காரும்போது கற்களை விட்டெறிந்து அவற்றைத் துரத்துவான்.

அன்றையத் தினம் சரவணப்பட்டன் பரண்மீது அமர்ந்திருந்தான். வேட்டையில் களைத்துப்போய் முகம் கறுத்து வரும் மன்னர்பிரானையும் பரிவாரங்களையும் பார்க்கும்போது அவனுக்கு பரிதாபமாக இருந்தது.

சரவணப்பட்டன் பரண்மீது இருந்தபடியே, “வரவேண்டும் வரவேண்டும்! வேட்டையினால் மிகவும் களைத்துப் போயிருக்கறீர்கள். இதோ இந்தக் கம்பங் கொல்லை முழுவதும் என்னைச் சேர்ந்ததே. முற்றிய கதிர்கள் இருக்கின்றன. இதோ இனிமையான பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. வெள்ளரிப் பிஞ்சுகளும் இருக்கின்றன. தாங்கள் தாராளமாக தங்கள் பரிவாரங்களுடன் கொல்லையில் நுழைந்து பசி தீரச் சாப்பிடுங்கள். காய்ந்து போயிருக்கும் கம்பு தட்டைகளைக் குதிரைகளுக்குக் கொடுக்கலாம். எனக்குக் கிடைத்தற்கரிய பாக்கியமே இது! இராஜாதி ராஜர் இன்று என் விருந்தாளியாக இருப்பது என் பூர்வ ஜன்மப் பலனே!” என்று உள்ளக் கனிவோடு அழைத்தான்.

அவன் வார்த்தைகளைக் கேட்ட போஜ மகாராஜன் தன் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு கம்பங் கொல்லையில் நுழைந்தான். பசியால் வருந்திய போர் வீரர்கள் கதிர்களை ஒடித்துத் தின்னத் தொடங்கினார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் பரண் மீதிருந்த சரவணப்பட்டன் பறவைகளை விரட்டக் கீழிறங்கி வந்தான். அரசனுடன் வந்த போர் வீரர்கள் “மளுக் மளுக்” கென்று கம்பங்கதிர்களை ஒடித்துத் தின்பதையும் குதிரைகள் தட்டைகளை மேய்வதையும் கண்டதும் அந்தணனுக்குத் திடீரென ஏதோ ஆத்திரம் குமுறி எழுந்தது. அவன் பூபதியிடம் ஓடி வந்தான்.

“போஜ மகாராஜனே! இதென்ன காரியம்? கேள்வி முறையே கிடையாதா? நீதி நெறி வழுவாத தாங்களா இந்த அந்தமான காரியத்தில் இறங்கினீர்கள்? நீங்களும் உங்கள் பரிவாரங்களும் ஏழை அந்தணன் ஒருவனுடைய கம்பங் கொல்லையை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தாங்கள் அறியவில்லையா? என் ஒரு வருஷ வருமானத்தையே பாழாக்கி விட்டீர்களே! மற்றவர்கள் கெடுதல் செய்யும் போது மக்களின் தலைவரான தங்களிடம் வந்து முறையிடலாம்! வேலி போன்ற மன்னரே கெடுதல் செய்யும் போது அதைப் பற்றி நான் எவரிடம் சென்று முறையிடுவேன்? மதம் பிடித்த யானையையும் முறை தவறி நடக்கும் ஆட்சியாளனையும் தவறு செய்யும் அறிவாளியையும் யாரால் நிறுத்த முடியும் என ஒரு பொன்மொழி உண்டு.

“மேலும் தாங்கள் எல்லா நீதி சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்ந்தவர். அப்படியிருக்கத் தாங்களே அந்தணன் ஒருவனுடைய சொத்தைப் பாழாக்குகிறீர்கள். அந்தணன் சொத்துதான் உண்மையான விஷம் என்று சொல்லப்படுகிறது. விஷம் என்பது அறிஞன் ஒருவனுடைய சொத்துடன் ஒப்பிடும் போது விஷமாகாது; அந்தச் சொத்தே உண்மையான விஷமாகும்; ஏனென்றால் விஷம் அருந்திய ஒருவனை மட்டுமே கொல்லக் கூடியது; ஆனால் அறிஞன் சொத்தோ அபகரித்தவனின் சந்ததியையும், அவர்களின் சந்ததிகளையும் கூட அழித்துவிடும் அன்றோ? இதைத் தாங்கள் அறிவீர்களே!” என்று முறையிட்டன் சரவணப்பட்டன்.

அவனுடைய வார்த்தைகள் அரசனின் நீதி உள்ளத்தில் வேதனையை உண்டாக்கின. அடுத்தகணமே போஜராஜன் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான். இந்தச் சமயத்தில் சரவணப்பட்டன் மீண்டும் பரண்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். மன்னர்பிரானும் பரிவாரங்களும் கொல்லையை விட்டு வெளியேறுவதைக் கண்டதும் சரவணப்பட்டன் மறுபடியும் திடீரென்று கூவினான்.

“பூபதியே! ஏன் போகிறீர்கள்? அதற்குள்ளாகவா தங்கள் பசி தீர்ந்துவிட்டது? வேட்டையினால் ஏற்பட்ட களைப்பு இன்னும் நன்கு தீரவில்லை என்பதைத் தங்கள் திருமுகமே காட்டுகிறதே! பசிதீர உணவருந்தி, நிழலில் படுத்து இளைப்பாறுங்கள். வீ ட்டுக்கு வந்த விருந்தாளி உணவருந்தாமல் செல்வது சரியல்ல என்றான். மன்னனை வற்புறுத்தியும் கூப்பிட்டான் சரவணப்பட்டன்.

போஜராஜனுக்குப் பெரும் வியப்பாகிவிட்டது. “பரண்மேலிருந்த போது அந்த மறையவன் நம் முடைய நிலையை உணர்ந்து பசிதீர கம்பங் கதிர்களை ஒடித்துச் சாப்பிடுமாறு அழைத்தான். பரணை விட்டுக் கீழிறங்கி வந்ததும். அவன் உள்ளத்திலே தோன் றிய அந்த உயர்ந்த எண் ணம் மாறிவிட்டது. ‘ஐயோ! கொல்லை பாழாகப் போகிறதே’ என்ற கீழ்த்தர எண்ணமும் சுயநலமுமே மேலோங்கி நின்றன மீண்டும் பரண் மீது ஏறியதும், விருந்து சாப்பிட அழைக்கப்பட்ட நாம் திரும்பிச் செல்வதைக் கண்டு வருந்துகிறான். இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. இது இந்த இடத்தின் விசேஷம் போலும். நாமும் அந்தப் பரண்மீது ஏறிப் பார்க்க வேண்டும். இவ்வி தம் அரசன் தன் மனதில் நினைத்தவனாய் சரவணப்பட்டன் அருகில் வந்து பரண் மீது ஏறினான்.

படிகளில் காலை வைத்து ஏறியவுடனே, உலகாளப் பிறந்தவனின் உள்ளத்திலே சலனமற்ற அமைதி குடி கொண்டது.

அனைவரையும் கஷ்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும்; உலகம் வறுமையின் பிடியில் சிக்குண்டு நாசமாவதைத் தடுக்க வேண்டும்; தீங்கு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும். நல்லவர்களைப் பாதுகாக்க வேண்டும். குடி ஜனங்களை அறநெறி பிசகாமல் பரிபாலனம் செய்ய வேண்டும்; இம்மாதிரியான உயர்ந்த எண்ணங்களே போஜ மன்னன் உள்ளத்தில் தோன்றின. சுருங்கச் சொன்னால், அந்தச் சமயத்தில் எவராவது அவன் உயிரைக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக அரசன் இருந்திருப்பான்.

எவ்வளவு அழகான கொல்லை இது உள்ளத்திலே உயர்ந்த எண்ணங்களைத் தோன்றச் செய்வதின் மர்மமென்ன?

தண்ணீரில் எண்ணெயும் ஒற்றனிடம் இரகசியமும் தகுதிபடைத்த மனிதனுக்கு சிறு பரிசும் புத்தி கூர்மையுள்ள மனிதனிடம் அறிவும் தானாகவே பரவும் அன்றோ? இந்தக் கொல்லையின் அதிசயத்தைக் கண்டுபிடிப்பதற்கான வழி என்ன?

இவ்வாறு சிந்தித்த போஜராஜன் கனிவான குரலில் சரவணப்பட்டனை நோக்கி “அறிஞனே உன் புகார் நேர்மை யானதே. இந்தக் கொல்லையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு நீ அடுத்த வருஷம் பூராவும் காலம் தள்ள வேண்டும். அதை உணராது பசியின் மயக்கத்தில் நான் பரிவாரங்களுடன் இதனுள் நுழைந்துவிட்டேன். அதற்குப் பிரதியாக இந்தக் கொல்லையை உன்னிடமிருந்து கிரயம் கொடுத்துப் பெற்றுக் கொள்கிறேன். நீ விரும்புவதைத் தாராளமாகத் தெரிவி” என்று கேட்டான்.

“அரசே தாங்கள் அனைத்தும் அறிந்தவர்: எது செய்யலாம். எது செய்யக் கூடாதென்பதைத் தெரிந்தவர். இந்தக் கொல்லையின் மதிப்பைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம், பார்க்கப் போனால் தங்களை மகாவிஷ்ணுவுக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். பகவானின் கடைக்கண் பார்வை விழுந்ததால் எவன் தரித்திரமும் துன்பங்களும் இருந்த இடம் தெரியாது ஒழிந்து போய்விடுமே அவ்விதமே அரசனும் கற்பக விருக்ஷம் எனச் சொல்லப்படுகிறான், பகவானை நேரில் காண முடியாது. தாங்களோ பிரத்யக்ஷ தெய்வம்! என்னுடைய கஷ்டங்களும் வருத்தங்களும் தங்களைக் கண்ட மாத்திரத்திலேயே ஒழிந்து விட்டன. அப்படியிருக்க இந்தக் கொல்லை ஒரு பிரமாதமா என்று பணிவுடன் தெரிவித்தான் சரவணப்பட்டன்.

அவன் வார்த்தைகளால் மகிழ்ச்சி கொண்ட போஜராஜன் அக்கொல்லைக்குப் பதிலாக அநேக பரிசுகளும் திரவியங்களும் இனாம் நிலங்களும் அவனுக்குக் கொடுத்து, அக்கொல்லையை தன்னுடையதாக்கிக் கொண்டான். மறுநாளே அவன் தன் அரசாங்க ஆட்களை விட்டுப் பரண் இருந்த இடத்தில் தோண்டிப் பார்க்கச் செய்தான்.

அவ்வாறே ஆட்கள் பூமியை வெட்டிப் பரிசோதித்தார்கள்.

மண்ணை ஆழமாக வெட்டும்போது டங்கென்ற ஒலியுடன் அழகிய நவரத்தினச் சிம்மாசனம் ஒன்று தென்பட்டது. போஜன் அளவில்லா ஆனந்தங் கொண்டவனாய், மேலும் பூமியை நாற்புறமும் குடைந்து வெட்டச் செய்தான். அங்கே நவரத்தினங் களால் இழைக்கப்பட்டதும் முப்பத்திரண்டு படிகளிலும் அழகிய பதுமைகளைக் கொண்டதுமான பொற் சிங்காதனம் ஒன்று இருந்தது.

போஜராஜனின் மகிழ்ச்சிக்கு ஓர் அளவில்லை. அந்த சிங்காதனம் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நிற்கும் போதே உள்ளத்தில் உயர்ந்த மனோபாவங்கள் ஏற்பட்டன. அந்த அதிசயமான நவரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்தால் எவ்வளவு நற்குணங்களுக்கு இருப்பிடமாகி புவனமெங்கும் பிரகாசிக்கலாம். அரசன் அந்த ஆவலோடு பள்ளத்தில் இறங்கி சிங்காதனத்தை மேலே தூக்கச் செய்தான். ஆட்கள் ஒன்று சேர்ந்து சிங்காதனத்தை தூக்க முயன்றார்கள்.

சிங்காதனம் இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. புஜபல பராக்கிரம மன்னனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அருகிலே நின்ற நீதிவாக்கிய மந்திரியைப் பார்த்தான். “மாமந்திரி நவரத்தின சிங்காதனம் இடத்தை விட்டுப் பெயர மறுப்பதின் காரணமென்ன?” என்று கேட்டான் போஜராஜன்.

*பூபதி! பூமியில் புதையுண்டு கிடந்த இச்சிங்காதனம் புராதன காலத்தைச் சேர்ந்தது. தெய்வத்தன்மை வாய்ந்தது. இதற்கு உரிய பூஜை புனஸ்காரங்கள் செய்யாமல் நாம் எடுக்கும் எந்த முயற்சியும் பலனை அளிக்காது” என்றார் நீதிவாக்கிய மந்திரி.

உடனே புவி மன்னன் புரோகிதர்களை வரவழைத்துச் சிங்காதனத்துக்குச் செய்ய வேண்டிய பூஜைகளையும் உபசாரங் களையும் செய்யுமாறு வேண்டினான். அதற்குப் பிறகே சிங்காதனம் அதன் இருப்பிடத்தைவிட்டு நகர்ந்தது. இதைக் கண்ட அரசன் நீதி வாக்கிய மந்திரி ஆரம்பத்தில் சிங்காதனம் எனக்குச் சுலபத்தில் கிட்டாது போல் தோன்றியது. ஆனால் இப்பொழுதோ உன்னுடைய ஆலோசனையின் பிரகாரம் நடந்து கொண்டதால் சிங்காதனத்தை வெளியே எடுக்க முடிந்தது. ஆகவே அறிவாளிகளுடன் நட்பு கொள்வது இலாபகரமானதோடு சிறந்ததாகும். என்றான்.

அப்போது, நீதிவாக்கிய மந்திரி மன்னனைப் பார்த்து ”மணிமுடி வேந்தே! கேளுங்கள்! எவனொருவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையையும் கேட்காவிடில் அவன் அழிவையே அடை வான். தாங்கள் அப்படியல்ல. நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் இவ்வி ஷயத் தில் என் ஆலோசனைக்குச் செவி கொடுத் தீர்கள். ஆகவேதான் தாங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் பலனின்றி வீண் போவதில்லை” என்றார்.

அப்பொழுது போஜமன்னன் மீண்டும் சொன்னான். “மதிமந்திரி எவனொருவன் வரப்போகும் கெடுதல்களை முன்னதாகவே உணர்ந்து ஆட்சியாளனை நல்லதற்ற வழியிலே செல்லாது தடுத்து நேர்மையான பாதையில் அழைத்துச் செல்கிறானோ அவனே உண்மையான மந்திரியாவான்.

“ஆம் அரசே! நடுமந்திரி எப்போதும் தன் அரச பீடத்தின் தலைவனுடைய நலத்திலே கருத்து உடையவனாய் இருக்க வேண்டும்” என்று நீதி வாக்கிய மந்திரி பல உண்மைகளைக் கூறலானார்.

”மந்திரிகள் இல்லாத ராஜ்யம் உறை பண்டங்களைச் சேர்த்து வைக்கும் உக்கிராணம் இல்லாத கோட்டை, அனுபவிக்க யௌவனம் இல்லாத அதிர்ஷ்டம், அறிவு இல்லாத துறவறம், வஞ்சகர்களிடையே தர்ம சிந்தனை, வேசிகளிடையே காதல், நீசர்களிடையே நட்பு, அழகிகளிடையே சுதந்திரம், ஏழையிடம் கோபம், வேலைக்காரனிடத்தில் ஆத்திரம், பிரபுவிடம் அன்னியோன்யம், பிச்சைக்காரன் வீடு, சலன புத்தியுள்ள பெண்ணிடம் புனிதத் தன்மை, திருடர்களிடையே கௌரவம், முட்டாள்களிடையே முன்னேற்றம் இவையனைத்தும் வியர்த்தமானதே.

மேலும் ஆட்சியாளன் பெரியார்களை கௌரவிக்க வேண்டும். அறிஞர்களின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். ஆண்டவனையும் அறநெறியாளர்களையும் பூஜிக்கவேண்டும். நல்ல பாதையிலே வாழ்க்கையைச் செலுத்த வேண்டும். இன்னும் அரசனுக்குக் கூறப்படும் நற்குணங்கள் அனைத்தும் தங்களிடம் காணப்படுகின்றன. அதனால் நீங்கள் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாதி ராஜராக விள ளங்குகிறீர்கள்.

இன்னும் மந்திரியாக வருபவன் நல்ல குடும்பத்தை சேர்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் காமாந்தகியின் நீதிசாரத்தையும் சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்தையும், பஞ்ச தந்திரத்தையும் நன்கு அறிந்தவனாக இருக்க வேண்டும். மேலும் அவன் குடிமக்களின் க்ஷேமத்தில் விருப்பம் உடையவனாகவும். தன் சகபிரதானிகளை நன்கு நடத்திச் செல்லும் திறமை வாய்ந்தவ னாகவும் அரசனுடைய போக்கிற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டு மென்பதை உணர்ந்தவனாகவும் ஆட்சிபீடத்தை கஷ்டத்திலிருந்து காப்பாற்றுபவனாகவும் இருத்தல் வேண்டும். மேலும் இல்லற நற்குணமும் வாய்ந்தவனே மந்திரியாகத் தகுந்தவன்.

நந்தமன்னன் தன்னுடைய மந்திரி பஹுசுருதன் மூலம் பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து காப்பாற்றப்பட்டான் அல்லவா என்று நீதி வாக்கிய மந்திரி ஒரு கேள்வியுடன் கூறி முடித்தார்.

”அது எப்படி? அந்தக் கதையை எனக்கு விரிவாகத் தெரிவி” என்று போஜராஜன் கேட்கவே நீதி வாக்கிய மந்திரியும், “புவனபதியே அந்தக் கதையைச் சொல்லுகிறேன். கேளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கதையை ஆரம்பித்தார்.

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *