கண்ணன் பிறந்தான்
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

…….உபன்யாசகர் உபவாசகராக இருப்பதைப் பற்றி யாருக்குக் கவலை? அவர் வாக்குவளத்தில் மெய் மறந்தவர்கள் அவர் வாழ்க்கை வளத்தைப் பார்க்கவில்லை.
“சடகோபன்… ஆறாம் வகுப்பு, ஜில்லா போர்ட் பாடசாலை என்று தலைவர் அழைத்ததும் கூட்டத்தில் சில வினாடிகள் ‘சலசல’ப்பு.
‘பாடு… அம்பி…” என்று தலைவர் சிறுவன் முதுகில் தட்டிக் கொடுக்கிறார். ‘கணீ’ரென்று சிறுவனின் குரல் ஒலிக்கிறது.
“புள்ளும் சிலம்பினகாண்…
புள்ளரையன் கோயிலில்…
வெள்ளை விளிசங்கின்…
பேரரவம் கேட்டிலையோ”
அண்ணாசாமியென்ற ஓர் உருவம் திகைக்கிறது! கண்ணீர் வடிக்கிறது. ‘கண்ணா கண்ணா’ வென்று இதயம் ஓலமிட்டு விம்மி விம்மி அழுகிறது. ஐயோ!… ‘அதே அடிகளைப் பையன் பாடுகிறான்; பக்தர் குழாம் ரசிக்கிறது!
மார்கழி மாதம் கடைசி நாளில் வழக்கம்போல் ராமாபுரம் பெருமாள் கோயிலில் திருப்பாவை விழா. சிறுவர்களின் பாடல் போட்டி நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. ஜனத்திரள் நெரிகிறது. ஜில்லா போர்ட் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் அனந்தசயனம் தலைமை வகிக்கிறார். அவர் அருகே பாகவதர் அண்ணாசாமி சோகமே உருவாக அமர்ந்திருக்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக பாகவதர் அண்ணாசாமி, பெருமா ள் கோயில் பக்கம் திரும்பியதுகூட இல்லை யென்றால் அவ்வூர்வாசிகள் நம்ப மாட்டார்கள்… என்றா லும் அதுதான் உண்மை! அவர் நெற்றி இப்பொழுதும் வெறிச்சென்றுதானே இருக்கிறது? நாராயணாவென்னும் நாமத்தை உச்சரித்து ஆண்டு ஒன்றாகி விட்டது! ‘நான் மறவேன் நாராயணா வென்னும் நாமம்’ என்று சொன்ன தெல்லாம் பொய்த்துவிட்டது! நாராயணனை மறப்பது இருக்கட்டும்; தன்னையே மறந்து சிலையாகி விட்டிருந்தார் அண்ணாசாமி! சிறுவனின் பாடலில் அவர் மனம் பதியவில்லை… எங்கோ ஓடுகிறது. யாரையோ தேடுகிறது!
போன வருஷம்…
மார்கழி மாதம்; வைகறை நேரம்!… பனி மூட்டம் பார்வையை மறைக்கிறது. காவேரியாற்றங் கரையில் வரிசை வரிசையாக ஆண்களும் பெண்களும் போகிறார் கள்; வருகிறார்கள். வெள்ளி முலாமேறிய கீழ் வானத்தில் கதிரவனின் ஒளிக் கதிர்களை நோக்கிப் பறவையினங்கள் கூட்டம் கூட்டமாகப் பறக்கின்றன!
கிராமத்து அக்ரகாரத்தின் மேலண்டை புரத்தில் பெருமாள் கோயிலை அடுத்த அழகிய தென்னஞ்சோலை! தெருக்கோடியில் ஒரு பழைய ஓட்டு வீடு! அந்த வீட்டின் பின்புறம்- தோட்டத்தில் இரு உருவங்கள் பனிநீரில் நனைந்த மலர்களைக் கொய்த வண்ணம் கம்பீரமும், குழைவும் கலந்த குரலில் பாடுகின்றன. பாகவதர் அண்ணாசாமியும் அவர் மகன் கண்ணனும்தான்!
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து…
… சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுச்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்…”
பாடலை நா உச்சரிக்க கரங்கள் மலர் கொய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. பூக்கொய்தாகிவிட்டது.
“கண்ணா..”
“என்னப்பா…”
“இன்னிக்கு திருப்பாவை போட்டியிலே பேர் குடுத்திருக்கிறாயோ?”
“ஓ…”
மலர் நிறைந்த பூக்குடலையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு ஆழி மழைக்கண்ணா…’ என்று மீண்டும் குரல்கள் இனிமையோடு இழைய இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
“வென்று பகை கெடுக்கும்
நின்கையில் வேல்போற்றி
என்றென்று உன்கையில்
ஏந்திப்பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம்
இரங்கேலோ ரெம்பாவாய்”
என்ற பெண்ணின் குரல் வீட்டகத்தே இருந்து மதுர மாக ஒலித்தது.
“அப்பா பூப்பறிச்சுட்டேளா நாழியாச்சு சீக்கரம் கொண்டு வாங்கோ தொடுத்துடறேன்…” என்று சொல்லிக்கொண்டே சிறுவனிடம் இருந்த பூக்குடலையை வாங்கினாள் பதினாறு வயதுடைய அவர் செல்வமகள் ஆண்டாள்.
அந்த மூவரையும் கொண்டது அவ்வேழைக் குடும்பம்.
தொடுக்கப்பட்ட மலர் மாலையைக் குடலையில் போட்டுக்கொண்டே ‘ஆச்சு போகலாமா கண்ணா என்றவாறு தன் தம்பியைக் கனிவோடு நோக்கினான். சிறுவனின் முகம் வாடியிருந்தது! தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான்… கண்களில் நீர் சுரந்தது. தலை குனிந்தான். அவன் கண்ணீர் தரையில் சிந்தித் தெறித்தது!
“கண்ணா…கண்ணா ஏன்டா அழறே” என்று ஆதூரத்துடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
“பசிக்கிறது… அக்கா” என்று சிறுவனின் தொண்டை கரகரத்தது.
தோட்டத்து வாசலில் நின்றிருந்த பாகவதர் அண்ணாசாமி பின்புறமாகத் திரும்பி அடுக்களையில், இரண்டு நாட்களாக ஈரம் படாமல் கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கும் சோற்றுப் பானையைப் பார்த்தார்.
“வாடா கோயில்லே பிரசாதம் கொடுப்பா” என்று அவன் கண்ணீரைத் துடைத்து அழைத்துச் சென்றாள் ஆண்டாள்.
“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று இதயபூர்வமாக ஜெபித்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றனர் மூவரும்.
ஆகா!… அந்தப் பாடல்களில் தான் எத்தனை இன்பம்! அந்த இன்பத்தில்தான் அவர்கள் வாழ்கின்றனர். அந்த இன்பம் மட்டும் போதுமா?
அண்ணாசாமி ஐயங்கார், மன்னார்குடி தாலுக்காவில் மிகவும் பிரபல்யமானவர். அவரது காலக்ஷேபங்களும் உபன்யாசமும் அனைவருக்கும் தெரியும். அவர் எப்படி ‘காலக்ஷேபம்’ செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. உபன்யாசகர் உபவாசகராக இருப்பதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை? அவர் வாக்கு வளத்தில் மெய் சிலித்தவர்கள் அவர் வாழ்க்கை வளத்தைப் பார்த்து மனம் நோகவில்லை!
அவர் ஆண்டவனின் தொண்டர்! யார் கையையும் எதிர் பார்த்தாரோ, இல்லையோ, ‘ரெண்டுநாளா பட்டினி’ என்று ஒருவரிடமும் சொல்லாமல் நாராயணா வென்னும் நாமத்தை ஜெபித்துக் கொண்டு, திவ்யப் பிரபந்த போதையில் ஆழ்ந்திருந்தார். தன் பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காற்றையும் நீரையும், எப்பொழுதோ சில நாட்களில் கொஞ்சம் உணவையும் உண்டு உயிர்வாழக் கற்றுக் கொடுத்திருந்தார். அவர் வீட்டில் இரண்டு நாட்களுக்கொரு முறை அடுப்பு எரிவதே நாராயணன் அருள் என்று அவர் நம்பினார்; அந்த அருளில் அகமகிழ்ந்தார்.
அவர் மனைவி அலமேலு இரண்டு வருஷங்களுக்கு முன்தான் இறந்தாள். வறுமை இருள் சூழ்ந்த ஜீவிதம் அவளை உதறி எறிந்தது! தன் கணவன் ‘பற்றற்ற ஞானி’ என்பதை அறிந்தும் அந்தக் குழந்தைகளை அவரின் ஏக பராமரிப்பில் விடுத்து, தான் மட்டும் நிம்மதியாக நாராயணனின் பாதார விந்தங்களில் அடைக்கலம் புகுந்தது, தான் பெற்ற செல்வங்களுக்கு அவளிழைத்த துரோகம் தான்!
அவருக்கு யாரும் என்றும் சுமையாக இருந்ததில்லை. ‘அவன் பிறப்பித்தான், ரக்ஷிப்பது அவன் கடன்’ என்ற திடசித்தத்தில் கலக்கமின்றி வாழ்ந்தார்.
பிள்ளையையும் பெண்ணையும் தம் பக்தி வழியில் நடை பயில, பக்குவப்படுத்தி இருந்தார்.
•அக்கா சாதம் சாப்பிடணும்’ என்று கண்களில் நீர் ததும்ப கையிலிருந்த சுண்டலைப் பார்த்துக்கொண்டே கூறினான் கண்ணன்.
“சாயங்காலம் அரிசி வாங்கி சமைக்கலாம்… இப்போ இதை சாப்பிடுடா” என்று தன் கையிலிருந்த பிரசாதத் தையும் அவனிடம் கொடுத்தாள் ஆண்டாள்.
‘அக்கா நோக்குப் பசிக்குமே’
“இல்லேடா; நான் வாழைப்பழம் சாப்பிட்டேனே” என்று புளுகினாள். அவள் கண்கள் கலங்கின,
‘”அக்கா நாம ‘சாமிசாமி’ன்னு பாடிண்டிருக்கோமே, சாமி ஏன் நம்மைப் பட்டினி போடறார்?…” அவன் கேள்வியில் என்ன ரௌத்திரம்!
“பக்தாளை சுவாமி அப்படித்தான் சோதிப்பார்…”
“நம்ம பக்தியை சுவாமிகூட சோதிச்சுத்தான் தெரிஞ்சுக்கணுமா?…
“தம்பீ…”
“பின்ன என்னடீ… நான் எவ்வளவு பூப்பறிச்சு ஜெபம் பண்றேன்… இந்தப் பாழாப் போன சாமிக்கு…”
“தம்பீ…” என்றவாறு அவன் கன்னத்தில், பளீரென அறைகிறாள்…
வாயில் சுண்டலும் பிரசாதமும் அடைக்க விக்கி விக்கி அழுகிறான் கண்ணன்…
“தம்பீ1… அபச்சாரமா பேசலாமோடா, தெரியாமெ அடிச்சுட்டேன். மன்னிச்சிக்கோடா அழாதேடா. கண்ணா அழாதேடா என்னெ வேணுமானா திருப்பி அடிச்சுடு, அழாதேடா கண்ணா”, என்று அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறி அழுகிறாள்.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் ‘பொலபொல’வென உதிர்ந்தது. அவன் அவளுடன் பேசவேயில்லை!
“சுவாமி… என் தம்பியை மன்னிச்சுடு…” என்று ஆண்டாளின் மனம் பிரார்த்தித்தது!
ஆனால் கண்ணன் அவளை மன்னிக்கவில்லை என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?…
அன்று கோயிலில் திருப்பாவைப் போட்டி! ஜில்லா கல்வி அதிகாரி ராமாமிர்த ஐயங்கார் தலைமை வகித்தார். குழந்தைகள் பாடின.
மழலைக் குரல் கேட்போரின் மனத்தை மயக்கிற்று! சின்னஞ்சிறு குழந்தைகள் திக்கித் திக்கிப் பாடின. பெரிய குழந்தைகளின் ‘கணீ’ரென்ற குரல் இடையிடையே ஒலிக்கிறது. பக்தர் குழாம் சிரக்கம்பம் செய்கிறது!
“அடுத்த படியாக பாகவதர் அண்ணாசாமி ஐயங்காரின் புத்திரன் கண்ணன். ஐந்தாம் வகுப்பு, ஜில்லா போர்ட் பாடசாலை…” என்று தலைவர் அழைத்தவுடன் கூட்டத்திலிருந்து. தள்ளாடியவாறே வந்து நின்றான் கண்ணன்.
பசி, களைப்பு… வாடிய முகம்; நெற்றியில் மொட்டை நாமம் ‘பளீ’ரிடுகிறது. வாரி முடிந்த குடுமிச்சிகை பளபளக்கிறது!
கண்ணன் தொண்டையைச் செருமினான். குரல் கம்மி அடைத்தது! சட்டையில்லாத மார்பில், நெஞ்சுக் கூட்டின்மேல் சரிந்து கிடந்த பூணூலைத் திருகிக் கொண்டே நின்றிருந்தான். தொண்டை வரவில்லை…
“கண்ணா… நாழியாச்சு; உம்…” என்று அண்ணாசாமி அதட்டினார்.
‘கணீ’’ரென சிறுவனின் குரல் ஒலித்தது!
“புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ” என்று ஆரம்பித்து…
“மெள்ள எழுந்த அரி என்ற பேரரவம் உள்ளம்
புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”…
என்று முடித்ததும் எல்லோருடைய உள்ளமும் குளிர்ந்தன. பெருத்த கரகோஷத்தால் சிறுவனின் செவிகளும் குளிர்ந்தன. ஆனால் வயிறு!…
“பாகவதர் மகனோல்லியோ?” என்ற குரல் காதில் விழும்போது அண்ணாசாமிக்குத்தான் என்ன மகிழ்ச்சி! ஆண்டாள் பூரித்துப் போனாள்.
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மறுநாள் மாலை பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது…கூட்டம் கலைந்தது.
கூட்டம் கலைந்து பாகவதரும் ஆண்டாளும் புறப்படும்போது அவர்களுடள் வந்த கண்ணனைக் காண வில்லை! பாகவதர் தேடிப் பார்த்துவிட்டு ‘வீட்டுக்குப் போயிருப்பான்’ என்று எண்ணிக் கொண்டார்.
கோவிலின் வெளிப் பிரகாசத்தில் வடகோடியில் இருப்பது பஜனை மடம். அதன் சார்பில் நடப்பவைதான் மார்கழி மாத விழாக்கள் அனைத்தும்.
பஜனை மடத்திற்குள் சுவரருகே ஐந்தடி உயரத்திற்கு ஆண்டாளின் திருவருவப் படம். அதனருகே வெண்கல விளக்கொன்று மங்கிய ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. ஆண்டாள் திருவடிகளுக்குச் சமர்ப்பணமாக வாழைப் பழங்கள், தேங்காய்கள், கற்கண்டு, சுண்டல். இத்யாதி…
ஆண்டாள் திருவுருவின் மீது நிழல் அசைகிறது. அந்த வழியாக வந்த அண்ணாசாமியும் ஆண்டாளும் ஒரு வினாடி நிற்கின்றனர்.
அடுத்த கணம் நிழலின் கரத்தில் உரிக்கப்பட்ட வாழைப்பழங்கள் மறைக்கின்றன. தேங்காயைப் பல்லால் சுரண்டுவதும் தெரிகிறது.
அண்ணாசாமி மெள்ள பஜனை மடத்திற்குள் நுழைகிறார்.
‘ஆ!… கண்ணணா?’ வென்று அலறுகிறார்.
‘அப்பா…’
”அப்பாவா?… இங்கே வாடா… திருட்டு நாயே…’ என்று சொல்லிக்கொண்டே அவன் மீது பாய்ந்து முதுகில் பேய் போல அறைகிறார்.
‘அப்பா…இல்லேப்பா’ என்று சிறுவன் அலறுகிறான். ஒரே கூட்டம். ஆண்டாள் மௌனாக அழுகிறாள். எல்லோரும் விஷயம் புரியாமல் திகைக்கிறார்கள். அண்ணாசாமி கோபத்துடன் வீட்டை நோக்கி விரைகிறார் தம்பியைத் தேற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள் ஆண்டாள்.
மாலை நேரம்.
கோவிலில் ஜனப்பிரளயம். ராமாமிர்த ஐயங்கார் திருப்பாவை மாநாட்டுப் பந்தலில் தலைமை ஆசனத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கிறார்.
பாகவதர் அண்ணாசாமி ஐயங்கார் மேடையில் நிற்கிறார். அவர் கழுத்தில் மலர் மாலை. மனசில் பக்தி வெறி. அதோ, கூட்டத்தில் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறாளே, ஆண்டாள் அவள் வயிற்றில் பசி- பட்டினிப் புழு குடைகிறது.
”மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்”
என்று பாடிக்கொண்டு தன்னை மறந்து அண்ணசாமி ஆடினார். பக்தி பிரவாகத்தில் நீந்தினார் பக்தர்கள் ரசித்தனர் அண்ணாந்து கேட்டனர். ‘அழகு அழகு’ என்றனர். அதன் பிறகு? ‘சுண்ணாம்புக் கதைதான்…
ஒரு மணி நேரத்திற்குப் பின் அவர் உபன்யாசம் முடிந்தது.
‘ஆண்டாள் திருவடிகளே சரணம்’ என்று கூறி அவர் முடித்ததும் காது செவிடு படும்படி கரகோஷம். அவர் செவிகள் அடைத்துக் கொண்டன. பசி இருள், கண்களை மறைத்தது.
சிறுவர் போட்டியில் கலந்து கொண்ட வர்களுக்குப் பரிசளிக்க தலைவர் எழுந்து நின்றார்.
“கண்ணன், ஐந்தாம் வகுப்பு, பஞ்சாயத்து போர்ட். பாடசாலை… முதல் பரிசு இருபது ரூபாயும் திவ்விய பிரபந்தத் திரட்டு என்ற புத்தகமும் முதற் பரிசாக அளிக்கப்படுகிறது!” என்று அறிவித்தவுடன் ஜனக்கூட்டம் ஆரவாரித்தது.
“கண்ணன்… கண்ணன்…” என்று பலர் கூவினர். கண்ணனைத்தான் காணோம்!
‘கண்ணா கண்ணா’ வென்று அலறிவாறு ஆண்டாள் வீட்டிற்குள் ஓடினாள். அங்கேயும் கண்ணனைக் காண வில்லை.
“கண்ணா…கண்ணா…” வெற்றிடங்களைப் பார்த்து பித்துப் பிடித்தவளைப் போல் கூவினாள் ஆண்டாள்.
பூஜையறையில் ராமர் படத்துக்கடியில் ஒரு காகிதம் இருந்தது. கண்ணன் எழுதிய கடிதம். மணி மணியா எழுத்துக்கள்.
“அம்மா மேலே சத்தியம் பண்ணி இந்தக் கடிதாசியை எழுதறேன் என் அம்மா செத்ததிலிருந்து எனக்கு ஆதர வில்லாம ஆயிடுத்து. ரெண்டு நாளா நான் பட்டினி கெடக்க என் அம்மா இருந்தா மனம் பொறுப்பாளோ? நான் பட்டினியிலே துடிக்கறச்ச என்னை நீங்க யாரும் கவனிக்கலே… காலையிலே அக்கா அடிச்சா; இப்போ அப்பா அடிக்கறார்… நான் பட்டினியும் பசியுமா இவங் கள்ட்டே அடியும் ஒதையும் வாங்கிண்டு எப்படி இருக் கறது. எங்கம்மா இல்லாத இந்த வீட்டிலே எனக்கு என்ன வேலை… நான் போறேன். எங்கேயா? எங்கேயோ போவேன்… உங்களுக்கென்ன? சுவாமிதான் என்னைக் காப்பாத்தணும். என்னிக்காவது நான் நல்ல நிலையிலே இருந்தேன்னா- ஒரு நாள் திரும்பி வருவேன். ராமா! என்னைக் காப்பாத்து! நான் போகிறேன்!
கண்ணன்
“ஐயோ! கண்ணா… கண்ணா” ஒன்று அவள் கதறி னாள். அப்பொழுதுதான் அண்ணாசாமி வந்தார். கடிதத்தைப் படித்தார். கண் கலங்கி கண்ணீர் வழிந்தது! கடிதத்தால் முகத்தை மூடிக்கொண்டு ‘ஐயோ கண்ணா’ வென்று விக்கி விக்கி அழுதார் அண்ணாசாமி!
அதன் பிறகு சில மாதங்களுக்கெல்லாம் ஆண்டாள் வருக்குப் பாரமாக இருந்தாள். அவருக்குக் குடும்பக் கவலை வந்துவிட்டது!
எப்படியோ கஷ்டப்பட்டு ஆண்டாளை மேல அக்ர ஹாரத்துப் பார்த்தசாரதி ஐயங்கார் மகன் சீமாச்சுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார். கண்ணனால் அவருக்கு குடும்ப பொறுப்பே உண்டாயிற்று.
சீமாச்சு, பெருமாள் கோயில் குருத்கள். எப்படியோ ‘காமா சோமா’ வென்று கல்யாணமாகி இப்பொழுது ஆண்டாள் கர்ப்பமாகவுமிருகிகிறாள்… இதுதான் மாசம்.
கல்யாணத்தன்று முழுதும் ஆண்டாள். கண்ணனை எண்ணியெண்ணி அழுதாள். தினசரி ஒரு முறையாவது தன் தம்பிக்காக அவள் அழுவது சம்பிரதாயமாகிவிட்டது.
அண்ணாசாமிக்குக் கண்ணீர் வற்றிப்போய் விட்டது. பக்தி வெறி தணிந்துவிட்டது! ‘கண்ணா கண்ணா’ வென்ற இதய ஓலம் மட்டும் நின்றபாடில்லை
‘என்றைக்கோ திரும்பி வருவானாமே, என்று வருவான்? என் கண்ணன் என்று வருவான்?’ என்று மனம் ஏங்கியது. ‘என்றோ வருவான்’ என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நகர்ந்தது.
அடுத்த ஆண்டு- மார்கழி மாதம் திருப்பாவை விழா! ஜில்லா போர்ட் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர் அனந்த சயனம் தலைமை வகிக்கிறார். நீங்க வந்து ரெண்டு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போகணும்’ என்று கட்டாயப்படுத்தியதினால் அண்ணாசாமி விழாவுக்கு வந்திருந்தார். ஆனால் மனம் எங்கோ சுழன்றது.
“சுவாமிகளே ஆத்திலேருந்து ஆள் வந்திருக்கு” என்ற குரல் அவர் சிந்தனையைக் கலைத்தது.
“என்ன” என்று உறக்கத்திலிருந்து விழித்தவரைப் போல் திரும்பினார்.
சீமாச்சு நின்றிருந்தான்!
“ஆண்டாளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு, ஆத்துக்கு வாங்கோ”
“கண்ணன் பிறந்துவிட்டான், சீமாச்சு, நம்ம கண்ணன் பிறந்துட்டான்” என்று கத்தினார் அண்ணசாமி.
– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.