கற்பு ஒன்றும் கற்பூரமில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 198 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீடெங்கும் ஒரே பரபரப்பு. உம்மா அடுக்களையில் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தார். தம்பியும் தங்கையும் முன்ஹோலை ஒழுங்குபடுத்துவதில் முனைந்தனர். எவ்விதப் பதற்ற உணர்வும், அற்றவளாய் பழகிப்போன ஒரு நிகழ்வை எதிர்கொள்ள, இருந்தவற்றுள் ஒரு நல்ல சாரியை அணிந்து கொண்டிருந்தாள் லனீஸா. “தன் பொறுப்புக்கள் முடியட்டும். அதன் பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கலாம்” என எவ்வளவோ எடுத்துக் கூறியும் காதில் போட்டுக் கொள்ளாத உம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது. 

வாசலில் பேச்சுக்குரல் கேட்கிறது. சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்ற பொறுப்புணர்ச்சியோடு சிறுவனான அவளது தம்பிதான் வந்தவர்களை வரவேற்கிறான். வழமைபோல் கேக், பிஸ்கட், வட்டிலாப்பம், வாழைப்பழம் என எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டு டீயை உறிஞ்சியபடி நாட்டு நடப்புக்களைக் கொஞ்ச நேரம் அலசிவிட்டு, உம்மா சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த ரொக்கம் பற்றியும் சாடை மாடையாக விசாரித்துவிட்டு, 

“போய் லெட்டர் போடுகிறோம்” என்றார் மாப்பிள்ளைப் பையனின் உம்மா. 

“பெண்ணைப் பற்றி இன்னுங்கொஞ்சம் தீர விசாரிக்- கோணும். இல்லாட்டா, பின்னால வீண் சங்கடம் பாருங்கோ” மாப்பிள்ளையின் பெரியப்பா, வெற்றிலையைக் குதப்பியபடி கூறினார். மாப்பிள்ளை மட்டும் நல்ல பிள்ளையாய் மௌனம் சாதித்தார். “ஹம்! ஓர் ஆணைப்பற்றி மேலோட்டமாகத்தான் விபரம் சொல்வார்கள். பெண்ணைப் பற்றி மட்டும் துருவித் துருவி ஆராய்வார்கள். தான் எப்படியானவராய் இருந்தாலும், தனக்கு வரும் மனைவி மட்டும் எந்தக் குறையுமே அற்றவளாய் இருக்க வேண்டும் என்பதில் இந்த ஆண்களுக்கு தான் எவ்வளவு அக்கறை?” எனத் தனக்குள் எண்ணிச் சிரித்தாள் லனீஸா. 

காலையில் அலுவலகம் செல்லும் போதே லனீஸாவின் மனம் ஒருநிலையில் இல்லை. மாப்பிள்ளை வீட்டார் அனுப்பி இருந்த அந்தக் கடிதம், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலிருந்தது அவளுக்கு. 

வீட்டுக்குள் இருக்கும் அடக்கவொடுக்கமான, குடும்பப் பாங்கான பெண்ணையே எங்கள் மகன் விரும்புகிறார். எனவே, சந்தை முதல் சப்பாத்துக்கடை வரை ஆண்பிள்ளை போல அலைந்து திரியும் பெண்ணை மருமகளாக்கிக் கொள்வதில் எமக்கும் சம்மதமில்லை. ஆகவே, நாம் வேறிடம் பார்க்கிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம் என்ற ரீதியில் அமைந்திருந்தன அந்தக் கடித வாசகங்கள். 

தந்தையை மாரடைப்பால் திடீரெனப் பறிகொடுத்த அந்தக் குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு, மூத்த மகளான தன்னைச் சாரும் வரை, லனீஸாவும் வீ டுதான் இருந்தாள். காலத்தின் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்தான் அவளை வேலை தேட வைத்தது. வீட்டை விட்டு அதிகமாக வெளியேறும் பழக்கமின்றி, நாலு சுவருக்குள் சதா அடைபட்டுக் கிடந்த அதிகம் படிக்காத உம்மாவால் அடுக்களை நிர்வாகத்தை மாத்திரமே பொறுப்பேற்க முடிந்தது. தொழில் பார்த்துக்- கொண்டு வீட்டுக்கு மளிகைச் சாமான்கள், தம்பி தங்கைகளின் படிப்புக்குத் தேவையான பொருள்கள் என்பவற்றை வாங்குவது முதல் சகல வேலைகளையும் செய்து முடிப்பதற்குள் முழி பிதுங்கிப்போய், தான்படும் அவஸ்தை போதாதென்று, இந்தச் சமூகமும் தன் மேல் நெருப்பையல்லவா வீசுகிறது? “ச்சே! என்ன மனிதர்கள்!” எனப் பலவாறு வேதனையால் வெதும்பியவளாய் உற்சாகமின்றியே அன்றைய பணிகளை நிறைவேற்றிவிட்டு சோர்வுடன் பஸ் தரிப்பிடத்தை அடைந்தாள் லனீஸா. 

மாலை நேரமாதலால் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. இவளுக்கான பஸ்ஸை இன்னும் காணவில்லை. “சே! இந்த பஸ்களே இப்படித்தான். சமயத்தில் காலை வாரி விட வல்லன” என எரிச்சலுடன் நின்றிருந்த லனீஸாவைக் காற்றோடு கலந்து வந்த அந்த உரையாடல் பெரிதும் ஈர்த்தது. 

“என்னடா முனவ்வர், பொண்ணு பார்க்கப் போனியே, என்னாச்சு?” 

“அதையேம்பா கேட்கிறே? அது ஒரு தேறாத கேஸ்டா”

“ஏன்டாப்பா, ‘பர்தா’ போட்ட பொண்ணு அப்படீன்னு சொன்னியே?” 

“இந்தக் காலத்துல அதையெல்லாம் பாத்து ஏமாறக் கூடாதுடா” 

“ஏன்டா அடிப்படிச் சொல்றே?” 

“இல்லடா, அது ஒரு ‘ரஸ்தியாது டைப்’ ஆம்புள மாதிரி கடை கண்ணின்னு அலையுற கேஸாம். போன கிழம யாரோ ஒரு பொடியனோட ரோட்ல கதைச்சிட்டு இருக்கிறத நானே கண்டேன்டா. ஏதோ புண்ணியத்துல தப்பிச்சேன்!”

சுவாரஸ்யமாக உரையாடலில் மூழ்கியிருந்த அவர்களை, ‘எக்ஸ்கியுஸ்மி’ எனக் குறுக்கிட்ட பெண்குரல், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைத்தது. 

“மிஸ்டர் முனவ்வர், உங்க உரையாடலில் யானும் கலந்துக்கலாமா?” 

“நீ… நீ…?” 

“யெஸ் நீங்க விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்கிற அதே லனீஸாதான். ஏன் மிஸ்டர், இஸ்லாமிய முறைப்படி பர்தா போட்ட ஒரு பொண்ணு கடை கண்ணிக்குப் போனா, உங்க பாஷையில அவளுக்குப் பேரு ‘ரஸ்தியாது டைப்’ இல்லையா? அந்த வேலைகளைப் பொறுப்பெடுத்துச் செய்ய, அவளுக்கு வேறு யாரும் இல்லாமல் இருக்கலாமே! என்று யோசிக்கிற மனிதாபிமானம் கூடவா உங்கக்கிட்ட இல்ல?” 

“அது… வந்து…” 

“என்ன வந்தும் போயும்? எங்கட வாப்பா ‘மௌத்’தான திலேர்ந்து எங்கட குடும்பத்துக்கு எல்லாமே நான் தான்னு உங்ககிட்ட புரோக்கர் சொன்னாரா இல்லையா?” 

