கலையும் பெண்ணும்




(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வழக்கமான கோடைகாலத்து நாட்களைப் போன்றதொரு நாள் தான் அன்றும்.. வேறு புதுமை ஒன்றும் இல்லை.

குமரன் தன் அறையில் உட்கார்ந்திருந்தான். அறை நடுவில், ஒரு கையில்லா நாற்காலியின் மீது முக்கால் நிர்வாணமாய், தலைமயிர் இடுப்பு வரையில் மயில் தோகையைப் போல் புரள ஒரு பெண் உட் கார்ந்திருந்தாள். விரிந்த வாதாங்கொட்டை போன்ற கண்கள்; மதுரையான் கோவில் அரிவாள் போன்ற புருவங்கள்; கிளிபோன்ற அழகு; ராணிபோன்ற கம்பீரம்; அபினிப்பூவைப் போன்ற லாகிரி உண்டாக்கும் தோற்றம்; வாழை போன்ற உடல் மினுக்கும் உருவம்- இவைதான் சுசீலா, குமரன் மனைவி.
முக்கால் நிர்வாணம் என்றால் நம்பத் தகாததா யிருக்கலாம்; ஆனால் அது முற்றிலும் உண்மை. அவளை அவன் மணந்ததே நம்பத் தகாதது தான். மணமான பிறகுகூட அவளுடைய பெற்றோர்களே நம்பாமல் பிரமையடைந்தார்கள் என்றால் சொல்வானேன்! மல்லிகை மொட்டில் சிறைபட்டுக் கிடக்கும் மணத்தை சூரிய கிரணமும் சந்திரனின் தீண்டலும் வலுவில் வந்து விடுவிப்பதுபோல குமரன் அவளை மணக்க ஏன் முன் வந்தான்? அவள் அழகா அழைத்தது, ஒரு ஊர்த் தேனீயை மற்றொரு ஊர் புஷ்பக் கடை வரையில் இழுத்துச்செல்லும் ரோஜாவின் மணம் போல்? அதுவாக இருக்க முடியாது. அவளைப் பொறுக்கி எடுக்க வந்தவன் அவளுடைய நிறைந்த அழகைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தால், குறையைப்பற்றி அறியாமலா இருப்பான்? இவ்விடுகதைக்கு விடையை பெற்றோர்கள் கூட காணக்கூட வில்லை.
சுசீலாவின் தகப்பனார் ஒரு சித்த வைத்தியர். பாம்புப் பிடாரன் விஷத்துடன் விளையாடுவதுபோல, லிங்கம், பூரம், பாஷாணம் இவைகளுடனேயே தன் காலத்தைக் கழித்து வந்தவர். சித்த வைத்தியத்தின் படிக்கட்டுகள் ஏறி பொன் மாடியில் நுழைய முயன்றவர்.
அவள் குழந்தையாயிருந்த பொழுது ஒருநாள் கல்வத்தில் பாஷாணமொன்றை அறைத்துக்கொண்டிருந்தார். பாஷாணத்தை ஏழாவது தடவையாக, பசு நெய்யில் பக்குவம் செய்ய வேண்டிய கட்டம். இடது கையால் நெய்யைக் கல்வத்தில் விட்டுவிட்டு, வலது கையால் பிடி குழவிபை எடுத்து ஒருதரம் அறைத்தார், ரொம்பக் கெட்டியாக இருந்தது. இன்னும் கொஞ்சம் நெய் விட்டார். திட்டத்திற்கு மேல் விழுந்து விட்டது. வலது கையால் பிடி குழவியைத் தூக்கி எடுத்து அறைக்க முயன்றதில் குழவி நழுவி ‘தொப்’பென்று கல்வத்திலே விழுந்தது. பாஷாணம் சிதறி எங்கிலும் வாரி அடித்தது.
பக்கத்திலிருந்த குழந்தை சுசீலா கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை.
வைத்தியர் திகிலுடன் அவளை நோக்கித் திரும்பினார். ஆனால் வாய்திறக்கவில்லை.
“அப்பா! நீ எங்கே இருக்கிறாய்? எரிபூச்சி விழுந்ததுபோல் கண் எரிகிறதே” என்றாள் குழந்தை.
பதில் சொல்ல தகப்பனார் உதட்டை அசைத்தும் வார்த்தை வரவில்லை.
“அப்பா, ஏன் பேசமாட்டேன் எனகிறாய்” என்று கையை நீட்டித் துளாவினாள்.
“இதோ” என்று கிட்ட நகர்ந்தார்.
