காடு குடிபுகல் 

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2025
பார்வையிட்டோர்: 870 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘உமா’ சீதை கூப்பிட்டாள். சமையலறையில் அலுவலாய் இருந்த உமா, வெளியே வந்து, மிகுந்த பணிவோடும் பயபக்தியோடும் ‘என்ன?’ என்னும் பாவனையில் சீதையின் முன்னே வந்து நின்றாள். 

“கொஞ்சம் மஞ்சளும் உப்பும் எடுத்து வை. நான் கொண்டு போகவேணும்”

‘சரி’ என்னும் பாவனையில் தலையாட்டிய உமா, யந்திர கதியில் சமையலறைக்குள் நுழைந்து, இட்ட பணியை நிறைவேற்றுவதில் ஈடுபட்டாள். 

சிறிது நேரத்தில் கொஞ்ச உப்பை ஒரு சிறு பாத்திரத்தில் ஏந்தியவளாய் சீதை முன்னே கொண்டு சென்று, ‘இது நல்லதா?’ என்று கேட்கும் அர்த்தத்தில்நின்றாள். 

உப்பைப் பார்த்த சீதை ‘இதைக் கொஞ்சம் தண்ணீரில் கழுவி எடுத்து வைத்தால் நல்லது’ என்றாள். 

மஞ்சளையும் எடுத்து வந்து காட்டினாள். 

சீதை திருப்தியோடு தலையசைத்தாள். 

அதன் பின் மஞ்சளையும் உப்பை யும் வெவ்வேறாகச் சுற்றி, எடுத்துச் செல்லக் கூடிய விதத்தில் ஒரு பாத்திரத்தில் மாட்டு வைத்தாள். 

உப்பும் மஞ்சளும் ஏன்? 

நாளை இராமரோடு சீதை காட்டுக்குப் போகப் போகிறாள். 

இந்த விஷயத்தை சீதை அங்கு யாருக்கும் வாய் திறந்து சொல்லவில்லை. உமாவுக்குக் கூட அது சொல்லப்படவில்லை. ஆனால் அது சொல்லப்படாவிட்டாலும் அந்த வீட்டைச் சுற்றி, அந்த விஷயம் காற்றில் மிதப்பது போல் உமாவின் சுவாசங்களில் ஏறி உள்ளுணர்த்திற்று. 

நாளை இராமரோடு காடு குடிபுகப்போகும் சீதை, மஞ்சளும் உப்பும் தன்னோடு எடுத்துச் செல்லப்போகிறாள். 

இது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த உமாவின் நினைவில், இன்னொரு விஷயம் இடைக்கிடை வந்து நெஞ்சைச் சுட்டது. அடுப்பு வெக்கை விட்டு விட்டு சுழற்றி மூஞ்சியையும் நெஞ்சையும் தீய்ப்பது போல். அந்த நினைவு வந்து வந்து அவள் நெஞ்சைச் சுட்டது. 

அவள் அந்த நினைவுக்கு உருக்கொடுத்துப் பார்க்கிறாள். 

வீட்டின் நடுவறையில் உள்ள கட்டிலில் கைகேயி கையை ஊன்றியவளாய், யோசனையோடு படுத்திருப்பது போல் அவளுக்குப் பட்டது. இராமரைக் காட்டுக்கு அனுப்பும் வரை அவள் மனம் அமைதி. அடையாது போன்ற நிலை. 

இத்தனைக்கும் உமா கைகேயியைப் பார்க்கவில்லை. கைகேயி படுத்திருப்பதாக ஊகித்த தன்னுடைய வீட்டு அறைக்குள் அவள் செல்லவில்லை. ஆனால் ஏனையவற்றைப் போல் அதுவும் சூழலில் இணைந்து, அவள் உணர்வின் ஈர்ப்பால் உள்நுழைந்தது. 

இதற்கிடையில் உமாவுக்கு தனது கணவனின் நினைவும் அவனோடு நேற்றுக் கதைத்தவைகளும் நினைவில் எழுந்தன. அவன் இன்னும் தனது அறையில் இருந்து எழுதிக் கொண்டிருக்கலாம். 

சீதை காட்டுக்குக் கொண்டு போவதற்கு மஞ்சளும் உப்பும் எடுத்து வைக்கச் சொன்னது பற்றி அவளது கணவனுக்குக் கூறி, அவனது விளக்கத்தைக் கேட்க வேண்டும்போல் அந்நேரம் பட்டது. ஆனால் அவளுக்கெங்கே நேரம்? சமையலறையில் பலவிதமான வேலைகள். குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. அது தோதாக வற்றும்வரை காத்திருந்து இறக்கி வைக்க வேண்டும். அவள் பிரதானமாகக் கவனிக்க வேண்டியவற்றை பொறுப்புடன் செய்து கொண்டிருந்தாள். இன்னும் பலர் அங்கே அவளோடு கூடமாட பல உபவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பலகார வேலைக்கான அடுக்குகள் நடந்து கொண்டிருந்தன. சீதை இராமரோடு போகும்போது கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவள் அவற்றையும் இடைக்கிடை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள். 

இவற்றுக்கிடையில் அவளுக்குள்ளோர் புதிர் இழைந்தது. 

ஒவ்வொரு வேலையாக அவள் செய்து முடிக்க, அடுத்த வேலை ‘இதுதான்’ என்று யாரோ சொல்வது போல் அது அவள் முன் விரிந்தது. சிலவேளை அவள் பின்னே அவளது கணவன் நின்று குரல் கொடுப்பது போலவும் கேட்டது. 

அந்தப்புதிர், எலுமிச்சம்பூப்போல் அவளுக்குள்ளேயே மலர்ந்து, அவள் வேலைகளுக்கிடையே மறைந்து மறைந்து தலை காட்டிற்று. அப்போதெல்லாம் அவள் கணவன் அவள் பின்னால் நிற்பது போலவும் உணர்வேற்பட்டது. 

உமாவுக்கு தனது கணவன் பற்றிய நினைவு இராமரைப் பற்றிய நினைவை இழுத்து வந்தது. இராமர் எங்கே போய்விட்டார்? 

நாளைக்குத் தனது வனவாசத்தைத் தொடங்குவதற்கு முதல் அதுபற்றி நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் சொல்லி விடைபெற்று வர இராமர் வெளியே போய்விட்டிருந்தார். 

இது பற்றியும் யாரும் அங்கே கதைத்ததாய் இல்லை. எனினும் முன்னவைபோல் இதுவும் அவளுக்கு உள்விரிந்த உணர்வில் பட்டுத் தெளிந்தது. 

எனக்கு என்ன நடக்கிறது? 

நான் எங்கே இருக்கிறேன்? 

இப்படி உமா தன்னையே கேட்டுக் கொண்டபோது அவளுக்கு அப்படி ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அவள் வழமைபோலவே இருந்தாள். தன் வீட்டிலேயேதான் இருந்தாள். 

அப்படியானால் அவள் ஒரு வித்தியாசமான கனவு காண்கிறாளா? 

அப்படியும் இல்லை. அது கனவாய் அவளுக்குப் படவில்லை. கனவெனில் அவளுக்கு அதை இலகுவாக இனங்கண்டு கொள்ள முடியும். கனவெனில் நேற்று, முந்தநாள் என்று நடந்த நிகழ்வுகள் பிரக்ஞை கொள்வதில்லை. ஆனால் உமாவுக்கு அந்நேரத்தில் நேற்றுக்காலை கணவனோடு நிகழ்த்திய விவாதம் சதையும் குருதியுமாக நினைவுக்கு வந்தன. 

“இந்தக் காலத்தில் எங்களைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு ஆத்ம ஞானம் அடைய முடியுமா, அப்பா” உமா வீட்டு விறாந்தையில் ஏதோ புத்தகமும் கையுமாகக் குந்தியிருந்த தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள். 

“ஏன் முடியாது, அதற்கென்ன தடை?” அவள் கணவன் திருப்பிக் கேட்டான். வெகு அனாயசமாக. 

“என்ன வெகு லேசாக சொல்லிப் போட்டீர்கள், முந்தியெல்லாம் ஞானிகள், ரிஷிகள் காட்டுக்குப் போய் கடுந்தவம் செய்துதானே ஞானம் பெற்றார்கள்? இப்ப அது முடியக்கூடிய விஷயமா?” அவள் தனது உண்மையான சந்தேகத்தையே வெளிப்படுத்தினாள், 

“ஏன் இப்ப ஞானிகள், ரிஷிகள் இல்லாமலா போய் விட்டார்கள்? ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர், அரவிந்தர், ராமதாஸ் என்டு ஒரு பெரிய பட்டியலே போடலாமே?’ அவன் மீண்டும் வெகு அலட்சியமாகச் சொல்லி விட்டு அவளைப் பார்த்தான். 

“எனக்கெண்டால் அவையளை எங்களோடை ஒப்பிட முடியாதெண்டுதான் படுகுது. அவர்கள் விசேடப் பிறவியள். எங்களைப் போன்ற சாதாரண ஆக்களுக்கு இது முடியுமா?” 

“நீ ஏன் அப்பிடிச் சொல்லிற?” 

“பிரமச்சரியம், கிரஹஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் என்று வந்த வழிமுறைகள் இப்போ இல்லை. அவைகளைக் கடைப்பிடிக்கிறதுக்கான வசதிகளும் இப்ப இல்லை. இந்த நிலையில எங்களைப் போல ஆக்களுக்கு ஞானம் அடைவது கஷ்டந்தான்.” 

“இல்லை நீதவறாக நினைக்கிறாய். இன்று அந்த வழிகள் எல்லாம் ஒன்றாக கலந்து விட்ட காலம். ஒரு விதத்தில் பார்க்கப் போனால் ஞானம் அடைவது இன்று லேசாக்கப்பட்டிருக்கு என்றுதான் சொல்ல வேணும்” ‘”அதெப்படி?” அவள் கேள்வியில் ஆவல் மின்னுகிறது. 

“பிரமச்சாரியம், கிரஹஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம் எல்லாம் இன்று கிரஹஸ்த வாழ்க்கைக்குள் அடக்கம். அதாவது இல்லறத்தில் இருந்து கொண்டே நாம் இவற்றைக் கடைப்பிடித்து ஞானம் அடையலாம்’- அவன் பதிலில் அழுத்தம் இருந்தது. 

“அப்ப காட்டுக்குப் போகத் தேவையில்லையா?” அவள் கேள்வியில் மீண்டும் ஆவல். “இப்ப வீடுதான் காடு எல்லாத் தர்மங்களையும் வீட்டிலிருந்து செய்வதற்குரிய காலம் இது” அவன் பதிலில் அதே அழுத்தம். 

“ஆனால் இது நீங்க சொல்வது போல லேசாக எனக்குத் தெரியவில்லை, சரியான கஷ்டமான வேலை என்றே எனக்குப்படுகுது. அவள் சோர்வுடன் பதில் கூறினாள். 

“அப்படிப் பார்த்தால் எதுதான் கஷ்டமில்லை? ஆனால் கால ஓட்டத்தை விளங்கியவர்களுக்கு இதைவிட லேசானது வேறு இருக்கமுடியாது” அவன் பதிலில் உற்சாகம் கரைபுரண்டது. 

உமாவுக்கு நேற்றுக்காலை தன் கணவனோடு கதைத்த இவ்வுரையாடல் எங்கிருந்தோ எதிரொலிப்பது போல் கேட்டுக் கொண்டிருந்த அதேவேளை, அவள் திடீரென சூறையால் அள்ளுப்பட்டு மேலே உயர்ந்து இன்னோர் தளத்தில் காலூன்றியது போல் பட்டது.

அவள் இப்போ நிற்பது புதிய இடமா? 

அவள் சுற்றும் முற்றும் நிதானித்துப் பார்த்தாள். 

இல்லை. இடம் பழைய இடமாகவே பட்டது. ஆனால் எண்ணங்களின் கனதி குறைந்து, பரவசம் மேலிட்டு நின்ற உணர்வலைகள், அவ்விடத்திற்கு ஓர் புதிய பரிமாணத்தை சூழ்வித்திருந்தன. அதனால் அது புதிய தோற்றம் கொள்வது போல் தெரிந்தாலும், அது அவளுடைய வீட்டின் பின்புறமே என்பது தெள்ளெனத் தெரிந்தது. 

ஆனால் திடீரென அவ்விடத்தில் ஓர் அசௌகரியமான உணர்வின் வாடை வீசத் தொடங்கிற்று; அடுத்த கணம் அங்கே அவள் கண்ட காட்சி அவள் இதயத்தை வேகமாக அடிக்கச் செய்தது. அவள் நெஞ்சில் இனந்தெரியாத பீதியின் கசிவு. இந்நேரங்களில் அவளுக்கு அவள் கணவனின் பக்கத்துணை பெரிதாகத் தேவைப்படும். இப்போது கூட, அவள் கணவன், அவள் கூப்பிட்டதும் வீட்டின் எந்தப்பகுதியிலிருந்தாலும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவான். அவள் கணவனைக் கூப்பிடுவதற்கு வாயெடுத்தாளோ இல்லையோ, மறு வினாடி, அங்கு நடந்த நிகழ்ச்சிகளால் அள்ளுப்பட்டுப்போகிறாள். 

முற்றத்தில் இராமரும் இலக்குமணரும் எதிரும் புதிருமாக நிற்கின்றனர். 

இலக்குமணரை சுட்டெரித்து விடுவது போல் பார்க்கும் இராமரின் கண்கள் கோபத்தால் கனல்கின்றன. 

அப்பார்வையில் நீண்ட சாட்டையே இலக்குமணனை உட்தளர்த்திக் கூனவைக்கின்றன. 

“நீ பாவி, பெரிய துரோகம் செய்து விட்டாய்” என்று கூறிய இராமர், கையிலிருந்த சவுக்கை நீட்டியவாறே இலக்குமணனை நோக்கி முன்னேறுகிறார். 

“நான் பாவியுமல்ல. யாருக்கும் துரோகம் செய்யவுமில்லை” இலக்குவன் பெருங்குரல் எடுத்து எதிர்த்தான். ஆனால் அந்த எதிர்ப்பில் உயிர் இருக்கவில்லை. 

“வாயை மூடு, உனக்கு அந்த மாயமானின் குரல் பெரிதாகப் போயிற்று. அந்த மாயமான் போட்ட கூச்சலை நம்பி அதற்குப் பின்னால் ஓட வெளிக்கிட்டு விட்டாய். உனக்கு வெட்கமில்லை?’ 

இலக்குவன் பேசாமல் நின்றான். இராமர் தொடர்ந்து கோபாவேசத்தோடு கத்தினார். 

“நீ மாயமானுக்குப் பின்னால் ஓடினாய். இங்கே சீதை எம்மிடமிருந்து பறிபோய்விட்டாள். அந்த அரக்கன் அவளைக கொண்டுபோய் சிறைவைத்துவிட்டான். 

இலக்குவன் அப்போதும் பேசவில்லை. இராமரே தொடர்நதார். “சீதை மட்டுந்தான் பறிபோனாளா? அடப்பாவி, துரோகத்தால், இதோ பார் என் உயிருக்குயிரான சடாயுவை! குற்றுயிரும் குறை உயிருமாய் சாகும் நிலையில்…. 

இராமர் காட்டிய திசையில் உமாவின் கண்கள் பதிகின்றன. அங்கே சடாயு என்னும் கழுகை அவள் காணவில்லை. மாறாக அவளுக்குத் தெரிந்த தர்மேஸ் என்னும் பாடசாலைத் தோழி துடித்துக் கொண்டு கிடக்கிறாள். 

மீண்டும் அங்கே இராமரின் குரலே ஓங்கி ஒலித்தது. 

“இலக்குமணா, நீ என் கட்டளையை மீறி வெளிக்கிட்டதால் எத்தனை நாசங்கள் நடந்து விட்டன! குருத்துரோகம் செய்த உன்னை சும்மா விடமாட்டேன்! என்று கத்திக் கொண்டே இராமர் இலக்குவனை நோக்கி சவுக்கை ஓங்கி விசுக்குகிறார். 

இலக்குவன் பின்வாங்குகிறான். என்றாலும் ஓங்கிய சவுக்கின் சுழற்சி ஒருதரம் அவனைக் கெளவி விலகுகிறது. அந்த ஒரே ஒரு அடி! அதற்கு மேல் எந்த அடியும் அவனில் விழவில்லை. ஆனால் சவுக்கின் ஓசை மட்டும் செவிப்பறைகள் அதிர்வது போல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 

அஞ்சி நிற்கும் இலக்குவன் முன் திடீரென யாரோ வெண்தாடி வளர்த்த கிழவர் ஒருவர் தோன்றுகிறார். அவர் இடையில் புகுந்து சவுக்கின் அடிகள் விழாது அவனைக் காப்பாற்றுகிறார். 

யார் அவர்? 

உமா தனக்குள் கேட்டுக் கொள்கிறாள். 

அது வசிட்டரா? 

இராமரின் குரு வசிட்டர்தானே? வசிட்டருக்குத்தான் இராமர் கட்டுப்படுவார். ஆனால் இப்படி ஒரு நிகழ்ச்சியும் இராமாயணத்தில் இல்லையே? 

இராமர் எந்தக் காலத்தில் இலக்குவனைத் தாக்கினார்? 

உமாவின் மனம் மாறி மாறி இரு தளங்களுக்குள் இயங்கிற்று. அவள் மேலும் அது பற்றிய தன் சிந்தனையைத் தீவிரப்படுத்து முன் திடீரென இன்னோர் நிகழ்ச்சி. 

இராமர் கையிலிருந்த சவுக்கை எறிந்து விட்டு. கீழே கிடக்கும் அந்தச் சடாயு என்று அவரால் கூறப்பட்ட தர்மேஸ் என்னும் உமாவின் பாடசாலைத் தோழியை மடியில் தூக்கி வைத்து தலையைத் தடவுகிறார். பின்னர் சிறிது நிமிர்ந்து உமாவைப் பார்க்கிறார். ‘தண்ணீர் கொஞ்சம் செம்பில் கொண்டு வா’ என்னும் கட்டளை அவர் பார்வையில் இருந்ததை இவள் தானாகவே விளங்கிக் கொண்டு, செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறாள். அவர் தண்ணீரை சிறிது கையில் அள்ளி “சடாயுவில்” தெளிக்க, அவர் மடியில் சடாயுவாய்க் கிடந்த தர்மேஸ் உயிர் பெற்றெழுகிறாள். பின்னர் திடீரென ஒரு சடாயுவாக மாறி இராமரின் கையிலிருந்து எழுந்து விண்ணில் வட்டமிடுகிறாள். 

உமாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. 

“தர்மேஸ், தர்மேஸ்’ என்று வாய்க்குள் கூறிக் கொண்டே அண்ணாந்து பார்த்தபடி கையை ஆட்டிக் குதியிடுகிறாள். 

உமாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 

இதென்ன நம்பமுடியாத காட்சிகள். 

இவற்றையெல்லாம் தன் கணவனுக்குச் சொல்ல வேண்டும் என்பது போல் ஓர் ஆவல். ஆனால் இத்தனைக்கும் ‘அவர்’ தன்னைத் தேடி வராமல் தன் வேலைக்குள் மூழ்கி விட்டாரே என்கிற ஆதங்கம் வேறு. 

இந் நினைவுகளிலிருந்து அவள் விடுபடுவதற்குள், இராமர் கையிலிருந்த செம்பை அவளை நோக்கி நீட்டுகிறார். 

அவள் ஓடிப்போய் செம்பை இராமரின் கையிலிருந்து வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழையும்போது அவள் நெஞ்சு ஒருக்கால் பெரிதாகத் துடித்துச் சில்லிடுவதுபோல் அங்கே அவள் கண்ட காட்சி. 

சமையலறைக்குள் நிற்பது யார் ? அவள் இதயம் மீண்டும் உறைந்து விடுவது போல்… சமையலறைக்குள் ஒரு பெரிய குரங்கு சாப்பாட்டுத் தட்டை ஏந்தியவாறு நிற்கிறது! 

“ஐயோ வீட்டுக்க குரங்கு!” என்று உமாவின் வாய் உரத்துக்கூவியபோது, குரங்கின் கனத்த குரல் குறுக்கிட்டது. 

“நான் சாதாரண குரங்கல்ல. என்ன வடிவா பார்” 

அவள் அதை நன்றாகக் கவனித்தாள். முகம் குரங்கின் முகந்தான். 

ஆனால் குரங்கல்ல. 

“அனுமான்!” 

அவள் வாய் அலறிற்று. 

“நீ ஏன் இங்கே வந்தாய்?” அவள் வாய் அவளை அறியாமலே தொடர்ந்து கத்துகிறது. 

“இராமர் இருக்கும் இடந்தானே, என்னுடைய இடம்’ என்று ஒருவித சாகசப் புன்னகையோடு கூறிய அனுமன், தன் விழிகளை ஜன்னலை நோக்கி எதையோ காட்டுவது போல் திருப்புகிறான். 

தெருவைப் பார்த்திருந்த ஜன்னல் பக்கமாக உமா விழிகளை ஓட்டுகிறாள். 

அவள் உடல் வியப்பால் ஆடிற்று. 

அங்கே தெருவின் இருகரையிலும் அணிவகுத்து ஏராளமான வானரப்படை வந்து கொண்டிருக்கிறது. 

அவள் நெஞ்சிலிருந்து எழுந்த புல்லரிப்பு உடல் முழுவதும் பரவிற்று. அவள் உடல் ஊசலாடியது. 

“பயப்படாதே, அங்கே பார்’ என்று அனுமன் மீண்டும் ஜன்னல் பக்கம் சுட்டிக் காட்டிக் குரல் கொடுப்பது போல் பட்டது. மீண்டும் அவள் ஜன்னல் பக்கம் பார்க்கிறாள்.

அது ஜன்னலா? 

இல்லை. 

அது அனுமனின் நெஞ்சு! 

மெல்ல மெல்ல ஜன்னல் கிராதிகள் போல் தெரிந்த கோடுகள் அழிந்து, அனுமனின் நெஞ்சின் வலது பக்கத்தில் ஓர் பெரும் ஜோதி எரிந்தது. அவள் கண்கள் அகல விரிந்தன. 

அந்த ஜோதிக்குள் இராமர் துயின்று கொண்டிருக்க, அவர் தொப்பூழ் கொடியில் முளைத்தெழுந்த தாமரையின் மேல், பிரம்மாவுக்குப் பதில் லங்காபுரி தெரிந்தது. அங்கே பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

“யாருக்கு பட்டாபிஷேகம், ராமருக்கா?” 

உமா தன்னையும் மறந்து கேட்கிறாள். 

“இல்லை இது விபூஷணனுக்கு!” என்று அனுமன் கூறுகிறான். 

உமாவின் கண்கள் ஆவலோடு விரிகிறது. 

அங்கே உமாவின் பள்ளித்தோழி தர்மேஸ் விபூஷணனுக்கு குடை பிடித்து நிற்பது தெரிகிறது. 

பின்னால் ஏதோ அரவம் கேட்டது. 

உமா திரும்பிப் பார்த்தாள். 

“என்ன வீட்டிலிருந்தே. காட்டுக்குப் போனவர்கள் காணக்கூடியதெல்லாம் காண்கிறாயே!” என்றவனாய் அவள் கணவன் அங்கே வந்து கொண்டிருந்தான். 

– 1988

– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *