கடைசியில் இவ்வளவு தானா? – ஒரு பக்க கதை





ராகவன் பரபரத்தான்.
பொன்னம்மா வரும் நேரம்
‘இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!’
அம்மா கடைக்குப் போய் விட்டார். அப்பா பென்ஷன் வாங்கப் போய் விட்டார். ராகவன் வீட்டுக்குக் காவல். பொன்னம்மா வரும் நேரம்.
’என்ன சுறுசுறுப்புடி அம்மா அவள்!’ அம்மா பொன்னம்மாவை ஓகோ என்று தான் பாராட்டுவாள். ஒருநாள் கூட அவள் அனாவசியமாக வேலைக்கு வராமல் நின்றதில்லை. வேலையிலும் தான் எவ்வளவு கச்சிதம்! பாத்திரங்களைத் தேய்க்கும் போதும் சரி. தேய்ந்த பாத்திரங்களை அலம்பி ஈரம் போகத் துணியில் துடைத்து, கவிழ்த்து வைக்கும் போதும் சரி, கொஞ்சமாவது சப்தம் கேட்க வேண்டுமே?
பாத்திரங்களும் தான் எவ்வளவு பளபளப்பாக இருக்கும்! துணி துவைப்பதிலும் ஒரு நளினம் உண்டு. என்றுமே ‘பட், பட்’ டென்று அடித்துத் துவைக்க மாட்டாள். உடம்பு அழகாக குலுங்க குலுங்க துணிகளைக் கசக்கித் தான் தேய்ப்பாள். வீடு பெருக்கி மெழுகும் பதவிசே தனி. மயிலின் நடனமாக அசைந்து அசைந்து அவள் பெருக்கி வரும் போது, அதை பார்த்து அப்பா ஒரு முறை பெருமூச்சு விட, அம்மா அப்பாவை முறைக்க, இருவரும் ஒருவாரம் வரை பேசிக் கொள்ளாமலிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலைக்காக அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கும் ராகவனுக்கு, பொன்னம்மா மீது சமீப காலமாகத்தான் லயிப்பு விழுந்தது. கச்சிதமாக உடை உடுத்தி, ஒயிலாக நடந்து வரும் அவளிடம் எப்படியாவது அதைக் கேட்டு விட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பான். சமயம் தான் சரிப்பட்டு வராது.
இப்போது வந்திருக்கிறது.
தெற்குப் பக்கத்து ஜன்னல் வழியாக அம்மாவோ அப்பாவோ வந்து விடுவார்களோ என்ற தவிப்புடன் பார்த்துக் கொண்டான். வடக்குப் பக்க ஜன்னல், அவனது ஆவல் மிகுந்த பார்வையை வெளியே ஓட விட்டது. அப்பாடா! அவனுக்குப் பெருமூச்சு வந்தது. உடல் பர பரத்தது.
பொன்னம்மா வந்து விட்டாள். அம்மாவும் அப்பாவும், சரியாக பொன்னம்மா வரும் சமயத்தில் வெளியே போய் விடுவார்கள் என்று முந்தின இரவே தெரியும். ராத்திரி முழுதும் தூங்காமல் கற்பனை உரையாடலில் மெய் மறந்திருந்தான். அவளை நெருங்கிப் பேசும் போது எந்த விதத் தயக்கமோ, படபடப்போ இருக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.
பேச்சு சரியாக வராமல் தொண்டை வறண்டு விடக் கூடாதே என்று மடக் மடக் என ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தான்.
பொன்னம்மா உள்ளே வந்தாள். வழக்கம் போல ரொம்பவும் சுவாதீனமாகப் பாத்திரங்களை எடுத்து முற்றத்தில் வைத்துக் கொண்டாள். தோய்க்க வேண்டிய துணிகளை சோப்புத் தண்ணீரில் நனைத்தாள். கொட்டாங்கச்சியிலுள்ள சாம்பலை எடுத்துத் தேங்காய் நாருடன் சேர்த்து பாத்திரத்தில் வைத்து…
“பொ…. பொன்னம்மா…”
அவள் நிமிர்ந்தாள். அவளுக்கு அதிசயமாக இருந்தது. எதற்கு இப்படிப் பரக்க பரக்க விழிக்கிறது, இந்தப் பிள்ளை? ராகவன், தனக்கு எதிரில் நிற்கக் கூட வெட்கப் படுவான்.
இன்று தைரியமாக பெயர் சொல்லி அழைத்து… அவன் அடிக்கடி வாசல் பக்கமாகப் பார்த்துக் கொண்டு பேசவும் வராமல் தவிப்பதைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.
“என்ன?” என்றாள். அவன் உடலெல்லாம் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.
“வந்து பொன்னம்மா… ஒன்னு கேட்பேன்… வந்து … அம்மாகிட்ட சொல்ல மாட்டியே…”
பாத்திரம் தேய்க்கும் அசைவில் நழுவி விழுந்த முந்தானையை எடுத்துக் போட்டுக் கொள்ளவும் தோன்றாமல் அவனை அதிசயமாகப் பார்த்தாள் பொன்னம்மாள்.
“வந்து வீட்ல தண்டைச் சோறு தின்னுக்கிட்டு வெட்டியா பொழுது போக்கறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு பொன்னம்மா. உன் புருஷன் வாட்ச் மேனா வேலை பார்க்கிற வீட்டுக்காரர் பெரிய கம்பெனி முதலாளின்னு சொல்லுவியே, அவர் கிட்ட சொல்லக் சொல்லி, எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லேன்.. வந்து, அம்மா கிட்ட சொல்லாதே. பொன்னம்மா… திட்டுவாங்க”
“அட, இதுக்கா இவ்வளோ யோசனை? ஒரு அப்ளிகேஷன் எயுதி குடு; பார்க்கலாம்” என்றாள் பொன்னம்மாள்.
– பிரபு சங்கர் – தினமணி கதிர் – 4/ 7/ 80