காக்காவின் கதை கேளு!





அந்தக் காக்கை தன் தலையைச் சாய்த்து வீட்டு மதிலில் இருந்த உணவைக் கொத்திக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ரேவதி தன் பாட்டியிடம், “ஏன் பாட்டி காக்கா எல்லாம் ஒரு பக்கமா தலையைச் சாய்ச்சுப் பார்க்குது?” என்றாள்.
“அதுவா? அது ஒரு பெரிய கதை” என்ற பாட்டி ரேவதிக்குக் கதை சொல்ல ஆரம்பித்தாள்…
“அடர்ந்த காட்டின் நடுவே இருந்தது அந்தக் கோயில்.
அங்கு தியானத்தில் முனிவர். இருந்தார். அவரின் கோபத்துக்குப் பயந்து எந்த விலங்கும் அந்தப் பக்கம் வருவதில்லை. தினமும் ஒருவர் வந்து, முனிவர் முன்பு ஓர் இலையில் சாப்பாட்டை வைத்துவிட்டுச் செல்வார்.

இதைத் தொடர்ந்து கவனித்து வந்தது காகம். அதிரசமும் வடையும் காக்கைக்கு மிகவும் பிடித்த உணவு. அவற்றைத் தினம் தினம் மரத்தின் மீது அமர்ந்து பார்த்துப்பார்த்து ஏங்கிப் போயிருந்தது.
மெதுவாகக் ‘கா… கா…’ என்று சத்தம் எழுப்பித் தன் நண்பர்களைக் கூவி அழைத்தது.
சில நிமிடங்களில் மற்ற காக்கைகளும் மரத்தில் வந்து கூட்டமாக அமர்ந்தன.
“எதற்கு அழைத்தாய்?”
“நீங்கள் உங்கள் உணவைச் சேகரிக்க எவ்வளவு தூரம் பறக்கிறீர்கள்?”
சற்றே மூத்த ஒரு காகம் பதில் கூறியது.
“கணக்கே இல்லை. நிறைய நாள்கள் நாள் முழுவதும் பறந்து பார்த்து உண்ண ஏதும் கிடைக்காமல் கூடு வந்துசேர்கிறோம்…”
“இதற்கு ஒரு தீர்வு காணவே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்… சிறிது நேரம் காத்திருங்கள். இங்கே நடப்பதைப் பாருங்கள்…”
சத்தம்போடாமல் அவை அனைத்தும் காத்திருந்தன.
சிறிது நேரத்தில் ஒருவர் அங்கே வந்து முனிவர் முன் இலையில் விதவிதமாக உணவை வைப்பதைப் பார்த்தன.
“பார்த்தீர்களா, இதை நாம் தினமும் எடுத்துச்சென்றால் உணவுக்காக நாம் தேடிப் பறக்கத் தேவையே இருக்காது.”
“இந்த முனிவர் கண் திறக்கும் நொடி அவகாசம்கூடக் கொடுக்காமல் நாம் அனைவரும் இதை எடுத்துக்கொண்டு சென்றுவிட வேண்டும்” என்றது.
மற்ற காகங்கள் அதைத் தலை அசைத்து ஒப்புக்கொண்டன.
(இந்த இடத்தில் பாட்டி கதையை நிறுத்தி தண்ணீர் குடித்த பி்றகு தொடர்ந்தார்…)
அடுத்தநாள் காலைச் சாப்பாடு எடுத்து வந்தவர் அதை வைத்துவிட்டு முனிவரை நமஸ்கரித்து விட்டுச்செல்லும்வரை அவை காத்திருந்தன. அடுத்த நொடி அனைத்துமாகச் சென்று இலையை வெகு ஜாக்கிரதையாக மூக்குகளால் கொத்தி எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பல மைல் தூரத்துக்குப் பறந்தன.
அன்று அவைகளுக்கு நல்ல உணவு. இதைக் கண்டுபிடித்த காகத்துக்கு அதற்குப் பிடித்த வடையும் அதிரசமும் கொடுத்தன. காக்கைகளுக்கு வயிறு நிரம்பி சோம்பேறித்தனமாகக் கூடுகளிலேயே அமர்ந்து வெட்டிப்பேச்சுக்கள் பேசித்தீர்த்தன.
தவம் முடிந்து கண்களைத் திறந்த முனிவர் தன்முன் சாப்பாடு இல்லை என்பதைப் பார்த்துச் சிறிது நேரம் கண்மூடித் தியானித்தார். நடந்தது என்ன என்றும் அறிந்துகொண்டார்.
அடுத்த நாள் காலை எப்போதும்போல் அவர் கண்மூடித் தியானத்தில் இருக்க, சாப்பாடு வந்தது. காக்கைகள் அதை எடுக்க வரும்போது காத்திருந்த முனி சட்டென்று கண்களைத் திறந்தார். செய்வதறியாது காக்கைகள் ஸ்தம்பித்து நின்றன.
“காக்கைகளே… உங்களுக்கு ஏன் ஆகாயத் துப்புரவாளர் என்று பெயர் உள்ளது தெரியுமா? நீங்கள் வீடுகளைச் சுற்றி உள்ள கழிவுகளைச் சுத்தம்செய்து நாடும் வீடும் சுத்தமாக இருக்க உதவுகிறீர்கள் என்பதால்தான். அதை மறந்து, இப்படி எனக்கு வைத்த உணவை எடுத்து, உண்டு நாள் முழுவதும் வேலை செய்யாதிருப்பது சரி அல்ல. இத்தகைய எண்ணத்தை இன்றோடு விட்டுவிடுங்கள்.”
ஒரு நாளிலேயே சோம்பேறித் தனத்துக்கு பழக்கப்பட்ட காக்கைகள் முடியாது என்று தலை அசைத்தன.
கோபம் கொண்ட முனிவர் “எந்தக்கண்களால் என் உணவைப் பார்த்து ஆசைப்பட்டீர்களோ அந்தக்கண்கள் இனி, தெரியாமல் போகட்டும்.” என்று சாபம் இட்டார்.
காக்கைகள் யாவும் பார்வை இல்லாமல்போக, பறப்பதற்குக்கூட முடியாமல் திகைத்து நின்றன. செய்த தவறு புரிந்து முனிவரிடம் அடிபணிந்து மன்னிப்புக்கேட்டன.
மனம் இளகிய முனிவர் சொன்னார்…
“கொடுத்த சாபத்தை முழுவதும் நீக்க இயலாது. நீங்கள் செய்த தவற்றை உணரத் தண்டனை கொடுக்கத்தான் வேண்டும். சரி அதை எடுக்க முடியாது ஆனால், குறைக்க முடியும். இனி உங்களுக்கு ஓர் கண்ணில் பார்வை உண்டாகும்.”
“நடந்த தவற்றுக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். தயவுசெய்து இந்தத் தண்டனை எனக்கு மட்டும் என்று இருக்கட்டும்” என்று கெஞ்சியது இவை எல்லாவற்றுக்கும் காரணமான காக்கை.
காக்கை தன் தவற்றை ஒப்புக்கொண்டு அதற்குத் தண்டனையும் பெற நினைத்ததைக் கண்டு மனம் இளகிய முனிவர், காக்கைகளைப் பார்த்துச் சொன்னார்… “காக்கைகளே… நான் கொடுத்த சாபம் இனி நிலைத்து இருக்கும். ஆனால், அதில் ஒரு மாற்றம். உங்கள் இரு கண்களும் தனித்தனியே பார்வை இருக்கும்படியான வரம் தருகிறேன். ஒரு கண் பார்ப்பதை மறு கண் பார்க்காது. ஆனால், இனி நீங்கள் யாவரும் தனி இல்லை. கூட்டமாகச் செயல்படுங்கள். இன்றிலிருந்து மனிதர்கள் யாவரும் காலை அவர்கள் உணவு உண்பதற்குமுன் உங்களுக்கு ஒரு பிடி அன்னம் வைக்கவேண்டும் என்று சொல்லிவிடுகிறேன். நீங்கள் கூட்டமாகச்சென்று அவற்றைப் பகிர்ந்து உண்ணுங்கள்” என்று அருளினார்.
அதனால்தான் காக்கைகள் இன்றும் தலையைச் சாய்த்து ஒருபுறமாகப் பார்க்கின்றன. நாமும் காலையில் அவற்றிற்கு ஒரு பிடி அன்னம் தினமும் காலையில் வைக்கிறோம்.
பாட்டியிடம் கதை கேட்டு முடித்து, ரேவதி, அப்பாவிடம் ஓடி வந்தாள்.
“அப்பா… பாட்டி சொன்னது கரெக்ட். காக்கா தலை சாய்ச்சுத்தான் பார்க்குது. ஏம்பா இதுக்கெல்லாம் நாம கண்ணாடி வாங்கித்தரலாமா?” எனக் கேட்டதும், அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது.
“இல்லை கண்ணே… காக்கைகளுக்கு ஒரு கண் தெரியாது என்பது நம் புராணத்தில் சொல்லப்பட்டது. காக்காசுரன் எனும் அசுரனால் ஏற்பட்ட சாபம்… இந்தக் கதையை நாளை பாட்டியிடமே கேள். உண்மையில் காக்கைகளுக்கு இரண்டு கண்களும் தனித்தனியாகச் செயல்படுகின்றன. நம் கண் பார்வைபோல் காட்சி ஒன்றில் இணைவதில்லை. இரு புறம், இரு வேறு காட்சிகள் அவை தனியே பார்க்க முடியும். ஒரு கண்ணிலேயே, ஒரு புறமாக… அது இடதா? வலதா? என்பது காக்கைக்குக் காக்கை மாறுபடும்… அவை பார்ப்பது நாம் நம் இரு கண்கள்கொண்டு பார்ப்பதைவிட மிகத் தெளிவாக இருக்கும்.”
“அப்போ கதை முழுவதும் தவறா?”
“இல்லை, அவை கூட்டமாகச் செயல்படும் திறமைகொண்டவை. தவிர நம் வீட்டு மொட்டை மாடி, தோட்டம், கழிவு நீர் செல்லும் பாதை… இப்படி நாம் அன்றாடம் சென்று பார்க்க முடியாத இடங்களில் ஏதேனும் பறவை அல்லது பெருச்சாளி, ஏன் நாம் விட்டெறிந்த தின்பண்டங்கள்… இப்படிச் சுகாதாரக் கேடு விளையும் பொருள்களைச் சுத்தம் செய்வதால் அவற்றை நம் வீடுகளுக்கு வரவேற்க ஒருபிடிச் சாதமும் காலையில் வைக்கிறோம்.”
ரேவதி புரிந்துகொண்டாள்.
– ஜனவரி 2018