கலங்கல்




(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
குருசாமிக்குத் தான் செய்த தவறுகள் ஓரளவு புரிந்து விட்டாலும் முழுதுமாகப் புரிபடவில்லை!.
மூத்த பிள்ளையாகப் பிறந்தது தப்பா?

எட்டு வயதிற்கு இளைய தம்பியும் தங்கைகளுமிருக்க பொறுமையும் பொறுப்புமுள்ள பையனாக அமைந்து போனதா?
இவை அவரை மீறியவைகளல்லவா?
தன்னைக் கொண்டு பிறத்த பையனென்பதால், தாய் அவரைச் கொஞ்சம் அதிகப்படியாகவே செல்லம் கொடுத்து மென்மையானவனாக்கி சேலைக்குள் முடிந்து கொண்டது?
அதுதான் ‘மூத்தது மோளை’ என்று பழமொழியே இருக்கிறது. அதற்கு அவரென்ன செய்ய?
திருமணமாகி, தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்னும் அவர் தாயாரின் சொல்லுக்கு சற்று அதிகமாகவே சாய்ந்து கொடுத்தது உண்மை தான்.
அது தன் கடமையென்று நினைத்தார்.
ஆனால், மனைவி கற்பகம் அப்படி நினைக்கவில்லை’ ‘பாசம், மரியாதை எல்லாம் எதுவரைன்னு தெரிஞ்சிருக்கணுமில்ல. அவுக சொல்லி வந்தவளை அடிக்கறவரையிலுமா? நா எத்தனை ராப்பொழுது விம்மியிருக்கேன். என்னு ஒரு வார்த்தை சேக்க மாட்டீங்களே’
அவருக்கு இதுவும் புரியவில்லை.
அவள் முதல் முறை கண்கலங்க அவர் பதறிப் போனார்.
“என் கற்பகம் என்னாச்சு” என்று தொட்டவரை, தோளைச் சிலிர்த்து விலக்கியவள் முறைத்தாள்.
“என்று தெரியாதுல்ல வளர்ப்பு அப்படி, அவுகதப்பெல்லாம் தெரியாத மாதிரி ஒரு வளர்ப்பு” என்று சிறி உதறியவள், அவரிடம் இரண்டு வாரம் பேசவில்லை. கணவனிடம் சோகத்தைப் பகிர்ந்து அவளை வளைத்துப் போடத் தெரியவில்லை. இப்படி சில முறைகள் அடிபட்ட பின் அவள் அழும் போது அவர் பதுங்கித் கொண்டார்.
அவர் அன்னையிடமும் குறையுண்டு. முதல் மருமகளிடம் அதிக ஆதிக்கம் காட்டினாள். தன் பிரிய மகன் எங்கு அதிகப் பிரியம் கொட்டி விடுவானோ என்ற அச்சத்தில் கற்பகத்திடம் சற்றுக் கடுமை காட்டியதுண்டு. ‘இவள் ஒன்ணும் உசத்தியில்லை’ என்று சொல்லும் முகமாய் அவளைக் குறைகண்டதுண்டு.
‘சுறுசுறுப்பேயில்லையே’
‘இதென்னடி வாயில வக்க விளங்காம ஒரு குழம்பு!’
‘விசேஷத்தப்பவாவது சிரிச்சு பேச மாட்டாளா?’ என்றதுண்டு.
மகன்களும் சேர்ந்து கொள்ள அம்மாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம் அது.
கடை, கோயில், கல்யாணம், வீட்டுப்பொறுப்பு என்று எதிலும் அம்மா முன்னிருக்க, கற்பகம் குன்றித் திரிந்த அலைம் அது.
தான் தழைய நேரிடும் என்று மாமியார் நிதானப்படவில்லை. தான் வாழும் காலங்களும் வரும் என்று மருமகளும் தைரியப்படவில்லை.
மகள்கள் திருமணமாய்ப் போக வந்த இரண்டாம் மமருமகள் மீது அம்மா பட்சமாக இருந்தது வாஸ்தவம். தன் சின்ன மகனையும் விட இளையவள் என்பதால் ‘சின்னப் பெண்’ என்று பரிவோடு நடத்த, கற்பகம் எரிந்தாள்.
‘நா என்ன முற்றி முருங்கையாவா வந்தேன்? அப்ப எனக்கும் இதே வயசு தான். எத்தனை நொள்ளளயான பேச்சு. இப்ப வந்த பொண்ணு சின்னக் கண்ணாக்கும்’. ஆக கற்பகத்திற்கு கொழுந்தன் மனைவியும் ஆகாமல் போனது கணவன் வீட்டார் சதா கேலிபேசிச் சிரிப்பதாகவும். தோன்ற அனைவருக்கும் தன்னைக் உதாசினப்படுத்துவதாகவும் அந்நியமானாள்.
தனிக்குடித்தனம் பெரும் பாவமாக அவள் தாய் வீட்டில் கருதப்பட்டதால் அந்த எண்ணம் அவ்வளவாக அவளுக்குள் ஏழவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய காவம் தவிர மாமனாரின் வீடு விலாசமும் சௌகர்யமாக இருக்க அது அவளுக்குப் பிடிக்கும். பெரிய தோட்டத்தில் தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, கீதை காய்கறி என்று சகலமும் உண்டு. தன்னீர் தட்டுப்பாடே கிடையாது. மாடியில் இரண்டு பெரிய அறைகள் அவர்களுக்கென்று கட்டப்பட அவ்வீடு அவளுக்குச் சொந்தமாகிப் போனது.
ஆனால், அது அவளிடம் பரிவாகப் பேசவில்லை.
கேலி பேசிச் சிரிக்கலில்லை.
பாராட்டி வியக்கவில்லை.
