கடவுள் சத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 284 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு பொண்டுகன் இருந்தா. அவனுக்கு மாடு மேக்கிற வேல. அந்த ஊரு மொதலாளிகிட்ட மாடு மேக்கிறா. அவ, மேக்கிற மாடுகள்ல, ஒரு மாடு நெறசெனயா இருக்கு. அப்ப – மொதலாளி: ஏலே!! செனமாட்ட வீட்ல கெட்டிப்போட்டுட்டு, மாடுகள் மேய்க்கப் பத்திட்டுப்போண்டு சொன்னாரு. பொண்டுகன், மொதலாளி சொன்னதக் கேக்காம, செனமாட்டயும் சேத்துப் பத்திட்டுப் போயிட்டா. 

பத்திட்டுப் போகவும், செனமாடு நடக்க முடியாம மலயில நிண்டுகிருச்சு. அப்ப – அந்த வழியா ஒரு செனப்புலி வருது. நடு மலயில, ரெண்டும் சந்திச்சுக்கிருச்சுக. 

அப்ப, நம்ம ரெண்டு வேரும் செனயா இருக்கோம். ஒரே சமயத்ல ஈண்டுகிருவோம் போலிருக்கு. நம்ம ரெண்டு வேரும் தொணக்கித் தொணயா – இந்தக் காட்ல இருந்துக்கிருவோம்ண்டு புலி சொல்லுச்சு. 

அதுக்கு பசுவு, நிய்யி வேற கூட்டம், நா வேற கூட்டம், நம்ம ரெண்டு வேரும் சேந்து இருக்க முடியாது. ஒனக்கு, எர கெடைக்கலண்டா, என்னய புடுச்சுத் திண்ருவ. இது ஒத்து வராதுண்டு பசுவு சொல்லிருச்சு. 

இல்ல…. இல்ல! ஒன்னய, நானு ஒண்ணுமே செய்ய மாட்டேண்டு சத்தியம் செஞ்சு குடுத்திச்சு புலி. புலி சத்தியம் பண்ணவும், பசுவும் சரிண்டு சொல்லிருச்சு. அண்ணைக்கிருந்து, புலியும் பசுவும் ஒண்ணாச் சேந்து வாழ்ந்துகிட்டிருக்குக. 

இருக்கயில புலியும் – பசுவும் ஒருநா, ராத்ரில ஈண்டுகிருச்சு. புலி ஆங்குட்டி போட்டுருச்சு. பசுவு காளங்கண்டு போட்டுருச்சு. 

அப்ப, பகல்ல தாயிக மேயப் போயிரும். மேயப் போயிறவும் புலிக்குட்டியும் – காளங்கண்டும் சேந்து வெள்ளாடிக்கிட்டிருக்கும். புலிக்குட்டிக்கு வெவரம் வந்திருச்சு. அப்ப-, தந் – தாய விட, பசுவு மேல பாசங் காட்டுது. பசுவ அடிச்சுத் தின்ன மாட்டேண்டு, சத்தியம் பண்ணிக் குடுண்டு கேட்டுச்சு. தாய்ப் புலியும் சத்தியஞ் செஞ்சு குடுத்திருச்சு. 

இப்டி இருக்கயில் ஒருநா, புலிக்கு எர கெடைக்கல. பொழுது விழுந்திருச்சு. புலிக்கு வகுத்துப்பசி பொறுக்க முடியல. பசுவ அடிச்சுத் திண்டுருச்சு.

எண்ணக்கிமே பசுவுதான் முன்னால வரும். அண்ணக்கீண்டு புலி முன்னால வந்திச்சு. பசுவு இருந்தாத்தான வரும். அப்டி புலி முன்னால வரயில – புலிக்குட்டிக்கு சந்தேகம் வந்திருச்சு. தாயாரான யாரான புலிகிட்ட, எங்க பசுவம்மாண்டு? புலிக்குட்டி கேக்குது. கேக்கவும் -, எனக்குத் தெரியாதுண்டு, புலி சொல்லிருச்சு. 

அப்ப, நிய்யி பசுவம்மாவ அடிச்சு திண்டுபிட்ட, எங்ஙகிட்ட மறைக்கிரண்டு புலிக்குட்டி கேட்டுச்சு. இல்ல மகனேண்டு புலி சொல்லுச்சு. அடிச்சுத் திங்கலண்டு, எந்தலயில அடிச்சுச் சத்தியம் பண்ணுண்டு புலிக்குட்டி கேட்டுச்சு. 

புலி – தலயில அடிச்சு, சத்தியம் பண்ணுச்சு. பண்ணவும் மொதல்ல செஞ்ச சத்தியத்த மீறுனதால், புலி, கல வெடிச்சுச் செத்துப் போச்சு. 

புலிக்குட்டியும் – காளங்கண்டும் கொஞ்சநா, தனியா… அந்தக் காட்ல இருந்திச்சுக. 

ஒருநா தேவயில, புலிக்குட்டி காளங்கண்டப் பாத்து, நம்ம ரெண்டுவேரும் சேந்து இருக்கணும்ண்டு சொல்லுச்சு. அதுக்குக் காளங்கண்டு சம்மதிக்கல. கடசியா… காளங்கண்ட சம்மதிக்க வச்சு, 

இந்தக் காட்ல – ஒண்ணு சேந்து இருப்போம். இல்லண்டா, சேந்து சாவோம்ண்ட்டு, ரெண்டும் கட்டிப் புடிச்ச வாக்ல, மலயில இருந்து உருளப் போச்சுக. 

அந்தச் சமயம் பாத்து, பார்வதியும் – பரமசிவனும் அந்தப் பாத வழியா வாராங்க. வரயில, புலிக்குட்டியயும் காளங்கண்டயும் பாத்து, ஏ… ஞ் சாகப் போறீங்கண்டு எரக்கப்பட்டுக் கேட்டாங்க. 

கேக்கவும், எங்ஙம்மாவும், இவங்ஙம்மாவும் ஒண்ணா ஒரே எடத்ல இருந்தாங்க. நாங்க பெறந்து, வளந்த பெறகு, ஒருநா, எங்ஙம்மா – இவங்ஙம்மாவ அடிச்சு திண்டுபிருச்சு. எங்ஙிட்ட, எங்ஙம்மா செஞ்சு குடுத்த சத்தியத்த மீறுனதால, தல வெடிச்சு செத்துப்போச்சு. நாங்க ரெண்டுவேரும் அனாதயா இருக்கோம். ரெண்டுவேரும் சேந்திருப்போம்ண்டு நா-ஞ் சொல்றே. காளங்கண்டு கேக்க மாட்டேங்குது. பெறகெதுக்கு உசுரோட இருக்கணும்ண்ட்டு, மலயில இருந்து உருளுறோம்ண்ட்டு புலிக் குட்டி சொல்லுச்சு. 

அப்டியாப்பா! அப்பண்டா, நீங்க ரெண்டுவேருமே சாகக் கூடாதுண்ட்டு, ஒங்கள மனுசனா படச்சு விட்டுர்ரோம்ண்டு சொல்லி-, 

புலிக்குட்டிய புலி ராசாண்டும் 

காளங்கண்ட காளராசாண்டும் 

படச்சு விட்டுட்டு, பார்வதியும், பரமசிவனும் போயிருறாங்க. 

போயிறவும், புலிராசாவும் – காளராசாவும் தெக்கு தெசயப் பாத்துப் போறாங்க. போகயில -, ஒரு கம்மங்காடு இருக்கு. அந்தக் காட்டுவழியா வரயில, ஒரு வானம்பாரிக் குருவி (வானம்பாடி) கண்ணில பட்டுக் கெடந்திச்சு. அந்தக் குருவியப் புடுச்சுக்கிட்டு, அதுக்கங்ஙிட்டு வரயில, ஒரு கொளம், அந்தக் கொளத்து நெறயா தண்ணி ஒடயுராப்ல இருக்கு. அந்தக் கொளத்துக் கரயில ஒக்காந்து குருவியச் சுட்டாங்க. சுட்டதும் காளராசா ஒடலத்திண்டா. புலிராசா தலயத் திண்டா. 

“ஒடலத் திண்டவன் ஒடனே ராசா: தலயத் திண்டவன் தத்துப்-பித்தி ராசாவாகணுங்கறது தத்துவம்” 

குருவிய சுட்டுத் திங்கவும், காளராசாவுக்கு தண்ணி தவிக்குது. கொளத்துக்குள்ள தண்ணி குடிக்க போனர். அப்ப, புலிராசா கரயில ஒக்காந்திருக்கா. 

அப்ப, அந்த நாட்டு ராசா மகளுக்கு மாப்ள தேடுராங்க. எப்டித் தேடுராங்கண்டா? ஆன கையில மாலயக் குடுத்து, அந்த ஆன ஆருக்கு மாலயப் போடுதோ! அவந்தர் ராசா மகளுக்கு மாப்பளண்டு ஊரச் சாட்டி விட்டிருக்காங்க. 

அப்டி இருக்கயில, அந்த ஆன மாலயக் கொண்டுகிட்டு வருது. இங்க, காளராசா தண்ணி குடுச்சுக்கிட்டிருக்கர். வரயில, சத்தம் போட்டுக்கிட்டு ஆளுக பின்னால வராங்க. என்னா சத்தம்ண்டுட்டு காளராசாவும் கரைக்கு வர, ஆனயும் இவங்கிட்ட வர சரியா இருந்திச்சு. 

அப்டியே! ஆன, இவனுக்கு மாலயப் போட்டு, தூக்கிக்கிட்டுப் போகுது. அரமணயில ராசா, ஆன எப்ப வரும்ண்டு பாத்துக்கிட்டிருக்காரு. ஆன வந்திச்சு. அரமணயே… ஒரே ஆரவாரமா இருக்கு. 

காளராசாவுக்கும் ராசாமகளுக்கும் கல்யாணம் முடுஞ்சுச்சு. இவ் அரமணயில இருக்கா. 

கொளத்துக் கரயில, ஒக்காந்துகிட்டிருந்த புலிராசா! அண்ணனாகிய காளராசனத் தேடிக்கிட்டு,  ஆன போன வழியே போறர். போயி: அரமணய கண்டு புடிச்சுட்டா. கண்டுபிடிச்சுப்போயி, காளராசாவப் பாத்தா. பாக்கவும் – எந் தம்பி வந்திட்டாண்டு எல்லாருகிட்டயும் காளராசா சொல்றா. 

தம்பிண்டு சொல்லவும் -, புலிராசாவயும் அரமணயில இருக்கச் சொல்றாங்க. சரிண்ட்டு இருக்கா. கொஞ்ச நாளுக் கழிச்சு, புலிராசாவுக்குக் கல்யாணத்தப் பண்ணி வக்கிராங்க. 

கல்யாணத்தப் பண்ணிக்கிட்டு: ரெண்டுவேருமே அந்த நாட்டு ராசாக்களா இருந்து நல்லாப் பொளச்சாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *