கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 12,420 
 
 

(2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நள்ளிரவு. மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான், காதலித்து ஏமாந்து போன குமார்.

சுதாரித்துக் கொண்டவள், தைரியத்தை வரவழைத்து, ஒரு கணம் யோசித்துவிட்டு,

“நில்! நெருங்காதே! என்னைக் கொல்லப் போகிறாயா?” என்றாள்.

“ஆமாம்! எனக்குக் கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது! நீ உயிரோடு இருக்கக் கூடாது!” நெருங்கினான்.

“இதோ பார்! நான் ‘கொரோனாவால்’ பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறேன். உனக்கும் தொற்று பரவி விடப் போகிறது..! உன் கையால் சாவது சந்தோஷம்தான். நான் சாகலாம், ஆனால்.. நீ சாகக் கூடாது! உன்னை எந்த அளவு காதலித்திருக்கேன்னு எனக்குத் தான் தெரியும்!”

அவள் பேசப் பேச அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“மாஸ்கில்லாமல் வெளியே வரக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? இந்தா.. இதை அணிந்து கொள்.. ! உட்கார்..! பேசி முடிவுக்கு வருவோம்..! பிறகு என்னைக் கொல்!” கைப் பையிலிருந்து ஒரு ‘மாஸ்க்கை’ அவன் பக்கம் வீசினாள்.

எடுத்து அணிந்தவன் பத்து செகண்டிற்குள் மயங்கி விழுந்தான்.

‘துரோகி.. எத்தனை பெண்களை காதலிப்பதாய் ஏமாற்றி சீரழித்துக் கொன்றிருக்கிறாய். உனக்காகவே வைத்திருந்தேன் மயக்க மருந்து தடவிய மாஸ்க்!’ களிப்போடு போலீஸுக்குப் போன் செய்தாள், மாலினி.

– குமுதம், 28.4.2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *