கரையேறும் மீன்கள்




ஞானேஸ்வரிக்கு இரவு முழுவதும் நித்திரை தீக்கிரையானது. அவள் கண்களை மூடி நித்திரை கொள்ள ஆசை கொள்கையில் அவளது வாழ்க்கையின் நிச்சயமற்ற தலைவிதியின் கோலங்கள் சிதைவுற்ற சித்திரங்களாக மூடிய கண் இருளில் நிழல்கள் காட்டின.
அவள் கட்டிலில் தலையணையைக் கட்டிப்பிடித்தவாறு உடலை இரண்டு பக்கமும் புரட்டி புரட்டிக் கிடந்தும் அதில் அமைதிகாண முடியாது நிமிர்ந்து கிடந்து கண்களை இறுக மூடிப் பார்த்தாள்.
ஏமாந்த மனது ஏங்கித் தவிக்கையில் நித்திரை தூரத் தூர விலகித்தான் போகும். கொட்டாஞ்சேனை புனித லூசியாத் தேவாலயத்தின் திருந்தாதி மணி அடிக்கையில் அவளின் நெற்றிப் பொருத்துக்கள் “சுள் சுள்” எனத் துடித்து கபாலமெல்லாம் வலித்துக் கொண்டிருந்தது.
கடந்த மூன்று மாதங்களாக அவளை அறியாமலே தன்னிச்சையாக அவள் தன் நெற்றிப் பொருத்துக்களிலே வலது கை விரல்களை வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள். அவளது தலைவலியைக் கை விரல்களினால் அழுத்தி நிறுத்த முடியாதென்றும் அவள் உணர்ந்திருந்தாள். தனிமையில் கிடந்து மனதால் வதை படுகையில் அக் கைவிரல்களே அவளது இளைய சகோதரிகளாகின. தான் பிரான்ஸ் மாப்பிள்ளையைத் திருமணம் செய்தால் தன் இரு இளைய சகோதரி களுக்கும் விடிவு காலம் பிறக்குமெனத் தாயும், தகப்பனும் பல நாட்கள் நச்சரித்ததால் அத் திருமணத்துக்குச் சம்மதித்தாள். அவள் மனதார விரும்பிய அவளது தூரத்து உறவினனான பாலமூர்த்தி ஒரு மேசன். யாழ்ப்பாணத்தில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் அவனுக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. அவன் கிளிநொச்சிப் பக்கம் சைக்கிளில் சென்று விறகு வெட்டிச் சைக்கிளில் கட்டிக் கொண்டு வந்து விற்றுத் தனது குடும்பத்துக்குச் சோறு போடுகின்றான்.
ஞானேஸ்வரி அவனிடம் தனது நிர்ப்பந்த நிலையைக் கூறியபோது அவன் கலங்கவில்லை, எனக்கு வேலையும் இல்லை. என்னைக் கட்டி என்ன சுகம் காணப்போறாய். உன் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, உன் சகோதரிகளின் வாழ்க்கைக்கும் ஒரு வழி பிறக்குமென்பதால் என்னைப் பற்றிக் கவலைப்படாதே. உன் தாய் தகப்பன் விருப்பத்துக்குச் செய், என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
அவள் பிரான்ஸ் மாப்பிள்ளையைத் திருமணஞ்செய்வதற்காகப் பெற்றோருடன் கொழும்புக்கு வரும்வரை அவனைச் சந்திக்கவேயில்லை.
கொட்டாஞ்சேனைச் சிவன் கோவிலில் அவளுக்கும் பிரான்சிலிருந்து வந்த மாப்பிள்ளை இராஜலிங்கத்துக்கும் திருமணம் அடக்கமாக நடைபெற்று ஹோட்டல் சமுத்திராவில் அவனுடன் பதினைந்து நாட்கள் தேன்நிலவைக் கழித்தாள். இராஜலிங்கம் தான் ஆறு மாதத்துக்குள் அவளைப் பிரான்சுக்கு அழைப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
அவளது மாமனும், மாமியும் திருமணத்துக்காகக் கொழும்புக்கு வந்து ஒரு வீடெடுத்துத் தங்கியிருந்தனர். ஞானேஸ்வரியின் பெற்றோர் ஆறு மாதத்துக்குள் தமது மகள் பிரான்சுக்குச் சென்று விடுவாள் என்ற மகிழ்ச்சியோடு அவளை அவளது மாமன் மாமியின் பொறுப்பில் விட்டு விட்டு யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர். ஞானேஸ்வரி தன் கணவனின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆறு மாதங்கள் கடந்து ஒன்பது மாதங்களாயின. இராஜலிங்கம் பிரான்சுக்குச் சென்று ஒரு கடிதம் எழுதிய பின்னர் அவனிடமிருந்து எதுவித தகவல்களும் வரவில்லை . அவளது மாமன் அருளானந்தம் மகன் இராஜலிங்கத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்த வேளைகளில் அவன் அங்கு இல்லையென்றே பதில் வந்தது.
ஞானேஸ்வரி திருமணத்துக்குச் சம்மதித்தபோது வெளிநாட்டு மாப்பிள்ளைகள் பற்றி உள்மனதில் ஐயுறவு இருந்தது. இன்று அது உறுதியாகிவிட்டதோ எனப் பேதலித்தாள்.
இந்தக்கால இடைவெளியில் இராஜலிங்கத்தின் நடத்தை பற்றியும் அவன் ஒரு பிரான்சுக்காரியை வைத்திருக்கிறான் என்றும் அவளுடன் போதைப்பொருள் அருந்தி மயக்கமான வாழ்வு நடத்துகிறான் என்பது பற்றியும் எழுதிய கடிதங்கள் அவளது நம்பிக்கையான சிநேகிதிகள் மூலம் அவளுக்குக் கிடைத்து விட்டன. அவள் மனம் குலைந்து போனாள். பெற்றோரின் மீது கோபம் ஏற்பட்டாலும் அவர்களும் என்ன செய்வார்கள் என நினைத்தாள்.
அவள் நித்திரை வெறியின் மூர்க்கத்தால் தலையணையை முகத்துக்கு அணைத்து அதற்குள் முகத்தைப் புதைத்து முகங்குப்புறப்படுத்தாள். தலைவலி மெதுவாய்க் குறைந்து போக மனமும் உடலும் களைத்துப் போனதால் தூங்கியே விட்டாள்.
அவளது மாமியார் சரஸ்வதி மகனின் கேவலங்கள் தெரியாததனால் தனக்கு மூத்த மருமகளாய் வாய்த்த ஞானேஸ்வரியைத் தன் மகள் போலவே கவனித்தாள். அந்தக் கள்ளங்கபடமற்ற உபசரிப்பில் ஞானேஸ்வரியும் மாமியார் மீது நல்ல மதிப்பும் பற்றும் கொண்டிருந்தாள்.
மாமனார் அருளானந்தம் ஓர் அப்பாவி. அவர் மனைவி சொல் கேட்டு நடப்பவராயினும் மருமகளிடம் பாசமாயிருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் இரவு வெளியே சென்று குடித்துவிட்டு வரும் போது மருமகளுக்கு அப்பிளும், கச்சான் பக்கற்றும் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பார்.
சரஸ்வதிக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிம்மதியான உறக்கமில்லை. . தன் மகனது சீரழிந்த நடத்தை பற்றிய செய்திகள் அவளுக்கும் கிடைத்துக் கொண்டிருந்தன. அவற்றை அவளால் நம்ப முடியாவிட்டாலும் அவன் தான் தாலி கட்டிய மனைவிக்கு ஒரு கடிதம் எழுதிய பின்னர் கடிதம் மூலமோ, தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்வதைத் தவிர்த்து வருவதனால் அச்செய்திகளை உண்மையென்று கருதவே அவளது மனச்சான்று வற்புறுத்தியது. மருமகள் ஞானேஸ்வரி தன் மகன் பற்றி தனக்கோ கணவனுக்கோ நேரில் கூறக் கூச்சப்பட்ட போதும், தான் பிரான்சுக்கு செல்ல விருப்பமில்லை என்பதை நாசூக்காக தெரிவித்ததிலும் அவளது முகவிரக்தியிலுமிருந்து அவள் தன் மகனின் கேடுகெட்ட தனத்தை உணர்ந்து கொண்டாள்.
பெற்றோருக்கு விசுவாசமுள்ள பிள்ளையாய் பிரான்சிலிருந்து கொழும்புக்கு வந்து தாங்கள் தெரிவு செய்த ஞானேஸ்வரியை மறுப்பு வார்த்தை எதுவும் கூறாது திருமணஞ் செய்து அவளது பெற்றோர் சீதனமாய்க் கொடுத்த மூன்று இலட்சத்தையும் தன் சகோதரிகளுக்குக் கொடுக்கும்படி கையளித்த போது “இவனல்லோ மகன்” என்று சரஸ்வதி பெருமைப்பட்டிருந்தாள்.
தன் மூத்த மகன் இப்படி நாசமாய்ப் போவானென்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அவளது கணவன் அருளானந்தம் தச்சுத் தொழிலாளியாக ஓடி ஓடி உழைத்து மூன்று ஆண்பிள்ளைகளையும் புனித சால்ஸ் வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டு வரை படிப்பித்து கடன்பட்டு அவர்களைப் பிரான்சுக்கு அனுப்பிவைத்தான். கடைசி இரண்டும் பெண் பிள்ளைகள் குமர்கள். க.பொ.த. சாதாரணம் வரை படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். இன்றைய போர்ச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்திலே தச்சுத் தொழில் செய்ய முடியாத போதும் பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் குடும்பத்தைக் கௌரவமாக ஓட்டி வருகிறான். அந்த இரு குமர்களையும் கரை சேர்ப்பதற்காகவே மூத்த மகன் இராஜலிங்கத்துக்குத் திருமணஞ் செய்து சம்பந்தியிடம் மூன்று இலட்சம் சீதனமாக வாங்கினார். அப்பணத்தை மகன் மனமுவந்து கொடுத்தபோது மகன்மீது வைத்திருந்த மதிப்பு அதிகரித்தது.
அருளானந்தம் தன் பிள்ளைகள் பற்றிய பெருமை உணர்வோடு கவலையின்றி எந்த நாளும் சைக்கிளில் தேடிச் சென்று பனங்கள்ளுக் குடித்துவிட்டு இரவு வந்து பிள்ளைகள் பற்றி மனைவியுடன் செல்லக் கதைகள் பேசி விட்டுச் சாப்பிட்டுத் தூங்கி விடுவான். மூத்த மகனின் திருமணத்துக்காகக் கொழும்புக்கு வந்த நாள் முதல் இரவில் சாராயம் குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் பற்றி மனைவியிடம் புழுகிவிட்டுத் தூங்கி விடுவான். அவனுக்குக் கவலை இல்லை.
சரஸ்வதிக்குத் தன் மகன் பற்றிய செய்திகளைக் கேட்ட பின்னர் ஞானேஸ்வரியின் எதிர்காலம் பற்றியே ஆழந்த கவலை கொண்டாள். தூங்குவதற்கு கண்ணை மூடினால் பயங்கரக் கனவுகள் இமை இருட்டுக்குள் புகுந்து நித்திரையைக் குழப்பின. அன்று காலை ஐந்தரை மணிபோல் எழும்பி மருமகளின் அறைக்கு வந்து கட்டிலருகில் நெருங்கி அவளைப் பார்த்தாள். அவள் தலையணையை அணைத்துக் கொண்டு முகப்குப்புறப்படுத்திருப்பதைக் கண்டு மனம் கலங்கிப் போனாள். அவள் உறக்கமின்றியும் ஒழுங்காகச் சாப்பிடாமலும் இருந்து மெலிந்து கிடப்பதை சரஸ்வதி உணர்ந்து கொண்டாள். “சிவ சிவ” என்று முனங்கிக் கொண்டு இந்தப் பழியை யார் சுமப்பது என்று சிந்தித்தவாறு தன் அறைக்குள் சென்றாள். அங்கு கட்டிலில் கால்களை வீசி எறிந்து குறட்டை விட்டுத் தூங்கும் கணவனைக் காண எரிச்சலாக இருந்தது.
“ஏய் மனுஷா! எழும்பு. கேப்பை மாடு மாதிரி நித்திரை கொள்ளுறாய்” என்று தோளைப் பிடித்து உலுப்பிவிட்டாள்.
அருளானந்தம் மனைவியின் அதட்டல் குரல் கேட்டதும் புரண்டு நிமிர்ந்து இரு கைகளாலும் முகத்தைத் தேய்த்து விட்டு கண் விழித்தான்.
சரஸ்வதி கட்டிலில் அவனுக்கு அருகில் அமர்ந்து கொண்டாள்.
“எழும்பி இருமன்”
“என்னப்பா?”
அவன் எழுந்து சுவரில் முகுகைச் சார்த்திக் கால் நீட்டி இருந்தான்.
“அந்தப் புள்ளைக்கு என்ன பதில் சொல்றது? ஒரு கவலையுமில்லாமல் மாடுமாதிரி நித்திரை கொள்ளுறாய்?”
“என்னடி சொல்றாய் எனக்கு ஒரு மண்ணும் விளங்கேல்ல உன்னர மகன் ஒரு போக்கிரி கேடு கெட்ட நாய் எங்களையெல்லாம் ஏமாத்திப் போட்டான்.”
“என்னடி சொல்றாய்”.
“அந்தப் பொறுக்கி பிரான்சிலை பிரான்சிக்காரச் கிறுக்கி ஒருத்தியுடன் குடும்பம் நடத்திறானாம். போதை வஸ்துக் குடிச்சுக் கொண்டு திரியிறானாம்.”
“என்னப்பா சொல்கிறாய்?”
“உண்மையைத்தான் சொல்றன்; இவன் ஏன் இஞ்சை வந்து இந்த அப்பாவிப் பொண்ணையும் ஏமாத்தி எங்களையும் ஏமாத்தி அதுகளிட்டை மூண்டு இலச்சத்தையும் வாங்கித் தந்திட்டுப் போயிட்டான் மூதேசி”
அருளானந்தத்துக்கு மகனைப்பற்றி ஒரு சந்தேகமும், பயமும் இருந்தது தான் அவன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதெல்லாம் இராஜலிங்கம் நழுவி விட்டான்.
“எடி ஆத்தை நீ சொல்றதெல்லாம் உண்மையாடி?”
“மக்கு, பேக்கல வாண்டு, உண்மைதான் உண்மைதான். அந்தப் புள்ளைக்கே எத்தனையோபேர் உன்னர கேடு கெட்ட மோனைப் பற்றி எழுதிப்போட்டார்கள்.
“அப்படியே?”
“அப்படியோவோ! அந்தச் சனியனையும் பெத்தனே. ஒரு குமர்ப் பிள்ளையிடை வாழ்க்கையைக் கெடுத்துப் போட்டான் கிறகம்!”
சரஸ்வதியின் கண்கள் கலங்கிக் கொண்டன.நெற்றில் கை வைத்துக் குனிந்திருந்தாள்.
“புள்ளை என்ன சொல்லுது?”
“அது இனி இங்கை இருக்காது. அவனிட்டைப் போகாது அது எனக்கு விளங்கிப் போச்சு. இப்ப என்ன செய்யிறது?”
“சரஸ்வதி நீ சொல்றதில் உண்மை இருக்கெண்டுதான் நானும் நினை க்கிறன். எங்கடை மற்ற இரண்டும் இவனைப்பற்றி ஒண்டும் சொல்லேல்லையே குரங்குகள்”
“அதுதானே உங்கட மர மண்டைக்குப் புரியுதில்லை. இவங்களெல்லாம் அங்கை ஒருதனின் பாவங்களை மறைக்க மற்றவங்கள் உதவியா இருக்கிறாங்கள். இல்லாட்டி ஒரு பெண் பாவம் பொல்லாதது என்று உணர்ந்தா இந்தச் சனியன்கள் தானும் எங்களுக்கு எழுதியிருக்கலாந் தானே?”
“அது தானே”
“இப்ப அந் புள்ளையிடை மூன்று இலட்சத்தைத் திருப்பிக் குடுக்க வேணுமோ? அரைவாசிக் காசு முடிஞ்சு போச்சு.
இருவரும் மனிதில் எழும் அந்தர உணர்வுகளோடு மௌனமாயிருந்தனர்.
இரவு சிந்தித்துச் சிந்தித்துத் தீர்க்கமான முடிவோடு தூங்கிப் போன ஞானெஸ்வரி நித்திரை முறிந்து கிடக்கையில் மாமனும் மாமியும் கதைத்துக் கொண்டவற்றைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் முகத்தை இரு கைகளாலும் துடைத்து கலைந்திருந்த கூந்தலைக் கொண்டையாகக் கட்டிக் கொண்டு, தனது மாமன் மாமியின் அறைக்குள் நுழைந்தாள். சரஸ்வதியும் அருளானந்தமும் அவளைக் கண்டு திடுக்குற்று எழும்பி நின்றனர். 20
“மாமி மாமி, நீங்கள் நல்லவங்கள், உங்கடை மகன்தான் என்னையும், உங்களையும் ஏமாத்திப் போட்டான்”
அவளின் முகத்தை ஏறிட்டு நோக்க அவர்களுக்குத் தைரியம் வரவில்லை
“அம்மா இன்னும் கொஞ்சம் பொறம்மா எல்லாம் நல்லதாக முடியும்” அருளானந்தம் கூனிக் குறுகிறின்று கூறினார்.
“நான் முடிவு எடுத்துப் போட்டேன். பிரான்சுக்குப் போய் தற்கொலை செய்ய நான் விரும்பவில்லை. நாளைக்கு யாழ்ப்பாணம் போறன். அப்பாவுக்கு எழுதியிருக்கிறன். அவர் வந்து உங்களோடு கதைப்பார். கவலைப்பட வேண்டாம்.”
அவள் கண்ணீர் கசியும் முகத்தோடு தன் அறைக்குத் திரும்பிச் சென்றாள்.
– தினகரன் 1991 – விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)- விவேகா பிரசுராலயம் – முதற் பதிப்பு கார்த்திகை 1995