“எட்ட உட்காரு என்று அடித்துக் கொண்டேனே கேட்டியா. மருந்து கண்ணில் பட்டுவிட்டாற் போல் இருக்கிறது”.
அதிலிருந்து போன பார்வை தான். அவள் தகப்பனாருக்கு பாஷாணத்திற்கு மாற்றுத் தெரியுமே ஒழிய கண்ணில் விழுந்த பாஷாணத்திற்கு மாற்று தெரியாது. நாளா வட்டத்தில் பார்வை திரும்பிவரக் கூடும் என்று ‘குருட்டாம் போக்கில்’ நம்பியிருந்தார். குழந்தைக்கு ஏழுவயதில் ஏற்பட்ட ஈனம் பதினெட்டு வயதுவரையில் மாறவில்லை. குழந்தைப் பருவம் மாறி இளங்கொடியாகிப் பொன்போல மின்னிய பிறகும் கூட, கணவன் கிடைக்க வில்லை. கண்ண்ற்றவளை மணப்பவன் யார்?
ஆனால் ஒருவன் முன்வந்தான் தானாகவே. அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள பெற்றோர்கள் ஆவல் கொள்ளவில்லை. மணச் சடங்கு முடிந்து பெண் குமரனுடன் வாழத்தொடங்கிய பிறகுதான் அதைப் பற்றி அடிக்கடி நினைத்தார்கள். சுசீலாவும் அதைப் பற்றியே நினைத்தாள். எவ்வித ஈனமும் அற்ற கணவர் தன்னை ஒரு கபோதியை – மணந்தது ஒருபுறம் அதிசயமாயும், முதலில் பயமாயும் இருந்தது. ஆனால் வெகு சீக்கிரத்தில் பயம் நீங்கிவிட்டது. கார்காலத்து மழையைப் போன்ற அன்புவெள்ளம் பயத்தின் சுவட்டைக்கூட அடித்துக்கொண்டு போய் விட்டது. கோவில் கோபுரத்தில் கும்மாளித்துக் கொஞ்சி விளையாடி ஒன்றின் தலையை மற்றொன்று கொத்தி ஆடி விளையாடிப் புணர்ந்து, பின்னர் இன்ப வெறியில் இறகுகளைத் தட்டிப் பறந்து செல்லும் காட்டுப் புறாக்களின் வாழ்க்கையே தன்னுடையதாக இருக்கக் கண்டு இன்புற்றிருந்தாள். இருந்தபோதிலும் தன் மணவிஷயம் மட்டும் புரியாமலேயே இருந்தது.
குமரன் ஒரு மிராசுதார் என்று மட்டுமே அவளுக்குத் தெரியும். வீட்டிற்குப் பண்ணை ஆட்கள் வருவதும் போவதும், எரு, தழை, மாடு, மகசூல் என்ற பேச்சுக்களுமே, அவள் காதில் விழுந்தன. கணவருக்கு வேறு தொழிலோ உத்யோகமோ உண்டென்று அவள் நினைக்கவில்லை.
ஆனால் குமரன் ஒரு ஓவியன். ஓவியம் அவனுடைய உயிரின் வேட்கை; பிழைப்பன்று. சிறுவனாக இருந்ததிலிருந்தே – இயற்கையிலேயே – அவன் ஓவியன். நேரான கோடு என்பதே சிருஷ்டியில் ஏன் காணோம்? கண்ணில் படுவதெல்லாம் வளைவும் சாய்வுமாய் இருப்பானேன்? சிறுவயதில் என்று இந்த எண்ணங்கள் முளைத்தனவோ அன்று முதலே அவன் ஓவியன். பின்னும் கொஞ்சம் வயதடைந்ததும், இரண்டொரு ஓவிய மாணவர்களின் தோழமை பூண்டு, ஒவியக் கலாசாலையில் படிக்காமலேயே அக்கலையில் மூழ்கி விட்டான். அவன் மேதையையும் கைத்திறத்தையும் கண்டு தோழர்கள் பிரமித்தனர்.
குமரன் மணத்திற்குப் பிறகு அவன் ஓவியக் கலை கலா நிபுணர்களின் கவனத்தைக் கவர்ந்தது. சென்னையில் நடந்த ஓவியக் கண்காட்சியில் குமரன் தீட்டிய ‘குத்து விளக்கு’ என்னும் ஓவியத்தைப் பற்றிப் புகழாத ரஸிகனோ பாமரன ஓவியனோ இல்லை.
ஒரு துளசி மாடம். துளசி கதிர்விட்டுப் பூத்திருந்தது. எதிரே ஒரு பெண் இரண்டு கையையும் சேர்த்துக் கிண்ணிபோல் வைத்திருந்தாள். அதுதான் தாழி அதில் ஒரு பொற்சுடர் எரிந்துகொண்டிருந்தது. இதுதான் ‘குத்து விளக்கு’ என்னும் ஓவியம். துளசியின் பச்சை வர்ணமும், கதிரின் கொத்தமல்லி வர்ணமும், பெண்ணின் சிகப்பு வர்ணமும், சுடரின் செஞ்ஜோதியும் உயிருடன் திகழ்ந்தன.
ரஸிகர்கள் ஓவியத்தைக் கண்டு பிரமித்தார்கள். புணர்கள் அதில் தனிச்சிறப்பைக்கண்டு இன்னும் அதிகமாகப் பிரமித்தார்கள். விளக்கின் சுடர் சுட் ராகத் திகழ்ந்த போதிலும் அதில் கண்ணில்லாதது போன்ற ஒரு சூன்யத்தை உணர்ந்தார்கள். ஒரு சாரார் சுடரில் காணும் இவ்வெறுமை ஒரு குறை என்றார்கள்; மற்றொரு சாரார் அதுவே அதன் தனிச் சிறப்பும் அழகும் என்று சாதித்தார்கள். மழை நின்றும் தூவானம் விடாததுபோல, கண்காட்சி முடிந்த பிறகும் பத்திரிகைகளில் இந்த ஓவியத்தைப்பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்தது.
மறுவருஷத்துக் கண்காட்சிக்கு குமரன் மற்றொரு ஓவியத்தை அனுப்பினான். ‘கபோதி’ என்று மகுடமிடப்பட்டிருந்தது. ஒரு பெண் கண்ணை அகல விரித்து சந்திரனைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஓவியத்தின் உயிராக விளங்கியது அதன் கண். ஆனால் ஒரு அதிசயம். அகல விரித்த கண்ணில் பார்வை இல்லை. ஊன்றிப் பார்க்காதவர்களுக்குக் கூட இது எளிதில் புலனாயிற்று. ஆனாலும் ஓவியத்தின் ஒளியும் நிழலும் கலவையும், பெண்ணின் தாங்கொணாத்துயரமும், பார்வையின் சூன்யமும் அற்புதமாய் படத்தில் தளும்பிக் கொண்டிருந்தன.
‘இந்த ஓவியரின் கண்ணில் ஏதோ குறை இருக்கிறது. இல்லாவிட்டால் ஏன் அடுத்தடுத்து சுடரில் சூன்யத்தை ஒரு வருஷமும் கண்ணில் பார்வை இன்மையை மற்றொரு வருஷமும் சித்தரிக்க வேண்டும்?’ என்றார் ஒரு ஓவிய நிபுணர்.
‘கண்ணில் குறையுள்ளவன் இம்மாதிரியான வர்ணக் கலவையைக் கற்பனைசெய்ய முடியாது. சிலர் பேசும் பொழுது, பொருத்தமில்லாமல் அடிக்கடி ‘நான் சொல்வது தெரிகிறதா’ என்றோ, அல்லது ‘வந்து, வந்து’ என்றோ சொல்வார்களே அதைப் போன்றதொரு இயல்பு – ஒட்டகத்தின் கூனல் போன்ற ஒரு பிறவிலக்ஷணம் – அவ்வளவுதான்’ என்று மறுத்துப் பேசினார் மற்றொரு நிபுணர்,
அந்த வருஷமும் கண்காட்சியில் முதல் பரிசு குமரனுக்கே கிடைத்தது. ஆனால் பத்திரிகைகளில் மட்டும் இவன் ஓவியத்திறமையைப் பற்றிய கருத்துக்கள் இரண்டு கட்சியாகவே வலுவடைந்து ரணகளப்பட்டது.
பரிசு தகாது என்று ஒரு சாரார். வேறு எதற்கும் தகாது என்று மற்றொரு சாரார். சூன்யமான பார்வையால் படத்திற்கு இழுக்கு என்ற ஒரு கட்சி; அதுவே சிறப்பு என்று எதிர்க்கட்சி; ஓவியத்தில் புது வழி என்ற ஆரவாரம்.
இப்பொழுது மூன்றாவது வருஷ ஓவியக் கண் காட்சி. அதற்கு ஓவியம் அனுப்பும் வேலையில்தான் தற்பொழுது குமரன் ஈடுபட்டிருந்தான். தன் அறை நடுவில் ஒரு கையில்லா நாற்காலியின் மீது முக்கால் நிர்வாணமாய் அவன் மனைவி சுசீலா தலைமயிர் மயில் தோகையைப் போல் புரள உட்கார்ந்திருந்தாள். அவளை போன்ற ஓவியம் குமரன் ரெட்டில் தீட்டிக் கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதே வேலை. அதே மோஸ்தரில் அவள் தினம் வந்து உட்காருவாள். முதலில் குமரன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சிக் குலவுவான். பிறகு ஓவியத்தைத் தீட்ட ஆரம்பிப்பான். தீட்டும்பொழுது தென்றலைப் பற்றியோ, வெப்பத்தின் கொடுமையைப் பற்றியோ, அல்லது வேறு எதையாவது பற்றியோ நடுவில் பேசுவான் திருடன் போக்குக்காட்டுவதுபோல.
ஓவியம் வரைய ஆரம்பித்த நான்காம் நாளில் குமரன் திடுக்கிடும்படி அவள் ஒரு சமயம் பேசினாள். துணியாலா ஜன்னலுக்குத் திரை போட்டிருக்கிறீர்கள்? வெய்யில் தாங்குமா?
ஒருவேளை சுசீலாவுக்குப் பார்வை வந்துவிட்டதா என்ற எண்ணம் திடீரெனக் குமரன் மனதில் முளைத்தது. இருக்காது வரமுடியாது- இத்தனை வருஷங்களுக்குப் பின் திரும்பும்? ஒருக்கால் தொட்டுப் பார்த்திருக்கலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.
இருந்தாலும் மறுநாள் சுசீலா வேறொரு கேள்வி கேட்டாள், ‘இத்தனை நாளாக இங்கு வருகிறேன். ஒன்றும் தெரியவில்லை. இப்பொழுது பார்த்தால் இது என்ன சித்திரம் போடுகிற அறை மாதிரி இருக்கிறதே. நீங்கள் படம் எழுதுகிறீர்களா?’ என்றாள்.
‘அதெல்லாம் இல்லையே’ என்று கலப்பற்ற பொய் சொன்னான் குமரன்! ஆனால் மனதிற்குள்ளே இருந்த வேர்ப்புழு முண்டி அரிக்கத் தொடங்கிற்று.
‘பார்வை வந்துவிட்டது போல் இருக்கிறதே. இன்னும் ஒருநாள் போதும், படம் முடிந்துவிடும். இந்த வருஷத்துக் கண்காட்சிக்கு மட்டும் அனுப்பிவிட் டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்…ஆனால் அவள் பார்வை பெற்று இதை அனுப்பக்கூடா தென்று விட்டால்?’ பதில் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் ‘நாளைக்கு நடக்கக்கூடியதென்று கருதி ஆகாயத்தாமரையைப் போன்ற கற்பனைக்காக தன்னை அலட்டிக் கொள்வதா? எதிர் காலத்தை நிகழ்கால மென்னும் தீயில் சுட்டெரிக்கத் தெரியாதவன் கலைஞன் ஆவானா?’ என்று கேள்விகள் உள்ளத்தில் எழவும் மூடியைக் கண்ட நாகம்போல் மனது படத்தைச் சுருக்கிப் படுத்துவிட்டது; நல்லவேளை!
மறுநாள் படம் முடிவடையும் தருணம். அசையாமல் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் சுசீலா யானையைப்போல் உடம்பை ஆட்டினாள்.
‘நீங்கள் பொய் சொல்வதுண்டா?’ என்று கோடை காலத்து இடியைப்போல் எதிர்பாராமல் குமுறினாள்.
போன பார்வை மீண்டுவிட்ட நிச்சயம் அக்கேள் வியில் புதைந்திருந்தது. பொய் சொல்லக்கூடிய நிலைமை தாண்டிவிட்டது.
‘உலகத்திலே எப்பொழுதாவது சொல்லும்படி நேரத்தான் செய்கிறது?’
‘உலகத்தில் சரி. என்னிடத்தில்?’
குமரன் பதில் சொல்லவில்லை. படத்தில் ஒரே அடியாக லயித்துக் கண்ணைத் திறந்தான். ஏழடி பின் வாங்கி மனைவி அண்டை வந்து நின்று படத்தையும் அவளையும் மாறிமாறிப் பார்த்தான்.
‘நீங்கள் மிராசுதார் என்றீர்களே. படம் எழுதத் தெரியுமா என்ன?’
‘எழுதுவேன்.’
‘அப்படியானால் பெண்பிள்ளையைத்தான் எழுத வேண்டுமா – அதுவும் இந்தமாதிரி?’
‘ஆண்பிள்ளை ஓவியக்காரனாயிருந்தால் இப்படித்தான் இருக்கும். வாமகாந்தம் தக்ஷிணகாந்தம் என்று இரண்டு உண்டு. ஒன்று மற்றொன்றைத் தான் தேடும்; தன்னைப் போன்றதுடன் குலவாது. செப்புக் கம்பியும் நாகக் கம்பியும் சேர்ந்தே மின்சா ரம் உண்டாக்கும். ஒரே இனம் மின்சாரத்தை உண்டாக்காது. ஆண் பெண்ணைப்பற்றி பேசாவிட்டால், சித்தரிக்கா விட்டால் மின்சாரம் போன்ற இன்பம் உண்டாகாது.
குமரன் ஓவியத்தின் தத்துவத்தைப்பற்றி இன்னும் விரிவாகப்பேசியிருப்பான். பார்வையற்ற பெண் என்னும் காரணத்தினால் ஆளாகத்தகுந்த புள்ளி வேண்டும் என்ற கோணல் கருத்துடனேயே மணந்து விட்டான். பார்வையோ வந்துவிட்டது. தன் எண்ணம் அம்பலமாகிவிட்டது. அந்தக் குற்றத்தை மறைப்பதற்காக ஓவியத்தின் தத்துவத்தைப்பற்றி நீளமாக பேசிக்கொண்டே போனால் முக்ய விஷயம் மறந்துபோய் விடக்கூடுமல்லவா? ஆனால் சுசீலாவின் கண்மட்டுமின்றி மனமும் விழிப்புடனேயே இருந்ததினால் அதற்கு சந்தர்ப்பம் சிக்கவில்லை. விறுக்கென்று எழுந்து நிலைக்கண்ணாடியின் முன் போய் நின்று பார்த்துவிட்டு படத்தை உற்றுப் பார்த்தாள்.
‘ஆஹா! படம் ரொம்ப நன்றாயிருக்கிறது!’
மனைவி கிண்டலாகப் பேசினதாகத் தோன்றிய போதிலும் ஒரு பாவமும் அறியாதவனைப்போல் ‘நான் கொஞ்சம் நன்றாகவே எழுதுவேன் என்று பெயர் வாங்கியிருக்கிறேன். கண்காட்சிகளில் பரிசு அளித்திருக்கிறார்கள்’ என்றான் குமரன்.
மறு நிமிஷத்தில் நீலநிற ஆகாயத்தில் கருமேகம் செல்லும்பொழுது பூமியில் படரும் நிழல்போன்ற ஒரு சாயல் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.
‘பெண்ணை நன்றாக எழுதுவீர்களென்று பரிசாக்கும்! அதற்கு நான் ஆள்…அதற்குத்தான் இந்தக் கல்யாணம்! சபாஷ்!’ என்று அடுக்கினாள்.
உண்மையை ஒப்புக்கொள்ள குமரன் என்ன ஹரிச்சந்திரனா?
‘அப்படியெல்லாம் நினைக்கும் மூடன் நான் அன்று. கலை சொத்துரிமை பாராட்டுவதில்லை, கலைக்கும் துறவுக்கும் உறவு உண்டே அன்றி பொருளாதாரத்துடன் இல்லை. இந்த தத்துவம் தெரிந்தால்…’
குமரன் தன் சமாதானத்தை முடிக்கமுடியவில்லை.
‘நான் ஒருவிதமான தேவடியாள். அதுதானே உங்கள் கலியாணத்தின் ரகஸியம்!’
‘அப்படியெல்லாம் இல்லை. வீணாக பழியை சுமத்தாதே’ என்றான் குமரன்.
புளியங் கொம்பைப்போல் அந்த பதிலைப்பற்றிக் கொண்டாள்.
‘அப்படியானால் என்மீது கோபம் வர நியாய மில்லை’ என்று சொல்லிக்கொண்டே பெண்புலி பாய்வதுபோல் எழுந்து படத்தைப் பிய்த்து சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தாள்.பங்குனிமாதத்து இளங்காற்றில் பறந்துவிழும் வாதாம் பழுப்பைப்போல ஓவியத் துணுக்குகள் சிதறி விழுந்தன.
குமரன் வாயைத் திறக்கவில்லை, எரிமலை வாயைத் திறந்து கக்கியது போன்ற நிலையில் கலையும் கலைஞ்னும் கண்காட்சியும் எதிரே நிற்குமா?…
– ஜம்பரும் வேஷ்டியும் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு: 1947, கஸ்தூரிப் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி.