ஓடிப் போய் விடலாமா?
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: காதல் குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 19,733
மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி கேட்டாள்.
“ என்னால் இனியும் வீட்டில் சமாளிக்க முடியாதுங்க!….நாம இந்த ஊரை விட்டே எங்காவது போயிடலாமுங்க!….”
“ஏண்டி!…அர்த்தமில்லாம பேசறே?…யாரிடமும் சொல்லாம நாம ஊரை விட்டுப் போனா…ஊர் உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?”
“ உங்களுக்கு என்னைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லே!….நான் அவங்க கிட்டே மாட்டிக்கிட்டா அவங்க என்னை சின்னா பின்னப் படுத்திடுவாங்க!…”
“நான் இல்லேனு சொல்லலே!….நல்லா யோசித்து நாம ஒரு முடிவு எடுக்கலாம்!…”
“ அதற்குள் நேரம் கடந்து விடும்!…” என்றாள் சாருமதி.
சாருமதி சொல்வதிலும் நியாயம் இருந்தது. யோசிப்பதற்குள் காலாண்டு தேர்வு முடிந்து எல்லா ஸ்கூலும் லீவு விட்டு விடுவாங்க..
உள்ளூரிலேயே இருக்கும் மூன்று மகன்களும், மருமகள்களும் வேலைக்குப் போகிறவங்க…தனியாக இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டில் அவங்க குழந்தைகளை லீவுக்கு கொண்டு வந்து, விட்டு விட்டுப் போயிடுவாங்க…பாவம் வயசான காலத்தில், சாருமதி ஒருத்தியால் எப்படி குறும்பு செய்யும் ஏழு குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொள்ள முடியும்?
– தி இந்து 25-10-13 இதழ்