கவிதாமணியின் கை வண்ணம்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2026
பார்வையிட்டோர்: 2,437
அன்று, அவன் வ உ சி பூங்காவின் நுழைவாயில் அருகில் இருந்த இளநீர் கடையில் நின்றபடி இளநீரை வாங்கி குடித்துக் கொண்டிருந்தான். அப்போது பூங்காவிற்குள் ஆட்டமும் பாட்டமும் சிரிப்புமாக, அவனது ஊருக்கு பக்கத்து ஊரான ஆத்தங்குடியைச் சேர்ந்த ஒரு மகளிர் கூட்டம் அங்கே உள்ளே நுழைந்தது. அந்த மகளிர் கூட்டத்தினரை இவன் மனதார ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மகளிர் கூட்டத்தில் ஒரு இளம்பெண் இவனை திரும்பத் திரும்ப பார்த்தாள். பின்னர் திரும்பி திரும்பி பார்த்தபடி சென்று கொண்டிருந்தாள். இவனும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தான். அந்தப் பெண் நிச்சயம் இவனுக்கு மிக நெருக்கமான சொந்தக்காரப் பெண்ணாக கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அப்போது அவனது உள் மனம் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்கள் திரும்பி வரும் வரை அவன் அங்கேயே காத்திருக்க தயாரானான்.
சிறிது நேரத்தில் பூங்காவில் உள்ளே இருந்து ஒரு சிறுமி அவனை நோக்கி ஓடி வர, அவன் ஆவலோடு அச்சிறுமியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மாமா அந்த அக்கா, உங்களை உள்ள கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்றாள்.
அவனும் அச்சிறுமியை பின்தொடர்ந்து சென்றான். அவள் தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். இவன் வருவதை பார்த்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மின்னியது. சில நிமிடங்கள் அவனையே அவள் நோக்கியபடி இருந்தாள். அவனும் அவளை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.
இருவரும் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருக்க, அவர்களின் கண்கள் மட்டும் கலந்துரையாடிக் கொண்டிருந்தன. முதலில் அவன் பேசினான்.
“ஏய் நீ புனிதா தானே?”
“என்னடா பெயரையே மாத்திட்ட! என் பேரு கவிதா, கவிதாமணிடா ”
“ஆமாமா கவிதா கவிதா! சரிடி வீட்ல மாமா அத்தை எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“ஆமா இப்பதான் ஐயாவுக்கு கரிசனம் வந்திருக்கு! இத்தனை வருஷமா இந்த கரிசனம் எல்லாம் எங்கடா போச்சு? உனக்கு ஒரு நாளாவது என்ன பாக்கணும்னு தோணிச்சாடா?”
“ஏய் என்னடி இப்படி சொல்ற? நம்ம ரெண்டு வீட்டு குடும்பமும் தான் பேச்சுவார்த்தை இல்லாம பத்து வருஷமா இருக்கோம். அப்புறம் எப்படி நான் உன்கிட்ட பேசறது? அப்படி பேசினால் பிரச்சனை இன்னும் அதிகமாதான ஆகும்!”
“ஏன்டா இப்படி பேசுற? பிரச்சனை நம்ம குடும்பத்துக்குள்ள தான். நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே! “
“சரிடி இப்ப நீ என்ன பண்ற? எங்க இருக்க?”
“நான் இப்ப மைசூர்ல சுற்றுலாத்துறை அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்டா.”
அவளது பேச்சில் அன்பும் ஆனந்தமும், காந்தம் போன்ற ஈர்ப்பும் கலந்திருந்தது.
“ சரிடி, நீ இப்ப விடுப்புல வந்து இருக்கியா? திரும்ப மைசூருக்கு எப்ப போகப் போற?”
“இன்னும் 20 நாள் இங்க இருப்பேன்டா.”
“சின்ன வயசுல நம்ம ரெண்டு பேரும் ஆத்தங்கரை மணல்ல ஓடிப் பிடித்து விளையாண்டதெல்லாம் நினைக்கிறப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?”
“அதெல்லாம் நினைக்கிறப்ப எனக்கும் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குடா. அப்ப நம்மள பாக்குறவங்க எல்லாம்,”என்ன இப்பவே ஜோடி சேர்ந்தாச்சு போல! அப்ப நாளைக்கே கல்யாணத்தை வச்சுக்க வேண்டியது தான்!” என்று கிண்டலும் கேலியும் செய்துவிட்டுப் போவார்கள். அதெல்லாம் நினைக்கிறப்ப மனசு ரொம்ப சந்தோஷமா இருக்குடா!”
“சரிடி, பக்கத்துல எங்கேயாவது போய் உட்கார்ந்து பேசுவோமா, வரியா?”
“மாப்பிள்ளைக்கு ரொம்ப தான் ஆசை! அதெல்லாம் இப்ப முடியாதுடா! நான் எங்க ஊரு பொண்ணுங்களோட வந்து இருக்கேன். அவங்கள விட்டுட்டு நான் எப்படி உன்னோட வர்றது! “
அவன் அவளையே ஆசையோடும் ஆவலோடும் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.
“சரிடா நீ பார்த்ததெல்லாம் போதும்! உன்னோட நிறைய பேசணும். நாளைக்கு நீ எங்க வீட்டுக்கு வரியா?”
“ஏய் என்ன சொல்ற? நான் அங்க வரமாட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னாடியே உங்க அப்பா எப்ப பார்த்தாலும் என்ன நக்கல் நையாண்டி பண்ணுவாரு! வேற ஏதாவது இடம் சொல்லு வரேன்!”
“சரிடா எங்க மாந்தோப்பு பண்ணைக்கு வந்துரியா? எங்க பண்ண இருக்கிற இடம் தெரியுமில்ல?”
“தெரியும் தெரியும். உங்க ஊர்ல இருந்து வடக்கு பக்கமா காளியம்மன் கோவில் போற வழியில தானே இருக்கு?”
“ஆமாண்டா அங்கே தான்! அங்க காலைல ஒரு பத்து மணி போல வந்துரு,
அங்க பேசிக்கலாம்.
சரி, சரி. இந்தாடா இதுல நான் என்னோட அலைபேசி எண்ண எழுதி வச்சிருக்கேன். அதுல நீ பேசு!”
அவன் அவள் கொடுத்த அந்த தாளை வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டான். மீண்டும் அவன் அவளையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தொடர்ந்து அவளிடம் பேசினாள்.
“டேய் அங்க வந்து ஒழுங்கா இருக்கணும்!. நான் தனியா இருக்கேன்னு நினைச்சுகிட்டு நீ ஏதாவது ஏடாகூடமா பண்ணுன, நான் ஒன்றும் செய்ய மாட்டேன். எங்க வீட்டு எடுபிடி உன்ன நல்லா கவனிச்சு விட்டுருவான். அத புரிஞ்சுக்க! சரியா? சரி, நான் வரேன்டா” என்று சொல்லிவிட்டு கவிதாமணி அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அந்த மகளிர் கூட்டத்தை நோக்கி வேகமாக சென்றுவிட்டாள்.
அவன் அவள் சொன்னவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், பெரும் ஏக்கத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது வசீகரமான முகமும் வளமும் வனப்பும் மிக்க உடலமைப்பும், அவனது நிம்மதியை ஒரு நொடியில் நிலைகுலைய செய்தது.
அன்று இரவு அவன் அவளை மாந்தோப்பில் ஆசை தீர கட்டிப்பிடித்து.. என்னென்னவோ செய்ய வேண்டும் என்று கற்பனை வெள்ளத்தில் மூழ்கி தவித்தான்.
மறுநாள், முகிலன், கவிதா மணியின் பண்ணை இல்லத்திற்கு ஆவலுடன் வந்து சேர்ந்தான். பண்ணையின் நுழைவாசல் எட்டடி அகலத்தில் இரும்பு கதவில் பளபளப்புடன் அமைக்கப்பட்டிருந்தது. முகிலன் வந்தவுடன் அவள் ஓடி வந்து அவனை அன்புடன் வரவேற்றாள்.
அந்த மாந்தோப்பு ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுற்றிலும் வயல்கள் சூழ நடுவில் ஒரு தீவைப் போல் திவ்யமாக ஏராளமான மாமரங்களை உள்ளடக்கி அழகாக அமைந்திருந்தது. தோப்பைச் சுற்றிலும் அனேக மரங்கள் அழகாகவும் அடர்த்தியாகவும் அருகருகே வளர்ந்திருந்தன.
அவள் முகிலனை அழைத்துக்கொண்டு தோப்பில் நடுவில் உள்ள சிறிய குடிலுக்குள் அவனை அழைத்துச் சென்றாள்.
அவர்கள் இருவரும் உரையாடல்கள் மூலம் உறவாட ஆரம்பித்தனர். முகிலன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பின்னால் அந்த குடிலின் ஒரு மூலையில் கவிதாமணியின் வீட்டு எடுபிடி _ஏகாம்பரம் அமர்ந்திருந்தான். அதனை முகிலன் கவனிக்கவில்லை.
அவர்களது அன்பு கலந்த பேச்சுக்கு பக்கவாத்தியம் இசைப்பது போல, பட்டுப் போன்ற சிட்டுக்குருவிகளின் கீச்சு கீச்சு ஒலிகள் அமைந்திருந்தன. அவன் அவளையே ஆசை தீர பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பேசப்பேச, அவளின் இதமான பேச்சில் கிறங்கிப் போனவன் , அவளை நெருங்கி அவள் கன்னத்தில் முத்தமிட நெருங்கினான்.
உடனே அங்கே அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரம் எழுந்து வந்து அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அரை கொடுத்தான். அவன் திகைத்தபடி அவனையே கோபத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்.
உடனே அவள் ஏகாம்பரத்தை பார்த்து சொன்னாள்,
“டேய் ஏகாம்பரம், மாப்ள இனிமேல் அப்படி பண்ண மாட்டான். நீ கொஞ்சம் அமைதியா இருடா”என்றாள்.
பிறகு அவள் முகிலனைப் பார்த்து சொன்னாள்.
“டேய் முகிலா! நான் உன்ன இங்க அழைச்சிட்டு வந்ததுக்கு காரணம் இப்படி சரச சல்லாபம் பண்றதுக்காக இல்லடா. நான் வந்ததிலிருந்து உன்ன பத்தி விசாரிச்சேன். நீ பழைய மாதிரி இல்ல. ரொம்ப மாறிப் போயிட்டதா கேள்விப்பட்டேன். மாமாவும் அத்தையும் உன்ன ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்து ரொம்ப வீணாக்கிட்டாங்க. “
அவன் ஒரு பொம்மையைப் போல் அவள் முன் நின்று கேட்டுக் கொண்டிருந்தான். அவள் தொடர்ந்தாள்.
“நீ இப்ப எந்த வேலையையும் செய்யறது இல்ல. எந்த வேலைக்கும் போறது இல்ல. வேலைக்கு போகணும்கிற எண்ணம் சுத்தமா உங்ககிட்ட இல்ல. நீ இப்படியே இருந்தா ஒன்னு போதைக்கு அடிமையாகி வீணா போயிடுவ. இல்லன்னா கை பழக்கம் அது இதுன்னு பன்னி உடம்பையும் மனசையும் வீணாக்கிக்குவ. அதனால உன்னை எப்படியாவது நல்லபடியா பொறுப்பானவனா மாத்தணும்னு நினைச்சு தான் நான் உன்ன இங்க வர சொன்னேன். நான் சொல்றபடி கேட்டா உனக்கு நல்லது. அப்படின்னா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லன்னா ரொம்ப கஷ்டம்.”
கவிதாமணி முகிலன் அளவிற்கு படிக்கவில்லை. என்றாலும் அவள் நல்ல புத்திசாலி, திறமைசாலி. தற்போது அவள் மைசூரில் மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கக்கூடியவளாக இருக்கிறாள். பனிரெண்டாம் வகுப்பு மட்டுமே படித்த அவள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் இருக்கும் தனது தோழியின் உதவியால், மைசூரில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் ஒரு கடை நிலை ஊழியராக பணியில் சேர்ந்தாள். அங்கே பணியாற்றிக் கொண்டே தனியாக கன்னடத்தை கற்றுக் கொண்டாள். அப்படியே பட்டப் படிப்பையும் படித்து முடித்தாள். இப்போது அவள் சுற்றுலாத்துறையில் ஓர் அதிகாரியாக இருக்கின்றாள்.
கவிதா மணியின் வசீகரமான வார்த்தைகள் முன்பு, அவனது மேற்படிப்பு வெட்கி தவித்தபடி விசனப்பட்டு நின்றது.
அவள் முதலில் அவனிடம் மண்வெட்டியையும் களை வெட்டியையும் கொடுத்து மாந்தோப்பை சுத்தப்படுத்தும்படி சொன்னாள். அவனும் அப்படியே செய்தான். அடுத்த நாள் மாந்தோப்பு அருகே உள்ள வயல் வரப்புகளை சுத்தப்படுத்தச் சொன்னாள். வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையையும் அவனுக்கு தந்தாள்.
“முதலில் நீ எனக்கு நல்ல தொண்டனாக இருந்து பார். காலப்போக்கில் நீயே எனக்கு தலைவனாக மாறி விடுவாய்” என்ற கவிதா மணியின் வார்த்தைகள் அவனை உற்சாகப்படுத்தின. ஒவ்வொரு நாளும் அவன் வேலைகளை முடித்த பிறகு , மீன் குட்டைக்கு அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தினமும் அவனை குளிக்க செய்தாள். அவன் குளித்து முடித்த பின் அவனிடம் இதமாக பேசினாள். அவளின் இதமான வார்த்தைகளும் செயல்பாடுகளும் அவனை பெரிதும் ஈர்த்தன.
ஒவ்வொரு நாளும் அவன் கவிதாமணியின் பேச்சைக் கேட்டு அதன்படி நடந்ததற்கு பரிசாக அவளிடம் இருந்து கிடைக்கும் அன்பான(கன்னத்தில் கிடைக்கும்) முத்தம் அவனை சிந்திக்கவும் சிறப்படையவும் செய்தது.
ஒரு வாரத்தில் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து அவனின் குடும்பம் ஆச்சரியமடைந்தது. 15 நாட்களில் அவனது நண்பர்கள் அவனது செயல்பாடுகளை பார்த்து திகைத்துப் போனார்கள். 20 நாட்களில்
அவனை எப்படி ஒரு பெண் இப்படி நல்ல விதமாக மாற்றி விட்டாள் என்று அந்த ஊரே அதிசயித்துப் போனது.
மைசூருக்கு சென்ற சில தினங்களில் கவிதாமணி முகிலனிடம் பேசினாள். அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே அவனுக்கு ஒரு வேலை. கவிதா மணியின் கீழ் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் வேலை, இருப்பதாக சொல்ல அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்தான்.
ஆனால் அவனது குடும்பத்தினர், “போயும் போயும் ஒரு எடுபிடியா_ கடைநிலை ஊழியரா, அதுவும் கவிதா மணியின் கீழ் இருந்துகிட்டு வேலை பார்க்க, எங்க பையன நாங்க ஒரு போதும் அனுப்ப மாட்டோம்,” என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தபடி இருந்தனர்.
”இனி இவர்களை எப்படி சரிப்படுத்துவது?” என்ற யோசனை கவிதாமணியின் அன்றாட பணிகளுக்கு கொஞ்சம் இடையூறாக இருந்து அவளை இம்சை படுத்திக் கொண்டிருந்தது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
