கற்பனைக்கு ஒரு கவிதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 350
நாள்தோறும் கதிரவன் உதிக்கிறான். நாள்தோறும் தாமரை மலருகிறது. நாள்தோறும் குமுத மலர் கூம்புகிறது. நாள் தவறாமல் நாமும் இந்த நடைமுறைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இந்த நடைமுறைகளிலிருந்து மேலே சிந்தனையைப் படரவிட்டு நுண்ணிய கற்பனைகளைச் செய்யும் திறம் நமக்கில்லை .
இதே கதிரவனையும் தாமரைப் பொய்கையையும் பொருளாக வைத்துக்கொண்டு கவிகள் தாம் எத்தனை எத்தனை கற்பனை களைச் செய்துவிடுகிறார்கள்!
‘சேற்று மண்ணில் பிறந்தும் சேறுபடாமல் நீர் மேல் தூய்மையாக மிதக்கும் தாமரைப் பூவைப் போல நீ மண்ணிற் பிறந்தாலும் மனத்தில் மண்படாமல் உயர்ந்த எண்ணங்களில் அதை நிலைநிறுத்து’ என்று கற்பனையை உவமையாகப் படரவிட்டுச் சிந்திக்கிறார் ஒரு கவி.
‘தண்ணீரில் கிடக்கிறவரை தாமரை இலை எத்தனை நாளானாலும் வாடுவதில்லை. சூரியனும் அதை வாட்டி உலரச் செய்வதில்லை. ஆனால் அதே தாமரை இலையைத் தண்ணீரிலிருந்து பிடுங்கிக் கரையில் எறிந்து விட்டால் முன்பு வாட்டாமல் இருந்த அதே சூரியன் கடுமையாக வாட்டிச் சருகாக்கிவிடுகின்றான். ‘இடம் பெயர்ந்து தன் நிலை தடுமாறிச் செய்யத் தகாததைச் செய்தால் அறமே பகையாகி வாட்டும் என்பதை அல்லவோ இவ்வுண்மை காட்டுகிறது’ என்று இன்னொரு கோணத்தில் கற்பனை செய்கிறார் ஒருவர்.
தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதை உலக மாயையில் படியாமல் உலகத்தில் வசிப்பதற்கு வேதாந்திகள் உவமை சொல்லியிருக்கிறார்கள்.
மனத்தையும் கண்களையும் மூடிக்கொள்ளாமல் சிந்தனை யோடும், உற்சாகத்துடனும் உலகத்தைப் பார்க்கிறவர்களுக்கு அங்கே எவ்வளவு கற்பனைகள் மலிந்து கிடக்கின்றன என்பதைப் பார்த்தீர்களா?
‘இன்னின்னவற்றைப் பார்க்கத்தான் நமக்கு நேரமுண்டு; இன்னின்னவற்றைச் சிந்திக்கத்தான் நமக்கு நேரமுண்டு’ என்று பணம் சேர்த்துச் சிக்கனப்படுத்துவது போல் மனத்தையும், சிந்தனையையும்கூடச் சிக்கனப்படுத்துவதற்குப் பழகிக்கொண்டு விட்ட நாம் அழகாக நினைத்துப் பார்ப்பதற்குக்கூட ஆற்றலில்லாதவர்களாய் இருக்கிறோம். நடைமுறைகளைச் சாதாரணமாகப் பார்த்துச் சாதாரணமாக நினைத்து மறந்து விடுகிறோம். இதனால் நமக்குக் கற்பனைகள் தோன்றுவதில்லை. தப்பித் தவறிக் கற்பனைகள் தோன்றினாலும் அவை பங்களா கட்டுவதையும், புதுக் கார் வாங்குவதையும், பணம் சேர்ப்பதையும் பற்றிய பகற்கனவுகளாகவே இருக்கின்றன. உலகத்துக் காட்சி களிலும் பொருள்களிலும், கற்பனையும் உவமைகளையும் தத்துவங்களையும் கண்டு பிடிக்கவேண்டும். அத்தகைய நோக்கத்தோடு அவற்றைப் பார்க்கவேண்டும். அத்தகைய நோக்கத்தோடு அவற்றைச் சிந்திக்கவேண்டும்.
சிந்தித்து அடைகிற அறிவநுபவம்தான் வாழ்க்கையில் பெரிய செல்வம். அதை இழந்துவிட்டு ஆசைகளில் ஊறிக் கொண்டு கிடப்பதில் என்ன இருக்கிறது?
உலகத்துக் காட்சிகளிலிருந்து தத்துவச் செறிவுள்ள உவமைகளைக் கண்டுபிடிப்பதை ‘நிதரிசன அணி ‘ என்று அணியிலக்கணக்காரர்கள் கூறுவர்.
அழகான கற்பனைக்கு இங்கே ஓர் உதாரணம் பார்க்கலாம். கதிரவன் தோன்றுகிறபோது தாமரை மலர்கிறது. தாமரையை விடச் சிறிய பூவான குமுதம் கூம்பி விடுகிறது.
சூரியனுடைய ஒளியைக் கண்டு தாமரை மலர்வானேன்? குமுத மலர் கூம்புவானேன்? காரணம் கூற முடியாத இயற்கை நியதி இது. ‘தாமரைப்பூவின் இயல்பு அப்படி! குமுதப் பூவின் இயல்பு இப்படி என்று பொதுவாக வேண்டுமானால் காரணம் கூறலாம். ஒரு புலவன் இந்த நடைமுறையிலிருந்து அழகான உவமையைக் கண்டுபிடித்துச் சொல்கிறான். அவனுடைய சிந்தனையின் ஒப்புநோக்கும் திறமை நம்மை வியப்பிலாழ்த்துகிறது.
பிறருடைய செல்வம் வளர்ச்சியடைதலைக் கண்டு பெரியோர்கள் முகமலர்ந்து வரவேற்பார்கள். சிறியோர்கள் , இந்தப் பயலுக்கு இவ்வளவு செல்வம் வருவதா?’ என்று முகத்தைச் சுளிப்பார்கள்.
தாமரைப் பிறர் செல்வங்கண்டு மகிழ்ந்து முகமலரும் பெரியோர் போல் சூரியனைக் கண்டு மலர்கிறது. குமுதம், பிறர் செல்வங்கண்டு முகம் சுளிக்கும் சிறியோர் போல் சூரியனைக் கண்டு மூடிக்கொள்கிறது.
இந்தக் கற்பனையழகு செறிந்த உவமை எவ்வளவு அரிதாக இருக்கிறது பார்த்தீர்களா! சிந்தனைதான் பெரிய செல்வம். அதை வளர்க்க வேண்டும். இதோ அந்தக் கவிதை.
“பிறர்செல்வம் கண்டாற் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும் – அறிவுறீஇச் செங்கமலம்
மெய்ம்மலர்ந்த தேங்குமுதம் மெய்யயர்ந்த
பொங்கொளியோன் வீறெய்தும் போது.”
அழகாகக் கற்பனை செய்து பழகுவது மனத்துக்கு நல்லது. ஆசைகளைக் கற்பனை செய்து மனத்தில் அழுக்கைச் சேர்க்காதீர்கள். அழகுகளைக் கற்பனை செய்து மனத்தில் தூய்மை சேருங்கள்!
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.