கணவனைத் தேடிய கல்யாணி




“இந்த கீதம் புகழ் பெறப் போவதைக் காண நான் இல்லாமல் போகலாம். ஆனால் இதனை ஒவ்வொரு இந்தியனும் தேச பக்தி ததும்பப் பாடுவான் என்பது திண்ணம்” என்று தீர்க்க தரிசனத்தோடு உரைத்தார் பங்கிம் சந்திர சட்டர்ஜி. அவர் வாக்கு பலித்தது.
எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களைத் தொட்டெழுப்பி, தேச பக்தியைச் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு முழக்கமாகவே இன்று வரை ‘வந்தே மாதரம்’ நிலைத்துள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த கீதம் பங்கிம் சந்திரர் பாரத தேசத்திற்கு அளித்த மிகப் பெரிய செல்வம்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், ‘God save the Queen’ என்று தொடங்கும் இங்கிலாந்து ராணியைப் புகழும் பாடலைக் கட்டாயமாக்கியது. அதனைச் சகித்துக் கொள்ள இயலாத பங்கிம் சந்திரர், ஒரு உணர்சிமிக்க தருணத்தில் பாரதநாட்டின் இயல்பான சிறப்பையும், உயர்ந்த வரலாற்றையும், இயற்கை வளத்தையும், சம்பிரதாய சௌபாக்கியங்களையும் நினைத்துப் போற்றி, தான் புலமை பெற்றிருந்த வங்காள மற்றும் சமஸ்கிருத மொழிகளை இணைத்து வந்தே மாதரம் பாடலை இயற்றினார்.
அவர் ஆங்கிலேயரின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே 1876ல் இப்பாடலை எழுதியதாகத் தெரிகிறது. இப்பாடலைப் போல் நாடெங்கும் பலமும் விஸ்தாரமும் கொண்ட பரவசத்தை ஏற்படுத்திய தேச பக்தி கீதம் வேறொன்றில்லை என்று சொல்லலாம்.
இப்பாடல் பங்கிம் சந்திரர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்னும் நாவலின் பிரார்த்தனை கீதமாக விளங்கியது. அந்த நாவலில் வரும் கதா பாத்திரங்கள் இந்த கீதத்தை பக்தி பூர்வமாக மதுரமான தன்வய பாவனையோடு பாடிக் கொண்டிருப்பார்கள். நாவலின் மையக் கருத்தை இப்பாடல் எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது.
அரசியல் கொந்தளிப்பு மிகுந்த போராட்ட காலப் பின்னணியில் ஆனந்த மடம் நாவல் 1882ல் புத்தகமாக வெளிவந்தது. பாரத தேசிய காங்கிரஸ் பிறப்பதற்கு வெகு காலம் முன்பே இந்நாவல் தோன்றியிருந்தது. அரசாட்சி அமைப்பில் சுதேசி பிரதிநிதிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்ற போராட்டம் மிகுந்திருந்த கால கட்டம் அது.
இதில் இடம் பெற்றிருந்த வந்தே மாதரம் கீதம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உயிர் நாதமாக விளங்கி பெரும் புரட்சியையும் எழுச்சியையும் விளைவித்தது.
1770ல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் கவர்னல் ஜெனரலாக இருந்த போது நிகழ்ந்த வங்க தேசப் பஞ்சத்தையும் அதன் தொடர்பாக வெடித்துக் கிளம்பிய சன்யாசிகளின் புரட்சியையும் ஆதாரமாகக் கொண்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பங்கிம் சந்திரர் ‘ஆனந்த மடம்’ நாவலை எழுதியுள்ளார். இந்திய மற்றும் வங்காள இலக்கியத்தில் மகா உன்னதமான இடத்தை இந்த நாவல் பிடித்துள்ளது.
இதன் கதைக் களம், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய சுதந்திரப் புரட்சியைத் தூண்டும் விதமாக இருப்பதாகக் கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் இந்நாவலுக்குத் தடை விதித்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் தான் தடை நீக்கப்பெற்று வெளிவந்தது.
ஆனந்த மடம் நாவலில் மகேந்திரன், கல்யாணி என்ற தம்பதியினர், பிரிட்டிஷ் ஆட்சியில் நிகழ்ந்த பஞ்சம் காரணமாகத் தம் சொந்த கிராமத்தில் உணவுக்கும், குடி தண்ணீருக்கும் தவித்த நிலையில் வேலை வாய்ப்பு தேடி அருகிலிருக்கும் பட்டணத்திற்கு வருகின்றனர். வரும் வழியில் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து தேடுகின்றனர். கணவனைத் தேடி கைக்குழந்தையுடன் காட்டு வழியே செல்லும் கல்யாணி, நர மாமிசம் தின்னும் காட்டு வாசிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஓட்டமெடுக்கிறாள். ஓடி ஓடிக் களைத்து கங்கைக் கரையில் மயங்கி விழுகிறாள். அவளைக் காப்பற்றிய ‘சத்தியானந்த’ என்ற சந்நியாசி, அவளையும், குழந்தையையும் மகேந்திரனுடன் சேர்க்க எடுக்கும் முயற்சிகளே இக்கதையின் கரு. அந்நாளைய அராஜகச் சூழ்நிலையும், தீவிர வறுமையும் இதயத்தைத் துளைக்கும் வண்ணம் இந்நாவலில் வரையப்பட்டுள்ளது.
உண்மையில் 1770ல் சந்நியாசிகள் சேர்ந்து நடத்திய மாபெரும் கலகம் தோல்வியில் முடிந்தது. எக்காரணமுமின்றி வாரன் ஹேஸ்டிங்க்ஸ் க்ஷேத்திராடனம் வந்த 150 சன்னியாசிகளை இரக்கமின்றிக் கொன்று குவித்தான். ஆனால் ஆனந்த மடம் நாவலில் பங்கிம் சந்திரர், சந்நியாசிகள் பிரிட்டிஷாரின் பீரங்கிகளை அவர்கள் மீதே திருப்பி அவர்களைக் கொன்று யுத்ததில் வெற்றி பெறுவதாக எழுதியுள்ளார்.
இந்திய மக்களின் இதயங்களில் தேசபக்திக் கனலை தட்டி எழுப்பி எழுச்சியூட்டிய வந்தே மாதரம் பாடல் மூலம் அவர் இன்றும் நம்மிடயே வாழ்கிறார்.
வந்தே மாதரம் பாடல்:-
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
சுஜலாம் சுபலாம் மலஜய சீதலாம்
ஸஸ்ய ஷ்யாமலாம் மாதரம்
வந்தே மாதரம்!!
சுப்ர ஜ்யோத்ஸ்னா புலகித யாமினீம்
புல்லக்கு சுமித த்ருமதள ஷோபினீம்
சுஹாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!!
ஜெய் ஹிந்த்! பாரத மாதாகீ ஜெய் !!
தாய் மண்ணே வணக்கம்!!!
-சினேகிதி ஜூலை, 2016 இதழில் பிரசுரமானது.