கருப்பும் காந்தலும்!





கருப்பே அழகு; காந்தலே ருசி என்று கூறப்படும் வாசகத்தில் உஷாவிற்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் இரண்டும் அவளுக்குப் பிடிக்காதவை!. ஓன்று தந்தையின் நிறம். அடுத்தது அவள் காந்தலைப் பற்றி அறிந்திருந்தும் அதை ருசி பார்த்ததில்லை. அப்படி ருசி பார்க்க பிரியப்பட்டதுமில்லை.

வற்றல் பிழிவதற்கு தோதாக அரிசி மாவு, பச்சை மிளகாய் சாறு, உப்பு, ஜவ்வரிசி தேவையான அளவு பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீருடன் கலந்து அடுப்பில் வைத்து கரண்டியால் கிண்டிக் கொண்டே வருவார்கள். பதமாக கொதித்து கூழாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடுவர்.
சில சமயம் சரியாக கிண்டாமல் போகும்போது அடி பிடித்து அந்தப் பகுதி மட்டும் லேசான காவி நிறத்தில் காணப்படும். அதுதான் காந்தல் என்பது ! சிலர் அதை ருசித்து சாப்பிடுவர். இதைத்தான் உஷா விரும்பியது கிடையாது.
பதிமூன்று வயதில் எட்டாவது படிக்கும் உஷாவிற்கு இப்பொழுதெல்லாம் தன் தந்தையைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை.
புத்தி தெரிந்த நாளில் இருந்து நீறு பூத்த நெருப்பாய் கனந்து கொண்டிருந்த இந்த விஷயம் இப்பொழுது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது. அண்டங்காக்காய் நிறம். நாலரை அடி உயரத்தில் தெற்றுப் பல்லுடன், நடந்தால் குதிக்கும் தொந்தி,
இப்படிப் பட்ட வித்தியாசமான தோற்றம் கொண்டிருப்பார் அவளின் தந்தை. இதில் உடல் நிறத்திற்கு ஏற்றார் போல் கருப்பன் என்று பெயர் வேறு ! அதுவும் வயசு வேறு அதிகம் !
உஷாவிற்கு, அம்மாவை ( வசந்தி) நினைக்கும் பொழுது பாவமாய் இருக்கும். செக்கச் செவேலென்ற நிறத்தில் ஐந்தே கால் அடி உயரம் ; நீண்ட கூந்தலுடன் பார்க்க அம்சமாக இருக்கும் அம்மா, எந்தவிதத்திலும் தகுதி இல்லாத இந்தக் கருப்பரை (தந்தை இல்லையா, அதுதான் கொஞ்சம் மரியாதையுடன் ) எப்படி மணந்து கொண்டாள் என்று எண்ணி யெண்ணி மாய்ந்து போவாள்.
இந்த அழகில் தானும் அழகாய் பிறந்ததை நினைக்கும் பொழுது, தலையைப்பிய்த்துக் கொள்ளலாம் போல் இருக்கும் அவளுக்கு. ஆயினும் நெஞ்சோரத்தில் ஒரு துளி நேசிப்பு இருக்கத்தான் செய்தது தன்னைப் பெற்றவராயிற்றே என்று !
ஆனால், கருப்பனுக்கு மகள் மீது அளவில்லாத பாசமும், அன்பும் எப்பொழுதும் உண்டு. அவர் நெருங்கி வரும்பொழுதெல்லாம் ஒதுங்கிப் போகும் மகளின் செய்கையைக் கண்டு வருத்தத்தப்படுவார் கருப்பன்.
அன்பை வாரிக் கொட்டும் மனைவி; ஆனால் விட்டேர்த்தியாக இருக்கும் மகள். நல்ல வசதி இருந்தும் இந்தப் பெண்ணிற்காக கவலையும் வேதனையும் அடைய வேண்டியிருக்கே! இன்னும் எத்தனை நாட்கள் உருக வேண்டுமோ? என விசனப்படுவார். இதை ஜாடை மாடையாக கவனிக்கும் வசந்திக்கும் வேதனையாக இருக்கும். உள்ளுக்குள் மருகுவாள். மகளின் இந்தச் செயல் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தூண்டிவிடும்.
பதினாங்கு வருடங்களுக்கு முன்னால் நடந்தது மறக்கக் கூடிய விஷயமா அது?
ஆழ் மனதில் பதிந்து விட்ட வடுவல்லவா!
தனக்குச் சொந்தமான வீட்டின் முன் பக்கம் இடது புறமாக கருப்பன் மளிகைக் கடை வைத்திருந்தான்.
வலது பக்கமும் கடையின் பின் பக்கமும் போர்ஷன். கீழ் போர்ஷன் பூராகவும் கருப்பன் வசம் இருந்தது. மாடிப் போர்ஷனும் உண்டு. இது இல்லாமல், கிராமத்தில் பூர்வீகச் சொத்துகளாக நிலங்களும் சின்ன ஓட்டு வீடும் இருந்தன. திருமணமாகாமல் ஒண்டிக்கட்டையாக ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை!
காலியாக இருந்த கருப்பன் வீட்டு மேல்மாடி போர்ஷனுக்கு தன் மகள் வசந்தியுடன் குடிவந்தார் ராமன்.
வசந்தி பார்க்கப் பாந்தமாயிருப்பாள். ஆனால் படிப்பில் நாட்டமில்லை. அதனால் கஷ்டப்பட்டு ப்ளஸ் டூ வரை படித்து அத்தோடு தன் படிப்பைநிறுத்திக் கொண்டாள்.
ஒரு தனியார் துறையில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ராமனுக்கு மனைவி இல்லை.
மேலதிகாரியாக இருக்கும் ராமன் வீட்டிற்கு அலுவலக வேலை விஷயமாக அடிக்கடி வர ஆரம்பித்தான் சுதாகர் என்பவன். வந்து தனக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வான். நல்லவன்; அதோடு வேலையில்சிரத்தையாக இருக்கிறான் என கருதி தன் வீட்டுக்கு வர அவனுக்கு அனுமதி அளித்திருந்தார் ராமன்.
சுதாகரும் ஆரம்பத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தான் இருந்தான். ஆனால் அப்படி இருந்தவன் பார்வையில் நாளடைவில் வசந்தி அடிக்கடி பட அவள் அழகைக் கண்டு அசந்து போனான். மெல்ல மெல்ல தன் மனதில் வசந்தி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டதுபோல் நினைப்பு தோன்றியது.
வசந்தியும் சுதாகரின் பார்வை தன் மீது அடிக்கடி விழுவதை தன் கடைக் கண்ணால் கண்டாள். மூக்கும் குழியுமாக அவன் இருக்க வசந்தி அவன்பால் ஈர்க்கப் பட்டாள். நேசிக்கவும் ஆரம்பித்தாள். இருவரின் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. மகள் சுதாகரை காதலிக்கிறாள் என்பது ராமனுக்குத் தெரியாது.
நேரம் வரும்பொழுது அவரிடம்சொல்லிக் கொள்ளலாம் என்று இருவரும் நினைத்தனர். ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளும் முன்னாலயே தன்னை சுதாகரிடம் இழக்கப் போகிறோம் என்பதை வசந்தி அறியவில்லை.
அன்று, வெளியூரில் இருந்த ராமனின் அண்ணன் ஹார்ட் அட்டாக்கில் காலமாகி விட்டதாக ஃபோனில் தகவல் வர ராமன் செல்ல வேண்டியதாயிற்று. போவதற்கு முன்னால் வசந்தியை மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தி விட்டுச்சென்றார். ஆனால் விதிவிளையாட ஆரம்பித்தது.
ராமன் ஆஃபிஸ் வராது போகவே, மாலை ஆஃபிஸில் இருந்து அவர் வீட்டுக்குச் சென்றான் சுதாகர். சுதாகரைப் பார்த்ததும் முகம் மலர்ந்த வசந்தி கதவைத் திறந்து வரவேற்றாள்.
பெரியப்பாவின் காரியங்களுக்காக தந்தை வெளியூர் சென்றிருக்கிறார் என சொல்லி சுதாகரை உள்ளே அழைத்துச் சென்றாள்.
அவனுக்கு காஃபி போட்டுக் கொண்டு வந்த வசந்தியின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிய சுதாகர் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
அந்தப் பார்வையில் கிறக்கம் தெரிய உருகிப் போனாள் வசந்தி. காஃபியை அவன் கையில் கொடுக்கும்போது, அவனின் விரல்கள் தீண்டியதில் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்க தன் உதடுகளைக் கடித்துக் கொண்டு தன் நிலை மறந்தாள். அவள் கை பற்றிய சுதாகர் மெல்ல சோஃபாவில் இடைவெளி இல்லாமல் உரசிக்கொண்டு அமர்ந்தான்.
அப்படி உரசுவது பேராபத்து என்று வசந்தி உணரவில்லை. சுதாகரும், தான் கட்டிக்கப் போகிறவள்தான் வசந்தி, அதனால் இப்படி நடந்து கொள்வதில் தவறு எதுவும் இல்லை என்று குருட்டு அபிப்ராயம் கொண்டிருந்தான்.
பஞ்சும் நெருப்பும் அருகருகே இருந்தது வினையாயிற்று ! உரசலில் பற்றிக் கொண்ட தீ கொழுந்து விட்டு எரிந்தது. நேரம் போவது தெரியாமல் கிறக்கத்துடன் இருந்தனர்.
பிறகு, நீண்ட நேரம் கழித்து புறப்பட்டான் சுதாகர். ஏதோ ஒரு வேகத்தில் தான் செய்த தவறை எண்ணி குலுங்கி அழுதாள் வசந்தி. விஷயம் அறிந்தால் தந்தையின் மனசு சுக்கு நூறாக உடைந்து விடுமே என அஞ்சி வேதனையுற்றாள்.
மூன்று நாள் கழித்துத் திரும்பிய தந்தையைப் பார்க்க கண்றாவியாக இருந்தது வசந்திக்கு. துவண்டுபோய், கசங்கிய காகிதம் போல் காணப்பட்டார். வசந்தியின் மனமும் தான் செய்த காரியத்தால் கசங்கி, துவண்டு போய் இருக்கத்தான் செய்தது!
இருந்தாலும் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டபடி, “வாங்க ப்பா , பெரியப்பா காரியம் ஓரு வழியாக நடந்து முடிஞ்சுதா?” என கேட்டாள்.
மகளின் கேள்விக்கு தலையாட்டியவர் ஆயாசத்துடன் ஈ.சி.சேரில் சாய்ந்து கொண்டார். “அது சரிம்மா, நான் இல்லாதபோது சுதாகர் இங்கு வந்தானா?” இயல்பாக தந்தை கேட்க வசந்தி ஆடிப் போனாள். ஒரு வேளை நடந்ததை அறிந்துகொண்டுதான் கேட்கிறாரோ என்ற அச்சம் வந்தது. உடல் வேர்த்துக் கொட்டியது.
மகள் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால், தந்தை திரும்பவும் கேட்கும் முன்னால் சுதாரித்துக் கொண்டவள்,
“இல்லப்பா, அவர் நீங்க இருக்கும்போது இங்கு வந்தாரே; அவ்வளவுதான். அதற்கப்புறம் வரல்லை.” கன கச்சிதமாக பொய் சொன்னதை அவளாலேயே நம்ப முடியவில்லை. அதுவும் முதல் தடவையாக தந்தையிடம் பொய் சொன்னது சொல்லவொண்ணா வலியை ஏற்படுத்தியது வசந்திக்கு.
ராமன் திருப்தி கலந்த ஆயாசத்துடன் கண்களை மூடிக்கொண்டார்.
தந்தை இவ்வளவு களைப்பாக இருந்து வசந்தி பார்த்ததில்லை. அண்ணனின் மரணச் செய்தியைக் கேட்டு அவ்வளவாக ஆடிப் போகாதவர் இப்பொழுது எதையோ பறிகொடுத்தாற்போல் சோகத்துடனும், வருத்தத்துடனும் காணப்படுவது கண்டு கவலை கொண்டாள்.
மெய்தான். அண்ணன், தம்பி ராமனுக்கு பாத்தியமான பங்கு நிலங்களையும் சேர்த்து அடகு வைத்து , கடனில் மூழ்கிப்போனதாக போன இடத்தில் கேள்விப் பட்டார் ராமன். தலையில் இடி விழுந்தாற்போல் இருந்தது.
தன் பங்குக்கான நிலங்களை விற்றுதான் வசந்தியின் திருமணத்தை நடத்த திட்டம் போட்டிருந்த ராமனுக்கு, அதில் மண் விழுந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அண்ணனின் இறப்பும், அவர் செய்த பித்தலாட்டமும் சேர்ந்து ராமனுக்கு நிறைய மன அழுத்தத்தை கொடுத்தன. தாங்க முடியாமல் உள்ளுக்குள் அழுதார்.
அன்று இரவு ராமனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மகளை அருகில் அழைத்தவர், “அம்மாடி, நான் உன்னைத் தனியா தவிக்கவிட்டுப் போயிடுவேன் போலிருக்கு. இது பொல்லாத உலகம். கள்ளர்களும், ஏமாற்றுவோர்களும் நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் வலையில் விழாமல் நீ ஜாக்ரதையா இருந்துக்கோம்மா…” இதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை. மூச்சிறைத்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்.
அதன் பிறகு ராமன் மரணமுற்றது; அவர் காரியங்கள் நடந்தது எல்லாம் கண்சிமிட்டும் நேரத்தில் முடிந்தாற்போல் இருந்தது. வசந்திக்கு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. கவலையும் துக்கமும் ஆட்கொண்டன.
தந்தையின் செட்டில்மெண்ட் பணம் தற்சமயம் அவளுக்கு கை கொடுத்தது. வாழ்வாதாரமாக அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு சமாளித்து வந்தாள்.
அடி மேல் அடியாக நாள் தள்ளிப் போக இன்னொரு பிரச்சினையும் வசந்தி சந்திக்க வேண்டியதாயிற்று. சுதாகரிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி சீக்கிரமாக திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணும்படி வலியுறுத்த வேண்டும் என எண்ணி சுதாகரைத் தொடர்பு கொண்ட போது ‘ஸ்விட்ச் ஆஃப் ‘ என்றது அவன் அலைபேசி. செய்வதறியாது திகைத்தாள். அப்பொழுதுதான் நியாபகம் வந்தது. தந்தை காலமான தினத்தன்று ஆஃபிஸ் நண்பர்களுடன் வந்திருந்த சுதாகர் அதற்குப்பிறகு காணவில்லை. அவனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, சில நாட்கள் முன்னால் விபத்து ஒன்றில் சுதாகர் இறந்துவிட்டதாக இடியாய் செய்தி வர கண்களை இருட்டிக்கொண்டு வந்தது வசந்திக்கு.
தன்னைப் பெற்ற தந்தையின் மறைவையே வசந்தி இன்னும் மறக்க முடியாமல் சோகமும் வேதனையும் கொண்டிருக்கிறாள். அதற்குள் தான் பெறவிருக்கும் குழந்தையின் தகப்பனாரும் மரித்துப் போனதை எப்படி தாங்கிக் கொள்வாள் ? விதி தன் வாழ்க்கையில் அளவுக்கு மீறி விளையாடுவதாக நினைத்து துயரம் கொண்டாள். முட்டி மோதிக்கொண்டு அழுதாள்.
நாட்கள் செல்லச் செல்ல, தனக்குள் மெல்ல மெல்ல மாற்றம் நிகழ்வது தெரிந்தது. பீதியில் தேகம் நடுங்கியது. ஏதேதோ கற்பனைகள், வேண்டாத எண்ணங்கள் அவள் மனதை அலைக்கழித்தன.
கடைசியாக ஒரு வழி புலப்பட்டது. ஆனால் அந்த வழி வெற்றிகரமாக அமையுமா என்கிற பயம் கலந்த சந்தேகமும் அவளுக்குள் எழுந்தது. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு எழுந்தாள்.
இதுவரை தன் வீட்டினுள் வராத வசந்தி அன்று வர ஆச்சரியப்பட்டான் கருப்பன். அவள் அழுத முகத்துடன் இருப்பது கண்டு விசனப்பட்டான். “வா அம்மணி! உன் அப்பா போனது உனக்கு பெரிய இழப்புதான். அதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க முயற்சி செய் அம்மணி! …அப்புறம், நீ இங்கேயே தொடர்ந்து தங்கிக்கலாம். .வேற ஏதாவது உதவி தேவைன்னா கூச்சப்படாம கேளு!”
கருப்பனின் வார்த்தைகள் சற்று தென்பு கொடுத்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் தன் நிலைமையை விலாவரியாக எடுத்துச் சொன்னாள்.
“உன் கதையைக் கேட்க மனசுக்கு கஷ்டமாயிருக்கு. நான் என்ன செய்யணும் சொல்லு அம்மணி செய்யுறேன்.” உடனே தன் முகத்தை முந்தானையால்துடைத்துக் கொண்டவள், “ஐயா, கேட்குறனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு வேற வழி தெரியல்ல.போக்கிடமும் இல்ல… வந்து…” தயங்கித் தயங்கி தொடர்ந்தாள். “என்னை உங்கள் வாழ்க்கைத் துணைவியா ஏத்துப்பீங்களா?”
சடாரென்று வசந்தி இப்படிக் கேட்டதும் திடுக்கிட்டான் கருப்பன். என்னதான் வசதி மிக்கவனாக இருந்தாலும் தன் வயது என்ன; தோற்றம் என்ன ?…தன் தோற்றத்தை மனதில் கொண்டுதான் இது வரை திருமணம் செய்யாமல் இருந்தான். தன்னை முழு மனதோடு எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்; வெறுத்து ஒதுக்குவாள் என்ற அபிப்ராயம் அவனுக்கு இருந்தது. ஆனால் இப்போது வசந்தி இப்படி கேட்டதும் ஒன்றும் புரியவில்லை.
“அம்மணி, நான் போய் உன்னை….?” மென்று விழுங்கியவன் தொடர்ந்து, “எனக்கு வயசு 50 ஆகுது. உனக்கோ சின்ன வயசு. மலைக்கும் மடுவுக்கும் இடையேஎவ்வளவு பெரிய வித்தியாசம் ! இது மட்டுமா? பார்க்க கன்னங்கரேல்னு கோரமாயிருக்கேன் . ரதி மாதிரி இருக்குற அதுவும் சின்ன வயசே ஆன உன்னை நான் எப்படி கட்டிக்கிறது ? ஊரார் கைகொட்டிச் சிரிக்க மாட்டாங்களா?” என்றான்.
“ஐயா, ஊரார் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை.. என்னை பெரிய இக்கட்டிலிருந்து காப்பாத்தற தெய்வமா உங்களைப்பார்க்குறபோது என் கண்களுக்கு நீங்க கோரமாத் தெரியல்ல. மன்மதனாகத்தான் தெரியுறீங்க. ப்ளீஸ்.” என கெஞ்சினாள்.
கருப்பன் உண்மையிலேயே பெரிய மனம் படைத்தவன்தான். தனக்கு வசந்தி பெண்டாட்டியாக வருவதைக் காட்டிலும், தான் அவளுக்கு புருஷன் என்கிற அரணாக அமைய வேண்டியது கட்டாயம் என்பதை முக்கியமாகக் கருதினான் . அதன் மூலம் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தான் தகப்பன் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தன்னோட தலையாய கடமை எனவும் எண்ணினான்.
அதன்பிறகு, ஒரு நல்ல நாளில், வீட்டில் உள்ள தன் பெற்றோர் மற்றும் தெய்வப் படங்கள் முன்னால் நின்று வசந்தி கழுத்தில் தாலி கட்டினான் கருப்பன். நாட்கள் சுமூகமாகச் சென்றன.
ஒரு வழியாக பெண் குழந்தை பிறந்தது வசந்திக்கு. குழந்தை தங்க விக்கிரகம் போல் இருந்தது. உஷா என்ற பெயர் வைத்தார்கள். உஷா வளர வளர அவளின் யவனமும் வளர்ந்தது. மகளைக் கண்டு பூரித்துப் போயினர் வசந்தியும் கருப்பனும்.
ஆனால் பின் வரும் நாட்களில் உஷா தந்தையிடம் நெருங்கிப் பழகாமல் ஒதுங்குவது கண்டு வசந்திக்குத் தாள முடியவில்லை இப்படியே இருந்தால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே இடைவெளி பெரியதாகும். இது உஷாவின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என பயந்தவள் செய்வதறியாது திகைத்தாள்.
கருப்பனும் வருடக் கணக்கில் மகள் தன்னிடம் தொடர்ந்து காட்டும் அலட்சியம் கண்டு உள்ளம் நொந்து போனார். கவலையால் சரி வர உறக்கம் வரவில்லை. வாழ்க்கையில் ஓரு பெரிய தவறு செய்து விட்டதுபோல் அடிக்கடி எண்ணி மனதுக்குள புழுக்கம் வேறு ஏற்பட்டது.
அன்று காலை சட்டென கண் விழித்த உஷாவிற்கு தலை பாரமாயிருந்தது. வயிற்றை வேறு கலக்கியது. உடனே, கட்டிலை விட்டு இறங்கியவள், “அம்மா..” என்று அலறியபடி அறையில் இருந்து விரைந்தோடினாள்.
அப்போது என்னவோ ஏதோ என்று பதட்டத்துடன், பயந்தபடி கருப்பன் மகள் அருகில் ஓடி வந்து நின்றார். “என்ன கண்ணு, என்னாச்சு?” என்றார் கவலையுடன்.
குமட்டிக் கொண்டு வர, அடக்க முடியாமல், கண் சிமிட்டும் நேரத்திற்குள் உஷா தந்தைமேல் வாந்தி எடுத்து விட்டாள். மொத்த வாந்தியும் கச்சிதமாககருப்பனின் வெற்று மார்பில் தெறித்து வழிந்தோடியது. வீச்சம் சகிக்க முடியாமல் மூக்கைத் துளைத்தெடுத்தது.
தந்தையிடமிருந்து என்ன ரியாக்ஷ்ன் ஏற்படப்போகிறதோ என்று அஞ்சி நடுங்கினாள் உஷா. ஆனால் கொஞ்சம்கூட அருவருப்போ, முகச் சுழிப்போ கொள்ளவில்லை கருப்பன்.
“அம்மணி, கொஞ்சம் வெளியே வா!” சமையலறைக்குள் இருந்த வசந்தியை அழைக்க, உடனே விரைவாய் வெளிப்பட்டாள் வசந்தி. மகள் வாந்தி எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போனாள். அதுவும் தன் புருஷன் மார்பு மீது எடுத்திருப்பது தெரிய மேலும் அதிர்ச்சியுற்றாள் வசந்தி.
“ஏய், என்னாச்சும்மா..?” கொஞ்சம் கவலையுடன் கேட்ட வசந்தியிடம் சொன்னார் கருப்பன்.
“அம்மணி! குழந்தைய ஒண்ணும் சொல்லாதே. பித்தம்..அதான் இப்படி ஆயிடிச்சு! நீ குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போய் வாஷ் பேசின்ல அது வாயை நல்லாக் கழுவிவிடு.” எனக் கூறி விட்டு பாத் ரூமில் நுழைந்தவர், தன் மார்பை நன்றாக அலம்பிக்கொண்டு வெளிப்பட்டார் கருப்பன்.
தன் செயலுக்கான தந்தையின் ரியாக்ஷ்ன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தான், வெறுக்கும்படியான காரியத்தைச் செய்தாலும் அதை விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தந்தைக்கு மட்டுமே உண்டு என்பதை புரிந்து சிலிர்த்துக் கொண்டாள்.
சட்டென அன்பும், பாசமும் பொங்கி வழிய அவர் அருகில் சென்ற உஷா, “ஸாரி டாடி ! எதிர்பாராமல் உங்க மேல வாமிட் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.” என அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
மகளின் ஸ்பரிசம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எத்தனை நாட்களாக காத்துக் கிடந்த எதிர்பார்ப்பு! பொறுமைக்கு கிடைத்த பரிசு! மெல்ல மகளின் கைகளிலிருந்து தன் கைகளை விடு வித்துக் கொண்டார் கருப்பன்.
“அட விடு கண்ணு! எங்கப் பொண்ணும்மா நீ! உனக்கு ஒரு கஷ்டம் வந்தா நாங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?”
தந்தை வாயிலிருந்து வந்த கரிசன வார்த்தைகள் உஷா நெஞ்சைப் புரட்டிப் போட்டது.
தன் மீது இத்தனை கனிவும், அன்பும் கொண்ட தந்தை மீது இது நாள் வரை தான் கொண்டிருந்த பற்றற்ற நிலையை நினைத்து வேதனை ஏற்பட்டது உஷாவிற்கு. அன்புக்கும், பாசத்திற்கும் என்றும் புற அழகு கிடையாது என்பதை புரிந்து கொண்டாள்.
முதன்முறையாக மகள் ‘டாடி’ என்று தன்னை அழைத்ததும் உச்சி குளிர்ந்து போனது கருப்பனுக்கு. இத்தனை நாட்களாய் மனதில் இருந்த பாரம் இறங்கி லேசாகிப் போனது.
மகளிடம் காணப்பட்ட மாற்றம், மகிழ்ச்சியை ஏற்படுத்தியது வசந்திக்கு. தந்தைக்கும் மகளுக்கும் இடையே பாசம் கொண்ட நெருக்கத்தை உண்டாக்க ஏதோ ஒரு சக்தி ஏற்படுத்திய நிகழ்வுதான் இது என்று எண்ணி பூரிப்படைந்தாள்.
இத்தனை நாட்களாக மனதில் உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினை தீர்ந்ததில் நிம்மதி ஏற்பட்டது.
ஆனாலும், நீண்ட நாள் கழித்து அன்று சுரீர்ரென்று ஒரு விஷயம் வசந்தி மண்டையில் உறைக்க ஆரம்பித்தது. தனக்கு புருஷனாகவும் தன் குழந்தைக்கு தந்தையாகவும் இருக்க மனமுவந்து சம்மதித்த கருப்பனுக்கு தான் இன்னும் ஒரு தாம்பத்ய மனைவியாக நடந்து கொள்ளாமல் போனது எத்தனை பெரிய தவறு என்பதை நினைத்து வேதனைப்பட்டாள். அந்தத் தவறு அவள் நெஞ்சை அறுக்க ஆரம்பித்தது.