குழந்தைகளிடம் அவன் சுதந்தரமாகப்பேசுவாள். ஆனால் அது முக்கால்வாசி தான். இளவயதில் பட்ட துயரக் கறைகளாகத்தான் இருக்கும்.
கிழவி லேசுப்பட்டவ இல்லை. இந்த தாத்தா இல்லாது அயர்ந்து கிடக்குது அந்த காலத்துவ என்னா கொட்டம்?
பிள்ளைகளுக்கு, தங்கள் குழந்தைப் பருவம் முதல் தினம் பேசி பழகி வந்த மூதாட்டியின் மீது பிரியம் இருக்கும் என்பதை உணரத் தவறி விட்டாள் கற்பகம்.
இதில் பெரிய பரிதாபம் என்னவென்றால், பாட்டிக்குக் கடந்து இரண்டு ஆண்டுகளாக அத்தனை நினைவு துல்லியம் இல்லை.
எல்லோரையும் பொத்தாம் பொதுவாகப் பார்த்து, ‘இன்னைக்கு என்ன விசேஷம்?’ என்று சிரிப்பாள். தன் கட்டிலில் வந்து உட்கார்பவர்களின் முதுகை வாஞ்சையோடு நீவி பேசிக் கொண்டிருப்பாள். அவளது பழங்கதைகள் சுவாரஸ்யமாக ஆரம்பித்து, பிறகு நினைவுக் கோட்டில் தடுமாறி எங்கோ இழுத்து நிற்கும்.
இந்தப் பாட்டியை, அம்மா சதா குறைகூறுவது அத்தனை சுவாரஸ்யப்படவில்லை.
“அது அப்போ… இப்ப உங்க பாட்டி என்ன செய்றாங்க?” என மகள் கேட்க கற்பகம் நொறுங்கிப் போவாள்…
“நீயும் அங்க சேர்ந்திட்டயா? சேர்ந்து ஆடு. தாலி கட்டுனவர் அதைத்தான் செஞ்சாரு. பாசமா இருக்க வேண்டிய நீயும் கிழத்துக்கு எண்டுகிட்டு பேசற…?”
“ஆறுன கஞ்சி பழங்கஞ்சினாப்பல விட்டெறியிறம்மா. அதைத்தான் அண்ணா சொல்றான். உன்னை விட்டுக் கொடுப்போமா?”
“சின்ன வயசுல பட்டதெல்லாம் மறக்கலேடி. கிழவி எனக்கு எடுத்துக் கொடுப்பாப்பாரு சேலை. சாணி கலர், பாக்கு, அழுக்கு இப்படிக் கலருங்க. அதுதான் என் நிறத்துக்கு பாந்தம்னு நக்கல் வேறு. இவ பிள்ளையென்ன தகதகன்னு சூரியக் கலரா? நா போதாது?”
“ஒருவேளை அப்படி ‘டல் கலர்தான் பாட்டிக்கு பிடிக்கும் போலிருக்கு…”
“போடீ… இளைய மருமகளுக்கு மாம்பழம், வத்தல், ஊதா, கிளிப்பச்சைன்னு விதவிதமா வரும்.”
“சித்தி ஆனாலும் நல்ல நிறமில்லையாம்மா?”
பிள்ளைகளிடமும் தன் சுய பச்சாதாபம் எடுபடாது போக கற்பகம் எடுத்ததற்கெல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.
‘உன் பிள்ளையை நீ அடக்கியாண்டதுக்கு மேலாய் நான் நசுக்கி வைத்திருக்கிறேன் பார்’ என்ற தாய் குருசாமியை ஏறி மிதித்தாள்.
இதனால் யாருக்கும் சந்தோஷமில்லை என்பது அவளுக்கு உறைக்கவில்லை.
ஏதும் புரியாத மாமியார் பாவமாய்-
“நீ சாப்பிட்டியா சுப்பு?” என்பாள்.
பழையதை மறக்க, மன்னிக்க முடியாத வெறியில் பாம்பை அடிப்பதாய் எண்ணி சுற்றிலும் விலாசி தானே காயப்பட்டுப் போனாள் கற்பகம். நாட்கணக்கில் தலை வாராமல், குளிக்காமல் தனக்குள் முனங்கியபடி மல்லாந்து கிடப்பாள். ‘அம்மா சாப்பிடும்மா” என்று மகள் அழுதபடி ஊட்டி விட்டாள்.
“நாறுதடி சீ… உங்க பாட்டி சமைச்சாளாக்கும்?” என்று இறுக வாய் மூடி கவிழ்ந்து கொண்டாள்.
மனநோய் மருத்துவரிடம் அடிக்கடி கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
“பெரிய பிராப்ளம் ஒண்ணுமில்லை. கொஞ்சம் இதமா இருங்க. ஆண்ட்டி டெப் கொடுத்திருக்கேன். மருந்து மாத்திரையைவிட அனுசரணை முக்கியம்” புன்னகைத்தார் மருத்துவர்.
குருசாமி தாயார் தான், பழம் தவறுகளை மனதில் துழாவித் தேடி, தடவி ஏறக்குறைய புரிந்து கொண்டவர், அவற்றை ஒதுக்கி புதுவாழ்வு ஆரம்பிக்க தயார்தான்.
ஆனால், பழங்குட்டையைக் குழப்பி, அதன் கலங்கலைத் தன் மீதே வாரியிறைத்துக் கொண்ட கற்பகத்திற்குத் தான் கோலோச்சும் நேரம் வந்து விட்டதை அறிய முடியவில்லை.
கணவரின் இதம், அன்பு, ஆர்வம் எதும் புரியாத அளவிற்கு அவள் கலங்கலாகிப் போனாள்.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.