ஒளவையார் ஆறுதல் உரை
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 5
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒளவையார் ஒருநாள் ஓர் ஊர் வழியே மற்றோர் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். ஒரு வீட்டிலே பல பெண்கள் கூடிப் பேரொலி செய்து அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அழுது கொண் டிருப்பதற்குக் காரணத்தை உணராத ஔவையார் அவ் வீட்டிற்குச் சென்றார். அங்கு வெளியிலே சில பேர் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்துப், “பெண் மக்கள் ஏன் அழுது கொண்டிருக்கின் றனர். காரணம் என்ன?” என்று உசாவினார். இருந்தவர்களில் ஒருவர் ஒளவையாரைப் பார்த்து, “இவ் வீட்டிலே ஓர் ஆண் குழந்தை நான்கு ஆண்டு நிரம்பியதாக இருந்தது. அது சென்ற ஆண்டிலே மாண்டுபோய்விட்டது. அஃது இறந்து ஓராண்டு நிறைவாகிறது. முதலாவதாண்டுத் துக்கங் கொண்டாடுகிறோம்,” என்று மறுமொழி கூறினார்.
அதனைக் கேட்டபொழுது ஒளவையாருக்கு மிகு நகைப்புண்டாயிற்று. ஆயினும், அவர் நகைக்காமல் அந்த மனிதர்களைப் பார்த்து, “அன்பர்களே! உலகத்தில் பிறக்கின்ற உயிர்களெல்லாம் வினைப்பயனை நுகர்ந்து இறந்துபோகின்றன. ஒருவர் இறப்பதைக் குறித்து நாம் வருத்த வேண்டியதே இல்லை. ஆனால், நீங்கள் மறு ஆண்டில்கூட அழுவது என்ன மடமை? நீங்கள் இந்த ஆண்டில் மட்டுமன்றி இனிமேல் வரும் ஒவ்வோராண்டிலும் இவ்வாறே அழுதுகொண்டிருந்- தாலும் ஏற்படப் போகிற பயன் யாதும் இல்லை.
ஆகவே, நீங்கள் நாமும் மாளப்போகிறவர்கள் தாம், அழுவதால் யாதும் பயனில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்து, அறஞ்செய்து நன்றாக வாழ்ந்திருப்பீர்களாக!” என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.
“ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்—வேண்டாம்
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.”
(உரை ) மாநிலத்தீர் – பெரிய நில உலகத்தில் உள்ள மனிதர்களே!, ஆண்டு ஆண்டுதோறும் அழுது புரண்டாலும் – ஒவ்வோராண்டினும் வருந்திப் புரண்டாலும், மாண்டார் வருவரோ – இறந்துபோனவர்கள் திரும்பி வருவார்களோ, (வரமாட்டார்கள்) வேண்டா-(ஆகையால்) அழ வேண்டிய தில்லை, நமக்கும் அது வழியே-நமக்கும் சாக்காடே வழியாகும். நாம் போம் அளவும் – நாம் இறந்து போகுமளவும், எமக்கு என் என்று – எமக்கு யாது தொடர்பு இருக்கிறதென்று, இட்டு உண்டு இரும் பிச்சையிட்டு நீங்களும் கவலையற்று இருங்கள்.
(கருத்து.) இறந்தவர்களைக் குறித்து ஒவ்வோராண்டினும் அழுது வருந்தினாலும், அவர்கள் பிழைத்து வரமாட்டார்கள்; ஆகவே, இறந்தவர்களைக் குறித்து அழுவதால் பயனில்லை.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026