கரிப்பு மணிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 2,111 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

நார்ப் பெட்டியும் கையுமாக பொன்னாச்சி, பாஞ்சாலி, சரசி, நல்லக்கண்ணு நால்வரும் சந்தைக்கு நடக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைச் செலவு சாமான் வாங்க அவர்கள் வந்திருக்கையில் அப்பன் பச்சையை வைத்தியரிடம் அழைத்து சென்றிருக்கிறார். 

“என்ன புள்ள மார்க்கட்டா?” என்ற குரல் கேட்டுச் சிலிர்த்துக் கொண்டு அவள் திரும்பிப் பார்க்கிறாள். 

சைக்கிளில் ராமசாமி! தலையில் சுற்றிய துண்டை மீறி முடிக்கற்றை வழிய, ஒரு நீல சட்டையும் அணிந்து. ராமசாமி நிற்கிறான். அவன் கண்கள் சிவந்திருக்கின்றன. இரவு தூக்கமில்லை என்று அவன் முகம் பறையடிக்கிறது. 

பொன்னாச்சிக்கு முகம் மலர்ந்தாலும் ஒரு கணத்தில் ஊசி பட்டாற் போல் குவிந்து விடுகிறது. பதிலேதும் பேசாமல் அவள் திரும்பி நடக்கிறாள், “இந்த ஆளை இப்ப யார் வரச் சொன்னது?” என்ற கோபம் அவளுள் துருத்திக் கொண்டு எழும்புகிறது.

சந்தைக் கும்பலில் அவள் புகுந்து நடக்கிறாள். 

அவன் அவளுடைய புள்ளிச் சேலையைக் குறியாக்கிக் காண்டு அதே சைக்கிளுடன் தொடர்ந்து செல்கிறான். பக்கத்தில் இடிப்பது போல நெருங்கி, ‘ஏத்தா கோவமா?” யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில் வினவுகிறான்.  

கொட்டைப் புளி சவளம் சவளமாகத் தட்டில் மலர்ந் திருக்கிறது. 

“எப்படிக் குடுக்கிறிய?” 

“மூணு ரூவா.” 

“அம்புட்டுப் புளியுமா? என்னாயா, வெல சொல்லிக் குடு?” என்று அங்கிருந்து ராமசாமி ‘ஆசியம்’ பேசுகிறான். 

அவளுக்கு ஓர்புறம் இனிக்கிறது; ஓர்புறம்…ஓர்புறம்.

ஐயோ! இவர் ஏன் நேற்று வரவில்லை? 

பொன்னாச்சி புளியைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். பிறகு புளி நன்றாக இல்லை என்று தீர்மானித்தாற் போன்று விடுவிடென்று மிளகாய்க் கடைக்குச் செல்கிறாள். கடைக் காரனான முதியவன், “ஏத்தே! வெல கேட்டுட்டுப் போறியே; ரெண்டே முக்கால் எடுத்துக்க! புளி ஒருக் கொட்ட சொத்து ஒண்ணு கிடையாது!” 

அவள் செவிகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை. மிளகாய்க் கடையையும் தாண்டிப் போகிறாள்; சரசி, “அக்கா வளவி, வளவி வாங்கணும் அக்கா!” என்று கூவுகிறாள். 

“வளவிக் கடை கோடியில இருக்கு. அங்க வா போவலாம்!” என்று பாஞ்சாலி ஓடுகிறாள். சரசியும் ஓடுகிறது. 

“ஏவுட்டி, ஏனிப்படி ஓடுறிய? வளவி கடாசில தா என்று தடுத்து நிறுத்தப் பார்க்கிறாள். நல்ல கண் வோ,சீனி மிட்டாய்க்காக மெல்லிய குரலில் இராகம் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் இன்னும் தோளோடு உராயும் அண்மையில் வந்து அரிசிக் கடையில் நிற்கிறான். 

“இப்ப ஏன் பின்னாடியே வாரிய? தொணயிருப்பேன்னு சொல்லிட்டு வராம இருந்துட்டிய. பாவி குடிச்சிட்டு வந்து.. தேரிக்காட்டுல கொலச்சிட்டுப் போயிட்டா. இனி யாரும் யார் பின்னயும் வராண்டா…” 

அந்த மெல்லிய குரலில் வந்த சொற்கள் சந்தை இரைச்சலின் எல்லா ஒலிகளோடும் கலந்துதான் அவன் செவி கனில் புகுகின்றன. ஆனால் அது எல்லா இரைச்சலுக்கும் மேலான பேரிரைச்சலாக அவனது செவிப்பறைகளைத் தாக்கி அவனை அதிரச் செய்கிறது. 

அவன்.. அவன் மேட்டுக்குடி அளத்தில் சுமை தூக்கு கையில் முதுகெலும்பு அழுந்த நொடித்து விழுந்து ஒருவர் இறந்துவிட்டதாகச் செய்தி வந்ததைக் கேட்டு மாலையில் விரைந்து சென்று விட்டான். இருபது ஆண்டுகளாக அங்கே வேலை செய்யும் அந்த மனிதன் அளத் தொழிலாளி அல்ல என்று விசாரணையில் கூறப்பட்டு விட்டதைக் கேள்விப்பட்டு அவன் அங்கு சென்றான். தனபாண்டியன், அங்குசாமி போன்ற பல தொழிலாளர் சங்கத் தலைவர்களைப் பார்த்து விவரங்களை இப்போதும் அதற்காகவே அவன் தன பாண்டியன் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறான். 

“இனி யாரும் பின்ன வராண்ட. வரத் தேவையில்ல. தேவையில்ல….” என்றல்லவா சொன்னாள்! 

அவன் அதிர்ச்சியினின்றும் விடுபடுமுன் அவள் அந்தப் பக்கத்தைக் கடந்து வேறு பக்கம் சென்று விடுகிறாள். 

சந்தை இரைச்சல்… வாங்குபவர் யார், விற்பவர் யார்” என்று புரிந்து கொள்ள முடியாத இரைச்சல். சிறியவர், பெரியவர், ஆடவர், பெண்டிர், கிராமம், பட்டினம், நாய், மாடு, சகதி, அழுகல், ஈக்கள் யாருமே எதுவுமே அவன் கண் களிலும் கருத்திலும் நிலைக்கவில்லை. 

பாவி குடிச்சிட்டு வந்து…பாவி குடிச்சிட்டு வந்து… நாச்சப்பனா? 

நரம்புகள் புடைக்கின்றன. 

“உங்கள் உழைப்பை எல்லாம் அந்தக் காரில் வரும் முதலாளிக்குக் கொடுக்கிறீர்கள். பிள்ளை பெறுவரையிலும் உழைக்கிறீர்கள்” என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் விழிக்கவே அஞ்சும் இந்தப் பெண்கள்… 

முதல்நாள் அந்தப் பெண்ணிடம் அந்தக் கணக்குப் பிள்ளை – மாண்டு மடிந்தவனின் மனைவியிடம், அம்முதலாளித் தெய்வத்தின் பூசாரியான கணக்கப்பிள்ளை, ‘இறந்த என் புருசன் அந்த அளத்தில் வேலை செய்யும் தொழிலாளியல்ல! என்று எழுதிக் கொடுத்து அதன் கீழ் அவளைக் கையெழுத்துப் போடச் செய்திருக்கிறான். அதற்குக் கூலி அவனது ஈமச்செலவுக்கான நூறுரூபாய். அவன் அளத் தொழிலாளியானால் நட்டஈடு என்று தொழிற்சங்கக்காரர்கள் தூண்டிவிடுவார்கள் என்று முன்னெச்சரிக்கையாகக் கையெழுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர். 

“மக்கா, ஊருல ஒன்ணொண்ணு பேசிக்கிறாவ… நீ எதுக்கும் போவாண்டா. அளத்துல டிகிரி வேலை, மாசச் சம்பளம் எல்லாமிருக்கு. இங்க வூடுமிருக்கு, நீ ஆரு சோலிக்கும் போவண்டா. என் ராசா என்று பேதமையுடன் கெஞ்சும் தாயை நினைத்து இரங்குகிறான். தான் சந்தைக்கு எதற்கு வந்தானென்று புரியாமல் சுற்றி வருகிறான். நினைக்கவே நெஞ்சு பொறுக்கவில்லை. வெய்யோன் 
என்னாட்சிதானென்று தனது வெங்கிரணங்களால் தென்பட்ட இடங்களில் எல்லாம் ஈரத்தை உறிஞ்சுகிறான். சந்தையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரங்களில் குழுமுபவர் கள் முக்காலும் உப்பளத் தொழிலாளர்தாம். இவர்கள் சூரியன் மேற்கே சாய்ந்தால் வெளிக்கிளம்பமாட்டார்கள். ஆணானாலும் பெண்ணானாலும் நேர்ப்பார்வை பார்க்க மாட்டார்கள். கீழ்ப்பார்வை, அல்லது சரித்துக் கொண்டு பார்க்கும் கோணல் பார்வையால் தான் உலகைக்காண வேண்டும். முடியில் உப்புக் காரம் ஏறி ஏறிக் கருமையும் கனமும் தேய்ந்து நைந்துவிட, முப்பது முப்பத்தைந்துப் பருவத்திலேயே முடி பதம் பண்ணிய தேங்காய்ப் பஞ்சு போலாகிவிடுகிறது. 

பஸ் நிறுத்தத்தில் ஒரு கங்காணியும் ஏழெட்டுத் தொழி லாளரும் நிற்கின்றனர். வாய் திறக்காமல் பெண்கள் நடை யாதையில் குந்திக் கிடக்கின்றனர். புருசன் வீடு, குழந்தைகள் என்ற மென்மையான தொடர்புகளை எல்லாம் துண்டித்துக் கொண்டு இந்த நடைபாதையில் சுருண்டு கிடக்கின்றனர். எப்போது சாப்பாடோ, குளியலோ, தூக்கமோ? லாரிக்காகக் காத்திருப்பார்கள். லாரி எப்போது வந்தாலும் சுறுசுறுப்புடன் சென்று பசி எரிச்சலானாலும் உழைக்கவேண்டும். அப்போது காசு கிடைக்கும். காசைக் கண்டபின் அந்தத் துண்டிக்கப் பட்ட பாச இழைகள் உயிர்ப்புடன் இயங்கத் தொடங்கும். 

“புள்ளக்கிக் காயலாவாயிருக்கு கொஞ்ச நேரம் முன்ன போகணும்” என்றால் நடக்குமா? இல்லை என்றால் வேலை இல்லை. கெஞ்சலுக்கெல்லாம் இங்கே இளகும் நெஞ்சங்கள் கிடையாயாது. 

“பாத்திக் காட்டில் ஆம்பிளயக் காட்டிலும் கால் தேய நீங்கள் பெட்டி சுமக்கிறிய. ஆனா ஒங்களுக்கு ஆம்பிளக் கூலி கிடையாது. நினைச்சிப் பாருங்க. ஒங்களுக்கு எத்தனை கஷ்டமிருக்கு? நீங்கல்லாம் கூடிச்சங்கத்திலே ஒரு குரலா முடிவெடுத்து ஏன் எதிர்க்கக் கூடாது” என்று அவன் அன்னக்கிளி, பேரியாச்சி எல்லோரிடமும் வாசலில் குந்தியிருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் பேசுவான். 

சங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே மருண்டு போவார்கள். 

“சங்கமின்னு காரூவா பிரிச்சிட்டுப் பிரிச்சிட்டுப் போவா. தாண்ணும் வராது, சங்கந்தா ஒப்பனக் கொன்னிச்சி…” என்று பேரியாச்சி அவன்  தாய்க்கு ஒத்துப்பாடுவாள். 

“சங்கம் சேந்து போராடினால், சம கூலி மட்டுமில்லை, பேறு கால வசதி, ஆசுபத்திரி மருத்துவ வசதி, பிள்ளைப் பால், படிக்க வசதி, நல்ல சாப்பாடு, ஓய்வுகாலப் பென்சன், குடியிருக்க வசதியான வீடு, சம்பளத்துடன் லீவு…’ என்று அவன் அடுக்கினால் அவர்கள் சிரிப்பார்கள். “வெடலப் புள்ள, அகராதியாப் பேசுதா…” என்பார்கள். 

பேரியாச்சிக்குக் காலில் ரணம் காய்ந்த நாளேயில்லை. 

“ஆச்சி, செருப்புப் போட்டுக்கிட்டு பாத்தில நின்று கொத்திவிட்டா என்ன?” என்று அவன் அவள் வாயைக்  கிளறுவான். 

“சீதேவிய, சீதேவிய செருப்பப் போட்டு மிதிக்கவா?” என்பாள். 

“அப்ப மண்ணுகூடச் சீதேவி தா. அதுலதா வுழறோம். எச்சித் துப்பறோம், அசிங்கம் பண்றோம். அதெல்லா செய்யக் கூடாதா?” 

“போலே… கச்சி பேசாம போ!” என்பாள். 

பொன்னாச்சி.. பொன்னாச்சி! நீ வித்தியாசமான பெண் என்று அவன் நினைத்திருந்தானே?… உன்னை…அந்தப் பேய்… நாச்சப்பன். 

நெற்றியிலிருந்து வேரித்து வடிகிறது. தந்தியாபீசு முனையில் சுப்பையா அவனைத் தடுத்தாட் கொள்கிறான். 

“ராமசாமி, ஒன்னத் தேடிட்டுத் தாம்பா வந்தே சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்மவீட்டில கூடுறோம். தெரியுமில்ல?” 

“அது சரி பொண்டுவள்ளாம் வாராவளா கூட்டத்துக்கு?” 

சுப்பையா விழித்துப் பார்க்கிறான். 

“பொண்டுவளா? எதுக்கு?” 

“எதுக்குன்னா, பேசத்தான்! அவங்க பிரச்சினையும் இருக்கு பாரு?” 

“அது சரிதா…. அவளுவ வந்து என்ன பேசுவா? ஞாயித்துக்கிளம, தண்ணி தவிசு கொண்டார, துணி துவைக்க, புள்ள குளிப்பாட்ட, எண்ண தேச்சி முழுவ இதுக்கே நேரம் பத்தாதே? அதுமிதும் போச்சின்னா பாதி பேரு சினிமாக் கொட்டாயிக்குப் போயிடுவா? பொண்டு வள்ளாம் வரமாட்டா…” 

“இல்ல அண்ணாச்சி. நாம என்ன செஞ்சாலும் பொண்டுவளச் சேக்கலேன்னா புண்ணியமில்ல. நாம் கண்ணுக்கு பாதுகாப்பு வேணும், மேஜோடு குடுக்கணும். ஒருநா வாரத்தில் சம்பளத்து லீவு. பிறகு ஒன்பது நாள் விசேச லீவு. போனசு, வருசம் தொழில் பாது காப்பு. இதெல்லாம் கேட்டா மட்டும் பத்தாது. பாத்திக் காட்டில் வேலை செய்யும் தாய்மார். தங்கச்சிய, இன்னிக்கு எந்தவிதமான பத்திரமும் இல்லாம இருக்காங்க. புரு மாரா இருக்கிறவங்களுக்கும் அவங்களுக்குப் பாதுகாப்பா இல்ல. அண்ணன் தம்பியும் பாதுகாப்பு இல்ல. கோழிக் குஞ்சைக்கூடத் தாய்க் கோழி சிறகை விரிச்சி மூடிப் பருந் திட்ட இருந்து காப்பாத்துது. நம்ம மனுச இனத்தில் நம்ம பொண்டுவ, கழுகும் பருந்துமாக இருக்கும் மனிசங்க கிட்ட தப்ப முடியாம தவிக்கிறாங்க. இதுக்கு நாம வழி செய்யண்டாமா? நமக்கு மானம் இருக்கா? நீங்க சொல் லுங்க அண்ணாச்சி, நாம தமிளன் மானம், இந்தியன் மானம்னு அளவாப் பேசுதோம்! பொண்டுவளக் கூட்டாம சங்கக் கூட்டமில்ல….அவங்களைக் கூப்பிடனும், அவங்களுக்கு நாமதா தயிரியம் சொல்லணும்…” 

இந்தப் புதிய வேகத்தின் ஊற்றுக் கண் எப்போ பிறந்ததென்று புரியாமலே சுப்பையா பார்த்துக் கொண்டிருக்கிறான். 

ராமசாமி வெறும் பேச்சாகப் பேசவில்லை. 

அவனுடைய மூலாதாரத்திலிருந்து புறப்பட்டதோர் எழுச்சியாகவே அந்தக் குரல் ஒலிக்கிறது. 

அத்தியாயம்-11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணி களாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றி லிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான். 

சரேலென்று, “அப்பச்சி! தங்கபாண்டி வண்டி கொண் டாரா?” என்று கூவுகிறான். தங்கபாண்டி வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால் அப்பச்சியிடம் காசு புரளும் என்று அவளுக்குத் தெரியும். 

டகடக வென்று ஓசை கேட்கிறது. பசுமஞ்சளாய்க் குழியில் தேங்கியிருக்கும் நஞ்சோடை நீரில் சக்கரம் இறங்க, அவன் மாடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறான்.

கன்னங்கரேலென்ற வெற்றுமேனியில் வேர்வை வழிகிறது. குட்டையாக இருந்தாலும் களை பான முகம், சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து சொந்த வண்டி மாடு வாங்கிவிட்டான். துரும்பைப் பல்லில் கடித்துக்கொண்டு.

“எத்தினி மூடையிருக்கு மாமா?” என்று கேட்கிறாள்,

“நீ வெல சொல்லுலே?” 

“என்ன மாமா, புதுசா வெல கேக்குறிய?…ஆச்சி?  மூடை போடலாமா?” 

இவன் சாக்குகளைக் கீழே போடுகிறான். 

அருணாசலம் பாத்தியை விட்டு மேலே வந்து அவன் உப்பில் கைவைக்காத வண்ணம் மறிக்கிறார். 

“லே, வெல முடிவு செய்யாம உப்புல கைவைக்காத” அவன் பளீரென்று பற்கள் தெரியக் கலகலவென்று சிரிக்கிறான். 

“சரி மாமா. வெல சொல்லும். உமக்கு இல்லாத வெலயா? நீரு கேக்றதக் குடுத்தாப் போச்சி?” 

“ஏலே சக்கரயாப் பேசிட்டாப்பல ஆச்சா? தாண்டிட்டா அத லாரி நிக்கிது.நீ அவுங்க மூடைக்கு, என்ன வாங்குவியோ. அதல அரை ரூவா கொறச்சிக்க…” 

“சரி மாமா, ஒம்ம பொன்னான கையால போடும்…” அவன் சாக்கை விரித்துப் பிடிக்கிறான். 

“ஏன்லே, நான் சொல்லிட்டே இருக்கிறே, நீ சிரிக்கிறே?” 

“என்ன மாமா, நீங்க எவ்வளவு வேணுமின்னு சொல்லுங்க. மூடைக்கு அஞ்சு ரூவா தார…” 

“இந்தப் பேச்செல்லாம் வேண்டா. மூடை ரெண்டரை ரூவா, காசைக் கீழ வச்சிட்டு மூடை போட்டுக்க…” 

தங்கபாண்டி. “சரி மூடை ரெண்டரை” என்று மடி யைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு எடுக்கிறான். 

“வச்சிக்கும் அடுவான்ஸ்…” 

பன்னிரண்டு மூடைகள் இருக்கின்றன. அவனே மூட்டையினைப் பற்றி ஏற்றுகிறான். வண்டி கடகட வென்று ஆடிச் சரிந்து கொண்டு மெல்லப் பாதையில் செல்கிறது. 

ஒவ்வொரு முறையும் இதுபோல்தான் அவரும் பேசு வார். அவனும் நைச்சியமாக விட்டுக் கொடுக்காமலே இழுத்தடிப்பான். 

பத்து ரூபாய் வந்த மாதிரி மீதிப்பணம் வராது. 

அவரும் கேட்டுக் கேட்டு அதிகப்படியே வாங்கிக் கொண்டு உப்புக்கு வகை வைப்பார்! 

அவர் ஆச்சி மண் குடத்தில் வைத்திருக்கும் நல்ல நீரைச் சரித்துக் குடிக்கிறார். 

“என்ன இப்பப் போய் தண்ணி குடிக்கிறிய? சோறு காண்டாந்திருக்கேனே வேணாவா?” 

“தண்ணி குடிக்கிறதுக்குகூட ஏன் காருவாரு?” 

“ஏலே. வால….”  என்று குமரனையும் அழைத்துக் கொண்டு ஆச்சி சாப்பாட்டுக்குத் தயாராகிறாள். 

சிறு பனஓலைச் சார்பில் அவர்கள் அமருகின்றனர். மூடி வைத்திருக்கும் களியையும் துவையலையும் வாழை யிலைச் சருகில் எடுத்து வைக்கிறாள். 

“முனிசீப்பு வீட்டில் ஆச்சி நெல்லு வேவிக்கணுமின் னாவ, நாளக்கி வாரமின்ன… “

அவர் களியை எடுத்து முகர்த்து பார்க்கிறார். தண்ணி நல்லாக் காஞ்சுப் போட்டுக் கிண்டலியா? வேத்தும் போச்சு. சளிச்ச வாடை வருது. 

“வீட்ட ஒரு தண்ணிகாச்ச நாதியில்ல. பொன் னாச்சிய நா அனுப்பிச்சே குடுத்திருக்க மாட்டே. புருசன் இப்ப சாவக்கெடக்கான்னு பொய் சொல்லி, அளத்துக்கு விட்டுச் சம்பாதிக்கக் கூட்டி போயிருக்கா….” 

அவருக்குக் கோபம் வருகிறது. 

“பேச்சை ஏன் மாத்துறே? களி வாயில் வைக்க வழங்கல? நீ ஒரு சோறு ஒழுங்காக ஆக்குறதில்ல. பேச்சு… பேச்சுதா!” 

“நா கேட்டதுக்குப் பதிலே சொல்ல மாட்டிய! தூத் தூடிக்குப் போய் வந்திய. எம்புட்டுச் செலவாச்சி…. எதா னாலும் இப்ப அந்தத் துட்டை எங்கிட்டக் குடுத்திடணும். வள்ளிப் பொண்ணுக்கு ஸ்கூலுக்குப் போட்டுப் போசு வெள்ள சட்ட இல்லேங்கா…” 

அவர் பேசவில்லை. பொன்னாச்சி வீட்டை விட்டுச் சென்ற பிறகு சோறும்கூட அவருக்கு வகையாகக் கிடைக்க வில்லை. அவளும் தம்பியும் அவருக்குப் பாரமாகவா இருந் தார்கள். பச்சை நாள் முழுதும் துலாவில் நீரிறைத்துப் பாய்ச்சுவான். பொரிகடலை வாங்கிக்கொள்ள என்று பத்து பைசா துட்டுக் கொடுத்தால் வாயெல்லாம் பல்லாக நிற்பான். இரண்டு பேரும் அன்று யாருக்கோ உப்புச் சுமந்து கொட்டி விட்டு வருவதை அவர் பார்த்து விட்டு வந்திருக்கிறார். அவளை இங்கு மறுபடியும் வேலை செய்யக் கூட்டி வரக்கூடாது. ஆனால், அவளுக்குக் கல்யாணம் என்று ஒரு வளமையைச் செய்ய அழைத்துவர வேண்டும். கல்யாணம் என்ற நினைவுடன் தங்கபாண்டி யின் முகம்தான் உடனே தோன்றுகிறது. அவர் கண்முன் முன்னுக்கு வந்திருக்கிறான். அப்பன் அம்மை யாரு மில்லை. ஒரு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனும் உப்பு வாணிபம்தான் செய்கிறான். இந்தப் பையனுக்கும் பொன் னாச்சியின் மீது ஆசை இருக்கிறது. அவளுக்கென்ற துண்டு முக்கால் ஏக்கரை ஒதுக்கினால் பாடுபட்டுக் கொள்வார்கள். செவந்திப் பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை அவர் பத்திரமாக வைத்திருக்கிறார். ஒரு சேலை துணி வாங்கி, செந்தூர் முருகன் சந்நிதியில் அவளை மண முடித்துக் கொடுத்துவிட வேண்டும். 

“…”

“என்ன, நாங்கேக்கேன். பேசாம இருக்கிய… எனக்கு வீட்டில எண்ணெயில்ல, புளி இல்ல…” என்று மனைவி கை கழுவி விட்டு அவர் மடியைப் பிடித்துப் பார்க்கிறாள். 

அவர் இடது கையால் அழுந்திப் பிடித்துக் கொண்டு அவளை அண்டவிடாமல் ஒதுக்குகிறார். 

“கவுறு வாங்கணும். கிணறு வாராம அடுத்து உப்பு எடுக்கறதுக்கில்ல. நீ வம்பு பண்ணாத இப்ப!” 

“இந்த மாசம் எனக்கு இருவதுரூபா குடுத்திருக்கிய நா என்னேய! இப்ப அந்தக் காச எனக்குத் தரணும்…”

“மாத்தித்தாரன்…” 

“அப்பச்சி, எனக்குக் காசு வேணும்…” என்று குமரன் முன்னேற்பாடாகக் கேட்டு வைத்திருக்கிறான். 

“எங்கிட்டதா ஒங்க காருவாரெல்லா. பொன்னாச் சியயும் பயலையும் கூட்டிட்டுவாரன்னு போனிய, உப்ப ளத்து வேலைக்கிப் போறான்னு சொல்லிட்டு வந்திருக்கிக் லய இங்க பக்கத்துல புள்ளயோடு புள்ளயா வேலக்கிப் போவட்டும்னு நாஞ்சொன்னா இடிக்க வந்திய. அதுக் குத்தா நாலு காசு கையிலிருக்கும். ஒரு சில ஜாக்கெட் என்னேனும் எடுக்கலான்னு சொன்ன. அப்ப ஏங்கிட்டப் பேசுளதொண்ணு. இப்ப ஊருல என்ன சொல்றா? அந்த வுள்ளக்கி சோறு கூடப்போடல, அப்பங்கிட்ட வெரட் டிட்டான்னு சொல்றா! என் தலயெளுத்து…” 

மூசு மூசென்று அழத் தொடங்கியவளாக அவள் பானையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்க்க நடக்கிறாள். 

அவருக்கு இது பலவீனமான பகுதி. உண்மையில் ன்று அவர்களை அழைத்து வரவேண்டும் என்றுதான் சென்றார். ஆனால், பொன்னாச்சி அங்கிருந்து வர வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இங்கே மனைவி அவளை எப்போதும் பிடுங்கிக் கொண்டிருந் தாள். தன் கண் முன் இன்னொரு பாத்திக்காட்டுக்கு அவளை அனுப்ப அவர் மனம் துணியவில்லை. பிறகு அந்தக் காசும் அவள் கையில் தங்காது. இப்போது… எங்கேனும் வட்டிக் கடனேனும் வாங்கி தங்கபாண்டிக்கு அவளை மண முடித்து விடவேண்டும். 

வீட்டுக்கு வந்ததும் பத்துரூபாய் நோட்டை மாற்றி வந்து அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுக்கிறார். குஞ்சரி கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறது. உள்ளே வந்து சட்டையை ஆணியில் இருந்து எடுக்கையில் கீழே கட்டம் போட்ட தொங்குபை வீற்றிருக்கிறது. “வேலு வந்திருக்கிறானா? – எப்ப வந்தா?” 

“அண்ணன் வந்திட்டா அப்பவே…” 

“பரீட்சை நல்லா எழுதியிருக்கிறனாமா? எங்க போயிட்டாரு துரை?” எதுவும் பதில் வரவில்லை. 

அவருக்குக் கோபமாக வருகிறது; பெரிய துரை போல் செருப்பு, சட்டை! அவன் முடியும், காலில் போட் டுக் கொள்ளும் யானைக் குழாயும்! 

தீர்வையை நினைவுறுத்தி வந்த கடிதத்தை அன்று பெட்டிக்குள் வைத்துவிட்டுப் போனார். மேலே பலகையில் இருந்து அதை அவர் எடுக்கிறார்.  பழைய தகரப் பெட்டி, அதில்தான் அவருடைய கூட்டுறவுச் சங்கக் காகிதங்கள், பத்திரம், வேலுவின் கல்லூரிப் படிப்பு உதவிச் சம்பளக் காகிதங்கள் எல்லாம் இருக்கின்றன. 

அதைத் திறக்கும் போதெல்லாம் ஒரு கோடித் துணியில் முடிப்புக் கட்டி வைத்திருக்கும் செவந்திப் பெண்ணின் அரைப் பவுன் தாலியைப் பார்க்காமலிருக்க மாட்டார். இன்னும் பழக்கத்தில் அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கையில் பகீரென்றது, துணி அவிழ்ந்து கிடக்கிறது. அது….அது எங்கும் இல்லை. அவர் உதடுகள் துடிக்கின்றன. நெற்றி நரம்புகள் புடைக்கின்றன. 

“ஏளா?…பொட்டிய ஆரு திறந்தது? பொட்டிய ஆரு திறந்ததுன்னே?…” 

அவர் குரலில் கனல் கொப்புளித்துச் சீறுகிறது. அந்தச் சீறலுக்கு எதிரொலி இல்லை. இது அவர் சிற்றத்தை இது ஆரு வேல? ஆரு இன்னும் வீச்சாகக் கக்குகிறது. பொட்டிய திறந்திய?” 

பின்னே வந்து பானை கழுவும் மனைவியின் முடியைப் பற்றுகிறார். 

”விடும்…! ஏனிப்பக் கூப்பாடு போடுறிய? முடியப் புடிக்கிறிய?” அவளுக்கும் நெற்றிக்கண் இருக்கிறதென்று காட்டுகிறாள். 

“ஒமக்குக் கண்ணுமண்ணு தெரியாது! பொட்டிய நாத்தா தொறந்தே! என்ன பண்ணச் சொல்றிய?” 

அவருக்கு உதடுகள் துடிக்கின்றன. என்ன செய்வதென்று தெரியத்தானில்லை. 

“மூதி, எந்தங்கச்சி பிள்ளைய வெரட்டி அடிச்சது நீதா. அவ… அவ நகை நட்டெல்லாம் வித்துப்போட்டே, ஒரு அரைப் பவன் சொத்து, அதைவச்சிருந்தே, மங்கிலியம். அதை எங்கே கொண்டு போட்டிய அம்மையும் மவனுமா?”” 

“எங்கும் கொண்டுப் போடல. நீரு பாட்டுல காத்துட்டு இல்லாம பொறப்பட்டுப் போட்டிய. அவ இந்தச்சணம் சின்னாச்சியோட போவேன்னு குதிக்கா. முக்காத்துட்டு இல்ல. கடன் வாங்கற பக்கமெல்லாம் கடன். முன்சீப் வீட்டு ஆச்சியும் இல்ல. இப்ப வாணாட்டி, மாமா வரட்டும்னா கேட்டாளா? அவளேதா, எங்கம்மா சொத்துதான, கோயில் காரர் வீட்ட வச்சி இருவத்தஞ்சு ரூவா வாங்கித்தாரும்னா. வாங்கினே. என்ன வேணா அடிச்சிக் கொல்லும்!” 

அருணாசலம் தன் தலையில் அறைந்து கொண்டு வெளியே வருகிறார். 

அத்தியாயம்-12

செவந்தியாபுரம் தொழிலாளர் குடிகள், முப்பதாண்டு களுக்கு முன்னர், ‘பனஞ்சோலை அளம்’ என்று இந்நாள் திக்கெட்டுமாக விரிந்து கரிப்புமணிகளை விளைவிக்கும் சாம்ராஜ்யமாவதற்கு முன்பே உருவானவை. பெரிய முதலாளி வாலிபமாக இருந்த காலத்தில் சிறு அளக்காரராக அங்கு தொழில் செய்யப் புகுந்தபோது, முதன்முதலில் குடிசை கட்டிக் கொண்டு அங்கு குடியேறிய சின்னானின் குடும்பமும், அவனை ஒட்டிக் கொண்டு அங்கு பிழைக்க வந்தவர்களும் தாம் அந்தக் குடிசைகளுக்கு இன்றும் உரியவர் களாக இருக்கின்றனர். கிணற்றிலிருந்து மனிதன் நீரிறைத்த நாள் போய் இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் உப்பளங்கள் பெருக, மலைமலையாக வெண்ணிறக் குவைகள் கடற்கரைகளை அலங்கரிக்கலாயின. பெரிய முதலாளியின் கடைசி மகன், மருத்துவம் படிக்கையில் லில்லியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பிறகுதான் துரை அளம் என்ற சிறுதுண்டு தனியாகப் பிரிந்து. ஏஜெண்ட் காத்தமுத்து வின் ஆளுகைக்குள் வந்தது. டாக்டர் முதலாளிக்கு இந்த அளத்தைப்பற்றி லட்சியம் ஏதும் கிடையாது. நூறு ஏக்கர் பரப்பில் வேலை செய்யும் ஐம்பது தொழிலாளிகளுக்கும் மாசம் சம்பளம் என்று அறுபது ரூபாயும், நாளொன்றுக்கு அரைகிலோ அரிசியும் வழங்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். தட்டுமேட்டில் உப்புக்குவைகளுக்குப் போட்ட கீற்றுக்கள் செப்பனிடக் கிடைக்கும். இவர்களுடைய குடில்களுக்குச் சீக்கு பிள்ளைப் பேறென்றால் துரையின் ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை கிடைக்கும். சொல்லப்போனால் டாக்டர் முதலாளி இந்தப் பக்கமே வந்ததில்லை. ஏஜண்ட் காத்தமுத்துவின் அதிகாரத்தில் தான் அங்கே நிர்வாகம் நடந்தது. துரையின் மாமியார் டெய்சி அம்மாள் அங்கு மாதம் ஓர் முறை சாமியாரைக் கூட்டிக் கொண்டு வருவாள். ஜபக்கூடம் ஒன்று மூலையில் உருவாக்குவதற்கான திட்டம் போட்டிருந்தார்கள். 

ராமசாமி அந்தநாள் தந்தை அங்கே வேலை செய்ய வந்த காலத்திலிருந்து இருந்த குடிசையில்தான் தாயுடன் வசிக் கிறான். அன்னக்கிளி, மாரியம்மா, மாசாணம் ஆகியோரும் அளம் பிரிந்த பின் அங்கே வேலை செய்யப் போனாலும் இந்தக் குடில்களிலிருந்தே செல்கின்றனர். ராமசாமி தொழி லாளரிடையே புதிய விழிப்பைக் கொண்டுவர சங்கம் இயக்கம் என்று ஈடுபடுவதைக் காத்தமுத்து அறிந்தான். அவன் தந்தையின் வரலாறு எல்லோருக்கும் தெரியும். 

அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் காலையில் கிளம்பு முன் ஏஜண்டின் நீலக்கார் உள்ளே வருவதைப் பார்க்கிறான். சற்றைக்கெல்லாம் முனியண்ணன் மகன் ஓடிவந்து, ”அண்ணாச்சி,ஒங்களை ஏஜண்ட் ஐயா கூப்பிடுதாவ…! என்று அறிவிக்கிறான். ஏஜண்ட் காத்தமுத்து ஒரு மாமிச பர்வதம்போல் உப்பியிருக்கிறான். பெரிய புஸ்தி மீசை கன்னங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தங்கப் பட்டை கடியாரம்; விரல்களில் பெரிய பெரிய மோதிரங்கள்… 

“கூப்பிட்டீங்களா,. சார்?” 

“ஆமாலே. ஒன்னப் பாக்கவே முடியறதில்ல. வூட்டக் காலி பண்ணணும், அந்த எடம் வேண்டியிருக்கு. டாக்டரம்மா போனமாசமே சொன்னாவ…” 

ராமசாமி திகைத்துப் போகிறான். 

“எல்லாரும் காலி பண்ணணுமா?” 

“ஜபக்கூடம் கட்டணுமின்னு பிளான் போட்டிருக்காவா நீ இந்த அளத்துக்காரனில்ல. இந்த அளத்துக்காரவுக கொஞ்சந்தா, வேற எடம் ஒதுக்குவாக. ஏதோ அந்த. நாள்ளேந்து இருந்திய, ஒண்ணும் சொல்லாம இருந்தம்… இப்ப எடம் தேவைப்படுது.” 

“இப்ப திடீர்னு காலி பண்ணனுன்னா எங்கே போவ? எடம் பார்க்கணுமில்ல? கொஞ்சம் டயம் குடுங்க…” 

“ஒன்ன ஆளக்காணவே முடியல சங்கம். அது இதுண்ணு போயிடற, மின்ன சொல்லலன்னா ஏந்தப்பா? ஒருவாரம் டயம்தார. காலிபண்ணிப்போடு!” 

ஏஜண்ட் கூறி ஒருவாரத்துக்கு மேலாகிவிட்டது. அவன் வேறு இடம் பார்க்க முனையவில்லை. தொழிற் சங்க ஈடுபாடு அதிகமாக, பல பிரச்னைகளிலும் தலைக் கொடுத்துக் கொண்டிருந்தான். பகல் நேரங்களில் பொன்னாச்சியையும் தம்பியையும் பார்க்கும்போது மனசு துடிக்கும். மாலையில் அவர்கள் வீடுதிரும்புவதையும் அவனால் கண்காணிக்காமல் இருக்கமுடியவில்லை. நாச்சப்பனைப் பார்க்குந்தோறும் அவன் உள்ளத்தில் வெறுப்பு குமைய மீசை துடிக்கும். 

உப்பளத்து ஈரங்களை வற்றச் செய்யும் காற்று அந்த மக்களின் செவிகளிலும் சில பல சொற்களைப். பரப்புகின்றன. 

பனஞ்சோலை அளமும், துரை அளமும் ஒவ்வோர் வகையில் அந்தச் சொற்களை, செய்திகளை உள்ளே அநு மதிக்காத கற்கோட்டைகளாக இருக்கலாம். அந்தக் கற் கோட்டைகள், பஞ்சைத் தொழிலாளரின் அத்தியாவசியத் தேவைகளையும், இவர்களுடைய அட்வான்சு, சிலை போனசு, என்பன போன்ற வண்மைப் பூச்சையும் குழைத்துக் கட்டியவை. இந்தச் சாந்துதான் இங்கே பலமாக நிற்கிறது. 

ஏனைய அளங்களில் வறுமைத் தேவையுடன் கூலிக் காசு என்ற வெறும் நீரைச் சேர்த்து எழுப்பும் மதில்கள் இடைவிடாத அரிப்புக்கு அரிப்புக்கு இடம் கொடுக்கின்றன. அவ்வப்போது வேலை நிறுத்தம். தடியடி பூசல் அங்கெல் லாம் நிகழ்ந்தாலும் இங்கு அவை எட்டிப் பார்ப்ப தில்லை. நிர்ணயக்கூலி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமில்லை என்றாலும் ஓரளவு அங்கெல்லாம் நிர்ணயக்கூலி நடைமுறைக்கு வந்திருக்கிறது. இங்கோ முதலாளி கணக்கில் நாள் கணக்கு நிர்ணயக்கூலி, மாசச் சம்பளம் என்று பெறுவர் சொற்பமானவர். பெரும்பாலான தொழிலாளர், காண்ட்ராக்ட் என்ற முறையில் நிர்ணயக் கூலிக்கும் குறைவான கூலிக்கு அடிமைப்படுத்தப் பெற்றிருக்கின்றனர். 

“பனஞ்சோலை அளத் தொழிலாளரே! ஒன்று சேருங்கள்! எட்டுமணி நேர வேலைக் கேற்ற ஊதியம்… பதிவுபெறும் உரிமை. வாராந்தர ஓப்வுநாளைய ஊதியம் இவை அனைத்தும் உங்கள் உரிமை! தாய்மார்களே! உங்கள் சக்தியைச் சிதற விடாதீர்கள்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி…” என்பன போன்ற வாசகங்கள் அச்சிடப் பெற்ற துண்டுப் பிரசுரங் கள் எங்கிருந்து பிறந்தது எப்படி வந்ததென்று புலப் படாமல் தொழிலாளரின் உள்ளுணர்வைச் சீண்டி விடுகின்றன. 

ஒவ்வொரு அளத்திலும் துடிக்கும் இளம் ரத்தத்துக் குரியவர்களைக் கண்டு பிடித்துத் துணைவர்களாக்கிக் கொள்ள ராமசாமி முயன்று கொண்டிருக்கிறான். பனஞ். சோளை அளத்துக் கற்கோட்டையைத் தகர்த்துவிட அவர் கள் திடங் கொண்டு உழைக்கின்றனர். 

அந்நாள் சனிக்கிழமை, ராமசாமி பதினெட்டாம் நம்பர் பாத்தியை ‘டிகிரி’ பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போது விரைவாகக் கணக்கப்பிள்ளை தங்கராசு வருகிறான். அவன் வகையில்தான் ராமசாமிக்குச் சம்பளம் “ஏலே, ராமசாமி?… மொதலாளி ஒன்னக் கூப்பிடுறா…” ராமசாமி நிமிர்ந்து பார்க்கிறான். விழிகள் ஒரு கேள்விக் குறியாக நிலைக்கின்றன. முதலாளி அவனைக் கூப்பிடுகிறாரா? எத்ற்கு? முதலாளிகள் எப்போதும் தொழிலாளியை நேராகப் பார்த்து எதுவும் பேச மாட்டார்களே? 

அந்நாள் சண்முகக் கங்காணி ராமசாமியைச் சிறு பையனாக உப்புக் கொட்டடியில் வேலைக்குக் கொண்டு வந்து சேர்க்கையில் அளத்தில் இவ்வளவு சாலைகளும், கட்டிடங்களும் கிடையாது. அவன் வேலைக்குச் சேர்ந்து பல நாட்கள் சென்றபின் ஒருநாள் அறவைக் கொட்டடி வாயிலில் ஒரு பெரிய மனிதர். சந்தனப் பொட்டும் குங்கும முமாக வந்து பலர் சூழ நின்றிருந்தார். அவனைக் கங்காணி கூட்டிச் சென்று அவர் முன் நிறுத்தினார். 

‘இவனா?…’ என்று கேட்பது போல் அவர் கண்கள் அவன் மீது பதிந்தன. 

“என்ன கூலி குடுக்கிறிய?” என்று வினவினார். 

“ஒண்ணே கா ரூவாதா…” என்று கங்காணி அறிவித்தார்.  

“தொழி வெட்டிக்குடுக்க காவாய் கசடு எடுக்கன்னு போட்டுக்க. ரெண்டு ரூபாய் குடு…” என்றார். 

அப்போதுதான் அவர் பெரிய முதலாளி என்றறிந் தான். அந்நாளில் தனக்கு மட்டும் அந்தப் பெரியவரின் ஆதரவு கிடைத்திருக்கிறதென்று அவன் மகிழ்ச்சி கொண் டான். மற்றவர்களிடையே கர்வமாக நடந்தான். தொழியில் அவ்வப்போது நீர் பாய மடைதிறந்து விடுவது அடைப்பது; அலுவலகத்தில் எப்போதேனும் யாரேனும் வந்தால் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் சோடா வாங்கி வருவது போன்ற வேலைகளுக்கு அவன் உயர்ந் தான். ‘ஐட்ரா’ பிடிக்க அவன் உயர்ந்த போதுகூட முதலாளியைப் பார்க்கவில்லை. முதலாளிக்கு வயதாகி விட்டது. அவர் படுக்கையில் விழுந்து விட்டார். அளத்துக்குள் அவர்கள் எழுப்பியிருக்கும் கோயிலில் எப்போதேனும் சிறப்புநாள் வரும்போது அவர் வருவார். கைலாகு கொடுத்து அழைத்து வந்து அவரைச் சந்நிதியில் அமர்த்துவார்கள் பெரிய முதலாளியின் தொடர்பு அவ்வளவே. 

ஆனால் அவருடைய வாரிசான மக்களில் ஒருவன்தான் இந்த அளத்தை நிர்வாகம் செய்கிறான். அவன் தான் இங்கே அதிகமாக வந்து தங்கி மேற்பார்வை செய்கிறான். முதலாளியின் மற்ற மைந்தர்களுக்கும் இவனுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. இவன் மற்ற செல்வர் மக்களைப் போல் தோற்றத்தில் ஆடம்பரம் காட்டமாட்டான். கைகளில் மோதிரங்கள், தங்கச்சங்கிலி, உயர்ந்த உடை, செண்ட் மணம், நாகரிகப் பெண்கள் என்ற இசைவுகளை இவன் காரை ஓட்டிக் கொண்டு வரும் போதோ, ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வரும் போதோ காண இயலாது. சாதாரணமாக ஒரு சராயும் சட்டையும் அணிந்திருப்பான். தலைமுடி சீராக வெட்டி, அரும்பு மீசையுடன் காட்சியளிப்பான். 

அவனுடைய வண்டி உள்ளே நுழையும் போதோ, அவனிடம் மற்றவர் பேசும் போதோதான் அவனை முதலாளி என்று கண்டு கொள்ள வேண்டும். அவன் தோற்றத்துக்கு எளியவனாக இருந்த போதிலும், அவனை எப்போதும் யாரும் ணுகிவிட இயலாது. கண்ட்ராக்ட், அல்லது கணக்குப் பிள்ளை மூலமாகத்தான் எதையும் கூறமுடியும். அந்த முதலாளி தன்னை எதற்குக் கூப்பிடுகிறார் என்று அவன் ஐயுறுகிறான். காருக்கே மரியாதை காட்டுபவர்களும், அவர் வங்கி அதிகாரிகளை உப்புக் குவைகளின் பக்கம் அழைத்து வருகையில் கூனிக் குழைந்து குறுகுபவர்களும் நிறைந்த அந்தக் களத்தில் இவன் ‘அவனும் மனிதன் தானே’ என்று அலட்சியமாகச் சென்றிருக்கிறான். உப்புக் குவைகள் அவர்கள் உழைப்பு. அவற்றை வங்கியில் அடமானம் வைத்து இவர்களுக்குக் கூலி கொடுக்கிறான். வனுக்கா நஷ்டம்’ என்று குமுறுவான். 

அவனை இப்போது அந்த முதலாளி எதற்கு அழைக்கிறார்? 

விருந்துக் கொட்டகை முன்னறையில் அவர் உட்கார்ந் திருக்கிறார். அருகில் நாச்சப்பன் நிற்கிறான். மூழுகாள் சோலையும் மூலையில் நிற்கிறான். அந்த நேரத்திலும் அவன் தண்ணீர்’ போட்டிருக்கிறான். வாடை வீசுகிறது. தங்கராசு அங்கே வந்து ஒதுங்கி நிற்கிறான். 

ராமசாமி அங்கே நின்று என்ன என்பதைப் போல் நோக்குகிறான். கும்பிட்டு நிற்கவில்லை. 

“நீதான் ஹைட்ரா பாக்குறவனா?” 

“ஆமாம் என்று அவன் தலையசைக்கிறான்.”

“பேரு?”” 

இதுகூடத் தெரியாமலா கூப்பிட்டனுப்பினான்?

“ராமசாமி…”

“நீ எங்க வீடு வச்சிருக்கே?” 

இதற்கு அவன் பதில் கூறுமுன் தங்கராசு முந்திக் கொள்கிறான். 

“அங்க, தொரை அளத்துலேந்து வாரான், சொன்னனே?” 

“ஓ மறந்து போனேன். உனக்கு மிசின் வேல தெரியின்னாங்க. பம்ப்செட்டு பாப்பியல்ல?” 

“பாக்கறது தான்…” 

“இங்கேயே கோயில் பக்கம் வீடு வச்சிட்டு இருந்திடு. காந்திநாதன் மிசின் பாக்கறான். அவனுக்கு ஒத்தாசையா நீயும் பம்ப்செட்டுகளைப் பார்த்து எண்ணெய் போடுவது போல வேலை செய்யிறே. இல்ல?” 

அவன் எதுவும் பேசாமல் தலையாட்டுகிறான். 

“நீ இப்ப மாசச் சம்பளம் எவ்வளவு வாங்கறே?” 

“நூத்து முப்பத்தஞ்சு… இப்ப ஒருமாசம் நூத்தம்பது குடுத்தா…” 

“சரி உனக்கு இருநூறாச் சம்பளம் உசத்தியிருக்கு. சம்மதம் தானே?” 

ராமசாமிக்குச் சில கணங்கள் பேச்சு வரவில்லை. 

இந்த முதலாளி சும்மாக் கிடப்பவனை வலிய அழைத்து, உனக்கு இங்கேயே வீடு வைத்துக் கொள். சம்பளம் ஐம்பது ரூபாய் போல் அதிகம் தருவதாக எதற்குச் சொல்கிறார்? தூண்டிலில் இருக்கும் புழுவை இழுக்க வரும் மீன்கூட அவ்வளவு எளிதில் பாய்ந்து விடாது. இது எதற்காக? இப்படி ஐம்பது ரூபாயை வீசி எறிந்துவிட அவர்கள் முட்டாள் களில்லை. மனிதாபிமான ஈரமில்லாமல் அளத்துக்காரர் களிடம் வேலையை வாங்குகிறார்கள். பத்து பைசா அதிகம் கொடுத்து விட மாட்டார்கள். அதுவும் இந்த முதலாளி சீமைக்கெல்லாம் சென்று படித்தவர். 

“ராத்திரியும் பொறுப்பாக வேலை பார்க்கணுமா?” என்று ராமசாமி ஒரு கேள்வியைப் போடுகிறான். 

“அப்படியெல்லாமில்லை. ஏற்கெனவே சில பேருக்குக் கோயிலுக்குப் பக்கத்தில் வீடு வைத்துக் கொள்ளலாமின்னு சொல்லியிருக்கிறேன். நீயும் இங்கேயே இருந்தால் சவுகரியமா இருக்கலாம்னு சொன்னேன்…” 

“ரொம்ப சந்தோசம். எனக்கு மட்டும் இதெல்லாம் குடுக்கிறீங்க. சொல்லப் போனா எனக்கு ரொம்பக் கஷ்டமில்ல.  என்னக் காட்டிலும் கஷ்டப்படுறவங்கதா அதிகம் கண்ட்ராக்ட் கூலிங்க அஞ்சாறு கல்லுக்கப்பால இருந்து வரா, இத, நாச்சியப்பன் கூலிக்காரங்க தூத்துக்குடி டவுனுக் குள்ளாறேலேந்து வராவ. அவியளவிட எனக்கு என்ன கஷ்டம்?” 

“கண்ட்ராக்ட்காரங்க சமசாரம் வேற, அதப்பத்தி நீ ஏன் பேசறே? மாசச்சம்பளம் வாங்குறவங்களுக்குச் சில சலுகை கொடுக்கலான்னு தீர்மானிச்சிருக்கிறேன். அதில நீயும் வாரே, அதான் கூப்பிட்டுச் சொன்னேன்…” 

“இப்ப எங்களக்கூட அங்க காலி பண்ணிச் சொல்லி யிருக்கா. ஏஜண்டு ஜபக்கூடம் எடுக்கப் போறாங்க, அந்த எடத்தில. காலிபண்ணணும்னு சொல்லி மாசமாகப் போவுது, நா மட்டுமில்ல. இங்க அளத்துல புள்ள பெத்துதே ஒரு பொம்பிள, அவ கூடத்தா, நாலு புள்ளங்களியும் வச்சிட்டு எங்க போவா? எல்லாம் அங்கேந்து இவுக வந்துதா வேலை செய்யிறாவ, அவியளுக்கும் இங்கே குடிச போட எடம் தாரியளா?” 

முதலாளி தங்கராசுவைப் பார்க்கிறார். 

“அந்தாளு கண்ட்ராட்டு கூலியில்ல…?” 

“கண்ட்ராட்டு… ஏனவிய கண்ட்ராட்டா இருக்கணும்?  வருச வருசமா உதிரத்தைக் கொடுத்து உழய்க்கிறாங்க கண்ட்ராட்டுனு வைக்கிறது சரியா?” 

“ஏலோ, இது என்னன்னு நினைச்ச? மொதலாளி யிட்டப் பேசுதே. மரியாதி தவற வேணாம்?” என்று நாச்சப்பன் எச்சரிக்கிறான். 

ராமசாமி அவனை எரித்து விடுபவன்போல் பார்க்கிறான். 

“நானும் முதலாளியும் பேசுகிறோம் எனக்குத் தெரியும். நீ ஏண்டா நடுவே வார, நாயே!” 

நாச்சப்பன் எதிரொலி காட்டிருந்தால் ராமசாமி ஒரு வேளை கோபம் தணிந்தவனாகி இருக்கலாம். அவன் வாய் திறக்கவில்லை. மௌனம் அங்கே திரை விரிக்கிறது. ஒவ்வொரு விநாடியும் கனத்தைச் சுமந்து கொண்டு நகர இயலாமல் தவிக்கிறது. ராமசாமியின் குமுறல் படாரென்று வெடிக்கிறது. 

“பாத்திக்காட்டுக்கு வர பொம்பிளயை மானங் குலைக்கும்…பன்னிப் பயல்…!  ஒன் ஒடம்புல ரத்தமா ஓடுது? சாக்கடையில்ல ஓடுது? பொண்ணுவளத்தொட்டுக் குலைக்கும் ஒங்கையை ஒருநாள் நான் வெட்டிப் போடுவே!… முதலாளி! இவனை, இந்த நாய்ப்பயலை இந்த அளத்தை விட்டு நீங்களே விரட்டலேன்னா ஒங்க பேரு கெட்டுப்போகும். இவனை நீங்க வெரட்டலே, இல்ல இங்க நடக்கிற அக்கிரமத்தைத் தடுக்கலன்னா, நானே இந்தப் பயலை வெளியே தள்ளுவ ஒருநா.” 

முதலாளி புள்ளகை மாறாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாச்சப்பன், தங்கராசு இருவருடைய முகங்களிலும் ஈயாடவில்லை. சோலையும்கூட எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். 

பட்டாசு படபடவென்று வெடித்துவிட்டுத் தாற்காலிக மாகச் சிறிது ஓய்ந்தாற்போல் ஓர் அமைதி படிகிறது. சட்டென்று ராமசாமிக்குத் தான் அவமானத்துக்குள்ளாகி விட்டாற் போன்று ஓர் உணர்வு குறுக்குகிறது. 

முதலாளியானவன் ஒரு கைப்படுக்கையில் இன்னொரு கையை நிறுத்தி அதில் முகத்தை வைத்துக் கொண்டு அவனது கோபத்தை ரசிக்கும் பாவனையில் அமர்ந்திருக் கிறான். 

“இவ்வளவுதானா. இன்னும் இருக்கிறதா?” என்ற பாவம் விழிகளில் விளங்குகிறது. 

“ஏம்ப்பா, இந்த அளத்தில் சோலை ஒருவன்தான் பட்டப் பகலில் குடிச்சிட்டு வருவான்னு நினைச்சிருந்தேன், இந்தாளும் சோலையைப் போல்னு தெரியிது. இவன இப்ப நீ கூட்டிட்டு வந்ததே சரியில்ல. சரி… நீ போப்பா…. போ!”

முதலாளி போகச் சொல்லி சாடை காட்டுகிறான்.

அவன் இதழ்கள் துடிக்கின்றன. 

“ஸார்; நான் நீங்க அவமானப்படுத்துவதற்குப் பொறுக் கிறேன். நான் குடிக்கிறவனில்ல. நான் ஒண்ணுக் கொண்ணு பேசல. என் புத்தி நல்லாகத்தானிருக்கு. நீங்க நாயமா, இங்க நடக்கிற அக்கிரமங்கள விசாரிக்கணும்னு நான் சொல்றேன். இங்கே பொண்டுவ, வாயில்லாப் பூச்சி களாச் சீரளியிறா, இவனுக்கு எணங்கலேன்னா அவிய கூலியில மண்ணடிக்கிறா, நீங்க இங்க வேல செய்யிற பொம்பிளகளைக் கூட்டி விசாரிக்கணும்…” என்று அவன் உள்ளார்ந்துவரும் தாபத்துடன் கோருகிறான். 

“சரிப்பா. நான் பேசுறேன். நீ இப்ப போ..” என்று முதலாளி மீண்டும் அந்தப் பழைய பாவம் மாறாமலே கையைக் காட்டுவது ராமசாமிக்குப் பொறுக்கக்’ கூடியதாகத் தானில்லை. 

“ஸார், இது ரொம்ப முட்டிப்போன வெவகாரம், நீங்கல்லாம் ரொம்பம் படிச்சவிய. நான் தொழிலாள் தா ஆனாலும் எந்த அக்குரமும்…” அவனை மேல பேசவிடாமல் சொல்லிட் முதலாளி, “நான் கவனிக்கிறேன். போன்னு டேனில்ல போ. இப்ப உன் வேலையைப்பாரு?” என்று ஆணை யிடுகிறார். 

தோல்வி, அவமான உணர்வு நெஞ்சில் கடல்போல் பொங்கிச் சுருண்டு எழுப்புகிறது. அவனால்  விழுங்கிக் கொள்ள உயலவில்லை. 

“ஸார், தொழிலாளிகளை அவமானம் செய்யக் கூடாது ஸார். பொம்பிளயானாலும், ஆரானாலும்…” 

முதலாளியின் கோபம் அதிகமாகிவிட்டது. “ஏம்ப்பா, உன்னைப் போன்னு ஒருதரம் சொன்னேன், ரெண்டுதரம் சொன்னேன். சும்மா இங்கே வந்து வம்பு பண்ணாரே குடிச்சிட்டு வந்து!” 

“ஸார், மரியாதையாப் பேசுங்க! குடிச்சிட்டு நான் வரல. அப்பேர்க்கொத்த ஆளு நானில்ல. நீங்க கூப்பிட் நான் வந்தேன். நீங்க மொதலாளியா டனுப்பினீங்க. யிருக்கலாம், நான் தொழில் செய்பவனாக இருக்கலாம். ஆனால் நானும் மனிசன்…” 

சோலை அவன் மீது பாய்ந்து அவனை வெளியே கொண்டு செல்லக் கைவைக்கிறான். ஆனால் ராமசாமியோ அவன் கையை அநாயாசமாகத் தள்ளி விட்டு வெளியேறுகிறான். உச்சி வெய்யில் ஏறும் நேரம். ஆனியானாலும் ஆடியானாலும் இங்கு மேக மூட்டமே வராது. 

அவன் முதலாளியுடன் மோதிக்கொள்ள வேண்டும் என்றோ, நாச்சப்பனுடன் மோதிக்கொள்ள வேண்டு மென்றோ கருதிச் செல்லவில்லை. ஆனால் பொன்னாச்சி யின் வாயிலிருந்து அவன் அச்சொற்களைக் கேள்வியுற்ற நாளிலிருந்து குமுறிக் கொண்டிருந்த கொதிப்பு அச்சூழலில் வெடித்துவிட்டது. 

இனி…இனி…? 

– தொடரும்…

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

ராஜம் கிருஷ்ணன் ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *