கடைசி மூச்சி
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 8
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ச்சே இந்த மனிசன் இன்னும்தான் போய் தொலைய மாட்டார் போல தெரியுது”
“வெள்ளியோட வெள்ளி எட்டு நாளாப் போச்சு வந்த நாங்க எல்லோரும் திரும்பி போக வேண்டாமா?”
“எல்லாம் இவள் ஈஸ்வரியால வந்தது. போய் சேர்ந்த பின்னாவது போன் பண்ணி சொல்லி இருக்கலாம்தானே. உங்கமேலதான் உயிரையே வச்சிருக் கிறார் கண்டிப்பா வெளிக்கிட்டு வாங்கம்மா என்று சொன்னதால தான் அங்கு எல்லாவற்றையும் கொத்திலையும் குறையிலையும் போட்டிட்டு வந்தனான்”
“எட்டு நாளா இப்படியே இழுத்துக்கிட்டு கிடந்தா என்னதான் பண்ணுறது” என்னை சுற்றி நின்று கோபத்துடன் நியாய, அநியாயம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு வாய்த்த வாரிசுகள். உயிருள்ள சடலமாக கிடக்கிறேன். எதிரே நடப்பதை பார்க்க முடிகிறது. நன்றாக கேட்க முடிகிறது. ஆனால் பேசவோ, உடலை அசைக்கவோ முடியவில்லை.
“என்ன இவர் படுத்த படுக்கையாக கிடந்து நம்மட உயிரை எடுக்கிறார்” இரண்டு ஆண்பிள்ளைகளுக்கு பின் ஆசையாக பெற்று வளர்த்த மகள் சொல்கிறாள் நான் அவள் உயிரை எடுக்கிறேனாம்.
நான் பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளின், பிள்ளைகள் அதுதான் எனது பேரப்பிள்ளைகள் என்று பெயரளவில் இருப்பவர்கள் அவர்கள் பாட்டுக்கு வேறு வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருகிறார்கள். மூத்தவனின் மகன் கையில் ஒரு போனை வைத்துக்கொண்டு நோண்டு கின்றான். இளையவனின் மகன் காதில் எதையோ கொழுவிக்கொண்டு தலைய தலைய ஆட்டுகின்றான். மகள் வயிற்று பேத்தி ரிவி பார்க்கின்றாள். மருமகள்கள் திரும்பிப் போகும்போது என்னென்ன சாமான்கள் எடுத்துக் கொண்டு போகலாம் என்று வந்த நாளிலிருந்து வீட்டை துளாவி எடுக்கிறாங்க. மகளும், அவளது கணவனும் போகும்போது கொண்டு செல்ல மிளக்காய் தூள், துதோள், பலகாரம், நெத்தலிக் கருவாடு, மாசிக்கருவாடு, கணையான் மீன் கருவாடு எல்லாம் தயார் பண்ணச்சொல்லி வீட்டில் சமையல் செய்யும் பாக்கியத்திடம் சொல்லிக்கொண்டு இருப்பதை கேட்க முடிந்தது, சாயங்காலம் பொழுது சாயப்போகிறது. என்னை சுற்றி ஊரில் உள்ளவர்களும் சிலர் நின்று கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்களுள் என் நண்பன் சிவாவும் இருக்கிறான். என் பிள்ளைகள் அவரிடம் பேசுகின்றார்கள்.
“அம்மா இருக்கிறவரை இந்த ஊரை விட்டு வரமாட்டேன் என்று சொல்லிப்போட்டார் அவ போன பின்னாவது வந்திருக்கலாம்தானே. “நான் என்னோடு வந்து இருக்கும்படிசொன்னனான் மூத்தமகன் என்ற பெயர்தான் நான் சொல்லுறதை என்றாவது இவர் கேட்டிருக்கிறாரா?” மூத்தவன் சொன்னான்.
“இந்த வீட்டையும் நிலத்தையும், வயல் காணியையும் விற்றுவிட்டு வாங்கோ என்று சொல்லியும், அடமண்டா அடம்புடிசிக்கொண்டு இருந்திட்டார். வயலை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, அவருக்கு வாற பென்சன் காசையும் எடுத்துக்கொண்டு கோவிலுக்கும். முதியோர் இல்லத்துக்கும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்”
இளைய மகன் சொன்னான்.
“நானும் அவ்வப்போது காசு அனுப்பி வைக்கிறதுதான். அதையும் ஆட்களுக்கு கொடுத்து விடுவார்” என்று இவரை பார்க்கும் ஈஸ்வரி சொல்லுவாள்”
மகளும் தன் பங்குக்கு சொன்னாள். அடப்பாவிகளா இவன் எங்கே சுயநினைவு வந்து பேசப்போறான். இனி எல்லாம் முடிந்த மாதிரித்தான் என்ற துணிவில் ஆளாளுக்கு பொய் பேசுறாங்களே ஏதோ என்னிடமிருந்த சொத்துகளை மூன்று பேருக்கும் பிரித்து கொடுத்தபின் சந்தோசப்பட்டுக்கொண்டு போனவர்கள் அதற்குப் பின் இந்த ஊருக்கு வரவே இல்லை. எப்போதாவது போனில் பேசுவதோடு சரி.
அப்போது கூட நான் சொல்வதுண்டு நான் செத்தபின் வந்து என் பூத உடலைப் பார்த்து, உங்களை எவ்வளவு விரும்பினோம். உங்களை நாங்கள் மிகவும் மிஸ் பண்ணிட்டோம் என்று சொல்லாதீர்கள் ஏனென்றால் இந்தபேச்சுகளை நான் உயிரோடு இருக்கும்போது சொல்லி இருக்கவேண்டும் நான் கேட்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு பல தடவைகள் சொல்லி இருக்கின்றேன். இப்போ என்னடா என்றால் ஊருலகத்திற்கு ஏதோ தாங்கள் நல்லவர்கள் மாதிரியும். பெற்ற தகப்பனை ஒரு குறையுமில்லாமல் பார்த்தமாதிரியும் அல்லவா பேசுகின்றார்கள்.
சரி ஏதாவது பேசிக்கொண்டு போகட்டும். அவங்கட அம்மா போனபின் நானும் போய் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது இவர்கள் என்றாலும் இங்கே ஊரோடு இருந்திருக்க வேண்டும். அதுதான் ஒன்றும் நடக்கவில்லையே. போதாக்குறைக்கு நாட்டில் ஏற்பட்ட போரும் எல்லோர் வாழ்க்கையையும் மாற்றிப்போட்டுவிட்டு ஓய்ந்து போய் பத்து வருசமாகப் போகுது.
நாட்டில் ஏற்பட்ட போரினால் தானே என் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய இக்கட்டான சூழ்நிலை வந்தது. அல்லது இங்கிருந்தே அவர்கள் படித்து நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள். அன்றையக் காலக்கட்டத்தில் இவர்கள் உயிர் தப்பினால் போதும் என்றுதானே மனமில்லாமல் நாங்கள் அனுப்பி வைத்தோம். எனது மனைவி மீனாட்சி ஒற்றைக்காலில் நின்று இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டாள்.
அதன்பின்பு என்ன? எல்லாமே மாறிப்போனது. அவங்கவங்க இஸ்டத்திற்கு தங்கட வாழ்க்கையை தேடிக்கொண்டாங்க. சரி பரவாயில்ல எல்லோரும் நல்லபடியாக இருந்தால் சரி என்று மீனாட்சி சொல்ல நானும் பெரிசு படுத்தாமல் விட்டுட்டேன். ஆரம்பத்தில் நல்லபடியாகத்தான் இருந்தார்கள். நாட்கள் செல்லச்செல்ல மாறிட்டாங்க அல்லது மாற்றப் பட்டுட்டாங்க. மீனாட்சி இருக்கும்போதும் இரண்டு மூன்று வருசத்திற்கு ஒரு தடவை வந்து பார்த்துவிட்டு போனாங்க. அவ போனபின்பு அதுவும் இல்ல. எப்போதாவது போனில் பேசுவார்கள்.
இப்போதும் என் கடைசி மூச்சு நிற்கும் மட்டும்தான் இவர்களின் இந்த கதை பேச்சு. என் மூச்சு நின்றபின் இவர்கள் ஊருக்காக இரண்டொரு நாள் நின்றுவிட்டு எட்டுக்கும் கூட நிற்காமல் கிளம்பி போயிடுவாங்க. போகட்டும். நல்ல வேளை இந்த வீட்டையும் வளவையும் நான் இறந்த பின் முதியோர் இல்லம் ஒன்று நடத்த என் தங்கச்சி மகன், என் மருகப்பிள்ளை வழக்கறிஞர் வாமதேவன் மூலம் நொத்தாரிசை கூப்பிட்டு இருவர் சாட்சி வைத்து எழுதி கொடுத்துவிட்டேன். அந்த மன நிம்மதியோடு நான் போய் சேர்ந்துவிடுவேன் அல்லது இவர்கள் இதையும் விற்று எடுத்துக் கொண்டு இந்த ஊரில் நான் வாழ்ந்ததற்கு ஒரு அடையாளமும் இல்லாமல் பண்ணி விடுவார்கள். என்ன செய்ய நான் வளர்த்த கிடாக்கள் இரண்டும். ஒரு பசுவும் என்னை குத்தி விட்டன என்று எடுத்துக் கொள்கின்றேன். இப்படியாக குமாரலிங்கம் என்ற ஓய்வுநிலை அரச நில அளவையாளர் தனது மக்கள் மூன்று பேரின் பேச்சுகளை கேட்டு மனசு நொந்து போனதும், அவரின் உள் மனதின் எண்ண ஓட்டங்கள் அவரது வாழ்க்கை யின் ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்தி நின்றன. எட்டு நாட்களாக உடல் அசைவு இல்லாமல் பேச்சற்று படுத்த படுக்கையாக கிடக்கும் குமாரலிங்கம் இறந்து விடுவார் என்றுதான் அவரது வீட்டில் இருந்த ஈஸ்வரி என்ற பெண், அவரின் பிள்ளைகள் மூவருக்கும் தகவல் கொடுத்தாள். அவர்களும் வந்து சேர்ந்தார்கள். ஆனால் மரணம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரிவதில்லைதானே. குமாரலிங்கம் அவர்களின் மரணமும் காத்து நிற்கும் அவரது பிள்ளைகளின் அவசரத்திற்கு வந்துவிடுமா என்ன?
குமாரலிங்கம் அவர்களின் உற்ற சிநேகிதன் சிவஞானம். சிவா என்றுதான் அவர் அழைப்பார். அவரும் குமாரலிங்கம் அருகே இருக்கிறார் அல்லவா. அவரிடம்தானே மூன்று வாரிசுகளும் பொய் பொய்யாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அவரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். அவரின் உள்மனம் இப்போ இப்படி நினைக்கிறது.
மரணம் என்பது இறந்தவருக்கு உறக்கம். உறவுகளுக்கு இழப்பு. குமாரலிங்கத்தின் வாரிசுகளுக்கு அவர் இறந்தாலும் பெரிய இழப்பாக தெரியாதுபோல் அல்லவா தெரிகிறது.
என்ன உலகமடா இது. சே… பெற்று வளர்த்து, படிப்பித்து, கல்வி வழங்கி பெரியவர்களாக்கிய ஒரு தந்தை எப்படா செத்து தொலைவார் என்று இருக்கும் இந்த பிள்ளைகளை என்னென்று சொல்வது.? சொல்வார்கள் ஒருமகன் ஒரு தகப்பனின் கையை கொஞ்சநேரம் பிடித்து இருப்பதைவிட, அவன், தந்தையின் இதயத்தை அவன் வாழ்நாள் முழுதும் வைத்திருக்க வேண்டும். அதாவது அவர் மனதில் அவன் இடம்பிடித்துக் கொண்டு வாழ வேண்டும். அதேபோல் சொல்வார்கள் ஒரு மகள்தான் தந்தைக்கு இந்த உலகம் அளித்த அழகான பரிசு என்றும், மகள்தான் ஒரு தகப்பனின் கடந்தகால சந்தோசமான நினைவுகளையும், நிகழ்கால குதூகல சந்தர்ப்பங்களையும், எதிர்கால நம்பிக்கை, அரவணைப்பு எல்லாம் தரக்கூடியவள் என்று. ஆனால் குமாரலிங்கம் அவர்கள் ஒன்றுக்கு இரண்டு ஆணும், ஒரு பெண்ணும் பெற்று என்ன பயன். உலகம் சொல்வது போல் ஆணும், பெண்ணும் அவருக்கு அந்திமத்தில் அருமருந்தாக வேண்டாம் கொஞ்சம் அன்புடன் அரவணைப்புடனாவது இருந்தார்களா? இல்லையே. வெளிநாட்டில் இருந்துகொண்டு அவர்கள் வாழ்கையை நிலை நிறுத்தி விட்டார்கள். சரி அது தப்பில்லை. இலங்கை யிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்கள் வாழக்கையை நிலை நிறுத்திக்கொண்டார்கள்தான் ஆனால் தங்கள் தாய், தந்தையர்களை பெரும்பாலானோர் தள்ளி விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் பலர் மிக பாசமாக இருப்பார்கள். அந்த வகையில் குமாரலிங்கம் கொடுத்துவைக்கவில்லை.
வெளி நாட்டில் காரும், வீடும் காசும், பொருளும் இருந்தால் மட்டும் ஒருவனை நல்ல மனிதன் என்று ஆக்காது. ஒரு மனிதனின் நடத்தை, நல்ல எண்ணங்கள், மற்றவரை மதிக்கும் தன்மை, நேர்மை, மற்றும் ஒரு மனிதன் கையாளும் கடமை உணர்வுகளே அவனை ஒரு நல்ல மனிதனாக காட்டும். என்று எண்ணிக்கொண்ட சிவாவின் காதுகளுக்கு குமாரலிங்கதின் மூச்சு கேட்கிறது. அவர் உள்ளே இழுத்து வெளியே விடும் கடைசி மூச்சு அதுதான் என்று அறிந்து கொண்ட சிவாவின் கைகள் தன் நண்பனின் கண்களை மூடிவிட்டன. எல்லோரும் சிவா என்ன சொல்லப்போகின்றார் என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர் சொன்னார். “எல்லாம் முடிந்தது. இனி ஆகவேண்டியதை பாருங்கள் “என்று. ஆம் குமாரலிங்கம் அவர்கள் மீளாத்துயில் கொண்டார். அவரின் ஆத்மா காற்றில் கலந்தது. அவரின் வாரிசுகள் மூவரின் மனங்களில் இருந்த இறுக்கம் கலைந்தது. அவர்கள் ஆகவேண்டியதை பார்க்க ஆயத்தமானார்கள்.
சிவாவும், குமாரலிங்கத்தாரை பார்த்துக் கொண்ட ஈஸ்வரியும் அழுதுகொண்டு இருந்தார்கள். அதுவும் சில நொடிகள் மட்டுமே, நாளை மட்டும் அது மரண வீடு. அதன்பின் அது குமாரலிங்கதரின் பெயரில் இயங்கப்போகும் முதியோர் இல்லம்.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ரயில் செல்வியும்… WAP 7 என்ஜினும்…
உரு.வளவன்
September 12, 2026
ராப்பிச்சை
மா.வீ.தியாகராசன்
September 12, 2026
மரணம் நம்மைப் பிரிக்கும் வரை
இரா.துரைமாணிக்கம்
September 12, 2026
