கடவுளை வெறுத்த காத்தபெருமாள்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 5
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூங்குடி என்னும் ஊரிலே காத்தபெருமாள் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் பழவினைப் பயனாய் வறுமைக்கும் பலவகைத் தொல்லை கட்கும் உள்ளாகிப் பெரிதும் வருந்தினான். ஊரிற் பலர் செல்வச் சிறப்போடு நல்வாழ்வு வாழ்ந்துகொண்டிருத் தலைக் கண்டு உள்ளம் புழுங்கினான். கடவுள் தனக்கு மட்டும் நல்வாழ்வு கொடுக்காமல் வஞ்சித்து வருத்துவ தாக எண்ணி, “ஓ கண்ணற்ற கடவுளே! அறிவற்ற தெய்வமே! உனக்கு ஏன் இந்த வஞ்சகம்? நான் உனக்கு என்ன தீமை செய்தேன்? எல்லாருக்கும் நல்வாழ்வைக் கொடுக்கிற நீ என்னை மட்டும் ஏன் வறுமைக்கும் பிணி கட்கும் உட்படுத்தி வருத்துகிறாய்? இனிமேலாவது இவ்வாறு வஞ்சகம் செய்யாமல் எல்லாருக்கும் நன்றாக அருள்புரி,” என்று கூறினான்.
காத்தபெருமாள் கழறியதைக் கேட்டுக் கொண் டிருந்த ஒரு பெரியவர், “அப்பா! வீணாகக் கடவுளை இகழாதே, கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். அவர் ஒருவரை வாழ வைப்பதும், ஒருவரைத் தாழ வைப்பதும் இல்லை. வாழ்வும் தாழ்வும் அவரவர் ஊழினால் உண்டாகின்றன. அறஞ் செய்வதனால் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பதை உணர்ந்து முற்பிறப்பில் நல்லறஞ் செய்யா தவர்கட்கு இப்பிறப்பில் செல்வமும் சிறப்பும் எவ்வாறு உண்டாகும்?” என்று கூறிப் பலவாறு அறிவுறுத்தினார்.
”செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் – வையத்து
அறும்பாவம் என்னவறிந் தன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்.”
(உரை.) வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து நிலவுலகிலே அறஞ் செய்தலினாலே தீவினை நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு – அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய்தீ வினை இருக்க – செய்த பலவகைத் தீவினைகள் துன்பத் திற்கு விதையாக இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் – இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்தவருமோ- பெரும்பொருள் வந்து சேருமோ ?. வெறும்பானை மேல் பொங்குமோ – வெறும்பானையை அடுப்பிலே வைத்து எரித்தால் மேலே பொங்கி வருமோ ? பொங்கிவராது.
(கருத்து) முற்பிறப்பில் அறஞ் செய்யாதவர்கட்கு இப் பிறப்பில் நன்மை உண்டாகமாட்டா.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026