ஒரு வெண்மைப் புரட்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2025
பார்வையிட்டோர்: 149 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாடு ஈனப்போகுதுன்னு தெரிஞ்சதும் குழந்தைகளுக்கும் பெரியாட்களுக்கும் குதூகலம் பொங்கி வழிஞ்சது. 

பாலுக்கு ஆலாப் பறக்கவேண்டாம். இனிமெ, ஒருவாய் மோருக்கு ஊரெல்லாம் சுத்தவேண்டாம். மந்திரியே வந்து, ஆரம்பிச்ச திட்ட மில்லா இது. பக்கத்துவீட்டு நாணம்மாளுக்கும் பால்மாடு வாங்கப் பணம் கொடுத்தாங்க. ஒரே ஓட்டமாப் போயி ஒரு கறவைப் பசு பிடிச்சிக்கிட்டு வந்தா. 

என்ன பிரசணம்? பசுமாட்டுப் பாலை கிராமக் கூட்டுறவு டெப்போவிலெ வாங்கமுடியாதுண்ணு சொல்லிட்டாங்க. அதுலெ கொளுப்புச் சத்து இல்லையாமே, பின்னெ, பசுமாட்டுப் பாலைக் குடிக்க டவுண்லெ இருக்கிறவங்களுக்கு கோட்டியா பிடிச்சிருக்கு. 

பசுமாட்டுப் பாலு உடம்புக்கு நல்லதுதான்; யாரு இல்லேன்னு சொன்னா; எருமைமாட்டுப் பால்லெ இல்லாத தாதுஉப்புச் சத்தெல்லாம் பசுமாட்டுப் பால்லெதான் இருக்கு; அதை யாரு இல்லேன்னு சொன்னா. இதெல்லாம் எடுபடுமா? 

நாணம்மாளுக்கு வருத்தமும் கோவமும் வந்தது. “பசுவைப் பேணி நாட்டைப் பேணு”ன்னு சொன்னதெல்லாம் வெறும் மந்திரம் தானான்னு கேக்கத் தோணலை அவளுக்கு. 

“அடியாத்தோவ் இது என்னடி அம்மா கூத்தூ; சீதேவி கொடுக்கிற பாலை வேண்டாம்ன்னு சொல்லுராகளே”ண்ணு தான் சொன்னாள். பால் சொசைட்டி பிரசண்டுக்கு கோவம் வந்துட்டது. பதிலுக்கு இது கோவப்படமுடியுமா? 

சர்க்காரு கொடுத்த கடனை பாலா ஊத்திக் கழிக்கணுமே. 

அழுதுகிட்டே போயி அந்தக் கறவைப் பசுவை ஒண்ணுக்கு முக்காலா வித்துப்போட்டு ஒரு செனை எருமையெப் பிடிச்சிட்டு வந்திருக்கா. அது ஈன இன்னும் நாளாகும். 

அந்த எருமை மாடு நாணம்மாளைப் படுத்துறபாடு… மொத நா ஒரு ஓட்டம் விட்டது! கட்டுலேயே கிடந்திருக்கும்போல. 

நாணம்மா பாவம் அதுக்குப் பின்னாலேயே ஓடித் தவிச்சி. “ஜென்மம் எடுத்தது போதும்டா அப்பா”ன்னு சொல்லி அழுதா. 

இந்த வீட்லெ அதெல்லாம் இல்லெ, பதப்பற..தேடி அலஞ்சி நாலு ஊரை சுத்திப்பாத்து. நல்ல வவ்வாத்தொலி மாடா, கழுத்திலெ ஆரம் இருக்கிற மாடாப் பாத்து வாங்கிவந்தது. 

எருமை மாடூண்ணா தெனோம் லாந்தவிடணும் ஊர்மந்தையிலெ. மூக்கை ஒரு கையாலே பொத்திக்கிட்டு அது இஷ்டம்போல் மேயவிடணும் – களுதெ பண்ணிப்பிறவி! – பிறகு தண்ணிக்குள்ளே இறங்குனா அவ்வளவுதான்; குளுந்த நீரிலே படுத்துகிட்டு கண்ணை மாத்திரம் தெரியும்படியா முகத்தை வச்சிக்கிட்டு கம்மாய்க் கரையிலே நடக்கிறதெல்லாத்தையும் கவனிச்சிக்கிட்டே இருக்கும்! சாணி மோத்ரம் எல்லாம் தண்ணிக்குள்ளறதான். மணிக்கணக்காக் கிடக்கும் அப்பிடியே, பாலுக்கு நேரமாச்சென்னு கிளப்பமுடியாது. கரை யிலிருந்து கல்லுகளை எடுத்து வீசணும். கொண்டிக் காவல்காரரு சத்தம் போடுவாரு. ‘ஏ களுதைகளா, ஊருலாப்பட்ட கல்லூகளை யெல்லாம் எடுத்துப்போட்டு குளத்தெ ரொப்பிருங்க.’ 

சடையன் பயலைத் தாங்கணும்; ‘ஏலேய் உள்ளற இறங்கி. மாட்டைக் கொஞ்சம் பத்திவிடு’ண்ணு, சடையன் பயலைக் காணா தண்ணக்கி, கல்லுகளை எடுத்து விட்டெறியிறப்பொ பெரிய முதலாளி வந்து கையைப் பிடிச்சிக்கிடுவாரு. குளம் ஒண்ணும் அவருது இல்லேண்ணாலும் கோடையிலே தண்ணி வத்துனப்பெறகு அவரு தான் மண்ணை ஏலம் எடுப்பாரு. ‘இப்படிக் கல்லாக் கிடந்தா நாந் துட்டுக் கொடுத்து ஏலம் எடுக்கிறது கல்லையா மண்ணையா’ம்பாரு. 

மாடு ஈன ஆரம்பிச்சண்ணைக்கு ராத்திரி வீட்லெ யாருமே தூங்கலெ. சாய்ந்திரமே சுப்பையக் கவுண்டரு வந்து பாத்துச் சொல்லிட்டாரு ‘தட்டுக்குழி இறக்கிட்டது; தொப்பிளப்பாலு இறக்கிட்டது; ராத்திரிக்குள்ளெ கண்ணு போட்டுரும்’ண்ணு. 

படுக்கவும் எந்திரிக்கவுமா மாடு அவஸ்தைப்பட்டது. கன்னிக்குடம் வெளிவந்த உடனே குட்டித் தங்கச்சி சத்தம்போட்டுச் சொன்னா, ‘கண்ணுக்குட்டி வந்திருச்சி’ண்ணு! பெரியாட்கள்ளாம் சிரிச்சாங்க. 

கொஞ்சநேரம் கழிச்சிப் படுத்து மாடு நாலுகாலையும் நீட்னது. முத்துவெள்ளை நிறத்திலெ குளம்புகளும் பளபளப்பான ஈரக்காலுக மட்டும் ரெண்டு வெளியே தெரிஞ்சது. மாடு எந்திரிச்சதும் அந்த ரெண்டு கால்நுனியும் உள்ளுக்குப் போய்ட்டது மாடு திரும்பவும் படுத்து நாலுகாலையும் நீட்டி முக்கிச்சி. பிறகு அந்த ரெண்டுகால் நுனியோட சேந்து கண்ணுக்குட்டி கருப்புமூக்கு தெரிஞ்சது. மாடு எந்திரிச்சி நிண்ணதும் கண்ணுக்குட்டி உள்ளுக்குப் போயிருச்சு. 

அம்மா பக்கத்துவீட்டு ராமப்பாட்டியெக் கூட்டீட்டு வந்தா பண்டுகம் பாக்க, ராமப்பாட்டி கைராசிக்காரி. பாட்டி வந்ததும் எல்லாரும் அவ முகத்தையே பாத்தாங்க. பாட்டி, அவசரமில்லாம நிதானமா வெத்திலைப் பையைப் பிரிச்சி ஒரு இணுக்குப் போயிலை எடுத்து வாய்க்குள்ளெ போட்டு ஒதுக்கிக்கிட்டு, சேலையெத் தெரைச்சி சொருகிக்கிட்டா. தொழுவைத் தூக்குற பருத்திமார் முடியெ எடுத்து சரசரண்டு தூத்து இடத்தெ சுத்தப்படுத்துனா. காடியிலே இருந்து கழி கூளத்தை எடுத்து ஈரத்தை மறைக்க விரிச்சா. 

மாட்டைப் பாத்து ‘என்ன இப்படிச் செய்தெ; கண்ணுக்குட்டி ‘ஐ’ குடிச்சிருமே’ண்ணு சொன்னா. மாடு திரும்பவும் படுத்து காலை நீட்டி முக்க ஆரம்பிச்சது. கண்ணுக்குட்டியோட முகம் வெளியே வந்ததும் பாட்டி அதோட மூக்கையும் வாயையும் அழுத்தித் துடைச்சி ‘ஐ’யெ வழிச்சு உதறிட்டு முன்னத்தங்காலோட முகத்தையும் சேத்து பதனமாப் பிடிச்சி கோளாரா ஆட்டி இழுத்தா. சரட்டுண்ணு வழுக்கி வந்த மாதிரி கண்ணுக்குட்டி வெளியே வந்துட்டது. 

கண்ணுக்குட்டியெக் கண்டதும் மாட்டுக்கு நிலைகொள்ளலை; நக்குறதுக்கு ஆராட்டப்பட்டது. ‘அவுத்துவிட்டுறுவமா’ண்ணு அய்யா கேட்டாரு. கொஞ்சம் இருங்கண்ணு சொல்லி கண்ணுக்குட்டியெ எடுத்து மாட்டுக்கு முன்னாலெ போட்டா. மாடு கண்ணுக்குட்டி மேலே படந்திருந்த ‘ஐ’யெ ஆவலா நக்க ஆரம்பிச்சது. 

என்ன கண்டு?ண்ணு அய்யா கேட்டாரு. எல்லாம், ‘ஆம்பிளைப் பிள்ளைதான்; குத்தமில்லை’ண்ணு சொல்லி பாட்டி சிரிச்சி அம்மாவைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினா. அவ சிரிச்சி கண்ணைச் சிமிட்டுறதைப் பாத்து பொய்தான் சொல்லுதாளாக்கும்ண்ணு நெனைச்சாங்க எல்லாரும். நெசமாதான். 

பாட்டி கம்பரக் கத்தியாலெ – நகம் வெட்டறமாதிரி குளம்பு கள்ளெ நீண்டு படிஞ்சிருந்த பொய்க் குளம்புகளெ அறுத்து அறுத்து கண்ணுக்குட்டி மேலே வச்சா. அவ்வையார் – கொழுக்கட்டை மாதிரி இருந்த அதை மாடு பிரியமாகத் திண்ணது, ‘இதுதான் ஒனக்கு காயம் மருந்து, சாப்பிடு’ண்ணு சொன்னா பாட்டி. 

கண்ணுக்குட்டி ஆரோக்யமா இருந்திச்சி. பாட்டி அதும் வாயில விரலைக் கொடுத்ததும் சப்பிச்சி. ‘பாலு வருதா?’ண்ணு கேட்டுச் சிரிச்சா. 

கண்ணுக்குட்டி எந்திரிச்சி நிக்க ஆரம்பிச்சது. பாட்டி மாட்டோடெ மடிக்காம்பைப் பிடிச்சி அழுத்திப் பிழிஞ்சா. காதுத் துளை தூர்ந்து போகாம இருக்க சொருகிவச்ச வேப்பம் துரும்பு மாதிரி காம்புலெ இருந்து ஒண்ணு வந்ததும் சீம்பால் மஞ்ச நூலா தரையெத் தொட்டது. ‘பூமா தேவீ முதல்லெ குடிச்சிக்கோ’ண்ணா பாட்டி. 

இளங்கொடி போடுகிறவரைக்கும் தூங்காம காத்துக்கிட்டே இருந்தாங்க, விடியிற நேரத்திலெதான் போட்டது. கருப்பட்டிச் சிப்பம் கொண்டுவந்த ஓலைப்பெட்டியிலே அதைக்கட்டி பால்மரத்திலே கொண்டுபோயி கட்டச்சொன்னா பாட்டி தர்மர்கிட்டே. 

வென்னிவச்சி இளஞ்சூடா மாட்டைக் குளிப்பாட்டி சுண்ணாம் பாலெ தட்டுக்குழிக்குமேலே வலதுபக்கம் ஒண்ணு, இடதுபக்கம் ஒண்ணு, ரெண்டு வட்டம் போட்டுட்டு ‘நா போரேம்மா வீட்டுக்கு, கண்ணுக்குட்டி குடிச்சதுபோக மிச்சம் சீம்பாலைக் காய்ச்சி சீனியைப் போட்டுக்கொடு பிள்ளைகளுக்கு; பாவம் பிரியமாய்ச் சாப்பி டும்’ண்ணு சொல்லி ராமப்பாட்டி போயிட்டா. 

தம்பி தருமரு இளங்கொடி பொட்ணத்தை எடுத்துகிட்டுப் போயி கம்மாக்கரை ஆலமரத்து உச்சியிலெ கட்டீட்டு வந்தான். 

பிள்ளைகளுக்கு மூணுநாளும் சீம்பால்லெ காய்ச்சின ‘சொன்னு’ பண்ணைக்கார கிடைச்சது. அம்புட்டுதான்; நாலாம்நாள் பால் வெண்டர் வந்துட்டான். அவனைப் பாத்ததும் தர்மரு, அவனை மாதிரியே வாயை ‘ஓ’ண்ணு வச்சிக்கிட்டு, வலிச்சாங் காமிச்சான், வெண்டரு பால் பிள்ளைக்கு பல்லுக நீளம்; வாயை மூடமுடியாது. 

டாண்ணு மணி பன்னெண்டு அடிக்கவேண்டியதுதான் தாமசம்; காலவீரன்மாதிரி பால்பிள்ளை தெருவழியே மணியை ஆட்டிக்கிட்டே போவான். சித்தேசிக வச்சுருக்கமாதிரி மணி ஒண்ணை வாங்கிக் கொடுத்திருக்கிறாக அவனுக்கு. 

ஒருநா பால்பிள்ளை தெருவழியே மணியை ஆட்டிக்கிட்டே போறான்; அவனுக்குப் பின்னாடியே தர்மரு வேட்டியெத் தெறச்சிக்கிட்டு இடுப்பெ ஆட்டிக்கிட்டே போனான். ஓட்டைப்பல்லு நாயக்கரு இதெப்பாத்துட்டு ‘சர்தாம்லே; அதாஞ்சரி…’ண்ணு சொல்லிச் சிரிச்சாராம். அக்கா இதை அம்மாட்டெச் சொல்லி ‘தம்பியெ சண்டை பிடிம்மா; அசிங்கம்’ அப்பிடீண்ணா. ‘என்ன தெரியும் பச்சைப் புள்ளைக்கு; இதெப்போயி நீ பெரிசுபடுத்தாதே’ண்ணு சொன்னா. “ஆம பச்..செப் புள்ளை; வயசு பதினொன்னு பன்னெண்டு ஆகப்போகுது; தடிமாடுமாதிரி வெக்கமில்லாமெ”. 

இப்படி தர்மர் செய்யிறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி அம்மாவும் அவனும் பண்ணைக்குப் பால்கறந்து ஊத்த மாட்டைப் பத்திக்கிட்டு போனங்க. திரும்ப வாரப்ப, அவன் கொண்டுபோன பால் கறக்கிற ஈயச்சட்டியெ தலையிலே கவுத்திக்கிட்டு வந்தான். சின்னத் தம்பியும் குட்டித் தங்கச்சியும் ‘பாலு எங்கே?’ண்ணு ஆசையாக் கேட்டாங்க, ‘பின்னாலே வருது’ண்ணு சொல்லி ஈயச்சட்டியை நங்குண்ணு வீசி எறிஞ்சுட்டுப் போயிட்டான். அம்மா ஒண்ணுமே பேசாமெ மாட்டைக் கட்டுத்தறியிலே கொண்டுபோயிக் கட்டுனா. 

மறுநா தர்மரு ‘நா பண்ணைக்கு மாடு பிடிச்சிகிட்டு கூடப்போக முடியாதுண்ணு கராலாச் சொல்லிட்டான். மாட்டெ மேய்ச்சி, தண்ணியிலெ போட்டுக்கொண்டாறதுதான் அவன் சோலியாம். என்னைக்காவது அபூர்வமா பண்ணைக்கு ஊத்தின பாலுலெ மிஞ்சினதை வீட்டுக்குக் கொண்டுவருவாங்க, அதைக் காய்ச்சி உறையூத்தி பிள்ளைக ஆசையா மோர்விட்டுச் சாப்பிடும். ஒருநா தர்மருக்கு மோரு இல்லாம ஆயிட்டது. அவனுக்கு வந்த கோவமானா சொல்லிமுடியாது, மோர்சட்டியெ ஒடைச்சிட்டான். அய்யா அவனை அடி சதப்பி எடுத்துட்டாரு. ‘முளைச்சி மூணு இலை போடுறதுக்கு முன்னாலெ வருதாலெ கோவம்?’ண்ணு கேட்டு அடப்புலெ எத்தீட்டாரு பலமா. ஒருநா பூராவும் சாப்பிடாமெ ஊருமடத்திலெ படுத்துக்கிடந்தான். அம்மாதாம் போயி அவனை தாங்கித் தடுக்கிக் கூட்டீட்டு வந்தா. 

மாடு பால் எறக்குனதும் அய்யாதான் கண்ணுக்குட்டியெ இழுத்துப் பிடிச்சிக்கிடுவாரு, கறந்து முடியிற வரைக்கும் கண்ணுக்குட்டி மாட்டோட தாடைச்சதையை சப்பிக்கிட்டே இருக்கும். 

கொஞ்ச நாளைக்கெல்லாம் குதியாளம் போட்டுக்கிட்டே நடந்து போன கண்ணுக்குட்டியெ தூக்கிட்டுத்தான் வரும்படி ஆயிட்டது, மெலிஞ்சி நடக்கமுடியாம ஆயிட்டது. 

கண்ணுக்குட்டியோட இருப்பைப்பாத்து ஒருநா தர்மரு மாடு பண்ணைக்கு கறக்கிறதுக்குப் போகிறது முன்னாடி கண்ணுக்குட்டியெ அவுத்துவிட்டுட்டான். தற்செயலா வந்த அம்மா அதைப் பாத்து ஓடி கண்ணுக்குட்டியெ இழுத்துக்கட்டுனா. ‘ஒனக்கு என்னடா வந்தது? பாலே குடிக்காத கண்ணுக்குட்டி அவ்வளவு பாலையும் குடிச்சா என்னத்துக்கு ஆகும். செமிக்காம மண்டையெப் போட்ரும் அவ்வள தான்’ண்ணாள். அண்ணைக்கும் அய்யாட்டெயிருந்து அவனுக்கு அடி வசமாக் கிடைச்சது. பாலே விடாதனாலே கண்ணுக்குட்டி கொஞ்ச நாள்ளெ மண்டை வீங்கி செத்துப்போச்சி. கண்ணுக்குட்டி செத்துப் போன அண்ணைக்கு உறவுகாரங்களும் வேண்டியவங்களும் வந்து துக்கம் விசாரிச்சாங்க. வெண்டர் பால்பிள்ளையும் வந்தான். 

‘இதுக்கென்ன இம்புட்டு மலைப்பு வேண்டியிருக்கு; பால் பண்ணைக்கு கறக்க வர்ற முக்காவாசி மாடுக கண்ணுக்குட்டி இல்லாம கைப்பாலுதாங் கொடுக்கு. இதையும் அப்படிப் பழக்கிற லாம். கவலையை விடுங்க” அப்பிடீன்னு ஓங்கிச் சொன்னான், வச்ச கண் வாங்காம தர்மரு அவனையே பாத்துக்கிட்டிருந்தான். 

ஊர் பகடைக வந்து செத்துப்போன கண்ணுக்குட்டியெ தூக்கிட்டுப் போறப்பொ குடும்பத்துலெ அத்தனை பேரு மனசையும் என்னவோ செஞ்சது, தர்மருக்கு அழுகை வந்திட்டது. 

மேய்ச்சல்தரையிலெ மாடுகள்ளாம் மேஞ்சிக்கிட்டிருந்தது. மரத் தடியிலெ தர்மரு யோசனையோட உக்காந்துக்கிட்டிருந்தான்; அவனைச் சுத்தி மாடுமேய்க்கிற அவன் சோட்டுப் பிள்ளைக உக்காந்திருந்தாங்க. கண்ணுக்குட்டி செத்துப்போன விஷயத்தை அப்பதான் பேசி முடிச்சிருந்தாங்க. கொஞ்ச நேரங்கழிச்சி சீனி சொன்னான். “அந்த வெண்டரு பால் பிள்ளையெ ஒருநா ஒரு பொழுதாலும் மண்டையெக் கல்லுட்டுக் கீறணும்.” 

பறிச்சின்னு தர்மரு சீனி முகத்தெ ஆச்சரிமா பாத்தான்; தான் நினைச்சதையே இவனும் சொல்லிட்டானே. 

அந்த நேரத்லெ வெண்டரு பால்பிள்ளை கோவில்பட்டிக்கு சைக்கிள்ள பாலைக் கொண்டுக்கிட்டு புறப்பட்டு வந்தான். தூரத்திலே அவன் வரும்போதே மாட்டுக்கார பிள்ளைக அவனைப் பாத்திட்டாங்க. 

“ஏலேய் நீங்கள்ளாம் அந்தப் பக்கம் போயி பதுங்கிக்கிடுங்க; இல்லெண்ணா இங்கேருந்து ஓடிப்போயிருங்க” தர்மரும் சீனியும் தவிர மத்த மாட்டுக்காரப் பிள்ளைகள்ளாம் ஓடிப்போயி ஓடைக்குள்ளே பதுங்கிக்கிட்டாங்க. சில பிள்ளைகளுக்கு இந்தக்காரியம் சரியாப் படலெ; சொல்லமுடியாம ஒரு பயம். அவங்க தூரமா ஓடிப் போயிட்டாங்க. 

நல்ல கதிமையான சீனிக்கல்லா கைக்கு ஒண்ணுவீதம் எடுத்துக் கிட்டு கள்ளிப்பொதரு மறைவிலே மறைஞ்சிக்கிட்டாங்க. வெண்டரு அந்த மேட்டு ஏத்தத்திலே முக்கி மிதிச்சிட்டு வாயெ ஓண்ணு வச்சிகிட்டு வந்தான். வந்திட்டான் இந்தா வந்திட்டான் கிட்டெ. பிள்ளைகளுக்கும் கண்ணுக்குட்டிகளுக்கும் பால் கிடைக்காமல் செய்யிற மாபாவி இந்தா வந்துட்டான். 

‘இந்தாலெ வாங்கிக்கோ’ன்னு ஒரு கல்லை விட்டான் தர்மரு. கல்லு குறிதப்பி அந்தப் பெரிய அலுமினியக் கேன்லே பட்டு பொத்துப் பால் வடிய ஆரம்பிச்சது. சீனி ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டான்! 

வெண்டரு தெகச்சி சைக்கள்ளெயிருந்தமானைக்கே காலை ஊணி சுத்துமுத்தும் பார்த்தான். தர்மரு இன்னொரு கல்லெ அவன் மேலே விடறதைப் பார்த்துக்குண்ணு திரும்பி இறக்கத்திலே வேகமாக ஊரைப் பாத்து மிதிச்சான் வெண்டரு. 

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஊர் கொண்டிக் காவல்காரங்க வந்து தர்மரைப் பிடிச்சி ஊருக்குள்ளே கொண்டுபோனாங்க. தர்மரு நெசத்தை ஒத்துக்கிட்டான். ‘ஆமா, நாந்தான் எறிஞ்சேன். அவன் மண்டையெக் குறிவச்சேன்; அது கேன்லே விழுந்திட்டது’ன்னு ஊக்கமாச் சொன்னான். 

அவன் அப்படிச் சொன்னதைப் பாத்து அம்பலகார நாயக்கருக்கு சிரிப்பு வந்திட்டது. சின்னப்பிள்ளையிலே அவரும் இப்படித் துடியான காரியங்க செஞ்சவரு ஆனதாலெ இதைக்கேட்டு அவனைப் பாத்துப் பாத்துச் சிரிச்சாரு. அவன்மேலே ஒரு பிரியமே உண்டாயிட்டது! 

பால்பண்ணை பிரசண்டுக்கானா கோவம் அண்டகடாரம் முட்டீட்டு வந்தது. 

‘இந்தப் பயலை சும்மாவிடப்படாது; பைசல் பண்ணுங்க. வகையாத் தீட்டுங்க ஆயுசுக்கு ஞாபகம் இருக்கும்படியா’ன்னாரு. 

அம்பலகார நாயக்கரு தர்மரை தனியாக் கூட்டிட்டுப் போயி, ‘எதுக்குடா அவனை அப்பிடி 

அப்பிடி கல்லெவிட்டு எறிஞ்சே’ன்னு அணைச்சிக் கேட்டாரு; தர்மரு ஒண்ணுவிடாமச் சொன்னான். 

வீட்டுப்பிள்ளைகளுக்கு பால் மோரு இல்லாமச் செஞ்சது, பிரியமான கண்ணுக்குட்டியெ பாலே விடாம சாகடிச்சது எல்லாத்தையும் சொன்னான். அவன் சொன்னதையும் விதத்தையும் கேட்ட அம்பலகாரருக்கு மனசு இளகிக் கண்ணுலெ நீர்கோர்த் துட்டது. 

‘இந்த அநியாயம் இந்த பச்சைப்பிள்ளை கண்ணுலெ பட்டிருக்கே’ண்ணு நினைச்சாரு. இருந்தாலும் மேலுக்கு ‘அவன் என்னடா பண்ணுவான் பாவம்; இதெல்லாம் அவனா செய்யிறான்’னு சொல்லி சண்டை பிடிச்சி கூட்டத்திலெ வந்து, பிள்ளையார் கோயிலுக்கு ஒரு தேங்கா விடலை போடும்படியா தர்மரோட அய்யாவைப் பாத்துச் சொல்லீட்டு, துண்டை உதறி தோள்ளெபோட்டு தலையெக் கவுந்துக்கிட்டு நடந்துபோனாரு. தர்மரும் பால்பிள்ளையும் ஒருத்தருக்கொருத்தர் முறைச்சிப் பாத்துக்கிட்டே இருந்ததை அவரு பார்க்கலை. 

அணைச்சி: இதமாக அவன் போக்கிலே விட்டு ஏமாற்றி. 

– தாமரை, ஜூன் 1980.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *