கட்டாக்காலி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 6,231 
 
 

சூரியனின் வெளிச்சம் உச்சத்தைத் தொடும் மத்தியானப் பொழுதில் பனிமலர் தனது வீட்டில் அமர்ந்து துவரம்பருப்பை கைபார்த்துக் கொண்டிருந்தாள். அதிலிருக்கும் வண்டுகளைப் புடைக்கமுடியாமல் அவற்றைக் கையால் எடுத்தால் அது மனிதனைப் போல மயக்கமிடுவதும் கீழே போட்டவுடன் கொஞ்ச நேரத்தில் எழுந்து ஓடிவிடும் அதன் நேர்த்தியைக் கண்டு வியந்துபோனாள். வண்டிற்குக் கூட கடவுள் எவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கிறார்? ஏன் மனிதனுக்கு ஆறறிவு இருந்தும் இப்படியிருக்கிறான் என தனக்குத்தானே மனதிற்குள் வினவிக்கொண்டாள்.

இந்த மனுசன் எங்கே போனார்? ஆபிசில் நாளைக்கு மீட்டிங் என்றுதானே சொன்னார். இன்றைக்கு ஆளக் காணோமே… என்று வாசலைப் பார்த்தவளுக்கு செழியன் வரவில்லை என்றவுடன் மனதினுள் எழுந்த கோபம் கிர்ரென்று உச்சியில் ஏறியது. மனுசன் வாரத்தில் மூனுநாளாவது எங்காவது போகவிட்டால் சிந்துபைரவி படத்தில் தனக்குத் தெரிந்ததைப் பிறரிடம் சொல்லாவிட்டால் ஜனகராஜ் தலைவிரிவதுபோல இவருக்கும் தலைவெடித்துவிடுமோ என்று எண்ணியவாறே சரி சாப்பிடுவோம் என்று எழுந்து அடுக்களைக்குப் போனாள்.

செழியனுக்கும் பனிமலருக்கும் திருமணமாகி ஏழாண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் மனைவியிடம் சொல்லாமல் தனது உறவினர் வீட்டுக்கோ, நண்பர்களுடன் வெளியூர்களுக்கோ சென்றுவிடும் செழியனின் போக்கு மாறவில்லை. செழியனின் ஆச்சி திருமணமான புதிதிலேயே பனிமலரை எச்சரித்தாள்.

“அவன், அவங்க அப்பா, அம்மா மாதிரி வாரத்துல பாதிநாள் ஊரைச்சுத்திக்கிட்டே திரிவான். நீதான் அவனை அடக்கி வைக்கணும். உன் மாமனார், மாமியார் ரெண்டுபேரும் கவர்மெண்ட் சம்பாத்தியம் அவங்களுக்குக் கவலையில்ல. நீங்க அப்படிக் கிடையாது”

பனிமலருக்குத் திருமணமான புதிதிலேயே செழியனிடம் கடிந்து சொல்ல முடியவில்லை. கொஞ்ச நாள் கழித்து அவரிடம் பேசி சரிசெய்யலாம் என்று காத்திருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் குணமே அப்படித்தான் யார் பேச்சையும் கேட்கமாட்டான் என்பது பிடிபட்டுப்போயிற்று. செழியனிடம் எங்கு சென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என்று பனிமலர் சொன்னாலும் அவன் அதை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. சண்டை போட்டால் என்றால் ஒரு வாரத்திற்குப் பேசாமல் தான்தோன்றித்தனமாய்த் திரிவான்.

“யாரையும் அண்டாதீங்க. நமக்குன்னு நாலுபேர் வேண்டாமா? இப்படியே இருங்க”

என்று பேசி அவள் வாயை அடைத்துவிடுவான். அவளிடம் பேசவேண்டிய விசயங்களைக்கூட அவள் மகள் மலர்விழியிடம் கைபேசியில் சொல்ல, குழந்தை “சரிப்பா” என்று சொல்லி வைத்துவிடும். வீட்டிற்கு வந்தபிறகு கேட்டால் “நான்தான் தகவல் சொன்னேனே” என்று நழுவும் செழியனின் குணங்கள் அவர்களுக்குள் வெறுப்பையும் விரிசலையும் ஏற்படுத்தின. முந்தைய தலைமுறையிடம் இருந்த அன்னியோன்யம் இல்லாமல் போனது.

அவன் வாங்குகிற சம்பளத்தில் பாதி போக்குவரத்துக்குச் செலவானது. மீதி சம்பளத்தில்தான் குடும்பத்தை ஓட்டவேண்டும். பிள்ளைகள் பெரிசாக ஆரம்பிக்கும் முன் ஏதாவது மிச்சம்பிடித்தால்தான் சேமிப்பு என்று ஏதாவது கையில் மிச்சமிருக்கும். இதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவனுக்குப் புரிவதில்லை.

ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலில் உணவும் உண்ணாமல் கிடந்தாள். அதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாது செழியன் ஊர்சுற்றக் கிளம்பிவிட்டான். இரவு வீட்டிற்கு வந்து சாப்டியா என்றுகூடக் கேட்காமல் மலர்விழியிடம் வந்து “அம்மா சாப்டாளா?” என்று கேட்டான். இதைக் கவனித்த பனிமலர்,

“ஏன் இருக்கனா? செத்தனா என்று பார்க்கவந்தீர்களா?” என்று கேட்டாள்.

“இதற்குத்தான் உங்கிட்ட பேசறதே இல்ல. எது சொன்னாலும் எசலிக்கிட்டே இருக்க” என்று செழியன் பதில் கூற,

“ஆமா காலையிலேர்ந்து காய்ச்சல்ல கிடக்கேன். மாத்திரை வாங்கிக் கொடுக்க, ஒரு வார்த்தை சாப்டியா? என்று கேட்க மனசு வரமாட்டேங்குது. வருசம்பூரா உங்களுக்குச் சமைச்சுக்கொட்ட, துணிதுவைச்சுப் போட, பிள்ளைகளைப் பார்க்க மட்டும் வேலைக்காரி மாதிரி நான் இருக்கனும். எதுவுமே பேசக்கூடாது. நீங்க என்ன செஞ்சாலும் ஊமையா வாயமூடி இருக்கனும்” என்றாள்.

“ஆரம்பிச்சுட்டா” என்று சலித்துக்கொண்டே கடந்து போனவனைப் பார்த்துத் தன்னையும் மீறி எட்டிப்பார்த்த கண்ணீரைச் சேலையில் துடைத்தாள். உடல்நிலையோடு மனநிலையும் சேர்ந்து வீணாய்ப்போனது.

செழியனைப் பற்றிய ஒரே ஆறுதல் பிள்ளைகளிடம் கொஞ்சம் அக்கறையாகவும் அன்பாகவும் இருப்பான். தன்னிடம் பிரியமில்லாவிட்டாலும் பிள்ளைகளிடம் அன்பாகத்தானே இருக்கிறான் என்று தன் மனதிற்குள் ஆறுதல் பட்டுக்கொள்வாள் பனிமலர்.

நாளடைவில் எதிர்பார்ப்புகள் இருக்கப் போய்த்தானே மனது வலிக்கிறது. எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளுக்காக வாழப் பழகிக் கொள்வோம் என்று விட்டேத்தியாக இருக்கத்தொடங்கிவிட்டாள்.

சரியாகச் சாப்பிடுவது கூடக்குறைந்து போனது பனிமலருக்கு. மனதின் இறுக்கம் தந்த வேதனை அவளது உடம்பையும் இளைக்கச் செய்தது. சங்க இலக்கியத்தில் தலைவனை நினைத்து தலைவி மெலிவதால் கைவளையல்கள் கழன்று மேனியில் பசலைபடரும் என்று படித்திருக்கிறாள். அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் இவளுக்கு அவனால் ஏற்பட்ட மனவேதனையிலும் விரக்தியிலும் உடல்மெலிகிறது. இதை யாரிடம் போய்ச் சொல்வது?

செழியனுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட சண்டையில் ஒரு நாள் கோபத்தின் உச்சமாய் பனிமலர் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த பினாயிலை எடுத்துக்குடித்துவிட்டாள். குடித்தபிறகு அவள் உடலும் மனமும் படபடத்தது. பிள்ளைகள் இருவரும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அநாதையாகி விடுவார்கள், அந்தப் பிஞ்சு முகங்கள் இரண்டும் மனதில் வந்து அவளை நிலைகுலைய வைத்தன. வேறுவழியின்றி உண்மையைச் செழியனிடம் சொன்னாள். பதறிப்போய் செழியன் உள்ளுர் மருத்துவமனையில் சேர்க்க, அத்தனையும் வாந்தியெடுக்கச் செய்தனர். அப்பொழுதும் வீணாய்ப்போனது பனிமலரின் உடலும் மனமும்தான். அந்தநேரம் பனிமலருக்குச் சமாதானம் சொன்னாலும், கட்டாக்காலி மாடு போல இன்னும் செழியன் வேலைசெய்யும் நேரம்போக, மற்ற எல்லா நேரமும் ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறான்.

– முத்தமிழ்நேசன்

2 thoughts on “கட்டாக்காலி

  1. நல்ல அருமையான கதை. நெறைய பேரு இப்படித்தான் உள்ளனர். இரு பக்கங்களிலும் புரிதல் வேண்டும். பெரும்பாலும் இருப்பது இல்லை

  2. பனிமலரின் நிலையில் தான் நான் இருக்கிறேன். பனிமலர் குழந்தைகளுக்காக வாழ்கிறாள்.நான் யாருக்காக வாழ்கிறேன் என தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் தனியே வாழ்வதற்கு எவரேனும் உதவி செய்தால் செழியன் மாதிரியான ஆட்கள் பாடம் கற்பார்கள்.இவர்கள் திருந்துவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. மனைவிகளை பிரிந்து வாழும் கணவர்கள் அதிகமாகும் போது தான் ஆண்கள் திருந்துவார்கள். இதில் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். அதாவது இம்மாதிரி மனைவியை பிரிந்து வாழும் ஆடவனை எந்த பெண்ணும் மறுமணம் செய்து கொள்ளவோ ஆதரவு தரவோ கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *