கடல்





(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கடல் கரையை முத்தமிடுகின்ற இடத்திலே, கீரிமலைச் சுடலையிலே அந்தச் சடலம் எரிந்து கொண்டிருக்கிறது……
எரிகிறது…… தீக்கொழுந்துகள் வடவைக் கனலாகி, காற்றின் பிடியிலே இருந்து திணறிக்கொண்டு வெளிப் பட்டுக் கடலையே குடித்துவிட முயல்வதுபோல அந்தத் திசையிலே திரும்பிச் சுவாலை கக்குகின்றன.
நீரின் எல்லையிலே நெருப்பு நெருப்பின் எல்லை யிலே நீர் மனிதத்துவம் கடலைப்போலப் பொங்கி ஆர்ப்பரித்துக் கரையிலே மோதி மோதி அடங்கி அழிந்துபோய்ப் பிணக்கோலத்திலே சிதை ஏறி எரிந்து போகிறது என்பதற்கு நிதர்சன விளக்கம் !
தொடுவானத்திலே நெருப்புக்கோளம் ஒன்று தண் ணீரினுள்ளே அமுங்கிக்கொண்டிருக்கிறது. சிதறிப் போன சிறுச்சிறு சுடர்கள் நீலவானத்தை எரித்து, ஜுவாலை கிளப்பிக் கடலிலே பிரதிவிம்பித்துப் பொன் வண்ணம் காட்டுகின்றன.
சனசந்தடி அடங்கிப்போன ஏகாந்தப் பெருவெளி யிலே, சுடலைக்கு நூறுயார் தூரத்திலே தென்னந்தோப் புக்குள் நின்றுகொண்டு சிதையை வைத்தகண் வாங் காது பார்க்கிறேன்.
அவன் எரிகிறான்…… அவனா? அவனா? அதுவா ? அவனாக இருந்த அதுவா ? அல்லது அவனும், ‘அவன்’ என்று சுட்டுதற்குக் காரணமான அதுவும் இரண்டுமே நெருப்போடு நெருப்பாய், சாம்பரோடு சாம்பராய் சிரிக்கிறேன்… முன்பொருகால் எரிகின்ற சிதை யின் முன்னால் நின்றுகொண்டு அவன் செய்த தத்துவ விசாரத்தைத்தான் நானும் செய்வதாகப் பாவனை பண்ணுகிறேனோ?
அவன் பேசுகிறான்.
“ஆழம் நிறைந்த இந்தக் கடலிலே ஒரு குமிழி யாக மிதந்து எட்டமுடியாத கனவுலோகங்களையெல்லாம் நான் கண்டுவரப் போகிறேன். அலைகளிலே ஊஞ்சல் ஆடுவதுபோல அங்கும், இங்கும் ஆடிக் கொண்டு முடிவேயில்லாமல் மேலே மேலே சென்று கொண்டிருக்கப் போகிறேன். ஆஹா! அது எவ்வளவு நல்ல காட்சியாய் இருக்கும்!”
ஆ… அதோ…… அந்த நெருப்பிலேயிருந்து ஓர் அம்பு போலக் கிளம்பி, கடலுக்குள்ளே பாய்ந்து நீரைக் கிழித்துக்கொண்டு அவன் போகிறான்.. நீந்துகிறான்…… சுழி ஓடுகிறான்……
என்ன? மனப்பிராந்தியா ? அல்லது உண்மையா கவே அவன்…
கிள்ளிப் பார்த்துக்கொண்டு நிமிர்கிறேன். கால்கள் தள்ளாடுகின்றன. பீதி கண்களில் சுழல்கிறது. உடம்பே குடங்கிப்போய் இல்லை என்று ஆகி விடுவதுபோல……..
நிற்கிறேன். காற்றிலே சரிந்து தள்ளாடுவது போலச் சரிந்து வெடவெடவென்று நடுங்கியபடி தடு மாறிக்கொண்டு நிற்கிறேன்.
மனக்கடலிலே நினைவுகள் குமிழியிடுகின்றன.
(2)
நெஞ்சை நிமிர்த்தியபடி போர்வீரன் ஒருவனுடைய கம்பீரத்துடன் அவன் முன்னால் சென்று கொண்டிருக்கிறான். சதை கொழுவிய அவனது கால்கள் மணலினுள்ளே சதக், சதக்கென்று ஆழ்ந்து, பிறகு வெளி யேறுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சிரித்துக் கொண்டே பின்தொடர்கிறேன்.
அவனுடைய பிடரி மயிர் சிங்கத்தினது போலச் சிலிர்த்துக் கொண்டு நிற்கிறது. கருங்காலியிலே செதுக் கிய உடலும், உடுக்குப்போன்று சிறுத்த இடையும், இராஜநாகத்தின் படத்தைப் போல அகன்ற மார்பும், ஆடுகின்ற குதிரைச் சதையும்………
“கணேசா! நீ அபூர்வப் பிறவியடா” என்று அந்தச் சிறிய வயதிலே என்னைச் சொல்ல வைக்கவில்லை. என்பது உண்மையே. ஆனால் அவனிலே பயம், மதிப்பு, பாசம் என்ற அத்தனையும் கலந்த ஒருவகை அன்பைச் செலுத்தினேன் என்பதை மறுக்கமுடியாது
இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரேவயது. பத்துக் கும், பதினொன்றிற்கும் இடையிலே இருக்கலாம்.
‘சதக் சதக்’ அவன் மணலைக் கிழித்துக் கொண்டு போகிறான் நான் பின் தொடர்கிறேன்.
திடீரென்று நின்றவன் கையிலே வைத்திருந்த புத்த கத்தைச் சுழற்றிக் கடலிலே வீசுகிறான். அது காற்றிலே இதழ்விரித்து ஒரு வெள்ளைத் தாமரைப் பூப்போல மிதக்கிறது.
கலகலவென்று சிரிக்கிறான். நான் நடுங்குகிறேன். “டேய்! கணேசா! பள்ளிப் புத்தகமடா. எறிந்து விட்டாயே! உன் ஐயா அடிப்பாரேயடா!” பயந்து பயந்துதான் இப்படிச் சொல்கிறேன்.
“அப்படியா ? அடிக்கட்டுமே! எனக்குப் பயமா? இன்று பள்ளிக்கூடம் போகாமல் கடற்கரைக்கு வந்தேன். அடித்தாரோ? அவ்வளவுதான்! ஒவ்வொருநாளும் ஒளித்தொளித்து இங்கே வருவேன். மிஞ்சினால் கடலுக்கே என்னைக் கொடுத்து விடுவேன். அதுதான் என் அம்மா!”
கடைசி வார்த்தைகளைச் சொல்லும்போது உலகத் தின் பாசம், கனிவெல்லாம் அவனது கண்களிலே தேங்கி நிற்க அவன் கடலையே வெறித்து நோக்குகிறான். அந்த விழிகளிலே வெட்டி வெட்டி ஒளிவீசும் மின்னற்கீற்று என் கண்களைக் கூச வைக்கிறது. குத்தி இழுக்கின்ற அந்தக் குத்தீட்டி நாசியையும், தடித்துப் பருத்த உதடு களையும் உற்றுநோக்குகையில், எனக்கு வாய் அடைத் துப் போகிறது.
அவன் வழி நடத்தவும், நான் மறுபேச்சின்றி அவ னைப் பின்பற்றவும் என்றே கடவுளால் படைக்கப்பட் டிருகிறோம், என்று நினைக்காதிருக்க என்னால் கூடவில்லை.
இந்த உணர்ச்சி உண்டானதும், எனது புத்தகங்களை மணலிலே புதைத்து அதற்கு மேல் கல் ஒன்றை அடை யாளம் வைத்துவிட்டு அவனுக்குப் பின்னால் போகிறேன் … போய்க்கொண்டே இருக்கிறேன்.
“சதக், சதக்” கால்கள் மணலிலே தாழ்ந்து மிதந்து செல்கின்றன. சிறிது நேரத்தில் கரை ஒடுங்கிப் போகத் தண்ணீரில் இறங்கி நடக்கிறோம். தண்ணீர் பட்டுப்பட்டுத் தேய்ந்துபோய் வழுக்கை பற்றிய கற் களிலே இலாவகமாக அவன் நடந்து சென்றபொழுது, அவனைத் தொடர்ந்து செல்வது சற்றுக் கடினமாகவே இருக்கிறது.
“கடந்த இரவு ஒரு கனவு கண்டேன். கதாகால க்ஷேபத்தில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிப் பாகவதர் சொன்னாரே ? அந்த அவதாரங்களைப் போலவே நானும் பல பிறவிகளை எடுப்பது போல இருந்தது. எனக்கு முன்னால் எல்லையில்லாத கடல் விரிந்து கிடப்பது போலவும், நான் திடீர் என்று மீனாக வும். நண்டாகவும், சுறாவாகவும், திமிங்கிலமாகவும் மாறி மாறி அதிலே மிதந்து செல்வது போலவும், தோற்றங்கள் உண்டாயின.”
“இதிலே ஒரு விசேடத்தைப் பார்த்தாயா? வேறு வேறான எனது பிறவிகளெல்லாம் கடலிலேயே உண்டாகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் இந்த மண்ணிற்கு உரியவன் அல்லவென்றும், கடல்தான் எனக்கு உரியதென்றும் தோற்றவில்லையா ?”
சில மணித்தியாலங்களுக்கு முன்னால் வரும் வழியிலே அவன் சொன்னவை எல்லாம் என் மனத்திலே எதிரொலிக்கின்றன. “இதெல்லாம் என்ன ? இப்படி யெல்லாம் இவன் ஏன் பேசுகின்றான்?”
என்னுடைய சின்னஞ்சிறிய மூளைக்கு ஒன்றுமே விளங்கவில்லை; விளங்கவேயில்லை. கண்ணைக்கட்டிக் காட்டிலே விட்டதுபோல இருக்கிறது. ஆனால்…….
வழிநடத்துவது அவன் பொறுப்பு. பின் செல்வது என் கடமை.
நெளிந்தும் வளைந்தும் சுழியிட்டுப் புதுப்புதுக் கோலங்களைக் காட்டி, உடனுக்குடன்அழித்து… தண்ணீர் விலகி வழி விடுகிறது.
போய்க்கொண்டே இருக்கிறோம்.
(3)
சுடலை வந்துவிட்டது. நேரம் மத்தியானம் பன்னி ரண்டுமணி. எனக்குத் திக்கென்றது. நெஞ்சின் அடிப்பே நின்றுவிட்டதுபோல இருக்கிறது.
மத்தியான வேளையிலே சுடலையில் பேய் உலாவு மாமே? பயத்திலே காலும் ஓடவில்லை ! கையும் ஓடவில்லை !
“டேய்!” கணேசன் வந்து தோளிலே தட்டி ஆதரவோடு கூட்டிக்கொண்டு போய்ச் சுடலை மத்தி யிலே இருத்துகிறான்.
அப்பொழுதுதான் சுடலையிலே பிணம் ஒன்று எரிந்து முடிந்து நீறுபூத்துக் கிடக்கிறது. அவன் ஓடிச்சென்று, தன் மாமாவின் கடையிலே களவெடுத்து வந்த சுருட்டொன்றை அதிலே பற்றிக்கொண்டு வருகிறான். சுருட் டுக்கும் வாய்க்குமாகப் புகை முக்குளிக்கிறது.
“அடப் பாவிப் பயலே ! என்னடா செய்கிறாய்? நீ பேயா பிசாசா?” என்று கத்தவேண்டும் என்று நினைக்கிறேன். வாயையுந் திறந்துவிட்டேன். சப்தம் வெளிப்பட்டால்தானே ? நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது.
சுடலைப் பக்கத்திலே சிதறிக் கிடத்த எலும்புகளைச் சேகரித்தும், கீழே கிடந்த இளநீர்க் குரும்பைகளை எடுத்துப் பக்கத்திலே உள்ள கிணற்றிலே எறிந்தும் அவன் தன்னை மறந்த லயத்திலே ஆடிக் களிக்கையில்….
நான் விக்கித்துப்போய் பிணத்தோடு பிணமாய்க் கிறங்கிய நிலையில் சுடலை மடத்திலே அமர்ந்திருக்கிறேன்.
“டேய்! கோழை! ஏனடா பயப்படுகிறாய்? ஒரு நாளைக்கு நாங்களும் இப்படித்தானே? வாடா.
சுருட்டை வீசிவிட்டுக் காறி உமிழ்ந்த வண்ணம் அவன் என்னை அழைக்கிறான். நான் எழுந்து அவனைத் தொடர்கிறேன்.
(4)
தண்ணீரிலும் கரையிலுமாக மாறிமாறி நடந்து செல்கிறோம்.
பாறைகள் தெரிகின்றன. முடவனைப்போலும், நொண்டியைப்போலும் முண்டு, முடிச்சுக்களோடு அவை சர்வ அவலட்சணங்களாய்க் காட்சி தருகின்றன. கன் னங் கரிய பேய்க் கூட்டங்கள் தங்கள் விழிக்குகைகளின் மூலம் என்னை முறைத்துப் பார்ப்பதுபோல இருக்கிறது.
ஆங்காங்கு மணலிலே பாம்புகளும், நண்டுகளும் ஊர்ந்து சென்ற சுவடுகள்……
“இனி என்றைக்குமே இவனோடு வரக்கூடாது. பள்ளிக்கூடத்துக்குக் கள்ளம் போடக்கூடாது. கடவுளே! இந்த ஒரு முறை மாத்திரம் என்னைக் காப் பாற்றிவிடு” என்று பயத்தினால் பேரிகைபோல அதிர்ந்து கொண்டிருக்கும் நெஞ்சு, கடவுளை நினைத்து ஓலமிட்டுக் கதறுகையில்……
கணேசன், கயிற்றை அறுத்துவிட்ட கன்றுக்குட் போலப் பாறையிலும், கற்களிலும் குதித்துக் குதித்து ஓடுகிறான்; மேலே மேலே ஏறிக் குன்றின் உச்சிக்கே போய்விடுகிறான்:
இனிப் பயப்படக்கூட இயக்கம் இல்லாதவனாய் அவனை நோக்குகிறேன்.
“டேய்! மூர்த்தி! பாரடா. இந்தப் பாறையிலி ருந்து குதித்துத் தண்ணீரிலே நீந்திக்கொண்டேபோய், அதோ அந்த ஆகாயத்தை எட்டிப் பிடிக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறதடா. பின்னேரங்களில் அங்கே சூரியன் வந்தால் அதைத் தொட்டுப் பார்த்து ஆனந்தப்படவேண்டும்போல இருக்கிறதடா. ஆகாயம் நான் கட்டியிருக்கும் வேட்டிபோல இருந்தால் அதைக் கிழித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து வந்து உனக்குச் சொல்லுவேன்.”
ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, மறு கையைத் தொடுவானத்திற்கு எதிராக நீட்டி அவன் அந்தப் பாறையின் உச்சியிலே நிற்கையில், பயத்தால் அடைபட்டுப்போன என் காதுகள் கூடத் திறந்து கொள் கின்றன. அந்த வயதிலே, அந்தச் சூழ்நிலையிலே, அவன் சொன்னதை நம்பத்தான் வேண்டும் போல எனக்குத் தோற்றுகிறது. திறந்த வாய் மூடாது அவசமாகி அவனையே பார்த்து நிற்கிறேன்.
ஆ….. இது என்ன ? கால்களினூடாக….. ஏதோ நொளு நொளுவென்று “ஐயோ! பாம்……”
கணேசன் பாறை உச்சியிலேயிருந்து பட படவென்று குதித்து ஓடி வருகிறான். கல்லைத் தூக்கி ஓடுகிற பாம்பின் தலையிலே ஒரே போடு…! பாம்பு வாயைப் பிளந்து விடுகிறது.
அதைத் தூக்கிச் சுழற்றியபடி அவன் என்னைத் துரத்திக் கொண்டு ஓடிவந்தபொழுது…… அதற்கு உயிர் இல்லை என்று தெரிந்துகொண்டும், உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஓடுகிறேன்…… அப்படி ஓடுகிறேன்.
நான் களைத்துச் சோர்ந்துபோய்க் கீழே சரிகையில், அவனுக்கு அநுதாபம் ஏற்பட்டுவிடுகிறதுபோலும் ! பாம்பை எறிந்துவிட்டு எனக்கருகிலே வந்து என்னை அணைத்துக் கொள்கிறான். “பயப்படாதே” என்று ஆறுதல் சொல்கிறான்.
திரும்பி நடக்கிறோம்.
வழியிலே கிடந்த பலவர்ண இறால் ஓடுகள், கிளிஞ்சல்கள், இராவணன்மீசை என்று பலதும் பத்தும் அவ னுடைய மடித்துக்கட்டிய வேட்டியைச் சரண் அடைகின்றன.
“பைத்தியக்காரா! ஏனடா இந்தக் குப்பைகளை யெல்லாம் சேகரிக்கிறாய்?” என்று அவனைக் கேட்க லாமா என்று ஒருகணம் யோசித்துப் பிறகு மெளன மாகிறேன். கேட்டுத்தான் என்ன பயன்? தன் முட் டாள்தனத்தை விட்டுவிடப் போகிறானா ? இவை கடல் அன்னை எனக்குத் தந்த அன்புப் பரிசில்களடா” என்று சொல்லிப் பெருமைப்பட்டு இன்னும் இன்னும் பொறுக்கிச் சேகரிப்பான்.
என்ன பந்தமோ? என்ன பாசமோ? அவனைப் பின் தொடர்கிறேன்.
(5)
கடலிலே கணேசன் இறங்குகிறான் என்றால், அவ னுக்குக் குஷி பிறந்துவிட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
வேட்டியை அவிழ்த்து வைத்துவிட்டு முழு நிர்வாண மாகக் கடலிலே குதித்துக் குதித்துச் செல்கிறான்.
சுறாமீனைப்போல, யந்திரப் படகைப்போல நீரைக் கிழித்துக் கொண்டு……
குரும்பையாகத் தெரிந்த தலை பனங்காய் அளவாகி விளாங்காய்ப் பரிமாணத்திற்குச் சிறுத்து எலுமிச்சங் காயளவு குறுகி……
கண்ணிற்கு மறைந்து விடுகிறது.
வருவானா? மாட்டானா?
தனிமையின் பயங்கரத்திலே அமிழ்ந்துபோய்க் குழந்தைபோல விக்கி விக்கிக் குமுறிக் குமுறி அழுகி றேன்.
கடல்போல நெஞ்சு குமுறுகிறது. ஆர்ப்பரிக்கிறது. அழுகிறது, விம்முகிறது.
என்ன செய்வேன்?
“என்னடா பயம்? மடையா! கடல் எனக்குக் தாயடா. அவள் ஒரு போதும் என்னை அழிக்க மாட் டாள். அழாதே வா, போவோம்.”
அவசரம், அவசரமாக வேட்டியைக் கட்டியபடி அவன் இவ்வாறு சொல்கிறான். துடைக்கப்படாத அவ னுடைய பிடரியிலிருந்து முத்து முத்தாக நீர்த்துளி சிந்துகிறது
நடக்கிறோம்;
கணேசன் தன் பேச்சைத் தொடர்கிறான்; ”வாத்தி யார் நீரரமகளிரின் கதையைச் சொன்னதிலிருந்து, நானும் அந்தச் சாதியார்போல ஆகிக் கடலினுள்ளேயே வாழவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக என் உயிரையும் இழக்கத் தயங்க மாட்டேன். மண்ணிலே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியில்லை,”
“சில சமயங்களில் அரைகுறையாகக் கண்ணை மூடிக் கொண்டு நான் கனவு காணும்பொழுது கடல் தாய் ** மகனே ! வா என்று அழைப்பது போல எனக்குத் தோற்றுவதுண்டு. இது எதில் போய் முடியுமோ? நான் அறியேன். “
அறுபது வயதுக் கிழவனைப் போலக் கண்கள் கிறங்க நடுங்கி, நடுங்கி அவன் இப்படியெல்லாம் சொன்ன பொழுது…….
எனக்கு அவனைப் புரிவது போலவும் இருக்கிறது. புரியாதது போலவும் இருக்கிறது.
கடற்கரையிலே வென்று இரைந்து கொண்டு சுழன்றடிக்கும் காற்றை வாயைத் திறந்து நிரப்பியபின், வாயை மூடினால் ஒன்றுமே வாய்க்குள் இல்லாத உணர்ச்சி ஏற்படுகிறதல்லவா? அதுபோலத்தான் இந்தச் சந்தேக மும், தெளிவும் என் நெஞ்சை நிரப்பியும் வெறுமை யாக்கியும் விளையாடுகின்றன.
(6)
நாள்கள் உருண்டோடுகின்றன.
இது நாள் வரை ஓலையால் வேயப்பட்டிருந்த சுடலை மடம் ஓடுகள் பெற்றுப் புதுமையிலே மினுமினுக்கிறது. அதற்குச் சிறிது தூரத்திலே இருந்த வீரசைவரது சமாதி களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாகக் கூடுகின்றன. மண்ணைத் தழுவிவிட்டு மீண்டு செல்லும் அலைகளைப் போலப் பிறப்பும், மரணமும் ஒன்றை ஒன்று தழுவி முயங்குகின்றன.
ஏகாந்த நிசாசரப் பெருவெளியாய் இருந்த கடற் கரையிலே அந்தியேட்டி மடமும், சில புதுக் கட்டடங் களும் புதுமையின் மெருகு குறையாது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. பன்னிரண்டு வருடங்கள் !
நானும், கணேசனும் வளர்ந்து வாலிபராகி விடுகி றோம். சௌந்தர்ய மூர்த்தியாக, புருஷத்துவத்தின் உன்னத இலட்சியமாக நிமிர்ந்து நின்ற கணேச விரு க்ஷத்தின் பக்கத்திலே, ஒரு சிறு முருங்கை மரமாக நானும் நிற்கிறேன். இன்னமும் என்வரையிலே அவன் ஒரு வழிகாட்டிதான்.
அவனை நான் நேசிக்கிறேன். அவனுடைய ஏளனங் கள், பரிகாசங்கள் என்ற அனைத்தையுந் தாண்டி, எனது பாசக்கொடி அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எந்தக் கூட்டத்திலும் அவனுக்குத்தான் தலைமை. யாரும் அவனை மதிக்காமல் இருக்க முடியாது.
அவனுடைய ண்டல்களும், கேலிகளும் சந்திரக் கதிர்கள் போலத் தண்மையாக இருப்பதில்லை. அவை காய்கதிர்ச் செல்வனின் கதிர்களுக்கு எவ்வகையிலும் குறையாத வெம்மை பொருந்தியவை.
அவனுடைய கேலிகள் ஈட்டிகளாய் வந்து பாயும் பொழுதும், அசடுவழியச் சிரிக்கலாமேயொழிய எதிர்த் துப் போர்க்கொடி தூக்க என்றைக்குமே முடியாது. அத்துணை சக்தி பொருந்தியவை அவை,
சில வேளைகளில் நண்பர்களோடு வம்பளந்தபடி கடற்கரையிலே இருப்பான். நான் சிறிது தாமதித்து அங்குப் போனாலோ தொலைந்தது. மற்றவர்களைத் தூண்டிவிட்டு, என்னை அலட்சியம் பண்ணச் செய்து, சம்பாஷணையிலே கலக்கவிடாமலே அலைக்கழிப்பான்.
அவனும் நண்பர்களும் தங்கள் பாட்டிலே பேசிக் கொண்டிருப்பார்கள். நான் என்ன சொன்னாலும் யாரிட மிருந்தும் பதில்வராது. இப்படிச் சில நிமிஷங்களல்ல; பல மணித்தியாலங்களுக்குக்கூட நான் அலட்சியப்படுத் தப்படுவதும் உண்டு.
ஆனால், அதற்காக அவனை வெறுப்பது மாத்திரம் என்னால் முடிவதில்லை. அவ்வளவு ஆழமாக அவன் தனது புருஷத்துவத்தை என் நெஞ்சிலே ஆழப் பதித்திருந்தான்.
(7)
கடல்மீது அவன் கொண்டிருந்த அன்பு வெறியோ காலப்போக்கில் அவன் அளவையும் கடந்து விசுவரூப மெடுத்து அவனைத் தன்னுள் ஆக்கிரமிக்கலாயிற்று.
பல்கலைக் கழகக் கல்வியும், தத்துவ சாஸ்திரத்திலே பெற்ற சிறப்புப்பட்டமும் நெய்யாகி அவனது பாசாக் கினியைக் கொழுந்துவிட்டெரியத்தான் வைக்கின்றன.
கடற்கரைக் கிளிஞ்சல்கள் நிறைந்திருந்த அவன் அறையிலே, அலமாரிகள் பொங்கி வழியுமளவுக்குக் கடல்பற்றிய ஆராய்ச்சி நூல்களும், கட்டுரைகளும், துண்டுப் பிரசுரங்களும் அடைந்து கிடக்கின்றன.
கல்லூரி விட்டதும் ஓடோடி வருவான். மீதிப் பொழுதெல்லாம் சமுத்திர ஸ்நானத்திலும். கடலையே பார்த்திருக்கும் சிந்தனையிலும் கழியும்.
அது ஒரு யோகம்! எந்தச் சக்தியாலும் கலைக்க முடியாத ஏகாக் கிர சித்தயோகம்!
அடிவானமும், செங்கதிரும் பின்னிப்பிணைந்து கலந்து உறவாடும். கடலிலே குருதிச் செம்மையை நிழலாக விழுத்தி, அதைத் தழுவிச் சிலிர்ப்பான் வெய்யோன்.
சிறிது பொழுதில் வானத்திலே நட்சத்திரப்பூக்கள் பூத்துக் குலுங்கும். சந்திரப் பாற்குடம் கவிழ்க்கப்பட்டு அதிலிருந்து ஒளியமுதத்துளிகள் உலகின்மீது தெளிக்கப் பட்டிருக்கும். கடலே வெள்ளியாய் உருகி வழியும்.
இந்தக் காட்சிகளிலே அத்துவிதமாகி, மெய்ம் மறந்துபோய் அவன் கடற்கரையிலேயே வீழ்ந்து கிடப் பான். கனவுகள் செறிந்த விழியும், கற்பனை பொதிந்த நெஞ்சும்,கவித்துவம் நிறைந்த சிந்தையும் அவனிலிருந்த ‘அவனைத்’ தட்டி எழுப்பி விழிப்பு நிலையில் வைக்கை யில்……
அவன் என்னவெல்லாமோ புலம்புவான். ” உலகின் தோற்றமூலம் தண்ணீர் தான்” என்று கிரேக்க தத்துவ ஞானத் தந்தையாகிய தேல்ஸ் கூறியிருக்கிறார். உலகின் சராசரப் பொருளெல்லாம் நீரிலேயிருந்தே தோன், றி யிருக்குமாயின் நானும் நீரின் ஓர் அம்சந்தானே? உங் கள் எல்லாரிலும் அதிக அளவிலே நீரின் தன்மை என் னில் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தக் கடலிலே எனக்கு இத்தனை பாசம் ஏன்? எந்தவோ ஒரு காலத்தில் சமுத்திர புத்திரனாக நான் வாழ்ந்திருக் கிறேன் என்று சொன்னால் அது உனக்குப் பைத்திய காரத் தனமாகத் தெரியலாம். ஆனால், அதுதான் உண்மை”.
“நான் விஞ்ஞானம் படித்தவன். குருட்டுத்தனமான எண்ணங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் கட லோடு எனக்குள்ள சம்பந்தத்தைக் குருட்டு நம்பிக்கை என்று என்னால் தள்ளமுடியவில்லை.”
இந்த வெள்ளலைக் கரங்கள் எனது உடலை அளைந்து கொண்டே இருக்க என் கடைசி மூச்சு என்னை விட்டு நீங்குமானால்…… நான் உண்மையிலே பெரும் பாக்கிடீ சாலிதான்.
(8)
” எப்படிப்பட்ட பிள்ளை ? எத்தகைய அறிவாளி! இவனுக்கா இந்த நிலை? கணேசனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாமே!’ என் தாயிடம் போகிறேன். விடுங்கள், விடுங்கள்’ என்று கத்திக்கொண்டு கடலை நோக்கி ஓடுகிறானாமே.’ ஊரெல்லாம் அவனைப் பற்றி அநுதாபத்தோடு பேசிக்கொள்கிறது!
பெற்ற வயிற்றைப் பிசைந்துகொண்டு அவனுடைய விதவைத் தாய் செய்யாத வைத்தியமே இல்லை.
பைத்தியம் என்றாலல்லவா தெளிவதற்கு?
அது ஒரு வெறி. தாயின் முலையிலே பாலைக் குடித்த படி, அவளின் மடியிலேயே சயனிக்கத் துடிக்கும் குழந்தையின் வெறி.
அது அடங்கவே மாட்டாது!
விலங்கு அறுகிறது: அவன் ஓடுகிறான். கையை விரித்த படி, கடல் அன்னையை அணைத்துக் கொண்டு அவன் மேலே மேலே போகிறான்..
குரும்பையாய்த் தெரிந்த தலை, பனங்காய் அளவாகி, விளாங்காய் பரிமாணத்திற்குச் சிறுத்து. எலுமிச்சங்காய் அளவிற்குக் குறுகி……
கண்ணிற்கு மறைந்து விடுகிறது……
நிரந்தரமாக……
நெருப்பு அணைகிறது.
அவனில் அது செத்து அவன் எஞ்சி…….
கடல் கோஷிக்கிறது?
கொலை வெறியா ?
இல்லை……
குழந்தையைத் தழுவி அணைத்த ஆனந்த வெறி.
– தினகரன், 1962-9-23.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.