“சொன்னார் தான். ஆனா”

“இங்க பாருங்க மிஸ்டர் முனவ்வர், ஒழுக்கங்கிறது ஒவ்வொருத்தர் மனசில இருக்கணும், வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறவள் மட்டும்தான் பத்தினி, மற்றவர்களெல்லாம் ஓடுகாலி என்று அற்பத்தனமா நினைக்காதீங்க. ஒரு பெண், உதவி செய்ய ஒருவரும் இல்லைங்கிறதால சந்தைக்கும் சப்பாத்துக் கடைக்கும் போறதாலேயோ, தன்னோட ஒன்றாப் படிச்ச மாணவ சகோதரனைத் தெருவுல கண்டு கதைக்கிறதாலேயோ காற்றோட கரைஞ்சு போறதுக்கு கற்பு ஓண்ணும் கற்பூரமில்ல” 

“அதுல வந்து பாருங்க மிஸ் லனீஸா, யாருமே தான் செய்றது குற்றம்தான் அப்படீன்னு ஒத்துக்கொள்ளவே மாட்டாங்க” 

“ஸ்டொபிட்! தகுந்த ஆதாரமில்லாம ஒரு பெண்ணின் ஒழுக்கம் பற்றி இழிவாப்பேசத் துணிஞ்ச நீங்க அல்லாஹ்வுக்குப் பயப்படுங்க. பரிசு வாங்குறதுக்காக மட்டும் பெரீசா மேடையில ஏறி, ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்’ னு பாரதி வசனத்தை தொண்டை கிழிய கத்தினா போதாது, செயல்லயும் காட்டணும், நான் வர்றேன்.” 

காரசாரமாகக் கூறிவிட்டு அவள் அகல, தான் எப்போதோ ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் பேசிப் பரிசு வாங்கியது இவளுக்கு எப்படித் தெரியும்? என்ற திகைப்பினாலும், நண்பன் முன்னால் ஒரு பெண்ணிடம் மூக்குடைபட்ட அவமானத்தாலும் கூனிக்குறுகிய போதிலும் சமாளித்தவாறு,

“அவள் என்னதான் ‘டயலாக்’ பேசினாலும் நான் கொஞ்சமும் நம்பமாட்டேன்டா. நீ என்ன சொல்றே?” என்றான். 

“அவட நிலைல நின்று பார்த்தா அவள் சொல்றது சரிடா” 

“டேய் ஹரிஸ்! நீ என்னடா சொல்றே?” 

“யெஸ், நான் அவளை நம்புறேன்டா.” அவன் கூறிய இறுதி வார்த்தைகள் காற்றோடு கலந்து வந்து செவியில் நுழைய, பஸ்ஸில் ஏறப்போன லனீஸா, நன்றியுணர்வால் விழிகள் பனிக்க, அவனை ஒருதரம் திரும்பிப் பார்த்து விட்டு பஸ்ஸில் ஏறினாள். 


இனிய குரலால் குர் ஆனை ஓதிக்கொண்டிருந்த லனீஸா, அழைப்பு மணியொலி கேட்டு, ஓதுவதை இடைநிறுத்திவிட்டுப்போய்க் கதவைத் திறந்தாள். வெளியில் நின்றிருந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தாலும் சமாளித்துக்கொண்டு அவர்களை வரவேற்றாள் லனீஸா. 

“இதோ பாருங்க நடந்தது நடந்திடுச்சி. அதை எல்லாம் மறந்திடுங்க. என்ட மகன் சொல்றதுதான் எனக்கு முக்கியம். இந்தச் சின்ன வயசுல, குடும்பப் பொறுப்ப இவ்வளவு அழகா ஏற்று நடத்துற உங்கட மகளை மருமகளா அடையக் குடுத்து வெச்சிருக்கணும். ஏதோ எங்கட தகுதிக்கேற்ற மாதிரி . பொண்ணுக்கு ‘மஹர்’ கொடுக்கிறோம். ஆடம்பர செலவெதுமே வேண்டாம். கலியாண செலவுகளை குடும்பத்தாலும் சரிசமமா பிரிச்சுக்குவோம். என்ன சரிதானே?” 

அடுக்களையிலிருந்து வந்த உம்மாவிடம் நெடுநாள் பழகியவர் போல் அடுக்கிக் கொண்டே போனார் ஹரிஸின் தாயார். 

எதிர்பாராத இனிய திருப்பத்தால், ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி நெஞ்சைத்தாக்க, தன் முன்னால் அமர்ந்து இருந்த ஹரிஸை ஏறிட்டாள் லனீஸா. அவன் தன்னையே வைத்த விழி வாங்காது பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டதும், அவளது முகம், நாணத்தால் அந்திச் செவ்வானமாயிற்று. 

– ஜனனி, டிசெ. 24-30 1995.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *