ஒரே விருப்பம்

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 6,748 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சரளா!…..”

“ஊம்…”

“வாயிலே என்ன இருக்கிறது? ‘ஊம்’ என்றால்…?”

”எதற்காக இப்படிக் கத்துகிறீர்கள்?”

“நாய்க்கு வேறே என்ன தெரியும்?”

“விஷயத்தைச் சொல்லுங்கள்.”

“அ..ம்..மா!…தலையை வலிக்கிறது?..ஊம்!…”

“மானிடப் பிறவி தானே? நோய் வரத்தான் செய்யும்!”

“ஐயோ! உயிர்போகிறதே! இங்கே கொஞ்சம் வாயேன்.”

“நான் வந்தால் மட்டும் என்ன தீரப் போகிறது? கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொள்ளுங்கள்.”

“தலைவலி மருந்தைச் சிறிது தடவி விட்டுப் போயேன்.”

“அலமாரியில்தான் இருக்கிறது. எடுத்து நீங்களே தடவிக் கொள்ளுங்கள்.”

“மகாராணிக்கு வேறு வேலை யிருக்கிறதோ?”

“மாதர் சங்கத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.”

சங்கரன் படுக்கையில் திரும்பிப் படுத்தான், மக்கிச் செல்லரித்துப் போன மனசின் மூடி திடீரென்று கழன்று விழுந்த போது, வெகு நாட்களாக உள்ளுக்குள் நடந்து கொண்டிருந்த போர், உள்ளுக்கும் வெளிக்கும் தன்னுடைய எல்லையை விரித்துப் பரப்பிப் பேயாட்டம் போடுகிறது.

‘ஊ…ம்..!…அப்பா!’

இப்பொழுது வலி கிளம்புவது எந்த இடத்திலிருந்து? தலையிலா, மூளையிலா மனத்திலா? எந்தப் பொறியிலிருந்து இந்த உணர்ச்சி கிளறிவிடப்பட்டு அலை கிளம்புகிறது? மனம் என்ற ஒன்றைச் கட்டிக் காட்டுகிற இடத்தைமனித சமுதாயம் கண்டு பிடித்திருக்கிறது என்றாலும், வேதாந்த ரீதியாக ஏன் விஞ்ஞான ரீதியாக மனம் பிறந்து நிற்கிற இடத்தைக் கண்டு பிடிக்காத காரணத்தால்தான் வலி உடல் முழுதும் பரபரக்கிறதா?

சங்கரன புழுவின் நியைக்குத் தன் உடலை ஒப்புவித்து விட்டு, இதயத்தை – ரத்தத்தைப் பங்கிட்டு உடலுக்குத் தருகிற கேந்திர பீடத்தை – அமுக்கிப் பிடித்தான். சரளா சுண்டிவிட்ட சொடுக்கு அந்தரதத்தில் தோய்ந்து அவனுக்குச் சவால் விடுகிறது. ‘உடம்பில் ஓடுவது ரத்தம் தானா? இல்லை ‘ஓட’ வில்லை, தேங்கி நிற் கிறது. அதனால் தான் உனக்கு மனிதனுக்கு இயல்பாய், இயற்கை விளைவாய் எழுகின்ற சூடு இல்லை; ஸ்மரணை இல்லை.’

படுக்கையில் எழுத்து உட்கார்த்கான் சங்கரன். தலைவலி, வாழ்க்கையின் வலியாக அவனை ஏன் ஆட்டிப் படைக்கிறது? நெஞ்சத்தைப் பிடித்து அமுக்கிக் கொண்டான்.

மல்லிகையின் மணம் வந்தது; பௌடரின் வாசனை வந்தது; புடவையின் சவசலப்பு வந்தது; வளையலின் ஒலி வந்தது. அப்புறம் நடையின் ஓசை வந்தது.

இப்பொழுது நிகழ்வது ஏதும் புதியதில்லை ; புதுச் சக்தி பெற்றதும் இல்லை. பின் ஏன் சங்கரனின் உள்ளத்திலே, அவை அதீத சக்தி பெற்றுப் புயலை எழுப்புகின்றன?

சங்கரனுக்கு உடம்பு மலையாகக் கனத்தது. பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.

“என்ன?”

“ஊம்!”

”உங்களைத்தான்!”

”கேட்கிறது!”

‘”கிளப்பில் நிறைய வேலை யிருக்கிறது!”

“இருக்கட்டும்.”

“எட்டு மணிக்குள் திரும்ப முடியாது.”

“முடியாமல் போகட்டும்!”

“உங்களுக்குத் தலைவலி என்றீர்களே?”

“தெரியாமல் சொல்லிவிட்டேன்!”

“உங்களுக்குப் பசித்தால்..”

“பசிக்காது.”

“போய் வரட்டுமா?”

“மறுபடியும் இந்த அறைக்கு வர வேண்டாம்.”

“என் தலை எழுத்து.”

“இல்லை, நம் தலை எழுத்து.”

பேச்சுத் தொடரவில்லை. நின்ற நடை தொடர்ந்தது.

முகத்தைத் தூக்கிப் பார்த்தான். சங்கரன் பந்தயக் குதிரையைப் போல. ‘டாக்டாக்” என்று குதிகால் தூக்கிய செருப்பு ஓசையைக் கிளப்ப, கையில் தொங்கிக் கொண்டிருந்த அழகுப் பை ஆடி அசைய வாசலை நோக்கி விரைந்து போய்க் கொண்டிருந்தாள் சரளா.

சிறிது சிறிதாக அவன் பார்வையிலிருந்து அவள் மறைந்தாள். அவன் தலை ‘ணங்’ கென்று தலைணையில் சாய்ந்தது. மனம் ஆடிக் காற்றாய் அலைய, கண்கள் அதன் அசைவு தாங்காமல் தாமாக மூடிக்கொண்டன.

“சங்கரா!”

யார் அழைப்பது? கண்திறந்து பார்த்தான். யாரையும் காணோம். அந்தக் குரலின் ரீங்காரம் மட்டும் அவனை ஈர்க்கிறது. அன்பு வழிய அழைக்கும் குரல் எது? இந்த ஒரு வருஷச் சூழ்நியிைல் கேட்காத பரிவு இப்பொழுது இந்தக் குரலில் கேட்கும் விந்தை என்ன? விந்தையை நிகழ்த்துவது எது?

கண்கள் வலிக்கும் அளவுக்கு நாற்புறமும் பார்த்தான், உருவம் ஒன்றையும் காணோம். அலுப்புடன் அவன் விழிகள் முடிக்கொண் டன. இருண்ட குகையாக இருந்த கண்களுக்குள் ஒளி தோன்றுகிறதே ஓர் உருவம் மெல்ல மெல்ல மேல் எழும்புகிறதே? அந்த உருவம்…

“அம்மா!…” அன்பும் ஆதரமும் பொங்க வாய்விட்டு அலறினான் சங்கரன்.

“உன் அம்மாதானடா நான்! வெறும் வெளிப்பகட்டிவ மயங்கி மடியவிருக்கும் உன்னைப் பெற்றதற்குப் பலனை அநுபவித்து விட்டேனடா, சங்கரா! அன்று நான் முட்டிக் கொண்டேன். ‘அந்தஸ்துக்கு அதிகமான இடத்தில் பெண் கொள்வது நல்லதல்ல. அந்தப் பெண் வேண்டாம்’ என்றேன். கேட்டாயா, கல்லில்தான் மோதிக் கொள்வேன் என்றாய். ‘பெண்ணை எடுத்தது பற்றிக் கவலை இல்லை. ஒரே பெண் என்ற காரணத்தால் அவளோடு சேர்த்து உன்னையும் விலைக்கு வாங்கப் பார்க்கிறார் அவளுடைய தகப்பனார். ‘இருப்பது எல்லாம் அவர்களுக்குத்தானே? வீட்டுக்கு மாப்பிள்ளையாக அவன் வந்துவிடட்டும்” என்று அவர் பாக்குவைத்து அழைக்கிறார். போகாதேயப்பா! பதறியடித்துக் கொண்டு ஓடிவருவாய். பணத்தைக் கண்டு பல்லைக் காட்டுகிறாய். அதை அடைய வேண்டுமென்ற ஆவேசத்தில் உன்னையே நீ விற்கவும் தயாராகி விட்டாய். உன்னை ஆணாகப் பெற்றேன். ஒரு பெண் கையைப் பிடித்து இங்கே அழைத்துக் கொண்டு வருவாய் என்று நினைத்து, ஆனால் நீ பெண்ணாக மாறி ஒரு பெண்ணின் வீட்டுக்குச் செல்லத் துணிந்து விட்டாய்!’ என்று அடித்துக் கொண்டேன். திருப்பி நீ என் வாயிலேயே அடித்தாய். ‘உலகம் மாறுகிறது. பழைமை விடைபெற வேண்டும். என் மனைவி இருக்கிற இடம் சொர்க்கம். அவள் பெரும் பணக்காரருக்கு ஒற்றை மகளாகப் பிறந்தாள். அந்தச் சுகத்தை நான் அடைவதில் நீ ஏன் இத்தனை பொறாமைப் பட வேண்டும்? உன் மூத்த மகன் பெறாத சுகத்தை இளையவன் ஏன் பெறுவது என்ற வயிற்றெரிச்சலில் பேசுகிறாயா?’ என்று கேட்டாய்.”

”அன்று நீ சொன்னாய். எள்ளி நகையாடினேன். போலிக் கவர்ச்சி உன் தாய்மையையும் சோதிக்க வைத்தது. அம்மா! என் பணக்கார மனைவி சொர்க்கமாக இருக்கவில்லை. என் மாமனார் அடிமையாக என்னை வாங்கிவிட்டவர் போலக் கீழ்த்தரமான வேலைகளை யெல்லாம் செய்ய வைக்கிறார். ‘ஐந்து ருபாய்ச் சொத்துக்கு எதிர்கால வாரிசு இவன்’ என்ற எண்ணமே இல்லாது. ‘எச்சில் சோற்றுக்கு ஏங்கி வந்தவன்’ என்னும் மாதிரியில் சாதாரண வேலைக்காரன் கூட என்னை ஏளனமாகப் பார்க்கிறான், அம்மா! பெற்றவளிடம் சொல்வதில் பிழை என்ன? அன்புக்கு ஏங்குகிறேன், ஆதரவுக்கு ஏங்குகிறேன். ஏங்கி ஏங்கிச் செத்துக் கொண்டே இருக்கிறேன். இன்று மாத்திரமல்ல. அன்றிலிருந்து முந்நூறு தடவைகள் சரளா என்னை அவமதித்திருக்கிறாள். கடும் ஜுரத்தில் இங்கே நான் அரற்றிக் கொண்டிருந்த பொழுது அங்கே மாதர் சங்கத்தில் பெண்கள் வாழ்க்கையைப் பற்றிப் பெரும் பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்திருக்கிறாள். என்ன செய்வேன்?”

“என்ன செய்வதா?”

கேள்வி மறைந்தது. எங்கே அம்மாவைக் காணோம்? கண்களைத் திறந்தான். பின்பு லபக் கென்று மூடினான் – அந்த ஒளி வளைவினுள் அம்மா மீண்டும் தோன்ற மாட்டாளா என்ற நப்பாசையில். போனவள் போனவள்தான். மறுபடியும் அவள் நினைவில் நிற்கவில்லை. பிள்ளையின் குளுரையால் மனம் நைந்து, உடல்வாடி, ஒரு நாள் இறைவனின் திருமலரடி சேர்ந்துவிட்ட அவள் இனி எங்கே திரும்பி வரப் போகிறாள்?

“என்ன செய்வது? இந்த ஒரு வருஷமாகப் பொற் கம்பியால் நிர்மாணித்த சிறைக்குள் அடைபட்டிருக்கும் நிலையிலிருந்து எப்படி விடுதலை யடையலாம்?” அவன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

நான்கு மாதங்களுக்கு முன்பு அவனுடைய தமையன் பம்பாயிலிருந்து கடிதம் எழுதியிருந்தான். அதன் வாசகங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

“சங்கரா! படித்தவன் எப்படியடா முட்டாள் ஆனாய்? சம்பளம் கொடுக்காமலே நல்லதொரு வேலைக்காராக உன்னை உன் மாமனார் விலைக்கு வாங்கி விட்டதாக இங்கு வந்தவர்கள் சொல்கிறார்கள். சரளா கூட உன்னை மதிப்பதில்லையாமே! கணவன் மனைவி ரகஸியம் இப்படி ஊர் சிரிக்கும்படி ஆகலாமா? நாம் ஏழைகள் தாம். யாருக்கும் அடிமையாகாமலே சாப்பிட்டோம். நம் குடும்பத்தில் ஆயிரம் பிணக்குகள் இருந்திருக்கலாம். அவை என்றும் சந்தி சிரித்ததில்லை. உன்னால் நாம் சிரிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். இப்படிப் பேடியாக வாழ்க்கை நடத்துவதை விட ஒரு துளி விஷத்தை உண்டு நீ இறந்திருப்பாயானால், ‘வாழ முடியாத நிலையில் தம்பி இறந்து விட்டான்’ என்றாவது சந்தோஷப்பட்டிருப்பேன். நீ சாகாமலே சாகிறாய்? வாழாமலே வாழ்கிறாய். இந்த நிலை விரும்பக்கூடியதல்ல. யாருடைய தயவும் இன்றி வாழ முடியும் என்ற ஒரு சந்தர்ப்பத்தை இனியும் உண்டாக்கிக் கொள்ளா விட்டால் ‘திருந்திய மனிதன்’ என்ற மன்னிப்பைக் கூட நீ பெற முடியாது. உடனே இங்கே புறப்பட்டுவா. உன் மனைவியும் வருவாளானால் சந்தோஷமே, வேலை காத்திருக்கிறது. மனிதனாகி விடு – கோபாலன்.”

‘சுகம்’ என்ற பொய்த் தோற்றத்திலிருந்து விடுபட்டு, மனிதனகி விடக் கோபாலன் காட்டிய வழி இதோ சங்கரன் முன்னால் திறந்து விடப்பட்டிருக்கிறது. தனிப் பிரயாணத்தைத் தொடர அவன் உள்ளத்தில் திராணி இருக்குமா? ஜன்னல் வழியாகக் குளிர்ந்த காற்று இதமாக வந்தது. சங்கரன் நெற்றியில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.

“மாப்பிள்ளை!”

அந்தக் குரல் அதிகார மூர்த்தியினுடையதா? சங்கரன் திரும்பினான். வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார் அவன் மாமனார், முகத்தை அலட்சியமாகத் திருப்பிக் கொண்டு “ஊம்” என்று கேட்டான்.

“தோப்புக் குத்தகைப் பணத்தை ராவுத்தரிடமிருந்து வாங்கி வரும்படி சொன்னேனே, இன்னும் ஏன் போகவில்லை?”

“நான் போகப் போவதில்லை!”

“ஏன்?”

“போகவேண்டுமென்று தோன்றவில்லை!”

“இதுவரை உங்களுக்குத் தோன்றியபடி நீங்கள் நடந்து கொண்டதில்லையே?”

“இப்பொழுதிலிருந்து எதுவும் என் விருப்பம்தான்.”

“போகப் போவதில்லையா?”

“போகத்தான் போகிறேன். ஆனால் உங்கள் விருப்பப்படியல்ல. என் விருப்பப்படி”

“உங்களுக்குப் பைத்தியம்.”

சங்கரன் சிரித்தான்; சோகச் சிரிப்பு, மணியைப் பார்த்தான். ஏழரை, அரைமணி நேரத்துக்குள் ஸ்டேஷன் போய் விட்டால் பம்பாய் மெயிலைப் பிடித்து விடலாம், அதைப் பிடிப்பதற்காக எத்தனை விஷயங்களை உதறித் தள்ள வேண்டியிருக்கிறது?

அதென்ன சத்தம்? சரளாவா? படித்த பெண். செருப்போடு நடு வீட்டில் நடக்கலாம்! அவன் நின்ற அறையைக் கடந்து வேகமாக உள்ளே சென்றாள். ‘எப்படி யிருக்கிறது?’ என்று கூடக் கேட்கக் கூடாதா?

சங்கரன் இப்பொழுதும் சிரித்தான், உதட்டுச் சாயத்தில் வாழ்க்கை இருக்கிறதாக எண்ணி மயங்கும் ஓர் அபலைக்காக.

நேரம் நிமிஷங்களை நகர்த்திற்று.

ஓயாத சிந்தனைக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு, மூலைக்கொன்றாய்க் கிடந்த துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்தான். ஐந்து நிமிஷத்தில் வேலை முடிந்தது. தலை நிமிர்ந்தான் விடுதலைச் செருக்கோடு.

எதிரில் நின்று கொண்டிருந்தாள் சரளா.

“எங்கே புறப்பாடு”

“எங்கிருந்து வந்தேனோ, அங்கே.”

“நம் வீட்டுக்கா?”

“இல்லை. ‘என்’ வீட்டுக்கு.”

“என்னை மன்னியுங்கள்.”

அடுத்த கணத்தில் அவன் காலடியில் அவள் விழுந்து கிடந்தாள். என்ன இது? உலகம் நிலை புரண்டு விட்டதா?

“எழுந்திரு”

எழுந்தாள், நீர்விழிகளால் அவளை ஏறிட்டுப் பார்த்தாள். “என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்.”

“புருஷன் வீட்டில் மனைவி இருப்பதுதான் கௌரவம்.”

“கௌரவத்தைப் பற்றிக் கூட உனக்குத் தெரிகிறதா?”

“தெரிந்து கொண்டு விட்டேன். அப்பாவின் செல்வத்தில் மயங்கிக் கிடந்தேன்.’ ‘அவள் முடிக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுது விட்டுத் தொடர்ந்தாள். “மாதர் சங்கத்துக்கு அவசரமாக ஐந்நூறு ரூபாய் தேவையாக இருந்தது: அப்பாவிடம் கேட்டேன். ‘எந்தச் செலவுக்கும் ஒரு கணக்கு வேண்டும். இங்கே உன் புருஷன் வீட்டுச் சொத்து ஒன்றும் கொட்டிக் கிடக்கவில்லை!’ என்று குதித்தார். அவர் சொன்னது வாஸ்தவம் தானே? என் கணவர் இருக்கும் நிலையில் இருந்தால் அல்லது நம் வீட்டில் நானிருந்தால் இவர் என்னை இப்படிக் கேவலமாகப் பேசி யிருப்பாரா?”

சங்கரன் பேசவில்லை; பேச ஒன்றும் அவனுக்குத் தோன்றவில்லை.

“மதியாதார் வீட்டில் ஒரு நிமிஷமும் நிற்கக்கூடாது. கிளம்புங்கள்” என்று கூறியவாறு, அவனுடைய டிரங்குப் பெட்டியைக் கையில் எடுத்தாள்.

சங்கரன் நடந்தான்; சரளாவும் நடந்தாள்.


ஒரு மாதம் ஓடிவிட்டது.

கோபாலன் ஏற்பாட்டின்படி பம்பாயில் நல்லதொரு வேலையில் சேர்த்துவிட்ட சங்கரன், மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் சரளாவிடம் அன்றையத் தபாலில் வந்திருந்த ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் எழுதியிருந்தது.

“அன்புள்ள மாப்பிள்ளைக்கு, ஆசிர்வாதம்,

நீங்கள் பெரிய உத்தியோகத்தில் இருப்பதையும், சரளா உங்களுக்கு அடங்கிய மனைவியாக நடந்து வருவதையும் கேட்டு மகிழ்ச்சி.

இங்கிருந்து நீங்கள் கிளம்பும்போது கோபத்துடளேயே சென்றீர்கள். நினைத்தாலே வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? நீங்கள் என் வீட்டில் இருப்பதைப் பற்றிப் பலர் கேவலமாகப் பேசினார்கள். ‘கையாலாகாத சோணங்கி” என்று அவதூறு கூறினார்கள். உங்களை ரோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் கடுமையாக நடந்துகொண்டேன்.

நாள் கொடுத்த அதிகச் சலுகையால் சரளா தன் வாழ்க்கையைப் பூதாகாரமாக்கிக்கொண்டாள், நாள் முழுதும் போலி வாழ்க்கையில் கவனம் செலுத்தினாளே தவிர, உங்களோடு இணைந்து வாழவில்லை. அவள் வாழ்வதற்காக அவளை நான் வெறுத்துப் பேச வேண்டும்! அந்த எண்ணத்தில்தான் அன்று அவள் கிளப்புக்குப் பணம் கேட்ட போது நான் கோபக்காரனாக மாறவேண்டியிருந்தது. என் அன்புச் செல்வங்கள் வீட்டை விட்டுக் கிளம்பிப்போது, மூலையில் படுத்து அழுவதைத் தவிர ‘போகாதீர்கள்’ என்று சொல்ல முடியாதபடி நான் வாயடைத்துப் போயிருந்ததும் அதனால்தான்.

என் நாடகம் பலனனித்து விட்டது. நீங்கள் வாழ்கிறீர்கள். அதனால் என் வேஷத்தைக் கலைத்துவிட்டேன். இன்னுமா என்மேல் கோபம்? ஏன் போனதிலிருந்து ஒரு கடிதம் கூட எழுதவில்லை?

உங்களையும், சரளாலையும் பிரிந்திருப்பது எத்தனையோ கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் என் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வந்தால் தானே உலகம் தூற்றும்? அதனால் நானே உங்கள் வீட்டுக்கு மாமனாராக வரத் தீர்மானித்து விட்டேன்! உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

தங்களன்புள்ள
வெங்கடராமன்”

கடிதத்தில் நீந்திய கண்களைச் சங்கரன்மீது திருப்பி, “பொல்லாத அப்பா! அவருக்கு உடனே பதில் எழுதுங்கள்” என்று முறுவலித்தாள் சரளா.

அவர் ஒரு வருஷத்துக்கு முன்பு அவனுக்குச் சரளாவைக் கொடுத்தார்; ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு பண்பான மனைவியைக் கொடுத்தார். அவருக்குப் பதில் எழுதும்போது இந்த இரண்டில் எதற்காக அவருக்கு அவன் நன்றி கூறுவது என்று யோசித்தான்.

– 1957-03-17, கல்கி.

1 thought on “ஒரே விருப்பம்

  1. கிட்டத்தட்ட 70 ஆண்டுகள். ஆனால் கதை இன்றும் நிஜம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *