கணவன்




(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் சுவாமிப் படத்தின முன்னே கைகூப்பியவளாய், கண்களை மூடி மெய்மறந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது. சுவாமி அறையில் பல சுவாமிப் படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் அவள் நிற்பது அவளுக்குப் பிடித்தமான அவளது இஷ்ட தெய்வமான விநாயகர் முன்னிலை யில். விக்கினங்கள் தீர்க்கும் விநாயகன். படங்களின் முன்னே இருக்கும் மேசையில் தூண்டாமணி கடர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அதை அவள் தூண்டி விட்டிருந்தாள். சதா அணையாது எரிந்து கொண்டிருக்கும் விளக்கு. எண்ணெய் விடும் சமயங்களைத் தவிர அது அணைவதே இல்லை. அந்தளவு ஆழமான கவனிப்போடு அதை அவள் நிறைவேற்றி வந்தாள். மற்றவர்கள் செய்வதுபோல் காலையில் கும்பிடும்போதும் மாலையில் கும்பிடும் போதும் ஏற்றிவிட்டு அணைத்து விடுகின்ற விஷயமல்ல அது. ஆண்டவனில் அன்பு செலுத்துகின்றதென்பது அப்படி காலையிலும் மாலையிலும் நாங்கள் சாப்பிடுகிற மாதிரி. எங்கள் காலைக் கடன்களைத் தீர்த்துக் கொள்கிற மாதிரியான ஒரு விஷயமா? அப்படி ஒரு சடங்கா? ஆண்டவன் எங்களுக்கு யார்?
முன்பு ஒருகாலம் அவளுக்கு இந்தப் பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. காலையிலும் மாலையிலும் விளக்கேற்றிக் கும்பிட்டபின் விளக்கை அணைத்துவிடும். அல்லது அணைந்து போக விடும் வழிபாடுகள் இவளுக்கு விநோதமானவையாக இருந்திருக் கின்றன. இவளுடைய அம்மா, அப்பா, அண்ணா, அத்தான் எல்லோரும் அந்தமாதிரித்தான் கடவுள் படத்தெதிரே நின்றிருக்கிறார்கள். அந்தக் காலங்களில் எல்லாம் இவள் இந்த வழிபாட்டுப் பக்கமே தலைவைத்துப் படுத்ததில்லை, இவர்களெல்லாம் கடவுளை ஏமாற்றுபவர்களாகவே அவளுக்குப் பட்டது. அவர்கள் அப்படி சுவாமி படத்தெதிரே போய் நிற்கும் சமயங்களை இவள் காண நேரும் போதெல்லாம் அவள் தனக்குள்ளே குலுங்கிக் குலுங்கிச் சிரித்திருக்கிறாள். தப்பித்தவறி இவளுடைய அம்மா சாமி அறையை விட்டு விபூதிப் பூச்சோடு வரும் சமயங்களில் வெளிவாசலில் இருக்கும் இவளின் முகத்தில் அப்போதான் படர்ந்து மறைந்து விட்டிருந்த கேலி நகைப்பின் வெளிச்சத்தைக் கண்டே, அம்மா எரிந்து விழுந்த சமயங்கள் எத்தனையோ உண்டு, “இவள் ஒரு நேரமாவது சாமியைக் கும்பிட்டிருக்கிறாளா? சதா சாப்பிடுறதும் புத்தகம் வாசிக்கிறதும் தான் வேலை. என்ன கர்மம் என் வயித்தில் வந்துபிறந்ததோ?” என்று திட்டிக் கொண்டு போகும் போது இவள் கோபப்பட்டதில்லை. மாறாக தாயின் அற்றாமையைக் கண்டு இன்னும் அநுதாபப்பட்டிருக்கிறாள்.
இன்னொரு வேடிக்கை, அது இன்னும் சுவையானது. வீட்டில் ஏதாவது நெருக்கடி நிலை ஏற்பட்டுவிட்டால், யாருக்காவது சுகயீனம் ஏற்பட்டு விட்டால் அல்லது காசு இழப்புகள் நேர்ந்துவிட்டால், அல்லது யாராவது வீட்டை விட்டு நெடுந்தூரப் பயணத்திற்கு அடுக்கு பண்ணுகிறார்கள் என்றால் சாமிப்படத்தின் முன்னே விசேடக் கும்பிடல்கள் நேர்வதுண்டு. வழமையான காலை. மாலையோடு இடைநேரத்தில். மதியத்தில் என்று ஏதாவது நெருக்கடி வந்தால்தான் கடவுள் நினைப்பு. விசேட ஆராதனைகள். இல்லை என்றால் விளக்கேற்றி அணைக்கிற மாதிரியான காலை மாலைச் சடங்கு வழிபாடு. அதன் பிறகு கடவுள் நினைப்பே எழுகிறதில்லை. எல்லாம் நான்தான். சர்வ வல்லமையும் எனக்குண்டு. எல்லாம் என்னால்தான் நடக்குது என்ற தோரணையில் நடப்பு. செத்த வீட்டுக்குப் போனால்கூட “எல்லோருக்கும் சாவுண்டு. ஆனால் எனக்கில்லை’ என்ற பாவனையில்தான் கதை காரியங்கள். அப்படிப்பட்டவர்களை அவள் பரிதாபமாகப் பார்த்திருக்கிறாள்.
இந்த நேரத்தில் தான் திடீர் என்று ஒரு மாயக்கை குட்டுகிறது. ஒவ்வொரு ஆளுக்கும் ஏற்றமாதிரி அவரவர் நிற்கும் நிலைப்பாட்டிற்கு பொருந்துகிறமாதிரி தலையிலோ, பிடரியிலோ, சள்ளையிலோ குட்டு விழுகிறது. அவரவர் நிற்கும் நிலையைக் கணக்கெடுத்த குட்டென்றபடியால் குட்டுவாங்கிய அனைவரும் தம்நிலை தளர்ந்து போகின்றனர். திடீரென்று எல்லோரையும் ஒரு பயம் கெளவிக் கொள்கிறது. மரணபயம். நீருக்கு வெளியே முதலை விழிகளை மட்டும் காட்டி மிதப்பது போல் ஏதோ ஒன்றின் மரத்த பார்வை. அவ்வளவுதான். ‘ஐயோ, கடவுளே” என்று நாக்குளற நீருக்குள்ளே ஆழ்பவன் எதையாவது எட்டிப்பிடிக்கிற அவசர கோலத்தில் இறைவன் முன்னே போய் விழுகின்றனர். ஒரு நேரமும் கும்பிட நேரமற்றவர் இரண்டு நேரமும் கும்பிடுவர். இரண்டு நேரக் ‘கும்பிடு கள்ளர்’ நாலு நேரமாக்குகின்றனர். விநாயகர் முன்னே தோப்புக்கரணம் போடும் ஒருவர், அடிக்கடி நெஞ்சிலே சிலுவைக் குறியைப் போடும் இன்னொருவர். சர்வாங்கமும் நிலத்தில் பட விழுந்தெழும்பும் வேறொருவர். அப்படி அவசர அவசர கோலங்களில் பெருக்கெடுக்கும் பக்தி வெள்ளம்.
அவளுடைய அம்மாவிற்கும் அப்படி ஒரு மாயக்கையின் குட்டு விழவே செய்தது. அதுவரைக்கும் அந்த வீட்டின் ராணியாக அதிகாரம் செய்து கொண்டு வந்தவள் அதன்பிறகு திடீரென கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவள் போல் அந்தரித்துப் போனாள். தானும் தன் அறையுமாக முடங்கிக் கொண்டாள். இல்லை, அறைக்குள் முடங்கிக் கொள்ளக்கூட முடியாமல் திணறினாள். திடீரென எதையோ இடையில் கண்டு விழித்தெழுந்த குழந்தையின் மிரள்வு. அங்கு எதைக் கண்டு பயந்தாள்? அந்த முதலையின் மரத்தார்வை?
அம்மாவுக்கு விழுந்த அந்தக் குட்டு! அது எவ்வளவு நுட்பமாக நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் கோட்டை ராணுவத்தின் ஷெல் வீடுகளில், கடைகளில் விழத் தொடங்கியிருந்த காலம். அக்கம்பக்க வீடுகளில் எல்லாம் அது விழுந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அவளுடைய அம்மா கலங்கவில்லை. காரணம் கடவுளின் மேல் இருந்த பக்தியினால் அல்ல. எப்பொழுதுமே தனக்கொன்றும் நேராதென்ற அவளுடைய தற்போக்கான சுபாவம். ‘மற்றவர்களுக்குத்தான் மரணம் எனக்கு மட்டும் அது இல்லை’ என்ற அதே சுபாவம். ஷெல் விழுந்த வீடுகளுக்கெல்லாம் சென்று, தனது துக்கத்தைத் தெரிவித்து விட்டு வரும்போது கூட “உங்கள் வீடுகளில்தான் ஷெல் விழும், என் வீட்டில் அல்ல” என்ற பெரும்போக்குத்தான் அவள் முகத்தில் ஒட்டியிருக்கும்.
அப்போதுதான் அந்தக் குட்டு விழுந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அம்மா குசினிக்குள் நின்று தடபுடலாகச் சமைத்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது. திடீரென காதுச் சவ்வு சிதறுவது போன்று பேரிடி. அம்மா அடுப்பில் வைக்கக் கொண்டு போன குழம்புச் சட்டி கைநழுவிச் சிதற, அப்படியே தடாலென்று கீழே விழுந்து விட்டாள். ஆனால் வீட்டுக்கு அப்படி ஒன்றும் நேரவில்லை. சமையலறையின் புகைபோக்கி சிதறியது மட்டும்தான். எஞ்சிய அனைத்தையும் அதன் அருகே நின்ற சிறிய தென்னங்கன்று உள்வாங்கிப் பொருமிச் சிதறியது.
ஆனால் அம்மாவுக்கு அவ்வளவும் போதும். அதிலிருந்து அவள் மீளவில்லை. எதையோ சாகக் கொடுத்தவள் போல் உயிரற்றுத் திரிந்தாள். கூட்டுவது, படத்துக்கு விளக்கு வைப்பது போன்ற எல்லா அடிப்படை அலுவல்களையும் பெரும் உற்சாகமாக நடத்திக் கொண்டுவந்தவள் இப்போ எல்லாவற்றையும் கைவிட்டு ஆழமாகத் தனக்குள் புதைந்து கொண்டாள்.
அம்மாவின் இந்த நிலை அவளை முன்னுக்குத் தள்ளியது. தானுண்டு தன் வாசிப்புண்டு என்று பொறுப்பற்று திரிந்தவள் இப்போ வீட்டுக் கடமைக்குள் தள்ளப்பட்டாள். இந்த வேளையில் தான் அவளுடைய கணவனும் வந்து சேர்ந்தான். வவுனியாவில் கடை வைத்திருந்தவன் ஆமிக்காரரின் அட்டகாசம் கூடியதால் கடையைப் பூட்டிவிட்டு வீட்டில் ஷெல் விழுந்ததையும் பார்த்து விட்டுப் போக வீட்டுக்கு வந்திருந்தான். வீட்டுக்கு வந்தவன் வழமைக்கு மாறாக இரு விஷயங்களைக் கண்டான். முதலாவது அவனது மாமியின் முகம் இருண்டு கிடந்தது. மாமி கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைப்பது தெரிந்தது. இரண்டாவது அவன் மனைவி கமலம் புத்தகமும் வாசிப்புமாக இருப்பவள் இப்போ திடீர் என எல்லாப் பொறுப்புகளையும் தன் மேலேற்றிக் கொண்டு வளைய வளைய வந்தாள். ஆனால் அவள் மேற்கொண்ட எல்லா வேலைகளிலும் ஒரு கச்சிதமும் ஒளியும் தவழ்வது போல் அவனுக்குப் பட்டது. அது அவனை ஏதோ பரவசத்தில் ஆழ்த்தியது.
அவன் மனைவிதான் இப்போ படத்து விளக்கை ஏற்றினாள். ஆனால் ஒரு மாற்றம். அதுவே பெரிய மாற்றம். படத்து விளக்கு முன்போல் அணைக்கப்படுவதில்லை. சதா எரிந்து கொண்டிருந்தது. எண்ணெய் விடும் சமயங்களில் மட்டும் அது அணைக்கப்பட்டாலும் பின்னர் விளக்கு மினுக்கப்பட்டு தீபத்தை அது ஏந்தத் தொடங்கும்போது ஏதோ ஓர் தூய ஆனந்தச் சுடர் துளிர்ப்பதை அவன் புதிதாக உணர்ந்தான். இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் காலையில் குளித்துத் திலகமிட்டு கூப்பிய கரங்களுடன் படத்தின் முன்னே நிற்கும் அவள்.
ஓர் புதிய மனைவிளக்கு!
அவன் அவளைக் கலியாணம் முடித்த காலத்தில் அவள் படுக்கை அறையில் எத்தனையோ கதைகள் அவனுக்குச் சொல்லியிருக்கிறாள். தான் வாசித்த புத்தகங்களிலிருந்து தனக்குப் பிடித்தமானவற்றை சொல்லத் தொடங்குவாள். அவற்றுள் எப்பவும் ஆத்மீகம் சம்பந்தப்பட்ட உண்மைக் கதாபாத்திரங்களே முதன்மை பெறுவதைக் கண்டிருக்கிறான். ராமகிருஷ்ணர் – சாரதாதேவி ஜோடி, சுவாமி ராமதாஸரைப் பின் தொடர்ந்த ஒரு அம்மையார், அரவிந்தரோடு இணைந்து பணி செய்த பிரஞ்சு அன்னை, ரமணரின் மடியில் உயிர் துறந்து முக்தி கண்ட அவரது தாய், யேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அருகில் நின்று தரிசித்த மேரி மக்தேலேனா, முகமது நபி அவர்களை மணந்து கொண்ட அவரை விட இருபது வயது மூத்த கதீஜா அம்மையார் என்று அவள் இவனுக்கு அடுக்கிக் கொண்டே போவாள் இவனுக்குக் கொட்டாவி வரும். ஆனால் நிறுத்தமாட்டாள். இவன் கடைசியில் சலிப்பத் தட்டி பொறுமையின் எல்லையை மீறிய நிலையில் “கமலம் நீ கல்யாணம் கட்டாமல் கன்னியாஸ்திரி மடத்தில் தான் சேர்ந்திருக்க வேணும்” என்பான்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க” அவள் திருப்பிக் கேட்பாள் திகைத்தவளாக.
“அவையளுக்குத்தான் இந்தக் கதை சரி” என்பான் சினம் மேலிட்டவனாய்.
“இல்லை. கலியாணம் முடிச்சவைக்குத்தான் இந்தக் கதைகள் உதாரணமாக இருக்க வேணும்” என்று அவள் ஓர் அருமையான விலாதத்துக்குள் புருஷனை விழுத்தலாம் என்று தயாராகும்போது அவனிடமிருந்து குறட்டை ஒலி எழுந்து கொண்டிருக்கும்.
அவன் அதிகம் படிக்காதவன். கல்வித் தராதரப் பத்திர அளவுகோல்படி பார்த்தால் அவனுக்கும் அவளுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதற்கில்லை. இரண்டொரு வருடம் அவனைவிட பல்கலைப் புகுமுகப் பரீட்சைக்காக அவள் முயற்சித்திருந்தாள். அவ்வளவுதான். அதற்குள் இவனை அவள் கல்யாணம் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அவள் அழகிய மூகத்தில், அதிகம் துருதுருக்காது மௌனித்து நின்று அசையும் அந்த விழிகளின் கூர்ந்த ஊடுருவலில், பலவித பட்டங்களையெல்லாம் அடுக்கிய எத்தனையோ படிப்பாளிகளுக்குப் புரியாத விஷயங்களெல்லாம் வெகு எளிதாகவே புரிந்து விடும் என்பது மட்டும் அவன் உள்ளுணர்வுக்கு அவளைக் கல்யாணம் கட்டிய சில நாட்களிலேயே புரிந்து விட்ட ஒன்று. அவனே தன் மனைவியின் தனித்த பார்வையை நேருக்கு நேர் சந்திக்க விரும்புவதில்லை. அவளது கூர்ந்த ஊடுருவலில் அவனுள்ளேயே இருப்பவை எல்லாம் வெளிவந்துவிடும் போன்ற பயம். அந்நேரங்களில் அவன் வேறு தேவையற்ற கதைகளில் அவளை திருப்புவான். செக்ஸ் கதைகளில் கீழிறக்கப் பார்ப்பான். அவள் திமிறினால் அதை விட்டு ஆமிக்காரர்களின் ஷெல்லடி பற்றி பயமூட்டுவான். இது அவளுக்கு இன்னும் சிரிப்பையே மூட்டும். இச் சிரிப்பினால் அவன் உள்ளாந்தரங்கம் நிர்வாணமாக்கப்படப் போகிறதென்ற அபாய விளிம்பில். தன் கதையை மாற்றி தன் உடம்பிலே உள்ள வியாதிகள் பற்றி அளக்கத் தொடங்கி விடுவான். உடனேயே அவளின் விடுபட்ட நிலை மாறும். அவனில் அக்கறையும் ஆதரவும் பெருகும். அவ்வளவுதான். அவன் அதற்குள் புதையுண்டு போவான். ஆனால் சில வேளைகளில் எக்கச்சக்கமாக எதிர்பாராதவிதமாக அவளின் தனித்த பார்வைக்குள் விழ நேர்ந்து விட்டால் அவளைத் திசைமாற்ற அவனுக்கு வேம்பாகக் கசக்கிற. ஆனால் அவளுக்கு கரும்பாக இனிக்கின்ற அந்த விஷயத்தை தன் கவசமாகப் பாவிப்பான். அதுதான் ஞானிகள் பற்றிய வாழ்க்கை, அல்லது அவை பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்.
”ராமகிருஷ்ணர் உபதேசங்கள் எழுதிய அந்தச் சீடர் ஆரப்பா?” என்று சும்மா கேட்டு விட்டால் போதும். அவள் கண்களில் ஆனந்தம் கூத்தாட சங்கிலித் தொடராக அவிழ ஆரம்பித்து விடும். பத்து வார்த்தைகள் அவள் பேச முன்னரே கேள்வி கேட்ட அவள் புருஷன் கொட்டாவி தள்ளத் தொடங்கி விடுவான் அவள் மெய்மறந்த நிலையில் பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் திடீரென எழும் கணவனின் ”கர்புர்” என்ற குறட்டை ஒலி அவளை அவள் நிலைக்கு கொண்டுவரும். அப்போது அவள் கடை இதழ் முறுவலில் ஆயிரம் அர்த்தங்கள் வந்து மறையும். ‘என்னிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ளப் பாடுபடும் என் அன்புக் கணவன்’.
இப்படி எத்தனையோ விஷயங்கள் எத்தனையோ தடவை நடந்திருக்கின்றன. அவனுக்கு புத்தக்கள் படிப்பதென்பது பிடிக்காத ஒன்று. அவன் வீட்டில் வந்து நிற்கும் போது அவனை நித்திரை கொள்ள வைக்க வேண்டுமென்றால் ஒரு புத்தகத்தைப் படி என்று கொடுத்து விட்டால் போதும். ஒரு பந்தி படிக்க முன்னரே அவன் விழிகள் மேல்திசையில் சொருக ஆரம்பித்து விடும். ஆழமான விஷயங்களை அவள் விளக்கிக் கொண்டிருக்கும் போது அவன் மனம் வவுனியா பசாரில் அறவிட வேண்டிய நிலுவையையும், அமரசிங்கம் பற்றியதையும், சிவராசா கொடுத்ததையும் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும், அது அவளுக்கு பழகிப்போன விடயம் ஆனால் அதற்காக அவள் அவனோடு ஆழமான விஷயங்கள் காமல் நிறுத்தி விடவில்லை. ‘கடமையைச் செய். பலனை ராதே’ என்ற ரீதியில் அவள் அதைச் செய்து கொண்டே வந்தாள். அவளுக்குத் தெரியும். தான் ஊதிவிடும் பொறிகள் என்றைக்காவது ஒருநாள் இன்றைக்கோ நாளைக்கோ அல்லது அடுத்த ஜன்மத்திலோ கனன்று பரவும் என்று.
அவனுக்கும் தன் மனைவி பற்றி நன்றாகத் தெரியும். அவளுக்கு கடவுள் மேல் இருந்த ஆழமான நம்பிக்கையையும் அதனால் ஞானிகளிடம் அவள் வைத்திருக்கும் மாறாத வாஞ்சையையும் அவன் அறிவான். ஆனால் அவனுக்கு ஒன்று புரியாமல் இருந்தது. இவ்வளவு ஆழமாக கடவுளிடம் காதல் வைத்துள்ள தன் மனைவி ஒருநாளாவது சுவாமி படத்துக்கு விளக்கேற்றியதையோ அதன் முன்னே நின்று மெய்யுருகக் கும்பிட்டதையோ அவன் கண்டதில்லை. காலை மாலை முகம் கழுவிய பின்னர் மட்டும் சுவாமி படத்தருகே சென்று திருநீறு பூசிக் கொள்வாள். அந்தத் திருநீற்றுப் பூச்சுத்தான் அவள் தன் பக்திக்கு கீறிவிட்டிருந்த வாய்க்காலோ என்னவோ.
அவன் பயணம் வெளிக்கிட்டால்கூட அவள் அம்மாதான் படத்துக்கு விளக்கேற்றி ஒரு ‘ஸ்பெஷல்’ கும்பிடு போட்டு இவனையும் கும்பிட வைப்பாள். ஆனால் அவளோ திருநீற்றை மட்டும் தொட்டு நெற்றியிலும் தாலியிலும் பூசிக் கொண்டு அவன் சூட்கேசைத் தூக்கிக் கொண்டு “அப்ப வாருங்கவன் போவம்” என்று சொல்லிக் கொண்டு முன்னே நடக்கத் தொடங்கி விடுவாள்.
ஆனால் இந்த முறைதான் அவன் எதிர்பாராத திடீர் மாற்றம். அவன் தங்கள் வீட்டில் ஷெல் விழுந்ததாகக் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்தபோது அவன் தன் வீட்டு நிலைமை முற்றாக மாறி அதிகாரங்கள் கைமாறப்பட்டிருந்ததை உணர்ந்தான். சதா இயங்கிக் கொண்டிருந்த அவன் மாமி ஷெல் விழுந்ததோடு இயக்கம் குன்றி அழுக்குத் துணி போல் ஓர் மூலையில் குவிந்து போய்க் கிடந்தாள். அவன் மனைவியோ மாமி புரிந்த சகல வேலைகளையும் தான் ஏற்று மிகக் கச்சிதமாகவும் பூரணமாகவும் செய்து கொண்டு வந்தாள். அவள் தனது ஒவ்வொரு செயலின் முடிவிலும் புதுப்புது ஒளி தரித்து திரைநீக்கி வெளிவருவதுபோல் வந்து கொண்டிருந்தாள்.
அவள் இப்போ முன்பைவிட பன்மடங்கு அழகாக இருந்தாள்.
அந்த அழகு அவனுக்கு ஏதோ ஆபத்தையே தந்தது.
அவளது விழிகள் முன்பை விட ஒளி காலித்தன.
இவனுக்கு அவற்றை எதிர்கொள்ளுதல் என்பதையே நினைக்க முடியாமல் இருந்தது. முன்பு வந்து நிற்கும் சமயங்களில் அவளோடு முனையும் செக்ஸ் ரீதியான தாம்பத்திய உறவுக்குரிய அணுகுமுறையை இம்முறை அவனால் ஏனோ நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. அந்த ரீதியில் அவளை நினைத்துப் பார்க்கவே அவனது ஆண்மை சுரத்துக் கெட்டது போல் நின்றது.
ஆனால் அவளோ மாறாக அவனிடம் மிக நெருங்கி குழைந்து குழைந்து பழகினாள். அவள் மிக நெருங்கி அவனோடு குழையும் ஒவ்வொரு கணமும் அவள் உள்ளாத்மா எங்கோ கண்ணுக்கெட்டாத் தொலைவில் ஓர் மலையின் கொடுமுடியில் சஞ்சரிக்கும் விடுபட்ட தன்மையை அவன் அவளில் ஸ்பரிசிப்பது போல் ஒரு கணம். ஆனால் அடுத்த கணம் “இஞ்சாருங்கோ அப்பா” என்று அவள் அழைத்து, அவனுக்காக இம்முறை அவள் ஸ்பெஷலாக செய்த லட்டு ஒன்றை அவன் வாயுள் திணித்து விட்டுச் சிரிக்கும்போது, எங்கோ கொடுமுடியில் கண்ணுக் கெட்டாத் தொலைவில் நின்ற அவள், ”க்ளுக்” என்று அவன் இதயத்துள் புகுந்து கிக்கிணித்த ஸ்பரிசம் அவன் கபாலமனைத்தும் பனிக்க டி வெள்ளிச் சிதறலாய் சில்லிடும். அதுவும் ஒரு கணமே. அவள் தன்னோடு தானா அல்லது வெளியிலா, தொலைவிலா என்று புரியாத ஓர் அல்லலில் அவன் கண்கள் பனிக்கும்.
“இஞ்சாருங்கோ, ஏன் அழுகிறியள்?” என்பாள் அப்போது.
“நான் அழேல்ல, ஆனால் என்ர மனம் நினைக்கிறதை உன்னை மாதிரி எனக்கு சொல்லத் தெரியாது. அதனால் அழுகிறன். ஆனா எனக்கு உன்ர மடியில குழந்தைப் பிள்ளை மாதிரி படுத்துக் கிடந்து புரளோணும் மாதிரி இருக்கு” அவன் தன்னுடைய மன அவசத்தை கொட்ட முனைவான்.
“உங்களோட போட்டி போட்டெண்டு மடியில புரள இன்னும் கொஞ்சக் காலத்தில ஒண்டு வரப்போகுது. அப்ப என்ன செய்யப் போறேங்க?” என்று கேட்டு விட்டு அவள் லேசாகச் சிரிப்பாள்.
இவனுக்கு அவளின் அந்தப் பேச்சு, அவளைச் சுற்றிச் சுற்றி அமானுஷய கோலம் பூணும் பல நிகழ்வுகளையும் பூமியில் இறக்கி வைத்தது போல் ஆறுதலைத் தரும். இவன் அவளை வாஞ்சையோடு பார்ப்பான். அவள் அந்தப் பார்வையை எதிர் கொள்வாள். அவ்வளவுதான். இவனிடம் உள்ளே இருப்பனவெல்லாம் வெளிவந்து விடும் போன்ற அந்தப் பார்வையினால் இவன் கூனிக் குறுகி எங்கோ முகம் புதைப்பான். மீண்டும் அவளைச் சுற்றிய சூழல் அனைத்தும் அமானுஷ்ய தளவட்டங்களாய் ஏறிஏறி விரிவன போல சுழலத் தொடங்கும்.
இவன் அச்சூழலில் அள்ளுப்பட்ட துரும்பாய் எங்கோ எங்கோ வீசப்பட்டுக் கொண்டிருப்பது போல்.
அவளுக்கு கவலையாகப் போய் விடும்.
அவனைப் பற்றித் தெரிந்தும் தான் ஏன் அப்படிப் பார்க்க வேண்டும் என்று அவள் தன்னையே கடிந்து கொள்வாள்.
அவனது வாஞ்சை நிறைந்த பார்வையை வளர விட்டு, அதன் நிழலில் அவனைச் சிறிது இளைப்பாற வைத்திருக்கலாமே என்று தன்னுள் வருந்துவாள்.
அவன் வீட்டுக்கு வந்தாலும் பாவம், அந்தரப்பட்டவன் போலவே வரவரத் தெரிகிறான். அவனை அமைதிப்படுத்தி மெல்லமெல்லவாக அவனைத் தனது பார்வை மூலம் தனக்குள் இழுத்து தானும் அவனும் ஒன்றென்பதை புரிய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தும் அவள் தவறிவிடுகிறாள்.
மீண்டும் அவன் எப்போ அந்த வாஞ்சையோடு பார்ப்பான்?
அவள் காத்திருப்பாள்.
ஆனால் அவன் பார்க்கவே இல்லை. அதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் வராமலே போய் விட்டது.
அவன் இந்த முறை வவுனியாவில் இருந்து வந்து வழமைக்கு மாறாகக் கொஞ்சக் காலம் கூடுதலாகவே தங்கி நின்றான். காரணம் அவனுக்கு அவளில் தன்னை நெருக்கமாக்கி விட்டுப் போக வேண்டுமென்ற ஆசை. அது அவனுக்கு அவளைக் கலியாணம் முடித்த காலத்தில் கைகூடியிருந்தது போல் பட்டது. அந்த நெருக்கம் எப்படி அப்போது கைகூடுவதாக இருந்தது? அதுபற்றி அவன் பலவாறாகச் சிந்தித்தபோது அவனுக்குத் தட்டுப்பட்டது அதுதான். அவளில் அவன் நெருக்கம் என்பது, ஆமாம் அதனால்தான் என்று முடிவுக்கு வந்தான். எதனால்?
உடலுறவு!
இந்தமுறை அவன் வந்து நின்ற போது அவன் அதற்குரிய சூழலை கூட்டுவித்து, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவளுக்கு வலைவிரித்தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அவள் இவன் விரித்த வலையை. குடையைச் சுருக்குவது மாதிரிச் சுருக்கி இவனிடமே நீட்டி ‘இதுக்கு அவசியமில்லை’ என்பது போல கண்களால் கூறிவிட்டு அவன் நினைவுக்கு ஏற்ப அவனுக்காகவே அன்று காத்திருந்தாள்.
அன்று அவன் அவளைக் கூடியபோது என்றைக்குமில்லாத ஆனந்தத் திளைப்பில் அவன்: முதலிரவன்று கூட அப்படி களிவெறி கொண்டிருக்கமாட்டான் போலவே பட்டது. தான் அவாவிய நெருக்கத்தை ஸ்தாபித்துவிட்டதாகவே குதூகலித்த அவன், அன்றைய இன்பக் கலவியின் எச்சப்பொழுதில் அவள் முகத்தை தைரியத்துடன் எதிர்கொண்டபோது அவள் இதழ் கோடியில் சுழித்த அந்தப் புன்னகை, அவனை எங்கோ அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு அவளை எங்கோ எங்கோ அவன் எட்டமுடியாத தொலைவிற்கு இட்டுச் சென்றது. நெருக்கத்தை ஸ்தாபிக்க அவன் எடுத்த வழிமுறை, இருந்த அற்ப சொற்ப நெருக்கத்தையுமே அள்ளிச் சென்றுவிட்டது போல் பட்டது. அவன் தனது உடலை அவளிடமிருந்து பிரித்தெடுத்தபோது அவன் தனது நெஞ்சுக் கூட்டிலிருந்து ‘வீர்’ என வெளிப்பறந்து செல்லும் கிளியை றாஞ்சிப் பிடிக்க எத்தனித்துச் சோரும் ஒருவனின் ஆற்றாமையைத் தன்னில் கண்டான்.
அதன் பின் அவனது சின்ன மூளையால் அவளோடு நெருக்கமுறும் மார்க்கங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதற்குப் பின்னர் அவன் அதிகநாள் வீட்டில் நிற்கவில்லை. ஆமிக்காரரின் அட்டகாசம் வவுனியாவில் சிறிது ஓய்ந்து விட்டதாகக் கேள்விப்பட்டதும் அவன் புறப்பட்டுவிட்டான்.
ஆனால் புறப்பட்டவன் புறப்பட்டதுதான்.
அவன் புறப்பட்ட நேரம் என்ன நேரமோ வவுனியா மீண்டும் கலவரப்பட்டது. ஒரு போராளியின் குண்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரியின் கோர மரணம் மீண்டும் இராணுவத்தை வவுனியாவில் கட்டவிழ்த்திருந்தது. கலவரத்தில் வியாபார ஸ்தாபனங்கள் பல தகர்க்கப்பட்டன. இன்னும் பலர் தெருக்களில் சுடப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு ரயர்களால் கொழுத்தப்பட்டனர். இரவோடிரவாக பல இளைஞர்கள், நடுத்தர வயது ஆண்கள் கைது செய்யப்பட்டு பூசாவுக்கு அனுப்பப்பட்டனர். இன்னும் சிலர் வேறு இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வவுனியாவிற்கு வந்த இவனும் இதற்குள் சிக்கிக் கொண்டான். இந்தத் தண்டனைகளில் ஏதாவது ஒன்றுக்குள் அவன் வீழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று. அவனது கடை உடைத்துத் தகர்க்கப்பட்டு சூறையாடப்பட்டுக் கிடந்தது.
அதைத்தேடி அவன் பின்னர் வரவில்லை.
அதன் பின்னர் அவன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்குப்
போகவுமில்லை. அவன் சுடப்பட்டுவிட்டானா? அல்லது பூசாவுக்கோ வேறு ராணுவ முகாமுக்கோ எடுத்துச் செல்லப்பட்டானா?
(2)
அவள் சுவாமிப் படத்தருகே கூப்பிய கரங்களோடு நிற்கிறாள். மெய்மறந்த நிலை. கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அன்றொருநாள்
அந்தச் செய்தி வந்த போதும் அவள் கூப்பிய கரங்களோடு கண்களில் நீர் மல்க சுவாமிப் படத்தருகே ஏற்றிய தீபத்தோடு போட்டி போடும் இன்னோர் தீபமாய்த்தான் நின்று கொண்டிருந்தாள்.
அவள் அம்மாதான் அவளிடம் மேலும் கீழும் மூச்சுவாங்க ஓடோடி வந்து கூப்பிட்டுச் சொன்னாள்.
“எடி புள்ள, எடி புள்ள” அவள் அம்மா சுவாமி அறையின் வாசல்படியருகே நின்று கொண்டு ஓலமிட்டாள்.
அந்தமாதிரியான சமயங்களில் அவள் யார்கூப்பிட்டாலும் பதில் கொடுப்பதில்லை. அவள் அவளாய் அப்படியே நிற்க, அவள் இருப்பு அவளிடமிருந்தே வழுவிக் கொண்டோடும் அந் நேரங்களில் வெளிப்புற ஊடுருவல்கள் அவளைச் சென்றடைவதில்லை. ஆனால் அன்று தன் வழிபாட்டை முடித்துக் கொள்ளும் சமயத்தில்தான் அவள் வந்து கூப்பிட்டாள்.
“என்னம்மா?” என்ற கேள்வியில் எதையும் யூகிக்க முடியாதவளாய் வெளியே வந்தாள் அவள்.
“எடிபுள்ள வவுனியாவில் பெரிய குழப்பமாமடி. ஆமிக்காரர் கனபேரை சுட்டுப் போட்டாங்களாம். உன்ர அவரையும் காணேல்லயாம். அவற்ற கடையையும் உடைச்சு நெருப்புவைச்சுப் போட்டாங்களாம்”. அவள் அம்மா நாக்குளற கூறிக் கொண்டு போனாள்.
“இதெல்லாம் உனக்காரம்மா சொன்னது?” அவள் அமைதியாகவே கேட்டாள்.
“இப்பதான் வவுனியாவிலிருந்து தப்பியோடி வந்த சோமற்ற கிளியன் சொல்லிக் கொண்டு நிக்கிறான்’ என்று அம்மா சொன்ன விதம் ‘எடி மோன நீ போய் எல்லாத்தையும் வடிவா கேட்டன்டு வாடி’ என்று கெஞ்சுவது போலப் பட்டது.
அவள் அம்மா சொன்ன இடத்துக்கு கேட்டுவரப் புறப்பட்டாள்.
ஆனால் அவள் ஒரு அடி எடுத்து வைத்திருக்க மாட்டாள். திடீரென்று அவள் உள்ளங்காலின் மையத்தில் உப்புக்கல்லை வைத்துச் சுட்டது போல் அவளுக்கு ஒன்று சிரசில் உறைத்து வெளித்தது.
அது அவள் கணவனைப் பற்றியதுதான். ‘நீ ஏன் போகிறாய்?’
அவளுக்குள் எழுந்த அந்தக் கேள்வி, அவளைப் போகவிடாமல் திருப்பிவிட்டது.
அம்மாவுக்கு அந்தரம்.
அவளைவிட அவள் அம்மாதான் நிலை கலங்கி நின்றாள். மீண்டும் அந்த மாயக்கையின் குட்டு.
இந்த முறை யாருக்கு?
நிச்சயமாக அவளுக்கல்ல.
இம்முறையும் அவள் அம்மாவுக்குத்தான். அம்மாதான் மருமகனின் உழைப்பிலும் பணத்திலும் மனங் கொழுத்துக் கிடந்தவள். மற்றவரின் சாவையும் சரி வாழ்வையும் சரி தூசாக நினைத்தவள்.
இப்போ மருமகனின் கடை உடைக்கப்பட்டு விட்டது. மருமகனையும் காணவில்லை. ஒரு மூலையில் குந்தியிருந்தபடி அம்மா அழத்தெரியாமல் அரற்றிக் கொண்டு கிடந்தாள்.
மகள் முற்றத்து வாசற்படியில் குந்திக் கொண்டிருந்தாள். முற்றத்து மாமரங்களுக்கூடாக தெரிந்த வானவெளியில் இடைக்கிடை தோன்றிய கருமுகில் திரள்கள் ஒன்றையொன்று பிடித்துக் கொள்ள ஓடுவனபோல் ஓடிக் கொண்டிருந்தன.
கடைசியாக அவளிடமிருந்து பிரிந்து சென்ற கணவனின் முகத் தோற்றம் அவள் கண் முன்னே மிதந்து மிதந்து வந்தது.
இவள் அவனை தன்னோடு நெருக்குவிக்க கடைசியாக எடுத்துத் தோற்ற முயற்சி ஒன்று அவள் முன்னே விரிந்தது.
ஏதாவது மனதுக்கு ஆழமான விஷயங்களுக்குள் அவனை இழுத்ததும் அவன் அவளிலிருந்து விடுபட்டு அவனாகவே அந்நியப்பட்டுப் போவான். நுண்ணிய விஷயங்கள் என்றால் அவன் தூண்போல் எண்ணமில்லாது இருப்பான். அன்று மதிய உணவை முடித்துவிட்டு அவன் கட்டிலில் வந்தமர்ந்தபோது அவள் பாரதியாரின் ‘நந்தலாலா’ பாட்டைப் பாடிக் காட்டிவிட்டு அதில் ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்ற வரிகளை சற்று ராகம் இழுத்துப் படித்து விட்டு “பாத்தீங்களாப்பா. தீக்குள் விரலை வைக்கின்ற போதுகூடப் பாரதியாருக்கு இறைவனை தொடுகிற மாதிரி இன்பம் வருகுதாம். அந்த மாதிரி மனம் ஒன்றி எனக்கும் நெருப்பை தொட வேண்டும் போல இருக்கப்பா” என்றாள்.
அவன் பேசவில்லை.
“இந்தமாதிரி பாரதியாரின் மனநிலையில் தீக்குளித்தால் அது வெறும் தீக்குளிப்பாக இராது. ஒரு பெரிய தெய்வீக குளிப்பாகவே இருக்கும். இல்லையாப்பா?” என்று அவள் தொடர்ந்தபோது.
”உனக்கும் விசர்; பாரதியாருக்கும் விசர்” என்று கூறிவிட்டு அவன் தனது வழமையான கொட்டாவி ஊதலுக்குள் விழுந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
அவள் அவனை தன்னுள் நெருக்குவிக்க எடுத்த முயற்சிகள் அவனை அந்நியப்படுத்துவதாகவே அமைந்தது. அதே நேரத்தில் அவன் அவளை நெருக்கமுறுத்த எடுத்த முயற்சிகள் அவளுக்கு அவன்மேல் அனுதாபத்தையே ஏற்படுத்தின.
ஒவ்வொரு முறையும் அவன் வவுனியாவிலிருந்து வரும் பொழுது அவளுக்கு ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி வருவான். வாங்கி வந்து விட்டு அதை உடனேயே அவளுக்குக் காட்டமாட்டான். எங்காவது ஒளித்து வைத்து விட்டு சாப்பாட்டை முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகும்போது மெதுவாக அவளை நெருங்கி,
“இஞ்ச வா கமலம், உனக்கு ஒரு ரகசியம் காட்டிறன்’ என்று சொல்லி அவளை தனியாக அழைத்துப்போய் தான் அவளுக்கு மிக அக்கறையாக எடுத்துக் கொண்டு வந்திருக்கும் பொருளைக் காட்டுவான். அவள் அப்போது அவன் பாடுபட்டுக் கொண்டு வந்திருக்கும் பொருளை வேடிக்கை பார்க்கும் குழந்தைபோல் எட்ட நின்று விடுபட்டுப் பார்க்கும் தோரணையை பார்த்ததுமே, அவனுக்கு உடம்பே தொய்ந்து போய்விடும்.
ஒருமுறை அவன் அவள் பிறந்த தினத்தை ஞாபகம் வைத்து ஒரு வைரக்கல் மோதிரம் கொண்டு வந்திருந்த நிகழ்ச்சி அவள் நினைவில் ஓடிற்று. அவன் அன்போடு அவளை அழைத்துப் போய் அந்த ‘ரகசிய’த்தைக் காட்டியபோது, இச்சந்தர்ப்பங்களில் வழமையாக அவள் முகத்தில் தெரியும் விடுபட்ட புன்முறுவலோடு அந்த மோதிரத்தைக் கையிலே எடுத்து அப்படியும் இப்படியும் பார்த்து விட்டு மேசையிலே வைத்துவிட்டு அம்மா கூப்பிட்டதாகச் சொல்லிவிட்டு அவள் போக எத்தனித்த போது அவன்முகம் மழைவானம் போல் இருண்டு வந்தது இன்னும் அவளுக்கு நினைவிருந்தது. இப்போ அவள் முகத்தில் அதே இருள். கண்கள் கண்ணீரை நெஞ்சுக்குள் திருப்பி விட்டன போல் மௌனமாய் பளபளத்துக் கொண்டிருந்தன.
அவளும் அவனும் வெவ்வேறு தளங்களில் நின்று ஒருவரை ஒருவர் நெருங்க முயன்றனர் என்பதை அவன் அறியாவிட்டாலும் அவள் அறிவாள். அவனை எப்படியாவது கடைசியில் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்பதில் அவளுக்கு பூரண நம்பிக்கை இருந்தது. காரணம் அவன் அவளை உடலாலும் பொருளாலும் வசீகரிக்க முயன்றான். அவன் நின்ற பொருள்தளத்தை விட தன்னுடைய மனத்தளம் சக்திமிக்கது என்று அவள் அறிவாள். அவன் பற்றிய பொருள் நிலை மெல்ல மெல்லக் கரைய தன் தளத்துக்கு அவனைத் தூக்கி விடக்கூடிய சக்தி தனக்கு இருக்கிறது என்பதை அவள் நன்றாய் தெரிந்திருந்ததால்தான் அவள் அவனது போக்குக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தாள்.
அவன் முகம் அவள் முன்னே மிதந்து மிதந்து வந்தது. அவனை தன்நிலைக்கு இழுத்தெடுத்து விடுவதற்கு முதல் அவன் எங்கே போய்விட்டான்?
அவன் அவளோடு கொண்ட கடைசி உடலுறவும் அப்போது அவன் முகம் அடைந்த குதூகலப் பொலிவும்.
அவளுக்கும் அவனுக்கும் நடந்தது காதல் கல்யாணம் அல்ல. பேச்சுக் கல்யாணமே. ஜாதகம் பார்த்தவர்கள் பொருத்தம் நன்றாயிருக்கிறதென்றார்கள். சூத்திரருக்குப் பிரதானம் யோனிப் பொருத்தம் என்ற முறையில் அவர்கள் மிகப் பொருத்தமான ஜோடி என்றார்கள். மாங்கல்யப் பொருத்தமும் மிக நன்றென்றனர். அவள் சுமங்கலி. ஆகவே எல்லா விதத்திலும் பொருத்தமான ஜோடி என்று கூறியே விவாகம் நடந்தது.
ஆனால் அவன், அவளை உடலால் நெருங்க முயன்ற ஒவ்வொரு சமயமும் அவள் பொருந்தாது செட்டையைக் கழற்றிவிட்டுப் பறந்த பாம்பு போல அவள் மனதை எங்கோ பாழில் மிதக்கவிட்டுக் கொண்டிருப்பது போன்ற ஒரு தன்மையை அவன் உணர்ந்திருந்தான். ஆனால் அவனால் அதை விளங்க முடியவில்லை. அத்தோடு அது அவனுக்கு ஏனென்றும் புரியவில்லை. ஆனால் அவளும் அதை வேண்டுமென்று செய்யவில்லை. அது அவளுக்கு இயல்பாக வந்த ஒன்று. இந் நேரங்களில் அவள் தமக்குச் சாதகப் பொருத்தம் பார்த்த காலம் நினைவு வர, ‘நான் சூத்திரனா?’ என்று கேட்டுவிட்டுத் தனக்குள் சிரித்திருக்கிறாள். “அப்போ அவர்?’ என்று மீண்டும் ஒரு கேள்வி எழும். “பிராமணனாகப் போகும் சூத்திரன்” என்று அவளே அதற்கும் பதிலளித்துவிட்டு இளநகை பூப்பாள். ஆனால் இப்போ? அவர் என்னை ஏமாற்றி விட்டுப் போய்விட்டாரே? அவன் எங்கே போய் விட்டான்?
அன்று ஆமிக்காரர் வவுனியா நகரில் அட்டகாசம் புரிந்தபோது இவள் கணவனும் அவர்கள் கையில் சிக்கியிருக்கலாம். சிக்கியவனை அவர்கள் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்று டயர் போட்டுக் கொளுத்தியிருக்கலாம். அல்லது இவனை கைது செய்து பலரோடு பூசாவுக்கு அனுப்பியிருக்கலாம். அல்லது இவனைக் கைது செய்து விசாரணைக்காக வேறு ஆமிக்காம்புக்கு அனுப்பியிருக்கலாம்.
அவள் அம்மாவுக்கு நம்பிக்கை இருந்தது. அவன் எப்படியாவது திரும்பி வருவான் என்று. அவனது கடையில் வேலை செய்த வேலைக்காரப் பொடியன் நான்கு நாட்களாகக் காட்டில் பதுங்கியிருந்து விட்டு மெல்ல மெல்ல வெளிவந்து ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் கடையைப் பூட்டிக் கொண்டு பின்கதவால் ஓடிய போது இவள் கணவன் இருக்கவில்லை என்று பையன் சொன்னான்.
அப்படியானால் அவன் கடைக்குப் போகும் இடை வழியிலேயே ரோட்டில் ஏதாவது ஒன்று நடந்திருக்க வேண்டும்.
அவள் கணவன் பூசாவில் இருப்பதாக பூசாவில் இருந்து வந்த சிலர் கூறியதைக் கேட்டு அவள் அம்மா பெரிதாக முகம் மலர்ந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இவளிடமிருந்து வரண்ட புன்னகையே வெளிவந்து கொண்டிருந்தது. ஆயினும் அம்மாவின் தூண்டுதலில் அவள் பூசா இராணுவப் பொறுப்பாளருக்கு “எனது கணவன் சதாசிவம் நிரபராதி’. அவர் இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவர் அல்ல’ என்று எத்தனையோ அப்பீல்கள் எழுதி அனுப்பியிருந்தாள். இதற்கிடையில் அவள் கணவனை மீட்டுத் தருவதாகக் கூறிய இடைத்தரகர்களுக்கு ஆயிரக்கணக்கில் அவள் அம்மா இறைத்துக் கொண்டிருந்தாள்.
அவளும் இவற்றில் குறுக்கிடவில்லை. அவள் பார்வையும் புலனும் எங்கோ நிலைத்து விட்ட மாதிரியான தோற்றம்.
அவளது போக்கில் அவளது அம்மாவோ மற்றவர்களோ குறுக்கிடவில்லை. அவளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவள் எவ்வளவுக்கெவ்வளவு அமைதியாக இருக்கிறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவள் நிலை ஆழமானது என்று அவர்களுக்குத் தெரியும். என்றாலும் சிலருக்கு அவளின் போக்கு எரிச்சலையே கொடுத்தது. ‘சும்மா முண்டம் மாதிரி. இவளும் ஒரு பெண்ணா?’ என்று சிலரும், ‘மற்றவளவையெண்டா புருஷனைக் காணாத மாதிரிக்கு எப்படித் துடிச்சுப் பதறிப் போயிருப்பாளவை. இவள் புடிச்சு வைச்ச புள்ளையார் மாதிரி திரியிறாள். இவளும் ஒரு பெண்ணா?’ என்று வேறு சிலரும் தமக்குள்ளே குசுகுசுத்துக் கொண்டனர்.
ஆனால் அவள் போக்கில் மாற்றமில்லை.
ஆனால் அவள் அம்மா அவளை விடவில்லை. எப்படியாவது அவள் புருஷன் பூசாவில் இருக்கிறானா என்பதை நேரிலேயே போய் விசாரித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டினாள். மகளையும் அங்கு இழுத்துக் கொண்டு போய்விட்டால் வேலை சுலபமாகி விடும் என்ற ரீதியில் அவள் மகளைத் தூண்டினாள்.
அவள் அதற்கும் மறுக்கவில்லை. பயணத்திற்குத் தயாரானாள். ஆனால், அவர்கள் பயணத்திற்கு தயாரானபோதுதான் அவள் எழுதியனுப்பி யிருந்த அப்பீல்களுக்கு பூசாவிலிருந்து பதில் வந்திருந்தது. அதில் அவள் கணவன் ‘எஸ்.சதாசிவம் என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்னரே பூசாவிலிருந்து விடுதலை செய்து அனுப்பப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைக் கேட்டதும் அவள் அம்மா கலவரம் அடைந்தவளாக தலையிலேகையை வைத்துக் கொண்டு இருந்து விட்டாள்.
மூன்று மாதத்திற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்றால் அவர் இன்னும் ஏன் வீடு வந்து சேரவில்லை அவள் அம்மாவிற்கு தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. பின்னர் விஷயம் அறிந்தவர்களிடம் விசாரித்தபோது அவள் பெரிதாகத் தலையில் அடித்து அழத் தொடங்கி விட்டாள்.
கைது செய்த ஒருவரை எப்பவோ சுட்டோ அடித்தோ சாகடித் பின்னர் இப்படியும் இராணுவ முகாம்களிலிருந்து கடிதங்கள் வீட்டாருக்குப் போவதுண்டு.
அம்மாவின் அரற்றல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஆனால் அவளோ எங்கோ ஸ்தாபித்து விட்ட தனது இருப்போடு முன்னர்போல் இயங்கிக் கொண்டிருந்தாள்.
ஏற்கெனவே அவளில் எரிச்சல்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு இந்தச் செய்திக்குப் பின்னரும்அவள் தனது முன்னைய நிலையில் இருந்து மாறாதது இன்னும் எரிச்சலையே ஏற்படுத்தியது. அந்த எரிச்சலுக்கும் அதையொட்டி எழுந்த பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்துக்கும் அவர்கள் செயலுருவம் கொடுக்க ஆசைப்பட்டனர். அவர்களது ஆசைக்கேற்ப அவர்களுக்கு இலகுவாக ஒன்று கிடைத்தது.
அதுதான் அவள் விதவை என்னும் புதிய உருவாக்கம்.
அவள் பற்றிய இந்த உருவாக்கத்தை தமது நடத்தை மூலம் அவளுக்குப் புரிய வைக்க வேண்டுமென்று அவர்கள் செயல்பட்டனர். அப்படிச் செய்வதன் மூலமாவது அவளுக்குச் சுரணை ஏற்படாதா? அப்படிச் சுரணை ஏற்படுவதன் மூலம் அவள் தன் புருஷனை இழந்ததற்காக மற்றப் பெண்களைப் போல் தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்து தாம் உள்ளூரச் சந்தோஷிக்கக் கூடாதா என்ற பெண்களுக்கே உரிய பொறாமையின் குரூர ஆசை அவர்களிடையே பல்லைக் காட்டிற்று.
அவர்களின் இந்த ஆசைக்கு மேலும் தூபம் போட்டது, அவள் இன்னும் தனது கழுத்தை விட்டுக் கழற்றாத தாலி.
புருஷனைப் பறிகொடுத்த பிறகும் இவளுக்கென்னதாலி? இவள் தன் புருஷனுக்கு உயிரை மீட்டுக் கொடுத்த சாவித்திரி என்ற நினைப்பாக்கும்.
இந்தவிதமான பேச்சுக்களை அவள் காதில் படக்கூடியதாக அவர்கள் காற்றில் மிதக்க விட்டனர். இவற்றை அவளிடம் கடத்திச் சேர்ப்பிப்பதற்கும் ஊடகமாக அவள் அம்மாவையே பயன்படுத்தினர். இன்னும் எல்லாவித சுப, நல்ல பொதுக் காரியங்களுக்கு முன்னிற்கக்கூடாத ஓர் அமங்கலப் பெண் அவள் எனப் பலவழிகளாலும் அவளுக்கு அறிவுறுத்த முற்பட்டனர்.
ஆனால் இவை எவையும் அவர்கள் எதிர்பார்த்த சுரணையை அவளுக்கு ஏற்படுத்தவுமில்லை, துயர் மேகங்களை அவள் முகத்தில் கொணர்ந்து கவிக்கவுமில்லை. மாறாக இன்னும் அவள் வைராக்கியம் உற்றவளாய் இவர்களால் அவளை அணுகமுடியாத அந்த விடுபட்ட இருப்பில் தன்னை ஸ்தாபித்தவளாகவே நின்றாள். அந்த ஸ்தாபிப்பு அவளிடம் இறுக இறுக, அவள் முகத்தில் சிந்திப் பரவிய இளநகை, அவளை எதிர்கொள்வோர் அனைவரையும் தம்மை அறியாது அவளுக்கு மரியாதை செலுத்தத் தூண்டியது.
அவளது இந்தப் போக்கு அவளுக்கு சுரணை ஏற்படுத்த முயன்றவர்களுக்கு தாங்க முடியாத குமைச்சலையும் கொண்டு வந்து சேர்த்தது. இதனால் அவளுக்கு நேரடியாகவே ஏதாவது சுடச்சுடச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆத்திர நிலைக்கு அவர்களைத் தள்ளியது.
இவர்களில் கொஞ்சம் தைரியம் கொண்டவளான பக்கத்து வீட்டுக்காரிகளுள் ஒருத்தி ஒருநாள் அவளை தான் எதிர்பார்த்தது போலவே நேரடியாகச் சந்தித்த போது தான் எப்படிக் கேட்க வேண்டும் என்று மனப்பாடம் செய்து வைத்திருந்தவற்றை அப்படியே கேட்டுவிட்டாள்.
“தங்கச்சி கமலம், ஏனடி இன்னும் தாலியும் போட்டென்டு நிறச்சீலை கட்டியண்டு திரியிற? இதைப் பார்க்கிறவை உன்னைப் பற்றி ஏதாவது கூடாம நினைக்கப் போயினம்” இப்படிப் பக்கத்து வீட்டுக்காரி கேட்டாளோ இல்லையோ அவள் எந்தவிதமான உணர்வலைகளையும் முகத்தில் எழுப்பாது சட்டென அவளைத் திருப்பிக் கேட்டாள்.
”அக்கா, என்ர புருஷன் செத்துப் போயிருக்கலாம் சரி, ஆனா அந்தக் கடவுளுமா செத்துப் போயிற்றார்?”
கேட்டவள் ஒன்றும் விளங்காது “என்ன தங்கச்சி சொல்லிற?” என்றாள் அவள் முகத்தை நேராக நோக்குவதற்குப் பயந்தவளாய்.
“நான் என்ர புருஷனில் கடவுளைத் தானக்கா கண்டனான். அந்தக் கடவுள் செத்தா போயிற்றேர்?” என்ற பதிலின் பூரண அர்த்தம் கேட்டவளுக்கு விளங்கிற்றோ என்னவோ. கமலம் போய் விட்டாள்.
எல்லா விக்கினங்களுக்கும் காரணமான விநாயகன் முன் நெஞ்சுருக கண்ணீர் வடித்து நின்ற அவள், தன் பிராத்தனையை முடித்துக் கொண்டு இப்போ வெளியே வந்தாள்.
– 1987
– கடலும் கரையும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1996, நண்பர்கள் வட்டம், கொழும்பு.