ஒரு விடியலுக்காக!




(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
”என்னிடம் பணம் எதுவும் கிடையாது. நீங்கள் வேலைக்குப் புறப்படுங்க “ என்றாள் வைசாலி.

”ப்ளிஸ் வைசாலி நூறு ரூபாய் மட்டும் கொடு . இன்னைக்கு ஒப்பேத்திவிடுகிறேன். நாளையிலிருந்து வேலைக்குப் போறேன்.’
வைசாலி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 8.15 . வேலைக்குக் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருக்கிறது. அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் டாணென்று 8.30 மணிக்கு இருக்க வேண்டும்.
”வைசாலி எனக்கு மாத்திரை ஆயிடிச்சு . மாத்திரைக்கு மருந்து கடையிலே சொல்லிட்டு போயிடும்மா. மாமியார் சிவகாமியின் குரல்.
“சரிம்மா, நான் கிளம்பறேன். அவர்கிட்டே பணமெதுவும் கொடுக்காதீர்கள்”..
அவள் கேட்டைத் திறந்து தெருவில் இறங்கி நடந்தாள்.
வைசாலிவும் முரளியும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள் .. வைசாலி அப்போது ஈரோடிலுள்ள அரசினர் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். முரளியின் அழகில் மயங்கி அவனைக் காதலித்தாள். சித்திரப்பாவை மாதிரி அழகாய் இருப்பாள். குறும்பு அதிகம். அவள் கல்லுரியில் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது முரளி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.. நூலகத்தில் புத்தகம் எடுக்கப்போகும்போது அவள் அவனைச் சந்தித்து நண்பர்களானார்கள்..
துடிப்பு மிகுந்த அவள்தான் தன் காதலை முதலில் அவனிடம் தெரிவித்தாள். வேறு சாதி என்பதால் இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடிப் போய் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். அவன் வீட்டில் முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக் கொண்டார்கள். வைசாலிவின் மாமியார் மிகவும் நல்லவள். அவள் அப்பாவுக்கு ரொம்பக் கோபம் . அவளுடன் பேசவில்லை வீட்டுப்படி ஏறக்கூடாது என்று சொல்லிவிட்டார். என் பெண் இறந்து விட்டாள் என்று தலை முழுகிவிட்டார். . மூன்று வருடம் கழித்து அவர் இறந்த பிறகுதான் வைசாலி அம்மா அவளிடம் பேசினாள்.
எப்படிமா இருக்கே?
“நல்லாதான் இருக்கேன். குழந்தை நிர்மலாவுக்கு இரண்டு வயசு ஆயிடுத்து. என் மாமியார் தங்கமானவங்க.”
“உன் கணவர் உன்னை நல்லா வைச்சுண்டுருக்கிறாரா?”
“ம்”
என்ன பதில் சுரத்தில்லாமல் வருது. முகத்தில் வாட்டம் தெரியுதே. குடும்ப வண்டி சீரா ஓடுதா
அவளால் பதில் சொல்ல முடியலே. கண்ணிலிருந்து வந்த கண்ணீர் காட்டிக் கொடுத்துவிட்டது.. அம்மா தலையை வருடி. “கண்ணு என்கிட்டே உண்மையைச் சொல்லிடு . இவ்வளவு நாள் தனியா இருந்தே. உனக்கு ஏதாவது ஒண்ணு என்றால் நான் எதுவும் செய்ய முடியாத நிலையிலே இருந்தேன். இப்ப அப்படியில்ல”.
“அவர் இரவு படுக்கையில் இருக்கும்போது திடீரென்று காணாமல் போய் விடுகிறார். பெண் சிநேகத்தால் ஒழுக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கார்.
”என்னடி சொல்றே ? என் தலையிலே இடி விழுந்த மாதிரி இருக்கே. காதல் திருமணம் செஞ்சுண்டு உன் தலையிலே நீயே மண்ணை வாரி போட்டுண்ட்டியே மோசம் போயிட்டியே வைசாலி. உன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே ! உன்னை நினைச்சா எனக்குக் கவலையாய் இருக்கு”
அவர் என்னைக் காதலிக்கும்போது அவருடைய உடல் அழகைத்தான் பார்த்தேன். வாழ்க்கைக்குத் தேவையான ஒரு நெருப்பு அவர் நெஞ்சில் இல்லை. சோம்பேறி. பொறுப்பில்லாத ஆள். முன்னுக்கு வரணும் என்ற எண்ணமே இல்லாதவர்.”
கவலைப்படாதே உன் அத்தை பையன் சோமு. அரசாங்க வேலையிலே இருக்கானே அவன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறத்துக்குத் தயாராயிருக்கான். உனக்குச் சம்மதமா, சொல்லு. உன் புருஷனை விவாகரத்து பண்ணிட்டு அவனைக் கல்யாணம் செய்ஞ்சுக்கிறயா?”
வைசாலி பதில் பேசவில்லை. இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் வாழ்நாள் முழுவதும் தன்னைக் குத்திப் பேசுவார்கள் என்று எண்ணிக்கொண்டே, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு எது கிடைத்ததோ அதை வைச்சுண்டு நான் சமாளிச்சுக்கிறேன் “ என்றாள்.
சோமுவுக்குக் கல்யாணம் ஆகி அவன் திருநெல்வேலிக்குப் மாற்றல் ஆகிப் போய் விட்டான்.
நாட்கள் வெகுவேகமாக ஓடி விட்டது. வைசாலியின் குடும்பம் ஈரோடில் வசிக்கிறது. அவள் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறாள். வேலை. கடிகாரம் மாதிரி உழைக்கிறாள். காலை 8.30 மணி முதல் இரவு 8,00 மணி வரை வேலை. காலை ஆறு மணிக்குச் சமையல் அறைக்குள் நுழைந்தால் சமையல் முடிந்து மத்தியானம் சாப்பிட உணவு எடுத்துக் கொண்டு அலுவலகம் அடைந்தால் இரவு எட்டு மணிக்குத்தான் அலுவலகத்தை விட்டுக் கிளம்ப முடியும். அவள் அம்மா அடிக்கடி செல் போனில் சாப்பிட்டாயா என்று கேட்பாள். தற்போது வாங்கும் சம்பளம் குறைவாக இருப்பதால் ஆன்லைனில் புடவை வியாபாரமும் செய்கிறாள்.
மாமியாருக்கு உடம்பு சரியில்லை. முட்டி வலி, சர்க்கரை எல்லாம் உண்டு. வைசாலி ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் கணவனிடம் மட்டும் எந்த மாற்றமும் ல்லை. அவன் வேலைக்குப் போகாமல் உதாவக்கரையாகச் சோம்பேறியாக குடித்துக் கொண்டு வியாதிகளுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
வைசாலி மகள் நிர்மலாவும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு பம்பாயில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தாள்.. வேலை விஷயமாய் வெளிநாடு போகும் வாய்ப்பு வந்தது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபிப்பதைப் போல் அவள் ஒரு அமெரிக்காகாரனை காதலித்து பெற்றோர் சம்மதத்தைக் கேட்காமலே கல்யாணம் செய்து கொண்டாள். இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள். எப்போதாவது பேசுவாள். வைசாலி யோசித்துக்கொண்டே அலுவலகம் வந்து விட்டாள்.
முரளி வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். அவளைப் போட்டு அடிப்பான். அவன் தோழி அவனை நிராகரித்து விட்டு வேறு ஒருவனுடன் போய்விட்டாள். மாமியாருக்குச் சர்க்கரை அதிகமாகிவிட்டதால் ஒரு காலை முட்டிக்குக் கீழ் எடுத்தாகிவிட்டது. வைசாலிக்கு இரண்டு குழந்தைகள். மாமியாரையும் கவனித்து, வேலைக்குப் போகாத கணவரையும் கவனித்துக் கொள்கிறாள்.
அலுவலகம் வந்துவிட்டது.
”யோசனை பலமோ “?
அவளுடன் பணி புரியும் மாலா கேட்டாள்
“ஆமாம் கணவரைப் பற்றி நினைத்துக்கொண்டே வந்தேன். முதலில் எப்போவாது குடித்தார். இப்போது எப்போவாது குடிக்காம இருக்கிறார். என்னை அடிக்கிறார். நேத்து அடிச்சது பார் என்று நெத்தியில் பட்டிருந்த காயத்தைக் காட்டினாள்”.
”கவலைப்படாதே வைசாலி. வீட்டுக்கு வீடு வாசல்படிதான். எனக்கும் பிரச்சனை இருக்கிறது. என் கணவருக்குப் புற்று நோய். நான் அதைப் பற்றி கவலைப் படுவதை விட்டு விட்டேன்”.
அப்போது வைசாலியின் மொபைல் சிணுங்கியது. அவள் மொபைலைப் பேச எடுத்தாள். அவள் அம்மாவிடமிருந்துதான் காலை ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், இரவு ஏழு மணிக்கு ஒரு முறையும் தினமும் தவறாமல் . சாப்பிட்டாயா? காபி குடித்தாயா? என்று தாயன்போடு விசாரிப்பாள். வயது நாற்பதைக் கடந்தாலும் தாய்க்கு மகள் பெண்தானே?
இரவு அவள் கணினியில் தன் ஆன்லைன் வியாபாரத்தில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் அத்தை மகன் சோமு வந்தான். வழுக்கைத்தலையை தடவியவாறே அவளை உற்றுக் கவனித்தான். உயரமான உடல் வாகுவுடன், அழகிய கண்களுடன், கூர்மையான நாசியுடன் அழகிய சிற்பம் போல் இருக்கிறாள் என்று நினைத்தான். ” நீ இன்னும் அழகாகத்தான் இருக்கிறாய்.என் மனைவி இறந்து விட்டாள். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். ஈரோடுக்கே மாற்றல் ஆகிவிட்டது. உன் கணவர் எப்படி இருக்கிறார்?”
“வேலைக்குப் போகாம படுத்தறார்.”
“உன்னைப் போட்டு அடிக்கிறார். குடிக்கிறார் என்று நான் கேள்விப் பட்டேன்.
நீ ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ சரி என்றால் நாம் இருவரும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமா.” என்று சிரித்துக்கொண்டே கூறினான்
வைசாலி திடுக்குற்றாள். ”பாவி, ஒரு கல்யாணமான பெண் கிட்டே இப்படியா கேட்கிறது” என்று மனசுக்குள் நினைத்தவள், ”அவர் சீக்கிரத்தில் திருந்துவார் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு விடியலுக்காகப் பொறுமையாய் காத்திருக்கேன்” என்றாள்.
”உனக்குக் கல்யாணம் ஆன புதிசிலே சொன்ன போதே நீ என்னுடன் வந்து விட்டிருக்க வேண்டும். இப்போ ஒண்ணும் குடி முழுகிப் போய்விடல. நீ விவாகரத்து செய்துகொண்டால் போதும். என்னிடம் பணம் இருக்கிறது. நாம் வசதியாக இருக்கலாம்” என்றான்.
வைசாலி ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை. அவளுக்குக் கோபம் வந்தது. ”நாசமாய் போ” என்று மனசிலே நினைத்தாள். உணர்ச்சி பொங்க உரத்த குரலில், ”இந்தக் காலத்தில் ஒரு துன்பத்தையோ ஒரு குறையையோ எண்ணித் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டால் யாரும் முன்னேற முடியாது. நாளைத் துன்பங்கள் தீர்ந்து நன்மை உண்டாகும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக்கிட்டுப் போங்க”
”எப்போ அலை ஓஞ்சி கடலிலே குளிக்கிறது. நாய் வாலை நிமிர்த்திடலாம். குடிகாரனைத் திருத்தவே முடியாது. நான் சொல்வதைக் கேள். உனக்கு நல்லது”.
‘வெளி..யே போ..டா நாயே” குமுறியவாறு வாசல் கதவை நோக்கி கையைக் காண்பித்தாள்.
அப்போது உள்ளறையிலிருந்து பாட்டில் விழுந்த சப்தம் கேட்டது. மருந்து கொடுக்கும் நேரம் வந்து விட்டது மாமியார் மருந்து பாட்டிலை நழுவ விட்டிருப்பாள் என்று பரபரப்புடன் எழுந்தாள்.
”நல்லது செய்ய நினைத்தால் கூட முடியாது போலிருக்கே” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் அவ்விடத்தை விட்டுச் சென்றான்.
உள்ளிருந்து ‘வைசாலி” என்று கணவனின் குரல் கேட்கவே அவனிருந்த அறைக்குள் விரைந்தாள்.
அங்கே முரளி மது பாட்டிலை உடைத்துவிட்டு நின்றிருந்தான்.
”சபாஷ் வைசாலி !. குடிக்கலாம் என்று பாட்டிலை எடுக்கும்போது சோமு வந்தது தெரிந்தது.. நீ பேசுவதை ஆவலுடன் நான் கேட்டேன் செம நெத்தி அடி கொடுத்தாய் அவனுக்கு. என் மனைவியாய் நீ இருப்பது நான் செய்த பாக்கியம். குத்து விளக்குச் சுடர் போல் அழகும் அமைதியும் இருக்கிற உன்னை கவனிக்காம உதாசினப்படுத்திட்டேன். இதுவரை உன் அருமை தெரியாமல் குடிக்கு அடிமையாய் இருந்துட்டேன். இப்போதிலிருந்து நான் பாசத்துக்கு அடிமை ஆகிவிட்டேன். இனிமேல் குடிக்க மாட்டேன். பொறுப்பாக நடந்து கொள்கிறேன் “ என்று சொல்லி அவளுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தான்.
“ஒரு விடியலுக்காகக் காத்திருந்தது வீண் போகல. தன் கனவு மெய்ப்படப் போகிறது” என்னும் நம்பிக்கை அவள் மனசில் துளிர்த்தது.
– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com