கசக்கும் உண்மைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 4,737 
 
 

என் பெயர் நிர்மலா.

சுவையற்ற உணவும், பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன் படாமல் இருந்தேன்.

குழந்தையாக இருக்கும்போதே எனது பெற்றோர்களால் கைவிடப் பட்டவள் நான். எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்?

இல்லை, இல்லை. நான் அனாதை இல்லை. அது மிகவும் வேதனைக்குரியது. எனது பெற்றோர்கள் உயிருடன்தான் இருக்கிறார்கள். நான் வாழும் இதே சிட்டியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னிடம் வேற்று நபர் போல் நடந்து கொள்வார்கள்.

பசி வந்தால் வீல் என்று அழுவேன். அப்போது தாலாட்டுப் பாடி என்னைத் தூங்கவைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் தொட்டியில் படுத்துக் கொண்டிருந்தபோதே என்னைத் தனியாக விட்டு விட்டுப் போக அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

எதையோ இழந்து விட்டோம் என்று கவலைப்படக் கூடத் தெரியாத வயது அது. இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கும், அவள் மூலமாக பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்கும் நான் பிறந்த உடனேயே என் அப்பா என் அம்மாவை விட்டு விலகிச் சென்றார்.

பிறகு என் அம்மாவும் என்னை விட்டுச் சென்றார். அவருக்கும் ஓர் ஆண் மீது காதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரிந்தால்தானே அதை நான் இழப்பதற்கு?

பிறகு என் தாய்மாமா வீட்டில் நான் பரிதாபத்தோடு வளர்க்கப்பட்டேன். புரிந்து கொள்ளப் போதுமான வயது வந்தபோது, என் தாய் மாமாதான் எனக்கு என் பெற்றோர்களைக் காட்டியவர். சோகம் நிறைந்த கண்களுடன் அவர்களை நான் பார்த்தேன்.

என்னை அருகில் இழுத்து கட்டி அணைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் முகம் தெரியாத ஒரு நபரைப் பார்ப்பதுபோல் அவர்கள் என்னைப் பார்த்தனர். நான் யாருடைய குழந்தையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மிகவும் வேதனையான தருணம் அது.

அதனால் ஏழ்மையில் வாடும் என்னுடைய தாய்மாமா ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய விடுதியில் என்னைச் சேர்த்துவிட்டார்.

அங்கு ஒரு முரட்டுத்தனமான அதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது குறித்து எனக்கு அப்போது தெரியாது. ஆம். என் தந்தைக்கும் அவரது இரண்டாம் தாரத்திற்கும் பிறந்த பெண்ணையும், நான் வசித்துவந்த அதே விடுதியில்தான் எனது தந்தை சேர்த்திருந்தார். கொடுமை!

ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும்போது நான் தேவையில்லாதவளாக ஒதுக்கப்பட்டதுதான் என் நினைவுக்கு வரும். அவள் மீது எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம். நான் யாரென்பது அவளுக்குத் தெரியும். அவளுக்கு நிச்சயம் தெரியும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் இது மிகுந்த வலியைத் தந்தது.

என்னுடைய அப்பா அவளை அடிக்கடி பார்க்க வருவதோடு, விடுமுறை நாட்களில் அவளைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார். என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்வாரா என்று நான் மெளனமாக ஏங்கிக் காத்திருப்பேன். ஆனால் என்னுடைய காத்திருப்பு எப்போதும் வீணாகிப் போய்விடும்.

அப்பா என்னை ஏறிட்டுக்கூட பார்க்க மாட்டார். ஒருவேளை அவருக்கு என்மீது அன்பு இருக்கிறதா; இல்லை என்னுடைய சித்தி என்னை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துவர அனுமதிக்க மாட்டாளா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

அவர்கள் பார்வையில் படாதபடி நான் தனியாகச் சென்று வேதனையுடன் குலுங்கிக் குலுங்கி அழுவேன். மற்ற குழந்தைகளைப் போல விடுமுறை நாட்களை நான் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.

என்னைப் பொறுத்த வரையில் விடுமுறை என்றால், பணம் சம்பாதிக்க பெட்ரோல் பங்கில் போய் வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் எனக்குச் சாப்பாடு கிடைக்காது. அப்படி வேலை கிடைக்கவில்லை என்றால், சில நேரங்களில் நான் கல்யாண வீடுகளின் வாசலில் நின்று ரகசியமாக பிச்சை எடுத்தும் சாப்பிட்டுருக்கிறேன். .

விடுமுறையின் போது பெட்ரோல் பங்கில் நான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் என் தாய்மாமாவின் குடும்பத்திற்கு கொடுத்துவிடுவேன். இதற்குப் பதிலாக அவர்கள் எனக்கு உணவும், தங்க இடமும் கொடுக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் திறந்த பிறகு எனக்கு பேனா, பென்ஸில் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக்கொள்ள சிறிது பணத்தை சேமிக்கவும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், இன்னமும் நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. அவர்களின் அன்பிற்காக நான் ஏங்குகிறேன். பண்டிகைகளை அவர்களுடன் கொண்டாட வேண்டும் என்பது என் கனவு. ஆனால் அவர்களுக்கென ஒரு வாழ்க்கைத் துணையும், தனிக் குடும்பமும் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மைகள்.

விடுதியில் என் தோழிகள் சொல்லும் கதைகளை நான் ரசித்துக் கேட்பேன். எனது ரசனையே அவர்களது விடுமுறைகள் பற்றித்தான். எனது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் அவர்கள்தான் என் சுவாசக்காற்றே.

அவர்களை முழுவதும் நம்பி என்னுடைய உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்வேன். நான் வாழ்க்கையில் தனியாக எதிர்நீச்சலடித்து சோர்வடைதைப் பார்த்து பார்த்து, அவர்கள் என்னைப் பாசமுடன் பார்த்துக் கொள்கிறார்கள்.

என்னுடைய விடுதிப் பாதுகாவலர் நாராயணி மேடத்தைத்தான் நான் என்னுடைய உண்மையான தாயாக நினைக்கிறேன். பாவம் அவர் ஒரு விபத்தில் தன் கணவரைப் பறி கொடுத்தவர். அவரிடம்தான் ஒரு தாயின் அன்பை நான் கண்கூடாகக் கண்டேன்.

என்னுடைய சக தோழிகள் நோய்வாய்ப் படும்போது அவர்களின் குடும்பத்தாரை தொலைபேசியில் நாராயணி மேடம் அழைப்பார். ஆனால் எனக்கோ அவர்தான் என் குடும்பமே. அவரால் முடிந்ததை அவர் எனக்குச் செய்கிறார். அவர் எனக்குச் சிறந்த உடைகளை வாங்கித்தரும் தருணத்தை மிகச் சிறப்பாக உணர்கிறேன்.

ஒருவரால் நேசிக்கப் படும்போது ஏற்படும் உணர்வை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், பொதுவாக வாழ்க்கையில் ஒருவர் சந்திக்க விருப்பப்படும் சில மகிழ்ச்சிகரமான விஷயங்கள் இல்லாமலும் வாழ்வதற்கு நான் கற்றுக் கொண்டுள்ளேன். உதாரணமாக எனக்குப் பிடித்த உணவை சமைத்துத் தருமாறு என்னால் யாரிடமும் கேட்க முடியாது.

நான் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் இந்த விடுதியில் தங்க முடியும்.

அதன் பிறகு எங்கு செல்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் தாய்மாமா இனிமேல் எனக்கு உதவ மாட்டார். என்னுடைய பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்கு ஒருவேளை நான் வேலைக்குச் செல்லக்கூட நேரிடலாம். ஏனெனில், நான் என்னுடைய படிப்பை மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். நான் கற்கும் கல்வி மட்டுமே எனது வாழ்க்கையை இனியேனும் நல்லவிதமாக கட்டமைப்பதற்கான ஒரே வழி.

இதற்கிடையே நான் சமீபத்தில் வயதுக்கு வேறு வந்துவிட்டேன். உடல் பூரிப்புடன் கன்னங்கள் மின்ன காண்பதற்கு செளந்தர்யமாக இருக்கிறேன்.

இனி ஒவ்வொரு ஸ்டெப்பையும் நான் மிகக் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டும். நன்றாகப் படித்து நான் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன்.

திருமணத்தையோ அல்லது குடும்பத்தையோ நான் வெறுக்கிறேன். எப்போதும் தன்னிச்சையாக இயங்குவதற்கே நான் விரும்புகிறேன்.

முனைப்புடன் போராடி கண்டிப்பாக வாழ்க்கையில் நான் ஜெயித்துக் காட்டுவேன். தலை நிமிர்ந்து நடப்பேன்.

அப்போது நாராயணி மேடத்தை என் கண்களின் இமைபோன்று பாதுகாப்பேன்… இது சத்தியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *